இன்னம்பூரான்

innam

சட்டம், சட்டம் போடப்பட்ட நிலைக்கண்ணாடி அல்ல. இயற்றப்பட்ட சட்டபுத்தகம் அடித்தளம். உச்ச நீதி மன்றம் அளித்தத் தீர்வுகளுடன் அதை இணைத்து, சட்டம் வகுக்கப்படுகிறது. காலகட்டத்துக்கேற்ப, அடித்தளமும் அசைக்கப்படலாம். இன்று அசைக்கப்பட்டு, தளர்க்கப்பட்டது.

என்ன தான் பெண்ணியம் வாதாடினாலும் ஆணாதிக்கத்தின் பிடி தளர்ந்து போவதில்லை. பெண்ணியம் பாய்க்கு அடியில் புகுந்தால், ஆணாதிக்கம் கோலத்துக்கு அடியில், மயில் ராவணன் போல் புகுந்து, தர்பார் நடத்துவது கண்கூடு. கீதா ஹரிஹரன் என்ற பிரபல எழுத்தாளர் 1999ல் தன்னுடைய மைந்தனின் பெயரில் சேமிப்பு ஒன்றை செய்து, தான் கார்டியன் என பதிவு செய்யப்படவேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் விண்ணப்பம் செய்தார். இது பற்றி 1890 ல் இயற்றப்பட்ட சட்டத்தின் 11வது ஷரத்துப்படி காப்பாளர் பொறுப்புக்கு அப்பனுக்கு முதல் உரிமை; ஆத்தாள் அடுத்த படி தான். நூறு வருடங்களுக்கு பின்னர் அதே தடியடி நடத்துவது கனம் கோர்ட்டாருக்கே சரியாக படவில்லை. ‘கணவனிடமிருந்து பிரிந்து வாழ்ந்த கீதா ஹரிஹரன் தான் உண்மையில் அந்த சிறுவனின் பாதுகாப்பாளர். கோர்ட்டார் அப்பனும் ஆத்தாளும் சரி சமமே’ என்று அன்று சொல்லியிருந்தாலும், இந்தியாவில் நடைமுறையில் அது கண்டு கொள்ளப்படுவதில்லை. அதனால் தான் என் ஆத்திரத்தை வெளிப்படுத்த வட்டாரச்சொற்களை பிரயோகிக்கிறேன். எங்கு போனாலும் தந்தையின் சம்மதம் கேட்கிறார்கள். இது பொருட்டு இரு அனுபவங்கள்:

1996ம் வருடம் எங்கள் வீட்டில் ஊழியம் செய்யும் பெண்ணின் பையனை, அவளுடைய விருப்பப்படி ஒரு பிரபல பணக்கார பள்ளியில் சேர்த்தேன். நான் பணம் கட்டும் போதும், மற்றபடியும் மிகவும் மரியாதையாக பழகிய பிரின்சிபால், ‘பையனின் தந்தையில் கையொப்பம், அவன் குடி போதையில் இருப்பதால், வாங்க இயலாது. அன்னையின் கைநாட்டுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்’ என்றவுடன் கொதித்தெழுந்தார். குடிகாரன் மகனுக்கு தான் இடம் தரமுடியாது என்றார். என் தரப்பு நியாயங்களை குப்பையில் கொட்டினார். நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன் என்று சொன்னபின் தான் அடங்கினார். ஆனாலும் மற்ற கழுதைகள் (சக மாணவர்கள்) செய்த களேபரம் பொறுக்கமாட்டாமல், அவனை நானே வெளி கொணர்ந்து, அரசு பள்ளியில் சேர்த்தேன். இன்று பெரிய வேலையில் இருக்கிறான்.

இங்கிலாந்தில் தனித்து வாழும் அன்னைகளுக்கு அரசு உதவி செய்கிறது. ஒரு 18 வயது பெண், தாங்கொண்ணா கடன் பொருட்டு, ஆலோசனைக்கு வந்திருந்தாள், மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு. நிறை பிள்ளைத்தாய்ச்சி. 1890ம் ஆண்டு ஆணாதிக்கச்சட்டம் அருளிய வெள்ளைக்காரன் நாட்டில் அந்த பெண்ணுக்கு அரசு எல்லாம் செய்து கொடுக்கிறது. கருவின் தந்தை பற்றி கேட்டேன். ஏனென்றால், அவனிடமிருந்து நாங்களே வசூல் செய்து, செலவுக்கு பணம் கொடுக்கலாம். தெரியாது என்ற சொன்ன அந்த பெண், அரசு எனக்கு தனித்து வாழ இடம் கொடுக்கும் உரிமையை பெறவே, கர்ப்பம் தரித்தேன் என்று ஒரு போடு போட்டாள்.
இது நிற்க.

சமீபத்தில், நன்கு கல்வி கற்று நல்ல வேலையில் இருக்கும் ஒரு மாது தன்னுடைய ஐந்து வயது குழந்தை பெயரில் சேமிப்பு வைத்து, தன்னை கார்டியனாக நியமிக்க வேண்டி கீழ் கோர்ட்டில் விண்ணப்பம் செய்த போது, அப்பனை பற்றி 1890 சட்டப்படி இணைக்க வேண்டும் என்றார்கள். அப்பனின் பணிகளை பொதுப்படையாக சிலாகித்து, உயர் நீதி மன்றமும் ஒத்துப்பாடியது. இன்றைய ஹிந்து இதழ் தகவல் படி, உச்ச நீதிமன்றம், அவளுடைய கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஒரு புரட்சியையே உருவாக்கி விட்டது.

அதன் பலன்கள் இவ்வாறு அமையலாம்.

தனித்து வாழும் தாய்மார்களுக்கு சட்டபூர்வமான அங்கீஹாரம்;
மற்ற நாடுகளை போல் தாயும், தந்தையும் சரி சமானம்;
விவாகத்துக்கு அப்பாற்பட்டு பிறக்கும் குழவிகளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு;
விலை மாதர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். எப்படியோ பிறந்துவிடும் குழந்தைகள் தள்ளுபடி ஆகமாட்டார்கள்;
தனித்து வாழ விரும்பும் பெண்கள் துணிவுடன் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாம்.
தனித்து வாழும் தாய்மார்களுக்கு அபவாதம் குறையும்.

பாரதமாதாவே! உன்னுடைய பெண் சிசுக்களுக்கும் நீ தானே மாதா. அவர்களை பேணி வளர்ப்பாயாக.
-#-
உசாத்துணை: இன்றைய ஹிந்து அப்டேட்.
சித்திரத்துக்கு நன்றி:https://milehighcritics.files.wordpress.com/2012/05/love-child.png?w=300&h=199

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *