இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (277)
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிகள், சில நிகழ்வுகள், சில மகிழ்வானவை வேறு சிலவோ மனதை வருத்துபவை. ஆனால் எதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காலச்சுழற்சியின் இயக்கத்தைத் தடுக்கக்கூடிய வல்லமை யாருக்குத்தான் உண்டு. பலகாலம் பழகிய சிலரின் இழப்பு உள்ளத்தின் ஓரத்தில் உரசத்தான் செய்கிறது. “ கூக்குரல் போட்டு அழுவதனாலே மாண்டவர் மீண்டும் வருவாரா?” என்பது கவியரசரின் யதார்த்தமான வரிகள். “ போனால் போகட்டும் போடா” என்று மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு இருப்பதைத் தவிர செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.
சரி இனி இந்த மடலுக்கு வருவோம். இங்கிலாந்தின் நிலப்பரப்பிலும் இத்தகைய பல நிகழ்வுகள் பல முனைகளில் நிகழ்ந்திருக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் முன்னாள் மேற்குலக நாடுகளுக்காக உளவு செய்ததிற்காக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு பின்னர் உளவாளிகளின் பரிமாற்றத்தின் போது இங்கிலாந்திடம் கையளிக்கப்பட்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ரஷ்யப் பிரஜை ஒருவரைச் சந்திக்க அவரது மகள் வந்திருந்த போது, அவர்களிருவரும் மிகப்பயங்கரமான இரசாயன நச்சுப் பொருளினால் தாக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக வெளிவந்ததை அனைவரும் அறிந்திருக்கலாம். அதைத்தொடர்ந்து அந்த இரசாயனப் பொருளின் ஆரம்பம் ரஷ்யா என்று இங்கிலாந்தினால் குற்றம் சாட்டப்பட்டு இவ்விருநாடுகளுக்கிடையேயும் இருந்த உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டதையும் அனைவரும் அறிந்திருக்கலாம். அந்த நச்சுப் பொருளினால் தாக்கப்பட்ட இருவரும் இங்கிலாந்து மருத்துவர்களினால் மிகத்தீவிரமான சிகிச்சைகளுக்குள்ளாக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதும் பழைய செய்தியே. அதன் பக்க விளைவே இப்போதைய பெரிய செய்தியாகி விட்டிருக்கிறது. ஆமாம் அந்த நச்சுப் பதார்த்தத்தின் மிச்சம் மீதி எதேச்சையாக எதுவித அரசியலோ, அன்றி வேறு துறைகளிலோ சம்பந்தப்படாத ஒரு ஜோடியின் கைகளில் எவ்வாறோ தட்டுப்பட்டு அவர்களிருவரும் மிகவும் மோசமான உடல்நிலையில் வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பாதிக்கப்பட்ட பெண் இரு தினங்களுக்கு முன்னால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளதோடு அப்பகுதியில் வாழும் ஏனைய பொதுமக்களை சிறிது அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
அடுத்து இங்கிலாந்து அரசியல் களத்தில் உதைபந்தாக அடிபட்டுக் கொண்டிருக்கும் “ப்ரெக்ஸிட்” இன் அடுத்தகட்ட நகர்வு இங்கிலாந்து அரசுக்கும், பிரதமருக்கும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது. கால அட்டவணையின் படி 2019ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேற வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் அவ்வெளியேற்றத்தின் பின்னால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அத்தகைய உடன்பாடு அத்திகதிக்கு முன்னர் ஏற்படுத்தப்படாவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் வலுவடைவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் தம்மை ஜரோப்பிய ஒன்றியத்துக்குச் சொந்தமான ஒரு நாட்டிற்கு இடம் பெயர்த்து விடும் அபாயமுள்ளது. இத்தகைய இடப்பெயர்வினால் பலர் தமது பணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம். இத்தகைய ஒரு ஸ்திரமற்ற சூழலினால் இங்கிலாந்தில் பணமுதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்குகின்றன. இது இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறது. இதனைச் சரிசெய்வதற்காக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் எத்தகையதோர் வர்த்தக உடன்பாட்டை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது என்பதனை இங்கிலாந்து அரசு முன்வைத்தால் மட்டுமே அதனை ஏற்பதா இல்லையா எனும் நிலையை ஜரோப்பிய ஒன்றியம் எடுக்க முடியும் என்பது ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நிலைப்பாடு. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு தீர்க்கமான நிலையை எடுக்க முடியாது அதனுள் அமைச்சரவையில் இருந்த கருத்து வேறுபாடு தடையாக இருந்தது. அமைச்சர்கள் தமக்கேற்றவாறு பிரதமரின் நிலைப்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இதனைச் சரிசெய்வதற்காக பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அமைச்சர்களையும் அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்து அவர்களது கையடக்கத் தொலைபேசி, மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு செய்தி அனுப்பக்கூடிய சாதனங்கள் ஒன்றும் இல்லாமல் அமைச்சரவைக்கூட்டத்தை ஒரு அடைக்கப்பட்ட கூட்டமாக நிகழ்த்தினார் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டிற்கு அனைவரும் வரவேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்து தான் முன்மொழியும் நிலைப்பாட்டை விமர்சித்து அதில் சில மாற்றங்களைச் செய்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகலாம் எனும் முடிவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சில முனகல்களுடன் அனைவரும் ஒரு நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர். ஆனால் அதைப்பற்றிய விமர்சனங்கள் அமைச்சர்களிடமிருந்து இனி வரக்கூடது அப்படி வந்தால் அவ்வமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இன்றைய செய்திகளின் படி இந்த “ப்ரெக்ஸிட்” பேச்சுக்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியைத் தனது துணை அமைச்சருடன் இராஜினாமாச் செய்துள்ளார். இனிவரும் நாட்களில் விளைவுகளை நாம் ஒவ்வொன்றாக நோக்க வேண்டும்.
சரி இனி இங்கிலாந்தின் சாதனைகளில் ஒன்றைப் பார்ப்போமா ?
28 வருடங்களின் பின்னால் இங்கிலாந்தின் உதைபந்தாட்ட அணி உலகக் கோப்பைக்கான பந்தயத்தில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த இங்கிலாந்து அணி பல எதிர்பார்ப்புகளுடன் இப்போட்டிக்குள் நுழையவில்லை. மிகவும் இளவயதினரைக் கொண்ட இவ்வணி அனைவரையும் திகைப்பிலாழ்த்தும் வண்ணம் சாதனையை நிலைநாட்டியுள்ளது. இங்கிலாந்தின் பல பொருளாதாரச் சிக்கல்களுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்த மக்களுக்கு கொஞ்சம் மகிழ்வைக் கொடுக்கக்கூடிய வகையில் உதைபந்தாட்ட அணி ஒரு மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இதுவே இங்கிலாந்து இக்கிண்ணத்தைத் தட்டிச் செல்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பு என்று சிலரால் கூறப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது 1966ம் ஆண்டு. கடைசியாக இங்கிலாந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது 1990ம் ஆண்டு. சுமார் 28 வருடங்களின் பின்னால் மக்களின் மனதில் மகிழ்ச்சி நம்பிக்கை விதையைத் தூவியிருக்கிறார்கள் உதைப்பந்தாட்ட வீரர்கள். அவர்களது ஆட்டம் மக்கள் மனதின் கனவினை நிறைவேற்றுமா என்பது வரும் புதனன்று மாலையே தெரிய வரும் அதுவரை காத்திருப்போமே !
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan