Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே 28

    க. பாலசுப்பிரமணியன்

     

    மாற்றங்களை சீரான மனநிலையோடு பார்க்கலாமே!

    மாற்றங்கள் உலகத்தில் புறத்தில் மட்டும் ஏற்படுவதில்லை. நம்முடைய உடலிலும் உள்ளத்திலும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் சமாளிக்கவும் அவைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து புரிந்து வாழ்க்கையை மேலும் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நிறுவனத்தில் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்குமான ஒரு பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த சொற்பொழிவாளர் தன்னுடைய உரையில் மிகவும் எளிதான முறையிலும் எல்லோரும் மகிழ்ந்து சிரிக்கும் வகையிலும் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சைக் கண்டு மகிழ்ந்து அந்த அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் எதிலுமே ஈடுபாடுயில்லாதவராய் ஏதோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த சொற்பொழிவாளர் அவர் அருகில் சென்று எல்லோரும் சிரிக்கும் வகையில் ஒரு கதையைச் சொன்னார். அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. ஆனால் அந்த நபர் மட்டும் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் நொந்து போய் ‘ஒருவேளை அவருக்கு காதுகொஞ்சம் மந்தமோ’  என நினைத்தார்.

    அந்த நிகழ்வு முடியும் நேரத்தில் அனைவருக்கும் அந்தப் பயிற்சி முகாம் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு விமர்சனக் குறிப்பேடு கொடுக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தபின் அந்த சொற்பொழிவாளர் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் அறையில் அமர்ந்து அந்தக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தார்.

    ஒரு பதிவினைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்தப் பதிவு கீழ்கண்டவாறு இருந்தது. ” இந்தப் பயிற்சியின் இடைவேளையில் கொடுக்கப்பட்ட சமோசா மிகச் சிறியதாக இருந்தது. அடுத்த முறை இதில் கவனம் செலுத்தவும்.”

    சொற்பொழிவாளருக்கு மிகுந்த அதிர்ச்சி. அந்த மூத்த அதிகாரியிடம் இதைக் காட்டி “யார் இப்படி எழுதியது?” என்று கேட்க, அவரோ “நீங்கள் கடைசியில் அமர்ந்து சிரிக்காமலேயே ஒருவர் இருந்தார் என்று சொன்னீர்களே அவர்தான்.” என்றார். தொடர்ந்து “அவர் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்தபடியாக உள்ள அதிகாரி. அவர் என்னோடு நான் தற்போது இருக்கும் இந்தப் பதவிக்கு முயற்சி செய்தார். நேர்காணலில் அவருக்குத் தேர்ச்சியாகவில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வெளியே இருந்து முயற்சி செய்தவன். எனக்கு இந்தப் பதவி கிடைத்ததிலிருந்து அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஏதாவது தவறான அல்லது ஒத்துப்போகாத கருத்துக்களை பதிவு செய்வதே அவர் வழக்கமாகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார். தோல்வி மனப்பான்மை அவரை வாட்டி வதைக்கின்றது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மாற்ற முயற்சித்தோம். முடியவில்லை.”

    பல நேரங்களில் தோல்விகள் நம்முடைய உறவு நிலைகளை மாற்றிவிடுகின்றன. வீடுகளிலும் சரி, வேலை பார்க்கும் இடங்களிலும் சரி எப்பொழுதுமே நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே சீராகப் பார்த்து முன்னேறிச் செல்வது வாழ்க்கையின் அமைதிக்கு இன்றியமையாதது.

    தோல்விகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் தவிர, சில சிறிய நிகழ்வுகளால் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோம் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் தோல்விகளில் நாம் நம்மைவிடத் தகுதியில் குறைந்தவரையோ அல்லது நாம் செய்யும் தொழில்களில் சற்றும் அனுபவங்கள் இல்லாதவரிடமோ வேலை பார்க்க நேரிடும். அதனால் நமது திறமைகளோ அல்லது மதிப்போ குறைந்து விட்டது என்ற பொருள் கொள்ளுதல் தவறானது. “இதுவும் கடந்து போகும்” என்ற சிந்தனையை மனதில் கொண்டு தொழிலிலும், உறவுகளிலும், தொடர்புகளிலும் மேல்நோக்கான சிந்தனைகளைக் கொண்டு முன்னேற வேண்டும்.

    பல நேரங்களில் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குச் சென்று விடுகின்றனர். இது மிகவும் துயரமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட. சில நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையின் போக்கையும் வளத்தையும் வெற்றியையும் கட்டுப்படுத்துவதில்லை.

    தோல்விகளாலும் வெற்றிகளாலும் ஏற்படும் மாற்றங்களை நாம் ஒரு சீரான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். எவ்வாறு தோல்விகள் நம்மை பாதிக்கக்கூடாதோ அதே போல் வெற்றிகளும் நமக்கு தலைகனத்தையும் ஆணவத்தையும் ஏற்படுத்தக்கூடாது. வெற்றிகளின் மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து செல்லுதல் அவசியம்.

    நாம் பக்குவப்பட்ட மனநிலையுடன் வாழப் பழகிவிட்டால் வெளிப்புற மாற்றங்களும் உள்ளுணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களும் நம்மை பாதிக்காது. ‘மனத்தளவே வாழ்வு’ என்பதை நாம் புரிந்துகொண்டால் மகிழ்வு என்றும் நிலைத்திருக்கும்.

    சீரான மனநிலையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • படமும், பாடலும்….!

     

    திருச்சிராப்பள்ளி மக்கள் பலர் கண்டிராத அழகிய மலைகோட்டை தெப்பக்குளம். நம் அரசர்கள் செதுக்கி வைத்த வரலாற்று பதிவு.

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….கிரேசி மோகன்….!

    திருச்சி என்றால் ‘’ஸ்வாமி ஒங்கரந்தாஜி’’ அடியேன் நினைவுக்கு வருவார்….அவருடைய தாயுமானவர் ப்ரவசனம் கேட்டு அன்று இரவே அடியேன் எழுதியது உங்களது மேலான் பார்வைக்கு….!

    தாயுமானவன் திருப்புகழ்
    ——————————

    மகப்பேறு காண மருத்துவச்சி ஆக
    அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
    பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
    எல்லைதனை யாரறிவா ரே….!

    நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
    மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
    நேயமாவான் நாடாதோர் சீயமாவான் தேற்றிடும்
    தாயுமாவான் தந்தை தவித்து….!

    வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
    போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
    இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
    சிராப்பள்ளி ஈசனைச் சேரு….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ

    சாதாரணன் போல வந்தான் -ஏதும்
    ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
    வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
    சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)….!

     

    உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
    உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
    விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
    கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)….!

    பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
    விதி மதி வினை என்ற விவகாரமாகும்
    நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
    புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)….!

    புதிரான பூலோகக் கல்லை -நீ
    பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
    அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
    அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)….!

    பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
    பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
    கொண்டதோர் கோலமே காட்சி -அதை
    உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)….!

     

    செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
    துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
    அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
    சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)….!

    வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
    விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
    பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
    பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)….!

     

    பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
    புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
    யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
    பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)….!

     

    அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
    ஆதார சக்தியே அருளென்ற பாதி
    பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
    பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)….!

    போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
    தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
    சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
    வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)….!

     

    இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
    இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
    உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
    உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)….!

    நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
    நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
    எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
    ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)….!

    இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
    இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
    உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
    உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)….!

    சும்மா இருந்திடல் சுகமே -என்று
    சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
    நம்மால் இயன்றது நகமே -அது
    நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)….!

    துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
    சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
    தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
    தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)….!

    ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
    ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
    தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
    தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)….!

    போகாத ஊருக்கு போக -இங்கு
    சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
    தேகான்ம பாவம் முடிக்க -சிவ
    தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)…..!

    செல்லாதா காசிந்த மேனி -இது
    இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
    கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
    சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)….!

    பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
    பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
    உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
    உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)….!

    சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
    வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
    ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
    அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)….!

    பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
    புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
    உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
    உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….கிரேசி மோகன்….!

    சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
    ——————————————————————————-

    Share
  • ஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில்  .  .  .   .

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம்.  போப்பின் செய்தியை எத்தனை  பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள்.  இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம்.

    மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார்.   போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் சொல்லும் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நடப்பது சாலச் சிறந்தது என்று எனக்கும் தோன்றியதால் அந்த நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன்.  நெறியாளரையும் தலைமை வகித்தவரையும் விடுத்து என்னைச் சேர்த்து ஐந்து கருத்துரையாளர்கள் பங்குகொண்டோம்.  ஐந்து பேரில் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர், சமூக செயற்பாட்டாளர்; இன்னொருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்; இன்னொருவர் புத்த மத ஆய்வாள மாணவர், இந்து மதத்தைச் சேர்ந்தவர்; மற்ற இரண்டு பேரில்  நான் ஒருத்தி; இன்னொருவர் சுவாமி சதா சிவானந்தா, அமைப்பாளர், தமிழ்நாடு துறவியர் பேரவை.  நிகழ்ச்சியின் தலைப்பு ‘மதநல்லிணக்கம்: தடைகளும் விடைகளும்’.  ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்திற்காக அவரவர் மத நோக்கிலிருந்து கருத்துக் கூற வேண்டும்.

    என் அருகில் உட்கார்ந்திருந்த சுவாமி சிவானந்தா நான் கையில் வைத்திருந்த போப் பிரான்சிஸ்  புத்தகத்தைப் பார்த்ததும் அவராக நான் கிறிஸ்தவள் என்று அனுமானித்துக்கொண்டார்.  ‘இங்கு இரண்டு கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்’ என்று என்னிடம் கூறினார்.   நான் உடனே அவரிடம் ‘நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதினாலும் நான் கிறிஸ்தவள் அல்ல’ என்றேன்.  அதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை.  அந்தக் கருத்தரங்கில் கிறிஸ்தவ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் இந்து மதத்திற்குத் தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் முனகிக்கொண்டிருந்தார்.  எல்லோருக்கும் பத்து நிமிடங்கள்தான் உரையாற்றுவதற்குக் கொடுக்கப்பட்டது.  தனக்கும் ஏன் பத்து நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டன என்பதை அவர் புரிந்துகொள்ளவேயில்லை.  அவரைப் பொறுத்தவரை முக்கியமான மதமான இந்து மதத்திற்கு இன்னும் அதிக நேரம் கொடுத்திருக்க வேண்டும்.  விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எந்த மதம் பெரிது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல, எப்படி மதங்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரலாம் என்பதே.

    எல்லாக் கருத்துரையாளர்களும் தங்கள் உரையை முடித்துக்கொண்ட பிறகு இடைவேளை விட்டார்கள்.  அதற்குப் பிறகு கேள்வி பதில் நேரம்.  யார் கேட்ட கேள்விகளுக்கும் அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை.  வந்திருந்த மாணவர்களில் சிலர் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள்.  ஒன்றுக்கும் அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை.  இந்தியச் சமூகம் மிகவும் சிறந்து விளங்கியதாகவும் அந்நியர்கள் வந்துதான் அதைச் சீர்குலைத்துவிட்டதாகவும் கூறினார்.  என்னால் அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.  காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் ஜாதியத்தைக் கொண்டுவந்தவர்கள் அவர்களா, உடன்கட்டை ஏறுவது போன்ற கொடிய செயல்கள் அவர்கள் வந்தபின்தான் ஏற்பட்டனவா போன்ற கேள்விகளை முன்வைத்தபோது அவர் நேரிடையாக எந்தவித பதிலும் சொல்லவில்லை.  சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலைச் செய்துவந்தார்கள், அதனால் பிரிவுகளுக்கிடையே எந்தவிதச் சச்சரவும் இல்லாமல் இருந்தது என்றார்.  பிறர் கழிவுகளைச் சுத்தம் செய்வதைச் சிலர் மட்டும்தான் செய்துவந்தார்கள்; அதேபோல் பிறர் அழுக்குத் துணிகளைத் துவைப்பதை ஒரு பிரிவுதான் செய்ய வேண்டும் என்ற அமைப்பு இந்துச் சமூகத்தில்  எப்போது ஏற்பட்டது என்பதற்குச் சரியாக அவர் பதில் சொல்லவில்லை..

    நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதியது அவர் ஒரு  கத்தோலிக்க மதத்தலைவர் என்பதற்காக அல்ல, அவர் ஒரு மனித நேயர் என்பதற்காகத்தான் என்பதை அவரால் புரிந்துகொள்ள வே முடியவில்லை.  என் உரையில் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகளால் இந்து மதத்தையே நான் வெறுக்க ஆரம்பித்தேன் என்றும் கோவிலுக்குப் போவதையே தவிர்த்துவிட்டேன் என்றும் கூறியிருந்தேன்.  அதனால் கடைசியில் சுவாமி உங்களுக்கு இந்து மதத்தின்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறதே என்றார்.  இந்து மதத்தை மட்டுமல்ல, எல்லா மதங்களையும் நான் வெறுக்கிறேன் என்று கூறினேன்.  அதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.  மேலும் போப் பிரான்சிஸைப் பற்றி நான் எழுதியது அவர் ஒருகிறிஸ்தவ மதத்தலைவர் என்பதற்காக அல்ல, மதத்திற்கு அப்பாலும் அவருடைய சிந்தனைகள் செல்கின்றன என்பதற்காகத்தான்; உலக அமைதி பற்றியும் சுற்றுப்புறச் சூழ்நிலை பாழ்பட்டுவருவதை எப்படித் தடுத்து நிறுத்தலாம் என்பது பற்றியும் உலகில் வறுமையையும் சமத்துவமின்மையையும் ஒழிப்பது பற்றியும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதலைகளை எப்படி நெறிப்படுத்தலாம் என்பது பற்றியும் சதாசர்வ காலமும் சிந்தித்து வருகிறார்.  இவருடைய இந்த மனித நேய குணங்களால் கவரப்பட்டதால் மட்டுமே அவரைப் பற்றி எழுதினேன் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் _ 116

    நிர்மலா ராகவன்

    நொண்டிச்சாக்கு ஏன்?

    “நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை?”

    “என்னை யாருக்குமே பிடிக்கலே!”

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!”

    இப்படிக் கூறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வாக்கியங்களிலும் நான், என்னை, எனக்கு என்ற வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம். சுய பரிதாபம் மிகுந்தவர்கள் இவர்கள்.

    ஒருவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு பார்த்தால் இப்படித்தான் ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய பிரச்னைகள்தாம் புரியும். தம் நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்களால் பாதிக்கப்படும் பிறருடைய மனப்போக்கைப்பற்றிய கவலை கிடையாது.

    ஒருவர் தம் கண்ணோட்டத்திலிருந்துதான் எதையும் அலசுவதால்தான் இந்தக் கோளாறு எழுகிறது.

    கதை

    ராவ் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். இருந்தாலும், போட்டி மனப்பான்மை அதிகம். பிறரைத் தாழ்த்திப் பேசினால், தான் உயர்ந்துவிட்டதாக எண்ணி அற்ப சந்தோஷம் அடையும் அறிவிலி. யாரைப் பார்த்தாலும், அவர்களுடைய குறை என்று அவர் நினைப்பதைப் பெரிதுபண்ணி, கேலி செய்வார். இதனாலேயே அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவரும் இருக்கவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு சற்று நெருங்குபவர்கள் அவரது ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் தன்மையால் விரைவிலேயே விலகிவிடுவார்கள்.

    தவறு தன்மேல்தான் என்று உணராது, `ஏனோ என்னை யாருக்குமே பிடிப்பதில்லை!’ என்று மறுகுவார்.

    புத்திசாலியோ, முட்டாளோ, மனிதராகப் பிறந்த எவரையும் கவலைகள், துன்பங்கள், விட்டு வைப்பதில்லை. ஆனால், என்றோ பட்ட துன்பத்தையும், துயரத்தையும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது அறிவீனம்.

    எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மாது, பார்ப்பவர்களிடமெல்லாம்,“எனக்கு ஒடம்பே முடியலே!” என்று முகமன் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வாள். எந்தவித உடற்குறையும் தென்படவில்லை. எல்லாருக்கும் அவளுடைய அந்த வசனம் கேலியாகப் போயிற்று.

    அவள் இறந்தாள் – நாற்பது வருடங்களுக்குப்பின்! அத்தனை காலமும், தனக்காகப் பரிதாபப்பட்டே வாழ்ந்து, மகிழ்ச்சி இல்லாது காலத்தைப் போக்கி இருக்கிறாள்!

    நாம் அனுபவித்த துன்பங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்கள் முதலில் அனுதாபம் காட்டலாம். அதன்பின், சலிப்படைந்து விலகி விடுவார்கள்.

    நம்மைப் பாதித்தவைகளைப்பற்றியே பேசினாற்போல், வேண்டாத அனுபவங்கள் நீங்கி விடுமா, என்ன?

    கதை

    மூன்று வயதுக் குழந்தை கலா கீழே விழுந்து காலில் சிறு காயம் பட்டுக்கொண்டாள். அம்மா உடனே பிளாஸ்திரி போட்டபோது, அந்த கவனிப்பை `அன்பு’ என்று எண்ணிய வயது அது.

    அன்றையிலிருந்து, அனுதினமும், “இங்கே வலிக்கிறது. பிளாஸ்டர் போடு,” என்று கையையோ, காலையோ காட்டி, நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்குத் தேவையே இருக்காது. அது புரிந்து, அவளுடைய தாய், “அதைவிட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு,” என்று முகத்திற்குப் பூசும் பௌடரை அந்த இடத்தில் தூவ, சிறுமி சமாதானமானாள்.

    உறவினர் இல்லங்களுக்குப் போகையில், “இங்கே வலி. அம்மா பிளாஸ்டர் போட மாட்டேங்கறா!” என்று தன்னிரக்கத்துடன் குற்றம் சாட்ட, அம்மா சிரித்தபடி, “ஒங்க வீட்டில சகல ரோக நிவாரணி இருக்கோ?” என்று கேட்பாள். உறவினர் விழிக்க, “பௌடர்!” என்று சிரிப்பாள் மெல்ல.

    சிறுவர்களாக இருக்கும்போது, பெற்றோர் அளவுக்கு மீறி காட்டும் கரிசனம் பெரியவர்களான பின்னர், பிறரும் தம்மிடம் அப்படியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

    பிறர் நம்மீது காட்டும் பரிதாபம் அன்பல்ல. நோயாலோ, வேறு ஏதாவது இழப்பாலோ பிறர் துயரப்பட்டால்தான் சிலருக்கு அவர்களிடம் அருமையாக நடந்துகொள்ள முடியும்.

    கதை

    சிறு வயதில் அன்பைப் பெறாது, வன்முறை பிரயோகித்த கணவரையும் அடைந்த துர்பாக்கியசாலி நாகலட்சுமி. தான் பெறாததைப் பிறருக்கு கொடுப்பது நடக்கும் காரியமா? அவள் தான் பெற்ற குழந்தைகளிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்?

    தான் ஏதாவது சொல்லி, அதன்படி குழந்தைகள் நடக்காவிட்டால், `நான் உங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்கிறேன். ஆனால், யார் நான் சொன்னபடி கேட்கிறீர்கள்?’ என்று பெருமூச்சுடன், தன்மேல் பரிதாபம் எழச் செய்து, காரியத்தைச் சாதித்துக்கொள்வாள். அக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் மட்டும் ஆதரவாக இருப்பாள். அதனால், தாயிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்கள் துன்பப்படுவதுபோல் நடிப்பது வழக்கமாகப் போயிற்று. தம்மையுமறியாது, தாயிடமிருந்தே சுய பரிதாபத்தைக் கற்றார்கள்.

    எனக்குத் தெரிந்த பல முதுமையான பெண்களுக்கு Depression என்கிறார்கள். பிறருடைய மனப்போக்கை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதாலா, இல்லை, தாம் சொல்வதை இளையவர்கள் கேட்க மறுக்கிறார்களே என்ற ஆதங்கமா?

    கதை

    லட்சுமி அம்மாள் தனது எழுபதாவது வயதில் கீழே விழுந்து, சில மாதங்கள் படுக்கையிலேயே கழிக்க நேரிட்டது. அதன்பின் கால் குணமாகி, மருத்துவரும், `நீங்கள் பழையபடி நடமாடலாம்,’ என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

    ஆனாலும், பத்து வருடங்களுக்கு மேலாக `படுக்கையைவிட்டு எழுந்தால் மீண்டும் கீழே விழுந்துவிடுவேன்,’ என்று பிடிவாதமாக இருக்கிறாள் அந்த அம்மாள், எவ்வளவோ சௌகரியங்கள் செய்துகொடுத்த பின்னரும்.

    இப்படி, தான் மட்டுமே முக்கியம் என்றிருப்பவரால் உடன் இருப்பவர்களுக்கு மிகத்தொல்லைதான். ஆனால், பிறரது உணர்ச்சிகளைப்பற்றிக் கவலைப்படாது, வேண்டாத பயத்துடன் தன்மேலேயே பரிதாபப்பட்டுக்கொண்டு, தன் வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் நெருங்கிய உறவினர்களை மட்டுமா, நிம்மதியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

    சிறு வயதில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தம்மைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது இயற்கை. இவர்கள் மாற்றங்களை எதிர்கொள்ளப் பயந்தவர்களாக இருக்கலாம்.

    வேறு சிலர், முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் குறுக்கு வழியை நாடுவார்கள். இச்சகத்தால் மேலதிகாரியை கைக்குள் போட்டுக்கொள்வார்கள். பிறருக்கு அடிமைபோல் நடந்து, எதிர்பார்த்த அளவு முன்னேற இயலாதுபோக, அதனாலேயே தம்மீது இரக்கம் கொள்வதும் உண்டு.

    பரிதாபத்திற்கு எதிர்மறையான குணம் சுய கௌரவம். இது திமிரோ, கர்வமோ அல்ல. நம்மைப் பிறர் தாழ்த்தும்போது அந்த அவமானத்தைப் பொறுத்துப் போகாத இயல்பு. முன்னேறுவதற்கு இன்றியமையாதது.

    நம் மகிழ்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ பிறரை எதிர்பார்ப்பது வீண். நம் நலனில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை? அத்துடன், பிறர் அளிக்கும் அறிவுரையும் வழிகாட்டலும் நம் திறமைக்கு ஏற்றதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

    தன் தோல்விகளுக்கு ஏதாவது நொண்டிச்சாக்கு கூறுவது அற்ப திருப்தியை உண்டாக்குவதால், இவ்வழியை அடிக்கடி கடைப்பிடிக்க வைக்கிறது. ஒரு விதத்தில், இதுவும் போதைதான்.

    `எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், செல்வச் செழிப்பு இதெல்லாம் அமையவில்லை. அதுதான் முன்னுக்கு வரமுடியவில்லை,’ என்று என்றோ நடந்ததையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், எதிர்காலம் செழிப்பாகிவிட முடியுமா? இது கோழைத்தனமன்றி வேறென்ன?

    நாம் அனைவருமே ஏதாவது தருணத்தில், `எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துவிட்டது?’ என்று நம்மீதே இரக்கம் பாராட்டுவோம். அப்போது, `வேண்டாம் இந்த சுய பரிதாபம்!’ என்று ஒதுக்கினால், உடனே அடுத்து வரும் சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடுகிறோம். (துணிவு இல்லாவிட்டால், கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தையாவது வளர்த்துக்கொள்ளலாம்).

    தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில், நாற்பத்திரண்டு வயதான ஒருவர் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்குமுன்னர், ஸ்ட்ரோக் வந்து, மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. பிழைப்பதே சந்தேகம் என்ற நிலை. பிழைத்ததும், `இனி உடற்பயிற்சி செய்யலாம்,’ என்று மருத்துவர்கள் கூற, இடைவிடாத முயற்சி செய்ய ஆரம்பித்தார். அன்றைய நிஞ்சா (NINJA) நிகழ்ச்சியில், நாலடி தாவி, முப்பதடி சறுக்கு மரத்தில் ஏறிக் குதித்து, என்று பார்ப்பவர்களை அதிரவைக்கும் சாதனைகளைச் சில நிமிடங்களிலேயே செய்து முடித்தார். ஆரோக்கியமாக இருந்த எல்லாரையும் வெல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடிந்தது.

    துணிவுடன் எதையும் எதிர்கொண்டால், `வாழ்க்கை என்பது இவ்வளவுதானா!’ என்ற சிரிப்பு எழும். நம்மைப் பார்த்து நாமே சிரிக்கும் முதிர்ச்சியும் ஏற்படும். மேற்கண்டவர்போல், பிறருக்கு நல்ல உதாரணமாக அமையலாம்.

    தொடருவோம்

    Share
  • புறப்பொருள் வெண்பாமாலை கூறும் போர் முறைகள்

     –முனைவர் அரங்க. மணிமாறன்

    முன்னுரை:

    முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குகிறது தமிழ்மொழி. காலந்தோறும் வளரும் புதுமைகளுக்குத் தக்க தன்னைப் புதுப்பித்துக்கொண்டு இளமை குன்றா இயல்பினதாய் விளங்குகின்றது. 

    காலந்தோறும் மலரும் இலக்கியங்களும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும்,  நிகண்டுகளும்  வெளிநாட்டார் இலக்கண  ஆராய்ச்சி  முதலிய நூல்களின் வளத்தோடு வாழும் செம்மொழியாய் வளம் சேர்க்கிறது. 

    அத்தகு தமிழ்மொழி ஐந்திலக்கண வளத்தோடு அசையாக் கோட்டையாக நின்று நிலைக்கிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தது மட்டுமின்றி வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர் தமிழர். அகப்பொருள் காதல் வாழ்விற்கும், புறப்பொருள்  போர், நாகரிக, பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் வகுக்கின்றன. 

    தொல்காப்பியத்தின் வழிநூலாய்த் தோன்றிய புறப்பொருள் வெண்பா மாலை ஐயனாரிதனார் என்பவரால் வெட்சி முதல் பெருந்திணை ஈறாய்ப் பன்னிரு படலமாய் விரித்துரைக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் போர்முறைகளை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.  

    விரிச்சி (நற்சொல்) கேட்டல்: 

    பகைநாட்டின் மீது போர்த்தொடுப்பதற்கு முன் போர்ச்செயல் வெற்றி பெறுமா? என நற்சொல் கேட்டனர். 

    ‘வேண்டிய பொருளின் விளைவுநன் கறிதற்கு
     ஈண்டிருண் மாலைச் சொல் ஓர்ந்தன்று’.1 

    இன்றும் நம் செயல்கள் வெற்றி பெறுமா என நாம் சகுனம் பார்த்தல், குறிகேட்டல், பல்லியின் (கௌளி) ஒலி திசையறிதல் ஆகிய முறைகளைக் கையாள்வதோடு இதனை ஒப்பிடலாம்.

    மாலை நேரத்தில் ஊரின்புறத்தே திருக்கோவிலில் பலரும் கூடி நற்சொல் கேட்டு நிற்க,  வேட்டுவச்சி குடம் நிறையக் கள் கொண்டுவா என்கிறாள். இது அவர்களுக்கு நல்நிமித்தமாகக் காதில் விழுகிறது. போரில் வென்றால் கள் குடித்து மகிழ்வது வழக்கம். அதுவே நற்சொல்லாகக் கேட்கின்றனர். சில நேரங்களில் எதிர்மறைச் சகுனம் ஏற்படினும் அதனைப் பொய்யாக்கும்படி வெற்றி பெறுதலும் உண்டு. (பிள்ளைப்பெயர்ச்சி).

    ஒற்றாடல் (வேய்):

    ஐந்தாம் படையாகிய ஒற்றர்படையே ஒரு நாட்டின் முக்கிய படையாக அமைகிறது.

    ‘கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று’2  என்று ஒற்றாடலின் முறைகளைத் திருவள்ளுவர் விளக்குகிறார். 

    பகைநாட்டிற்குள் உயிரைப் பணயம் வைத்து அந்நாட்டின் எல்லை, வழிகள், அரண்அமைப்பு, படைப்பெருக்கம்,  படை நிலைகள்,  சுருக்க வழிகள் ஆகியவற்றை அறிந்து வருவர். பகைவரிடம் அகப்படின் கொலை செய்யப்படுவர். சிலப்பதிகாரத்தில் கோவலன் பகை நாட்டின் ஒற்றனெனக் கருதிக் கொலை செய்யப்படுகிறான். போரின் வெற்றியின் பின் ஒற்றாய்ந்தவர்க்கு அதிகப் பரிசிலைத் தருவதும் இதன் காரணமாகவே ஆகும்.

    ‘வெம்முனைநிலை யுணர்த்தியோர்க்குத்
    தம்மினுமிகச் சிறப்பீந்தன்று’. 3 என இதனைப் புறப்பொருள் வெண்பா மாலை விளக்குகிறது.

    ஆநிரை கவர்தல்:

    ஒரு நாட்டின் மீது போர் செய்ய விரும்பும் அரசன் தன் படைகளை அனுப்பிப் பகை நாட்டின் பசுக்கூட்டங்களை (ஆநிரை) யாரும் அறியாதவாறு கவர்ந்து வரச் செய்வான்.

    ‘வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
    சென்றி கன்முனை ஆதந்தன்று’ 4 

    பசுக்கள் அந்நாட்டின் செல்வங்கள் ஆகும். இதன் காரணமாகவே திருவள்ளுவரும்

    ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்ற யவை’5 என்கிறார்.

    மாடு ஒரு நாட்டின் செல்வமட்டுமன்று. மானத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தனக்குத் தெரியாமல் தன் நாட்டின் பசுக்களைக் கவர்ந்தது போருக்கான அறைகூவலாகவும் அமைகிறது. இதனால் வெகுண்டு போருக்கெழுகின்றனர். எனவே ஆநிரை கவர்தல் போரின் தொடக்கமாக அமைகிறது. 

    படைக்கருவிகளை வழங்குதல்:

    அரசன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தூசிப்படை, கிடுகுப்படை ஆகியவற்றிற்கு அவரவர் கையாள் திறனுக்கேற்ற படைக்கருவிகளை வழங்குவது ’படைவழக்கு’ எனும் துறையில் விளக்கப்பட்டுள்ளது.

    ‘முத்தவிர் பூண் மறவேந்தன்
    ஒத்தவர்க்குப் படைவழங்கின்று’6 என்று இதனைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

    வஞ்சினம் கூறுதல்:

    படைக்கருவிகளை அரசனிடமிருந்து பெற்ற படைவீரர்கள் தன் போர் ஆற்றலையும் நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் பகைவரை அழித்துச் சிதறச் செய்யும் திட்டங்களையும் அவ்வாறு பகைவரை வெல்லாவிட்டால் தான் அடையும் இழிநிலையினையும் எடுத்து கூறி வீரமொழி பகர்தல் ‘வஞ்சினம் கூறல்,  நெடுமொழிகூறல்’ என வழங்கப்படுகிறது.

    ‘இன்று பகலோன் இறவாமுன்னர் ஒன்னாரை
    வென்று களங்கொள்ளா வேலுயர்ப்பின் – என்றும்
    அரணவியப் பாயும் அடையார்முன் நிற்பேன்
    முரணவிய முன்முன் மொழிந்து’ 7

    இன்று மாலைக்குள் பகைவரை வெல்வேன். அன்றி அவர்க்கு அடிமையாவேன் என்கிறான்.

    தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவரை வெல்லாவிடில் மாங்குடி மருதன் முதலிய புலவர் பெருமக்கள் பாடும் தகுதியை இழக்கக் கடவேனாக என்கிறான்8. 

    பூச்சூடல்:

    போர்ச் செயலின் ஒவ்வொரு நிகழ்விற்கேற்பவும் அதனை உணர்த்தும் வகையில் வெவ்வேறு பூக்களைச் சூடுவர். வெட்சிப்பூ சூடுதல் ஆநிரை கவர்தலைக் குறிக்கிறது. ஆநிரை மீட்கக் கரந்தைப் பூவும், பகைவர்மேல் படையெடுக்க வஞ்சிப்பூவும், பகைவரைத் தடுக்க காஞ்சி, மதில் காக்க நொச்சி,  அதிரப் போர் செய்யும்போது தும்பை, வெற்றி பெற்றோர் வாகைப்பூவையும் அடையாளமாகச் சூடுகின்றனர். 

    பூசையிடுதல்:

    போர்ச்செயல் வெற்றிபெற போர்க்குரிய தெய்வமாகிய காளிக்கு பலியும் பூசையும் செய்து வழிபடுகின்றனர்.

    ‘நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
    கூடாரைப் புறங்காணுங் கொற்றவை நிலையுரைத்தன்று’ 9

    கலிங்கத்துப் பரணியில் காளியின் செயல்கள் விதந்துரைக்கப்பட்டுள்ளன. போரில் வென்றபிறகு வேலனோடு வெறியாட்டு நிகழ்த்துவதும் உண்டு. 

    படையெழுச்சி:

    போருக்குரிய நாள் குறித்த பின்னர் ஒரு நல்ல நாளில் அரசச் சின்னமான குடையும் போருக்குரிய கருவியான வாள்படையும் புறவீடு விடப்படுகிறது. 

    ‘பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
    கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று’.(குடைநிலை) 

    ‘செற்றார் மேல் செலவமர்ந்து
    கொற்ற வாள் நாள் கொண்டன்று’10.(வாள் நிலை) 

    போர்புரிதல்:

    பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையே கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது. தனக்கு நிகரான போர்த் திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர்.

    ஆவும், பார்ப்பனரும், பெண்களையும், பிணியுடையவரும், ஈமக்கடனிருக்கப் புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொது மன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர். (புறநானூறு பாடல் 9-நெட்டிமையார்).

    ‘வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
    உட்குவரத் தாக்கி உளர்செருப் புரிந்தன்று’11

    என்று போர் புரிதலை விளக்குகிறார். போரில் படைவிட்டவர், புறமுதுகிட்டவர், தனி நின்றவர் ஆகியோரை தாக்குதலில்லை. தான் தோற்குநிலையறிந்து புண்கிழித்து மாய்தலும் உண்டு. கணவனை அழித்த வேலால் அவன் மனைவியும் மாய்தல் உண்டு (ஆஞ்சிக்காஞ்சி). 

    விழுப்புண் பெறுதல்:

     ‘மண்ணொடு புகழ் நிறீஇப்
     புண்ணொடு தான் வந்தன்று’12

    போரில் பகைவரோடு பொருது மார்பிலும் தோளிலும் முகத்திலும் ஏற்படும் புண்ணை விழுப்புண் என்கிறோம்.

    விசயாலயச் சோழன்   தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவன் என்பதை மூவருலாவில் ஒட்டக்கூத்தர்,

    ‘சீறும் செருவில் திருமார்பில்
    தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்’13 என்று பாடுகிறார். 

    தீயிட்டு எரித்தல்:

    பகை நாட்டைப் போரிட்டு வென்று அந்நாட்டைத் தீயிட்டு எரிக்கின்றனர். பகைவரின் வளத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும்.

    ‘நேராதார் வளநாட்டைக்
    கூரெரி கொளீஇயன்று’14

    அந்நாட்டின் செல்வங்களை  முழுவதும் கொள்ளையடித்தலும் உண்டு.

    ‘களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
    வளமனை பாழாக வாரி’15  கொள்ளையடிக்கின்றனர்.

    தாம் போரிட்டழித்த நாடு கெடும்படிக் கழுதை ஏறு பூட்டி வெள்வரகு, கொள் விதைப்பர்.

    ‘எண்ணார் பல்லெழில் கழுதையேரு ழுவித்து
    உண்ணா வரகொடு கொள்வித் தின்று’16

    இவ்வாறு பல வகையினும் தாம் போரிட்டு அழித்த நாட்டைச் சீர் கெடும்படிச் செய்தனர். 

    மகள் வேண்டி போர்:

    ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு’ 17 என்கிறார் வள்ளுவ பெருந்தகை.

    நாட்டை வளப்படுத்தவும், வறியவர்க்கு ஈயவும், வேண்டிய பொருளுக்காகப் போரிடுதலும் உண்டு. பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் போரிடுதலும் உண்டு. மகட்பால் காஞ்சி துறை அத்தகையது.

    ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வீரமுண்டு என்பது மூதின்முல்லை. எதிர்த்துப் போர்செய்ய முடியாதவர்கள் திறை தந்து நாட்டினைப் பாதுகாத்தலும் உண்டு. 

    வெற்றிக்கொண்டாட்டம்:

    போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கறி உணவும் மொந்தை நிறைந்த கள்ளும் உண்டு மகிழ்ந்தனர் (உண்டாட்டு). புலவர்க்கும் தன்னை நாடிவந்த இரவலர்க்கும் வாரி வழங்கினர். துடி இசைத்த துடியர்க்கு மிகு பொருள் வழங்குதல் உண்டு.

    ‘நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கி
    பாடிய புலவர்க்குப்  பரிசில் நீட்டின்று’18 

    நடுகல்:

    நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பதற்கான போரில் வீழ்ந்துபட்ட வீரர்களுக்கு யாழைக் கொண்டு இசைத்துப் பாடும் பாணர் கையறவு பாடுதல் உண்டு.

    ‘வெருவரு வாளமர் விளிந்தோற் கண்டு
    கருவி மாக்கள் கையற வுரைத்தன்று’ 19

    ‘மண்மகுளத் துடிகறங்க
    விண்மேயாற்குக் கற்கொண்டன்று’.20

    போரில் மாண்ட வீரர்களுக்கு அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த கல்கொணர்ந்து புனித நீராட்டி அவரது பிணத்தைப் புதைத்த இடத்தில் நடுகல் நட்டு அவரது போர்த்திறத்தையும் புகழினையும் போற்றி நினைவு கூறுவர். இந்நடுகல் வழிபாடு பின்னர் கடவுள் வழிபாடாக மாறியுள்ளது.

    இவ்வாறு சங்ககாலப் போர்முறை நிகழ்வுகள் புறப்பொருள் வெண்பா மாலையில் விவரிக்கப்பட்டமை அறிய முடிகிறது.      

    அடிக்குறிப்புகள்: 

    1.புறப்பொருள் வெண்பா மாலை- (விரிச்சி துறை) ப.8 திருநெல்வேலி தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக்கழகம் -சென்னை-18- பதிப்பு 2004.
    2.திருக்குறள்-ஒற்றாடல் குறள்-585-ப.119-தென்றல் நிலையம்-சிதம்பரம்-8வது பதிப்பு-2006.
    3.மேலது புற. வெ.மாலை புலனறிச்சிறப்பு-ப.21.
    4 மேற்குறித்த நூல் வெட்சி ப.5.
    5.திருக்குறள்-கல்வி குறள்-400-ப.81.
    6 புற.வெ.மாலை-படைவழக்கு ப.69.
    7.மேலது வஞ்சினக் காஞ்சி ப.74.
    8.தமிழ் இலக்கிய வரலாறு– டாக்டர் மு.வரதராசனார்-ப.44  புது தில்லி சாகித்திய அக்காதெமி வெளியீடு-1999.
    9 புற.வெ.மாலை-கொற்றவை நிலை ப.44
    10.மேலது குடை நிலை-வாள்நிலை பக்-42 -43.
    11.மேலது போர் மலைதல் ப.29
    12.மேலது புண்ணொடு வருதல் ப.30.
    13.மூவருலா-ஒட்டக்கூத்தர்
    14.புற.வெ.மாலை உழபுல வஞ்சி ப.53.
    15.மேலது மழபுல வஞ்சி  ப.54.
    16.மேலது உழுது வித்திடுதல் ப.122
    17.திருக்குறள் இறைமாட்சி-குறள் 385 ப.79.
    18.புற.வெ.மாலை கொடைவஞ்சி ப.54.
    19.மேலது கையறு நிலை ப.35.
    20.மேலது கற்கோள் நிலை ப.244.

     *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
    செங்கம்.606701
    பேசி: 99430-67963.

     

        

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180715 Goverdhan 9×12 strathmore 160gsm tinted paper -Krishnapremi lr

    குன்று மவர்தான்காண்!! காத்திடும் மந்தியவர்!
    என்றுமவர் ஏரார்ந்த கண்ணியின் -அன்பினைத்
    தட்டாது கட்டுண்ட தாமோ தரனவர்
    கொட்டாயில் ஆவதன் கன்று….கிரேசி மோகன்….

    Share
  • உயர்ந்து நின்றார் காமராசர் !


    ( எம். ஜெயராமசர்மா…… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    இலக்கியங்கள்  இலக் கணங்கள்
    எதும் அவர் படிக்கவில்லை
    இங்கீலீசு பள்ளிக் கூடம்
    எட்டி அவர் பார்த்ததில்லை
    தலைக் கனத்தை வாழ்நாளில்
    தன தாக்கிக் கொண்டதில்லை
    தமிழ் நாட்டின் தலைமகனாய்
    தாம்  உயர்ந்தார்  காமராசர்  !

    ஏழையென பிறந்த  அவர்
    கோழை என வாழவில்லை
    தோழமையை மனம் இருத்தி
    தோள்  கொடுத்தார் மக்களுக்கு
    ஆழ நிறை அன்புடனே
    அவர் நோக்கு அமைந்ததனால்
    அரசு கட்டில் அமர்ந்தாலும்
    அனைவருக்கும் உதவி நின்றார்  !

    மாடிமனை  வீடு  எலாம்
    வாங்கி அவர் குவித்ததில்லை
    மற்றவர்கள் மனம்  வருந்த
    சொத்தும் அவர் சேர்த்ததில்லை
    கோடிகளில் செல்வம் அதை
    கொள்ளை அவர் கொண்டதில்லை
    கொள்கையுடன் வாழ்ந்து நின்று
    குன்றமென  உயர்ந்து  நின்றார்   !

    அரசியலால்  காசு  தேட
    அவர்  என்றும்  முயன்றதில்லை
    அதிகார  வெறி கொண்டு
    அவர் ஆட்சி செய்ததில்லை
    அனைவரையும் அணைத்து நிற்க
    அவர் மனது விரும்பியதால்
    அவர் ஆண்ட  காலமதை
    அனைவருமே விரும்பி நின்றார்   !

    கல்வி   தேடும்   எழையர்க்கு
    கண் ஆனார்  காமராசர்
    கல்வி கற்கா  தன்னிலையை
    கருத்தில் அவர் இருத்தினரே
    எல்லோரும் கல்வி கற்க
    எண்ணி  அவர் செயற்பட்டார்
    இதனாலே  அவர் என்றும்
    இருந்து விட்டார் உள்ளமெலாம்  !

    படிக்காத  மேதை  எனப்
    பவனி வந்தார்  காமராசர்
    படித்தார்கள் நினைவில் வரா
    பலவற்றை அவர் செய்தார்
    நடித்து அவர் வாழ்ததில்லை
    நாகரிகம் பேணி நின்றார்
    நம் நாட்டில் அவர்போல
    யார் வருவார் நலன்காக்க  !

    அரசியலில் அவர் வாழ்வு
    அப்பழுக்கு அற்ற தென்று
    அரசியலார் சொல்லி நிற்க
    அவர் வாழ்ந்து சென்றுவிட்டார்
    ஊழல் என்னும் பேய்தன்னை
    ஓரங்கட்ட  அவர்  நினைத்தார்
    ஊழல் அற்ற தலைமகனாய்
    உயர்ந்து  நின்றார்  காமராசர்    !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180714 Udupi Krishna A4 Canson 300gsm lr

    கோஹம் விசாரித்து, சோஹத்தின் சன்னிதியில்
    நாஹமித் தேஹமில்லை நன்குணர்ந்து -மோஹமாம்
    பிண்ணனியில் மேயும் பசுபாசம் ஓட்டிட
    கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • மிச்சத்தை மீட்போம்

    கச்சத் தீவைக்கைவிட மாட்டோம் கத்தியே
    =====கூச்சல் குழப்பம் விளைவித்தவர் எங்கே.?
    மிச்சமின்றி ஆற்று மணல் அத்தனையும்
    =====மழித்து வழித்ததை மறைத்தவர் எங்கே.?
    இச்சகத்தில் வளமான இயற்கை வளமிருக்கு
    =====இனியும் அழியாமல் இருக்கவே விழித்திரு.!
    மிச்சத்தை இனியும் மீட்க வேண்டுமெனும்
    =====மேலான மனதை இனிமேற் கொள்வாயே.!

    அச்சம் நமைவிட்டு ஆங்கே பலமைல்தூரம்
    =====அகன்று விட்டது என்றுதான் நினைத்தோம்.!
    நச்சுக் கொடிபோன்ற நஞ்சாலை தழைத்ததால்
    =====நன்னீரும் கெட்டது நதிநீரும் விஷமாகியது.!
    இச்சைப் படிநடக்க எவருத்தரவு கொடுத்தார்
    =====இடர் செய்தற்கும் இங்கேயொரு காவலாளி.!
    மிச்சம் இருப்பதை மீட்கப்போய் மறுபடி
    =====மீளாத துயரத்தில் மீண்டும் ஆக்கிடுவாரோ.?

    அச்சமிலை அச்சமிலை என்றே முழங்கினான்
    =====நன்றே மஹாகவி நல்பாரதி அவரைப்போல
    உச்சக் கோஷம் எழுப்பினால் போதுமா
    =====ஊர்மக்கள் குறைகேட்க ஓடிவந்தோர் யாராம்.?
    பச்சாதாபம் வேண்டாம் பரிதாபம் கொளாதீர்
    =====பகல்கொள்ளை பார்த்தால் விட்டு விடாதீர்.!
    நிச்சயம் இழந்ததை நிலையாக மீட்டெடுக்க
    =====நீண்ட போராட்டம் நிலைத்திடுமோ வாழ்விலே.!
    ===========================================
    நன்றி:: தினமணி கவிதைமணி::18-06-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 9

    -மேகலா இராமமூர்த்தி

    சவால்கள் நிறைந்த வாழ்வைச் சமூகம் சான்றோர்க்களித்தாலும் அதற்காக அவர்கள் சிந்தை கலங்குவதில்லை; நிலைதாழ்ந்து போவதில்லை. எத்தகு சூழலிலும் நற்குணம் கொண்ட பொற்புடைய மேன்மக்களாகவே வாழ்வர்.

    மேன்மக்களின் இயல்பை இருசுடர்களில் ஒன்றான நிலவோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் செப்பும் நயமிகு நாலடியார் பாடலொன்று!

    அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
    திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
    மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
    தேய்வர் ஒருமா சுறின். 
    (நாலடி – 151)

    அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மில் ஒத்த பெருமையுடையவர் ஆவர். ஆனால், திங்கள் களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள் தமது ஒழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதனைப் பொறாது உளங்கலங்கி அழிவர்.

    திங்களைப்போல் சான்றோரும் புகழுடையவர் என்று முதலில் ஒத்த தன்மையைக் கூறி, பின்னர்த் திங்கள் களங்கத்தைத் தாங்கும் ஆனால் சான்றோர் அதனைப் பொறார் என்று அவரின் வேறுபட்ட தன்மையையும் விளம்பி நிற்பதால் இப்பாடலை வேற்றுமையணிக்குச் சான்றுகாட்டலாம்.

    மேன்மக்கள் பிறர்க்கு இன்னாசெய எண்ணாத இயல்புடையவர்கள் என்பது வையம் அறிந்ததே. அதனைத் தாண்டியும் செல்லும் அவர்களின் உயர்சிந்தனையின் உன்னதத்தைப் பின்வரும் நாலடியார் நமக்குச் சுட்டுகின்றது.

    புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
    கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
    நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்
    பல்லாருள் நாணல் பரிந்து.     
    (நாலடி – 155)
     

    பொருந்தாக் கல்வியையுடைய, மெய்யுணர்வில்லாத வீணோர் அவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாத ஒருவன் உரையாடவும், அதனைக் கண்ட மேன்மக்கள் அந்தப் பேதையின் உரையை அவையில் பலரும் கேலிசெய்யவும், அதனால் அவன் நாணவும் நேருமே எனும் வருத்தத்தோடும் இரக்கத்தோடும் அதனைத் தாம் கேட்டுக்கொண்டிருப்பராம்.

    பேதை ஒருவனின் பொருளற்ற பேச்சையும் பொருட்படுத்தி அருளோடும் அன்போடும் செவிமடுக்கும் மேன்மக்களின் மாட்சி வியப்பினும் வியப்பே!

    மேன்மக்களாய் வாழ்தற்கு என்னென்ன அடிப்படைப் பண்புகள் அவசியம் என்பதை நமக்கு அறியத்தருகின்றது நாலடி.

    பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
    தேதிலா ரிற்கட் குருடனாய்த்  தீய
    புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
    அறங்கூற வேண்டா அவற்கு. 
    (நாலடி – 158)

    பிறருடைய மறைந்த/அந்தரங்கக் கருத்துக்களைக் கேட்டலிற் செவிடுடையனாய், அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடனாய், தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையுடையனாய், வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள் இவை என்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், அவனுக்குப் பிறர் வேறு யாதும் அறம் அறிவுறுக்கவேண்டா என்பது இச்செய்யுளின் பொருள். 

    தீயதைக் கேட்காதே; தீயதைப் பார்க்காதே; தீயதைப் பேசாதே என்பதைக் காட்ட காந்தியார் வைத்திருந்த மூன்று குரங்குபொம்மைகளை நாம் மேற்கண்ட நாலடியாரின் கருத்துக்களோடு வைத்தெண்ணலாம்.

    வள்ளுவரோ இதனை இரத்தினச் சுருக்கமாக,
    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்றுவிட்டார். மனந்தானே நம்மை மடவராக்கி எல்லாத் தவறுகளுக்கும் உடந்தையாக்குகின்றது? ஆதலால் மனத்தூய்மையே எல்லா நற்செயல்களுக்கும் தாய் என்று கருதலாம்!

    மாந்தர்கள் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகளில் ஒன்று, தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் மூத்த பெரியாரை அவமதிக்காது அவர்மாட்டுப் பண்போடும் அன்போடும் நடந்துகொள்வது.

    சிலர், தம் வாழ்வில் நல்லறிவும் புலமையும் உடைய சான்றோரின் நற்றுணை வாய்க்கப்பெற்றும் அவர்களிடம் நல்லனவற்றைக் கற்றுத் தெளிவதில் கவனம் செலுத்தாது கொன்னே நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பர். அன்னாரின் பேதைமையை என்னென்பது?

    பேதையாரின் இன்னொரு வகையினர் தம்மைப்பற்றிப் பெருமைபேசித் திரிவதிலேயே பொழுதைக் கழிக்கும் வீணராயும் வெற்றராயும் இருப்பர். அவர்களின் புத்திக்கு உரைக்கும்படி நாலடியார் நவிலும் செய்தியைக் கேண்மின்!

    எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
    தம்மைத்தாம் கொள்வது கோளன்று – தம்மை
    அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
    பெரியராக் கொள்வது கோள். 
    (நாலடி  – 165)
     

    எம் தகுதியை நீவிர் அறிந்திருக்கவில்லை; எம்மைப் போன்ற திறனுடையோர் வையத்தில் யாங்கணுமே பிறக்கவில்லை என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக்கொள்வது சிறவாது; தம்மை அருமையுடையோராய்க் கருதி அறனறியுஞ் சான்றோர் பெரியராய் மதித்துப் போற்றுவதே பெருமையாகும் என்கிறது நாலடியார். 

    ”பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து”
    என்று பெருமைப் பண்பையின் பெற்றியையும் சிறுமைப் பண்பின் இயற்கையையும் மன்பதைக்குச் சொன்ன தெய்வப்புலவர், 
    ”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை” என்று எச்சரித்திருப்பதையும் நாம் சிந்தித்து ஒழுகுதல் சிறப்பு. 

    நம் வாழ்வின் பல தருணங்களில் நாம் சிந்தியாது பலரை நண்பர்களாக்கிக் கொள்கின்றோம். பழகப் பழகத்தான் அவர்களின் அருவருக்கத்தக்க உண்மைத் தோற்றம் வெளிப்படுகின்றது. அதன்பின், அவர்களைவிட்டு விலகிவிடவேண்டும் என எண்ணுகின்றோம். எனினும் பழக்கதோஷம் அவ்வளவு சுலபத்தில் அதனைச் செய்யவிடுவதில்லை. எனவே, ஆராய்ந்து நட்பு கொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகின்றது நாலடியார்!

    தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
    பிரியப் பெரும்படர்நோய் செய்யும் – பெரிய
    உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
    கலவாமை கோடி யுறும். 
    (நாலடி – 168)
     

    நூற்பொருள்களை விளங்கத் தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், (பழகியபின்) அவரைப் பிரிய நினைப்பது பெருந்துன்பம் உண்டாக்கும்; ஆகவே, கருநிறமான பெரிய கழிக்கரையை உடையோனே! பெரியோரிடத்தன்றிப் பிறர் யாரிடத்திலும் நேயங் கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

    ”குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” என்று நல்ல நட்புக்கு வள்ளுவமும் வழிகாட்டுகின்றது.

    நல்லியல்புடைய பெரியோர்கள் கற்றற்குரிய நூல்களைக் கல்லாமலும், தாமறியாத பொருள்களை அவற்றை அறிந்தோரிடத்துக் கேளாமலும், தம்மால் இயன்ற வகையில் பிறர்க்கு உதவாமலும் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் விரும்புவதில்லை.

    கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
    செல்லாது வைகிய வைகலும் – ஒல்வ
    கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
    படாஅவாம் பண்புடையார் கண்.  
    (நாலடி – 169)

    எனவே, நல்லனவற்றைக் கற்றலும், சான்றோரிடத்து நற்பொருளைக் கேட்டலும், புன்னெறி தவிர்த்து நன்னெறியில் ஒழுகலும் மனித வாழ்க்கைக்குப் பல்லாற்றானும் பொலிவூட்டும்! புகழ் கூட்டும்!

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • வாழ்வியல் தத்துவம்

    பவள சங்கரி


    ஜென் கதைகள் நமக்குப் பல வாழ்வியல் தத்துவங்களை விளங்கச்செய்பவை. நம் புத்தரின் தத்துவங்களே பெரும்பாலும் ஜென் கதைகளாக உருமாறியுள்ளன. போதி மரத்தடிக்குச் சென்றுதான் அந்த ஞானம் பெறவேண்டும் என்பதில்லை .. நல்ல எண்ணங்களை விதைக்க முடிவெடுத்தால் மட்டுமே போதும் .. நன்றி மறப்பது நன்றன்று என்பதை நம் வள்ளுவப் பெருந்தகையும், அப்படி மறப்பவரின் எதிர்காலம் என்னவாகும் என்ற அனுபவப் பாடங்களும் நமக்கு அன்றாடம் கிடைப்பவை! இதற்கு நம் ஜென் துறவியார் சொல்லும் பாடம் இதுதான்!

    இரண்டு இணை பிரியாத உண்மையான நண்பர்கள் இருந்தார்கள். அவ்வளவு நாட்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், நல்ல நட்பாகவும் அதாவது ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்தும்படி இருந்தார்கள். அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒருமுறை ஒரு பாலைவனப் பகுதியில் இருவரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கடுமையாகச் சுடும் மணலின் வேதனையை மறப்பதற்காக இருவரும் பேசியபடியே நடந்து சென்றார்கள்.
    மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு விசயம் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாட்டை தோன்றச் செய்துவிட்டது.

    இதுவே வாய்ச் சண்டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டான். கடுமையான வெயிலின் தாக்கத்தினால் அடைந்த சோர்வைக்காட்டிலும், அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனை அதிகமானது. அறை வாங்கியவன் பெரும் வேதனையில் இருந்தாலும் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாக ஒதுங்கிப்போய் உட்கார்ந்துகொண்டவன், அருகில் இருந்த மணலில் , ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்’ என்று தன் விரலால் எழுதினான். ஆனால் அவன் என்ன எழுதினான் என்று அடித்தவனுக்குப் புரியவில்லை என்றாலும் இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

    இருவருக்கும் தாகம் வாட்டியபோது, வழியில் கண்ட ஒரு பாலைவன ஊற்றில் இருந்த நீரை தாகம் தீரும்வரை அள்ளி அள்ளிப் பருகினார்கள்.

    அப்போது கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ திடீரென இழுப்பதுபோல் இருந்தது. அவன் தான் புதைகுழியில் சிக்கிக் கொண்டதை அப்போதுதான் உணருகிறான். அப்போது புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டுக் காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த அந்த நண்பன். ஆபத்தில் இருந்து மீண்டவனோ சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தவன், ஒரு கல்லை எடுத்து,
    ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்’ என்று எழுதினான்.
    ”நான் உன்னை அறைந்தபோது மணலில் ஏதோ எழுதிய நீ இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாயே. ஏன் இப்படி இவ்வளவு சிரமப்பட்டு கல்லில் எழுதுகிறாய்? என்று கேட்டான்.

    அறை வாங்கிய நண்பனோ, ”ஒருவர் நம்மை ஏற்படுத்தும் காயத்தை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு எனும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடக்கூடும்; ஆனால், ஒருவர் நமக்குச் செய்யும் நன்மையை சிரமப்பட்டேனும் கல்லில் எழுதி வைத்தால் அது காலம் கடந்து நிற்பதோடு மற்றவருக்கும் பாடமாக அமையும்” என்றான்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180713 – Vraj Diary – Strathmore tinted paper 160gsm 9×12” mixed media (Wa.c pastel and charcoal) wm

    ”மனமந்தி தோழர், மணிகட்டப் பூனை
    இனத்திற்கும் காவல் இவரே, -சினம்கொள்
    ரஜஸ்மாம்ஸை(கம்ஸன்) வெல்ல, ரங்கனின் சத்வ,வ்
    ரஜடயரி தன்னில் ரமிப்பு’’(பாக வதத்தில் அடுத்த வதம் யார்….!டயரி பார்க்கிறார்….!)….கிரேசி மோகன்….!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (277)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிகள், சில நிகழ்வுகள், சில மகிழ்வானவை வேறு சிலவோ மனதை வருத்துபவை. ஆனால் எதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காலச்சுழற்சியின் இயக்கத்தைத் தடுக்கக்கூடிய வல்லமை யாருக்குத்தான் உண்டு. பலகாலம் பழகிய சிலரின் இழப்பு உள்ளத்தின் ஓரத்தில் உரசத்தான் செய்கிறது. “ கூக்குரல் போட்டு அழுவதனாலே மாண்டவர் மீண்டும் வருவாரா?” என்பது கவியரசரின் யதார்த்தமான வரிகள். “ போனால் போகட்டும் போடா” என்று மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு இருப்பதைத் தவிர செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

    சரி இனி இந்த மடலுக்கு வருவோம். இங்கிலாந்தின் நிலப்பரப்பிலும் இத்தகைய பல நிகழ்வுகள் பல முனைகளில் நிகழ்ந்திருக்கின்றன.

