நிர்மலா ராகவன்

 

பதவி போதுமே, பண்பு எதற்கு?

“ஏ குரங்கே!” ஒரு சிறுவன் இன்னொருவனை நோக்கிக் கூவினான்.

அவனும் அதேபோல் கூவினான். சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது என்றாலும், கெட்ட வார்த்தை என்று அவர்கள் நினைத்ததைப் பிரயோகிப்பதில் தனி மகிழ்ச்சி அந்த மூன்று வயதுச் சிறுவர்களுக்கு. அவர்களைப் பொறுத்தவரை, `ஹலோ!’ என்று சொல்வதற்கு ஒப்பான முகமன் இம்முறை.

சிறு வயதில் மட்டுமில்லாது, இக்குணம் ஆண்கள் வளர்ந்தபின்னும் தொடரும். தாங்கள் ஏசிப் பேசுவதை நண்பர்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். எந்த வயதானாலும், சற்றும் யோசியாது, ஒருவரை ஒருவர் சாடிக்கொள்வார்கள்.

ஒருவரது பேச்சிலிருந்து குணத்தை அறிந்துகொள்ளலாம் என்றாலும், அவர்கள் இப்படி ஒருவரையொருவர் பழித்துக்கொள்வதில் உள்ளர்த்தம் எதுவும் கிடையாது. இது ஒருவர் மற்றொருவரை நெருங்கும் உத்தி. நற்பண்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

பெண்கள் இப்படிப் பேசிப்பார்த்தால் தொலைந்தார்கள்.

“ஒன்னோட பாவாடை (அல்லது வளை) அழகா இருக்கு!” என்பதுபோல் ஏதாவது புகழ்ந்தால்தான் இன்னொருத்தி அப்படிக் கூறுபவளை சிநேகிதியாக ஏற்பாள்.

என்னுடன் வேலை பார்த்த ஓர் ஆசிரியை, தினமும்,`உன் புடவை அழகாக இருக்கிறது!’ என்பாள், என்னிடம். ஏதோ ஒரு நாள் கூறினால், அவள் கூறுவதில் உண்மை இருக்கிறதென்று நம்பலாம். ஆனால், தினமுமேவா?

நான் ஏன் மகிழ்ந்து புன்னகைக்கவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை. போலியான புகழ்ச்சியால் நம்மை அடிமைப்படுத்த நினைப்பவர்களை எப்படி நம்பமுடியும்?

கதை: யாரிடம் பணிவு?

எங்கள் பகுதியிலிருக்கும் கறிகாய் மார்க்கெட்டில் பூனைக்குட்டிகள் வளைய வந்துகொண்டிருக்கும். அதை ஒட்டி இருக்கும் சாப்பாட்டுக்கடையில் மிகுந்துபோன உணவைச் சாப்பிட்டு, அவை காலந்தள்ளிக்கொண்டிருந்தன.

கறிகாயைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவன், தன் காலருகே வந்த பூனைக்குட்டியை உதைத்தான். அதற்கு அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என்று புரியவில்லை. அவனருகிலேயே நின்று, உதை வாங்கிக்கொண்டிருந்தது. அவ்வளவு சிறியது – பிறந்து இரண்டு, மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும். (அவன் வீட்டுச் சிசுவை இப்படி உதைப்பானா?)

அருகிலிருந்த பிறர் அவன் செயலைத் தவறாக எண்ணவில்லை. `யாருக்கும் சொந்தமில்லாத பிராணிதானே!’ என்ற அலட்சியமாக இருக்கலாம். அல்லது, பிறர் செயலில் குறுக்கிடக்கூடாது என்ற `நாகரிகம்’ கருதி சும்மா இருந்தார்கள்.

அருகில் திகைத்து நின்றிருந்த என் பேரனை, “இதைத் தூக்கி வெளியில் விடு,” என்றேன், கடுமையாக. (எரிச்சல் பூனைமேல் இல்லை).

எதிர்க்க முடியாத பிராணிகளையும் மனிதர்களையும் அலட்சியமாக நடத்துபவர்கள் தன்னைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம், `இவர்களால் எனக்கு ஆதாயம் கிடைக்கும்,’ என்று தோன்றினால், அப்படி நடப்பார்களா?

கதை

மட்டமானவர்களிடம் நேர்மையை, நற்குணத்தை எதிர்பார்க்க முடியாது. எப்படியாவது பெரிய பதவிக்கு உயர்ந்தால் போதும் என்று கணக்குப்போட்டு, அதன்படி செயலாற்றுபவர்கள் இவர்கள்.

பதின்ம வயது மாணவன் ரஃபி ஒரு கூட்டத்திற்குமுன், நாற்காலிகளை வரிசையாக எடுத்துப்போட்டு, இன்னும் பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான்.

`ஆகா! என்ன சுறுசுறுப்பு!’ என்று அங்கிருந்த ஆசிரியைகள் பாராட்ட, சில நாட்களில் PREFECT (நிர்வாகம் செய்பவர்) என்ற பதவி அளிக்கப்பட்டது. பிற மாணவர்களின் கட்டொழுங்கை கவனிக்க வேண்டிய பெருமையில், அவனுடைய சுறுசுறுப்பும் ஒழுங்கும் காணாமல் போய்விட்டதுதான் பரிதாபம். படிப்பு சம்பந்தமாக அளிக்கப்பட்ட வேலைகளைக்கூடச் செய்யாது, அலட்சியமாக இருந்தான். தன்னைப்பற்றிய அலாதி கர்வத்தில் எல்லோருடனும் சண்டை போட்டான்.

முதல் முறை கிடைக்கும் வெற்றி திறமையால் ஆனாலும், அது நிலைத்திருக்க நற்குணம் அவசியம் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவனுடைய பொறுப்பாசிரியரிடம், `ரஃபியை அடக்கிவைங்கள். `எனக்குப் பாடம் கற்பிக்கிறவர்களைவிட நான் உயர்ந்தவன்!’ என்பதுபோல் மரியாதை இல்லாமல் பேசுகிறான்!” என்றேன்.

மூத்தவர்களிடம் மரியாதையாக நடக்கவேண்டுவது மலாய்க்காரர்களுக்கு மிக முக்கியம். `இன்றைய தலைமுறை இப்படி இல்லையே!’ என்று பெரியவர்கள் அரற்றுகிறார்கள்.

அடுத்த முறை என் வகுப்பில் ரஃபியின் தலை நிமிரவேயில்லை. குரலும் எழும்பவில்லை. பதவி பறிபோய்விடுமோ என்று அவ்வளவு பயம்!

எந்த வயதிலும், மமதையாலோ, பொறாமையாலோ பிறரை இழிவுபடுத்தி, வலுச்சண்டை போடுவது சிலரது வழக்கமாக இருக்கிறது.

வேறு சிலருக்கு இது நல்ல பொழுதுபோக்கு. பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட இந்த தம்பதியைப் பாருங்கள்.

கணவர்: “உன்னைக் கல்யாணம் செய்துகொண்டதால்தான் எனக்கு இவ்வளவு வியாதிகள்!”

மனைவி (அயராது): “நம் கல்யாணத்தின்போது உங்களுக்கு எழுபது வயதா?”

குணமும் குழந்தைத்தனமும்

மகிழ்ச்சிகரமாக வளர்க்கப்படும் சிறுகுழந்தையின் கண்களைப் பார்த்தால், அதில் அப்பாவித்தனம், உண்மை தெரியும். (பயமோ, வருத்தமோ இருக்காது). அதற்குப் போலியாக நடிக்கத் தெரியாது.

வளர, வளர பல்வித இன்னல்களை அனுபவிக்க நேர்கிறது. வெளியுலகில் பழக்கமில்லாத அனுபவங்கள் வேறு. இதையெல்லாம் எப்படி ஒருவர் எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே அவரது குணாதிசயம் அமைகிறது. வயதானாலும் தன்னைச் சுற்றி நடப்பதில் அவருடைய ஆர்வம் குன்றாது இருக்கும்.

குழந்தைத்தனம் மாறாது இருப்பவர் எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக இருக்கிறார். இது சிறுபிள்ளைத்தனம் இல்லை. எவ்வளவு சறுக்கினாலும் தன்னைத்தானே ஏற்பது.

கதை: கர்வம் குணக்கேடு

கண்ணபிரான் தலைமைப்பொறுப்பில் இருந்தார். பல கலைகளில் பாண்டித்தியம் உண்டு. அவரது புகைப்படம் பல முறை பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

அத்துடன் திருப்தி அடையாது, பத்திரிகை ஆசிரியரைக் கூப்பிட்டு, `அடுத்த இதழில் இந்த இடங்களில் என் படத்தைப் போடுங்கள்!’ என்று பணித்துவிட்டு, மூன்று முறை வந்த தன் படத்தைப் பார்த்து பெருமகிழ்ச்சியும் கர்வமும் அடைந்தார்.

அவரைப்போல் தன் பெயரையும் புகழையுமே பரப்பும் முயற்சிகளில் இறங்குகிறவர்கள் விரைவில் அவற்றை இழக்கிறார்கள். (`இவரா பண்பாளர்!’ என்று ஆசிரியர் வருந்தி எழுதியிருந்தார்).

“குணம் மரம் என்றால், நற்பெயர் நிழலாகும்” (ஆப்ரஹாம் லிங்கன்). ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை.

கண்ணபிரானைப் போன்றவர்கள் தன்னைவிட சிறப்பானவர்கள் இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவும் விரும்புவதில்லை. பிறர் இவரிடம் காட்டும் மரியாதை பயத்தால் இருக்குமே தவிர, அன்பினால் இருக்காது.

பிறரை ஊக்குவித்து, அவர்கள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடையும் ஒருவரே தன்னைப்போன்ற நல்ல தலைவர்களை உருவாக்குகிறார்.

தொடருவோம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க