
”கட்டி அணைக்கின்றாள் .கண்ணிநுண் தாம்பாலே
கட்டிய மாற்றாந்தாய் கண்ணனை: -ஒட்டி
உறவாடும் கண்ணபிரான் ஓரிரவில் மஞ்ஞை(மயில்)
இறகுடைய விஷ்ணு இவர்’’…..கிரேசி மோகன்….!
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
நிர்மலா ராகவன்
மென்மை பலகீனமா?
அந்த வகுப்பில் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.
“இவன் கவனிக்காது, தப்பு தப்பாகப் பண்ணுகிறான். அடிக்கலாமா?” என்று அவர் வகுப்பை விளையாட்டாகக் கேட்க, “அடியுங்கள், மாஸ்டர்!” என்று எல்லாக் குரல்களும் ஒருங்கே ஒலித்தன. தன் கையால் மாணவனது பிட்டத்தில் பயிற்சியாளர் ஓங்கித் தட்டுவதுதான் தண்டனை.
டேக் வான் டோ என்ற கொரியா நாட்டுத் தற்காப்புக்கலை போதிக்கும் அந்த இடத்தில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தார்கள்.
நாளை அவர்களுக்கும் அடி விழலாம். இருந்தாலும், சகமாணவன் ஒருவன் தண்டனை பெறுவதைப் பார்க்கும்போது ஒருவித உற்சாகம்! `நாம் தப்ப வேண்டும்,’ என்ற முனைப்பும் எழும். இந்த மனப்போக்கைதானே பயிற்சியாளரும் எதிர்பார்த்தார்!
இப்படிப் பல வருடங்கள் பயின்ற மாணவ மாணவிகளை நான் சந்தித்தபோது, அவர்கள் பிற உயிர்களிடம் மிக அன்பாக இருப்பதையும், சக மனிதர்களிடம் மரியாதையாகப் பழகுவதையும் கவனித்தேன். பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்கள்.
“உங்களால் எந்தச் சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு அமைதியாக, மென்மையாக இருக்க முடிகிறது?” என்று அப்படிப்பட்ட ஓர் இளைஞனிடம் கேட்டேன்.
“தற்காப்புக்கலை பயின்றால் ஒருவித அமைதி ஏற்பட்டுவிடுகிறது. தியானம் செய்ததுபோல் இருக்கும்,” என்ற பதில் வந்தது.
இன்னொருவர் கூறினார்: “குருவைப் பொறுத்துத்தான் எங்கள் குணமும் அமைகிறது. எங்களைப் பயில்வித்தவர் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியை இழக்காதவர். ஆனால், கண்டிப்பானவர். எங்கள் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று போதித்திருந்தார்”.
இவர்கள் அதிர்ந்து பேசுவதும் கிடையாது. அளந்துதான் பேசுவார்கள். மொத்தத்தில், அடி, உதை, குத்து என்று வன்முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மென்மையானவர்களாக இருந்தார்கள். மென்மையில்தான் வலிமையும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள்.
பொதுவாகவே, ஆண்கள் வீரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதென்றால், உரக்கப் பேசுவது, எதற்கும் ஆத்திரப்படுவது என்று என்ற எண்ணம்தான் எவருக்கும். அதை நம்பி, இவர்களிடம் மோதும் ஆண்கள் விரைவில் பயந்து விலகிவிடுவார்கள்.
உன்னிடமே மென்மை காட்டு
மனிதர்களிடமோ, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமோ கருணையும் மென்மையும் காட்டுமுன் நம்மிடமே அப்படி நடந்துகொள்ளவேண்டாமா?
ஒரு சிறு தவறு செய்துவிட்டாலும், நம்மேலேயே ஆத்திரமோ, எரிச்சலோ வந்தால், மென்மை எங்கிருந்து வரும்? `நம்மால் இயன்றது இவ்வளவுதான்!’ என்று குறைகளுடன் நம்மை ஏற்றால் அமைதி கிடைக்க, முன்னேறுவது எளிது.
வன்முறை கண்டிப்பின் அடையாளமா?
நம் அதிகாரத்தின்கீழ் இருக்கும் ஒருவர் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய கண்டிப்பு அவசியம்தான். அத்துடன், மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளும் அவசியம்.
பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் `கண்டிப்பு’ என்று எண்ணி, சுடுசொற்களாலும், வன்முறையைப் பிரயோகித்தும் சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முயல்வார்கள். ஏனெனில், வன்முறை எளிது. ஆனால், சிறிய தவற்றுக்கும் பொருத்தமில்லாது, மிகக் கடுமையாகத் தண்டிப்பது எதிர்மறையான விளைவைத்தான் உண்டாக்கும்.
மைக்கல் ஜாக்சனின் தந்தை அப்படி நடந்துகொண்டதில், சிறு வயதில் அவரைப் பார்த்தவுடனேயே அப்பிரபல பாடகருக்கு வாந்தி வந்துவிடுமாம். தந்தையைக் கண்டாலே பிடிக்காமல் போயிற்று. பெரும் செல்வந்தராக இருந்தும், தன் உயிலில் அப்பாவின் பெயரைச் சேர்க்கவில்லை! அவ்வளவு வெறுப்பு!
மென்மை பெண்களுக்குத்தானா?
மென்மையாக இருப்பது `மெல்லியலாள்’ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் குணமென்று ஆகிவிட்டது. உண்மையில், ஆணோ, பெண்ணோ, குரலை உயர்த்தாது, அமைதியை இழக்காது பேசுவதே வெற்றியை அளிக்கும். அப்போதுதான் பிறர் தவறு செய்தாலும், ஏன் அப்படி நடக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும்.
நான் ஒரு மேற்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அது முடியும் தறுவாயில், ஆசிரியை ஒருத்தி என்னிடம், “நீங்கள் soft and gentle,” என்றாள், சற்று பரிதாபப்பட்டவளாய்.
மென்மையானவர் என்றால் ஏமாந்தவர், பலகீனமானவர் என்றெல்லாம் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். புரியாதவர்களிடம் இதை விளக்கவேண்டிய அவசியமில்லை. நம் சொற்களும் செயல்களும் மென்மையாக இருந்தால், அவை நம் மன உறுதியை, பிரதிபலிக்கின்றன.
இது புரியாது, என்னிடம் மோதினார்கள் என் மாணவ மாணவிகள்.
கதை
அந்த வகுப்பில் இருந்தவர்களுக்குப் பதினாறு வயதுதான். ஆனால் தம்மைவிட மூத்தவர்களிடம் எதிர்த்துப் பேசுவது, எகத்தாளமாகப் பேசுவது என்ற குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். (இப்படிப்பட்டவர்களை, `பணிப்பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்’ என்போம். பெற்றோரின் சரியான பராமரிப்போ, அன்போ கிடைக்காது, தம்மைப்போன்ற பிறருடன் சேர்ந்துகொண்டு, தமக்கு மேலிருந்தவர்களிடம் மோதுவார்கள்).
நான் அவர்கள் போக்கைக் கண்டுகொள்ளவில்லை. பாடத்தை மட்டும் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் செய்ததுபோல் கதைகள், நகைச்சுவை எதுவும் கிடையாது.
ஒரு நாள் அந்த வகுப்பிற்குள் போனதும், எல்லாரும் பரமசாதுவாக இருந்தார்கள். சற்று அதிர்ந்தாற்போலவும் இருந்தது.
“என்ன அதிசயம்! இன்று நீங்கள்கூட ஒழுங்காக இருக்கிறீர்களே!” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை என்னால்.
எல்லோருடைய தலையும் குனிந்தது. சற்று விழித்தேன் பிறகு அவர்கள் கொட்டம் அடங்கியதன் காரணம் பிடிபட்டது.
அதற்கு முதலாண்டு நடந்த பள்ளி இறுதிப்பரீட்சையின் முடிவை காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள். பௌதிகம், நான் ஒருத்தியே நடத்திய பாடம், அதில் தலைசிறந்ததாக இருந்தது.
“ஓ! ரிசல்டைப் பார்த்தீர்களா!” என்றேன் கேலியாக.
தலைகள் இன்னும் குனிந்தன.
நான் கண்டிப்பாக இருக்கிறேன், நிறைய வேலை வாங்குகிறேன் என்று ஆத்திரப்பட்டவர்களுக்கு இப்போது புரிந்தது – அது அவர்களுடைய நன்மைக்காகத்தான் என்று.
பெண்ணியம் பேசும் பெண்கள் சண்டை பிடித்தால், ஆண்களுக்குச் சமமான உயர்நிலை அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
மனிதர்கள் மட்டுமென்ன, ஒரு நாட்டின் சட்டங்கள் மென்மையாக இருந்தால்கூட பலரும் அவைகளை மதிப்பதில்லை.
“இவ்வுலகை மாற்ற மூன்று முக்கியமான குணங்கள் உண்மை, பயமின்மை மற்றும் மென்மை”. (மகாத்மா காந்தி)
அதாவது, உண்மையை உரைக்க தைரியம் வேண்டும். (அப்போது பிறர் நம்மைப் பார்த்து அஞ்சுவார்கள்!) அந்த உண்மையை உரக்கச் சொல்லவேண்டுவது இல்லை.
பலரும் இப்படி நடக்க அஞ்சுவது ஏன், தெரியுமா?
அவர்களுடைய பெற்றோர், `உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்ளாதே!’ என்று சிறு பிராயத்திலேயே எச்சரித்திருப்பார்கள். ஒரு வேளை, தமது கசப்பான அனுபவங்களால், மாறியிருக்கக்கூடும்.
பெற்றோர் உண்மையே பேசி நடந்தால் குழந்தைகளும், தம்மையும் அறியாமல், அவர்கள் வழி செல்வார்கள்.
ஆசிரியர்களும் கண்டிப்புடன் கனிவையும் சேர்த்தால், மாணவர்கள் பயனடைவார்கள். `அந்த ஆசிரியர் இல்லாவிட்டால், நான் உருப்பட்டிருக்கவே மாட்டேன்!’ என்று எக்காலத்திலும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.
தொடருவோம்
-வீ. செல்வராணி
முன்னுரை
மனித இனத்தின் பல்வேறு கூறுகளை விளக்குவது மானிடவியலாகும். அதில் மானிடப் பண்பாட்டை விளக்குவது மானிடவியலின் ஒரு பிரிவாகும். பண்பாட்டு மானிடவியல் என்ற பிரிவில் மக்களின் குடும்பம் பற்றி அறிந்துகொள்ளும்போது அம்மக்களினுடைய சமுதாயம், கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறை, போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. இதனால் மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சியினையும் அறிந்து கொள்ளமுடிகிறது ஆகவே மானிடவியல் குறித்த குடும்ப இயல்புகளை உணர்த்தும் களமாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.
மானிடவியல் விளக்கம்
மானிடவியல் என்பது ஒரு முறையான அறிவியல் பார்வையாகும். மனிதனைப் பற்றி ஆராயும் துறையாகச் செயல்படுகிறது. சர் எட்வர்ட் பர்னட் டைலர் கி.பி 1884-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறைக்கு வந்தபோதுதான் மானிடவியல் துறையானது முறையான தோற்றத்தைப் பெற்றது. ”மானிடவியல்” என்ற சொல்லாக்கம் ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் “ANTHROPOLOG” என்னும் சொல்லுக்கு நேரானது என்பர். இச்சொல் “ANTHROPOS” “LOGOS” ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. கிரேக்கத்தில் இச்சொற்கள் முறையே “மனிதன் அறிவியல்” என்னும் பொருளுடைய “ANTHROPOLOGIST” என்ற சொல்லை முதன்முதலில் அரிஸ்டாட்டில் பயன்படுத்தினார். மனித சமுதாயத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கம், பண்பாடு, உயிரியல், போன்றவற்றை சமூக அறிவியலின் துணைகொண்டு படித்துணர்ந்து ஆய்வினை மேற்கொள்ளும் துறையே மானிடவியல் (“Anthropology”) எனக் குறிப்பிடுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.17 ) ஆகவே தனி மனிதனோ அல்லது ஒரு சமுதாயமோ எத்தகைய தன்மைகொண்டு திகழ்கிறது என்பதைக் கண்டறிய மானிடவியல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
இனத்தோற்றம்
மானிட சமுதாயம் தோன்றியதற்கான ஆராய்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருப்பினும் முதல் மானிட இனம் இலெமூரியா கண்டத்தில் தோன்றியது என்பது அறிவியிலாளர்கள் கருத்தாகும். இக் கண்டத்தை மனித நாகரிகத்தின் தொட்டில் என்றழைப்பர். தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்க்கரை வரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. களேற்றர் இப்பழங்கால பெருங்கண்டத்திற்கும் அதில் வந்த குரங்கொத்த உயிரிப் பற்றி இலெமூரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக்கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், இதுவே மிக முதன்மையானதாகும் என்று கூறுகின்றார். பாவணர். (தமிழர் வரலாறு ப.6) அக்கண்டம் தமிழ் இலக்கியங்களில் குமரிக்கண்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இளங்கோவடிகள்
“பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். இதனை ஜான் இங்கிலாந்து என்னும் மேலைநாட்டு அறிஞர் லெமூரியா எனும் குமரிக்கண்டம் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்திருந்தது என்பார். ஆகவே முதல் மானிட இனம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் முதல் மானிட இனம் தமிழ் இனம் என்றும் புலனாகிறது.
குடும்பம்
மனித சமுதாயத்தின் மிகத்தொன்மையான அமைப்பாகத் திகழ்வது குடும்பமேயாகும். இது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் பொதுவாக நிலவி வருகிறது. இன்று நூற்றுக்கணக்கான சமுதாயங்கள் காலங்காலமாகப் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு அதன் அமைப்பாலும் செயலாலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்திலும் குடும்பம் என்னும் நிறுவனமே மிகவும் இன்றியமையாத, அடிப்படை அலகாகச் செயற்படுகின்றது. அவ்வாறே மக்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற குழுக்களில் பங்குபெற்று அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்து கொண்டாலும் குடும்பம் என்னும் அமைப்பே முதலிடம் பெறுகிறது. (பன்பாட்டு மானிடவியல் ப.350) கூடிவாழ்தல் குடும்பமாகும். இவை மானிட இனத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகத் திகழ்கிறது.
