
சந்தேகம் தீர்ந்ததா சவ்யஸாஸி ! கீதையால்
உன்தேக வீரம்கொள்! உற்றார்கள் -மந்தமாய்
ஆகார், அனவரதர், சாஸுவதர் மெய்போயின்
சாகார் இவரென்றும் சார்”….கிரேசி மோகன்….!
தேவ் ராஜ்

‘சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த – சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை. சாமானியப் பேச்சு வழக்கு மொழிகளையே கையாண்டு வந்தன’ என்பது
பரவலான ஆழ்ந்த புரிதல். ஆனால் சமண வரலாறும், சான்றுகளும் இக்கருத்தைச் சற்றும் ஏற்க முடியாமல் அமைந்திருக்கக் காண்கிறோம். பஞ்ச பரமேட்டிகளைப் போற்றும் சமண மந்திரமான ணமோகார மந்திரம் பாகதத்தில் அமைந்திருப்பதும் உண்மையே. ஆனால் ஜைனம் பிரணவத்தை, பீஜாக்ஷரங்களை மறுக்கவில்லை. சமணக் கோட்பாட்டுக் கலைச்சொற்கள் அமைந்திருப்பது ஸம்ஸ்க்ருதத்தில்.
அடிப்படையில் பௌத்தம், ஜைநம் என்பவை சங்கதப் பெயர்களே;
தீர்த்தங்கரர் பெயர்கள் சங்கதத்தில், கணதரர் பெயர்கள் சங்கதத்தில். சமணக் கல்வெட்டு சொல்லும் சில சமணத் துறவியருக்கு அழகான சங்கதப் பெயர்கள் –
ப₄த்₃ரோ ப₄த்₃ரஸ்வபா₄ஶ்ச த₄ரஸேநோ யதீஶ்வர:||
பூ₄தப₃லி: புஷ்பத₃ந்தோ ஜிநபாலிதயோகி₃ராட்|
ஸமந்தப₄த்₃ரோ தீ₄த₄ர்மா ஸித்₃தி₄ஸேநோ க₃ணாக்₃ரணீ:||
புகழ்பெற்ற கணதரர் சிலர் –
வ்ரு’ஷப ஸேன, கேசி, சுபதத்த, ஆர்யகோஷ, வசிஷ்ட, ப்ரஹ்மசாரி, ஸோம, வீரபத்ர, ஸ்ரீதர, இந்த்ரபூதி கௌதம, ஸுதர்ம ஸ்வாமி. இவர்கள் தீர்த்தங்கரர்க்கு அணுக்கமாக இருந்து கோட்பாடுகளைப் பரப்பினர். ஆநந்தகனர் என்ற வெள்ளாடைத் துறவியார் சிறந்த கவிதைகளைப் படைத்தார். இருபெரும் சமணப்பிரிவினரும் பின்பற்றும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’ அமைந்திருப்பது சங்கதத்தில்.
சமணத் துறவியர் நந்தி கணம், ஸேன கணம், ஸிம்ஹ கணம், தேவ கணம் என நான்கு கணத்தவராக இருந்தனர். வஜ்ர நந்தி மதுரையில் சமண சங்கத்தை நிறுவினார். பவணந்தி முனிவர் [நன்னூல்] நந்தி கணம் சார்ந்தவர்; அப்பரடிகளார் தாய்ச் சமயம் திரும்புமுன் சமணத்தின் ஸேன கணத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; ‘தர்மஸேனர்’ அவர்தம் பெயர். திருஞான ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளின் ‘திருவாலவாய்ப் பதிகம்’ பார்த்துத் தெளிவு பெறலாம். தமிழ்க் காப்பியமான நீலகேசிக்கு உரை எழுதியவர் ஸமய திவாகர முனிவர்.
இன்றளவும் சமணத் துறவியர் சங்கதப் பெயர்களோடுதான் இருக்கின்றனர்; இன்றைய சமண உலகின் புகழ்பெற்ற துறவியார் ‘தருண ஸாகர முனி’. இவரது சொற்பொழிவுகளை யுட்யூபில் கேட்கலாம்.
சமணரின் தொன்மையான ஆகம நூலான ஷட்கண்டாகமத்தின் தவள டீகை அருமையான சங்கத சுலோகங்களுடன் திகழ்கிறது, மாதிரிக்கு ஒன்று-
பூர்வாபரவிரோதா₄தே₃வ்ர்யபேதோ தோ₃ஷஸந்ததே:|
த்₃யோதக: ஸர்வபா₄வநாமாப்தவ்யாஹ்ருʼதிராக₃ம:||
சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த சமணர் குழாம் கருநாடகத்தில் நிலைபெற்று வளர்ந்தது; தென்னக மொழிகளில் சமயப் பரவல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் சங்கதம் ஒதுக்கப்படவில்லை. ‘மஹா புராணம்’ கருநாடகச் சமணர் தந்த முக்கியமான சங்கத நூல். சமணர் தம்மில் வாதுவல்ல அறிஞர்க்கு ‘வாதீப ஸிம்ஹ’, ’வாதி கண்டீரவ’ எனும் பட்டங்களை அளித்துக் கவுரவித்தனர். பாரதத்தில் விருதளிப்புச் சடங்கை முதலில் தொடங்கி வைத்தது சமணராகவே இருக்க வேண்டும்.
தென்னகத்தின் மிகுந்த புகழ் படைத்த குந்தகுந்த ஆசார்யரும் சங்கதத்தில் நூல்கள் செய்துள்ளார். இவரது தீக்ஷா நாமம் – பத்ம நந்தி. மாநதுங்க முனி, ரிஷப தீர்த்தங்கரர் குறித்து ‘பக்தாமர ஸ்தோத்ரம்’ இயற்றினார்; இத்துதி நூல் சமணரால் மிகவும் மந்திர சக்தி பொருந்தியதாகக் கருதப்படுகிறது. பன்முக ஆற்றல் படைத்த ஹேமசந்த்ர முனியின் சங்கதப் படைப்புகள் பற்றித் தனியாக எழுத வேண்டும்.
ப்ராஹ்மி லிபியை ஜைனரின் பழைய பகவதி ஸுத்தம் “ணமோ பம்பியே லிவியே” என்று போற்றி வணங்கினாலும், இன்றைய பாகதச் சமண நூல்கள் அச்சேற்றப்படுவது தேவநாகரியில்தான். அதைப் பார்த்துவிட்டுப் பாகத மொழிக்கெனத் தனியான எழுத்துருக் கிடையாது என முடிவுகட்ட இயலாது, இதே நிலைதான் சங்கதத்துக்கும். அன்றைய கால கட்டத்தில் எல்லா மொழிகளுக்கும் ப்ராம்மி லிபி பொது எழுத்துருவாக இருந்திருக்க வேண்டும். இன்றைய தேவநாகரி 120 மொழிகளுக்கு ஒரே எழுத்துருவாக விளங்குவதுபோல. அதே காரணத்தால் சமணமும் அந்த லிபிக்கு மரியாதை தந்திருக்கலாம்.
அருமையான சங்கத நிகண்டு செய்தளித்த அமரசிம்மர் பார்ப்பனரல்லர்.
அருகர் சமயப் பரப்புரைக்கு பேச்சுமொழிகளைக் கையாண்டனரே தவிர, சங்கத வெறுப்பு அவர்களிடம் கிடையாது. அர்த மாகதி, சூரஸேனி மொழிகளில் அவர்கள் எழுதினாலும் கூடவே ஸம்ஸ்க்ருதத்திலும் சாயை காட்டியே எழுதியுள்ளனர்.
சமயவாதிகளின் நோக்கம் சமயப்பரவல் மட்டுமே; மொழி வளர்ப்பது அவர்களது நோக்கமன்று. தம் கோட்பாடுகளை விரைவில் பரப்பப் பிராந்திய அளவில் பெரும்பான்மையோர் பேசும் மொழிகளை ஊடகமாக்கிக் கொண்டனர். கோட்பாடுகளைச் செந்தரமாக்கிப் பொதுப்புரிதலுக்கு ஆக்கும்போது சங்கதத்தைத் துணை கொண்டனர். சமணக் கோட்பாடுகள் நூற்பா ஆகும்போது சங்கதமே துணை செய்கிறது. சமணர் தொடர்பில்லாத இந்திய மொழிகள் இல்லை; ஆனால் அவர்களின் சங்கதப் பங்களிப்பும் மிகுதி, இதுவே உண்மை. சமணம் சமயம் தவிரப் பிறதுறைகளிலும் அவர்கள் நூல்கள் யாத்துள்ளனர்.
“What would be the condition of the Indian Sanskrit literature if the contribution of the Jains were removed? The more I study Jain literature the more happy and wonderstruck I am.”
– Dr Hertel, Germany
ஜப்பானிய அறிவியலார் தம் ஆய்வுரைகளை உலக அளவில் முற்செலுத்தும்போது ஆங்கில மொழி வல்லுநரைத் துணை கொள்வர், தம் கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்துக்கு இடமில்லாதபோதும். ஆங்கிலம் இன்றைய உலகில் இன்றியமையாத மொழியாக விளங்குவதுபோல், அன்று தெற்காசியாவைப் பொருத்த மட்டில் சங்கதம் இன்றியமையாத மொழியாக இருந்தது.
பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி சொன்னது….!
———————————————————————————
சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு…..!
—————————————————————————————–
பந்தியில் ராகுவைப் பார்த்துவிட ஜாடையாய்
சந்திர சூரியர்கள் சாமியை , -மந்தஹாஸ
மூவா(மூப்பு இல்லா மால் -அபிராமி அந்தாதி பிரயோகம் -மோகினி அவதாரம்….!) முகுந்தரை, மூட்டிவிட, ஆப்பாப்பாய்(ஆப்பு -பறிமாறிய அகப்பை சுதர்ஸன சக்கிரமா மாறி ராகுவுக்கு ஆப்படித்து விட்டது)
moveவாக ராகுகாலம் மூச்….கிரேசி மோகன்….!
பவள சங்கரி
தலையங்கம்
அசாமில் சமீபத்தில் NRC – தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 1200 கோடி உரூபாய் செலவில், 5 ஆண்டுகள் உழைப்பில் இந்தக் கணக்கெடுப்பு எடுத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசாமின் மொத்த மக்கள் தொகையான 3,29,91,384 பேர்கள் இதற்குப் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் அளித்துள்ளனர். இதில் 2,89,83,677 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 40,7707 விண்ணப்பங்கள் விடுபட்டுள்ளன. இவர்கள் செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் தங்களுடைய குறைகளைக் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி தமது கருத்தாக மம்தா பானர்ஜி அவர்கள் இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாகக் கூறுகிறார். நமது உள்துறை அமைச்சர் இது விரைவில் சரி செய்யப்படும் என்றும் சமாதானம் கூறியுள்ளார். சுமாராக 15% பேர்கள் விடுபட்டுள்ளது சந்தேகம் ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஆம், 40 இலட்சம் பேர் விடுபட்டுள்ளது அரசியல் நோக்கர்களின் பார்வையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரு . அஜ்மால் மற்றும் அவருடைய சகோதரர் திரு. சிராஜூதின் அஜ்மால் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விடுபட்டு மீண்டும் இணைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-மேகலா இராமமூர்த்தி
கண்ணைப்பறிக்கும் வண்ண வளையல்களின் அணிவகுப்பை நிழற்படக் கருவியில் எழிலாய்க் கொண்டுவந்திருப்பவர் திரு. மோகன்தாஸ். இதனை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றியறிதல் உரித்தாகின்றது.
”மங்கல அணியாம் வளையலைக் கண்டால்
திங்களைக் கண்ட அல்லியாய்
நங்கையர் முகமும் மலரும்!”
வண்ண வளையல்கள் குறித்த நம் கவிஞர்களின் எண்ணவோட்டத்தையும் அவர்தம் கவிதைகள்வழி கண்டுவருவோம்!
”கல்லுடைக்கும் பெண்ணெனக்குக் கல்லுவளை சரிப்படுமா? இடுப்பொடிய நானுழைத்தால் அல்லவோ என் வீட்டினிலே அடுப்பெரியும்!” என்று வருந்தும் ஏழைக் கர்ப்பிணியின் வேதனையை மனந்தொடும் வகையில் பாவில் பதிவாக்கியிருக்கிறார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா.
ஓர் ஏழையின் குமுறல்
கைநிறையப் போடக்
கலர்கலராக் குவிச்சிருக்கு
பைநிறையப் பணமிருந்தாப்
பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம்.
ஏழைக நம்பளுக்கு
எதுக்கிந்த வளையலெல்லாம்
வாழ வழியில்லையாம்
வளையலொரு கேடா
புதுப் புள்ளத்தாச்சிக்குப்
போடுவாங்க வளைகாப்பு
எட்டு மாதப் புள்ளத்தாச்சி
எம் பொழைப்பு கல்லுடைப்பு
கல்லுடைக்கும் கைக்கு
காப்பு சரிவருமா?
நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான்
ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குளிரும்
சீக்காளி எம்புருசன் செதைஞ்சு கெடக்கையில
காப்பு வந்து என்னோட கையிலதான் ஏறிடுமா
வாணா எனக்கிந்த வளைகாப்பு ஆசையெல்லாம்
வீணாச் செலவழிச்சு வீம்பு பண்ண ஏலாது.
*****
”வளைந்து பருக்கும் வயிற்றின் இரகசியம் சொல்லுமிந்த வளை! கருவின் உயிரும் கேட்டு மகிழுமே வளையல் எழுப்பும் இன்னிசை!” என்று வளைகாப்பின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
வளைகாப்பு:
குலங்கள் தழைக்கக் குடும்பம் மகிழ
பலவிதப் பண்டிகைப் பெரிதாய் உண்டு
நலமுடன் வாழவும் நித்தமும் ஒன்றாய்
விலகா வண்ணம் வருமாம் அழகாய்
விளைந்த நல்திரு விழவில் அணியும்
வளையல் தந்த வகைதான் வளைகாப்பு
பிரிவினை அகற்றப் பாடம் சொன்னது
பிரியாது சேர்ந்தே பெண்ணொடு பழகும்
வட்ட வடிவம் வண்ணத் தோற்றம்
எட்ட விரட்டும் எதிர்வினை ஒழிய
வளைந்து பருக்கும் வயிற்றின் ரகசியம்
வளையலின் மூலம் வருகின்ற உண்மை
சங்கத் தமிழில் சதங்கையும் வளையலும்
பொங்கு தமிழாலே புகழுற்ற வரலாறு
கருவின் உயிரும் கேட்கும் இசையை
ஒருவித வளையல் ஒலியும் சுகம்தான்
மனைவி ஆனதும் மங்கை யர்க்கொரு
வினைகள் வராது வளையல் காப்பது
“வளைகாப்பு”
திளைத்து மகிழத் தருமாம்
வளையல் சத்தம்.! வருவதும் மங்கலமே.!
*****
நற்கவிதைகள் புனைந்த கவிஞர்கட்கு என் வாழ்த்தும் பாராட்டும்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
பேரழகு!
தங்க வளையல் போட்டால்தான்
தனியே வந்திடும் மதிப்பென்றே
அங்கம் முழுதும் தங்கமாக்க
ஆசைப் பட்டிடும் அணங்குகளே,
தங்கம் தராத அழகினையே
தந்திடும் சாதா வளையல்களே,
தங்கிடும் எளிமையும் அடக்கமதுவும்
தானே கொணரும் பேரழகே…!
தங்கத்தின்மீது எப்போதும் அளவற்ற மோகம் நம் நங்கையர்க்கு. தம் செல்வச்செழிப்பைப் பறைசாற்ற, தங்க வளையல்களை முழங்கைவரை அடுக்கிக்கொண்டுவரும் அணங்குகள் ஏராளம்! ஏராளம்! எனினும், தங்கத்தினும் வனிதையர் அங்கத்துக்கு அதிக அழகைக் கூட்டுவது, அவர்களைப் பொலிவாய்க் காட்டுவது இங்கே குவிந்திருக்கும் சாதா வளையல்களே என்று தோதாய் உரைக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

சந்திரனையும் சூரியனையும் தந்தது யார்
=====சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.!
எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம்
=====எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.!
மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது
=====மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.!
தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்-
=====தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.?
தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும்
=====தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.!
இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா
=====இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.!
ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை
=====உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.!
வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும்
=====வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.!
ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும்
=====உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.!
கருவிலே இருக்கும் போதே நாங்களும்
=====கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.!
இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத
=====உன்னொளியால் மலர்கள் கூட மலர்கிறது.!
உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த
=====உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!
===================================================
நன்றி தினமணி கவிதைமணி:: 25-06-2018
நன்றி கூகிள் இமேஜ்.
நா. கணேசன்
இந்த வார வல்லமையாளராகத் திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.
டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் பெட்னா திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து கலந்துகொண்டனர். என்றுமில்லா வகையில் 5000 பேர்கள் பங்கேற்பு.
இந்திய வரலாற்றில் தமிழின் ஆழமான பங்கு வியத்தற்குரியது. இந்தியப் பல்கலைகளில் மட்டுமன்றி மேலை உலகத்திலும், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் உயராய்வுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஊக்குவிக்குமுகமாக, பேராசிரியர் பதவிகள் நல்ல பல்கலைகளில் ஏற்பட்டுவருகின்றன. பெர்க்கிலியிலும், ஹார்வர்டிலும் நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் போல, தென் மாநிலம் ஆகிய டெக்சாஸின் பெருநகர் ஹூஸ்டன் பல்கலையிலும் தமிழ்ப்பீடம் அமைக்க இருப்பதற்கான முயற்சித் தொடக்கத்தை ‘சாம்’ சொ. கண்ணப்பன் அறிவித்தார். முனைவர் நா. கணேசன் “தமிழ்த்தாய் கொலுவிருக்கும் கல்விச்சாலைகள் எங்குமிருக்கலாம். ஆனால் அவ்வன்னையின் திசை தென்திசை. அங்கே ஹூஸ்டனில் தமிழ்த்தாய் அமர்ந்து ஆய்வுகளை அலங்கரிக்க உதவுங்கள்” என்றார்.

மேலைநாடுகளில் 20+ தமிழ்ப் பீடங்கள் உயர்பல்கலைக் கழகங்களில் அமையும்போழ்து தமிழகப் பேராசிரியன்மார் வந்து ஆய்வுகளைக் கற்பிக்கவும், கற்கவும் வாய்ப்பு ஏற்படும்; அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் பிறக்கும் தமிழ் வமிசாவளியினர் தமிழ், திராவிட மொழியியல், கலாச்சாரம், தொல்லியல், கலைவரலாறு, மாந்தவியல், சமூகவியல், நிகழ்த்துகலைகள்… எனப் பல்வேறு துறைகளில் பேராசிரியர்களாய் புதிய பார்வை தரும் நூல்களை வாழையடி வாழையென வருங்காலத் தலைமுறையினர் எழுதத் துணை செய்யும். அமெரிக்க இளந்தமிழர்:

இவற்றை எல்லாம் உணர்ந்தே மனோன்மணீயம் பெ. சுந்தரனார் மேற்குலக – கிழக்குலக ஆய்வுகள் காரணமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தந்தார். இன்று தமிழ்நாட்டிலும், அரசாங்க விழாக்களிலும் உலகெங்கும் தமிழ்ப் பள்ளிகளிலும், தமிழ் மன்றங்களிலும் எந்த நிகழ்ச்சி ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது.
பெட்னா திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து:
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

இந்த வார வல்லமையாளர்: திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப (I.A.S)
ஃபெட்னா விழாவில் அனைவர் மனத்தையும் கவர்ந்தது இந்திய ஆட்சியாளர் பதவியில் மேற்கு வங்கத்தில் பணியாற்றிய கோ. பாலச்சந்திரன். இனிமையாகப் பழகும் அவர் தமிழ்மரபில் ஆழங்கால் பட்டவர். சிவகாசியைச் சார்ந்த இவர் ஹார்வர்ட் தமிழ்ப்பீடத்திற்கு அமெரிக்க டாலர் 50000-க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரன் சொற்பொழிவுகளை யுட்யூப் போன்ற தளங்களில் கேட்டு மகிழலாம். https://www.youtube.com/watch?v=ciS3Rg3XI5A&
ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குச் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் திரு. பாலச்சந்திரனை அழைத்தோம். “அற்றைத் தமிழர் நோக்கும், இற்றைத் தமிழர் போக்கும்” என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். பின்னர், ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் $-ல் தமிழ்ப் பல்கலை அமைக்கும் பூர்வாங்கக் கூட்டத்தில் பல்கலை உயர் அதிகாரிகள், Academic Dean Dr. Tillis போன்றவர்களோடு பேசக் கலந்துகொண்டார். பியர்லாந்து நகர மேயர், டாம் ரீட் கலந்துகொண்டு பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழ் தொடர்பான, அதன் ஆய்வுகள் கல்வி உலகிலும், இணைய உலகிலும் வேரூன்ற திரு கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. என்றும் உதவ வேண்டும் என வாழ்த்தி அன்னாரை இந்த வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை மின்னிதழ் பெருமை அடைகிறது.
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முடிவில்லாப் பேய் மழை போல்
வார்த்தைகள் பறக்கும்
காகிதக் குவளைக் குள்ளே !
தாறுமாறாய் நடப்பர், கடப்பர் அவரெலாம்
உலகத்தின் ஊடே நழுவி !
துயர்க் கடல் ! இன்ப அலைகள்
தடுமாறிச் செல்லும்,
என்னைக் கட்டித் தழுவி,
வெளிப்படை யான என் மனத்தின் ஊடே !
ஜெய் குருதேவா ! ஜெய் ஓம் !
எதுவும் மாற்றா தென் உலகை !
எதுவும் மாற்றா தென் உலகை !
கிழிந்த ஒளிக்காட்சி கோடி
விழிகளாய்
துள்ளும் என்கண் முன்னால் !
அவை விளிக்கும் என்னை
மீண்டும்
மீண்டும் உலகத்தின் ஊடே !
நினைவுகள் தாறு மாறாய்த் திரியும்,
நிலையிலாக் காற்று போல்,
ஒரு கடிதப் பெட்டிக் குள்ளே !
தடுமாறுவார் கண்ணிலாதது போல்
உலகத்தின் ஊடே அவர்கள்
செல்லும் போது.
ஜெய், குருதேவா ! ஜெய் ஓம் !
எதுவும் மாற்றா தென் உலகை !
எதுவும் மாற்றா தென் உலகை !
நகைப்பொலிகள், புவிக்கரு நிழல்கள்
எதிரொலிக்கும்
வெளிப்படை யான என் சொல்லைக்
கடக்கும் போது !
என்னையும் விளிக்கும் !
முடிவிலாக் காதல், மடிந்திடாக் காதல்
எதிரொலிக்கும்
என் வெளிப்படைக் கருத்தின் ஊடே
எனை விளிக்கும் !
கோடிக் கணக்கில் பரிதிகள் சுற்றி
ஒளிகாட்டும் எனக்கு !
எனை விளிக்கும் மீண்டும்,
மீண்டும்,
மேதினியில் நடமாட !
ஜெய், குருதேவா ! ஜெய் ஓம் !
எதுவும் மாற்றா தென் உலகை !
எதுவும் மாற்றா தென் உலகை !
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
க. பாலசுப்பிரமணியன்
மகிழ்வும் திறனும் தொழிலுக்குத் தேவை
பல நேரங்களில் நமக்கு நாம் விரும்பிய தொழிலோ அல்லது வேலைகளோ கிடைப்பதில்லை. எவ்வளவுதான் ஆர்வம் நமக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் விரும்பிய தொழில்களில் ஈடுபட முடிவதில்லை. ஆனாலும் நம் உள்மனதில் அந்தத் தொழிலைப் பற்றிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்துகொண்டே இருக்கின்றது. நாம் அந்த விருப்பங்களுக்கும் ஆர்வங்களும் மாறுபட்ட நிலையில் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு விடுகின்றோம். சில சந்தர்பங்களில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் குடும்பச் சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ அல்லது சமுதாய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகவோ அமையக்கூடும். அந்த நேரங்களில் பலருக்கு ஒரு தோல்வி மனப்பான்மையோ அல்லது ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. இந்தச் சூழ்நிலைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை. மன அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தலாம். இதிலிருந்து மீண்டு நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அதையே ஒரு பரிசாக ஏற்று அந்தத் தொழிலை மகிழ்வுடனும் சிறப்பாகவும் செய்ய கற்றுக்கொள்ளவும் முயலவும் வேண்டும்.
எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் மகிழ்வும் ஈடுபாடும் இல்லாமல் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றது. அதையே மகிழ்வோடு செய்யும் பொழுது அது நல்வாழ்வுக்கு உரமாக மாறிவிடுகின்றது. உலகின் மிகப் பெரிய தத்துவ மேதை அரிஸ்டாட்டல் கூறுகின்றார் “மகிழ்வோடு செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகின்றது.”
சில நேரங்களில் நாம் தொழிலில் நமக்கு அதைச் செய்வதற்கான வெகுமானமும் சம்பளமும் கிடைக்காததால் நம்முடைய ஈடுபாடுகளையும் மகிழ்வையும் குறைத்துக்கொள்கின்றோம். அது மட்டுமல்ல, நாம் நம்மைப் போன்ற பலருடன் நம்மை ஒப்பிட்டு நம்முடைய தரத்தை உயர்த்தியோ குறைத்தோ மதிப்பீடு செய்கின்றோம். இது ஒரு தவறான நோக்கு. இந்த ஒப்பீடுகள் ஓரளவிற்கு நம்முடைய திறனுக்கு அளவுகோலாக இருக்குமேயன்றி எல்லா நேரங்களிலும் நம்முடைய ஈடுபாட்டிற்கும் திறனுக்கும் நிரந்தரச் சான்று அல்ல. எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடோடு செய்யும் பொழுது நமது திறன் ஒளிர்கின்றது. அதில் கிடைக்கும் மகிழ்வே அந்தச் செயலை சரியாகச் செய்வதற்கான கூலியாக அமைகின்றது. இதையே பகவத் கீதையின் கர்மயோகத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. “கர்மண்யேவாதிகாரஸ்தே; மா பலேஷு கதாசன” என்ற கூற்றில் கண்ணன் அர்ச்சுனனுக்கு கூறுகின்றார் “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்.”
சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் சென்று “நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா” என்று தங்களுடைய திறன்களையும் தொழில் வளர்ச்சியையும் பற்றி தற்பெருமையுடன் சொல்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சிறப்பாகத் தொழில் செய்பவர்களுக்கு இதற்கான அவசியம் இல்லை. “ஒரு சிறந்த வேலைக்காரனுக்கு அவன் தொழில் திறனே முகவரியாக அமைகின்றது” என்று சொல்லப்படுகின்றது. அறிவுசால் சமுதாயத்தில் அறிவும் திறனும் உள்ளவர்களைத் தேடி உலகம் செல்கின்றது. இது நடைமுறை உண்மை. அவர்களுக்கு ஒரு விளம்பரமோ அல்லது பரிந்துரையோ தேவையில்லை. விளம்பரமும் பரிந்துரைகளும் கொண்டு தொழிலிலும் வாழ்விலும் முன்னேறுபவர்கள் அவர்களுடைய ஒவ்வொரு படியின் முன்னேற்றத்திலும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடைய தயவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தங்களுடைய முன்னேற்றத்தின் சரித்திரத்தை அவர்களால் எழுத முடியாது.
பல நேரங்களில் நல்ல திறனுள்ளவர்கள் என்ன திறமையிருந்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்’ என்ற ஒரு பிற்போக்கான கருத்தை மனதில் நிறுத்தி தாங்கள் செய்யும் வேளையிலும் தொழிலும் தங்களுடைய முழுமையான உழைப்பை செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் அநேகமாகத் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்- என்னதான் திறமையிருந்தாலும் கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை. அமெரிக்க மனநல மற்றும் சமூகச் சிந்தனையாளர் மால்கம் கிளாட்வெல் என்பவர் கூறுகின்றார். “திறன்கள் மட்டும் போதுமானதல்ல. அந்தத் திறன்கள் அமைதியாக இருக்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்காகப் பேசுகின்றது.” சில சமயங்களில் நாம் நம்முடைய திறன்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன் “உங்களுக்கு இந்தத் திறன்களெல்லாம் உண்டென்று உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரியுமா?”
அவர் அளித்த பதில் என்னைத் திகைப்படையச் செய்ததது. “இல்லை அய்யா. நான் அதெல்லாம் தெரியும் என்று சொன்னால் என்னை அதையெல்லாம் செய் என்று சொல்லுவார்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டுப் போகவேண்டும்.” இந்த நோக்கு சரியானது அல்ல. நம்முடைய திறன்களை சரியான நேரங்களில் நாம் வெளிக்காட்டாவிட்டால் அவைகளின் பயன் என்ன? நமக்கு நம்மைத் தவிர யார் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்?
நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யலாமே !
கணியன்பாலன்
தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்
நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில் பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும் கணிக்கப்பட்டன.
1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து, 19 மாதம் கழித்து கி.மு 325 வாக்கில் வெளியேறுகிறான்-(1).
2.அலெக்சாந்தர் காலத்திலும் அவனுக்கு முன்னும் மகதத்தை நந்தர்கள் ஆண்டு வந்தனர். நந்தர்களில் மகாபத்ம நந்தன் இந்திய அளவில் புகழ்பெற்றவனாக இருந்தான்-(2).
3.கி.மு.325-322 வரையான காலங்களில் வட இந்தியாவில் கலவரங்களும் குழப்பங்களும் நடைபெற்றது என்கிறார் வின்சென்ட் சுமித்-(3).
4.மௌரியர்கள் சுமார் கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். வட இந்தியாவில் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் கி.மு. 300 வாக்கில் தக்காணத்தின் மீது படையெடுக்கின்றனர்-(4).
5.கி.மு. 297இல், பிந்துசாரன் பதவியேற்றபின் தக்காணத்தின்மீதான படையெடுப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கடலுக்கு இருபகுதிகளிலும் இருந்த தக்காணப்பகுதிகளைக் கைப்பற்றியவனாக அவன் கருதப்படுகிறான்-(5).
6.சங்கப்பாடல்கள், வடுகர்கள், கோசர்கள் துணையோடு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்தும், வல்லம்போர், செருப்பாழிப்போர் ஆகியவற்றில் வடவடுகர், வம்பவடுகர், ஆரியர் எனப்படுகிற மௌரியர்கள் இளஞ்செட்சென்னியால் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் பேசுகின்றன-(6).
7.இப்படையெடுப்புக்குப்பின் மௌரியர்களின் தெற்கெல்லை, மேற்கே கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கே வடபெண்ணை நதியின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததாக வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்-(7).
8.வின்சென்ட் சுமித் தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன எனவும் ஆனால் மௌரியப்பேரரசில் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்-(8).
9.மாமூலனார் தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டில் மொழிபெயர்தேயம் எனப்படும் தாக்காணப்பகுதி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்(9).
10.முதுகுடுமிப்பெருவழுதி வெளியிட்ட நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கருத்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற பிரித்தானிய-ஜெர்மன் குழுவினர், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்பு-(10).
11.புகளுர்கல்வெட்டின் காலம் பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(கி.மு.290-270) முந்தைய கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கணிப்பு-(11).
12.சேரலாதன் இமயவரம்பன் குறித்தப் பதிற்றுப்பத்துப்பாடல்கள், அதன் பதிகம், அவன்குறித்த மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்கள் ஆகியன, அவன் 58 ஆண்டுகள் ஆட்சியாண்டதையும், வேந்தன் ஆனவுடன் இமயம்வரை அவன் படையெடுத்துச் சென்று வென்றதையும், கடம்பர்களையும், யவனர்களையும் வென்றதையும் தெரிவிக்கின்றன-(12)
13.கி.மு. 256ஆம் ஆண்டைய அசோகன் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேரளபுத்ர அரசுகள் இடம்பெற்றுள்ளனர். சோழர்கள் முதன்மை பெற்றுள்ளார்கள். அதியன்கள் இடம் பெற்றுள்ளார்கள்-(13).
14.கி.மு. 232இல் அசோகர் இறந்துபோகிறார். சாதவாகனர்கள் கி.மு.230இல் தனி அரசாக ஆகின்றனர்-(14).
15.சம்பை கல்வெட்டின் காலம் கி.மு.270-230; அதில் இடம்பெற்ற ‘சதியபுதோ’ என்பதில் உள்ள எழுத்துக்கள் பண்டைய எழுத்தியல்-கல்வெட்டியல் (palaeography-orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருப்பது போன்றே இருப்பது-(15).
16.காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டின்படி, கி.மு. 165க்கு முன் 1300 வருடங்களாக தமிழரசுகளின் ஐக்கியகூட்டணி இருந்து வந்துள்ளது. தமிழரசுகளின் காவல் அரணாக இருந்த, புத்துண்டா என்கிற கலிங்கநாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக நகரம் காரவேலனால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஆண்டு பாண்டிய வேந்தன் பரிசுப்பொருட்களை காரவேலனுக்கு அனுப்பியுள்ளான்-(16).
17.பதிற்றுப்பத்துப் பாடல்களின் தரவுகளும், அதன்பதிகங்கள்தரும் வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும்-(17).
18.வரலாற்றுக்கால இரண்டாம் தூமகேதுவின் ஆண்டும்(கி.மு.163), யானைக் கண்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தஆண்டும் ஒன்றாக இருப்பது. பத்தாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இவனே என்கிற தமிழறிஞர்களின் கணிப்பு-(18).
19.தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம்-கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(சுமார்கி.மு.130-100) என்கிற தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கணிப்பு-(19).
20.மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு சிறிது முந்தைய காலப்பகுதி(130-100) என்கிற அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன், ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்புக்கள்-(20).
21.கி.மு. முதல் நூற்றண்டில், சுங்க வம்ச ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில்(கி.மு.75), அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த உச்சயினி மீது தெற்கத்திய சாதவாகனர்களின் படையெடுப்பு நடந்தது என்கிற கோசாம்பி அவர்களின் கருத்து. சோழன் நலங்கிள்ளி உச்சயினி மீது படையெடுத்தான் என சங்ககால இறுதிக்கால “முத்தொள்ளாயரம்” நூல் கூறும் செய்தி-(21).
வரலாற்றுக் காலவரையறைக்கான ஆதாரங்கள்
1.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா, தமிழில் மாஜினி, வெளியீடு, ஜூன்-2004, பக்: 187.
2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 101.
3.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 56.
4, 5. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 111, 112.
6.மாமூலனார் – அகம்: 251, 265, 281; பாவைக்கொட்டிலார் – அகம் 336; இடையன் சேந்தன் கொற்றனார் – அகம்: 375; ஊன்பொதிபசுங்கொடையார்- புறம்: 370, 378; கள்ளில் ஆத்திரையனார்-புறம்: 175; உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- அகம்: 69.
7.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 64.
9.மாமூலனாரின் அகநானூற்றுப்பாடல்: 31.
10.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45; தமிழகக் கடல்சார் வரலாறு, பதிப்பாசிரியர்கள்-ந.அதியமான் & பா.ஜெயக்குமார், தமிழ்ப்பல்கலைக்கழகம், ஐப்பசி-நவம்பர்:2006, பக்:24; ஆர். கிருஷ்ணமூர்த்தி, செழிய செழியன் நாணயங்கள், பக்: 125-128.
11.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 25.
12.இரண்டாம் பதிற்றுப்பத்துப்பாடல்கள் & பதிகம் – குமட்டூர் கண்ணனார்; மாமூலனாரின் அகப்பாடல்கள்: 127, 347.
13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, அசோகர் ஆணைகள், பக்: 123, 124, 139, 140.
14.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 310, 311.
15.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 26-28.
16.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.
17.சங்ககால பதிற்றுப்பத்தும் அதன் பதிகமும்.
18.க.ப. அறவாணன், “தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்” டிசம்பர் 2009, பக்: 54-61 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 580-582.
19.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், பக்: 81-91.
20.சங்ககால சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு, சில வரலாற்றுச்செய்திகள், ஆர். கிருஷ்ணமூர்த்தி, 2009, பக்: 31, 32. & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45.
21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, செப்டம்பர்-2006, பக்: 388. & கவிஞர் தெசிணி அவர்கள், ‘கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்’, டிசம்பர் 2004, பக்; 180;
நிர்மலா ராகவன்
பதவி போதுமே, பண்பு எதற்கு?
“ஏ குரங்கே!” ஒரு சிறுவன் இன்னொருவனை நோக்கிக் கூவினான்.
அவனும் அதேபோல் கூவினான். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கெட்ட வார்த்தை என்று அவர்கள் நினைத்ததைப் பிரயோகிப்பதில் தனி மகிழ்ச்சி அந்த மூன்று வயதுச் சிறுவர்களுக்கு. அவர்களைப் பொறுத்தவரை, `ஹலோ!’ என்று சொல்வதற்கு ஒப்பான முகமன் இம்முறை.
சிறு வயதில் மட்டுமில்லாது, இக்குணம் ஆண்கள் வளர்ந்தபின்னும் தொடரும். தாங்கள் ஏசிப் பேசுவதை நண்பர்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். எந்த வயதானாலும், சற்றும் யோசியாது, ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.
ஒருவரது பேச்சிலிருந்து குணத்தை அறிந்துகொள்ளலாம் என்றாலும், அவர்கள் இப்படி ஒருவரையொருவர் பழித்துக்கொள்வதில் உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. இது ஒருவர் மற்றொருவரை நெருங்கும் உத்தி. நற்பண்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
பெண்கள் இப்படிப் பேசிப்பார்த்தால் தொலைந்தார்கள்.
“ஒன்னோட பாவாடை (அல்லது வளை) அழகா இருக்கு!” என்பதுபோல் ஏதாவது புகழ்ந்தால்தான் இன்னொருத்தி அப்படிக் கூறுபவளை சிநேகிதியாக ஏற்பாள்.
என்னுடன் வேலை பார்த்த ஓர் ஆசிரியை, தினமும்,`உன் புடவை அழகாக இருக்கிறது!’ என்பாள், என்னிடம். ஏதோ ஒரு நாள் கூறினால், அவள் கூறுவதில் உண்மை இருக்கிறதென்று நம்பலாம். ஆனால், தினமுமேவா?
நான் ஏன் மகிழ்ந்து புன்னகைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. போலியான புகழ்ச்சியால் நம்மை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எப்படி நம்பமுடியும்?
கதை: யாரிடம் பணிவு?
எங்கள் பகுதியிலிருக்கும் கறிகாய் மார்க்கெட்டில் பூனைக்குட்டிகள் வளைய வந்துகொண்டிருக்கும். அதை ஒட்டி இருக்கும் சாப்பாட்டுக்கடையில் மிகுந்துபோன உணவைச் சாப்பிட்டு, அவை காலந்தள்ளிக்கொண்டிருந்தன.
கறிகாயைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவன், தன் காலருகே வந்த பூனைக்குட்டியை உதைத்தான். அதற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று புரியவில்லை. அவனருகிலேயே நின்று, உதை வாங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு சிறியது – பிறந்து இரண்டு, மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். (அவன் வீட்டுச் சிசுவை இப்படி உதைப்பானா?)
அருகிலிருந்த பிறர் அவன் செயலைத் தவறாக எண்ணவில்லை. `யாருக்கும் சொந்தமில்லாத பிராணிதானே!’ என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது, பிறர் செயலில் குறுக்கிடக்கூடாது என்ற `நாகரிகம்’ கருதி சும்மா இருந்தார்கள்.
அருகில் திகைத்து நின்றிருந்த என் பேரனை, “இதைத் தூக்கி வெளியில் விடு,” என்றேன், கடுமையாக. (எரிச்சல் பூனைமேல் இல்லை).
எதிர்க்க முடியாத பிராணிகளையும் மனிதர்களையும் அலட்சியமாக நடத்துபவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், `இவர்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்,’ என்று தோன்றினால், அப்படி நடப்பார்களா?
கதை
மட்டமானவர்களிடம் நேர்மையை, நற்குணத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியாவது பெரிய பதவிக்கு உயர்ந்தால் போதும் என்று கணக்குப்போட்டு, அதன்படி செயலாற்றுபவர்கள் இவர்கள்.
பதின்ம வயது மாணவன் ரஃபி ஒரு கூட்டத்திற்குமுன், நாற்காலிகளை வரிசையாக எடுத்துப்போட்டு, இன்னும் பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான்.
`ஆகா! என்ன சுறுசுறுப்பு!’ என்று அங்கிருந்த ஆசிரியைகள் பாராட்ட, சில நாட்களில் PREFECT (நிர்வாகம் செய்பவர்) என்ற பதவி அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் கட்டொழுங்கை கவனிக்க வேண்டிய பெருமையில், அவனுடைய சுறுசுறுப்பும் ஒழுங்கும் காணாமல் போய்விட்டதுதான் பரிதாபம். படிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யாது, அலட்சியமாக இருந்தான். தன்னைப்பற்றிய அலாதி கர்வத்தில் எல்லோருடனும் சண்டை போட்டான்.
முதல் முறை கிடைக்கும் வெற்றி திறமையால் ஆனாலும், அது நிலைத்திருக்க நற்குணம் அவசியம் என்று அவனுக்குப் புரியவில்லை.
அவனுடைய பொறுப்பாசிரியரிடம், `ரஃபியை அடக்கிவைங்கள். `எனக்குப் பாடம் கற்பிக்கிறவர்களைவிட நான் உயர்ந்தவன்!’ என்பதுபோல் மரியாதை இல்லாமல் பேசுகிறான்!” என்றேன்.
மூத்தவர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுவது மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியம். `இன்றைய தலைமுறை இப்படி இல்லையே!’ என்று பெரியவர்கள் அரற்றுகிறார்கள்.
அடுத்த முறை என் வகுப்பில் ரஃபியின் தலை நிமிரவேயில்லை. குரலும் எழும்பவில்லை. பதவி பறிபோய்விடுமோ என்று அவ்வளவு பயம்!
எந்த வயதிலும், மமதையாலோ, பொறாமையாலோ பிறரை இழிவுபடுத்தி, வலுச்சண்டை போடுவது சிலரது வழக்கமாக இருக்கிறது.
வேறு சிலருக்கு இது நல்ல பொழுதுபோக்கு. பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட இந்த தம்பதியைப் பாருங்கள்.
கணவர்: “உன்னைக் கல்யாணம் செய்துகொண்டதால்தான் எனக்கு இவ்வளவு வியாதிகள்!”
மனைவி (அயராது): “நம் கல்யாணத்தின்போது உங்களுக்கு எழுபது வயதா?”
குணமும் குழந்தைத்தனமும்
மகிழ்ச்சிகரமாக வளர்க்கப்படும் சிறுகுழந்தையின் கண்களைப் பார்த்தால், அதில் அப்பாவித்தனம், உண்மை தெரியும். (பயமோ, வருத்தமோ இருக்காது). அதற்குப் போலியாக நடிக்கத் தெரியாது.
வளர, வளர பல்வித இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. வெளியுலகில் பழக்கமில்லாத அனுபவங்கள் வேறு. இதையெல்லாம் எப்படி ஒருவர் எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயம் அமைகிறது. வயதானாலும் தன்னைச் சுற்றி நடப்பதில் அவருடைய ஆர்வம் குன்றாது இருக்கும்.
குழந்தைத்தனம் மாறாது இருப்பவர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் இல்லை. எவ்வளவு சறுக்கினாலும் தன்னைத்தானே ஏற்பது.
கதை: கர்வம் குணக்கேடு
கண்ணபிரான் தலைமைப்பொறுப்பில் இருந்தார். பல கலைகளில் பாண்டித்தியம் உண்டு. அவரது புகைப்படம் பல முறை பத்திரிகையில் வெளிவந்திருந்தது.
அத்துடன் திருப்தி அடையாது, பத்திரிகை ஆசிரியரைக் கூப்பிட்டு, `அடுத்த இதழில் இந்த இடங்களில் என் படத்தைப் போடுங்கள்!’ என்று பணித்துவிட்டு, மூன்று முறை வந்த தன் படத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் கர்வமும் அடைந்தார்.
அவரைப்போல் தன் பெயரையும் புகழையுமே பரப்பும் முயற்சிகளில் இறங்குகிறவர்கள் விரைவில் அவற்றை இழக்கிறார்கள். (`இவரா பண்பாளர்!’ என்று ஆசிரியர் வருந்தி எழுதியிருந்தார்).
“குணம் மரம் என்றால், நற்பெயர் நிழலாகும்” (ஆப்ரஹாம் லிங்கன்). ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.
கண்ணபிரானைப் போன்றவர்கள் தன்னைவிட சிறப்பானவர்கள் இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை. பிறர் இவரிடம் காட்டும் மரியாதை பயத்தால் இருக்குமே தவிர, அன்பினால் இருக்காது.
பிறரை ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடையும் ஒருவரே தன்னைப்போன்ற நல்ல தலைவர்களை உருவாக்குகிறார்.
தொடருவோம்