கபீர்தாசரின் கவிதைகள் (3) தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்
க.பாலசுப்பிரமணியன்
நானும் நித்தம் பசியின்றி இருக்க
நாடியவர் நித்தம் பசியின்றி இருக்க
நாளும் தருவாய் நிறைவாய் இறைவா !
நானிலத்தில் வேண்டேன் உனையன்றி நிரந்தரமே !
காமம் இருக்கும் இடத்தில் கடவுள் இல்லை
கடவுள் இருக்கும் இடத்தில் காமம் இல்லை
கடவுளும் காமமும் என்றும் இணைவதில்லை
கதிரவனும் மதியும் என்றும் சேர்வதுண்டோ ?
வரிசையில் அரிசியைச் சுமந்திடும் எறும்பு
வழியினில் சுமையினை மாற்றிட முடியுமோ?
சிற்றின்பத்தைச் சுமக்கின்ற ஓ! மனிதா !
பேரின்பத்தை வாழ்வில் அடைந்திட முடியுமோ ?
ஒளியின் அழகினில் மயங்கிடும் விட்டில்
உறவினைத் தேடி உயிரையும் இழந்திடும்
அழகுடன் உறவிடத் துடித்திடும் உள்ளம்
அமைதியை இழந்து அழிவினை நாடிடும் !
குட்டையில் சேற்றினில் மலர்ந்திடும் தாமரை
குலவிடும் நிலவினைக் கண்டதும் சிரிக்குமே
குறைவில்லா அன்பு கிடைத்திடும் பொழுதினில்
குலவிடும் நெஞ்சங்கள் குறைந்திடும் தூரமே !
ஆயிரம் நல்லவை அன்புடன் செய்தாலும்
ஆணவ நெருப்பினால் அனைத்தும் அழிந்திடும்
ஆணவம் தந்த அக்கினி அளவில்லாக் கோபமே
அன்புடைச் செயல்களை அழித்திடும் அவலமே !
எழுவது என்றும் வீழ்வது நியதி
மலர்வது என்றும் வாடுதல் உறுதி
அமைவது அனைத்தும் உடைவதும் நியதி
ஆரம்பம் அனைத்துக்கும் உள்ளது இறுதி.