குடும்பங்களின் வாழிடங்கள்
குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமேயாகும். குடும்பம், திருமணம், இரண்டும் ஒன்றெயொன்று சார்ந்தே செயல்படுகின்றன. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல இன்று நாம் வழங்கும் திருமணம், குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் புதிய சொல்லாட்சியாகும். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் இச் சொல்லாட்சி இடம் பெற்றதாக தெரியவில்லை. மாறாக, குடிமை, குடி, கூடி போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. ஆகவே குடும்பம் என்னும் சொல் பிற்காலத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும்.
குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் திருக்குறளில் தான் நேரடியாகப் பயின்று வருகிறது.
“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு” (குறள்-1029) என்ற குறளுக்கு உரைசெய்த டாக்டர் மு.வ அவர்கள், ”தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ”என்று உரை எழுதுகிறார். வள்ளுவர் பயன்படுத்திய குடும்பம் என்னும் புதிய சொல்லாட்சியைக் குடி என்றே குறிக்கிறார்.
சங்க இலக்கியத்தில் குடும்பம் என்னும் சொல்லுக்கு, “குடம்பை, குடும்பு, கடும்பு” ஆகிய சொற்கள் இடம்பெறுகின்றன. ”குடும்பை” என்ற சொல் இருபது இடங்களில் பயின்று வருகிறது என்பார் பேராசிரியர் மாதையன். மேலும் ”குடும்பு” என்னும் சொல் கூடிவாழ்தல் என்றும் பொருள்படுகின்றது என்கிறார். நற்றிணையில்,
”கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்” (நற்-119)
என்னும் பாடல் மலைஆட்டு இனத்தின் கூட்டு வாழ்வைச் சுட்டுகிறது. குடும்பு என்னும் சொல்லுடன் “அம்” விகுதி சேர்ந்து பொருண்மை விரிவாக்கமாக (SEMANTIC EXTENSION) குடும்பம் எனும் சொல் அமைந்தது. (இலக்கிய மானிடவியல் பக். 348,349)
தொல்காப்பிய நூற்பாக்களில் இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வனப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடத்தில் உள்ள வேறுபாடுகளையும், வகைகளையும் சுட்டுகின்றன. குடும்பம் என்னும் அமைப்பானது ஒர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மண வாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால்தான் அச்சமுதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்று கொள்ளப்படுவர். அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஒர் ஆணும், பெண்ணும் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடையை சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கணவன்-மனைவி உறவு அமையாதவரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பை ஏற்படுத்தவியலாது. இங்குக் குடும்பம் என்னும் அங்கீகாரம் அந்தந்தச் சமுதாயத்தின் அகவயக்கருத்தாக்கத்தின் (EMIC CONCEPT) மூலமே அளிக்கப்படும். சில பழங்குடிகளில் காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே தனிக்குடிசையில் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவர். சிலகாலம் கழித்துத்தான் திருமணம் நடைபெறும், ஆயினும் இப்பழங்குடிகள் திருமணத்திற்கு முன்னர் வாழும் நிலையிலிருந்தே குடும்பம் ஏற்பட்டு விடுகிறதென்று எண்ணுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.352) குடியிருப்பைக் குறிக்கும் நகர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. தொல்காப்பியத்தைக்காட்டிலும் சங்க இலக்கியங்களே அக்கால சமுதாயத்தின் எல்லா வகையான உயர்வு, தாழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மனைவியகம், கணவனகம், புதிய அகம் பரத்தையர் அகம் போன்ற வகையினங்கள் சங்ககாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் “தாயக முறை”(matrilocal) இருந்துள்ளது. ஆண் திருமணத்திற்குப்பின் மனைவியகத்திற்குச் சென்று பெண்ணின் இல்லத்தில் வாழ்ந்திருக்கிறான். இத்தகைய பெண்ணின் இல், ”எம்இல்” என வழங்கப்பட்டிருப்பதைப் பல சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. நற்றிணையில்
……………..மாதோ எம்இல்
பொம்மல் ஒதியைத் தன்மொழிக்கொளீஇக்
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்றதாயே ( நற்- பா-293)
என்றும், குறுந்தொகையில்
”எம் இல் அயல தோழி உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி” (குறு- பா-138)
என்றும், கலித்தொகையில்,
……………யாம் வாட ஏதிலார்
தொடியுள்ள வடுக்காட்டி ஈங்கு எம் இல்வருவதை (கலி- பா-78)
விடா அது நீ எம்இல் வந்தாய் அவ்யானை
கடாஅம் படுமிடத்து ஓம்பு (கலி- பா-97)
என்ற பாடல் வரிகள் மனை வாழ்க்கைக்குப் பின் தங்கும் பெண் இல்லத்தைச் சுட்டுகிறது. ஆனால் தற்போது பெண் இல்லத்தில் தங்குவது என்பது ஆண்மகனுக்கு இழிவாகக்கூடும் என்னும் தவறான பாதைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது.
பெரியாழ்வார் தாம் இயற்றிய திருவாய்மொழியில் பெண் திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய தாயகத்திலேயே தொடர்ந்து வாழ்ந்த முறையைப் பதிவு செய்துள்ளார்.
பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து
பேணிநம் மில்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாமிருக்க (திருவாய்மொழி 3; 7-10 )
திருமணத்திற்கு முந்தைய ஆணின் இல் ‘தம்இல்’ என வழங்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
…………அன்னை
தம்இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும் என்றோளே. ( குறு. பா-83)
மேற்கூறிய பாடலில் திருமணம் செய்யவரும் ஆணின் இல்லம் ‘தம் இல்’ எனும் தனி வழக்கில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டிள்ளது. சங்க இலக்கியத்தில் பொதியில் எனும் சொல்லையும் காணமுடிகிறது. வெளியூரிலிருந்து வரும் பாணர்கள் பொதியில் தங்கினர். என்ற குறிப்பு புறநானூற்றின் வழி அறிய முடிகிறது.
முடிவுரை
மானிடவியல் நோக்கினை சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் ஆய்வு செய்வதற்கான களங்கள் பலவற்றை கொண்டுள்ளதாகத் திகழ்கிறது. மக்களின் பண்பாடு, சமுதாயம், குடும்பம், திருமணம், உறவு முறை போன்றவற்றை ஆராயும்போது அவை முறையாகவும், நெறியாகவும் அமைந்துள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது. தற்போது திசைமாறிப் போகும் நம் பண்பாட்டைச் சீர்பெறச் செய்ய மானிடவியல் ஆய்வுகள் மிக இன்றியமையாததாகத் திகழ்கிறது என்பதினைப் புலப்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையாகும்.
ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்
*****
கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
அண்ணமாலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலை நகர்- 608 002.
-நிலவளம் கு.கதிரவன்
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டோடு தொடர்பு கொள்ளவும்,
கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தூதரை நியமித்து, ஒவ்வொரு நாட்டிலும் தூதரகத்தைத் திறந்து நிர்வகித்து வருகிறது. ஆக தூது என்பது கால மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். இதற்கெல்லாம் முன்னோடியாக நமக்கு தூது என்பதை அறிமுகப்படுத்துவது சங்க இலக்கியங்கள் ஆகும். பொதுவாக அகத்திணையில் தூது பற்றிய நிகழ்வுகள் அதிகமாக இருக்கும். அதே போன்று புறத்திணையிலும் தூதுக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.
சங்க இலக்கியங்களின் தோற்றத்திற்குப் பின்னர் கி.பி.14ஆம் நூற்றாண்டில் தூது நூல் தோன்றியது. தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல் ”நெஞ்சுவிடு தூது” என்னும் நூலாகும். ”எந்த ஓர் இலக்கியமும் திடீரென்று தோன்றிவிடாது; ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்குரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும் காணப்படும்” என்கிறார் முனைவர். தா. ஈஸ்வரபிள்ளை. நெஞ்சுவிடு தூது என்ற நூலிற்குப் பிறகு தமிழ்விடு தூது, அன்னம்விடு தூது, மேகம்விடு தூது, பழையதுவிடு தூது, மான்விடு தூது, கிள்ளைவிடு தூது போன்று நூற்றைம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தமிழ் இலக்கியத்தில் தோன்றியுள்ளன.
சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றில் தூது பற்றிய நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன. புறநானூற்றில் பிசிராந்தையார் அன்னத்தை தூது விடுவதாக அமைந்த நிகழ்வு, அநேகமாக தூது இலக்கியத்தில் முதல் பாட்டாக இருக்கும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
தூது செல்வோர் இலக்கணம்:
தூது செல்வோரும், தூதைப் பெறுவோரும் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். தூது அனுப்புவோர் உயர்திணை மாந்தராகவோ அல்லது ஓர் அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியாகக் கூறி அனுப்பலாம். சங்க இலக்கியத்தில் அரசனுக்காகப் புலவர்களும், காதலர்களுக்காகத் தோழியும், பறவைகள், மேகங்கள் எனத் தூது சென்றதற்கான காட்சிகள் பல உள்ளன. தூது செல்பவருக்கு முக்கியமான பண்புகளாக அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகியவை முக்கியக் கூறுகளாக கூறப்படுகின்றன. மேலும் தூது செல்வபவருக்குத் துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய மூன்றும் அவசியம் என்கிறார் திருவள்ளுவர்.
” தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.” (தூது: 688)
புறநானூற்றில் தூது:
சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் தூது பற்றிய பதிவுகள் உள்ளன. ஈகை, வீரம், புகழ் கொண்டிருந்த அதியமான் நெடுமான் அஞ்சி மீது தொண்டைமான் பகைகொண்டு படை திரட்டியிருந்தான். இதனையறிந்த ஔவையார் போரினை நிறுத்தும் பொருட்டு, தொண்டைமானிடம் தூதாகச் சென்று அறிவுரை சொல்லி போரினை நிறுத்துகிறார். அதேபோன்று பிசிராந்தையார் என்னும் புலவர் உறையூர் கோப்பெருஞ்சோழனுக்கு அன்னச் சேவலையே தூதாக விடுகிறார். இக்காட்சியை மிகவும் நயம்பட புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
தூதில் அன்னப் பறவைக்கு சங்கஇலக்கியங்கள் சிறப்பிடம் தந்துள்ளன. கலித்தொகை, நெடுநல்வாடை, புறநானூறு, பரிபாடல், கம்பராமாயணம், திவ்யப்பிரபந்தம், பொருநராற்றுப்படை, சீவக சிந்தாமணி போன்ற இலக்கியம் மற்றும் காப்பியங்களில் அன்னத்தைப் பற்றிய குறிப்புகளும், அவை தூது சென்றதற்கான நிகழ்வுகளும் விரிவாக கூறப்பட்டுள்ளன.
வடமொழியில் ”ஹம்ஸம்” என்றால் அன்னத்தைக் குறிக்கும். ஆண் அன்னம் அன்னச் சேவல் என குறிப்பிடப்படுகிறது. ”சேவலோங்கு உயர்கொடி யோயே” ( பரிபாடல்: 4: 40 ) ஒப்பற்ற உயரப் பறக்கும், உயர்ந்து விளங்கும் கருடச் சேவலை கொடியாக உடையவனே என பரிபாடல் திருமாலைப் போற்றுகிறது.
” மாவிசும்பு ஓழுகு புனல் வறள
அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலத்தி யோய் ” ( பரி : 3 : 25 – 26 )
கடும்புயலுடன் கூடிய மழை பொழிந்தபோது திருமால் ஒரு நெடிய அன்னச் சேவலாக வடிவெடுத்து தனது இரண்டு சிறகுகளையும் விரித்து இந்த உலகத்தை காத்ததாகவும் பரிபாடல் புகழ்கிறது.
நான்முக பிரம்மாவின் மனத்தில் தோன்றிய மகன்களான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும், யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து ஹம்ஸப் பட்சி ( அன்னப் பறவை) வடிவத்தில் உபதேசம் செய்ததாகவும், இதையே ஹம்ஸ கீதை என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.
ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகர் ”ஹம்ஸ ஸந்தேசம்” என்ற 110 ஸ்லோகங்களைக் கொண்ட காவியத்தை எழுதியுள்ளார். சீதையின் பிரிவாற்றாமையால் மிகவும் துன்பப்பட்ட ராமன், சீதையை மீட்க முடிவுவெடுத்து, அதற்கு முன்னர்த் தான் சீதைக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளையும், இலங்கைக்குச் செல்லும் வழியையும் ஓர் அன்னத்திடம் கூறி, தூதாக இலங்கைக்கு அனுப்பி, பின்னர் சீதையை மீட்டதாக ஹம்ஸ ஸந்தேசம் கூறுகிறது.
சேவல் என்பதற்கு ”அழகு பொருந்திய” என்று பொருநராற்றுப்படையும், சீவக சிந்தாமணியும் விளக்கம் அளிக்கிறது. அதே போல் ”சேவலான்” என்றால் விலங்கு, பறவை போன்றவற்றால் கேடுவிளையாமல் காப்பவன் என்றும், விளை புனங்களைக் காப்பவன் என்றும் கூறுகிறது.
அன்னம் என்பது வெண்மை நிறம் உடைய பறவை என்பது மட்டும்தான் என பலரும் அறிவர். ஆனால் ”காரன்ன முண்மையின் வெள்ளன்னம்” கருமை நிறத்திலும் அன்னம் உள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து நம்மால் அறியமுடிகிறது.
பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில், அரண்மனை முற்றத்தில் அன்ன நிற கவரிமா மற்றும் அன்னப் பறவை துள்ளி விளையாடின என்கிறது நெடுநல்வாடை.
” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை ” ( நெடு : 91 – 92 )
பாண்டியன் தனது மரபுக்கு இழுக்கு வருவதாக கருதினால் மயிர் நீப்பின் உயிர் வாழாத கவரிமா போல் உயிர் நீப்பான் என்றும், நீர் நீக்கி பால் உண்ணும் அன்னம்போல் பொய் வழக்கை அறிந்து நீக்கிவிட்டு மெய் வழக்கறிந்து முடிவு கூறுவான் என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக தனது அரண்மனை முற்றத்தில் இடம்பெறச் செய்தான் என்று கூறுகிறார் வித்துவான் வேங்கடராமச் செட்டியார்.
இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த அன்னப் பறவையை பிசிராந்தையார் என்னும் புலவர் கோப்பெருஞ்சோழனிடத்தில் தூதாக அனுப்புகிறார்.
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடு போரண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவையாயின்
இடையது சோழ நல்நாட்டுப் படினே
கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு
எம் பெருங்கோக் கிள்ளி கேட்க
இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே
மாண்ட நின் இன்புறு பேடை அணிய,
நினக்கே தன் நன்புறு நன்கலம் நல்குவன் ( புறம்: 67 )
பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை. ஆனால் இருவருக்குள்ளும் உறுதியான நட்பு. சோழனை நேரில் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்தில் அவனின் புகழ், வலிமை, கொடை, அருள் என்னும் நல்லியல்புகளைச் சொல்லி அன்னத்தை தூது விடுகிறார்.
குமரியின் துறையிலிருந்து வட இமயம் வரை பறக்கும் அன்னச் சேவலை அழைத்து, நீ இமயமலை செல்லும்போது இடைவழியில் உறையூரை ஆளும் எனது நண்பன் கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் உள்ளான். நீ சென்று அவனை சந்திக்கும்போது, நான் பிசிர் என்னும் ஊரிலிருந்து ஆந்தையாரின் அடியவன் வந்துள்ளேன் என்று கூறினால், அம்மன்னவன் மனம் மிக மகிழ்ந்து உனது பேடைக்குப் பொன்னாலான அணிகலன்களை மிகுதியாக வழங்குவான் எனக் கூறித் தமது நட்பின் நெருக்கத்தை பிசிராந்தையார் இப்பாடல் வழியே நிறுவுகிறார்.
தொகுப்புரை:
முடிவுரை:
புறத்திணையில் பெரும்பாலும் பறவைகளையே தூது செல்வதற்காக உருவகப்படுத்துவதை மேற்கண்ட இலக்கியங்கள் வழியே நம்மால் அறிய முடிகிறது. அதிலும் அன்னப் பறவைக்கு முதன்மையான இடம் இருப்பதையும் உணர முடிகிறது. காரணம் புகழ்வதைக் காரணமாகக் கொண்டே இத்தகைய தூது அமைவதாலும், அன்னம் என்பது மிக அழகான வெண்மை நிறத்தோடு அழகிய இறக்கைகளோடும், மிக நளினமான நடையழகையும் கொண்டதால் அன்னம்விடு தூது நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. உலகில் உள்ள 8650 பறவையினங்களில் 1200 இந்தியாவில் காணலாம். ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது அது மனிதனுக்கு தொடர்பில்லாத ஜீவராசியாகவோ பார்க்கத் தொடங்கிவிட்டான் என்பது வருத்தத்திற்குரியதாகும். என்றாலும் இலக்கியங்களோடு தொடர்புகொண்ட பறவைகள் மற்றும் ஜீவராசிகளைப் படித்து ரசிப்பதோடு இல்லாமல் நம்மோடு வாழும் பறவையினங்களை போற்றிப் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
துணை நின்ற நூல்கள்:
1.புறநானூறு மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம், சென்னை – 14.
2.பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும் உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம், சென்னை – 14.
3.ஹம்ஸ ஸந்தேசம் – உரை – ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகர்.
4.ஸ்ரீமத் பாகவதம் – அகிலஉலக கிருஷ்ண பக்தி இயக்கம், சென்னை.
5.சங்கத் தமிழ் ( நெடுநல்வாடை ) – முனைவர் ருக்மணி ராமச்சந்திரன்.
6.பொருளறம் – புலவர்.கோ.அருளாளன்., – திருவள்ளுவர் பதிப்பகம், நல்லாண்பிள்ளைபெற்றாள்.
தன்வந்திரி பீடத்தில்
தச மஹாவித்யா யாகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தச மஹாவித்யா ஜபம் மற்றும் ஹோமம் நடைபெற்றது.
தசமகா வித்யா தேவியர்கள்:
பெண்மையின் சக்தியை தாய்மை முதல் சம்ஹாரம் வரை உணர்த்துபவர்கள் இந்த தேவியர்கள். இவர்களே ஸ்ரீசாக்த மார்க்கத்தின் ஆதிதேவியர்கள் ஆவார்கள். மேலும் மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களின் போது இந்த தேவியர்கள் ஒவ்வொருவரும்தான் ஆதார சக்தியாக இருந்தார்கள் என்று ‘முண்டமாலா தந்திரம்’ என்ற நூல் கூறுகிறது. காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா, ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள்தான் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர்.
பக்தர்கள் இத்தேவியர்களை வழிபட்டு பலனடைய வேண்டி ஒவ்வொரு தேவியருக்கும் தனித்தனியாக பீடம் அமைத்து கலச ஸ்தாபனம் செய்து மேற்கண்ட 10 தேவியர்களுக்கும் 16 வேத விற்பனர்கள் பங்கேற்று 1000 முறை ஜபம் செய்து ஹோமங்கள் நடைபெற்றது. இதில் தச மஹா தேவியர்களுக்குரிய புஷ்பங்கள், பஷங்கள், நிவேதனங்கள், திரவியங்கள் சேர்க்கப்பட்டு மஹாமேரு மற்றும் காயத்ரி தேவிக்கு 10 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவாவர்ண பூஜையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு மஹா பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்ட்து. இதில் வாலாஜாபேட்டை லாவண்யா மருத்துவ மனை நிர்வாகி டாக்டர் தொப்பகவுண்டர், திரு. கோபிநாத் தொப்பகவுண்டர் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து இராகு காலத்தை முன்னிட்டு, இராகு கேது ப்ரீதி ஹோமமும், சர்பசாந்தி ஹோமமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++++
தயவு செய்து எழுப்பாதே என்னை,
நாளைப் பொழுது இரவு வரை !
தாமதம் செய்யேன் நானினி !
இன்றிரவு கழிந்து நாளை
என்றாகும் போது,
விடைபெற்றுக் கொண்டு நான்
வெளியேறுவேன் !
போய் வர்ரேன் ! போய் வர்ரேன்
கண்மணி !
உதட்டில் காத்திருக்கும் பாடல்கள்
உணர்ச்சி ஊட்டு மெனக்கு !
ஒளிந்திருக்கும் அவை உள்ளத்தில் !
கையில் கொண்டு வரும் பூங்கொத்தை
கதவருகில் வைத்துச் செல் !
காத்திருக்கும் ஒருத்திக்கு அதனை
விட்டு வைப்பேன் !
வெகு தூரத்தில் தனித்துப் போன
என் காதலி பாடிக் கொண்டு
என்னை அழைக்கிறாள்
தன்னிடத்துக்கு !
தனித்துப் போன காதலி
பாடி என்னை அழைக்கும் போது,
ஓடிச் செல்ல வேண்டும் நான் !
போய் வர்ரேன் ! போய் வர்ரேன்
கண்மணி !
++++++++++++++++++++
++++++++++++++++++
சூரிய குடும்பக் கட்டுப்பாட்டில்
சுழல் கோள்கள் தன்னைச்
சுற்றும் விந்தை யென்ன ?
சூரியக் கோள் பூமி மட்டும்
நீர்க் கோளாய் மாறிய மர்மம் என்ன ?
நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
மீள் சுற்றும் நியதி என்ன ?
பூமியில் மட்டும்
புல்லும், புழுவும், புறாவும்
ஆறறிவு மானிடமும்
மீண்டும் மீண்டும் பிறப்ப தென்ன ?
அகக்கோள்கள் பாறையாய், புறக்கோள்கள்
வாயுப் பந்தாய் பரிதியைச் சுற்றி
வருவ தென்ன ?
யுரேனஸ் கோள் அச்சும்
பேரளவு சாய்ந்து போன தென்ன ?
காரணம் கோள் மோதலா ?
வக்கிரமாய்ச் சுழன்று
சுக்கிரன் மட்டும்
திக்குமாறிப்
போன தென்ன ?
தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
முன்னழகைக் காட்டிப்
பின்னழகை
மறைப்ப தென்ன ?
++++++++++++++
பூர்வீகத்தில் புறக்கோள் யுரேனஸை பூதக்கோள் ஒன்று தாக்கிச் சுற்றச்சைப் பேரளவு சாய்த்துவிட்டது.
4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு பூமியைப் போன்று இருமடங்கு பளுவுள்ள பூர்வ அண்டம் ஒன்று மோதி யுரேனஸ் சுற்றச்சு சாய்ந்ததால் துருவப் பகுதிகளில் பெருங்குளிர்ச்சி [ -216 C ( -357 F)] ஏற்படுகிறது என்று புதியதோர் ஆய்வு அறிக்கை 2018 ஜூலை 4 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதை வெளியிட்ட ஆய்வுக் குழுவினர் இங்கிலாந்தின் டுரம் பல்கலைக் கழகத்தின் வானியல் நிபுணர். யுரேனஸ் சுற்றச்சின் பேரளவு சாய்ந்திருப்பதால் அக்கோள் வளர்ச்சி பெரிதளவு பாதிக்கப் பட்டு விட்டது.
வானியல் குழுவினர் தமது புதிய நுணுக்க கணினியில் போலி நிகழ்வுகளை நிறுவிப் பல்வேறு பளு அண்டங்களை மோத விட்டுப் புறக்கோள் யுரேனஸ் எவ்விதம் விருத்தியாகி வந்துள்ளது என்று ஆய்வு செய்துள்ளார். புறக்கோள் யுரேனஸின் அச்சு, மற்ற கோள்கள் போலின்றி, ஏறக்குறைய 90 டிகிரி சாய்ந்து, மட்டமாகி ஆய்வாளி டாக்டர் ஜேகப் கெகரிஸ் கூறுகிறார். 50 மேற்பட்ட பளுமோதல் காட்சிகளை கற்பனை செய்து, பேராற்றல் படைத்த கணினி மூலம் போலி இயக்கங்களை உருவாக்கிச் சோதனை கள் நடத்தினோம் என்று ஜேகப் தொடர்கிறார். யுரேனஸ் கோள் அச்சு சரிந்து பருவநிலை பேரளவு பாதிக்கப்பட்டாலும், அதன் சூழ்வெளி அமைப்பு [Atmosphere] சிதைவாகவில்லை.
+++++++++++++
எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை. அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல. தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றிய தாக முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும். அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.
பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !
ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency) [ஏப்ரல் 15, 2008]

பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு
பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids] என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது. முரண் கோள்கள் சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு; அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது, ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos] ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.
முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள் [Beads like Chondrules] எறிகற்களில் காணப்பட்டன. அவை இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது. இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.
முடிவுகள் இவைதான் :
1. முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள். அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.
2. உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே. சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா. அவையும் கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?
வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது ! பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !
பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன. அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?
விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை. 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்: அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது ! 1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார். ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.
இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது. அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள். அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது. முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது. வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது. மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது. அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?
வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது. மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது. நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ? பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது ! அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது. அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !
பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது. அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது. தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.
பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது. அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின. தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின. துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.
பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின. வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன. புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின. வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின. ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது. செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !
அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ? அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ? அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான். கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான். இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !
ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் ! அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது. இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.
[தொடரும்]
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?
16 http://www.thinnai.com/?
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/
19. http://www.spacedaily.com/
20. http://www.spacedaily.com/
21. https://solarsystem.nasa.
22. https://space-facts.com/
23. https://theplanets.org/
24. https://en.wikipedia.org/
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 8, 2018 [R-1]
பவள சங்கரி
தலையங்கம்
பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைப்பதாக இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர் கல்வி ஆணையமானது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மேம்படுத்துதல் ஆலோசனை வழங்குவது மட்டும் அளிக்கும். நிதியுதவி அளிக்கும் அதிகாரம் எம்.எச்.ஆர்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுவிடும் என்ற கருத்து நிலவி வந்தது. தற்போது நிதியளித்தல் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இயங்கி வந்த பல்கலைக்கழக மானியக் குழுவே ஓரளவிற்குச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிற நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக உயர் கல்வி ஆணையத்தின் தேவை என்ன. சிறு குறைகள் ஏதும் இருந்தால் அதை மட்டும் நிவர்த்தி செய்வதை விட்டு அந்த அமைப்பையே மாற்றி அதிகாரமற்ற அமைப்பாக மாற்றுவது எவ்வாறு சரியான முடிவாக இருக்கும். சில முக்கியமானத் திட்டங்கள் செயலாக்கம் செய்தால் மட்டும் நிதியளிக்கப்படும் என்ற கட்டுப்பாடு இருக்கும் வகையில், தேர்தல் ஆணையம் போன்று அரசியல் குறுக்கீடு அற்ற பல்கலைக்கழக மானியக் குழுவே சிறப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கருத்துகளைப் பிரதிபலிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் கருத்துகளை ஏற்பவர்களுக்கும் மட்டுமே நிதி சென்றடையும் என்பதே நிதர்சனம்.
அன்புள்ள வாசகர்களே,
தூசி, மாமண்டூர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் காஞ்சிபுரம் அருகே உள்ளது. தூசி என்றால் குதிரை படை நிறுத்துமிடம் என்பது பொருள். இவ்வூரில் உள்ள மலை அடிவாரத்தில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மன் கால குடைவரைக் கோயிலும் அவன் பெயரிலேயே அமைக்கப்பட்ட சித்ரமேகத் தடாகம் என்ற மிகப்பெரிய ஏரியும் அமைந்திருக்கின்றன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டு மிகவும் பெரியது.
இம்மலைமேல் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கையான குகைத்தலமும் அதில் தமிழ்ப் பிராமி கல்வெட்டும் உள்ளன. இது சங்ககாலத்த்தை சேர்ந்தது. இதையெல்லாம் கண்டு களிக்கவும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொள்ளவும் வரலாற்றுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழி காட்டிகள்:
முனைவர்.ஆ.பத்மாவதி
முனைவர்.மாக்சிய காந்தி
கல்வெட்டு ஆய்வாளர்கள்.
Call 9789-00-9666 or 044-431-00-442 for booking and more details
நாள் : JULY 22,2018
தொடக்கம் : காலை 6:30 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
திரும்புதல் : இரவு 8:00 மணி – பனுவல் புத்தக விற்பனை நிலையம்
பயணக் கட்டணம் : ரூ1000/-
காலை உணவு , மதியம் உணவு, தேனீர், நினைவு பரிசு வழங்கப்படும்.
முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.
Contact Address:
Panuval Bookstore
112, Thiruvalluvar Salai,
Thiruvanmiyur. Chennai – 41.
Ph: 044-431-00-442 | 9789009666
மனித சமுதாயம் மாட்சிமை பெற்று விளங்க இலக்கியங்கள் பல தோன்றி நன்னெறி காட்டின. ஒருவனுக்கு ஏற்படுகின்ற தீமையும் நன்மையும் பிறரால் ஏற்படுவது கிடையாது என்னும் கருத்து, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ முதலிய கூற்றுகளின் வழி உணர்த்தப்பட்டன. தனிமனிதனின் சுய ஒழுக்கமே அவனுடைய சமூகத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் நிலைக்களனாக அமைகிறது. பேரின்பத்தைத் தேடாமல், சிற்றின்பத்தில் மகிழ்ந்தும், மூழ்கித் திளைத்தும் தங்களைத் தாமே அழித்துக் கொள்ளும் நிலைக்குப் பலர் சென்றனர். இந்நிலையில் தமிழ்மொழியில் இறவாத புகழுடைய பெருநூல்கள் பல தோன்றி தீய வழியில் செல்வோரை விலக்கி நல்வழிகாட்டப் பயன்பட்டன.
தனிப்பட்ட ஒருவனின் செயல்பாடென்று உலகில் எதுவும் இல்லை. ‘ஒருவரறிந்தது உலகறிந்தது’ என்பர். அதைப்போன்றே ஒருவர் செய்தது உலகம் செய்ததாக அமைந்து விட வாய்ப்புண்டு. நல்லொழுக்கம் இன்றி அறிவை மழுங்கச் செய்து, தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் துயரத்தில் வீழ்த்தும் சக்தி மதுவிற்கு உண்டு. மதியை மழுங்கச் செய்யும் மதுவினால் ஏற்படும் தீங்குகளை இலக்கியங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.
நுண்மான் நுழைபுலம் கொண்ட சான்றோர் பெருமக்கள் அவ்வப்போது தோன்றி மதுவிற்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டனர். சிலருக்குச் சான்றோர் கருத்துகள் தேன் வந்து பாய்ந்தது போலவும் பலருக்குத் தேள் கொட்டியது போலவும் அமைந்தன. உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கள் எனும் மதுவினால் ஏற்படும் தீங்கினை வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
‘துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்’
(குறள்-926)
உறங்குபவர் உயிருடையரவராக இருப்பினும் அறிவும் மனவுணர்வும் அந்நிலையில் இல்லாமையால் இறந்தவராகக் கருதப்படுவர். அதுபோல், கள்ளுண்பவர் இறவாமல் இருப்பினும் அறிவையும் உடல்நலத்தையும் இழந்து கொண்டே இருப்பதால், நாள்தோறும் நஞ்சு உண்பவராகக் கருதப்படுவர். இக்குறளின் வழி உயிரை அணு அணுவாகக் கொல்லும் நஞ்சாக மது விளங்குவது புலனாகிறது.
சிலப்பதிகாரக்காப்பியத்தில் கோப்பெருந்தேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்ற பொய்ச்செய்தி பாண்டிய மன்னன் காதில் விழ, ஆராய்ந்தறியாத மன்னன் திருடியவனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க என உத்தரவிட்டான். சூழ்ச்சி மிகுந்த பொற்கொல்லன், காவலர்களைக் கோவலன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது காவலர்கள்,நல்லவனுக்குரிய இலக்கணமுறைமையோடு இவன் காணப்படுகிறான். இவன் கள்வன் அல்லன் என்றனர். கொலை செய்வதில் குறிக்கோள் கொண்டிருந்த கொல்லன் கள்வர் திறன் பற்றிப் பலவாறு கதை கூறினான். இச்சூழலில் கள்ளுண்ட காவலன், தன் வாளால் கோவலன் உடலில் நடுவே வெட்டினான் என்பதை,
‘ கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்! விலங்கு ஊடு அறுத்து’
– (சிலப்பதிகாரம்-கொலைக்களக்காதை)
என்ற வரிகள் உணர்த்தியுள்ளன. கள்ளுண்பவன் சிந்தை தெளிவற்றது. சூழ்ச்சிக்கு மதிமயங்கிய கள்ளுண்டவன், கோவலனைக் கொன்றானென்பதை அறிய முடிகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் ஆதிரை என்ற கற்பரசி வாழ்ந்தாள். அவள் கணவன் சாதுவன் என்பவன் மது முதலிய தீயசெய்கைகளால் பொன்னையும் பொருளையும் இழந்தான். பின்னர் நல்லறிவு பெற்று வணிகம் செய்யக் கருதி கடல் வழிப் பயணம் மேற்கொண்டான். நடுக்கடலில் கப்பல் செல்லும்போது சுழற்காற்றால் கப்பல் சிதைந்தது. சிதைந்ததில் கிடைத்த மரமொன்றை வைத்து ஒரு தீவில் கரையேறினான். அத்தீவானது நரமாமிசம் உண்ணும் நாகர்கள் வாழ்கின்ற பகுதி. சாதுவனைக் கண்ட நாகர்கள் தங்கள் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். நாகர் மொழியை அறிந்திருந்த சாதுவன் தலைவரிடம் தனக்கேற்பட்ட துன்பத்தை எடுத்துரைத்தான். மனமிரங்கிய தலைவன் சோர்வுற்ற இவனுக்கு வெம்மையான கள்ளும் மாமிசமும் வேண்டிய மட்டும் கொடுங்கள் எனச் சேவகர்களிடம் கூறினான். இதைக் கேட்ட சாதுவன் திடுக்கிட்டு, கொடுமையான சொற்களைக் கேட்டேன். இவை வேண்டேன் என்கிறான்.
தலைவன், மகிழ்ச்சியைத் தரும் கள் முதலானவற்றை வேண்டாம் எனக் கூறியதற்கான காரணத்தைக் கேட்க சாதுவன் பின்வருமாறு பதிலளித்தான்.
‘ மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்’
– (மணிமேகலை- ஆதிரை பிச்சையிட்ட காதை)
தலைவனே! அறிவு ஒன்றே மானிடப் பிறவியில் நாம் பெற்ற செல்வங்களுள் முதன்மையானது. அவ்வறிவொன்றே விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவ்வறிவால் நன்மை தீமைகளைப் பகுத்து உணர்கிறோம். அறிவே நம்மை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். மதுவானது அறிவை மயக்கி கீழ்நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லுமென்று உணர்த்தினான்.
திருவாங்கூரில் மதுவிலக்குத் தெடங்கியபோது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கவிமணியால் பாடல் பாடப்பட்டது.
‘ வள்ளலெங்கள் காந்திமகான் வாக்குப் பலித்ததடா!
துள்ளுமுன் பேயாட்டம் தொலைந்ததடா!- கள்ளரக்கா!
வஞ்சிவள நாட்டிலுன் வாழ்வற்றுப் போச்சுதடா!
