நன்றியுணர்ச்சி
(எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )
கோடியைக் கொடுத்து நிற்போம்
கொடைதனில் சிறந்து நிற்போம்
வாடிய வாட்டம் காணில்
மனமெலாம் இரங்கி நிற்போம்
கூடிய மட்டும் நல்லாய்
குணமுடன் நடந்தே நிற்போம்
ஆருமே சொல்ல மாட்டார்
அதன் பெயர் நன்றியாகும் !
பிள்ளையின் பின்னால் நின்றாலும்
பெரும்பாசம் கொடுத்துமே வளர்த்தாலும்
கள்ளமே இல்லாமல் உழைத்தாலும்
கருணையுடன் கடமைகளைச் செய்தாலும்
உள்ளமெல்லாம் உருக்கமே கொண்டாலும்
ஊணுறக்கம் தனைத்துறந்து நின்றாலும்
நல்லவரே எனும்நினைப்பும் வாராதே
நன்றியுணர்வு என்பதுவுமே மலராதே !
நாடுமொழி இனம்காத்த பெரியவர்கள்
நலம்துறந்து நலிந்துநின்ற மூத்தோர்கள்
வாழ்வெல்லாம் பிறருக்காய் உழைத்தவர்கள்
வதைபட்டு அடியுண்ட தியாகிகள்
நோயுண்டார் தனைப்பார்க்கும் நல்மனத்தார்
நொருங்குண்டார் தனைத்தேற்றும் பெருமனத்தார்
வாழ்நாளில் காணாத ஒன்றென்றால்
வாராத நன்றியுணர் வொன்றேயாம் !
பிள்ளைகளைப் பெற்றுவிட்ட பெற்றோர்கள்
பேணிநின்று வளர்திடுவார் பெரும்பொறுப்பாய்
இல்லையெனச் சொல்லாது கொடுத்திடுவார்
எள்ளளவும் தமைப்பற்றி எண்ணார்கள்
அள்ளவள்ள நீரூறி வருமெனவே
அவர்கனவு கண்டுநிற்கும் வேளைதனில்
உள்ளமதை ஒருபக்கம் வைத்திடுவார்
ஒருநாளும் நன்றிதனை உரைக்கமாட்டார் !
எமைப்படைத்த இறைவனுக்கு நன்றிசொல்வோம்
எமையீன்ற பெற்றவர்க்கும் நன்றிசொல்வோம்
எழுத்தறிவை ஊட்டியெம்மை உயர்த்திவிட்ட
எங்குருவர் யாவர்க்கும் நன்றிசொல்வோம்
உதவிநிற்கும் கரங்களுக்கும் நன்றிசொல்வோம்
உடனுறையும் நட்பினுக்கும் நன்றிசொல்வோம்
உணர்வில்லா மனிதர்களாய் வாழுவோரே
நன்றியெனும் உணர்ச்சியினை நசுக்கிவிட்டார் !