பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.08.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி (172)

 1. பாதிப்பு…

  பச்சை வயல்கள் நடுவினிலே
  பாதை போட்டான் விவசாயி,
  நிச்சயம் உதவும் தனக்கென்றும்
  நன்றாய்த் தொழிலை மேம்படுத்த,
  அச்சம் வந்ததே இப்போது
  அகலப் படுத்தும் பாதையிலே
  நிச்சயம் வந்திடும் பாதிப்பு
  நம்பி யிருக்கும் பாமரர்க்கே…!

  செண்பக ஜெகதீசன்…

 2. வினை விதைப்பார்..
  விளை நிலமழிப்பார்..!
  =================

  விளைநி லமெலாம் விலைநிலங்கள்
  ………………..விளைந்த தெல்லாம் கட்டிடங்கள்..!
  வளைத்துப் போட்டார் வயலனைத்தும்
  ………………..வகையாய் விற்று நிலமழித்தார்..!
  இளைத்து விட்ட பசுமைவயல்
  ………………..இதன் நடுவே நெடுஞ்சாலை..!
  களைத்து விட்டான் விவசாயி
  ………………..கத்திக் கத்தி ஓய்ந்துவிட்டான்..!

  சாலை போடச் சதித்திட்டம்
  ………………..ஜாலம் செய்த மாயவலை..!
  ஆலைக் கழிவைக் கொட்டுவார்கள்
  ……………….. அதன் பிறகு பழிசொல்வார்..!
  வேலை இல்லை நிரந்தரமாய்
  ……………….. விதியும் இல்லை வழிசொல்ல..!
  மேலை நாட்டுக் கலாச்சாரம்
  ………………..மேன்மை அடைய வைக்காது..!

  ==============================

  அறுசீர் ஆசிரிய விருத்தம்

 3. சாலை விரிவாக்கம்
  ==================

  விண்ணின் கொடையாக வீழ்ந்த அழகெலாம்

  மண்ணின் அடியில் மடிந்தது – எண்ணற்றோர்

  இங்கே நிலத்தை இழக்கும் நிலையது

  மங்காமல் தங்கிடும் மாசு.!

  =============================

  *இரு விகற்ப நேரிசை வெண்பா*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *