Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170821 -Indra garvabhangam -lr

    “இம்மி அசையா(து) இமையோன் அயிராவதம்(இந்திரன் பட்டத்து யானை)
    JIMMYயா(வாலை சுருட்டிக் கொண்டு நாயாகும் வரையில்)  கும்வரையில்  ஜிம்னாஸ்டிக்(கோவர்த்தனம் தூக்கியது) -MUMMYக்காய்;

    ஆனவரை பெய்தான் அமரன்(இந்திரன்),முடிவிலே-

    வானவில்லாய்(ஆகாஸத்தில் வானவில்-சமாதான ஸிம்பல்) ஆனான் வளைந்து’’….கிரேசி மோகன்….!

     MUMMY -கோமாதா….!
    இமையோன் -கண்களை இமைக்காத இந்திரன்….!

    Share
  • இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

    ????????????????????????????????????

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் – வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் மாண்புநிறை வேந்தர் கோ. விஸ்வநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து விபுலாநந்தரின் தாய்நாடான இலங்கையில் அவர்தம் ஆவணப்படத்தை வெளியிட வேண்டும் என்று அன்பர்கள் பலரும் முன்வந்து வேண்டுகோள் வைத்தனர். விபுலாநந்த அடிகளார் உருவாக்கிய பள்ளிகளில் பயின்றவர்கள், விபுலாநந்த அடிகளாரின் ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரும் அன்புவேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையில் திரையிடப்பட்டது.

         மட்டக்களப்பு நகரில் விபுலாநந்த அடிகளாரின் 125 ஆம் பிறந்த நாள் நிகழ்வு சார்ந்து பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக ஆவணப்படத்தைத் திரையிட வேண்டும் என்ற விருப்பத்தை விபுலாநந்த அடிகளார் நூற்றாண்டு விழாச்சபையினர் முன் வைத்தனர். அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 04.08.2017 பிற்பகல் மூன்று மணியளவில் அடிகளார் தோற்றுவித்த கல்விக்கோயிலான சிவாநந்த வித்யாலயத்தின் வேலுப்பிள்ளை அரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    Blog 7

         விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் அறிமுக விழா குறித்த அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அதனால் மக்கள் கூட்டம் அரங்கு நிறைந்து இருந்தது. பேராசிரியர் சி.மௌனகுரு, கனடாவிலிருந்து வருகைபுரிந்த சிவம்வேலுப்பிள்ளை,     மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் திரு. இரஞ்சிதமூர்த்தி, வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்கரன், சமூக ஆர்வலர் காசிபதி நடராசா, மட்டக்களப்பைச் சார்ந்த பல்வேறு இலக்கிய அமைப்பினர், காரைதீவு சார்ந்த பொதுமக்கள், விபுலாநந்த அடிகளாரின் உறவினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    ஆவணப்படம் திரையிடத் தொடங்குவதற்கு முன்பாக ஆவணப்படம் எடுத்த பட்டறிவுகளை ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். ஆவணப்படம் திரையிடப்பட்டதும் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையைப் பேராசிரியர் சி. மௌனகுரு சிறப்பாக வழங்கினார். ஆவணப்படம் குறித்த மதிப்பீடுகளைத் தனித்தனியாக அவரவரும் மு.இளங்கோவனுடன் பகிர்ந்துகொண்டனர். விபுலாநந்த அடிகளார் 125 ஆம் பிறந்த நாள் விழாக்குழுவினர், காரைதீவு விபுலாநந்த அடிகளார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர்கள், காரைதீவு பொதுமக்கள், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தார் வழங்கிய சிறப்புகளையும், வரிசைகளையும் மு.இளங்கோவன் ஏற்றுக்கொண்டார்.

    Blog 10

         07.08.2017 இல் இலங்கைத் தலைநகர் கொழும்பு நகரில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னம்பலவாணேசுவரர் திருக்கோயில் திருமண அரங்கில், இந்து சமய கலாசாரா அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்பட அறிமுக விழாவிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மிகச்சிறந்த வரலாற்று அறிஞருமான முனைவர் சி. பத்மநாதன் ஐயா தலைமை தாங்கினார்.

         இலங்கை அரசின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாண்புநிறை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் கலந்துகொண்டு, ஆவணப்படத்தை அறிமுகம் செய்து பேசினார். விபுலாநந்தரின் சமயப்பணியையும், கல்விப்பணியையும் மாண்புநிறை அமைச்சர் அவர்கள் நினைவுகூர்ந்தார். தம் முன்னோர்கள் விபுலாநந்தருடன் கொண்டிருந்த தொடர்புகளையும் எடுத்துரைத்தார். மாண்புமிகு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் விபுலாநந்தரின் பிறந்த ஊரான காரைதீவில் முதன்மைச்சாலையில் விபுலாநந்தர் திருவுருவச் சிலையைத் திறந்துவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆவணப்பட இயக்குநர் மு. இளங்கோவனுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

         யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் நா. சண்முகலிங்கன் அவர்களும், நாடகவியல் அறிஞரும் பேராசிரியருமான சி.மௌனகுரு அவர்களும் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த தங்களின் மதிப்பீட்டு உரைகளைச் சிறப்பாக வழங்கினர். விபுலாநந்தர் இலங்கையிலும் இந்தியாவிலும் தம் பன்முகப் பணிகளை விரிவாகச் செய்துள்ளமையை இரண்டு பேராசிரியர்களும் எடுத்துரைத்து, கலைநேர்த்தியுடன் உருவாகியுள்ள விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் இலங்கையிலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் திரையிடப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

         சிறப்பு அழைப்பாளர்களாகப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் வி. முத்து, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், கனடாவில் வாழும் சிவம் வேலுப்பிள்ளை, திரு தில்லைநாதன், பேராசிரியர் இரகுபரன், ஞானம் இதழின் ஆசிரியர் திரு. ஞானசேகரன், மூத்த எழுத்தாளர் அந்தோனி ஜீவா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

    Blog 9

         இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மிகச் சிறந்த செயல்மறவருமான திரு. அ. உமாமகேசுவரன் அவர்கள் மிகச்சிறந்த அறிமுகவுரையையும், வரவேற்புரையையும் நிகழ்த்தினார். இந்து சமய திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

         கல்விப் பணியும், சமயப் பணியும், தமிழாய்வுப் பணியும் செய்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம்பெற்ற யாழ்நூலாசிரியர் விபுலாநந்த அடிகளாரின் வாழ்வியலை விளக்கும் இந்த ஆவணப்படம் தமிழகத்திலும், புதுவையிலும் விரைந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (5)

    மீ.விசுவநாதன்

    பகுதி: ஐந்து

    பாலகாண்டம்

    நாரதர் சென்றதும் வால்மீகி கண்டதும்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1

    நாரதரின் நாமொழிந்த நல்லகதை கேட்டுள்
    பூரணமாய் வாங்கிக் கொண்டார் வால்மீகி !

    அவரின்தாள் பணிந்துபின் அவரைவழி அனுப்ப
    தவயோகி நாரதரும் தான்மறைந்து போனார் !

    சீடர்பரத் வாஜரைச் சேர்த்தழைத்துக் கொண்டு
    காடதனின் காட்சியினைக் கண்டுவரப் புறப்பட்டார் !

    கங்கைக்குப் பக்கத்தில் கற்கண்டாய்ப் பாய்ந்துவரும்
    பொங்குநதி “தமஸா”வில் புகுந்துதான் நீராட

    விரும்பினார் வால்மீகி ! விரைந்தங்கு சென்றார் !
    திரும்பிய பக்கமெலாம் தெய்வீக முணர்ந்தார் !

    ஞானியரின் நெஞ்சம்போல் நல்முத்தாய் ஒளிவீசும்
    தேனினிக்கும் “தமஸா”வின் தீர்த்தக் கரையினிலே

    வானுயர்ந்த மாமரங்கள் வாசமிகு பூச்செடிகள்
    பானுவின் செங்கதிரைப் பக்குவமாய் உள்ளனுப்பும்

    பயிற்சியைப் பெற்றதனால் பறவையினங் கூடிக்
    அயற்சியைப் போக்கிடவோர் அழகான கூட மைத்து

    காதற்கண் கொண்டு காலமெலாம் களித்திருந்து
    நோதற்கே இடமின்றி நூறாண்டு கண்டிடலாம் !

    “வேடன் கொன்ற அன்றில் பறவை”

    அப்படியோர் கானகத்தில் “அன்றில்” பறவைகள்
    எப்போதும் காதலிலே இயல்பாக விளையாடும் !

    அதைப்பார்த்துக் குறிவைத்தே அடித்திட்டான் வேடன் !
    உதைபட்ட ஆண்பறவை உயிரிழந்த காட்சியைக்

    கண்டவுடன் பெண்துணை கதறியழும் குரல்கேட்டு
    உண்டான துன்பத்தின் கோபத்தி(ல்) ஒர்சாபம்

    வேடனுக்குத் தந்தார் விவேகமுள வால்மீகி !
    “வேடனே காதற்புள் ளிரண்டி லொன்றைக்

    கொன்றதனால் கொடியவனாம் உனக்கென்றும் அமைதியிலை
    சென்றிடு” என்றங்கே சீறினார் ! சினமடங்கி

    வருந்தினார்! தான்சொன்ன வார்த்தைகள் கவிதையாய்ப்
    பொருந்தியத்தில் தெய்வீகப் பொருத்தங் கண்டார் !

    “பிரும்மா வால்மீகி முன்தோன்றுதல்”

    முனிவரின் கவிவரியில் முழுமுதலோன் முகத்தொளியின்
    தனிக்கருணை பொழியுதென பரத்வாஜர் அகமகிழ்ந்தார் !

    ஆனாலும் வால்மீகி ஆழ்மனத்தில் வேடன்
    வீணாகக் கொன்றுவிட்ட ஆண்பறவைக் கோலந்தான்

    தானாக மேல்வந்து தவித்திடச் செய்கிறது!
    ஏனோவென் றறியாத இடர்பாட்டில் இருக்கையிலே

    வானிறங்கி பிரும்மன் வால்மீகி முன்வந்து,
    “மாமுனியே உன்னுள்ள மகத்துவத்தை நானறிவேன் !

    கவலைவிடு! காட்டினிலே கண்டதோர் காட்சியும்
    தவசியுந்தன் வாக்கினிலே தப்பாது வந்த

    கவிப்பொழிவும் நானுனக்குக் காட்டிய நல்வழியே !
    தவிப்புனக்கு அடங்கட்டும் ! தர்மத்தின் உருவான

    இராமகதை முழுவதும் எல்லா உயிர்களும்
    சேமமுறக் காவியமாய்ச் சிறப்பாக நீசெய்வாய் !

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் உண்மையாம் தரிசனமாய்
    எவ்விதக் குழப்பமின்றி எளிதாக அறிந்திடுவாய் !

    நன்மையெது தீமையெது நன்றாகக் கூறும்
    உன்கவியே உலகந்தான் உள்ளவரை வாழும் !

    உட்பொருளும் இலக்கணமும் ஒன்றான பெருஞ்செல்வம்
    இட்டமுடன் நீசெய்யும் இரகுவம்ச காவியத்தை

    எல்லோரும் கொண்டாடி இன்புற்றி ருப்பார்கள் !
    சொல்கின்றேன் நல்வாழ்த்து சுந்தரனைப் பாடுதற்கு!”

    என்று பிரும்மாவா(ன்) ஏக
    அன்று தொடங்கினார் அருள்ராம கதையே ! (43)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் இரண்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • 1000 கவிஞர்கள் கவிதை நூல் வெளியீடு 2017

    unnamed (5)

    unnamed
    ஒக்டோபர் மாதம் 21 ஆந் திகதி 32 உலகநாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின்
    கவிதைகளைத் தாங்கி உலகின் மிகவும் பெரிய கவிதைத் தொகுப்பு நூல்
    யாழ்பாணத்தில் வெளியீடு செய்யப்படும்  பெருவிழா நடைபெற இருக்கிறது.

    unnamed (4)
    தமிழ்க்கவிதை நூல் வெளியீட்டில் இவ்விழா மிகவும் சிறப்புடையதாக அமைகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்

    FullSizeRenderkee

    முகமில் திருமால், முகமில் துருவன்,
    அகம்புறம் இணைதார்தன் ஆன்ம -நகமாம்வெண்
    சங்கினால் கன்னத்தில் சித்திரம் இட்டளித்தார்
    மங்காத விண்மீன் மலர்’’….!

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….

    ”பக்த துருவனை பக்கம் அழைத்தவர்க்கு
    உட்கார் மடிதானே உன்தேவை -தேவுவவர்(தேவு அவர்)
    புள்ளா சனமமர்ந்து புள்ளைக்(கு) அளித்தார்,வான்,
    உல்லாஸ மீனாய்(துருவ நக்ஷத்திரம்) உலவு”….!
    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….கிரேசி மோகன்….!

    Share
  • சிவபிரதோஷம் “ஆதிசக்தி வெள்ளம் “

         மீ.விசுவநாதன்

            lord-shiva-god-pictures-sivan-155910 (1)                                                                                                  

     பற்றறுந்து பற்றறுந்து பற்றறுந்து போக

        பாவிநானும் எத்தனைநாள் இங்கிருந்து வாழ !

    கற்றவித்தை அத்தனையும் கள்ளமென்று கண்டு

        கண்மூடி உள்தேடக் காலமின்னு மில்லை !

    உற்றதுணை அத்தனையும் ஓட்டையான கப்பல்

        ஊர்சுற்றச் சென்றுவிட்டேன் உல்லாசத் தெப்பம்!

    முற்றுணர்ந்த ஞானியில்லை முழுமூட(ன்) என்னுள்

        மூச்சுமுட்ட நிற்குதடா ஆதிசக்தி வெள்ளம் !

     

    சுள்ளென்ற வெய்யிலிலும் சொட்டுகிற வேர்வை

        சுந்தரனாம் பேரொளியை நீராட்டும் சேவை !

    உள்ளொன்றும் வெளியென்றும் ஒன்றுமெனக் கில்லை

        ஓங்காரப் பொருள்தேடும் ஓயாத வேலை !

    நள்ளிரவில் சூரியன்போல் நானுன்னைக் கண்டு

         நாளெல்லாம் பைத்தியமாய் சுற்றுகிறேன் ஈசா !

    வெள்ளிநிலாக் கொண்டவனே வெண்பனியாம் என்னுள்

         வெளிச்சமெனும் சக்தியுடன் வீற்றிருப்பாய் என்றும் !

                 (இன்று  19.08.2017 பிரதோஷம்) 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Krishna Leela - oil on canvas 4’x4’ 2008 commissioned by Krishnan Microsoft Hyderabad —lowres
    Krishna Leela – oil on canvas 4’x4’ 2008 commissioned by Krishnan Microsoft Hyderabad —lowres

    ”லீலா தரங்கிணியில் லாகவ கேசவர்,
    மாலே மணிவண்ண மாமாயர் -நீல
    யமுனா ஆற்றில் இழந்ததைப் பெற்ற
    ரமணா பிரம்மச்சா ரி’’….கிரேசி மோகன்….!

    ஜாமக் கடுமிருளில் ஜாதிவிட்டு, நந்தனார்
    கோமக் களைமேய்த்த கோபாலன் -காமக்
    கடும்புனல் கோபியரைக் கூடியும், உள்ளக்
    கடும்பிரமச் சாரியாம் காண்….!

    Share
  • கோப்புக்கூட்டல் [6]

    இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 15, 2017

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    இன்றைய கோப்பு: [6]
    அலங்கார வேளையில் ஒரு அலங்கோலம்

    A large number of children admited at ICU for encephalitis treatment ,At least 30 children lost their lives due to encephalitis in last 48 hours at Gorakhpur’s BRD Hospital after Supply of liquid oxygen was disrupted yesterday due to pending payment. Express photo by Vishal Srivastav 12.08.2017
    A large number of children admited at ICU for encephalitis treatment ,At least 30 children lost their lives due to encephalitis in last 48 hours at Gorakhpur’s BRD Hospital after Supply of liquid oxygen was disrupted yesterday due to pending payment. Express photo by Vishal Srivastav 12.08.2017

    சுதந்திர தினம் ஒரு சுபதினம். கொண்டாட வேண்டிய தருணத்தில், பொது மக்கள் மீளா துக்கத்தில் திண்டாடினால், அது பற்றிய கவலை, சோகம் நம்மை ஆட்கொள்ளும். கடந்த ஒரு வாரத்தில் கோரக்பூர் மருத்துவகல்லூரியை சார்ந்த நேரு ஆஸ்பத்திரியில் (950 படுக்கைகள் கொண்டது) 70 சிசுக்களும், சில வயது வந்தவர்களும் மரித்து விட்டார்கள். அது பற்றி இன்றைய சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட முதல்வர் யோகி ஆதிநாத், இன்றைய தினத்தை சங்கல்பம் செய்யும் தினமாக அறிவித்து, தன்னை ஆற்றிக்கொண்டார். நீண்ட கால உண்மையை செப்பிய அவர் ஊரறிந்த சமீபத்தில் நடந்த இழவின் உண்மை பின்னணியை கூறியிருக்க முடியாது; ஏனெனில் ஒரு விசாரணை துவங்கப்போகிறது. அதை ஒரு மாபெரும் சவாலாக ஏற்றுக்கொண்டு, பொது மன்றத்தில் பிராணவாயு பற்றி உள்ள தகவல்களின் அலசலை சொல்லாமல், நாட்டின் சுகாதாரமின்மை பற்றி அவர் முரசொலித்தது விகாரமாக இருக்கிறது. அது நிஜம் தான். ஆஸ்பத்திரி கந்தரகூலம், பல்லாண்டுகளாக.

    என்னால் இயன்றவரை நம்பகமாக கிடைத்த செய்திகளை அறிந்த கொண்ட எனக்கு இது வரை வெளிவந்த எந்த கருத்தும் பிடிபடவில்லை. ஏனென்றால், ஒவ்வொருவரும் யானையை தொட்டறிந்த ஐந்து கண்ணொளி இழந்தவர்கள் போல முழு பின்னணியையும் நோக்கவில்லை. நானும் செய்யவேண்டிய அலசல்கள் பல உள்ளன. சாணக்கியர் தன் காலில் குத்திய பெரிய முள்ளை பிடுங்கி எடுத்ததும் அல்லாமல், அந்த செடியை வேருடன் பிடுங்கி தீயிட்டு கொளுத்தினாராம். கடந்த முப்பது வருடங்களாக உத்தரபிரதேசத்தை ஆண்ட மகாபிரபுக்கள் (நான் அந்த மாநிலத்தில் ஊழியம் செய்ததால், அவர்களில் சிலரை அறிவேன். சுயநல அரசியல் கம்பங்கூத்தாடிகள். ) மக்களை வாட்டிய மூளைக்காய்ச்சல் (Japanese Encephalitis and Acute Encephalitis Syndrome) பற்றி கவலை கொள்ளாததால், அம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் மட்டும், ஐம்பது ஆயிரம் மக்கள் மடிந்தனர். முதல்வர் பலவருடங்களாக இது பற்றி நன்கு அறிவேன்; இதை ஒழிக்க பாடுபட்டேன் என்று ஆஸ்பத்திரி சவகிடங்கை பார்வையிட வந்த போது கூறினார். என்ன செய்தார் என்ற விவரம் தான், எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, எனக்கு. ஆம். இது தற்காலிக அலசல் தான்.

    ஆனால், இன்று ஆதாரத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.

    மெத்தப்படித்த அரசுபதவி வகிக்கும் மேதாவிகள், தங்கள் முதுகுக்குக் கவசம் பூட்ட, முரண்செய்திகளை ‘இரக்கத்துடன்/வருத்தத்துடன்’ அளிப்பார்கள். பல முரண்செய்திகளில், சம்பந்தப்பட்ட உண்மைகளையும், சம்பந்தமில்லா வரலாற்று உண்மைகளையும் கலந்து சாக்குபோக்குக்கள் கொடுக்கும் போது, அது பொய்யாக மறுஜன்மம் எடுக்கிறது; ஆனால் தோற்றம் உண்மை போல. அது தான் இங்கு நடந்திருக்கிறது. ஒரு விதண்டாவாதத்திற்காக (அதற்கென்ன குறைச்சல்!) சிசுக்கள் (பிறந்த சில நாட்கள் அடகு காத்து பாதுகாக்க வேண்டியவை) மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். சிசுக்கள் உற்பத்தி ஆனதே ஆஸ்பத்திரியில். எந்த சுகாதாரமின்மையினால் அது வந்தது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அது தொலையட்டும். அந்த அமைப்புகளுக்கு பிராணாவாயு தேவையில்லையா? அல்லது டாக்டர்கள் ( குறிப்பாக டாக்டர் கஃபீல் அகமது ) பிராணவாயுக்காக ஆலாய் பறக்கவில்லையா? டாக்டர் கஃபீல் அகமது பல இடங்களுக்கு அலைந்து, தன் பணத்தை செலவழித்து, பிராணவாயு வரவழைத்து, பல உயிர்களை காப்பாற்றியதாக செய்தி. அவருக்கு பாரத ரத்னா கொடுக்கலாம் என்று நானும் எனக்கு அதுவரை கிடைத்த செய்திகளை வைத்து எழுதினேன். அவரோ வேலை நீக்கம் செய்யப்பட்டார். காரணமாகத்தான்! அவருக்கு ஒரு சொந்த ஆஸ்பத்திரி உளது, மற்ற டாக்டர்களை போல. அரசு ஆஸ்பத்திரியிலிருந்து பிராணவாயு சிலிண்டர்கள் கூடு விட்டு கூடு பாய்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் கிடக்குமாம். அவரை திருடன் என்றே குறிப்பிட்டு இருக்கிறது, ஒரு நம்பகத்தனமான ஊடகம். எனக்கு இது வியப்பு அளிக்கவில்லை. நான் 1989ல் பார்த்திருக்கிறேன். அலஹாபாத் கமலா நேரு ஆஸ்பத்திரியில், அதற்கு எதிரே வரிசையாக, அரசு டாக்டர்களின் க்ளினிக்கள் இருக்கும். கோடிக்கணக்கான செலவில் வாங்கப்பட்ட ஆஸ்பத்திரி உபகரணங்கள் ஒடிக்கப்பட்டு கிடக்கும். எங்கள் அலுவலகத்தின் ஒரு கடை நிலை ஊழியருக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை தேவை. அந்த துறைத்தலைவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவர். அவரிடம் அந்த ஊழியரை அழைத்துச்சென்றேன். கனிவின் சிகரமாக திகழ்ந்த அவர், நான் சென்றபின் அவனிடம், ‘இது அபாயகரம். ஆஸ்பத்திரியில் செய்தால், நீ மரித்து போகலாம். நான் என் க்ளினிக்கில் செய்கிறேன். இத்தனை ரூபாய்!’ என்றாராம். பரிச்சயமாவது? மண்ணாங்கட்டியாவது? அந்த ஊழியர் காணாமல் போய்விட்டார். சில வாரம் கழித்து வந்தார். ஒரு கிருத்துவ ஆஸ்பத்திரி இலவசமாக எல்லாம் செய்தார்களாம். ஐயாவுக்கு புது பொலிவு. அவர் ஏன் கிருத்துவனாக மாறி நன்றிக்கடன் செலுத்த வில்லை என்று இன்று கூட புரியவில்லை. நானாக இருந்தால், ஏசு கிரிஸ்துவை பல்லக்கில் எழுந்தருள செய்திருப்பேன்! (ஐயங்காராகவே இருந்து கொண்டு, அதை செய்ய தயார்!)

    உடனே யோகி மீது கில்லி தண்டா ஆடாதீர்கள். நம்ம ஸ்டான்லியில் வந்த நோயாளிகள், காமாலையால் போனஸ் அடி வாங்கியிருக்கிறார்கள்.

    முடிந்தால், மேலும் எழுதுகிறேன். உதாரணமாக, வேலை நீக்கம் செய்யப்பட்ட உடனே ‘மாரல் க்ரவுண்ட்ஸ்’ ராஜிநாமா கொடுத்த தலைமை டாக்டர் ராஜீவ் மிஸ்ரா; புஷ்பா மெடிக்கலுக்கு பல லக்ஷம் பாக்கி; அவர்கள் எல்லா நோட்டீஸும் கொடுத்து விட்டாலும், இப்போது கூண்டில்; உண்மையை ஒத்துக்கொண்டு, அதற்கு பின் ஜகா வாங்கின அமைச்சர்பிரான்; பிணப்பரிசோதனை செய்யப்படவில்லை; ஆவணங்களும் காணாமல் போயின.

    இத்தகைய கூத்துக்களுக்கு மரணம் எப்போது சம்பவிக்கும்? I don’t care what Modi or Yogi or Amit says. I don’t care what condolence message President Trump sends or what Anbumani has to say. Words are dead, to my mind. We want positive deeds from the people also.
    -x-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://images.indianexpress.com/2017/08/gorakhpur-children-759.jpg

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 96

    தேசிய அகழாய்வு அருங்காட்சியகம் , ஏதன்சு, கிரேக்கம்.

    முனைவர் சுபாஷிணி

    கிரேக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் அதிர்வுகள் அதன் பழமையின் பெருமையைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இன்றைய கிரேக்கமும் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைப் போற்றும், அதன் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் தான் உள்ளன. கிரேக்கத்தின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளுமே அகழ்வாராய்ச்சி நடத்தினால் தோண்டத் தோண்ட புராதனச் சான்றுகள் கிடைக்கும் வகையில் தான் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் வழியாகத் தான் வரலாற்றுப் பழமை சொல்லும் சான்றுகளைத் தேட வேண்டும் என்ற வரையறை இன்றி நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த நாடு தான் கிரேக்கம். அதில் குறிப்பாகச் சொல்வதென்றால் கிரேக்கத்தின் தலைநகரமாக விளங்கும் ஏதன்ஸ் நகரைக் குறிப்பிட வேண்டும். இதில் முதன்மையாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது அக்ரோபோலிஸ். ஒரு தனி கட்டிடம் அல்லது ஊர் என்றில்லாது, ஒரு சிறு நகரமே தொல்லியல் அகழாய்வுச் சிறப்பு பெற்ற உலகின் மிக முக்கிய வரலாற்றுப் பகுதியாக கருதப்படுகின்றது . அக்ரோபோலிஸ் வகை கட்டிட கட்டுமான அமைப்பைச் சார்ந்து கட்டப்படாத உலக நாடுகளின் கட்டிடங்கள் மிகக் குறைவே எனலாம். அதிலும் குறிப்பாக, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் ஏனைய அனைத்து நாடுகளின் கட்டிட அமைப்பு பாணி பெரும்பாலும் அக்ரோபோலிஸ் வகை அமைப்பாக இருப்பதே இதற்குச் சான்று.

    அக்ரபோலிஸ் போன்றே அகோரா, அசுப்ரோசாலிகொ, ப்ரவுரன், கிரேட்ட, டெலொச், டெல்ஃபி, டிமினி, எப்பிடவுரஸ் ​டொடோனா, ​ மாரத்தோன், ஒலிம்பியா போன்ற அகழாய்வு நகரங்களையும் நாம் குறிப்பிடலாம். நிலத்துக்கு மேல் உள்ள சான்றுகளும், நிலத்துக்கு அடியில் அகழ்ந்து தோண்டி கண்டெடுத்த சான்றுகளும் சொல்லும் வரலாற்றினை மேலும் வளப்படுத்தும் வகையில் கிரேக்கத்தின் கடற்கரையோர அகழாய்வுகளும் தீவுகளில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழாய்வுகளும் புதிய வரலாற்றுச் சான்றுகளை வழங்கியவாறு இருக்கின்றன.

    2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏதன்ஸ் நகருக்கு சில நாட்கள் பயணம் சென்றிருந்தேன். இந்தப் பயணத்தின் போது ஏதன்ஸ் நகரைச் சுற்றிலுமுள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பார்வையிடுவதிலும் அங்குள்ள சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்த்து அங்கு ஆய்வுகளைச் செய்வதாகவும் எனது நாட்கள் கடந்தன. அந்தப் பயணத்தில் நான் சென்று வந்த அருங்காட்சியகங்களில் ஒன்று ஏதன்ஸ் தேசிய அருங்காட்சியகம்.

    ​as1

    19ம் நூற்றாண்டு வாக்கில் ஏதன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளைச் சேகரித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. ஆயினும் பின்னர் ஏதன்ஸ் நகருக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் கிரேக்கத்தின் மிகப் பெரிய அருங்காட்சியகம் என்ற சிறப்பு பெற்ற அருங்காட்சியகம் இது என்பதோடு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இது என அறியப்படுகின்றது. 11,000க்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் போது இது எவ்வளவு பெரிய ஒரு அருங்காட்சியகம் என்பதை ஓரளவு வாசிப்போரால் ஊகிக்க முடியுமல்லவா?

    1866ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. எலனி டொசொடா என்பவர் வழங்கிய நிலத்தில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் கட்டப்பட்டது. இங்குள்ள சேகரிப்புக்களை நான்கு பெரும் பகுப்புக்களாகப் பிரித்து விடலாம்.
    வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய நாகரிகத்தின் தொல்லியல் சான்றுகள் – கி.மு 6000 லிருந்து கி.மு. 1050 வரையிலான தொல்லியல் சான்றுகளின் சேகரிப்புத் தொகுப்புக்கள்.

    சிற்பத் தொகுதி – கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 5 வரையிலான சிற்பக் கலை வடிவங்களின் சேகரிப்புக்கள்.

    குடுவைகளும் பானைகளும் – பண்டைய கிரேக்க நாகரிகத்தின் சான்றாகத் திகழும் பானை வடிவங்களின் தொகுப்பு. இந்தப் பானை வடிவங்களின் மேல் கீறப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களின் வரலாற்றுச் செய்திகளைத் தருகின்ற ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த சேகரிப்பில் இவற்றில் பெரும்பாலானவை கி.மு 11ம் நூற்றாண்டு தொடங்கி ரோமானிய பேரரசின் காலம் வரையிலான சேகரிப்புக்களே.
    இரும்புக்கால சேகரிப்புக்கள் – வெவ்வேறு வகையான சிற்பங்கள், சிறிய கைவினைப் பொருட்களின் வடிவங்கள் ஆகியவற்றின் சேகரிப்புக்கள்.

    இவை தவிர உலக நாகரிகங்களில் புகழ்பெற்ற பழம்பெருமை கொண்ட எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் சேகரிப்புக்களுடன் சைப்ரஸ் தீவின் சேகரிப்புக்களும் இடம்பெறுகின்றன.

    இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் ஏராளம். ஒவ்வொன்றுமே தனித்துவம் பெற்றவையே என்றாலும் வரலாற்றுப் புகழ் மிக்க சில அரும்பொருட்களை மட்டும் ஓரளவு விளக்குவது அவசியம் எனக் கருதுகிறேன்.

    ​as2

    இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் முதலில் நுழைந்ததும் நம்மை வரவேற்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்து தொல்பொருட்களின் சேகரிப்பு. அங்கு மிக நேர்த்தியாக முதலில் நம் பார்வையில் தென்படுவது “Thinker” சிற்பம். கி.மு. 4500லிருந்து கி.மு. 3300 பழமையானது என அறியப்படுகின்றது இந்தச் சிற்பம். சிந்தனையில் ஒரு மனிதன் ஆழ்ந்திருப்பது போல இதன் வடிவம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் சிந்திக்கும் மனிதனின் சிற்பம் என்பது கிரேக்கத்தினை உருவகப்படுத்தும் மிகச் சிறந்த ஒரு சிற்பம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது. உலக சிந்தனையாளர்கள் வரிசையில் நீங்கா இடம்பெற்ற சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரின் சிற்பங்கள் ஏறக்குறைய இவ்வகையில் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் நாம் தொடர்புப்படுத்திக் காணலாம். ஐரோப்பாவின் பெரும் நகரங்களில் ஆங்காங்கே உள்ள சிற்பங்களில் சிந்திக்கும் மனிதனின் வடிவம் செம்பிலும் கருங்கல்லிலும் சற்றே வேறு வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த வடிவமே இதுவரை கண்டெடுக்கப்பட்ட சிந்திக்கும் மனிதனின் ஆரம்பக்கால மிகப் பழமையான சிற்ப வடிவமாக அறியப்படுகின்றது.

    ​as3
    “The Nurse” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் சற்றே நுணுக்கமானது. இச்சிற்பத்தில் தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட வகையில் இது அமைந்துள்ளது. கி.மு.4800 லிருந்து கி.மு.4500 ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட சிற்பம் என இதனை வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஒரு பெண் ஒரு குழந்தையை மிகுந்த வாஞ்சையுடன் அணைத்துப் பாதுகாப்பது போல அமைக்கப்பட்ட சிற்பம் இது. நாற்காலி பயன்பாடு என்பது இக்கால கட்டத்தில் ஏதன்ஸ் பகுதியில் இருந்தது என்பதற்குச் சான்றாகவும் இச்சிற்பம் இருக்கின்றது.

    ​as4
    டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ நாவலைப் படித்தவர்களோ அல்லது அதன் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தவர்களோ Death Mask என்பதைப் பற்றி அறிந்திருக்கலாம். கி.பி. 14ம் நூற்றாண்டு வாக்கில் ப்ளேக் நோயினால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததை குறியீடாகக் காட்டும் இன்ஃபெர்னோவின் இறப்பு முகமூடி. அது மெழுகால் செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் மைசேனியன் நாகரிகத்து மக்களால் செய்யப்பட்ட Death Mask ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த முகமூடியோ முழுதும் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி. கி.மு.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி என இது அறியப்படுகின்றது. தாடியுடன் கூடிய ஒரு மனிதனின் முகமாக இது அமைந்துள்ளது. காதுப் பகுதியில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இறந்து போல ஒரு அரச குலத்தவர் அல்லது பிரபுவின் முகத்தின் மீது வைத்து மூடப்பட்ட வகையில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. இன்று இந்தத் தங்க முகமூடி ஆண்டுகள் பல கழிந்தாலும், தான் அழியாமல் ஏதன்ஸ் அகழாய்வு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஒவ்வொரு அரும்பொருட்களையும் பற்றி விளக்கிக் கொண்டே செல்லலாம். மனிதர்கள் இறந்தவுடன் அவர்களது உடலைப் பானைக்குள் வைத்து அதனைப் புதைக்கும் முதுமக்கள் தாழி எனப்படும் பானைகள் இந்த அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவை மட்டுமன்றி அக்ரபோலிஸ், ஒலிம்பியா போன்ற மிகப்பெரிய தொல்லியல் அகழ்வாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமானச் சான்றுகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    ​as5
    இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூலகமும் இருக்கின்றது. 25,000க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. பெரும்பாலானவை அகழ்வாராய்ச்சி தொடர்பானவை. சில நூல்கள் 17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை 19ம், 20ம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்லியல் துறை சார்ந்த நூல்களே.

    பணடைய கிரேக்கத்த்க்கும் தமிழகத்துக்கும் நீண்ட நெடிஅ கடல்வழித் தொடர்புகள் இருந்தன. கிரேக்கத்திலிருந்து வணிகர்களும் பண்டைய தமிழகத்திலுரிந்து வணிகர்களும் இரு நாடுகளிலும் வணிகம் செய்தனர் என்பதை மறந்து விடலாகாது. இதனைக் குறிக்கும் வகையிலான குறியீடுகளைக் கொண்ட பானைகளும் சிற்பங்களும் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அந்த சிந்தனையோடு காணும் போது தமிழக வரலாற்றாய்வாளர்கள் இந்த அருங்காட்சியகம் சென்றும் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வது மிகப் பயணளிக்கும் என்பதில் ஐயமில்லை.

    Share
  • அவள் நிற்பதை நோக்கினேன்

     unnamed

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    பதினேழு வயதுப் பாவை அவள்,

    புரியுதா நான் சொல்வது !

    ஒப்பிட இயலா தவள் கண்ணோக்கு !

    எப்படி வேறொ ருத்தி யோடு

    நடனம் ஆடுவேன்,

    அங்கவள் நிற்பதைக் காணும் போது ?

    இப்போ தவள் பார்ப்ப தென்னை,

    நானும் பார்ப்ப தவளை !

    கண்டதும் காத லுற்றேன்,

    மற்றவ னோடவள் சேர்ந்தினி

    நடனம் புரிவாளா ?

    அங்கவள் நடனம் ஆடும் போது, அடடா

    பொங்கி எழுமென் இதயம்,

    பூரித் தோடும் அறை நெடுவே ! அவள்

    கரத்தை என் கரம் பற்றி,

    இரவு பூராவும் நடனம் ஆடினோம்,

    ஒருவரை ஒருவர்

    இறுகக் கட்டிக் கொண்டு;

    காதல் கொண்டேன், நானவள் மீது

    காலம் கடத்தாது !

    வேறொ ருத்தி யோடு இனிநான்  

    ஆடு வேனோ நடனம் ?

     

    Share
  • நன்றியுணர்ச்சி

    (எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    கோடியைக் கொடுத்து நிற்போம்

    கொடைதனில் சிறந்து நிற்போம்

    வாடிய வாட்டம் காணில்

    மனமெலாம் இரங்கி நிற்போம்

    கூடிய மட்டும் நல்லாய்

    குணமுடன் நடந்தே நிற்போம்

    ஆருமே சொல்ல மாட்டார்

    அதன் பெயர் நன்றியாகும் !

     

    பிள்ளையின் பின்னால் நின்றாலும்

    பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்

    கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்

    கருணையுடன் கடமைகளைச்  செய்தாலும்

    உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்

    ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்

    நல்லவரே எனும்நினைப்பும் வாராதே

    நன்றியுணர்வு என்பதுவுமே   மலராதே !

     

    நாடுமொழி இனம்காத்த பெரியவர்கள்

    நலம்துறந்து நலிந்துநின்ற மூத்தோர்கள்

    வாழ்வெல்லாம் பிறருக்காய் உழைத்தவர்கள்

    வதைபட்டு அடியுண்ட தியாகிகள்

    நோயுண்டார் தனைப்பார்க்கும் நல்மனத்தார்

    நொருங்குண்டார் தனைத்தேற்றும் பெருமனத்தார்

    வாழ்நாளில் காணாத ஒன்றென்றால்

    வாராத நன்றியுணர் வொன்றேயாம் !

     

    பிள்ளைகளைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள்

    பேணிநின்று வளர்திடுவார் பெரும்பொறுப்பாய்

    இல்லையெனச் சொல்லாது கொடுத்திடுவார்

    எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள்

    அள்ளவள்ள   நீரூறி   வருமெனவே

    அவர்கனவு கண்டுநிற்கும் வேளைதனில்

    உள்ளமதை ஒருபக்கம் வைத்திடுவார்

    ஒருநாளும் நன்றிதனை உரைக்கமாட்டார் !

     

    எமைப்படைத்த   இறைவனுக்கு நன்றிசொல்வோம்

    எமையீன்ற பெற்றவர்க்கும் நன்றிசொல்வோம்

    எழுத்தறிவை ஊட்டியெம்மை உயர்த்திவிட்ட

    எங்குருவர் யாவர்க்கும் நன்றிசொல்வோம்

    உதவிநிற்கும் கரங்களுக்கும் நன்றிசொல்வோம்

    உடனுறையும் நட்பினுக்கும் நன்றிசொல்வோம்

    உணர்வில்லா மனிதர்களாய் வாழுவோரே

    நன்றியெனும் உணர்ச்சியினை நசுக்கிவிட்டார் !

     

     

    Share
  • மனைவி அமைவதெல்லாம்!

     ரா.பார்த்தசாரதி

     

    இளைஞனே !   மனைவியை தேர்ந்தெடுப்பதில்  எச்சரிக்கையாய் இரு

    அவசரத்தில் கல்யாணம் பண்ணி  சாவாசத்தில் சங்கடப்படாமல் இரு

    புற அழகைப் பார்க்கும்போது உடலும், மனமும இச்சை கொள்ளாமல் இரு.

    பார்த்தாலே கவர்ந்து இழுக்கும் அழகைக் கண்டு மயங்காமல்  இரு.

     

    பூரித்து நிற்கும் சரீரத்தில் உன் பார்வை லயித்துவிடாமல் கவனமாய் இரு

    எந்த பெண்ணை பார்த்தாலும், சரியான கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பு

    ஆத்ம பூர்வமாய், பார்க்கும் பார்வை உனது எண்ணத்தில் தோன்றட்டும்

    காதல், அன்பு  என்பது ஆத்மாவின் ராகம் அல்ல, சரீரத்தின் தாளமே !

     

    பெண் பேசும் போது, கனிவு, மரியாதை தெரிந்தவளா என எண்ணிப் பாரு

    அகங்கார பேச்சு, கட்டளை இடும் தோரணைகளை நினைத்துப் பாரு

    படித்தும் கர்வம் கொள்ளாமல், ஆடம்பரம்  இல்லாமல் இருப்பதை பாரு

    உன்  வார்த்தைக்கும், பேச்சுக்கும் மதிப்பு அளிப்பவளா என எண்ணிப் பாரு!

     

    அழகும், ஆடம்பரமும், நிலையற்றது, குணம் ஒன்றே மதிப்பளிக்கும்

    பெண்ணின் பார்வை ஆணை நோக்கும்போது அச்சம்,நாணம் தோன்றும்

    காலப்போக்கில் ஆண், பெண் வேலைக்கு செல்வதால் இவை மாறும்

    ஆடவனின் அழகு அதிர்ச்சி தந்தாலும், தன் குல இயல்புடன் நோக்கவேண்டும்

     

    மனைவி கணவனின் சினத்தை தனிப்பவளாக இருக்க வேண்டும்

    கோபத்தை எண்ணெய் ஊற்றி பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும்

    கணவன் அறிவாளியானாலும்,கெட்ட மனைவியால் வாழ்க்கை பாழ்படும்

    மனைவி அறிவாளியாக இருந்தால், மூடனும் அறிவாளியாக ஆவான் !

     

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே

    கணவன் பெருமை அடைவதெல்லாம் மனைவி வந்த நேரமே

    மனைவி உணவு அளிப்பதில் தாயாக இருக்கவேண்டும்

    மனைவி மந்திரியாகவும்,கட்டிலில் கணிகையாகவும் இருக்க வேண்டும்

     

    கணவன் என்றாலே கண் + அவன்  என்பதாகும்

    அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்

    மனைவி, கணவன் இடையே   ஊடல், கூடல் இருக்கும்

    ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வாழ்க்கை இனிக்கும்!

     

     

    Share
  • மழை நீர் போல..!

    பெருவை பார்த்தசாரதி

     

    ஞாலத்தே பெறும்ஞானமும் சிந்திக்கும் திறனும்..

    ……….தானாகவந்து உன்னிடத்தில் சேர்ந்திடாது தம்பி.!

    காலத்தே பெய்யும் மழைநீர் போல..யெக்

    ……….கலையுமெதுவும் இயல்பாய் நம்மிடத்தே வாராது.!

    காலமாற்ற மென்பதெல்லாமே நம்கையில் தான்..

    ……….கனவுகள் நனவாவதும் நம்செய்கை யினால்தான்.!

    பலமான சிந்தனையும் எழுத்தும் பாருலகிலுன்..

    ……….பிறந்தஊர் பெருமை பாடவும் கைகொடுக்கும்.!

     

    கொஞ்சம் மழைநீர் பூமியில் விழுந்தாலேபோதும்..

    ……….நஞ்சைபுஞ்சை நிலமெலாம் வளம் கொழிக்கும்.!

    பஞ்சம் பட்டினியால் பரிதவிப்போர் ஆருமிலை..

    ……….நான்கு திங்கள் மழைநீரின் கொடையருளாலே.!

    அஞ்சிட வேண்டா ஆருமிங்கே..எங்களூர்..

    ……….அயலாருக் கடைக்கலம் கொடுப்பதற் கஞ்சாது.!

    பஞ்சுக்கிடங்கும் பருத்தி அரிசி ஆலையோடு..

    ……….பஞ்ச அருவியின் பெருமைபுகழை நீரறிவீர்.!

     

    குயிலாடும் மரம்செடி கொடியினை வருடியே..

    ……….குழலோசை போலவே ஒலியெழுப்பி வரும்.!

    மயிலாடும் உயர்மலைப் பாறைதனில் எழுந்தே..

    ……….மணம்பரப்பி வயல்வெளியில் துள்ளியோடும்.!

    ஒயிலாக மழைநீர்போலத் தவழ்ந்து வந்துமனம்..

    ……….ஒன்றிச் செயல்படவும் வைக்குமது.!அதிகாலைத்

    துயிலெழ வைக்குமந்த மலையருவியின் சாரலது..

    ……….தழுவிடும் பாறைக்கு மட்டுமேயது சொந்தமாகும்.!

     

    செழிப்பான சோலைகள் சூழ்ந்த எம்மூரைச்..

    ……….சிறப்புடனே கண்டுகளிக்க அயலார் வருவர்.!

    வழிமுழுதும் நிழல்தரும் அடர்ந்த மரமுண்டதில்..

    ……….விழும் நிழலில் விலங்கினங்கள் இளைப்பாரும்.!

    பொழிகின்ற மழைநீர் போலேகாண்பர் உள்ளத்துள்..

    ……….பொங்கு மின்பத்தாலே ஆடிப்பாடவும் தோன்றும்.!

    விழிகளிலே ஆனந்தம் தாண்டவ மாடுவதால்..

    ……….வாழியவென்றே எம்மூரை எவரும் வாழ்த்துவர்.!

     

    =========================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::12-08-2017

    Share
  • பறவை மோதிய தடம்?

    இல.பிரகாசம்

     
    ஆகாயத் தாமரைகள்
    அலைகளோடு
    வேரூன்றி வாழப் பழகிக் கொண்டன
    போலும்!

    இரட்டைத் துடுப்புகளுக்கு
    இனிய வரவுகளை காட்டுகின்றன
    அப்போதும் அலைகள்
    முன்னோக்கிச் செல்கின்றன!
    ஏரியில் தனியனாய் நான்!

    “நான்” புறவெளி
    சிந்தை அலைகளின் மீது!
    ஒரு பறவை தன் சிறகுகளால்
    அலையை மோதிய தடம எங்கே?

    Share
  • திருப்பாவையில் அர்த்தபஞ்சக ஞானம்

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை: 

    அன்ன வயல் புதுவையாம், திருவில்லிப்புத்தூரின்கண் அவதரித்து, அரங்கநகராள்வாருக்குப் பூமாலையுடன், பாமாலையும் சூட்டிச் சிறந்தவர், ஆண்டாள் நாச்சியார். அவர்,  சீவான்மாக்களை விண்ணேற்ற, பூமிப்பிராட்டியின் அம்சமென, மண்ணில் உதித்தவர்; பாடித் தந்த சொல்மாலையால் அருள்மணம் பரப்பி, அரங்கநகரானைத் தனது பக்திவலையில் அகப்படுத்திக்கொண்டவர்; அவர் அருளிச்செய்த, ‘திருப்பாவை’ப் பாசுரத் தொகுதியானது, நம்மைப் பிறவியாகிய பெருவலையிலிருந்து மீட்டருளவல்லது; ‘அர்த்தபஞ்சக ஞானம்’ என்னும் மதிநலம் விளங்கச்செய்வது; நிறைவுற அருள்நெறி காட்டி, ஆன்ம ஈடேற்றத்துக்கு வகைசெய்வது; அவ்வகையில், இறைநிலையும், உயிர்நிலையும், அருள்வகையும், அருள்வழியும், அருள்வகைக்குரிய தடையுமாகிய ஐம்பொருள் அறிவும், திருப்பாவையில் வலியுறுத்தப்பெறுகின்ற வகையினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அர்த்தபஞ்சக ஞானம்:

    சீவான்மாக்களாகிய நாம், பெருமாளாகிய பரமான்மாவை என்றும் மறவாது அடிமை பூண்டிருப்பதையே உண்மைஇயல்பாகக் கொள்ள வேண்டியவர்கள். பரமான்மாவும், யாதொரு நியதியும் இன்றி,  நம்மைக் காத்தருள்வதயே தமது இயல்பாகக் கொண்டவர். ஆயினும், நாம் அஞ்ஞானச் சூழலில்பட்டு, பரமான்மாவுக்கு  மட்டுமே அடிமைப்பட்டிருத்தலாகிய சேஷத்துவத்தை மறக்கின்றோம்; அவ் அறியாமையினால் வினைவழிப்பட்டு, பிறவித்துன்பத்தில் உழல்கின்றோம். இத்துன்பத்தினின்றும் ஈடேற்றவே இறைவனும் நமக்குப் பிறப்புகளைத் தந்தருள்கின்றார். அப்பிறப்புகள், இறைவனை மேன்மேலும் அறிதற்கும், அவரது திருவடியை மறவாமல் பணிதற்கும் வாய்ப்பாக அமைந்தால், பிறவிச்சுழலிலிருந்து நாம் கடைத்தேறலாம். மாறாக, இறைவனை மறந்து, தற்சுதந்திரத்தால் செருக்கித் திரிதலும், அதனால், பிறப்பின் பயன் பாழாதலும், பிறப்பின் பெருவாயில் நீள்தலுமே ஓயாது நிகழ்கின்றன.

    இவ்அவலத்தைக் குறித்த அறிவுறுநிலையே, சீவான்மாக்களுக்குத் தம்மையும், தம்மின் மேலான இறைவனையும், இறைவனிடத்தில் அடிமைபூணுதலின் இன்றியமையாமையையும், அடிமைத்திறத்துக்குரிய வழிகளையும், அவ்வழிமுறைக்குரிய தடைகளையும் அறிவுறுத்தும். திருப்பாவைப் பாசுரங்கள், இவ்ஐம்பொருள்கள் குறித்தும் விளக்குகின்ற, அர்த்தபஞ்சகப் புதையலாகத் திகழ்கின்றன.

    இறைவனின் இயல்பு: ‘நாராயணனே பறைதருவான்’:

      பாவைநோன்பினை வலியுறுத்துவதாகிய திருப்பாவையின் முதலாம் பாசுரத்தில் பாவைநோன்புக்கான பயனை, நாராயணனே தந்தருள்வான் என்று ஆண்டாள் நாச்சியார் அறுதியிட்டு உறுதியாக அறிவுறுத்துகிறார். பரமான்மாவாகிய பெருமாள், தானே எவர்க்கும் தனி முதலாக விளங்குபவர்; ‘ஏகமூர்த்தி’ என்று இப்பெருநிலையினை ஆழ்வார்கள் ஏற்றிப்போற்றுவர். பரமான்மா, இப்பெருநிலையில், ‘ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ்’ ஆகிய அறுவகைக் குணங்களும் நிறைந்த தனிமுதலாக விளங்குபவர்.

    இவர்தம் ஆணைவழியே, சங்கர்ஷணனும், பிரதியும்னனும், அநிருத்தனும், மும்மூர்த்திகளாக இயங்கவல்லவர்கள். ஆயினும், பெருமாளிடத்தில் விளங்குகின்ற அறுவகைக் குணநிறைவு, மும்மூர்த்திகளுக்கு அமைவதில்லை. அவரவரும் தமது தொழில் நிலைக்குரிய குணங்களை மட்டுமே பெற்றிருப்பர்.  மும்மூர்த்திகளும் பெற்றுள்ள திருக்குணங்கள் பெருமாளால் வழங்கப்பட்டவையும், அவர்கள் மூவரும், பெருமாளின் ஆணைவழியே செயல்புரிபவர்கள் என்பதும் தத்துவவிளக்கம். எனவேதான், ஆண்டாள்நாச்சியார் நம்மைப் பரமான்மாவாகிய  பெருமாளிடத்தில் நேரிடையாகச் சரண்புகுத்துகிறார். அந்நோக்கில், பெருமாளின் பரத்துவத்தை நமக்கு உறுதிபட அறிவுறுத்துபவராக, ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்று பாடியருளியுள்ளார்.

    ஆன்மாவின் இயல்பு: அறியாமைத் துயில் நீக்கம் 

    திருவரங்கக் கலம்பகம், சீவான்மாக்களின் அறியாமையாகிய இயல்பினைச் சுட்டுகின்றது. ‘புலன்கள் சிற்றறிவைக் காட்ட, அதன்வழியே நாளும் சிறுசெயல்கள் செய்து வாழ்கின்ற சீவனே!’, ‘உனது உண்மைஇயல்பை நீ அறிவாயோ?’. ‘நீ ஐம்பெரும் பூதங்களும் அல்லை; சிற்றின்பச் சுவை கூட்டுகின்ற ஐம்பொறிகளும் அல்லை; அவற்றின் வழியான சிற்றறிவும் அல்லை; உனக்கெனத் தற்சுதந்திரமும் இல்லை; இதனை நீ அறிதல்வேண்டும்’; ‘திருமகளை மார்பில் தாங்கிப் பரமபதத்தில் நிலைக்கின்றவனும், வாமனனாகி வந்து மாவலிக்கு அருளியவனுமாகிய திருஅரங்கனுக்கு என்றும் அடிமையாக உள்ளவன் நீ!. இதனை உணர்தலே அனைத்துலகிலும் சிறந்த தவமாகும்’ என்பது அப்பாடலின் கருத்தாகும். இவ்வாறு பெருமாளுக்கு ஆட்பட்டு இன்புறவேண்டிய ஆன்மநிலையினை ஆண்டாள்நாச்சியார்’ ‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற ஆறாம் பாசுரம் முதலாக, ‘எல்லே இளங்கிளியே’ என்ற பதினைந்தாவது பாசுரம் ஈறாக அருளிச் செய்கின்றார்.

    ‘பெருமாளே எளிவந்த கருணையுடன் கண்ணபெருமானாக ஆயர்ப்பாடியில் இரங்கியருளியபடியால், அவனைப்பணிந்து இன்புறுவோம்’ என்று ஆண்டாள்நாச்சியார் , ஆயர்க்குலத்துத் தோழியர்க்கு அறிவுறுத்துகின்றார். அதற்கென்று, தோழியரைத் துயிலுணர்த்துதல் என்னும் நிலையானது, ஆன்மாவின் சிற்றறிவுச் சிறுமைகளை ஆசாரியநிலையிலிருந்து சுட்டி, அச்சிறுமைகள் நீங்க, அருள்வெள்ளத்தில் மூழ்கி எழச்செய்தல் என்னும் பக்திநிலையினைக் குறிப்பதாகும். மேலும், இப்பத்துப் பாசுரங்கள், ‘யோகத்துயில் கொண்ட தோழியை, வெளியே இருந்து தோழியர் எழுப்புதல்’ போன்று அமைந்துள்ளன. விடமுண்டவர்க்கு, அவ்விடம் உடலின் தன்மைக்கேற்ப விளைவினைத் தரும். சிலர் மயக்கமுறுவர்; சிலர், அந்நிலையினும் மாறுபட்டதாகித் துடிதுடிப்பர். அதுபோன்றே, தன்னிலை மறந்து பெருமாளை மட்டுமே அனுபவித்தலாகிய அடிமைத்திறமும் ஆயர்குலப் பெண்களிடத்தில் வேறுவேறாக அமைந்ததனை இத்திருப்பாடல்கள் சுட்டுகின்றன எனலாம்.

    சீவான்மாக்கள் அனைத்தையும் ஆள்பவராகிய பெருமாள், நம்மைக் காப்பதையே தன்னியல்பாகக் கொண்டவர். ஆதலால், பெருமாள், நாம் வேண்டுவனவற்றைத் தந்து காலம் தாழ்த்துகின்றநிலையிலும், நாம் அவரையே பணிபவர்களாக, அவரது இருப்பிடத்தைச் சென்றுசேர்ந்து, பணிந்து அருள்பெறுவோம்’ என்ற உபாயஞானமும் இப்பாசுரங்களில் வலியுறுத்தப்பெற்றுள்ளன.

    ஆன்மாவுக்குரிய பயன்கள்: 

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களே நாம் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகும். அறமாவது, சொல்லாலும், செயலாலும் நிலைமாறாமை. ‘பெருமாளே, நமக்கு அருளவல்லவர்!’ என்னும் நிலையிலிருந்து என்றும் மாறாமையே, பக்திநிலைக்குரிய அறமாகும். அவ்வகையில், பகவானுக்குரிய அறமாவது, பெருமாளது வாய்மொழிகளாலேயே உறுதிபட மொழியப்பட்டதாக ஆண்டாள்நாச்சியார் தெரிவிக்கின்றார். ஆயர்குலத் தோழிகளுடன் நந்தகோபரது வளமனையினை அடைந்த நாச்சியார் அங்கு, திருமாளிகையின் திருவாயிலைத் திறந்தருள வேண்டுமென வாயில்காப்போரை வேண்டுகின்றநிலையில் தமதுரையாக வெளிப்படுத்துகின்றார்.  ‘ஆயர் சிறுமிகளாகிய எமக்கு, திருவருளைக் குறைவின்றித் தந்தருள்வதாகக் கண்ணபிரான், எம்மிடத்தில் நேற்றே உறுதியளித்தார்; அவரைக் கண்டு திருவருளைப் பெறுவதற்கு வந்துள்ளோம்!; அதனால், வாயில் காப்பவரே! மாளிகையின் திருக்கதவினைத் திறந்தருள்க! என்று வேண்டுகிறார். இதன்வழியே,  ‘திருவருளே ஆன்மா அடையத்தக்க பெரும்பயனாகும்’ என்பதும், திருவருளைப் பெறுவதற்கு, ‘பெருமாளை என்றும் மறவாமல் பணிவதாகிய பக்திஅறமே கருவியாகும்’ என்பதும்,  அப் பேரறிவுநிலையே,  பொருள், இன்பம், வீடு முதலாகிய பிற உறுதிப்பொருள்களுக்கும் வழிவகுக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

    திருவருளை அடையும் வகை: 

    சரணாகதியாகிய பணிவே சீவான்மாக்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரந்தருள்கிறது. நிலைமாறாத அப்பக்தித்திறத்துக்கு, ஆசாரியரே நம்மை வழிநடத்தவல்லவர். அவரே, பெருமாளிடத்திலான சரணாகதியில் சோதனைகளையும் சாதனைகளாகக் கண்டு தெளிகின்ற பக்குவத்தைத் தந்தருள்கின்றார். திருப்பாவையின்  ‘ஆழிமழைக்கண்ணா’ என்று தொடங்குகின்ற பாசுரத்தில், மழையை இறைவனது திருவருளாகவும், மழைக்கு நிலைக்களமாகிய மேகத்தை ஆசாரியராகவும், மேகம், மழைநீரைப் பொழிவதற்கு மூலமாகிய கடலை இறைவனாகவும் உருவகிக்கக் காணலாம். அவ்வகையில், திருவருள் பொழிவில் நாம் இன்புற ஆண்டாள் நாச்சியாரையே ஆசாரியராகக் கொண்டு உய்யலாம்.

    ஆசாரிய அபிமானம், நமக்குக் காட்டியருள்கின்ற சரணாகதியில் என்றும் நிலைத்திருப்பதற்கு, அடியார் இணக்கமே சிறந்த கருவியாகும். எனவே, அடியார்கட்குத் தொண்டு செய்தலாகிய பேற்றினையே ஆய்ச்சியர்கள் பெருமாளிடத்தில் வேண்டுகின்றனர்.

    ‘என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைக் கொள்வான்’ என்றமைந்த ஆயர்குலப்பெண்களின்  வேண்டுதலில்,  ‘சேவகம்’ என்பது, என்றும் மாறாமல் அடியவர்க்குத் தொண்டுசெய்கின்ற அடிமைத்திறத்தைக் குறிக்கிறது. பெருமாளின் அன்பர்களாகிய அடியவர்களிடத்தில் அன்புகாட்டுதலே சிறந்த அறமாகையால், அத்தொண்டுநெறியினை ஆண்டாள்நாச்சியார் மேலும் வலியுறுத்துபவராக, ‘திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்வோம்’ என்று பாடியருளியுள்ளார்.

    பணிவையும், தொண்டுநெறியினையும் கருவியாகக் கொண்டு செயல்படுகின்ற ஆயர்குலப் பெண்கள், ‘நந்தகோபரையும், யசோதையையும், பலதேவரையும் துயிலுணர்த்துகின்றனர். அதன்பின்பு, கண்ணபிரானது பள்ளியறை முன்பு நின்று, திருக்கதவம் தாள் திறந்தருள நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர். ‘அகலகில்லேன் இறையுமென்று, பெருமாளின் திருமார்பினை நீங்காத தேவியார், புருஷகாரமாகச் செயல்பட்டு, உயிர்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரக்கச் செய்பவர். பெருமாளை அழகாலும், ஆன்மாக்களை அறிவாலும் திருத்தவல்ல அவரது அணுகுமுறையே ‘புருஷகாரம்’ என்று போற்றப்பெறும்.