நெஞ்சிலுணர்ந் தோடடா! நீ.
– (மலரும் மாலையும்- மதுவிலக்குப் பாடல்கள்)
மனிதனின் சிந்தனையை அழிக்கும் கள்ளினை, ‘கள்ளரக்கன்’ எனப் பாடியுள்ள நிலை கள்ளினால் ஏற்பட்ட தீமையைப் பறை சாற்றுகிறது.
‘மதுவை ஒழிப்போம் , மதியைப் பெறுவோம்’
– முனைவர் கி.இராம்கணேஷ்
-மேகலா இராமமூர்த்தி
நல்லவற்றைக் கைக்கொண்டும் அல்லவற்றைக் கடிந்தொழுகியும் வாழ்வதற்குக் கேடில் விழுச்செல்வமாம் கல்வி ஒருவர்க்கு அவசியம்.
முகப்பூச்சும் நகப்பூச்சும் அழகு என்று மகளிரும், பணமும் பகட்டும் அழகென்று ஆடவரும் மருள்வது பொருளற்றது. உண்மையில் கல்வியினாற் கிட்டும் அக அழகே ஒருவர்க்கு உண்மையான அழகாகும்.
இதனை விளக்கும் நாலடியார் பாடலொன்று…
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. (நாலடி – 131)
மயிர்முடியின் அழகும், வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சட் பூச்சின் அழகும், மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நாம் நல்லவராக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகும் உண்மை அழகுமாம் எனும் நாலடியார் வாக்கு பொருள்பொதிந்த ஒன்றேயல்லவா!
”இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு” என்று ஏலாதியும்.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று என்று வள்ளுவமும் சொல்லுவதை ஈண்டுப் பொருத்திப் பார்க்கலாம்.
கரைகாணவியலாக் கல்வியொடு ஒப்பிட்டால் மாந்தரின் வாணாள் அளவில் குறுகியதே; அதிலும் பிணிகள் பலவாயிருக்கின்றன. ஆதலால், நீரை நீக்கிப் பாலைப் பருகும் குருகுபோல் நல்லறிஞர்களும் தக்க நூல்களை ஆராய்ந்தறிந்து கற்பர் என்கிறது நாலடியார்.
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. (நாலடி – 135)
”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக என்று” குறளாசான் வலியுறுத்துவதும் இக்கருத்தையே.
கல்விகற்று அறிஞராகும் வாய்ப்பு எல்லார்க்கும் வாழ்வில் கைகூடும் என்று சொல்லுதற்கில்லை. வறுமை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஒருவரால் கல்விச்சாலைக்குச் சென்று கற்கமுடியாமலும், நல்ல நூல்களைப் படித்தறிய முடியாமலும் போகக்கூடும். அத்தகையோர் நன்கு கற்றறிந்த அறிஞர்களோடு கேண்மைகொண்டு மேன்மையுற வேண்டும் என்று நமக்கு நல்வழி காட்டுகின்றது நாலடி.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (நாலடி – 139)
இயற்கை மணமும் விளக்கமான நிறமும் அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்கு அந்த மணத்தைத் தான் தருவதுபோல, தாம் கல்லாதவரேயானாலும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்.
”கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை” என்று குறளும் இதனையே ஓங்கி ஒலிக்கின்றது.
நற்பண்புகளும் ஒழுக்கமும் ஒருவனுக்கு வாய்க்கவேண்டுமானால் அவன் நல்ல குடிப்பிறப்பைக் கொண்டவனாயிருக்க வேண்டும். நற்குடிப்பிறப்பு என்பது இங்கே வருணப் பாகுபாட்டின் அடிப்படையிலான மேலோர் கீழோரைக் குறிப்பதன்று. மாறாக, எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எம் மதத்தைச் சார்ந்திருந்தாலும் நல்லொழுக்கமும் சால்பும் நிறையும் கொண்டோர் உயர்குடிப் பிறந்தோரே ஆவர் என்றறிக.
பசித்துன்பம் வந்தபோதும் அரிமா புல்லைக் கறிக்காது; அதுபோல் தாம் உடுத்தியிருக்கும் உடை பொலிவிழந்தாலும், உடல் மெலிவடைந்தாலும் நற்குடிப்பிறந்தார் தமக்குரிய ஒழுகலாற்றில் குறைவுபடார் என்பது நாலடியார் நவிலும் உண்மை.
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று. (நாலடி – 141)
”பசி பெரிதாயினும் புல்மேயா தாகும் புலி” எனும் பழமொழி நானூற்றுப் பாடலை இங்கே நாம் நினைவுகூரலாம்.
கொள்கை உறுதிகொண்ட நற்குடிப்பிறந்தோர் தமக்கு இன்மை வந்த காலத்தும் தம்மாலியன்ற நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதை ஒழியார்.
வளமான பெரிய வீடு வளங்குறைந்த காலத்தில் கட்டுக்குலைந்து, கறையானால் கவ்வப்பட்டபோதினும், அதில் மழை ஒழுக்கில்லாத பகுதி என்று ஒன்றிருக்கும். அஃதொப்ப, வறுமையினால் மிக்க துன்பத்திற் சிக்கி அலைப்புண்ட காலத்தும், உயர்குடியிற் பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரிய நற்செயல்களை விடாது செய்துகொண்டேயிருப்பர் என்று நவில்கின்றது நாலடியார்.
செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை. (நாலடி – 147)
”வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிப்
பண்பில் தலைப்பிரிதல் இன்று” என்று வள்ளுவம் விதந்தோதுவதும் இதனையே அன்றோ?
மனிதர்களின் பல்வேறு பண்புகளில் ஒன்று அச்சம். அஃது நல்லதா? கெட்டதா? என்று வினவுதிராயின், தீவினையச்சம் நல்லது; நல்லது செய்யவும் அஞ்சுவோமாயின் அஃது தீயது எனலாம்.
நற்குடிப்பிறந்தார் எதற்கெல்லாம் அஞ்சுவர் என்று ஒரு பட்டியலைத் தருகின்றது நாலடி.
கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் – எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார். (நாலடி – 145)
கல்லாததை நினைத்து அச்சம், கயவர் தொழில் செய்ய அச்சம், சொல்லத் தகாதவற்றைச் சொல்லிவிடக் கூடாதே எனும் அச்சம், இரப்பவர்க்கு ஈய இயலாது போய்விடுமோ எனும் அச்சம் இவ்வாறு பல்வேறு அச்சங்களால் சூழப்பட்டிருத்தலால் உயர்குடிப் பிறந்தோர் நடுக்கடலிற் செல்லும் மரக்கலத்தை ஒப்பர் என்கிறது நாலடியார்.
ஆம்! நல்லவராயும் உயர்ந்த கொள்கை உடையவராயும் வாழ்தல் என்பது அஞ்சத்தக்க அரிதான செயலே. அதில் சிறு தவறு நேர்ந்திடினும் அவர்க்குக் கிடைக்கும் பழியோ பெரிது. மொத்தத்தில் சாமானியரைவிடச் சான்றோரின் வாழ்வு சவால்கள் நிறைந்தது என்றே கூறவேண்டும்.
[தொடரும்]
*****
துணைநூல்கள்:
1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
3. ஏலாதி – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை