’’பூர்ண சரணாகதி பாஞ்சாலி ஏற்றனள்
கார்ணமின்றி(எதிர்பார்ப்பு காரணமின்றி) கைகூப்ப கண்ணனாம் -நார்ணர்(நாரணர்)
துஷ்டன்(துஸ்சாதனன்) கரம்நோக தங்கைமா னம்காத்தார்:
விஷ்ணுவந்த வேலை வசு(பசு)’’….கிரேசி மோகன்….!
’’பூர்ண சரணாகதி பாஞ்சாலி ஏற்றனள்
கார்ணமின்றி(எதிர்பார்ப்பு காரணமின்றி) கைகூப்ப கண்ணனாம் -நார்ணர்(நாரணர்)
துஷ்டன்(துஸ்சாதனன்) கரம்நோக தங்கைமா னம்காத்தார்:
விஷ்ணுவந்த வேலை வசு(பசு)’’….கிரேசி மோகன்….!
”ஆயிரம் கைகள் அகட்டி அணைக்கின்றாள்,
மாயிருள் கண்ணனை, மாற்றாந்தாய் -ஆயினும்
காகம்தன் குஞ்சுபொன் குஞ்சென்ற ஆய்ச்சியால்
தேகம்அக் ரூரர் தொலைப்பு(தேகான்ம பாவம் தொலைப்பு)’’….கிரேசி மோகன்….!
க.பாலசுப்பிரமணியன்
நானும் நித்தம் பசியின்றி இருக்க
நாடியவர் நித்தம் பசியின்றி இருக்க
நாளும் தருவாய் நிறைவாய் இறைவா !
நானிலத்தில் வேண்டேன் உனையன்றி நிரந்தரமே !
காமம் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை
கடவுள் இருக்கும் இடத்தில் காமம் இல்லை
கடவுளும் காமமும் என்றும் இணைவதில்லை
கதிரவனும் மதியும் என்றும் சேர்வதுண்டோ ?
வரிசையில் அரிசியைச் சுமந்திடும் எறும்பு
வழியினில் சுமையினை மாற்றிட முடியுமோ?
சிற்றின்பத்தைச் சுமக்கின்ற ஓ! மனிதா !
பேரின்பத்தை வாழ்வில் அடைந்திட முடியுமோ ?
ஒளியின் அழகினில் மயங்கிடும் விட்டில்
உறவினைத் தேடி உயிரையும் இழந்திடும்
அழகுடன் உறவிடத் துடித்திடும் உள்ளம்
அமைதியை இழந்து அழிவினை நாடிடும் !
குட்டையில் சேற்றினில் மலர்ந்திடும் தாமரை
குலவிடும் நிலவினைக் கண்டதும் சிரிக்குமே
குறைவில்லா அன்பு கிடைத்திடும் பொழுதினில்
குலவிடும் நெஞ்சங்கள் குறைந்திடும் தூரமே !
ஆயிரம் நல்லவை அன்புடன் செய்தாலும்
ஆணவ நெருப்பினால் அனைத்தும் அழிந்திடும்
ஆணவம் தந்த அக்கினி அளவில்லாக் கோபமே
அன்புடைச் செயல்களை அழித்திடும் அவலமே !
எழுவது என்றும் வீழ்வது நியதி
மலர்வது என்றும் வாடுதல் உறுதி
அமைவது அனைத்தும் உடைவதும் நியதி
ஆரம்பம் அனைத்துக்கும் உள்ளது இறுதி.
சற்குணா பாக்கியராஜ்
தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை” என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காப்பதற்காக கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.
சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள், முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவை” என்று P. L. சாமி, எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
இந்த இரண்டு சங்கப் பாடல்களிலும் கணந்துளின் நீண்ட கால்களை “நெடுங் காற் கணந்துள்”, என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர். பறவையியலில் ஆள்காட்டியின் கால்கள் நீண்டவையென்று விளக்கப்பட்டுள்ளது.
மேலும் “கணந்துள் பறவை எதுவென்று அறியச் செய்யுளிலேயே “அகச்சான்று” (internal evidence) உள்ளதென்று கீழ்கண்டவாறு எடுத்துக்காட்டியுள்ளார்.
“ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,
ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்க்கும்”
குருந்தொகை 350: 4-6, ஆலந்தூர் கிழார்
விளக்கம்: “வழியின் அருகே செல்லும் வழிப்போக்கர்களுடைய கூட்டத்தை, அழகிய சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய கணந்துள் பறவை, அங்கே செல்லுபவரின் வருகையை அறிவித்து, அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும்”
இந்தப் பாடலில், கணந்துள்ளின், ஆள் அறிவித்துக் காட்டும் குரலை,
“ஆள் அறிவுறீஇ” என்று சங்கப் புலவர் குறிப்பிடுகிறார். “ஆள் இருப்பதை அறிவுறுத்துவதால்” கணந்துள் பறவை ஆள்காட்டிப் பறவைதான் என்பதற்கு, இது செய்யுளிலிலேயே உள்ள “அகச்சான்று” என்று, P. L. சாமி விவரிக்கிறார்.
“பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்”
நற்றிணை 212: 1-3, குடவாயிற் கீரத்தனார்
விளக்கம்: “பறவைகளைப் பிடிக்கக் கருதிப், பார்வைப்புள்ளை(decoy) வைத்து, அமைத்த வலையைக் கண்டதும் நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை அச்சம் கொண்டு, தெளிவான குரலில் புலம்பும் குரல் காட்டின் வழியாகச் செல்லும் இசைக்கருவி முழங்குபவர் தம் வருத்தம் நீங்க இசைக்கும் யாழின் இசை போன்று ஒலிக்கும்”.
இந்தப் பறவையின் குரலை, நற்றிணை 212-இல், புலவர், “புலம்பு கொள்” என்கிறார். பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது, “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில்,
“twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்தகுரலில் “twit-twit-twit-twit”, என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali. p.139-140).
உலகத்தில், இருபத்திநான்கு வகை லேப்விங் பறவைகள் உள்ளன. தமிழகத்தில் மூன்று வகையான லேப்விங் பறவைகள் காணப்படுகின்றன. இவை: சிவப்பு மூக்கு ஆள்காட்டி அல்லது செம்மீசை ஆள்காட்டி(Red Wattled Lapwing-Vanellus indicus), மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள்மீசை ஆள்காட்டி ( Yellow Wattle Lapwing)- Vanellus malabaricus. சாம்பல் தலை ஆள்காட்டி (Grey Headed Lapwing -Vanellus cinerea)
சிவப்பு மூக்கு ஆள்காட்டியும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டியும் தமிழகத்தில் எப்போதும் காணப்படும் பறவைகள். சாம்பல் தலை ஆள்காட்டி, குளிர் காலத்தில், தமிழகத்திற்கு வலசை வரும் பறவைகளில் ஒன்று. மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் வருகிறது { Wetland birds of Tamil Nadu. P. 91-92, Grubh, R. 2012).
ஆள்காட்டிப் பறவைகள், ப்ளோவர் (Plover) குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தப் பறவைகளுக்குக் கால்கள் நீண்டதாய், பொய்க்கால்கள்(stilt) வைத்து நடப்பதுபோல் காணப்படும். இவை நீர்க் கரையோரம் காணப்படும் பறவைகள் என்று கருதப்பட்டாலும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, நீர் வறண்ட பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது. சிவப்பு மூக்கு ஆள்காட்டியை நீர்க்கரையோரங்களில் காணலாம். சிறு புழுப்பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இந்தப் பறவைகள், தனித்தோ, இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன. இவை வலசை போவதில்லை.
தோற்றம்:
ஆண், பெண் ஆள்காட்டிப் பறவைகள், தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியின் தலை, கழுத்து, மார்பகம் கருமையாகவும், முதுகு, சிறகுகள் செம்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் பகுதியிலிருந்து மூக்குவரை சிவப்பு நிற சவ்வு வளர்ச்சி தோன்றி, மீசை போல் தோற்றமளிக்கிறது.
சிவப்பு மூக்கு ஆள்காட்டி
மஞ்சள் மூக்கு ஆள்காட்டியின் கண்ணிற்கும் மூக்கிற்கும் இடைப்பகுதியில், மஞ்சள் நிறத்தோல் வளர்ச்சி மீசை போல் தொங்கியுள்ளது. இரண்டு பறவைகளின் கால்களும் நீண்டு, மஞ்சள் நிறத்திலிருக்கின்றன.
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி
இந்தப் பறவைகள் இணை பிரியாதவை. இனப்பெருக்கக் காலத்தில், திறந்த வெளியில், ஆழமற்ற சிறு பள்ளம் தோண்டி, இலைகள், சிறு கற்கள், உலர்ந்த சாணத்துண்டுகள் கொண்டு நிரப்பி, மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடுகின்றன. (சிறு கற்கள், சாணத்துண்டுகள், முட்டைகள் இடம் பெயராமலிருக்க உதவுகின்றன). முட்டை ஓடுகளில் காணப்படும் தவிட்டு நிறப் புள்ளிகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் எதிரிகளால் முட்டைகளை எளிதில் கண்டு கொள்வது கடினம்.
இரண்டு பறவைகளும், மாற்றி மாற்றி அடை காக்கின்றன. முட்டைகளை அடைகாக்கும் சமயத்திலோ அல்லது குஞ்சுகள் பொரித்திருக்கும் சமயத்திலோ, எதிரிகள் அருகில் வர நேர்ந்தால், மிகுந்த ஆரவாரத்தோடு அபயக் குரல் எழுப்பி, வட்டமிட்டுப் பறந்து எதிரிகளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி அங்கிருந்து அகலச் செய்துவிடுகின்றன. தமிழகத்திலும், இலங்கையிலும், ஆள்காட்டிப் பறவையின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி, மாடு ஓட்டும் சிறுவர் பாடியதாக ஒரு அழகிய நாட்டுப் பாடலை P.L. சாமி சுட்டிக் காட்டுகிறார். இந்தப் பாடலில், மஞசள் மூக்கு ஆள்காட்டிப் பறவையைப்பற்றி சில உண்மைகளும், பல கற்பனைகளும் கலந்து காணப்படுகின்றன.
“ஆக்காட்டி, ஆக்காட்டி, ஆவாரம்பூ ஆக்காட்டி
எங்கே எங்கே முட்டையிட்டாய்
கல்லு துளைத்து கடலோரம் முட்டையிட்டேன்
இட்டது நாலு முட்டை பொரித்தது மூன்றுகுஞ்சு
மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்
இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்
பார்த்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்
புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகயிலே
மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்
காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்
வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர் கால்கழுவிக்
குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி
இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி
மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்ததாம் கண்ணீரே”
“சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்”, p.153
ஆவாரம் பூ
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, கன்யாகுமரி, 2017
இந்தப் பாடலில், மஞ்சள் ஆள்காட்டிப் பறவையின் கண்ணருகில் காணப்படும் மஞ்சள் நிறத் தோல், ஆவாரம் பூவின் இதழ்கள் போலவும், நான்கு முட்டைகள் இடுவதும், கல்லின் இடையில் முட்டை இடுவதால், கல்லைத் துளைத்து முட்டையிடுவதாகவும், முட்டைகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் இவைகளைக் கண்டு கொள்ள முடியாத நிலையில், சிறுவர், எங்கே முட்டையிட்டாய்? என்று பறவையைக் கேட்பதாகவும் காணலாம். பாடலிலுள்ள மேற்கண்ட தகவல்கள், பறவையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாட்டு மக்களின் இயற்கையறிவு குறையற்றதாக இருப்பதைக் காணலாம்.
மேலும், “குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்” என்ற செய்தி,
நற்றிணை, 212 -இல் காணப்படும் “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,” என்ற அடியை ஒத்துள்ளது.
ஆனால் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, வறண்ட நிலத்தில் முட்டையிடுகிறது. அடைகாக்கும் நேரத்திலும், குஞ்சுகள் பொரித்தப் பின்பும் இரை தேட அதிகதூரம் செல்வதில்லை. குஞ்சுகள், பொரித்த உடனேயே தானாக பெற்றோருடன் சேர்ந்து இரை தேடிக் கொள்கின்றன (precocial). ஆள்காட்டிப் பறவை, குஞ்சுகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதைத்தான் அதன் அழுகையும் கண்ணீரும் என்று கற்பனையாகப் பாடலில் கூறப்பட்டுள்ளதென P.L. சாமி கருதுகிறார்.
வட இந்தியாவில், ஆள்காட்டிப் பறவைகளைக் கவனித்து ஆராய்ச்சிகள் செய்து கொடுத்திருக்கும் தகவல்கள் நிறையக் காணலாம். முக்கியமாக, சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், மொட்டை மாடிகளில், கான்கீரிட்டில் சிறு பள்ளம் தோண்டி, முட்டையிட்டு அடை காப்பதை பல ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர் (Mundkur, Taej 1985, Muralidhar, A., Barve, S., 2013).
கி. பி பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்லூரியில் பட்டம் பெற்ற பின் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்த ஆங்கிலேயர் திரு. ஏட்கின்ஸ் (E. H. Atkins), தன்னுடைய “The Common Birds of Bombay” (p.160-163) என்ற புத்தகத்தில், சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவையைப் பற்றி கீழ் கண்டவாறு நகைச்சுவையோடு வர்ணிக்கிறார். “எதற்கு நான் லேப்விங் பறவையைப் பற்றி விவரிக்க வேண்டும்? அதற்கு அறிமுகமோ அல்லது வர்ணனையோ தேவையில்லை, அதுவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும். உங்களை ஈர்த்துக்கொள்ளும். அதன் குரல் உங்கள் மனதிலிருந்து அகலாதபடி திரும்பத் திரும்ப அழுத்தமாகக் குரல் கொடுக்கும். திடீரென, துணை பறவையும், எங்கிருந்தோ வந்து, வட்டமடித்து, சுற்றி சுற்றிப் பறந்து, மேலும் கீழும் பாய்ந்து அருகே வருவது போலவும் தூரமாகப் போவது போலவும் போக்குக் காட்டி, அந்த இடத்தை விட்டு நகராமல், மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இரங்கல் குரலில் குற்றம் கூறுவது போல் “Did you do it? Did you do it? Pity to do it” என்று குரல் கொடுக்கும். எதற்காக இந்தப் பறவை இப்படி நடந்து கொள்கிறது? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இதனுடைய முட்டைகள் இங்கு எங்கேயோ இருக்கின்றன. நான் அதைத் தேடுவதினால் பயனில்லை. ஏனெனில், இந்த லேப்விங், ஒரு திறமைவாய்ந்த பொய்யன். ஒரு ஆங்கிலேயப் புலவர் சொன்னபடி,
“The Lapwing lies,
Says here when it is there’,
மொத்தத்தில் இது ஒரு அதிசயப் பறவை” யென்று வியக்கிறார்.
இந்த வர்ணனை, எத்தனை உண்மை என்பது ஆள்காட்டிப் பறவையைப் பார்த்தவர்களின் அனுபவத்தில்தான் தெரியும். அடுத்த முறை, இந்த அழகிய பறவைகளைப் பார்க்கவும், குரலைக் கேட்கவும் நேர்ந்தால், Hope you can say, “ No my friend, l didn’t” if you protect nature.
வட இந்தியாவில் ஆள்காட்டிப் பறவையைப் பற்றியுள்ள சிலதகவல்கள்:
ராஜஸ்தானில் ஆள்காட்டிப் பறவைகள் முட்டையிடும் காலம் மழை வருவதைக் குறிக்கிறதென்று நம்புகின்றனர்.
சில கிராமங்களில், ஆள்காட்டியின் குரல் அபசகுணமாகக் கருதப்படுகிறது..
“வானத்திலிருந்து ஏதாவது விழுந்து முட்டைகளுக்கோ, குஞ்சுகளுக்கோ ஆபத்து நேரிடாதபடி, பிடித்துக்கொள்ள, இரவில் படுக்கும்போது, இவைகளின் கால்கள், வானத்தை நோக்கியிருக்கும்”. இந்தி மொழியில், இதை, “Tithiri se Asian thama jayega” (“can the pee-wit support the heavens?”) என்கின்றனர்.
ஆள் காட்டியின் முட்டைகளுக்கு தூக்கத்தைத் தடுக்கும் சக்தி உண்டு என்று நம்புவதால், இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்காக முட்டைகள் வேட்டையாடப்படுகின்றன (Chan Kumar, 2015).
Charn Kumar, (2015). First record of a regularly occupied nesting ground of Yellow-wattled Lapwing, Vanellus malabaricus (Boddaert) in agricultural environs of Punjab with notes on its biology . Journal of entomology and Zoology Studies, JEZS 2015: 3 (1): 129-134
Grubh, R, (2012). The wetland Birds of Tamil Naddu
Mundkur, Taej (1985). “Observations on the roof-nesting habit of the Redwattled Lapwing (Vanellus indicus) in Poona, Maharashtra”. Journal of the Bombay Natural History Society. 82 (1): 194–196.
Mundkur, Taej (1985). Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9
Muralidhar, A., Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9
Naik, RM; George, PV; Dixit, Dhruv B (1961). “Some observations on the behaviour of the incubating Redwattled Lapwing, Vanellus indicus indicus (Bodd.)”. Journal of the Bombay Natural History Society. 58 (1): 223–230.
க. பாலசுப்பிரமணியன்
அகக்கண்களைத் திறப்பது எப்போது?
பேரறிவின் வித்தாகவும் சத்தாகவும் இருக்கின்ற பரமனை அறிந்துகொள்ள அவன் அருளைப்பெற அடியார்கள் என்னென்ன முயற்சிகளெல்லாம் செய்கின்றார்கள்? அவனை மட்டும் சிந்தையில் நிறுத்தி இரவும் பகலும் அவனையே உள்ளம் உருகித் துதித்து அவனுடைய கடைக்கண் பார்வையிலிருந்து பொழியும் அருள் மழையில் நனைந்து கிடைக்கின்ற ஆனந்தத்திற்காக என்னென்ன தவங்கள் செய்கின்றார்கள்? ஆனால் உலக நினைப்புகளும் உலக நடைமுறைகளும் ஆசாபாசங்களும் அவர்களை விடுவதாயில்லையே! என்னென்ன துயரங்கள் அனுபவிக்க வேண்டி வருகின்றது என்பதை பட்டினத்தார் விளக்குகின்றார்:
அன்ன விசாரம் அதுவே விசாரம் அது ஒழிந்தால்
சொன்ன விசாரம் தொலையா விசாரம் நாள் தோகையரை
பன்ன விசாரம் பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு
விசாரம் வைத்தாய் இறைவா ! கச்சி ஏகம்பனே !
ஐம்புலன்கள் ஏற்படுத்தும் இந்தத் தொல்லைகளிலிருந்தெல்லாம் விடுபடுவது எப்படி? அனைத்து உலகையும் ஆள்கின்ற அந்த ஈசனை எப்படி அடைவது? சிந்தையை ஒரு நிலைப்படுத்தி அழைத்தால் அவன் நிச்சயமாக வருவானா? அவனுடைய விருப்பங்களை நம்மால் கணக்கிடமுடியாதே… இந்தக் கவலை மாணிக்கவாசகருக்கும் ஏற்பட்டது. அதனால்தானோ அவர் இவ்வாறு பாடுகின்றார்?
அனைத்தும் ஆக சிந்தை செல்லும்
எல்லை ஏய வாக்கினால்
தினைத்னையும் ஆவது இல்லை
சொல்லல் ஆவ கேட்பவே
அனைத்து உலகும் ஆய நின்னை
ஐம்புலன்கள் காண்கிலா
எனைத்து எனைத்து அது எப்புறத்தது
எந்தை பாதம் எய்தவே.
இந்த உலக விசாரங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் விடுபடுவது எப்படி? அவ்வளவு சுலபமான செயலா? இதோ .. திருமூலரின் கருத்தைப் பார்ப்போம் …
கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை
மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை
என் இது ஈசன் இயல்பு அறியாரே.
காம வாசனைகளில் ஈடுபட்டு வீழ்ந்தோர் இருப்பதும் ஒரு எண்ணச் சிறையில்தான். கற்பிக்கப்பட்ட அறிவிலும் நூல்களிலும் ஈடுபட்டு உண்மை அனுபவத்தை அறியாமல் வீழ்ந்தோர் இருப்பதும் ஒரு சிறையில்தான். தவத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்தாலும் ஈசனின் உண்மை தத்துவத்தை அறியாதோர் இருப்பதும் ஒரு சிறையில்தான் .இப்படி நம்மை நாமே சிறையில் அடைத்துக்கொண்டு இறைவனைத் தேட முயற்சி செய்தால் அது சரிப்படுமோ? பலன்தருமோ?
தாயுமானவர் இறைவனிடம் கேட்கின்றார் ‘இறைவா, இந்த நிலையை மாற்றுதல் உனக்கு என்ன கடினமான செயலோ?”
பாழான என்மனம் குவியஒரு தந்திரம்
பண்ணுவ துனக் கருமையோ ?
பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரண ஆனந்தமே.
இந்த அருளுக்காக அவர் எப்படியெல்லாம் வேண்டுகிறார் தெரியுமா ?
உடல்குழைய என்பெல்லாம் நெக்குருக
விழிநீர்கள் ஊற்றென வெதும்பியூற்ற
ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே
ஒருறவு முன்னி யுன்னிப்
படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்
பாடியாடி குதித்து….
அடியார்கள் இறைவனின் அருளுக்காக உடலாலும் உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தன்னையே மறந்து ஒன்றி இருந்த நிலைகளைக் காணும் பொழுது அவர்கள் பக்தியின் பரவச நிலை நமக்குத் தெளிவாகின்றது.
இறைவனைக் காண வெறும் புறக்கண்களை திறந்தால் மட்டும் போதாது. அவை பல உணர்வுகளாலும் வெளி உலகின் தாக்கத்தினால் ஊனமடைந்தவை. ஆகவே இறைவனைக் காண்பதற்கு அகக்கண்களைத் திறக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஒளிமயமாக நமக்கு புலப்படுவான். திருமூலரின் கீழ்கண்ட பாடல் நமக்கு உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது.
காணாத கண்ணில் படலமே கண்ணொளி
காணாதவர்கட்குங் காணாத அவ்வொளி
காணாதவர்கட்குங் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந்தாரே.
நம்மில் எத்தனைபேர் கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாக இருக்கின்றோம் ?
(தொடருவோம்)
-முனைவர் த. சரவணன்
தமிழுக்கே உரிய சிறப்புக் கூறுகளாக எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்து எழுத்துக்களைக் கூறுவர். அதேபோன்று சொல்லாக்க முறைகளில் வினைத்தொகை என்னும் தொகைச்சொல் வடிவமும் தமிழுக்கே உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வினைத்தொகைபற்றி இலக்கணிகள் குறிப்பிடுவது பற்றியும் வ.சுப. மாணிக்கனார் அவற்றில் இருந்து வேறுபடுவது பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
வினைத்தொகை
வினைத்தொகையானது இரண்டு சொற்கூறுகளைக் கொண்டது. அதன் முதற்கூறு வினையடியாகவும் இரண்டாவதுகூறு பெயராகவும் காணப்பெறும். சான்றாகக் கொல்களிறு என்ற சொல்லில் உள்ள கொல் என்பது வினையாகவும் களிறு என்பது பெயராகவும் காணப்படுகிறது.
வினைத்தொகையைப் பற்றித் தொல்காப்பியர்
“வினையின் தொகுதி காலத் தியலும்” (தொல். எச்சவியல். 19) என்கிறார். இதில் வினைத்தொகை என்பதை வினையின் தொகுதி என வழங்குகிறார் அவர். வினைத்தொகையானது கால இடைநிலை தொக்குப் பொருள் தரும் என்பது இந்நூற்பாவால் பெறப்படுகிறது.
நன்னூலார் வினைத்தொகையை,
“காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” (நன்னூல். 364)
என்கிறார். வினைத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளும்பொழுது எச்சமாக மாற்றியே பொருள்உரைக்க முடிகிறது. சான்றாகக் கொல்களிறு என்பதைக் கொன்ற களிறு என்னும்போது இறந்தகாலப் பெயரச்சமும், கொல்கின்ற களிறு என்னும் போது நிகழ்காலப் பெயரெச்சமும் கொல்லும் களிறு என்னும் போது எதிர்காலப் பெயரெச்சமும் இடம்பெறுகிறுகிறது. எனவே இப்பெயரெச்சங்களைத் தொகையாக்கிக் கூறும்போது வினைத்தொகை உண்டாகிறது என்பது பொதுவான கருத்து.
வினைத்தொகை என்னும் சொற்கூட்டின் முதற்கூறு வினையும் வினைப்பெயரும் தோன்றுவதற்குரிய வேர்ச்சொல்லாக அமைந்து இருக்கின்றது. வினை என்பது காலம் காட்டும் தன்மை உடையது ஆகும். ஆகவே வினைத்தொகையும் காலமொடு வருகிறது. வினைத்தன்மையே அச்சொற்கூட்டில் இருப்பதால் வினைத்தொகை என்று பெயர்கொடுக்கப்பெற்றுள்ளது. எனவே வினைத்தொகை என்பதற்கு வினைத்தன்மை அதாவது காலம்காட்டும் நிலை தொக்கது என்று விளக்கம் அளிக்கலாம்.
வ.சுப.மாணிக்கனார் பார்வையில் வினைத்தொகை
வ.சுப. மாணிக்கம் அவர்கள் A Study of Tamil verbs என்னும் நூலில் வினை வடிவங்களை அடையாளம் காண்பதில் உதவும் காரணியாக வினைத்தொகையைக் காண்கிறார்.
“வினைத்தொகையைக் கட்டமைக்கும் அச்சொற்கூட்டின் முதல் பகுதியானது எந்த ஒரு வினையின் மூலவடிவத்தையும் உறுதிசெய்வதற்குத் தவிர்க்க இயலாக் காரணியாக விளங்குகிறது. சான்றாக ஆகூழ், ஆகாறு, ஆகிடன், அளவாகு மொழிமுதல் ஆகிய சொற்களில் ஆகு என்னும் தூய வினைவடிவத்தை நாம் காணமுடியும்” (A Study of Tamil verbs, ப.37)
ஏவல் வடிவங்கள் வினையின் உண்மையான வடிவத்தைக் காட்டுவதில் தோல்வி அடையும்போது வினைத்தொகை வடிவங்களே நம்மைக் காப்பாற்றுவதாகவும் வ. சுப. மாணிக்கனார் குறிப்பிடுகிறார். மேலும் சிக்கலுக்குரிய வினைவடிவமாகிய வா, தா என்பவற்றின் வினையடியாக வரு, தரு என்பதையே கொள்ளலாம் என்பதைப் பின்வரும் கூற்றின் மூலம் விளக்குகிறார்.
“ஐயத்திற்குரிய எந்த ஒரு வினைவடிவத்தின் உண்மையான மூலத்தையும் அடையாளம்காண நமக்கு உதவுவது வினைத்தொகையின் முதற்கூறான வினையடியே. பின்வரும் சான்றுகளில் வரு, தரு என்னும் சொற்கள் வினைத்தொகையில் அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வரு விசிப்புனல் (தொல்.1008) வரு விருந்து (குறள்.83) புனல்தரு பசுங்காய் (குறுந்தொகை. 292)” (A Study of Tamil verbs, ப.44)
வினைத்தொகை பற்றிப் பிற்கால இலக்கணிகள் கொண்டிருந்த கருத்துக்கு மாற்றாகத் தொல்காப்பியரைப் பின்பற்றி, வினைத்தொகையில் இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டுமே உணரமுடியும் என்பதைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.
“இறந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் குறிப்பிடும் இரண்டு பெயரெச்சங்களை மட்டுமே தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
அவ்வறு பொருட்குமார் அன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே (தொல். 718)
கொல் களிறு போன்ற சொற்களில் நிகழ்காலத்தையும் இறந்தகாலத்தையும் மட்டுமே விளங்கிக்கொள்ள முடிவதாகஅவர் எண்ணுகிறார். இதற்குச் சான்றாகப் பின்வரும் நூற்பாவைக் குறிப்பிடலாம்.
“செய்யும் செய்த என்னும் கிளவியின்
மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்” (தொல். 482)” (A Study of Tamil verbs, ப.102)
மேற்கண்ட கூற்றில் தொழில்தொகு மொழியாகிய வினைத்தொகையில் செய்யும் செய்த என்னும் இரண்டு காலமே அதன் விரியில் வருவதை எடுத்துக்காட்டி இடைக்கால இலக்கணிகள் குறிப்பிடும் முக்காலமும் காட்டும் என்பதனை வ.சுப. மாணிக்கனார் மறுப்பதை அறியமுடிகிறது.
“உம் ஈறு நிகழ்காலத்துக் குரியது எதிர்காலத்துக்குரியதாவது எதனாற் பெறுதும்? என்பது வினா. பெயரெச்ச விகுதிகளுள் அகரம் இறப்பு நிகழ்வுக் காலங்கட்குரியது. உம் நிகழ்வுக்குரியது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லையாதலின் உம் விகுதியைக் கொள்ளவேண்டும்.” (தொல்காப்பியம் உரைவளம் சொல்லதிகாரம் – எச்சவியல், பக்.132) என்று ஆ. சிவலிங்கனார் குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்வுக்குப் பெயரெச்ச விகுதி இல்லாமையாலேயே இரண்டு பெயரெச்சங்களே வினைத்தொகையில் காணப்படுகின்றன என்று வ.சுப. மாணிக்கனார் முடிவு செய்கிறார். தொல்காப்பியர் வினைத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும் நூற்பாவில் காலத்தியலும் என்று பொதுப்படையாகக் கூறி இன்ன காலம் என்று குறிப்பிடாமல் சென்றுள்ளதும் இதற்குக் காரணமாகும்.
இறுதியாக, வினைத்தொகை என்பதில் கடந்த கால, நிகழ்காலப் பெயரெச்சங்களே தொக்கி நிற்கின்றன என்பதும் வினையடியின் தூய வடிவைக் கண்டறிவதில் வினைத்தொகையின் முதற்கூறு உதவுகிறது என்பதும் வ.சுப. மாணிக்கனாரின் இலக்கணப் பார்வையின் மூலம் அறிய முடிகிறது.
******
துணைநின்ற நூல்கள்:
Manickam,V.Sp. 1972. A Study of Tamil Verbs. Annamalai Nagar: Annamalai University.
சிவலிங்கனார், ஆ. 1998. தொல்காப்பியம் – சொல்லதிகாரம் (உரைவளம்) எச்சவியல். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
******
கட்டுரையாசிரியர்
இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
இலக்கியத்துறை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
#40, ஐ.ஆர்.டி வளாகம், நூறடிச்சாலை,
தரமணி, சென்னை – 113.
-முனைவர் ம. பிரபாகரன்
தொல்காப்பியத்தில் மாத்திரை ஓர் அடிப்படைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிற நூல்களில் மாத்திரை அடிப்படைச் செய்யுள் உறுப்பாகக் காட்டப்படவில்லை. எழுத்தைக் கூறும்பொழுதே மாத்திரையும் உள்ளடங்கி விடுகிறது; அதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியம் தவிர்த்த மற்ற யாப்பிலக்கண நூல்கள் மாத்திரையை ஓர் உறுப்பாகக் கொள்ளாமல் விட்டிருக்கின்றன எனலாம். தொல்காப்பியர் மாத்திரையைத் செய்யுளியல் முதல் சூத்திரத்தில் செய்யுளுறுப்பாக கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில் மாத்திரைக்கு விளக்கம் கூற வரும்போது, மாத்திரையின் இலக்கணம் மேற்கிளந்தனவே அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறார் (தொல்.செய்.2). அதே போல் தொல்காப்பியர் செய்யுளியல் முதல்சூத்திரத்தில் எழுத்து என்பதையும் மாத்திரைக்கு அடுத்து வைத்துக் கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில் அதற்கு விளக்கம் கூறும் பொழுது மாத்திரைக்குக் கூறியது போலவே ‘ மேற்கிளந்தனவே ‘ அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றே கூறுகிறார்(தொல்.செய்.2). அதற்குப் பிறகு தொல்காப்பியர் செய்யுளியலின் பல இடங்களிலும் எழுத்து பற்றி விளக்குகிறார். ஆனால் மாத்திரையைப் பொறுத்த வரை’ மேற்கிளந்தனவே ‘ என்று இரண்டாவது சூத்திரத்தில் கூறிய பிறகு தொல்காப்பியர் செய்யுளியலின் எந்த இடத்திலும் மாத்திரையைப் பற்றிப் பேசவே இல்லை. மாத்திரையைத் தொல்காப்பியம் முதன் உறுப்பாகக் கூறினாலும் எழுத்திற்கே தொல்காப்பியம் மிகவும் முக்கியத்துவம் தருகிறது. தொல்காப்பியம் எழுத்துவகை அடிகள் கூறியிருப்பது இதற்கு நல்ல உதாரணம் ஆகும். இவ்வெழுத்துவகை அடிகளிலும் மாத்திரையின் முக்கியத்துவத்தை அதாவது ஓரடியில் இத்தனை மாத்திரை உள்ள அடிகள்தாம் வரவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. இங்ஙனம் மாத்திரை என்பது தொல்காப்பியத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறாத உறுப்பாகவே இருக்கிறது. இப்படியிருக்க தொல்காப்பியர் ஏன் மாத்திரையை முதல் உறுப்பாகக் கொள்ள வேண்டும்? மாத்திரையை ஏன் தொல்காப்பியர் ஓர் உறுப்பாகக் கொண்டார் என்பதற்குப் பேராசிரியர் தரும் குறிப்பொன்று நல்லதொரு விவாதத்திற்கு வழிவகுக்கிறது. அந்தக் குறிப்பாவது:
இனி ஒருசாரார் மாத்திரையென்றது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல்,பக். 24; 2014, மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை)
எழுத்தல்லோசையைக் குறிக்கத் தொல்காப்பியர் மாத்திரை என்பதை பயன்படுத்தியுள்ளார் என்று ஒருசார் ஆசிரியர் கூறுவதாக பேராசிரியர் இவ்வுரைப்பகுதியில் கூறுகிறார். இவ்வாறு கூறும் பேராசிரியர் மாத்திரை என்பது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசையை குறிக்காது என்று அவ்வொருசார் ஆசிரியர்களை மறுத்தும் கூறுகிறார்:
அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம் (மேலது, பக். 24) பேராசிரியர் கூறும் எழுத்தல்லோசையை மாத்திரை என்று குறிப்பிடும் ஒருசார் ஆசிரியர் யாரென்று யாப்பிலக்கண வரலாற்றில் அறிய முடியவில்லை. இது குறித்த க.வெள்ளைவாரணரின் கருத்து இவ்விடத்தில் குறிக்கப்பாலதாகும்:
மாத்திரை என்பதை எழுத்தல்லோசையெனக் கொண்ட ஆசிரியர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களுள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருசார் ஆசிரியர் ” மாத்திரையென்றதனான் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர் ” எனவரும். இவ்வுரைத் தொடர் தொல்காப்பியவுரை யாசிரியர்களுள் ஒருசாரார் கூறிய உரைவிளக்கத்தை யுளத்திற் கொண்டு பேராசிரியரால் எழுதப்பெற்றதென்பது, ‘ நாம் அது வேண்டாமாயினாம் ” எனப் பின்வரும் அவரது உரைத்தொடரால் உய்த்துணரப்படும் (பக், 24 அடிக்குறிப்பு, மேலது). நச்சினார்க்கினியர் இது குறித்து ஒன்றும் கூறவில்லை. மாத்திரை என்பது எழுத்தல்லோசையைக் குறிக்க வாய்ப்புண்டா? இது குறித்து இனி விவாதிப்போம்.
பேராசிரியர் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை உறுப்பாக வரும் செய்யுள் யாண்டும் சான்றோர் இலக்கியங்களில் காணமுடியாமையின் மாத்திரை என்பது எழுதல்லோசையைக் குறிக்காது என்று கூறுவது விவாதத்திற்குரியது. ஏனென்றால் பொதுவாக இலக்கணத்தில் காணப்படும் பல கூறுகளுக்கு இலக்கியம் கிடைக்கவில்லை. உதாரணமாக தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள பலவற்றிற்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை.தொல்காப்பியர் கூறியுள்ள எழுத்துவகை அடிகளில் ஒரு சில அடிகளைத் தவிர சங்க இலக்கியத்தில் பெரும்பான்மையாக இடம்பெறவில்லை என்பர் ஆய்வாளர்கள். இதேபோல வீரசோழியர் விளக்கியுள்ள ஏழ்வகை பத்தியக் கவிகளுக்கும் இலக்கியங்கள் இல்லை. எனவே பேராசிரியரின் இந்த வாதம் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. இத்தொடர்பில் ஒருசார் ஆசிரியர் மாத்திரை எழுத்தல்லோசையைக் குறிக்கும் என்ற கூறிய கருத்து நமக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது; அவர்களின் வாதம் எத்தன்மைத்து, அவர்கள் என்னென்ன உதாரணங்களை எடுத்துக் காட்டினார்கள் என்பது நமக்குக் கிடைத்திருந்தால் இது தொடர்பான ஆராய்ச்சி செய்வதற்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். எனினும் இது தொடர்பாக ஏதேனும் முடிவைப் பெற முடியாவிட்டாலும் இந்த விவாதம் இது குறித்த சிந்தனையைத் தூண்டும் என்று நம்புவோம்.
மாத்திரை மற்றும் எழுத்தல்லோசை ஆகியவை குறித்துக் கிடைக்கும் கருத்துக்களை முதலில் தொகுத்துக்கொள்வோம்:
யாப்பருங்கல விருத்தி:
யாப்பருங்கலத்தில் மாத்திரை அடிப்படை உறுப்பாகக் கொள்ளப்படாத போதும் யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மாத்திரை பற்றி விவரித்துள்ளார்:
குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க. என்னை?
” குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை
அளபெடை மூன்றென் றறியல் வேண்டும் ” என்பது பல்காயம். ஆகலின்.
மாத்திரையாவது கண் இமைத்தலொடு கைநொடித்தல் ஒத்த காலம். என்னை?
” கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே ” (தொல் எழுத்து 7)
என்றார் தொல்காப்பியர்.
” கண்ணிமை கைநொடி என்றிவை இரண்டும்
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை ” என்றார் சங்க யாப்புடையார்.
” ஒன்றிரண்டு டொருமூன் றொன்றரை அரைகால்
என்றனர் பொழுதிவை இமைநொடி அளவே ” என்றார் பிறரும்.
விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையானும் அளபெடுத்து வருமாயினும். அவை செய்யுட்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின் அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினார் இல்லை எனக் கொள்க.
…………………………………………………….
அரைநொடி என்ப தியாதென மொழியின்
நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே ” (பக். 22,23, யாப்பருங்கல விருத்தி, இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை:1976)
அளபெடையைக் குறித்துப் பேசும்பொழுதும் யாப்பருங்கலவிருத்தி மாத்திரை குறித்து சிந்தித்துள்ளது:
” அளபெடையாவன, மாத்திரை குன்றலிற் சீர் குன்றித் தளைகெட நின்றவிடத்து யாப்பழியாமைப் பொருட்டு வேண்டப்பட்டன. என்னை?
” மாத்திரை வகையால் தளைதபக் கெடாநிலை
யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும் ” என்றார் ஆகலின். (பக். 21: மேலது)
யாப்பருங்கலக்காரிகை – குணசாகரர் உரை:
அறிஞருரைத்த அளபும் ‘ என்று சிறப்பித்தவதனால் குற்றெழுத்து ஒருமாத்திரை. நெட்டெழுத்து இரண்டு மாத்திரை. அளபெடை மூன்று மாத்திரை. ஆய்தமும் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அரைமாத்திரை. ஐகாரகுறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் ஒன்றரை மாத்திரை. ஒற்றளபெடை ஒருமாத்திரை. ஆய்த குறுக்கமும் மகரகுறுக்கமும் ஒரோவொன்று கால்மாத்திரை எனக்கொள்க. என்னை,
” ஒன்றிரண்டொருமூன் றொன்றரை யரைக்கால்
என்றனர் பொழுதிவை இமைநொடி யளவே ”
” கண்ணிமை கைநொடி யளவே மாத்திரை
நுண்ணிதி நுணர்ந்தோர் கண்ட வாறே ” (தொல். எழுத்7)
” அரைநொடி என்பது யாதென வினவின்
நொடிதரக் கூடிய இருவிர லளவே ” (சங்க யாப்பு)
” ஒற்றுக்கு மாத்திரை யொன்றே அளபெழுந்தாற்
றெற்றக் குறியது வேயாம் ”
” உன்னல் காலே ஊன்ற லரையே
முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றே ” என்றாரும் உளரெனக் கொள்க. (பக்.122, 123, யாப்பருங்கலக் காரிகை, வே.பால்ராஜ் பதிப்பு, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007)
பேராசிரியர்: மாத்திரை எழுத்தினது குணமாகலானும் அசையும் சீரும் அடியும் தூக்கும் பாவும் வண்ணங்களும் என்ற இன்னோரன்ன எல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன ஆகலானும் மாத்திரை முன்னர் வைக்கப்பட்டது (தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள்-யாப்பு 2,தமிழ்மண் பதிப்பகம், சென்னை, பக் 119:2005)
நச்சர்: மாத்திரையானல்லது செய்யுள் வேறுபாடு உணரலாகாமையின் மாத்திரை செய்யுளுறுப்புகளில் முதலாவதாகக் கூறப்பட்டது. (மேலது, பக்.121)
மேற்கண்ட விளக்கங்களில் மாத்திரை என்பதற்கு எழுத்துக்களின் கால அளவு என்பதே பொருளாகக் கூறப்பட்டிருப்பதையும் இவ்விளக்கங்களில் எங்கும் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் இடம்பெறாமையையும் காண்க. இனி நிகண்டுகளில் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் காணப்படுகிறதா? எனக் காணலாம்:
சேந்தன் திவாகரம்:
அளவு: மாத்திரை
இங்கு அளவு என்பதற்கு மாத்திரை பெயராகச் சுட்டப்பட்டிருக்கிறது. இங்கும் எழுத்தல்லோசை பற்றிய குறிப்பு இல்லை.
பிங்கல நிகண்டு:
அளவு: மாத்திரை,
மாத்திரை- கால நுட்பம்
கலையும், துடியும், கணமும், மாத்திரையும்,
நொடியும், பிதிரும், நுட்பமும், திட்பமும்
நிமிடமும், கால நுட்பம் (ஆகும்)
மாத்திரை- காலவிரைவு
2.189. கணமும் மாத்திரையும் கால விரைவே
இந்தப் பிங்கல நிகண்டு சூத்திரங்களில் மேலே கண்ட சேந்தன் நிகண்டு போலவே அளவு என்பதற்கு மாத்திரை குறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாத்திரை என்பதற்குக் காலநுட்பம் மற்றும் காலவிரைவு என்பது குறிக்கப்பெற்றுள்ளது. இங்கும் காலம் தொடர்பான பொருளே மாத்திரை என்பதற்கு குறிக்கப்பெற்றுள்ளது.
சூடாமணி நிகண்டு:
மாத்திரை
இந்தச் சூடாமணி நிகண்டுச் சூத்திரத்திலும் திவாகரம் பிங்கல நிகண்டுகளைப் போலவே மாத்திரை என்பதற்கு கால விரைவு குறிக்கப்பெற்றுள்ளது.
இனி எழுத்தல்லோசை என்பதற்குரிய பொருள் இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் காணப்படும் தன்மையைக் குறித்து பார்ப்போம்:
யாப்பருங்கல விருத்தி:
எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியாமல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.
முற்கு – முக்குதல்; வீளை-சீழ்க்கை அடித்தல்;
இலதை – கோழையை வெளிப்படுத்தல்: அநுகரணம் – போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும் விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.
எ-டு ‘ மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
கென்று திரியும் இடைமகனே – சென்று
மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
அறியாயோ அண்ணாக்கு மாறு ‘
என ‘ உஃகுவஃகு ‘ என்று வருதல் போல்வன. இவை இடைக்காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ ஊசிமுறி ‘ எழுத்தாணியால் முறையாக எழுத முடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி- எழுத்தாணி; முறி- தடுமாறச் செய்தல் (பக். 146,தமிழ் இலக்கணப் பேரகராதி)
எழுத்தல் ஓசையைப் பற்றி கிடைக்கும் விரிவான குறிப்பு இதுவே ஆகும். மேலே கண்ட பகுதியில் குறிக்கப்பெற்ற ஊசிமுறி என்ற நூல் தற்போது கிடைக்கவில்லை. அது கிடைத்திருந்தால் எழுத்தல்லோசை குறித்த கூடுதல் செய்தி நமக்கு கிடைத்திருக்கும்.
இனி நிகண்டுகளில் இந்த எழுத்தல்லோசை குறித்து கூறப்பட்டுள்ள தன்மையைக் காண்போம்:
சேந்தன் திவாகரம்:
அகவல்: ஆசிரியம், எழுத்திலாவோசை
1897 பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும்
மருளலும், பயிறலும், குரைத்தலும், கனைத்தலும்
முளைத்தலும், அகவலும் எழுத்திலா ஓசை (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)
இங்கு பிளிறல், குளிறல் பிரற்றல், சிரற்றல், மருளல், பயிறல், குரைத்தல், கனைத்தல், முளைத்தல், அகவல் என்பவை எழுத்திலா ஓசையனவாக குறிக்கப்பட்டுள்ளன. இங்கு மாத்திரை என்பது இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு எழுத்திலா ஓசைக்கு அகவல் என்ற பொருள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்க.பிங்கலத்தில், சேந்தன் திவாகரம் குறிப்பிட்டுள்ள எழுத்திலா ஓசை என்பது எடுத்தல் ஓசை என்று பதிவாகியுள்ளது. பிங்கலம், சேந்தன் திவாகரம் எழுத்திலா ஓசை என்று குறிப்பிட்டுள்ள ஒலிகளோடு சிலவற்றை விட்டுச் சிலவற்றை கூடுதலாக சேர்த்து, எடுத்தல் ஓசை என்று கூறுகிறது. இது குறித்த பிங்கல நிகண்டு பகுதியாவது:
அகவல்- எடுத்தல் ஓசை
அகவல் தொடர்பாக சேந்தன் திவாகரத்தையும், பிங்கலத்தையும் இவ்விடத்தில் ஒப்பிடுவது பயனுடையதாக இருக்கும்:
எழுத்தில்லோசை
சேந்தன் திவாகரம் (எழுத்திலா ஓசை) பிங்கலம் (எடுத்தல் ஓசை)
பிளிறல் முரல்வு
குளிறல் நால்வு
பிரற்றல் முக்கல்
சிரற்றல் பயிறல்
மருளல் தெளிறல்
பயிறல் ஞெளிர்தல்
குரைத்தல் சிரற்றல்
கனைத்தல் பிரற்றல்
முளைத்தல் குளிறல்
அகவல் குமுறல்
குருமித்தல்
நெளிர்தலும்
அகவல்
சூடாமணி நிகண்டிலும் எடுத்தலோசை விளக்கப்பட்டுள்ளது (சூத்.718, தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008). ஆனால் அது தரும் எடுத்தலோசையில் அகவல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு காட்டும் எடுத்த லோசையைக் கீழ்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்:
எடுத்தல் ஓசை
சூடாமணி நிகண்டு
தெளிறல்
முரலல்
முக்கல்
சிரற்றுதல்
பயிலல்
குளிறல்
நரலல்
குருமித்தல்
நெளிர்தல்
பிளிறல்
உளை
பிரற்றல்
நாம் மேலே கண்ட எழுத்திலா ஓசை என்பதும் எடுத்தல் ஓசை என்பதும் பாடவேறுபாடா? என்பது தெரியவில்லை. பாட வேறுபாடாக இருப்பின் இவ்விரண்டின் பொருளும் ஒன்றா? வேறு வேறா? என்பது பற்றி ஒன்றும் கூற இயலவில்லை. இனி அடுத்து நாம் விவாதிக்க வேண்டியது, எழுத்திலா ஓசையைக் குறிக்க ஏன் அகவல் என்பது சுட்டப்படுகிறது? இங்கு அகவல் என்பது ஒருவகை ஓசை என்பது புரிகிறது. ஆனால் இது ஆசிரியப்பாவின் ஓசையா? என்ற கேள்வியும் இத்துடன் எழுகிறது. அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில், அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அழைத்தல் என்பதன் ஒரு பெயரே அகவல் என்று பொருள் தருகின்றது பிங்கல நிகண்டு:
7: 238. கேதல், உளைத்தல், இகுத்தல், விளித்தல்
மாஎனல், கூவுதல், வாஎனல், மத்தல்
கரைதல், ஆகருடணை (இவையே அன்றி)
அகவல் (என்பதும்) அழைத்தல் (ஆகும்) (சாந்தி சாதனா, சென்னை: 2000)
அழைத்தல் என்பதன் பெயராகிய அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கேள்வியை இங்குக் கேட்டுவைத்துக்கொள்வோம். இனி அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்போம்.
பிங்கல நிகண்டு:
அகவல் – மயிற்குரல்
8.8. அகவல், ஆலல், ஏங்கல், மயில்குரல் (சாந்திசாதனா, சென்னை: 2000)
இங்கு அகவல் என்பதற்கு ஆலல், ஏங்கல், மயிற்குரல் என்ற மூன்று பொருளை பிங்கல நிகண்டு தருகிறது. இங்கு அகவல் என்பதற்கு மயில்குரல் என்ற பொருள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. இந்த மயிற்குரல் அகவல் யாப்போடு ( ” அழைத்தல் ” என்னும் பொருளில்) தொடர்புடையதாக இருப்பது க.கைலாசபதி அவர்களால் தன் தமிழில் வீரநிலைக் கவிதை என்ற நூலில் கூறப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கூறுவதாவது:
”அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப்பொருள்படும் ‘ அகவு ‘ என்னும் பொருளடியாகத் தோன்றின” (குமரன் புத்தக இல்லம், பக் 158: 2006).
இதன் மூலம் அகவல் என்பது அழைத்தல் என்ற பொருளுடையது என்பதைத் தெரிந்து கொள்கிறோம். ஏற்கெனவே நாம் கேட்டுவைத்திருந்த கேள்வியாகிய அழைத்தல் என்பதன் பெயராகிய அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து இனிப்பார்க்க வேண்டும். அகவல் அல்லது அழைத்தல் என்பதற்கும் யாப்பில் வரும் அகவல்பாவிற்கும் தொடர்பு உண்டு என்பதைக் கைலாசபதியின் கீழ்வரும் கூற்று உறுதிசெய்கின்றது:
அகவல் என்பதற்கு அழைத்தல் என்பது பொருள். மகள் என்பது பெண்ணைக் குறிக்கும். இப்புலமகள் தன்மீது தோன்றும் தெய்வத்தை அழைப்பதாக இதனைக் கருதலாம். (பக். 95 மேலது).
அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப் பொருள்படும் அகவு எனும் இச்சொல் அழைப்பவர், கூப்பிடுபவர் என்ற நேர் பொருளை உடையது (பக். 158, மேலது)
இதனை மனத்தில் இருத்திக்கொண்டு இனி, அகவுநரோடு; அவர்கள் பாடும் அகவல் பாட்டோடு, மாத்திரை என்பது தொடர்புபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். அகவலுக்கும் மாத்திரைக்கும் உள்ள தொடர்பு கைலாசபதி தரும் ஒரு குறிப்பு வழியாக நம்மால் ஊகிக்கமுடிகிறது. அவர் அகவுநர்கள் பாடும்போது கையில் மாத்திரைக் கோல் ஒன்று வைத்திருப்பர் என்று கூறுகிறார். இம்மாத்திரைக்கோல் என்பது அகவுநர்கள் அகவல் ஓசையை எழுப்பிப்பாடும்போது அவ்வோசையை குறிப்பிட்ட கால அளவுக்குள் உட்படுத்தி அல்லது கட்டுப்படுத்திப் பாடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே இந்த அகவல் என்பது மாத்திரையோடு தொடர்புபட்டதாக அமைகிறது. ஆனால் அகவுநர்கள் பயன்படுத்தும் இந்தக் காலஅளவு என்பது புலமைநிலை படுத்தப்பட்ட, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள மாத்திரைக்கு முன்னோடியாக அமைந்தது எனலாம். அதாவது அகவல் என்பது எப்படிப் புலமைநிலையில் அமைந்த ஆசிரியத்திற்கு முன்னோடியாக அமைந்ததோ அதுபோல இந்த அகவுநர் மாத்திரைக்கோலைக் கொண்டு அளவிட்ட கால அளவு அல்லது மாத்திரை தொல்காப்பியம் போன்ற புலமைமரபில் பயன்படுத்தப்பட்ட மாத்திரைக்கு முன்னோடி என்று கொள்ள வேண்டும். இப்போது இவ்விடத்தில் நாம் மேலே குறிப்பிட்ட கைலாசபதியின் மாத்திரைக்கோல் குறித்த கூற்றை எடுத்துக்காட்டுவது பயனுடைதாக இருக்கும்:
முற்குறித்த நோக்கின் தெளிவில், சில பாடல்கள் இப்பாணர்கள் இசைக் கருவிகளுக்குப் பதிலாக ஒரு மாத்திரைக்கோல் அல்லது கைத்தடியினைக் கொண்டிருந்தனர் என்று கூறுவது ஆர்வமாக நோக்குதற்குரிய கருத்தாகும். இதற்குரிய தமிழ்ச்சொல் ‘ கோல்’ என்பதன் பொருள் தடி, குச்சி, கிளை, கைக்கோல் என்பன. நன்கு துண்டிக்கப்பட்ட மெல்லிய கோல் ஒன்றைக் கையில் கொண்டு பாணர்கள் வெற்றி பெற்றோரைப் போர்களங்களில் புகழ்ந்தனர். மற்றொரு செய்யுளில், இக்கோல் நீண்ட மூங்கில்கள் வளருமிடத்திலிருந்து, ஒல்லியான கணுக்களைக் கொண்ட மூங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. ஒல்லியான கோல் எனப்பொருள்படும் ‘ நுண்கோல் ‘ என்ற பெயர் அகவுநர் என்ற பெயரோடு முன்னொட்டாகச் சேர்க்கப்பட்டு ‘ ஒல்லியான கோல் கொண்ட பாணர் ‘ என்ற பொருளைத் தருகிறது. (பக். 160; மேலது)
இங்கு மாத்திரைக் கோல் என்பது அகவுநரோடு தொடர்புபடுவதைக் காணலாம்.
மேற்கண்ட கருத்துக்கள் வழி அகவலுக்கும் மாத்திரைக்கும் இடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளலாம். எழுத்திலா ஓசையும் அகவலாகக் குறிக்க பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அகவல் என்பது ஓசையே ஆகும்; அது எழுத்திலா ஓசையாகவும் எழுத்துள்ள ஓசையாகவும் ( ஆசிரியப்பா) இருந்திருக்க வேண்டும். எழுத்திலா ஓசை எழுத்துள்ள ஓசையை விட காலத்தாற் முந்தியது எனக்கொள்ளலாம். மாத்திரை அல்லது காலஅளவைப் பயன்படுத்தியே எழுத்திலா (அகவல்) ஓசை அளக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிப்பது தவறாகாது. இதன் மூலம் பேராசிரியர் குறிப்பிடும் மாத்திரை என்பது எழுத்திலா ஓசையை குறித்தது என்ற ஒருசாராரின் கருத்து வலுவுடைத்தாக தோன்றுகிறது. இது மேலும் ஆய்விற்குரியது.
******
சான்றாதார நூல்கள்:
******
கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்,
EFEO,
புதுச்சேரி.
பவள சங்கரி
தலையங்கம்
வாஷிங்டனில் உள்ள உலக உணவு ஆய்வறிக்கை 2017 பட்டியலின்படி, பசியோடு வாழும் 119 நாடுகளில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது என்று வெளியிட்டுள்ளது. 2014 இல் 45வது இடத்தில் இருந்த இந்தியா இன்று 100வது இடத்தில் உள்ளது. என்ன கொடுமை இது ஆண்டவா .. இதில் ஆச்சரியப்படவேண்டிய செய்தி ஈராக் (78வது) பங்களாதேஷ் (88) வட கொரியா (93) போன்ற நாடுகளைவிட மோசமான நிலையில் உள்ளது நம் இந்தியா என்பது மிக வேதனைக்குரிய செய்தி. இந்த 119 நாடுகளில் 50% நாடுகள் அபாயகரமான நிலையில் கொடுமையான பசிப்பிணியால் வாடுகிற நாடாம். இதிலும் இந்தியா மிக மோசமான இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 19 கோடி மக்கள் அன்றாடம் பசியால் வாடுகிறார்கள். இதில் நாள் ஒன்றுக்கு 3,000 குழந்தைகள் பட்டினி, சத்துணவு இன்மையால் இறக்கின்றனர். உலகளவில் இறக்கக்கூடிய குழந்தைகளில் 24% குழந்தைகள் இந்தியக் குழந்தைகளாம். இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 275.68 மில்லியன் டன் (2016 – 2017) இந்த அளவிற்கு உணவு தானியங்களின் விளைச்சல் இருந்தும் பசியால் இறக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது மிக வேதனையான விசயம். இந்தியாவில் தனி நபர் வருமானம் ஒரு இலட்சத்து மூவாயிரம் ரூபாயாக இருந்தும், அனைத்து வளங்களும் நிரம்பியிருந்தும் மக்கள் பசியால் வாடிக்கிடப்பதற்கு மூல காரணம் என்ன என்று தீவிரமாக அனைவரும் யோசிக்க வேண்டிய காலகட்டம் இது!
“கண்ணன் சுமப்பது கோவர்த் தனமல்ல-
தன்னைத்தான் ஏந்தலே, தாத்பர்யம்: -மண்ணில் –
இருப்பது யாவுமே இங்கே அவர்தான் –
மறுப்போர்க்கும் உண்டுமறு மை”….கிரேசி மோகன் ….!
மறுமை -மோட்சம்….!
தமிழகத்திலேயே முதல்முறையாக `திருநங்கை’ என்ற அடையாளத்துடன் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர், தற்போது முதல் திருநங்கை சித்த மருத்துவராகவும் ஆகப்போகிறார். `திருநங்கை’ என்ற அடையாளத்துடனே கல்லூரியிலும் சேர்ந்துள்ளார்,தாரிகா பானு.
தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கும் நிலக்குடிதான் இவரது சொந்த ஊர். அம்மா, அப்பா நாலு அண்ணன்கள், கடைசியாக இவர். திருநங்கையாக தன்னை உணர்ந்த இவர் 2014ல வீட்டைவிட்டு வெளியேறினார். இவர் திருநங்கையாக இருப்பது வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்றும் தன்னால் அடையாளத்தோடு வாழமுடியவில்லை என்பதால் வெளியேறியதாகவும் கூறுகிறார். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்தபின் தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்கும் திருநங்கை கிரேஸ் பானுவை சந்தித்தார்.
கிரேஸ் பானு முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. திருநங்கைகளின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். தாரிகா பானுதிருநங்கைகளுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நமது சமூகச் சூழலில், கிராமப்புறத்தில் பிறந்து மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு பல்வேறு போராட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில், கிராமத்துச் சூழலில் திருநங்கையாக வளர்ந்து, பிறகு குடும்பத்தைவிட்டு வெளியேறி, தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் தனக்கு வந்த இன்னல்களை எல்லாம் மீறி தாரிகா பானு இன்று அடைந்திருக்கும் நிலை வரவேற்கத்தக்கது.

தாரிகா பானுவை, அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கேட்டபோது, பள்ளியில் இடம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் சென்று `திருநங்கை’ என்ற மூன்றாம் பாலின அடையாளத்தோடு படிக்க அரசு அனுமதி வழங்கியுள்ள உத்தரவைக் காட்டியிருக்கிறார் கிரேஸ் பானு. அதன்பிறகு அந்தப் பள்ளியிலேயே சேர்ந்து படித்து வெற்றி கண்டார் தாரிகா பானு.
பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, கல்லூரியில் உடனடியாக சீட் கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்து நீதி கேட்ட பிறகே சீட் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு அரசுக் கல்லூரியிலேயே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காத்திருப்பு, வழக்கு எனத் தொடர்ந்த போராட்டங்கள். கடைசியாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கியுள்ளார் தாரிகா பானு.
எளிமையாக நமக்கு கிடைக்கும் விசயங்கள் பலவற்றுக்கும் போராட்டம், வழக்கு இவற்றை, ஒவ்வொரு முறை கல்விக்காக முன்னேறும்போதும் தாரிகா பானுவும் கிரேஸ் பானுவும் முன்னெடுத்துள்ளனர். அடிப்படையான கல்வியைப் பெறுவதற்கே 2017-ம் ஆண்டிலும் திருநங்கைகள் போராடவேண்டியுள்ளது. பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும்தான் பொதுப்புத்தியில் திருநங்கைகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், `TG’ என்ற முன்றாம் பாலின அடையாளத்தோடு பொறியியல் கல்லூரியில், கலைக் கல்லூரியில் தற்போது பல திருநங்கைகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளிலும் உள்ளனர். சிலர் காவல் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆனால், அப்படி நல்ல நிலைக்குச் செல்வதற்குப் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் கிரேஸ் பானு திருநங்கைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திருநங்கை தாரிகா பானுபடிப்பை முடித்துவிட்டு சென்னைப் போன்ற பெருநகரங்களில் வேலை தேடுவது என்பதே சிரமமான ஒன்று. தன் குடும்பத்தினருடன் எந்தவிதமான தொடர்புமில்லாமல் பொருளாதாரரீதியாகவும் சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுவதற்கும் திருநங்கைகள் படும் துயரத்தின் வலியை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
திருநங்கைகள் அனைவருக்கும் தாரிகாபானுவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என வல்லமை நம்புகிறது
வல்லமையாளர் தாரிகா பானுவுக்கு நல்வாழ்த்துகள்
(நன்றி: விகடன்)
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
-மேகலா இராமமூர்த்தி
மரத்தின் கிளையில் சாய்ந்துபடுத்து அலைபேசியை ஆராய்ந்துகொண்டிருக்கும் இளைஞனைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து, அதனைப் படக்கவிதைப் போட்டிக்கு நல்கியிருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கு என் நன்றி!
”எல்லாப்பொருளும் இதன்பால் உள” என்று திருக்குறளை அன்றைய புலவோர் புகழ்ந்தது இன்றைய அலைபேசிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்துகின்றது. நம் உள்ளங்கைக்குள் உலகையே விரித்துக்காட்டி, மாயக்காரனாய் நம்மை மலைக்கவைக்கின்றது இந்த அலைபேசி!
பயன்பாடுகளைப் பொறுத்து நன்மையொடு தீமையும் இந்த அலைபேசியால் அவனிக்குக் கிடைத்துவருவது கண்கூடு. கத்தியைப் பயன்படுத்துவதுபோல் கவனத்தோடும் புத்தியோடும் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் தீயவிளைவுகளைத் தடுக்கலாம்.
