–இன்னம்பூரான்.

விநாசகாலே விபரீத புத்தி

 

110401_193350கலயம் நிரம்பி வழிகிறது. அமுத கலயம். அக்ஷயபாத்திரம். வாழ்வாதாரம் அதுவே. சொட்டு மருந்து போல் பருகவேண்டும். எல்லாருக்கும் கிடைக்கவேண்டுமல்லவா! ஒரு அதமன் சொட்டு  ஆலகால விஷம் கலக்கிறார். அனைவரும் பரலோக யாத்திரை. தேர்தலில் தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஒரு சுயபரிசோதனை கூட்டம் நடத்துகிறது. அதில் தன்னுடைய அருள்வாக்கு அளித்த கட்சியின் காரியதரிசியான திக்விஜய சிங்  ஆடிட்டர் ஜெனெரல் மீது, “ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல்” என்று சொன்னது போல ஒரு போலி குற்றச்சாட்டை சாற்றினார். ‘பா.ஜ.க. தான் ஆடிட்டர் ஜெனெரலின் எஜமானன். அடிமை CAGயை அந்த கட்சி ஆட்டுவிக்கிறது. 2ஜி வழக்கில் இது கண்கூடு’ என்பது தான் அந்த அருள்வாக்கு! எங்கே சொன்னார்? போயும் போயும் கர்நாடகாவில். அங்கு முன் ஆட்சி நடத்திய பா.ஜ.க. அரசின் தவறுகளை கடுமையாக சுட்டிக்காட்டிய ஆடிட் ரிப்போர்ட்களையும், 150 வருடங்களாக, அரசியல் ஆதாயங்களை அறவே ஒதுக்கிய தணிக்கைத்துறை மீது, ஆதாரமே இல்லாமல் அவர் அள்ளி வீசிய சேறு, காங்கிரஸ் கட்சி முகத்தில். உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் கூறியதை துச்சம் என்று கடாசிவிட்டார்.

சமயத்தில், அவர் உண்மை விளம்பி: ராகுல் காந்தி ஆளும் திறனற்றவர் என்று சொன்ன மஹானுபாவன், அவர். தலைப்பாகையையும், காலணியையும் பறி கொடுத்த காங்கிரஸ் கட்சி ஜட்டிபனியனையும் பறி கொடுக்க வாய்ப்பு அளிக்கிறார், இந்த பெரிய மனிதர். அவர் இயக்கிய பெண்பாவம் பற்றி நான் பேசபோவதில்லை. அவர் சொல்வதை ஆமோதிக்கிறார், திரு மல்லிகார்ஜுன கார்கே. அவரை எதிர்க்கட்சி தலைவராக, அரசியல் சாஸனத்தை மீறி, அமர்த்தவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஹீனக்குரலில் கொக்கரிக்கறது. திரு. திக்குவிஜய் சிங்கை பொது கணக்கு மன்றத்தில் தலைவராக போட, இது ஒரு வழி. அப்போது, அவர் கட்சிபற்று அற்ற ஆடிட் ரிப்போர்ட்டுகளை எப்படி கையாளுவார்? சாக்கோ என்ற அவருடைய சகாவே தேவலை என்று ஆகிவிடும். விநாசகாலே விபரீத புத்தி!

2. துர்ச்சம்பவம்.

சென்னை மெளலிவாக்கத்தில் ஜூன் 28 அன்று கனத்த மழை பெய்தது. ஒரு 11 மாடி கட்டிடம் வீழ்ந்தது. இன்று காலை வரை 13 சடலங்கள் கிட்டின. அருகிலிருந்த வீடுகள் சுக்குநூறாயின. பாவம் கணேசன் என்ற அண்டை வீட்டுக்காரர் பலியானார். இன்னும் பலர் இடிபாடுகளுக்கு இடையே. எல்லாரும் ஏழைகள். ஒரு தொல்லைக்காட்சியில், இடி விழுந்ததே அதற்கு காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தது, கல்யாணக்கூடத்தில் சீப்பை ஒளித்து வைப்பது போன்ற, எதையோ மறைக்கும் செய்தியாகத்தான் தோன்றியது. பிறகு பல தரப்புகளிலிருந்து வந்த செய்திகளை அலசிப்பார்த்தால், பல ஏமாற்று சித்து வேலைகள் தென்படுகின்றன. சில துண்டுச்செய்திகள்:

➢ கனத்த மழையால் சில இயந்திரங்களை இயக்க முடியவில்லை. ராப்பகலாக் மீட்பு பணி நடக்கிறது. தொடங்கியதும், அதீத துரித கதி.

➢ அடித்தளம் முதல் கட்டுமானத்தில் அசட்டை தென்படுகிறது. ஒருவருக்கொருவர் இணைந்து செய்யாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டதாகத் தோற்றம்.

➢ முதல் நம்பர் முதலாளி ஓய்வு பெற்ற ஒரு வங்கி ஊழியர். அவருக்குக் கோடிக்கணக்காக செல்வம் வந்தது எப்படி என்ற கேள்வி ஒரு புதிர். அவருக்கு வேண்டப்பட்ட அரசியல் வாதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். பினாமிப்பணமா????????

➢ இடி மின்னல் ஒன்றுமில்லை. அத்து மீறி கட்டியது தான் குற்றம் என்றாராம் ஒரு ஊழியர். முதல்வரும் அத்தகைய பொருள்பட கூறியதாக, ஆவணங்கள் கூறுகின்றன.

➢ “எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம்.”மீட்பு பணி ஊழியர்களுக்கு வந்த குடிநீர் அபேஸ்!

➢ தினகரன் என்ற இரும்பு பட்டறை தொழிலாளி 108க்கு ஃபோன் செய்து நிவாரணத்தை துவக்கி வைத்தார், ஒரு நிமிட தாமதம் இல்லாமல். அவருக்கு ஒரு அரசு சாதனையாளர் விருது தகும்.

இன்னும் பல சிக்கல்களை பற்றி எழுதவேண்டும், விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்ப. உதாரணமாக ‘டார்ட்’ சட்டம். முழுவிவரங்கள் கிடைத்த பின் தான் அவற்றை பற்றி எழுதலாம். உடனே துரிதமான நடவடிக்கைகள் எடுத்த அரக்கோணம் அமைப்பு முதல், தீயணைப்பு படை, காவல் துறை, ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி எல்லாருக்கும் நாம் நன்றி நவிலவேண்டும். முதல்வரும் துரித நடவடிக்கைகளுக்கு ஆணையிட்டார் என்று பறை சாற்றிக்கொண்டே இருந்தாலும், அதை விட அவருடைய பொறுமையை போற்றவேண்டும். துர்ச்சம்பவம் நடந்தால், அங்கு அரசியல்வாதிகள் வீடீயோக்காரர்களுடன் படையெடுத்து, மீட்புப்படையின் உயிரை வாங்குவார்கள். நம் முதல்வர் தாமதித்து உரிய காலத்தில் மட்டும் சென்றார்.

இன்னும் பல மருந்துகள்/மாயம்/ வேஷம்/ நஞ்சு செய்திகள் வந்த வண்ணம். பார்க்கலாம்.

(தொடரும்)

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

-#-

சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2011/04/banana-8.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *