நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 8
-மேகலா இராமமூர்த்தி
நல்லவற்றைக் கைக்கொண்டும் அல்லவற்றைக் கடிந்தொழுகியும் வாழ்வதற்குக் கேடில் விழுச்செல்வமாம் கல்வி ஒருவர்க்கு அவசியம்.
முகப்பூச்சும் நகப்பூச்சும் அழகு என்று மகளிரும், பணமும் பகட்டும் அழகென்று ஆடவரும் மருள்வது பொருளற்றது. உண்மையில் கல்வியினாற் கிட்டும் அக அழகே ஒருவர்க்கு உண்மையான அழகாகும்.
இதனை விளக்கும் நாலடியார் பாடலொன்று…
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு. (நாலடி – 131)
மயிர்முடியின் அழகும், வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும், மஞ்சட் பூச்சின் அழகும், மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நாம் நல்லவராக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகும் உண்மை அழகுமாம் எனும் நாலடியார் வாக்கு பொருள்பொதிந்த ஒன்றேயல்லவா!
”இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடைவனப்பு நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு” என்று ஏலாதியும்.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று என்று வள்ளுவமும் சொல்லுவதை ஈண்டுப் பொருத்திப் பார்க்கலாம்.
கரைகாணவியலாக் கல்வியொடு ஒப்பிட்டால் மாந்தரின் வாணாள் அளவில் குறுகியதே; அதிலும் பிணிகள் பலவாயிருக்கின்றன. ஆதலால், நீரை நீக்கிப் பாலைப் பருகும் குருகுபோல் நல்லறிஞர்களும் தக்க நூல்களை ஆராய்ந்தறிந்து கற்பர் என்கிறது நாலடியார்.
கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து. (நாலடி – 135)
”கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக என்று” குறளாசான் வலியுறுத்துவதும் இக்கருத்தையே.
கல்விகற்று அறிஞராகும் வாய்ப்பு எல்லார்க்கும் வாழ்வில் கைகூடும் என்று சொல்லுதற்கில்லை. வறுமை காரணமாகவோ, வேறு காரணங்களாலோ ஒருவரால் கல்விச்சாலைக்குச் சென்று கற்கமுடியாமலும், நல்ல நூல்களைப் படித்தறிய முடியாமலும் போகக்கூடும். அத்தகையோர் நன்கு கற்றறிந்த அறிஞர்களோடு கேண்மைகொண்டு மேன்மையுற வேண்டும் என்று நமக்கு நல்வழி காட்டுகின்றது நாலடி.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு. (நாலடி – 139)
இயற்கை மணமும் விளக்கமான நிறமும் அமைந்த பாதிரிமலரைச் சேர்தலால் புதிய மட்பாண்டம் தன்கண் உள்ள தண்ணீர்க்கு அந்த மணத்தைத் தான் தருவதுபோல, தாம் கல்லாதவரேயானாலும் கற்றாரைச் சேர்ந்து பழகினால் பண்பட்ட மெய்யறிவு வரவர உண்டாகப்பெறுவர்.
”கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை” என்று குறளும் இதனையே ஓங்கி ஒலிக்கின்றது.
நற்பண்புகளும் ஒழுக்கமும் ஒருவனுக்கு வாய்க்கவேண்டுமானால் அவன் நல்ல குடிப்பிறப்பைக் கொண்டவனாயிருக்க வேண்டும். நற்குடிப்பிறப்பு என்பது இங்கே வருணப் பாகுபாட்டின் அடிப்படையிலான மேலோர் கீழோரைக் குறிப்பதன்று. மாறாக, எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எம் மதத்தைச் சார்ந்திருந்தாலும் நல்லொழுக்கமும் சால்பும் நிறையும் கொண்டோர் உயர்குடிப் பிறந்தோரே ஆவர் என்றறிக.
பசித்துன்பம் வந்தபோதும் அரிமா புல்லைக் கறிக்காது; அதுபோல் தாம் உடுத்தியிருக்கும் உடை பொலிவிழந்தாலும், உடல் மெலிவடைந்தாலும் நற்குடிப்பிறந்தார் தமக்குரிய ஒழுகலாற்றில் குறைவுபடார் என்பது நாலடியார் நவிலும் உண்மை.
உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணுங்
குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
கொடிப்புற் கறிக்குமோ மற்று. (நாலடி – 141)
”பசி பெரிதாயினும் புல்மேயா தாகும் புலி” எனும் பழமொழி நானூற்றுப் பாடலை இங்கே நாம் நினைவுகூரலாம்.
கொள்கை உறுதிகொண்ட நற்குடிப்பிறந்தோர் தமக்கு இன்மை வந்த காலத்தும் தம்மாலியன்ற நன்மைகளைப் பிறர்க்குச் செய்வதை ஒழியார்.
வளமான பெரிய வீடு வளங்குறைந்த காலத்தில் கட்டுக்குலைந்து, கறையானால் கவ்வப்பட்டபோதினும், அதில் மழை ஒழுக்கில்லாத பகுதி என்று ஒன்றிருக்கும். அஃதொப்ப, வறுமையினால் மிக்க துன்பத்திற் சிக்கி அலைப்புண்ட காலத்தும், உயர்குடியிற் பிறந்த நல்லோர் தாம் செய்தற்குரிய நற்செயல்களை விடாது செய்துகொண்டேயிருப்பர் என்று நவில்கின்றது நாலடியார்.
செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்
எவ்வ முழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை. (நாலடி – 147)
”வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிப்
பண்பில் தலைப்பிரிதல் இன்று” என்று வள்ளுவம் விதந்தோதுவதும் இதனையே அன்றோ?
மனிதர்களின் பல்வேறு பண்புகளில் ஒன்று அச்சம். அஃது நல்லதா? கெட்டதா? என்று வினவுதிராயின், தீவினையச்சம் நல்லது; நல்லது செய்யவும் அஞ்சுவோமாயின் அஃது தீயது எனலாம்.
நற்குடிப்பிறந்தார் எதற்கெல்லாம் அஞ்சுவர் என்று ஒரு பட்டியலைத் தருகின்றது நாலடி.
கல்லாமை அச்சம், கயவர் தொழிலச்சம்
சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம் – எல்லாம்
இரப்பார்க்கொன் றீயாமை அச்சம் மரத்தாரிம்
மாணாக் குடிப்பிறந் தார். (நாலடி – 145)
கல்லாததை நினைத்து அச்சம், கயவர் தொழில் செய்ய அச்சம், சொல்லத் தகாதவற்றைச் சொல்லிவிடக் கூடாதே எனும் அச்சம், இரப்பவர்க்கு ஈய இயலாது போய்விடுமோ எனும் அச்சம் இவ்வாறு பல்வேறு அச்சங்களால் சூழப்பட்டிருத்தலால் உயர்குடிப் பிறந்தோர் நடுக்கடலிற் செல்லும் மரக்கலத்தை ஒப்பர் என்கிறது நாலடியார்.
ஆம்! நல்லவராயும் உயர்ந்த கொள்கை உடையவராயும் வாழ்தல் என்பது அஞ்சத்தக்க அரிதான செயலே. அதில் சிறு தவறு நேர்ந்திடினும் அவர்க்குக் கிடைக்கும் பழியோ பெரிது. மொத்தத்தில் சாமானியரைவிடச் சான்றோரின் வாழ்வு சவால்கள் நிறைந்தது என்றே கூறவேண்டும்.
[தொடரும்]
*****
துணைநூல்கள்:
1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
3. ஏலாதி – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை