Featuredhome-litஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி (169)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

கீதா மதிவாணன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Print Friendly, PDF & Email
Share

Comments (5)

 1. Avatar

  இன்றைய வாழ்வின் இதம் மறந்து
  நாளைய வாழ்வின் தேடல் மறந்து
  உறக்கம் தவிர்த்து ஊண் மறந்து
  உறவு தவிர்த்து உலகம் மறந்து
  விழிவிலகாது கைக்கருவி பதித்து
  விரல்களால் திரைநகர்த்தி ரசித்து
  இரவும் பகலும் இடையறாது திரிந்து
  இணைய உலாக்களில் இன்புற்றலைந்து
  புனைந்த பெயர்களில் கதைகளில் மகிழ்ந்து
  பூச்சுகளில் மெய்வண்ணம் மறைத்து
  இங்கொரு முகம் அங்கொரு முகம் காட்டி
  இச்சைப்பேச்சுகளில் இதயம் பறிகொடுத்து
  நச்சுநாவின் தீண்டலுக்கு இரையாகி
  நலமழித்து குணமழித்து பொழுதழித்து
  முகமும் சேர்த்தழிக்கும் தலைமுறை முடக்கம்.

 2. Avatar

  ஏந்திழையே ! எதனை ஏந்தியபடி அமர்ந்திருக்கிறாய்?
  ஆயிழையே ! ஆராய்ச்சி செய்வது எதனை?
  முழுச் சுதந்திரம் கொண்டவளோ,முக்காடிட்டவளோ?
  அத்துனை பேர் கையிலும் ஆன்ட்ராய்ட்.
  ஆன்ட்ராய்டோ,ஆப்பிளோ, கையும்,கண்ணும்
  கணினியில், உள்ளங்கையில் உலகு அடக்கினையோ?
  ஓய்வுப்பொழுது,ஆய்வுப் பொழுதாய் ஆனதோ??
  வண்ண உடைக்குள் வசீகரம் மறைத்த
  வனிதையே,வானளந்தனையோ,கடல் தாண்டிச்
  சென்ற கணவனுக்கு கடிதம் எழுதினையோ?
  அன்புள்ள தேவதையே,அகிலம் எட்டிப் பார்
  வண்ணத்தால் வசீகரித்தாய்,எண்ணத்தாலும்
  ஏற்றம் பெற்றிடு,கணக்கு செய்தனையோ?
  கணக்காய்ச் செய்தனையோ?அன்பு
  பொழிந்தனையோ?ஆன்ட்ராய்டில்
  மொழிந்தனையோ?மாடப்புறாவே,
  மயக்கும் பேரெழிலே,மஞ்சள் வண்ணத்
  தாரகையே, மண்ணுலகிற்கு இறங்கி வா
  பொன்னுலகில் பூத்துக் கிடந்தது போதும்
  என்னுலகு சேர்,ஏற்றமாய் வாழ்வோம் வா

 3. Avatar

  புலனத்தால் பயனில்லை
  ===================

  அலங்காரம் செய்து கொண்டு
  ……….ஆருக்கும் தெரியா வண்ணம்
  புலனத்துள் முகத்தைப் புதைத்து
  ……….பொழுதுகளை இழந்த பெண்ணே.!
  சலனமேதும் இல்லா மலேயே
  ……….சத்தமின்றிச் செய்வ தென்ன
  பலனேதும் இல்லாப் புலனம்
  ……….படுகுழியில் தள்ளும் உன்னை.!

  உலகத்தில் எல்லா இடமும்
  ……….ஒரிடத்தை விடாது சுற்றி
  கலகத்தைச் செய்து குழப்பம்
  ……….கண்டபடி உண்டு செய்யும்.!
  இலகுவாக இதிலே இருந்து
  ……….இட்டபடி விலக முடியா
  உலகறிவு பெறவும் இதிலே
  ……….ஒன்றுக்கும் உபயோ கமிலை.!

  இடித்துரைத்தும் கேட்கா வயது
  ……….இந்தநிலை தவிர்க்க வேண்டும்.!
  துடிக்கின்ற இளம் பருவம்
  ……….துள்ளாமல் இருக்க வேண்டும்.!
  படிக்கின்ற வயதில் திருட்டுப்
  ……….புத்திகூட வேணாம் பெண்ணே.!
  படிக்காத பொழுதில் காதல்
  ……….பக்கத்தில் நெருங்க விடாதே.!

  ============================

  அறுசீர் விருத்தம்:: காய்=மா=மா

  பொருள்:: புலனம்=வாட்ஸ் அப்

 4. Avatar

  மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான வளர்ச்சியும்.. மெய்மறக்கும் உலகமும்..
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  ஒற்றைச்சொடுக்கில் கற்றைத் தகவல்கள் நம் கண்முன் கொணர்ந்திடுமே…
  சுற்றும் முற்றும் பார்க்காத பயனாளி இதனுள் ஐக்கியமே…

  திரட்டுகள் அனைத்தையும் புரட்டிப் பார்க்க உதவிடும் ஓர் கருவி…
  அறிவை வளர்க்கும் விருப்பத் தேர்வுகள் கொண்டது இக்கருவி…

  தம்படம் எடுத்து தம்பட்டம் அடிக்க வாய்ப்புகள் கொடுத்திடுமே…
  கம்பி வடமின்றி நம்மை இணைக்கும் மாபெரும் தொழில்நுட்பமே…

  தடங்காட்டி அமைப்பு நாட்காட்டி வசதி அனைத்தும் உள்ளடக்கம்…
  தொடுதிரை வடிவில் தொடர்புகள் அனைத்தும் இதனுள் அடக்கம்…

  வெள்ளோட்டம் மூலம் வசதிகள் அனைத்தையும் கற்றுத் தந்திடுமே…
  வேண்டிய செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாமே…

  இணையத்தின் வழியே உலகைப் பிணைக்கும் வல்லமை இதற்குண்டு…
  தனதெனக் கொண்ட தக்கதோருலகை அவரவர்க்குத் தந்திடும் ஆற்றலுண்டு…

  பல்லூடகச் செய்திகள் படசெய்திகள் அனைத்தையும் புலனத்தில் பகிரலாமே…
  எல்லை கடந்த வானத்தளவு தகவல்கள் அனைத்தும் சேமித்து வைக்கலாமே…

  இயங்கலை சற்றே முடங்கிப் போனால் உலகு நின்றது போலாகிடுமே…
  இளைஞரின் மனதெல்லாம் முடக்கலையாகி துன்பத்தில் ஆழ்ந்திடுமே…

  படித்தவர் பாமரர் இளையோர் முதியோர் அனைவரும் மயங்கிடுவர்…
  நடுத்தர ஏழை செல்வந்த ரனைவரும் இதை உயர்வாய்க் கருதிடுவர்…

  மூன்றாம் நான்காம் தலைமுறை கடந்து மிடுக்காய் வளர்ந்ததுவே..
  மிடுக்கலைப்பேசியில் கட்டுண்ட உலகம் அதில் மூழ்கிப் போனதுவே…!

  பொருள் :-
  ************
  மிடுக்கலைப்பேசி (மிடுக்கு அலைப்பேசி) – smartphone
  திரட்டுகள் – collections
  விருப்பத் தேர்வுகள் – options
  தம்படம் – selfie
  கம்பி வடம் – cable
  தடங்காட்டி – G P S
  தேடுபொறி – search engine
  தொடுதிரை – touch screen
  தொடர்புகள் – links
  இணையம் – internet
  செயலி – application software
  நிறுவு – install
  வெள்ளோட்டம் – demo
  ஒற்றைச் சொடுக்கு – single touch
  இயங்கலை – online
  முடக்கலை – offline
  மூன்றாம் தலைமுறை – 3G
  நான்காம் தலைமுறை – 4G
  பல்லூடகச் செய்திகள் – multimedia messages
  படசெய்திகள் – picture messages
  புலனம் – WhatsApp
  பகிர்வு – share

 5. Avatar

  எனக்கான தருணங்கள்
  ———————————–

  கரம் பிடித்த நிமிடம் முதல்
  உயிரே உன் துணைவி யாக;
  கரு வினிலே சுமக்கா விடினும்
  உன் அன்னையை என் தாயாக;
  கல்வி கேள்வி நல்கா விடினும்
  உன் தந்தையை என் தகப்பனாக;
  ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
  உன் சகோதரியை என் தங்கையாக;
  மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
  தமையன் தமைக்கை மற்றும் மருகன்
  என் றுன்னுற வினரனை வரையும்
  யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
  உன் இல்லத்தில் உன் இடத்தை
  நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!

  என்ன வனே யென்னை யீன்ற
  அன்னை தந்தை இரு வருடன்;
  தன் னலம் சிறிதும் இன்றி
  எம் நன்மை பேணும் தோழியுடன்;
  கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
  அண்ணன் தம்பி அனைவருடன்;
  ஆசை யுடன் சில நொடிகள்
  உரை யாடக் கூடு மென்னில்….

  நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
  அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
  உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
  நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க