ஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில் . . . .
நாகேஸ்வரி அண்ணாமலை
சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம். போப்பின் செய்தியை எத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள். இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம்.
மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் சொல்லும் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நடப்பது சாலச் சிறந்தது என்று எனக்கும் தோன்றியதால் அந்த நிகழ்ச்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். நெறியாளரையும் தலைமை வகித்தவரையும் விடுத்து என்னைச் சேர்த்து ஐந்து கருத்துரையாளர்கள் பங்குகொண்டோம். ஐந்து பேரில் ஒருவர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர், சமூக செயற்பாட்டாளர்; இன்னொருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்; இன்னொருவர் புத்த மத ஆய்வாள மாணவர், இந்து மதத்தைச் சேர்ந்தவர்; மற்ற இரண்டு பேரில் நான் ஒருத்தி; இன்னொருவர் சுவாமி சதா சிவானந்தா, அமைப்பாளர், தமிழ்நாடு துறவியர் பேரவை. நிகழ்ச்சியின் தலைப்பு ‘மதநல்லிணக்கம்: தடைகளும் விடைகளும்’. ஒவ்வொருவரும் மத நல்லிணக்கத்திற்காக அவரவர் மத நோக்கிலிருந்து கருத்துக் கூற வேண்டும்.
என் அருகில் உட்கார்ந்திருந்த சுவாமி சிவானந்தா நான் கையில் வைத்திருந்த போப் பிரான்சிஸ் புத்தகத்தைப் பார்த்ததும் அவராக நான் கிறிஸ்தவள் என்று அனுமானித்துக்கொண்டார். ‘இங்கு இரண்டு கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்’ என்று என்னிடம் கூறினார். நான் உடனே அவரிடம் ‘நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதினாலும் நான் கிறிஸ்தவள் அல்ல’ என்றேன். அதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. அந்தக் கருத்தரங்கில் கிறிஸ்தவ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் இந்து மதத்திற்குத் தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் முனகிக்கொண்டிருந்தார். எல்லோருக்கும் பத்து நிமிடங்கள்தான் உரையாற்றுவதற்குக் கொடுக்கப்பட்டது. தனக்கும் ஏன் பத்து நிமிடங்கள்தான் கொடுக்கப்பட்டன என்பதை அவர் புரிந்துகொள்ளவேயில்லை. அவரைப் பொறுத்தவரை முக்கியமான மதமான இந்து மதத்திற்கு இன்னும் அதிக நேரம் கொடுத்திருக்க வேண்டும். விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எந்த மதம் பெரிது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல, எப்படி மதங்களிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரலாம் என்பதே.
எல்லாக் கருத்துரையாளர்களும் தங்கள் உரையை முடித்துக்கொண்ட பிறகு இடைவேளை விட்டார்கள். அதற்குப் பிறகு கேள்வி பதில் நேரம். யார் கேட்ட கேள்விகளுக்கும் அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை. வந்திருந்த மாணவர்களில் சிலர் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டார்கள். ஒன்றுக்கும் அவர் நேரடியாகப் பதில் சொல்லவில்லை. இந்தியச் சமூகம் மிகவும் சிறந்து விளங்கியதாகவும் அந்நியர்கள் வந்துதான் அதைச் சீர்குலைத்துவிட்டதாகவும் கூறினார். என்னால் அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. காலம் காலமாக நம் சமூகத்தில் இருக்கும் ஜாதியத்தைக் கொண்டுவந்தவர்கள் அவர்களா, உடன்கட்டை ஏறுவது போன்ற கொடிய செயல்கள் அவர்கள் வந்தபின்தான் ஏற்பட்டனவா போன்ற கேள்விகளை முன்வைத்தபோது அவர் நேரிடையாக எந்தவித பதிலும் சொல்லவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொழிலைச் செய்துவந்தார்கள், அதனால் பிரிவுகளுக்கிடையே எந்தவிதச் சச்சரவும் இல்லாமல் இருந்தது என்றார். பிறர் கழிவுகளைச் சுத்தம் செய்வதைச் சிலர் மட்டும்தான் செய்துவந்தார்கள்; அதேபோல் பிறர் அழுக்குத் துணிகளைத் துவைப்பதை ஒரு பிரிவுதான் செய்ய வேண்டும் என்ற அமைப்பு இந்துச் சமூகத்தில் எப்போது ஏற்பட்டது என்பதற்குச் சரியாக அவர் பதில் சொல்லவில்லை..
நான் போப்பைப் பற்றிப் புத்தகம் எழுதியது அவர் ஒரு கத்தோலிக்க மதத்தலைவர் என்பதற்காக அல்ல, அவர் ஒரு மனித நேயர் என்பதற்காகத்தான் என்பதை அவரால் புரிந்துகொள்ள வே முடியவில்லை. என் உரையில் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் போட்டுக்கொண்ட சண்டைகளால் இந்து மதத்தையே நான் வெறுக்க ஆரம்பித்தேன் என்றும் கோவிலுக்குப் போவதையே தவிர்த்துவிட்டேன் என்றும் கூறியிருந்தேன். அதனால் கடைசியில் சுவாமி உங்களுக்கு இந்து மதத்தின்மேல் இவ்வளவு கோபம் இருக்கிறதே என்றார். இந்து மதத்தை மட்டுமல்ல, எல்லா மதங்களையும் நான் வெறுக்கிறேன் என்று கூறினேன். அதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மேலும் போப் பிரான்சிஸைப் பற்றி நான் எழுதியது அவர் ஒருகிறிஸ்தவ மதத்தலைவர் என்பதற்காக அல்ல, மதத்திற்கு அப்பாலும் அவருடைய சிந்தனைகள் செல்கின்றன என்பதற்காகத்தான்; உலக அமைதி பற்றியும் சுற்றுப்புறச் சூழ்நிலை பாழ்பட்டுவருவதை எப்படித் தடுத்து நிறுத்தலாம் என்பது பற்றியும் உலகில் வறுமையையும் சமத்துவமின்மையையும் ஒழிப்பது பற்றியும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதலைகளை எப்படி நெறிப்படுத்தலாம் என்பது பற்றியும் சதாசர்வ காலமும் சிந்தித்து வருகிறார். இவருடைய இந்த மனித நேய குணங்களால் கவரப்பட்டதால் மட்டுமே அவரைப் பற்றி எழுதினேன் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ள விரும்பவும் இல்லை.