நிர்மலா ராகவன்

மென்மை பலகீனமா?

அந்த வகுப்பில் ஆசிரியரின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது.

“இவன் கவனிக்காது, தப்பு தப்பாகப் பண்ணுகிறான். அடிக்கலாமா?” என்று அவர் வகுப்பை விளையாட்டாகக் கேட்க, “அடியுங்கள், மாஸ்டர்!” என்று எல்லாக் குரல்களும் ஒருங்கே ஒலித்தன. தன் கையால் மாணவனது பிட்டத்தில் பயிற்சியாளர் ஓங்கித் தட்டுவதுதான் தண்டனை.

டேக் வான் டோ என்ற கொரியா நாட்டுத் தற்காப்புக்கலை போதிக்கும் அந்த இடத்தில் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இருந்தார்கள்.

நாளை அவர்களுக்கும் அடி விழலாம். இருந்தாலும், சகமாணவன் ஒருவன் தண்டனை பெறுவதைப் பார்க்கும்போது ஒருவித உற்சாகம்! `நாம் தப்ப வேண்டும்,’ என்ற முனைப்பும் எழும். இந்த மனப்போக்கைதானே பயிற்சியாளரும் எதிர்பார்த்தார்!

இப்படிப் பல வருடங்கள் பயின்ற மாணவ மாணவிகளை நான் சந்தித்தபோது, அவர்கள் பிற உயிர்களிடம் மிக அன்பாக இருப்பதையும், சக மனிதர்களிடம் மரியாதையாகப் பழகுவதையும் கவனித்தேன். பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்கிறார்கள்.

“உங்களால் எந்தச் சூழ்நிலையிலும் எப்படி இவ்வளவு அமைதியாக, மென்மையாக இருக்க முடிகிறது?” என்று அப்படிப்பட்ட ஓர் இளைஞனிடம் கேட்டேன்.

“தற்காப்புக்கலை பயின்றால் ஒருவித அமைதி ஏற்பட்டுவிடுகிறது. தியானம் செய்ததுபோல் இருக்கும்,” என்ற பதில் வந்தது.

இன்னொருவர் கூறினார்: “குருவைப் பொறுத்துத்தான் எங்கள் குணமும் அமைகிறது. எங்களைப் பயில்வித்தவர் நாங்கள் என்ன செய்தாலும் அமைதியை இழக்காதவர். ஆனால், கண்டிப்பானவர். எங்கள் ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று போதித்திருந்தார்”.

இவர்கள் அதிர்ந்து பேசுவதும் கிடையாது. அளந்துதான் பேசுவார்கள். மொத்தத்தில், அடி, உதை, குத்து என்று வன்முறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மென்மையானவர்களாக இருந்தார்கள். மென்மையில்தான் வலிமையும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டிருப்பவர்கள் இவர்கள்.

பொதுவாகவே, ஆண்கள் வீரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வதென்றால், உரக்கப் பேசுவது, எதற்கும் ஆத்திரப்படுவது என்று என்ற எண்ணம்தான் எவருக்கும். அதை நம்பி, இவர்களிடம் மோதும் ஆண்கள் விரைவில் பயந்து விலகிவிடுவார்கள்.

உன்னிடமே மென்மை காட்டு

மனிதர்களிடமோ, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடமோ கருணையும் மென்மையும் காட்டுமுன் நம்மிடமே அப்படி நடந்துகொள்ளவேண்டாமா?

ஒரு சிறு தவறு செய்துவிட்டாலும், நம்மேலேயே ஆத்திரமோ, எரிச்சலோ வந்தால், மென்மை எங்கிருந்து வரும்? `நம்மால் இயன்றது இவ்வளவுதான்!’ என்று குறைகளுடன் நம்மை ஏற்றால் அமைதி கிடைக்க, முன்னேறுவது எளிது.

வன்முறை கண்டிப்பின் அடையாளமா?

நம் அதிகாரத்தின்கீழ் இருக்கும் ஒருவர் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய கண்டிப்பு அவசியம்தான். அத்துடன், மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளும் அவசியம்.

பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் `கண்டிப்பு’ என்று எண்ணி, சுடுசொற்களாலும், வன்முறையைப் பிரயோகித்தும் சிறுவர்களை முன்னுக்குக் கொண்டுவர முயல்வார்கள். ஏனெனில், வன்முறை எளிது. ஆனால், சிறிய தவற்றுக்கும் பொருத்தமில்லாது, மிகக் கடுமையாகத் தண்டிப்பது எதிர்மறையான விளைவைத்தான் உண்டாக்கும்.

மைக்கல் ஜாக்சனின் தந்தை அப்படி நடந்துகொண்டதில், சிறு வயதில் அவரைப் பார்த்தவுடனேயே அப்பிரபல பாடகருக்கு வாந்தி வந்துவிடுமாம். தந்தையைக் கண்டாலே பிடிக்காமல் போயிற்று. பெரும் செல்வந்தராக இருந்தும், தன் உயிலில் அப்பாவின் பெயரைச் சேர்க்கவில்லை! அவ்வளவு வெறுப்பு!

மென்மை பெண்களுக்குத்தானா?

மென்மையாக இருப்பது `மெல்லியலாள்’ என்று வர்ணிக்கப்படும் பெண்களின் குணமென்று ஆகிவிட்டது. உண்மையில், ஆணோ, பெண்ணோ, குரலை உயர்த்தாது, அமைதியை இழக்காது பேசுவதே வெற்றியை அளிக்கும். அப்போதுதான் பிறர் தவறு செய்தாலும், ஏன் அப்படி நடக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும்.

நான் ஒரு மேற்பயிற்சிக்குச் சென்றிருந்தேன். அது முடியும் தறுவாயில், ஆசிரியை ஒருத்தி என்னிடம், “நீங்கள் soft and gentle,” என்றாள், சற்று பரிதாபப்பட்டவளாய்.

மென்மையானவர் என்றால் ஏமாந்தவர், பலகீனமானவர் என்றெல்லாம் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். புரியாதவர்களிடம் இதை விளக்கவேண்டிய அவசியமில்லை. நம் சொற்களும் செயல்களும் மென்மையாக இருந்தால், அவை நம் மன உறுதியை, பிரதிபலிக்கின்றன.

இது புரியாது, என்னிடம் மோதினார்கள் என் மாணவ மாணவிகள்.

கதை

அந்த வகுப்பில் இருந்தவர்களுக்குப் பதினாறு வயதுதான். ஆனால் தம்மைவிட மூத்தவர்களிடம் எதிர்த்துப் பேசுவது, எகத்தாளமாகப் பேசுவது என்ற குணம் கொண்டவர்களாக இருந்தார்கள். (இப்படிப்பட்டவர்களை, `பணிப்பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்’ என்போம். பெற்றோரின் சரியான பராமரிப்போ, அன்போ கிடைக்காது, தம்மைப்போன்ற பிறருடன் சேர்ந்துகொண்டு, தமக்கு மேலிருந்தவர்களிடம் மோதுவார்கள்).

நான் அவர்கள் போக்கைக் கண்டுகொள்ளவில்லை. பாடத்தை மட்டும் நடத்தினேன். மற்ற வகுப்புகளில் செய்ததுபோல் கதைகள், நகைச்சுவை எதுவும் கிடையாது.

ஒரு நாள் அந்த வகுப்பிற்குள் போனதும், எல்லாரும் பரமசாதுவாக இருந்தார்கள். சற்று அதிர்ந்தாற்போலவும் இருந்தது.

“என்ன அதிசயம்! இன்று நீங்கள்கூட ஒழுங்காக இருக்கிறீர்களே!” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை என்னால்.

எல்லோருடைய தலையும் குனிந்தது. சற்று விழித்தேன் பிறகு அவர்கள் கொட்டம் அடங்கியதன் காரணம் பிடிபட்டது.

அதற்கு முதலாண்டு நடந்த பள்ளி இறுதிப்பரீட்சையின் முடிவை காட்சிப்பொருளாக வைத்திருந்தார்கள். பௌதிகம், நான் ஒருத்தியே நடத்திய பாடம், அதில் தலைசிறந்ததாக இருந்தது.

“ஓ! ரிசல்டைப் பார்த்தீர்களா!” என்றேன் கேலியாக.

தலைகள் இன்னும் குனிந்தன.

நான் கண்டிப்பாக இருக்கிறேன், நிறைய வேலை வாங்குகிறேன் என்று ஆத்திரப்பட்டவர்களுக்கு இப்போது புரிந்தது – அது அவர்களுடைய நன்மைக்காகத்தான் என்று.

பெண்ணியம் பேசும் பெண்கள் சண்டை பிடித்தால், ஆண்களுக்குச் சமமான உயர்நிலை அடைந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

மனிதர்கள் மட்டுமென்ன, ஒரு நாட்டின் சட்டங்கள் மென்மையாக இருந்தால்கூட பலரும் அவைகளை மதிப்பதில்லை.

“இவ்வுலகை மாற்ற மூன்று முக்கியமான குணங்கள் உண்மை, பயமின்மை மற்றும் மென்மை”. (மகாத்மா காந்தி)

அதாவது, உண்மையை உரைக்க தைரியம் வேண்டும். (அப்போது பிறர் நம்மைப் பார்த்து அஞ்சுவார்கள்!) அந்த உண்மையை உரக்கச் சொல்லவேண்டுவது இல்லை.

பலரும் இப்படி நடக்க அஞ்சுவது ஏன், தெரியுமா?

அவர்களுடைய பெற்றோர், `உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்ளாதே!’ என்று சிறு பிராயத்திலேயே எச்சரித்திருப்பார்கள். ஒரு வேளை, தமது கசப்பான அனுபவங்களால், மாறியிருக்கக்கூடும்.

பெற்றோர் உண்மையே பேசி நடந்தால் குழந்தைகளும், தம்மையும் அறியாமல், அவர்கள் வழி செல்வார்கள்.

ஆசிரியர்களும் கண்டிப்புடன் கனிவையும் சேர்த்தால், மாணவர்கள் பயனடைவார்கள். `அந்த ஆசிரியர் இல்லாவிட்டால், நான் உருப்பட்டிருக்கவே மாட்டேன்!’ என்று எக்காலத்திலும் நன்றியுடன் நினைவுகூர்வார்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *