“ஸ்ரீராம தர்ம சரிதம்” (5)
மீ.விசுவநாதன்
பகுதி: ஐந்து
பாலகாண்டம்
நாரதர் சென்றதும் வால்மீகி கண்டதும்
நாரதரின் நாமொழிந்த நல்லகதை கேட்டுள்
பூரணமாய் வாங்கிக் கொண்டார் வால்மீகி !
அவரின்தாள் பணிந்துபின் அவரைவழி அனுப்ப
தவயோகி நாரதரும் தான்மறைந்து போனார் !
சீடர்பரத் வாஜரைச் சேர்த்தழைத்துக் கொண்டு
காடதனின் காட்சியினைக் கண்டுவரப் புறப்பட்டார் !
கங்கைக்குப் பக்கத்தில் கற்கண்டாய்ப் பாய்ந்துவரும்
பொங்குநதி “தமஸா”வில் புகுந்துதான் நீராட
விரும்பினார் வால்மீகி ! விரைந்தங்கு சென்றார் !
திரும்பிய பக்கமெலாம் தெய்வீக முணர்ந்தார் !
ஞானியரின் நெஞ்சம்போல் நல்முத்தாய் ஒளிவீசும்
தேனினிக்கும் “தமஸா”வின் தீர்த்தக் கரையினிலே
வானுயர்ந்த மாமரங்கள் வாசமிகு பூச்செடிகள்
பானுவின் செங்கதிரைப் பக்குவமாய் உள்ளனுப்பும்
பயிற்சியைப் பெற்றதனால் பறவையினங் கூடிக்
அயற்சியைப் போக்கிடவோர் அழகான கூட மைத்து
காதற்கண் கொண்டு காலமெலாம் களித்திருந்து
நோதற்கே இடமின்றி நூறாண்டு கண்டிடலாம் !
“வேடன் கொன்ற அன்றில் பறவை”
அப்படியோர் கானகத்தில் “அன்றில்” பறவைகள்
எப்போதும் காதலிலே இயல்பாக விளையாடும் !
அதைப்பார்த்துக் குறிவைத்தே அடித்திட்டான் வேடன் !
உதைபட்ட ஆண்பறவை உயிரிழந்த காட்சியைக்
கண்டவுடன் பெண்துணை கதறியழும் குரல்கேட்டு
உண்டான துன்பத்தின் கோபத்தி(ல்) ஒர்சாபம்
வேடனுக்குத் தந்தார் விவேகமுள வால்மீகி !
“வேடனே காதற்புள் ளிரண்டி லொன்றைக்
கொன்றதனால் கொடியவனாம் உனக்கென்றும் அமைதியிலை
சென்றிடு” என்றங்கே சீறினார் ! சினமடங்கி
வருந்தினார்! தான்சொன்ன வார்த்தைகள் கவிதையாய்ப்
பொருந்தியத்தில் தெய்வீகப் பொருத்தங் கண்டார் !
“பிரும்மா வால்மீகி முன்தோன்றுதல்”
முனிவரின் கவிவரியில் முழுமுதலோன் முகத்தொளியின்
தனிக்கருணை பொழியுதென பரத்வாஜர் அகமகிழ்ந்தார் !
ஆனாலும் வால்மீகி ஆழ்மனத்தில் வேடன்
வீணாகக் கொன்றுவிட்ட ஆண்பறவைக் கோலந்தான்
தானாக மேல்வந்து தவித்திடச் செய்கிறது!
ஏனோவென் றறியாத இடர்பாட்டில் இருக்கையிலே
வானிறங்கி பிரும்மன் வால்மீகி முன்வந்து,
“மாமுனியே உன்னுள்ள மகத்துவத்தை நானறிவேன் !
கவலைவிடு! காட்டினிலே கண்டதோர் காட்சியும்
தவசியுந்தன் வாக்கினிலே தப்பாது வந்த
கவிப்பொழிவும் நானுனக்குக் காட்டிய நல்வழியே !
தவிப்புனக்கு அடங்கட்டும் ! தர்மத்தின் உருவான
இராமகதை முழுவதும் எல்லா உயிர்களும்
சேமமுறக் காவியமாய்ச் சிறப்பாக நீசெய்வாய் !
ஒவ்வொரு நிகழ்ச்சியும் உண்மையாம் தரிசனமாய்
எவ்விதக் குழப்பமின்றி எளிதாக அறிந்திடுவாய் !
நன்மையெது தீமையெது நன்றாகக் கூறும்
உன்கவியே உலகந்தான் உள்ளவரை வாழும் !
உட்பொருளும் இலக்கணமும் ஒன்றான பெருஞ்செல்வம்
இட்டமுடன் நீசெய்யும் இரகுவம்ச காவியத்தை
எல்லோரும் கொண்டாடி இன்புற்றி ருப்பார்கள் !
சொல்கின்றேன் நல்வாழ்த்து சுந்தரனைப் பாடுதற்கு!”
என்று பிரும்மாவா(ன்) ஏக
அன்று தொடங்கினார் அருள்ராம கதையே ! (43)
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் இரண்டாவது பகுதி நிறைந்தது)