திருமால் திருப்புகழ் (128)
கிரேசி மோகன்

——————————
”கண்ணன் வெண்பாக்கள்’’
——————————

நீந்தும் சரோருக நாபியும், -ஏந்தும்,
கரங்கள் நான்கும், கருத்த வடிவும்,
வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….(283)
எந்தையே எவ்வுயிர்க்கும், முந்தையே ஏகாந்த,
சிந்தையே, சிக்காத விந்தையே, -கந்தையே,
ஆனாலு(ம்) என்நெஞ்சைக், கட்டிக் கசக்கிடு
தூணாளும் சிங்கா தயவு….(284)
பூதங் களால்வந்த, ஏதங் களாயிரம்,
மாதங் களில்நின்ற மார்கழியே, -பாதங்கள்,
ஓங்க உலகளந்த, உத்தமரே என்குறை,
நீங்க எனதுள்ளே நில்….(285)
வீழும் மலையருவி, சூழ்கின்ற வேங்கட,
ஏழு மலையானை ஏத்துமினோ, -வாழும்,
கடன்பட்ட மாந்தர்க்கு, கோவிந்த நாமம்,
புடமிட்டப் பத்தரைப் பொன்….(286)
ஏங்கா மலிருக்க, ஏங்கு கிறேன்பாம்பில்,
தூங்காமல் தூங்கும் திருமாலே, -சாங்கிய,
யோக மதையருள்வாய், யோக்கியதை பார்க்காதே,
மோகமுள்ளை வைத்ததுன் மாசு….(287)
நீதான் நானென்றும், நான்தான் நீயென்றும்,
சேதார மற்றென்றும் சேர்ந்திடுவோம், -ஏதோ,
இலக்கணம் காட்ட, எழுதவில்லை வெண்பா,
விலக்கணும் மாய விரிப்பு….(288)
மூலனே மல்லாண்ட, தோளனே விண்ணளந்த,
நீளனே, நற்கீதை நூலனே, -மாலனே,
கோகுல பாலனே, கோதைம ணாளனே,
ஆகுலம் தீர்த்தென்னை ஆள்….(289)
——————————