    கடந்த மார்ச் மாதம் முன்னாள் மேற்குலக நாடுகளுக்காக உளவு செய்ததிற்காக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு பின்னர் உளவாளிகளின் பரிமாற்றத்தின் போது இங்கிலாந்திடம் கையளிக்கப்பட்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ரஷ்யப் பிரஜை ஒருவரைச் சந்திக்க அவரது மகள் வந்திருந்த போது, அவர்களிருவரும் மிகப்பயங்கரமான இரசாயன நச்சுப் பொருளினால் தாக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக வெளிவந்ததை அனைவரும் அறிந்திருக்கலாம். அதைத்தொடர்ந்து அந்த இரசாயனப் பொருளின் ஆரம்பம் ரஷ்யா என்று இங்கிலாந்தினால் குற்றம் சாட்டப்பட்டு இவ்விருநாடுகளுக்கிடையேயும் இருந்த உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டதையும் அனைவரும் அறிந்திருக்கலாம். அந்த நச்சுப் பொருளினால் தாக்கப்பட்ட இருவரும் இங்கிலாந்து மருத்துவர்களினால் மிகத்தீவிரமான சிகிச்சைகளுக்குள்ளாக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதும் பழைய செய்தியே. அதன் பக்க விளைவே இப்போதைய பெரிய செய்தியாகி விட்டிருக்கிறது. ஆமாம் அந்த நச்சுப் பதார்த்தத்தின் மிச்சம் மீதி எதேச்சையாக எதுவித அரசியலோ, அன்றி வேறு துறைகளிலோ சம்பந்தப்படாத ஒரு ஜோடியின் கைகளில் எவ்வாறோ தட்டுப்பட்டு அவர்களிருவரும் மிகவும் மோசமான உடல்நிலையில் வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பாதிக்கப்பட்ட பெண் இரு தினங்களுக்கு முன்னால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளதோடு அப்பகுதியில் வாழும் ஏனைய பொதுமக்களை சிறிது அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

    அடுத்து இங்கிலாந்து அரசியல் களத்தில் உதைபந்தாக அடிபட்டுக் கொண்டிருக்கும் “ப்ரெக்ஸிட்” இன் அடுத்தகட்ட நகர்வு இங்கிலாந்து அரசுக்கும், பிரதமருக்கும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது. கால அட்டவணையின் படி 2019ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேற வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் அவ்வெளியேற்றத்தின் பின்னால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அத்தகைய உடன்பாடு அத்திகதிக்கு முன்னர் ஏற்படுத்தப்படாவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் வலுவடைவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் தம்மை ஜரோப்பிய ஒன்றியத்துக்குச் சொந்தமான ஒரு நாட்டிற்கு இடம் பெயர்த்து விடும் அபாயமுள்ளது. இத்தகைய இடப்பெயர்வினால் பலர் தமது பணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம். இத்தகைய ஒரு ஸ்திரமற்ற சூழலினால் இங்கிலாந்தில் பணமுதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்குகின்றன. இது இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறது. இதனைச் சரிசெய்வதற்காக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் எத்தகையதோர் வர்த்தக உடன்பாட்டை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது என்பதனை இங்கிலாந்து அரசு முன்வைத்தால் மட்டுமே அதனை ஏற்பதா இல்லையா எனும் நிலையை ஜரோப்பிய ஒன்றியம் எடுக்க முடியும் என்பது ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நிலைப்பாடு. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு தீர்க்கமான நிலையை எடுக்க முடியாது அதனுள் அமைச்சரவையில் இருந்த கருத்து வேறுபாடு தடையாக இருந்தது. அமைச்சர்கள் தமக்கேற்றவாறு பிரதமரின் நிலைப்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இதனைச் சரிசெய்வதற்காக பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அமைச்சர்களையும் அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்து அவர்களது கையடக்கத் தொலைபேசி, மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு செய்தி அனுப்பக்கூடிய சாதனங்கள் ஒன்றும் இல்லாமல் அமைச்சரவைக்கூட்டத்தை ஒரு அடைக்கப்பட்ட கூட்டமாக நிகழ்த்தினார் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டிற்கு அனைவரும் வரவேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்து தான் முன்மொழியும் நிலைப்பாட்டை விமர்சித்து அதில் சில மாற்றங்களைச் செய்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகலாம் எனும் முடிவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சில முனகல்களுடன் அனைவரும் ஒரு நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர். ஆனால் அதைப்பற்றிய விமர்சனங்கள் அமைச்சர்களிடமிருந்து இனி வரக்கூடது அப்படி வந்தால் அவ்வமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இன்றைய செய்திகளின் படி இந்த “ப்ரெக்ஸிட்” பேச்சுக்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியைத் தனது துணை அமைச்சருடன் இராஜினாமாச் செய்துள்ளார். இனிவரும் நாட்களில் விளைவுகளை நாம் ஒவ்வொன்றாக நோக்க வேண்டும்.

    சரி இனி இங்கிலாந்தின் சாதனைகளில் ஒன்றைப் பார்ப்போமா ?

    28 வருடங்களின் பின்னால் இங்கிலாந்தின் உதைபந்தாட்ட அணி உலகக் கோப்பைக்கான பந்தயத்தில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த இங்கிலாந்து அணி பல எதிர்பார்ப்புகளுடன் இப்போட்டிக்குள் நுழையவில்லை. மிகவும் இளவயதினரைக் கொண்ட இவ்வணி அனைவரையும் திகைப்பிலாழ்த்தும் வண்ணம் சாதனையை நிலைநாட்டியுள்ளது. இங்கிலாந்தின் பல பொருளாதாரச் சிக்கல்களுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்த மக்களுக்கு கொஞ்சம் மகிழ்வைக் கொடுக்கக்கூடிய வகையில் உதைபந்தாட்ட அணி ஒரு மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இதுவே இங்கிலாந்து இக்கிண்ணத்தைத் தட்டிச் செல்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பு என்று சிலரால் கூறப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது 1966ம் ஆண்டு. கடைசியாக இங்கிலாந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது 1990ம் ஆண்டு. சுமார் 28 வருடங்களின் பின்னால் மக்களின் மனதில் மகிழ்ச்சி நம்பிக்கை விதையைத் தூவியிருக்கிறார்கள் உதைப்பந்தாட்ட வீரர்கள். அவர்களது ஆட்டம் மக்கள் மனதின் கனவினை நிறைவேற்றுமா என்பது வரும் புதனன்று மாலையே தெரிய வரும் அதுவரை காத்திருப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஆண்டவர்க்கே புரியவில்லை

    ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    நிலவினிலே காலை வைத்தான்
    நீள்கடலை சுற்றி வந்தான்
    வளம் கொழிக்க வைப்பதற்கு
    வகுத்து நின்றான் பலவழியை
    அளவில்லா ஆசை கொண்டு
    ஆற்றி நின்றான் ஆராய்ச்சி
    ஆனாலும் அவன் மனமோ
    அமைதி நிலை அடையவில்லை !

    ஆண்டவனைப் பழித்து நின்றான்
    அவதூறாய்ப் பேசி நின்றான்
    அறம்பற்றி நியாயம் பற்றி
    அதிகமாய் கிண்டல் செய்தான்
    இறப்போடு பிறப்பு எல்லாம்
    ஏன் இங்கே வருகுதென
    இன்றுவரை குழப்பி நின்று
    இவன் தெரியா உலைகின்றான் !

    வாதம் பல செய்கின்றான்
    வழக்கு பல காணுகிறான்
    ஆதாயம் தேடித் தேடி
    அறம் தொலைத்து நிற்கின்றான்
    அன்னை தந்தை பாசம்கூட
    அவன் மனதில் காணவில்லை
    அவன் மனமோ என்னாளும்
    அல்லலில் தான் உழல்கிறது !

    ஆண்டவனின் படைப்பு அதனில்
    அவன் படைப்பே உயர்வாகும்
    அவனுக்கே ஆற்றல் பல
    ஆண்டவனே வழங்கி உள்ளான்
    ஆனாலும் அவன் போக்கோ
    ஆண்டவர்க்கே புரிய வில்லை
    அவன் மட்டும் இவ்வுலகில்
    அதையெண்ணா வாழுகிறான் இவ்வுலகில் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180712 -Vatsalya 9×12” Strathmore tinted paper 160gsm mixedmedia -lr

    ”உச்சிமுக ரும்முன் உலகளந்தோன், கோமாதா
    மச்சினர் மாலவர் மாடுதழுவல்: -கொச்சுமவள்
    ராதையின், சக்களத்தி ராப்பகலாய், வாத்ஸல்ய
    போதைக்குப் பட்டமளிப் பு (பட்டாபிஷேகம்)’’….கிரேசி மோகன்….!

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….கிரேசி மோகன்….!

    Share