    பெருமாள்,  உயிர்கட்குக் கருணை செய்தலையே தமக்குரிய இயல்பாகக் கொண்டவராயினும், அவர் நொடிப்பொழுதும் அடியாரிடத்தில் பாராமுகமாக இருத்தலைப் பிராட்டி தாங்குவதில்லை. தம்மடியார்க்கு வேண்டுவனவற்றைக் குறைவின்றி வழங்கத் தாமும் ஒரு கருவியாவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    பெற்ற தந்தை, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றக் கூடியவரே. ஆயினும், தாயுள்ளமே அத்தேவைகளை உரியநேரத்தில், உரியவகையில், உரியவாறு பிள்ளைகளிடத்தில் கொண்டுசேர்க்கத் தீராத துடிப்புகொண்டு, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறது. அத்தகைய பிராட்டியின் தாயுள்ளத்தாலேயே, பெருமாளிடத்திலிருந்து நாம் இடையறாத திருவருளைப் பெற்றின்புறுகின்றோம். அவ்வகையில், புருஷகாரமாக விளங்கி, கண்ணபிரானின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக வேண்டும் என்றும், கண்ணபிரான் உடனே துயிலெழுவதற்கு நப்பின்னைப் பிராட்டி அருளவேண்டும் என்றும்  வேண்டுகின்றனர்.  எனவே, ‘பள்ளியறையின் திருக்கதவத்தினை விரைவில் திறந்தருள்க!’ என ஆயர்குலச் சிறுமியர்,  நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர்.

    ஆய்ச்சியர், கண்ணபிரானிடத்தில், ‘தாங்கள் துயிலெழுந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும்’ என இறைஞ்சுகின்றனர். ‘நாங்கள் நோன்பு நோற்பதற்கு, வெண்சங்கும், பறையும், பல்லாண்டு இசைப்போரும், மங்கலவிளக்குகளும், கொடியும், விதானமும் தந்தருள வேண்டும்’ எனக் கண்ணபிரானிடத்தில் வேண்டுகின்றனர். கண்ணபிரான் அவற்றைக் குறைவின்றி அருளினால், ‘ஐயமிடுதல், பிச்சையிடுதல் முதலானவற்றை உள்ளடக்கிய தொண்டுநெறியில் நோன்பும் இனிதே நிறைவுறும்’ என வேண்டுகின்றனர். நோன்பின் நிறைவில் அம்மகிழ்ச்சியினைக் கொண்டாடுவதற்கென, சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாத கடகம் முதலான அணிகளையும், பட்டாடையையும் பெற்று மகிழ்வோம்; அத்துடன், நெய்கலந்த பாற்சோறினைக் கூடியிருந்து உண்டு மகிழ்வோம்’ என்கின்றனர்.

    இங்குச் சுட்டப்பெறுகின்ற அணிகலன்கள், உடலழகுக்குப் பயன்படுவன அன்று; உள்ளத்தைப் பொலிவுறச்செய்கின்ற பக்தியினை அவை வளரச்செய்வன. கைகளை அலங்கரிக்கின்ற  ‘சூடகம்’ என்பது, பெருமாளைத் தவறாமல் கைகள் குவித்து வணங்குதலைக் குறிக்கும். தோள்களை அழகுபடுத்துகின்ற ‘தோள்வளைகள்’ என்பவை, ஆசாரியனால் அடியவனாக ஆட்கொள்ளப்பெறுவதன் அடையாளமாக, சங்கும் சக்கரமும் பொறிக்கப்பெறுதலைக் குறிக்கும். ‘தோடு’, ‘செவிப்பூ’ என்பன, ஆசாரியனிடமிருந்து பெறுவதாகிய திருமந்திர உபதேசங்களைக் குறிக்கும். காலணியாகிய  ‘பாடகம்’ என்பது, கால்களால் திவ்யதேசங்கள்தோறும் நடந்துசென்று, பெருமாளின் அர்ச்சைநிலைகளைக் கண்ணாரக் கண்டு தொழுகின்ற பக்தி அணுகுமுறைகளைக் குறிக்கும்.

    இறைநெறியில் ஆன்மாவுக்குத் தடையாவன: 

    இறைவனைப் பற்றுதலென்பது, நம்முயற்சியாக அன்றி, அவனருளாலே அனைத்துவகைப் பிறப்புகளுக்கும் அருளப்பெறுவது. இத் திருவருள் உறவினை ஆண்டாள் நாச்சியார், ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்கஒழியாது’ என்று திருப்பாவையில் சாற்றியுள்ளார். ஆயினும், சீவான்மாக்களாகிய நாம், அவ் உயர்வினை உணராது, உலகியலில் நாட்டம்கொண்டு, பிறந்த பிறப்பின் பயனை உணர்வதில்லை. உடலாலும், மனத்தாலும், செயலாலும் தீவினைகள் பல புரிகின்றோம். அதன்வழியே, துன்பப் பிறப்புகளுக்கு வாயில் அமைக்கின்றோம். இவ்வாறு திருவருளுறவுக்குத் தடையானவற்றை நீக்கியுய்ய ஆண்டாள்நாச்சியார் பாவைநோன்பின் வழி ஆற்றுப்படுத்துகின்றார்.

    தம் தோழியருடன் மேற்கொள்வதாகிய பாவைநோன்பில், தீக்குறளைச் சென்று ஓதாமை, செய்யாதன செய்யாமை,  ‘நான்’; ‘எனது’ என்ற தன்முனைப்பை வளர்க்கின்ற செய்கைகளைச் செய்யாமை எனக் கீழானவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகின்றார்.  சீர்மல்கிய ஆயர்க்குலச் சிறுமிகளுக்கு, ‘தொண்டினாலேயே இறைவனை அடையஇயலும்’ என்பதனை வலியுறுத்துகின்றார்.  ‘பெருமாள் அருளிய உலகஇன்பங்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் அவரைப் பணிவதனால், நமது சிற்றின்பஆவல், அவரையே பெற்றின்புறுவதாகிய பேரின்பத்தைத் தந்தருளும்’ என்கின்றார்.

    ‘நமது அறிவால் அவரைப் பணிகின்றோம்’ என்பதல்லாமல்,  ‘அவனருளால் அவரைப் பணிகின்றோம்’ என்னும் சரணாகதியில் உறுதிபடநிலைக்கச் செய்கின்றார். ‘கானகத்தில், பசுக்களை மேய்க்கின்ற ஆயர்குலச் சிறுமியராகிய நாங்கள் சிற்றறிவுடையவர்களே! ஆயினும், பக்திமேலீட்டினால் உமது திருப்பெயர்களை நாங்கள் அறிந்தவாறு சொல்லிப் பணிந்துள்ளோம்!’. ‘எமது குறைகளையும் குணமாகக் கொண்டருள்க!’ எனத் தமது தற்சிறுமையினை வெளியிட்டு ஆயர்குலச் சிறுமியர்கள் பெருமாளிடத்தில் சரண்புகுவதாகப் பாடியுள்ளார். மேலும், ‘மேற்கண்ட நன்னிலைகளுக்குத் தடையாகவுள்ள உலகியல் சிறுமைகளிலிருந்து, சிற்றுயிர்களாகிய நம்மை நீக்கியருளவேண்டும்’ என்றும் பணிகின்றார். அதற்கென, ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ எனப் பெருமாளிடத்தில் வேண்டுகின்றார். இவ்வாறு, ‘உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் உயர்தூய்மை உடையவர்களாக, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், நமது தீவினைகள் அனைத்தும், தீயினில் பட்ட தூசாக அழியும்’ என்கின்றார். அத்தூய்மை நிலையினில் எப்பொழுதும் நிலைகொள்வதற்குக் கருவியாக,  ‘அடியார் இணக்கத்தை’ வலியுறுத்துகின்றார். ‘தம்மைமறந்து, அடியவர்க்காக மட்டுமே சிந்திக்கின்ற தொண்டுநெறியினால்,  நம்மிடையே அன்புநெறி சிறக்கும்’;  அவ் உயர்மனப்பாங்கு, நமது உள்ளத்தாமரையில் பெருமாளை நிலைப்பெறச் செய்யும்’ என்பது திருப்பாவை காட்டுகின்ற பக்திநெறியாகும்.

    முடிவுரை:  

    ‘மார்கழி நீராடுதல்’ என்பது, ஆன்மாக்கள், திருவருள்வெள்ளத்தில் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதனைக் குறிக்கும். ஆற்றில் இறங்கிநிற்போன், தனது கைகளில் அகப்படுவதனைப் பாதுகாப்பிற்காகப் பற்றுதல் இயற்கை. அதுபோல, ஆழம் காணஇயலாத பக்திக்கடலில், நாம் பற்றி உய்கின்ற புணையாகப் பெருமாள், திருப்பாவையினை அருளியுள்ளார். தீவினைகளை நீக்கியருளவல்ல மாயனாகிய பெருமாளின் பரத்துவமும், தற்சுதந்திரமின்றி, அவனுக்கே அடிமைபூணுதலாகிய ஆன்ம இயல்பும், சிற்றுயிர்களாகிய நமக்கு,  திருவருளே  உற்ற பயனென்பதும், அடியவருடன் கூடியிருந்து அவர்க்குத் தொண்டுசெய்தலே திருவருள்நெறி என்பதும், உடல், உள்ள, செயல் சிறுமைகளே, திருவருள் நெறிக்குத் தடையாவன என்பதும் திருப்பாவை உணர்த்துகின்ற அர்த்தபஞ்சக ஞானமாகும்.

    Share