அலைபேசியின் நன்மை தீமைகளை அலசிஆராயக் கவிவாணர்கள் வரிசையில் காத்திருப்பதால் அவர்களை வரவேற்று நான் விடைபெறுகிறேன்.
*****
படித்துப்பட்டம் பெற்றும் வேலை கிடைக்கும் வேளை இன்னும் வாராததால் மரக்கிளையில் அலைபேசியோடு அளவளாவிக்கொண்டிருக்கும் உழவர்குடித் தோன்றலையும், அவன் தேடிவந்த நகரத்தின் நரகவாழ்வையும், பட்டம்பெற்ற அவனுள்ளம் உண்டிகொடுத்து உயிர்கொடுக்கும் உழவுத்தொழிலையே மீண்டும் நாடிநிற்பதையும் பாடியுள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா..!
அய்யா! அவனங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தால்..
……………அன்றாடம் அலைந்து ஓய்ந்தவனெனவும் தெரியும்.!
அய்யே!இனியிந்த நாய்ப்பிழைப்பு வேண்டாமென..
……………அருவருக்குமவன் மனநிலையையும் அறிய முடியும்!
ஒய்யாரமாய் ஓய்வெடுக்க ஒடிந்துவிழுந்த கிளையின்..
……………ஓரத்திலமர்ந்து நீநினைவது என்னவென்பதும் புரியும்!
வெய்யிலுக்கு மரநிழல்தரும் சுகம்போல இப்போது..
……………வீணாகப்போகும் நேரத்தில் வாட்ஸ்அப் இதம்தரும்!
படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலைதேடியிங்கே..
……………பல்லாயிரம் பேர்வருவார் மொத்தமாக ஓரிடத்துக்கு!
அடிக்கொரு அலுவலகம் இருந்தாலுமதன் கதவுகள்..
……………அனைத்திலும் வேலை காலியில்லை எனுமறிவிப்பு.!
கடிமணமாகாத காளையரென்றால் குடியிருக்க வீடு..
……………கிடைக்காது இக்கொடுமை போதாதெனில் அங்கே!
முடியைப் பிய்த்துக்கொண்டு முழுநேரமும் வேலை..
……………முடிந்தபின்னும் வீடுதிரும்ப முடியா நிலையிதுவே!
சொந்த ஊரிலிருந்த சுகமெல்லாமிங்கே இல்லை..
……………சந்துபொந்துக்குப் பஞ்சமில்லை சத்துண வில்லை!
பந்தங்கள் இருந்தும் பெயருக்குத்தான் சொந்தம்..
……………பணக்காரத் தனத்தினால் உறவுக்குக் வந்ததுகேடு!
மந்திரசக்தியால் மாம்பழம் பறிப்பது போலத்தான்..
……………எந்திரசக்தி கொண்டுதான் எதுவுமிங்கே இயங்குது!
சிந்திக்கக் கூடயிங்கே சிறிதளவேனும் நேரமில்லை..
……………பந்தியிலுட்கார்ந்து சாப்பிட பக்கத்தில் நிற்கவேணும்!
உழைக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவனவன்..
……………ஊர்விட்டு ஊர்வந்தான் பிழைப்புதேடி ஒருவனாக.!
உழவுக்குடி உயரவே உயர்படிப்பு படித்தானவன்..
……………உயரும் நாகரீகத்தில் நரகமேமேலென நினைத்தான்!
அழகுதிமிர்க் காளைபோல கட்டுடல் மேனிகொண்ட..
……………அவன்மனது…உழவுத் தொழில்மீதே நிழலாடுகிறது.!
உழலுமவன் மனதுக்கு ஆறுதலுமிங்கில்லை மீண்டும்..
……………இழந்ததைப்பெற கிராமத்துக்கே போக விழைகிறான்!
*****
”நாணயத்தின் இருபக்கங்கள்போல் நன்மையும் தீமையும் கலந்த கலவையாய் உலவும் அலைபேசியை, படிக்கும் வயதில் சிறியோர் தவிர்த்தல் நலம்; பெரியோரும் முறையறிந்து பயன்படுத்துதலே பலம்” எனும் நன்மொழிகளைத் தாங்கி நிற்கின்றது திரு. பழ.செல்வமாணிக்கத்தின் கவிதை.
தீதும் நன்றும்:
தூரத்தை குறைக்க வந்தது தான் தொலை பேசி!
துயரத்தை தர வந்தது ஏனோ இந்த அலை பேசி!
விஞ்ஞானத்தின் வியத்தகு படைப்பு இந்தக் கைபேசி!
ஆனால் குடும்பத்தை தீவுகளாய் பிரித்த
அரக்கன் இந்த அலை பேசி!
காதலனைப் பிரியாத காதலியாய் கைக்குள்ளே
எப்போதும் கை பேசி!
உணவு மறந்தது! காரணம் அலை பேசி!
உறக்கம் போனது! காரணம் அலை பேசி!
நேரடிப் பேச்சும் குறைந்தது! காரணம் அலை பேசி!
சிந்தனை குறைந்தது! காரணம் அலை பேசி!
வாகனத்தை ஓட்டும் போதும் விலகாத கை பேசி!
எமனின் பாசக் காயிறாய் உயிரெடுக்கும் கை பேசி!
சிட்டுக்குருவிகளே இவ்வுலகில் இல்லாமல்!
அழித்தது இந்த அலை பேசி!
சின்னஞ் சிறு பிள்ளைகளை சீரழித்தது இந்தக் கை பேசி!
தீமைகள் மட்டும் தருவதா இந்த அலை பேசி!
நன்மைகள் பல உண்டு, இதனால், நீ அதை யோசி!
பயணத்தை குறைத்து,
நேரத்தை நமக்குத் தரும் இந்தக் கைபேசி!
பயன் தரும் செய்திகள், பலவற்றை நம்மிடம்
கொண்டு சேர்ப்பது இந்த அலை பேசி!
வேலைக்குச் செல்லும் பெண்களின் கூடவே இருக்கும்
பாதுகாவலன் இந்த அலை பேசி!
தொழில் செய்ய உதவும் தோழன்!
இசையைத் தரும் இனிய கலைஞன்!
குறுஞ்செய்தி கொண்டு செல்லும் அஞ்சல் காரன்!
அழகுக் காட்சிகளை அள்ளித் தரும் அன்பு நண்பன்!
நாணயத்திற்கு இரண்டு பக்கம்!
நல்லது , கெட்டது அனைத்திலும் இருக்கும்!
படிக்கும் வயதில் வேண்டாமே அலை பேசி!
நல்ல புத்தகங்கள் நீ வாசி!
நாளைய உலகம் உயர்வு பெற!
நான் சொன்னதை நீ யோசி!
*****
வெட்டப்பட்ட மரத்தின்மேல் சாய்ந்திருக்கும் இளைஞனின் வாழ்க்கைப் பாதையை நமக்கு வெட்டவெளிச்சமாக்கும் திருமிகு. சொல்லின் செல்வி, போதிமரமாய் அந்தப் பாதிமரம் அவ்விளைஞனுக்கு ஞானத்தைத் தானம் செய்வதையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை.
மரத்தோடு மடி சாய்ந்த நேரம்
வாராத படிப்பை
வாதாடி முடித்தேன்
வாய்தாக்கள் போல் அரியர் வைத்து
நான்காண்டுகள் ஓடின.
சொல்லாத என் காதல்
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்று
கல்லாத காவியத்தை
கற்றவனாய் ஒப்பித்துவிட்டு
விடைக்காக காத்திருக்கிறேன்
மூன்றாண்டுகள் ஓடின.
பிடிக்காத வேலையில் சேர்ந்து
அடுக்கான பொறுப்புகள் வகித்து
மிடுக்காக வலம் வந்து பார்த்து
பொறுப்பான ஆண் மகனாய் ஆனேன்
இராண்டாண்டுகள் ஓடின.
கடந்து வந்த பள்ளிப்படிப்பையும்
பட்டப்படிப்பையும்
பாலைவன கானல்நீரைப்போல
பாவையவள் காதலையும்
எதிர்கால முன்னேற்றப்பாதையும்
எண்ணிப்பார்த்து பார்த்தே
ஓராண்டும் ஓடின.
இவையனைத்தும் அழகாய் பதிவானது
மட்டுமல்ல
என் கையிலிருக்கும் கைப்பேசியிலும் தான்.
இந்த
வெட்டப்பட்ட மரத்தின்
கிளைப்போல்
என் எத்தனை ஆசைகளை
வெட்டியுள்ளது
தோல்வியெனும் கோடாரி.
ஆனால்
நான் தோள் சாயும்
அன்பு மரமே..
புனிதமிக்க
உன் மீது அமரும் முன்
என்
காலணிகளை அகற்றிவிட்டு விட்டது போல
புத்தன் சொன்ன புத்திமதி போல
ஆசைகளை அகற்றிவிட்டு
புனிதமான
இலட்சியங்களை
எளிதால் அடையலாம் தானே.
தினம் சாயுங்காலம்
நான் சாய மடிதரும்
என் நண்பனே..!
என் மரமே ! ???
*****
வெட்டுண்ட மரம், தான் உயிரோடு இருந்தபோதும் வெட்டப்பட்டு வீழ்ந்தபோதும் பயன்பட்ட விதத்தைப் பாந்தமாய்ச் சொல்வதையும், வெட்டப்படபோகும் மரமோ, ”அழுதாலும் தொழுதாலும் கோடரியால் எனக்கு விளையப்போகும் கேடகற்ற யாருளர்?” என்று அழுதுபுலம்புவதையும் உணர்வுமிகு கவிதையாக்கியுள்ளார் திரு. சி. ஜெயபாரதன்.
சுட்ட மரமும், சுடாத மரமும்
சுடாத மரத்தின் கூக்குரல்
தலைக்கு மேலே கத்தி
தொங்குது !
வெட்டப் போகிறார் !
விலைக்கு வாங்கத்
தரகர் கையில்
நிறைய பணக் கத்தை !
அழுதாலும் பயனில்லை !
தொழுதாலும் பயனில்லை !
பரம்பரை வாரிசு இனிமேல்
பிறந்திடாது !
விதியை வெல்ல
நிதியால் தான் முடியுது !
நாளை எனக்கில்லை !
நரக வாழ்வில்
நம்பிக்கை இல்லை !
நமன் வரும்
தருணமிது எனக்கு !
வாசலில் நிற்கிறான்,
வழிவிடு எனக்கு !
கோடரிக்குத் தலை கொடுக்கவா ?
உடல் அளிக்கவா ?
கடவுளே காப்பாத்து !
++++++++++++
சுட்ட மரத்தின் கூக்குரல் !
வெட்டப் பட்டுக் கீழே
வீழ்ந்து கிடக்கிறேன் பார் !
மட்டப் பலகையாய்
வீடு கட்ட உதவினேன் !
மாட்டு வண்டிச் சக்கரம்
ஆக்க உதவினேன் !
கப்பல் கட்ட, படகு கட்ட
உப்புக் கடலில் மீன் பிடிக்க
உதவினேன் !
கனிகள் காய்க்கும்
மரமானேன் ஒரு காலம் !
இருந்தாலும்
ஆயிரம் பொன் நான் !
இறந்தாலும்
ஆயிரம் பொன் !
*****
மரத்தையும், மரத்தில் சாய்ந்திருக்கும் இளைஞனையும், அவன் கையிலிருக்கும் அலைபேசியையும் முன்னிலைப்படுத்தித் தம் சிந்தனைச் சிறகுகளை அகலவிரித்து ஆழ்ந்த கருத்துக்களை அளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…
இப்படிக்கு…
அதிர்ஷ்டசாலி நான்..!
‘கை வலிக்கிறது’ என ஒரு போதும்
எனை நீ கீழே இறக்கி விட்டதில்லை
‘தூக்க முடியவில்லை நடந்து வா’ என்ற வார்த்தையை
நான் உன்னிடம் இருந்து கேட்டதில்லை
‘வேலை இருக்கிறது; பின்பு கவனிக்கிறேன்’ என
ஒருநாளும் எனைத் தனியே விட்டுச் சென்றதில்லை
என் அழுகுரல் கேட்டு ஒரு நொடி கூடத் தாமதித்ததில்லை
உடனே ஓடிவந்து கையில் ஏந்திக் கொள்வாய்
நித்தமும் அரவணைப்பு; நீங்காத பந்தம்; நிறைவான பாசம்…
பொறாமைப் படத்தானே செய்வார்கள்- உன்
தாயும் தந்தையும்; மகனும் மகளும்; அன்பான மனைவியும்…
பேசாத எனைப் பேணிக்காக்கிறாய்
பேதையாய் உன் பின் வருபவரைப் பரிதவிக்க வைக்கிறாய்!!
அன்பே… நீ எனை நேசிப்பதைப் போல
அவர்களையும் நேசித்துப் பாரேன்…
அழகாகும் உன் வாழ்க்கை; வரமாகும்; வசந்தம் வீசும்..!
இப்படிக்கு
உன் கைபேசி…
”குடும்பத்தை மறந்து, உறவுகளைத் துறந்து அலைபேசியையே ஆருயிர்க்காதலியாய் எப்போதும் அணைத்திருக்கும் இளைஞனே! பேசாத என்னைப் பேணிக்காக்கும் நீ, பேசும் பொற்சித்திரங்களான உன் குழந்தைகளை மறந்ததேன்? என்னிடம் காட்டும் பாசத்தை அவர்களிடமும் காட்டு; குடும்பத்தை நோக்கியும் உன் நேசக்கரத்தை நீட்டு” எனும் இக்கவிதை இன்றைய இளைஞர்களுக்கான எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கக் காண்கிறேன். காலத்தின் தேவையறிந்து கவிதை பாடியிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.
பவள சங்கரி
முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் முதற் சொல்லாக வருவதுதான் அந்தாதி எனப்படும். மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று கருதியே அந்தாதி இலக்கியம் தோன்றியுள்ளது. தமிழில் தோன்றிய முதல் அந்தாதி காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும்.
குறிப்பிடத்தக்க அந்தாதிகள் இதோ:
(1) முதல் திருவந்தாதி – பொய்கை ஆழ்வார்
(2) இரண்டாம் திருவந்தாதி – பூதத்தாழ்வார்
(3) மூன்றாம் திருவந்தாதி – பேயாழ்வார்
(4) சடகோபரந்தாதி – கம்பர்
(5) திருவரங்கத்தந்தாதி – பிள்ளைப் பெருமாளையங்கார்
(6) கந்தரந்தாதி – அருணகிரிநாதர்
(7) திருவருணை அந்தாதி – எல்லப்ப நாவலர்
(8) அபிராமி அந்தாதி – அபிராமி பட்டர்
(9) திருக்குறள் அந்தாதி – இராசைக் கவிஞர்
11-ஆம் திருமுறையில் வரும் அந்தாதிகள்
(1) அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்
(2) சிவபெருமான் திருவந்தாதி – கபிலதேவ நாயனார்,
(3) சிவபெருமான் திருவந்தாதி – பரணதேவ நாயனார்
(4) கயிலைபாதி காளத்தி
பாதி அந்தாதி – நக்கீர தேவ நாயனார்
(5) திருவேகம்பமுடையார்
திருஅந்தாதி – பட்டினத்தடிகள்
(6) திருத்தொண்டர் திருஅந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
(7) ஆளுடைய பிள்ளையார்
திருவந்தாதி – நம்பியாண்டார் நம்பிகள்
(8) பொன்வண்ணத்தந்தாதி – சேரமான் பெருமாள் நாயனார்
19ஆம் நூற்றாண்டில் மிகுதியான அந்தாதி நூல்கள் தோன்றியுள்ளன. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களும் அதிக எண்ணிக்கையில் அந்தாதி நூல்கள் இயற்றியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
திருப்பூர் மாவட்டம்
* டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது
தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் .
நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்…
“வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் இயற்கை வளங்களைச் சுரண்டியது மத்திய, மாநில அரசுகள்தான். பழங்குடியினர் இருக்கும் இடங்களில்தான் வன விலங்குகள் பாதுகாப்பாக இருக்கின்றன. வன உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு பழங்குடியினருக்குப் பல அநீதிகள் நடந்திருக்கின்றன. ‘ரிசர்வ் ஃபாரஸ்ட்’ என்ற பெயரில் அவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். காய்ந்த சுள்ளிகளை வனத்துக்குள் செல்லும் பழங்குடியினர்களை வனத்துறையினர் விரட்டி அடிக்கின்றனர். காடுகளைவிட்டுப் பழங்குடியினர் வெளியேற்றம் என்பது, கடந்த 20 ஆண்டுகளாத்தான் அதிகம் நடந்துவருகிறது. கோவை மாவட்டம் பவானி சாகர் அணைக்குப் போகும் வழியில் தெங்குமரஹட்டா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி 20 கி.மீ சுற்றளவுக்கு காடுகள்தான் இருக்கும். 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சில கிராமங்கள் இருந்தன. ஆனால், ரிசர்வ் ஃபாரஸ்ட் என்ற காரணங்களுக்காக 1980-க்குப் பிறகு அங்கிருந்த பழங்குடியினர் கிராமங்கள் காலி செய்யப்பட்டன. ஒரு கிராமம்கூட அங்கு இல்லை. அதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தின் பகுதியில் இருந்த பழங்குடியினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர். கண்ணகி கோயில் அருகே குமுளி வனப்பகுதியில் முதுவர் என்ற பழங்குடியினர் கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் இப்போது இல்லை. பழங்குடியினர்களை அவ்வப்போது துரத்திவிட்டு மறு குடியமர்வு செய்கின்றனர். ஏராளமான பழங்குடியினர் கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து பல இடங்களில் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். வன உரிமைச் சட்டத்தில் பழங்குடியினருக்காக ஏராளமான உரிமைகள் உள்ளன. அவர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
சுப்ரபாரதிமணியனின் தலைமை உரையில்….
விவசாயம் புறக்கணிக்கப்பட்டு திருப்பூர் போன்ற நகரங்கள் விரிவாகிக் கொண்டே இருக்கின்றன.வெற்று சம்மதங்கள் அபாயகரமானவை.தொழிலுக்கு குந்தகம் வந்து விடக்கூடாது என்ற கூட்டு எண்ணம் வியாபார நியதிகளுக்கும் கூட ஒத்து வராது என்று குற்றம் பேசும் விமர்சனப் பார்வை தொடர்கிறது.
தொழிலாளி, முதலாளி, தொழிற்சங்கம் மொதற்கொண்டு எல்லாருமே அன்னிய செலவாணியை குறிக்கோளா வைத்துச் சமரசமாக இயங்கும் ஊரின் அசலானத் தன்மை தெரிகிறது.. .. ..உலகச் சந்தையை முன் வைத்து பின்னலாடை உற்பத்தி அதன் தொழிலாளிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதைக் காட்டுகிறது. சேரிகள் வளர்ந்து கொண்டே இருக்கிறது . பின்னலாடையிலே சுமங்கலித்திட்டக் கொடுமை வந்து விட்டது..இடம் பெயர்ந்து வந்த வேற்று மாநிலத் தொழிலாளர்கள்… பாரீசின் சொகுசுத்தனம், ஆப்ரிக்காவின் வறுமை இரண்டும் இங்கு சேர்ந்திருக்கிறது. வட மாநில பெண்களின் உழைப்புச் சுரண்டல், வார இறுதிகளில் அவர்கள் விபச்சாரத்துக்கு பயன்படுகிற நிலை போன்றவை தொடர்கின்றன “ என்றார்.
படைப்பு அனுபவம் என்ற தலைப்பில் ஊத்துக்குளி நடேசன் அவர் எழுதிய “ இந்தியா எங்கே செல்கிறது “ என்ற நூல் எழுதியது பற்றி அவரும், காட்டாறு இதழ் பற்றி இராவணன் அவர்களும் உரையாற்றினர்.
* நூல் அறிமுகம்..: .நூல் – அறிமுகம் பிஆர் நடராஜன் எழுதிய “ சுதந்திரப்ப்போரில் திருப்பூர் தியாகிகள் “ பற்றி ஜி.. இரவி ( திருப்பூர் மாவட்ட இளைஞர் பெருமன்றம் ) செய்து விரிவான உரை நிகழ்த்தினார் *
பெண் படைப்பு குறித்து கோவை பேரா. செல்வி. பேரா. கலைவாணி ஆகியோர் உரைகள் நிகழ்த்தினர் *: மாற்றுக்கலாச்சாரம் எது உரை நிகழ்த்தினார் துருவன் பாலா., ( அவர் மாற்றுகல்வி, , மாற்று உணவு பற்றி விரிவாய் பேசினார் ) தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டம் தலைவர் சண்முகம், பொருளாளர் பழனிசாமி. தமிழ் பண்பாட்டு மையம் யோகி செந்தில், பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி மருத்துவர் முத்துசாமி, , சசிகலா., விபி பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
மற்றும் கவிஞர் ஜோதி, துருவன் பாலா, ஆ, அருணாசலம் பாடல்கள், கவிதைகள் வாசிப்பும் நடந்தது. பங்கேற்பாளர்கள் கருத்துரைகள் வழங்கினர். தொழிற்சங்கத்தலைவர்கள், இலக்கிய வாசகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
பிஆர்நடராஜன்நன்றி கூறினார்…
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்