Blog

  • நிம்மதியை நாடி

    நிர்மலா ராகவன்

    ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை. அவன் மனம் கனவுகளால் நிறைந்திருந்தது.

    பெயருக்கு வீடு என்றிருந்த ஒன்றை எரிமலைக்கு — மீண்டும் — பறிகொடுத்துவிட்டு, இனி என்ன செய்வது என்று புரியாது நின்றிருந்தபோதுதான் ஆதான் கூறினான்: “என்னோட மலேசியா வந்துடேன். போன தடவைதான் ஒங்கப்பா, அம்மா ரெண்டு பேரையும் பலிகுடுத்தாச்சு. நீயும் இங்கேயே கிடந்து சாகப்போறியா?”

    சுமத்ராவில் இருந்த ஸினபோங் மலை நானுறு ஆண்டுகளாக, `இதுவும் எரிமலைதானா!’ என்று வியக்கத்தக்கதாக இருந்தது. அதற்கே அந்த அமைதி அலுத்துவிட்டது போலும்! கடந்த நான்கு வருடங்களாக, 2013-யிலிருந்து, இடைவிடாது நெருப்புக்குழம்பைக் கக்கிக்கொண்டிருந்தது. எப்போதும் வானத்திலிருந்து சாம்பல் கொட்ட, `இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதானே!’ என்பதுபோல, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் ரம்லியைப்போன்ற ஒரு சிலர்.

    பிறந்ததிலிருந்து பழக்கமாகிவிட்ட இடத்தைவிட்டுப் போவதா! ரம்லி தயங்கினான்.
    “பாத்திமாவையும் கூட்டிட்டு வா,” என்று ஆசைகாட்டினான் நண்பன்.

    பாத்திமாவா?! டச்சுக்காரர்களின் வழிவந்திருந்த சிவந்த நிறத்துடன், உயரமும் பருமனாகவும் இருந்த அவள் எங்கே, கடும் வெயிலில் ஓடாய் உழைத்து சோனியாகப்போன தான் எங்கே!

    “அதோட அய்த்தையும் செத்துட்டாங்க. ஒண்ணும் புரியாம நிக்குது! கூப்பிட்டா வரும்”.

    எப்போது எரிமலைக் குழம்பு தன் தலையில் விழும் என்று பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்த நினைப்பே சற்று நிம்மதியாக இருந்தது.

    பாத்திமாவை உடன் அழைத்துக்கொண்டு ஃபெர்ரியில் ஏறியிருந்தான் ரம்லி. “உங்களுக்கெல்லாம் அங்கே வேலை செய்ய அனுமதி இல்லே. சும்மா டூரிஸ்டு விசாவில வர்றீங்க. ஆனா, அங்கே வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்ணறேன்! நல்லா சாப்பிடலாம். தங்க எடமும் குடுப்பாங்க,” அவர்களுடன் பயணித்த ஏஜண்டு கூறினார். “ஆனா ஒண்ணு. இமிகிரேஷனிலிருந்து யாராவது வந்தா மட்டும் ஓடி ஒளிஞ்சுக்கணும்!”

    “ஏன் ஒளிஞ்சுக்கணும்?” யாரோ கேட்டார்கள்.

    “சட்ட பூர்வமா வேலை செய்யற ஆளுங்களுக்கு முதலாளிங்க மலேசிய கவர்மெண்டுக்கு ஆயிரக்கணக்கில பணம் கட்டணுமில்ல? அதோட, ஒங்களை வேலைக்கு வெச்சா, குறைச்சலா சம்பளம் குடுக்கலாம்,” என்ற ஏஜண்டு, “இந்த ஒலகத்திலே எல்லாரும் போக்கிரிப் பசங்க!” என்றான், பெரிய சிரிப்புடன்.

    சில மாதங்கள் இன்பமாக கழிந்தன. கட்டட வேலை இடுப்பை ஒடித்தது என்றாலும், பாத்திமாவின் அணைப்பில், அவள் ஒவ்வொன்றையும் அவனைக் கேட்டுச் செய்த மரியாதையில் சொர்க்கத்தையே உணர்ந்தான் ரம்லி.

    அன்று காலையிலிருந்தே வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் பாத்திமா. பெருமையுடன் அவளைப் பார்த்தான் ரம்லி. இனியும் ஒற்றை மரமில்லை. தன் குடும்பம் தழைக்கப்போகிறது!

    “வாந்தி நிக்கவே இல்லியே! எத்தனை நாள்தான் விடுப்பு எடுக்கிறது!” என்று பாத்திமாவே முனகியபோதுதான், `இது கர்ப்பமாக இருக்காதோ?’ என்ற சந்தேகம் முதன்முறையாக உறைத்தது ரம்லிக்கு.

    “அஞ்சு நாளா இப்படியே வாந்தியும் பேதியுமா இருக்குன்னு சொல்றீங்களே! காய்ச்சல் வேற அதிகமாக இருக்கு. இது டெங்கிதான்!” என்றார் டாக்டர்.

    பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ், “ஒங்க வீட்டுக்கிட்டே கொசுத்தொல்லை அதிகமோ?” என்று மெள்ள விசாரித்தாள்.

    ரம்லி உதடுகளை இறுக்கிக்கொண்டான்.

    மெல்லிய மரப்பலகைகளால் ஆன சுவர். தரைக்கு கனமான அட்டை, கோணல்மாணலான உலோகத்தகடுகளே கூரை. உள்ளே தடுப்புக்கு கிழிந்த ஸாரோங். அதற்கு வீடு என்று பெயர். குளிப்பதிலிருந்து குடிப்பதுவரை அருகிலிருந்த குளத்து நீர்தான். இந்த லட்சணத்தில், கொசு இருக்கிறதா என்று கேட்கிறாள்! கொசுக்களின் இருப்பிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். அவ்வளவுதான்.

    “மொதல்லேயே வந்திருக்கணும்!” என்று அதிருப்தி தெரிவித்தார் டாக்டர்.

    மருத்துவச் செலவுக்குக்கூட காசில்லை, அதனால்தான் அவள் உடல்நிலையைப் பெரிதாக எண்ணவில்லை என்று ரம்லியால் சொல்ல முடியவில்லை. அவனைப் போன்றவர்களின் துன்பம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் இந்த டாக்டரைப்போன்ற பெரிய மனிதர்களுக்குப் புரியுமா? அசட்டுச் சிரிப்புடன் பரிதாபமாக விழித்தான்.

    பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாத்திமாவின் உடல் பூராவும் பல குழாய்கள். அவளுடைய கைகால்கள் எல்லாம் பருத்திருந்தமாதிரி தோன்றியது ரம்லிக்கு. கைகளோ தன்னிச்சையாக ஆடி, பக்கவாட்டிலிருந்த கட்டிலின் உலோகச் சட்டத்தில் தாளம் போட்டன.

    `காலில் வலி,’ என்று உதைக்க ஆரம்பித்தாள். ரம்லி அவள் காலை நீவிக்கொடுக்க ஆரம்பித்தான்.

    எத்தனை இரவுகள் அவள் தன் காலைப் பிடித்துவிட்டிருப்பாள், `பாவிங்க, என்னமா வேலை வாங்கறாங்க!’ என்று திட்டியபடி!

    `நாம்ப ஏழைங்க, பாத்தி! எல்லாத்தையும் பொறுத்துப்போனாதான் பணம் கிடைக்கும்! வயிறுன்னு ஒண்ணு இருக்கே!’ என்று அவளைச் சமாதானம் செய்தது நினைவில் கசப்பாக எழுந்தது.

    “ம்மே..” அடிவயிற்றிலிருந்து பாத்திமாவின் வேதனைக்குரல் எழும்பியது. இருமுறை. வலி பொறுக்காத மாடு ஒன்று கத்துவது போலிருந்தது. எப்போதும் இனிமையாகப் பேசுபவளா இவள்!

    ரம்லிக்கு அலுப்பாக இருந்தது. இவளுக்கு சிசுருஷை செய்துகொண்டிருந்தால், இருக்கும் வேலையும் போய்விடும். பசியையும் பட்டினியையும் தாங்க முடியாதுதானே அந்த பணக்கார, அண்டை நாட்டுக்கு வந்திருந்தான்!

    “வேலைக்குப் போகணும், பாத்தி!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, தளர்ந்த நடையுடன் வெளியே நடந்தான்.

    “ரம்லி! ராத்திரியிலேருந்து யாரோ ஒன்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க! ரொம்ப அவசரமாம்!” மேஸ்திரியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தான் மருத்துவமனையில். வாங்கியவனின் முகத்தில் கலக்கம்.

    “உங்கள் மனைவியின் உடல் ரொம்ப மோசமாக இருக்கிறது. உடனே வாருங்கள்!”

    நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் அவனுக்காகவே காத்திருந்ததுபோல் இருந்தது. நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். “மூளையில ரத்தம் கசியறதால, இவங்க தலை பெரிசாகிக்கிட்டே வருது. உடனடியா ஆபரேஷன் பண்ணணும்”.

    ஆபரேஷனா!

    அஞ்சு, பத்துக்கே இங்கே வழியைக் காணோம்! ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுக்கு எங்கே போவது!

    டாக்டர் தாழ்ந்த குரலில், தன்பாட்டில் பேசிக்கொண்டு போனார்: “ஒரு வேளை, ஆபரேஷன் பண்றப்போ அவங்க உயிர் போயிட்டா, தலையைத் தனியா எடுத்து, ஆராய்ச்சிக்கு வெச்சுக்குவோம். ஆறுமாசம் கழிச்சு, திரும்பவும் உடலோடு சேர்த்துத் தைச்சு ஒங்ககிட்ட குடுத்துடுவோம்! ஆபரேஷன் பண்ணாட்டி, எப்படியும் உயிர் போயிடும்!”

    டாக்டர் ஏதேதோ கூறினார், `ஸப்ஸிடி’ (subsidy), உதவி என்று. இந்தப் படித்தவர்கள் பேச ஆரம்பித்தாலே அவனுக்குக் குழப்பம்தான் எழுகிறது. காது அடைத்துப் போகிறது.

    மலேசிய அரசாங்கம் மருத்துவச்செலவில் பெரும்பகுதியைக் கொடுத்துவிடும், சில நூறுகளே அவன் கொடுக்க வேண்டியிருக்கும் என்றவரின் விளக்கம் ரம்லிக்குப் புரியத்தானில்லை.

    ஒன்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

    தன்னை இறுக அணைத்த பாத்திமாவின் கைகள்! அவை இனி எழாது!

    `ஆபாங்! ஆபாங்!’ என்று நொடிக்கு நொடி அழைத்த இதழ்கள் இனி பேசாது!

    வெகு மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்களே! பிழைத்தெழுந்து, பழையபடி வேலைக்குப் போய் காசு சம்பாதித்துக்கொண்டு வர முடியுமா அவளால்?
    அதுதான் டாக்டர் சொன்னாரே, `தலையில் ஓட்டை போடுவோம். பிழைத்தாலும், கைகால் விளங்காமல் போகலாம். பேச முடியாமல் போகலாம்,’ என்று!

    அவளைப் படுக்க வைத்து, இறுதிக் காலம்வரை ஒரு கைக்குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவேண்டி இருக்கும்.

    நடக்கிற காரியமா!

    “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? படிச்சுப் பாத்துட்டு கையெழுத்துப் போடுங்க!” ஏதோ காகிதத்தை நீட்டினாள் தாதி.

    “வேணாம்,” என்றான் தயங்கியபடி.

    “ஆபரேஷன் வேண்டாமா?”

    “எனக்கு.. எனக்கு.. படிக்கத் தெரியாது!” அத்தனை துயரத்திலும் தன் இயலாமை அவனை அவமானத்தில் ஆழ்த்தியது. குரல் வெளியே வரவில்லை.

    இன்னும் சில நிமிடங்கள்தாம். சுயநினைவுடன், ஆனால் அசைவின்றி, படுத்திருந்த அன்பு மனைவியின் கன்னங்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, அவள் நெற்றி முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தான் ரம்லி. நடுநடுவில், தன் கண்ணீரையும் துடைக்க வேண்டியிருந்தது.

    “பாத்திமா! ஸாயாங்!” என்று வாய் முணுமுணுத்தபடி இருந்தது.

    அடுத்து நடந்ததெல்லாம் ஏதோ கனவுபோல் இருந்தது. ஆறு பேர் பாத்திமாவைத் தூக்கி சக்கரம் பொருத்தியிருந்த கட்டிலில் கிடத்தி, எங்கோ அழைத்துப் போனார்கள்.

    இரண்டு மணி நேரம் கழிந்தன.

    டிராலியில் நோயாளிகளுக்கான ஆகாரம் வெங்காயத்தழையின் வாசனையுடன் வந்தது. தான் நேற்று இரவிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது ரம்லிக்கு.

    இங்கேயே இருந்தால், பணத்துக்காக நெரிப்பார்களே! பயம் பிடித்துக்கொண்டது.

    காம்பவுண்டை விட்டு வெளியே விரைந்தான். கால்சட்டைப் பையில் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். இனியும் அதே இடத்துக்கு வேலை பார்க்கச் செல்ல முடியாது.

    இந்த வேலை இல்லாவிட்டால், இன்னொன்று!

    `குடுக்கறதைக் குடுங்க!’ என்று பவ்யமாகக் கைகட்டி நின்றால், எந்த செம்பனைத் தோட்டத்திலும், கட்டுமானத் தொழிலிலும் வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். எங்காவது தொலைதூரத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்!

    அதற்கென்ன! ஆஸ்பத்திரியில் அவனைக் கூப்பிட்டுப் பார்ப்பார்கள். அவன் கிடைக்கமாட்டான் என்பது உறுதியானதும் பாத்திமாவின் உடலை எப்படியோ உபயோகித்துக்கொள்வார்கள். இனி அவர்கள் பாடு!

    கடந்த நாட்களின் துன்பமும் துயரமும் மறைய, ரம்லி நடையை வீசிப்போட்டான். சற்றே நிம்மதியாக உணர்ந்தான்.

    ஓரிரு நிமிடங்கள்தாம். நின்ற இடத்திலேயே நின்று, கழுத்தை வளைத்து, சற்று தூரத்தில் தெரிந்த பெரிய, வெள்ளைநிறக் கட்டடத்தைப் பார்த்தான்.

    “பாத்தீ! அடுத்த பிறவியிலேயாவது பணக்கார வீட்டிலே பிறம்மா!”

    விம்மி விம்மி அழும் அந்த இருபது வயது இளைஞனை வேடிக்கை பார்த்தபடி நகர்ந்தார்கள் தெருவில் போனவர்கள்.

    குறிப்பு: ஆபாங் (abang) என்று வார்த்தை அண்ணனைக் குறித்தாலும், கணவனையும் விளிக்கும் வார்த்தை.

    ஸாயாங் = அன்பே

    Share
  • இந்தவார வல்லமையாளர்! (226)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளர் – பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins)

    சென்றவாரம் வெளியான Wonder WomanPatty_Jenkins_by_Gage_Skidmore_3 (வியப்புக்குரிய பெண்) எனும் திரைப்படம் இவ்வாரம் 435 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதன் இயக்குனர் பேட்டி ஜென்கின்ஸ்.

    இப்படம் பல மைல்கற்களை கடந்துள்ளது.

    பெண் இயக்குனர் ஒருவர் இயக்கிய முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்.
    பெண்கள் சூப்பர்ஹீரோ வாக நடித்தால் படம் ஓடாது எனும் மூடநம்பிக்கையை தகர்த்த படம்.
    மிக ஆழமான ஒரு நீதியையும், கதையுடன் சேர்த்து சொன்ன படம்.

    பேட்டி ஜென்கின்ஸ் பெண்களின் கோணத்தில் உலகை காணும் படைப்புகளை படைப்பதில் வல்லவர். 2003இல் இவரது முதல் படமான Monster, ஐலீன் உர்னோஸ் எனும் வீடற்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

    இரண்டவது படம் எடுக்க இவருக்கு சுமார் 14 ஆண்டுகள் பிடித்தன. ஆனால் படம் வெளிவந்தபோது மகத்தான வெற்றி பெற்று, இந்த ஆண்டின் சூப்பர்ஹிட் படமாக ஆனது.

    JL_Wonder_Woman

    ஒன்டர் வுமன் அமெசான் எனும் தீவை சேர்ந்தவர். அது பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு. ஆண்களுக்கு அனுமதி இல்லை. அப்படிப்பட்ட தீவில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த மாய, தந்திர சக்திகள் படைத்த இளவரசியான ஒன்டர் வுமன் மனிதர்கள் போரால் படும் அவதிகளை களைய முதலாம் உலகப்போர் சமயம் இங்கிலாந்து செல்கிறார்.

    அப்படி செல்கையில் தன் இளவரசி பட்டத்தை துறக்கவேண்டி உள்ளது. இங்கிலாந்து செல்லும் ஒண்டர் வுமன் அன்றைய சமூக ஆண்கள் பெண்களை சமமானவர்களாக கருதாததை கண்டு வியப்படைகிறார். ஏனெனில் அவரது தீவில் முழுக்க இருந்தவர்கள் பெண்கள் மட்டுமே. முதலாம் உலகப்போரை தடுத்து நிறுத்தி, தன் காதலனை அந்த முயற்சியில் இழந்து, மனிதர்கள் குற்றம் குறை உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களிடையே இருக்கும் நல்ல பண்புகளையும் கருத்தில் கொண்டு உலகைக் காக்க விரும்புகிறவர்கள் சோர்வடையாமல் அம்முயற்சிகளைச் செய்யவேண்டும் எனும் நீதியை உணர்த்துகிறார் ஒண்டர் வுமன்.

    இது ஒரு பெண் ஹீரோவைப் பற்றிய படம் என்றாலும் பெண்ணீய நோக்கில் வந்த படம் என கூறமுடியாது. ஏனெனில் படம் மானுட சமுதாயம் முழுமைக்கும் உள்ள பிரச்சனைகளை மையபடுத்தி வந்த படம். பெண்ணிய நோக்கிலான படம் எனில் அரசியல் சிக்கல்களில் சிக்கி தன் மதிப்பை இழந்திருக்கும். அப்படி ஆகாமல் சாமர்த்தியமாக அனைத்து கட்சியினரும், அனைத்து கொள்கை சார்ந்தவர்களும் பாராட்டும் வண்ணம் ஒரு சிறந்த படைப்பை படைத்த பேட்டி ஜென்கின்ஸ் நம் அனைவரின் பாராட்டுக்கும் உரியவர்.

    ஒண்டர் வுமன் மானுட சமுதாயம் முழுமைக்குமான நல்ல வழிகாட்டி என ஐ.நா சபை கருதி ஒண்டர் வுமன் கதாப்பாத்திரத்தை தனது சிறப்பு தூதராகவும் அறிவித்து சிறப்பு சேர்த்தது.

    இத்தகைய சிறந்த படைப்பாளியான பேட்டி ஜென்கின்ஸை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. உங்கள் வெற்றி இயக்குனராக வெற்றிக்கொடி நாட்ட விரும்பும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணம்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391,  இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed (2)

    ”தூதுக்(கு)(பாலுக்கு -ஹிந்தி) அழும்பாலன், தூதானார் பாண்டவர்க்காய்,
    ராது(செல்லமாக ராதை)வை வாஅர்த்த ராத்திரியில், -தூதாக
    அன்னத்தை சொல்லி அனுப்பிடும், ஆயர்சேய்
    கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

    Share
  • குவிந்துநிற்கும் வாழ்வினிலே !

     

    எம் .ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா 

     
    கொஞ்சி மகிழ்வதற்கு
    குழந்தைகள் இல்லாமல்
    கெஞ்சிநின்று நோன்பிருந்து
    கேட்டுநிற்போம் கடவுளிடம்
    நெஞ்சறிந்த கருணைக்கடல்
    நிறையவே கொடுத்துவிட்டால்
    வெஞ்சொல்லால் கடவுளையே
    வெடுக்கென்று திட்டிநிற்போம் !

    பஞ்சமுடன் இருக்கையிலே
    பலகுழந்தை அளித்துநின்றால்
    அஞ்சாமல் ஆண்டவனை
    அர்ச்சித்தே நின்றிடுவோம்
    கொஞ்சமேனும் இரக்கமின்றி
    கொடுத்துவிட்டார் கடவுளென
    கெஞ்சிநின்ற பலபேரும்
    கேள்விகேட்பார் கடவுளையே !

    பணம்படைத்த பலபேரைப்
    பார்ப்பதற்குப் பிள்ளையில்லை
    பிள்ளைதனைப் பார்ப்பதற்குப்
    பணமில்லார் பலபேர்கள்
    உலகத்தின் விந்தைதனை
    உற்றுநோக்கிப் பார்க்கையிலே
    படைத்தவனின் நோக்கமதை
    விளக்குவார் யாருளரோ !

    என்னதான் நிறைந்திருந்தும்
    பேர்சொல்ல ஒருபிள்ளை
    இல்லையெனும் நிலைவந்தால்
    இன்பமங்கே மறைந்துவிடும்
    வறுமையொடு இருந்தாலும்
    வாசலிலே பிள்ளைவந்து
    மழலைமொழி பேசிவிடின்
    வாழ்வங்கே விடிந்துவிடும் !

    குழலோசை யாழோசை
    கொடுத்துவிடும் இன்பத்திலும்
    குழந்தையது ஓசையது
    கொடுத்துவிடும் பேரின்பம்
    அதனாலே குழந்தையினை
    ஆண்டவனோ டொப்பித்து
    அனைவரும் அனைத்துநின்று
    ஆனந்தம் பெறுகின்றோம் !

    இல்லறத்தின் பேறாக
    எமக்கின்பம் எதுவென்றால்
    நம்குழந்தை எமைப்பார்த்து
    நாலுவார்த்தை பேசுவதே
    பேசுகின்ற மழலையது
    பெரும்பேறு எனநினைத்து
    பேருவகை கொண்டுவிட்டால்
    பேரின்பம் பெருக்கெடுக்கும் !

    குழந்தையில்லா வீட்டினிலே
    குதூகலம் மறைந்துவிடும்
    குழந்தையது சிரித்துவிட்டால்
    குதூகலமே நிறைந்துவிடும்
    குழந்தைகளைத் தெய்வமாய்
    கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
    குவலயத்தின் இன்பமெலாம்
    குவிந்துநிற்கும் வாழ்வினிலே !

    Share
  • யாரோ ஒருத்தி

     

    ஒரு கணப்பொழுதெனினும்
    பயம் பற்றிய சிந்தனை
    வந்து போகவே செய்யும்.
    அர்ச்சகரை முறைத்துப் பார்க்கையில்,
    முகச் சவரம் செய்கையில் அந்தக் கத்திக்கு…
    தொடர்ந்துப் பயணத்தில்
    யாரோ ஒருத்தி
    சிலிர்த்துவிட்டுப் போகையில்…
    நடு வீதியில் மகிழூர்தி
    முரண்டுபிடிக்கையில்…
    கதவு திறந்து
    காலணியைக் கழற்றுகையில்
    அடுக்களையில்
    கோபத்தில்
    பாத்திரத்தை உருட்டும் மனைவியிடம்…
    இன்னும் ..இன்னும்
    பயம் சொல்லி வருவதில்லை..
    பிதாவே!
    உனது பயமும் நாம் அறிவோம்..
    மன்னித்தருள்கிறோம்..
    மறுபிறப்பில்
    என்னைப்போலவே பிறப்பீராக…
    முல்லைஅமுதன்

     

     

    Share
  • எங்கள் பாரத தேசம்

     

    சி. ஜெயபாரதன், கனடா

     

    unnamed

    ஒன்று எங்கள் தேசமே

    ஒருமைப் பாடெமது மோகமே

    உதவி செய்தல் வேதமே

    உண்மை தேடலெம் தாகமே

    இமயம் முதல் குமரிவரை

    எமது பாதம் பதியுமே.

    தென்னகத்தின் முப்புறமும் நீல

    வண்ணக் கடலே.

    வடக்கில் நீண்ட மதிலாய்

    வான்தொடும் இமயம்

    ஓங்கி உயர்ந்து காக்குதே.

    எந்தையும் தாயும் பல்லாண்டு

    இனிதாய் வாழ்ந்த தேசமே !

    எங்கள் ஊனும் உயிரும்

    இராப் பகலாய்

    உழைத்து உன்னைக் காக்குமே !

    எங்கள் மூச்சும் பேச்சும்

    என்றுமுன் பெயர் ஒலிக்குமே !

    பாரத தேச மென்றால்

    பூரண உணர்ச்சி பொங்குதே !

    சுதந்திரத் திருநாடே !

    பங்கம் உனக்கு நேரின்

    எங்கள் உதிரம் கொதிக்குமே !

    ++++++++++++++

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (59)

    நிர்மலா ராகவன்

    ஆண்-பெண்-பள்ளி

    நலம்-1-1

    பெண்களும் பையன்களும் சேர்ந்து படிக்கும் இடைநிலைப்பள்ளி அது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அப்படித்தான் என்றாலும், இந்த வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு உயர்பதவியிலிருந்த சில ஆசிரியைகளுக்கு வந்தது.

    அதன் பலனாக, கோலாலம்பூருக்கு அருகிலிருந்த அப்பள்ளியில் ஒரு புதிய விதி அமலுக்கு வந்தது. எல்லா வகுப்பறைகளிலும் ஆண்கள்தாம் முதல் வரிசைகளில் அமர வேண்டும். காரணம்: பெண்கள் முன்னிருக்கைகளில் உட்கார்ந்தால், அவர்களுடைய பின்னழகைப் பார்க்கும் விடலைப் பையன்களின் மனம் சலனப்பட்டுவிடும். பிறகு, பாடங்களில் மனம் செலுத்துவது எப்படி?

    ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில் இந்த விதி தெரிவிக்கப்பட்டபோது, `பெண்கள் மட்டும் பையன்களைப் பார்க்கலாமா?’ என்று யாரோ முணுமுணுத்தார்கள். (சத்தியமாக நானில்லை). நான் முணுமுணுப்பதெல்லாம் கிடையாது. போட்டால் சண்டைதான்).

    மேலதிகாரிகள் என்ன சொன்னாலும், (பிதற்றினாலும்), ஆமோதிக்கும் வண்ணம் தலையாட்டி வைக்கவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, பாவம்!
    நான் புருவத்தை மட்டும் உயர்த்தினேன், `இது என்ன முட்டாள்தனம்?’ என்பதுபோல்.
    மாணவர்களுக்கோ பெருமை தாங்கவில்லை. அவர்களிடம் உண்மைக் காரணம் சொல்லப்படாததால், இருபாலரில் தாங்களே உயர்ந்தவர்கள், அதனாலேயே அப்படி ஒரு சிறப்பு என்று எண்ணினார்கள்.

    நான் போதித்த பரிசோதனைக்கூடத்துக்கு வந்தபோது, வழக்கமாக பெண்கள் உட்காரும் இடத்துக்குப் பையன்கள் வந்தார்கள். நடையிலேயே ஒரு துள்ளல். பெண்களைக் கேலியாகப் பார்த்தார்கள்.

    ஒரு மாதம் ஆகியது. ஆண்களுக்குப் பெருமை அடங்கவில்லை. தாங்கள் அவ்வளவு உயர்வானால், உழைத்துப் படிப்பானேன் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். வாய் ஓயாமல் பேசினார்கள். நான் கற்பித்தது பின்னாலிருந்த பெண்களுக்குக் கேட்கவில்லை. அவ்வளவு இரைச்சல். அவர்களை நான் திட்டப்போனால், `Racist’, எங்கள் இனத்திற்கு இவள் எதிரி!’ என்ற பழி வரும். எதற்கு வம்பு!

    மாணவிகள் ஒன்று திரண்டு வந்து, `பையன்கள் உயரமாக இருக்கிறார்கள். எங்களுக்குக் கரும்பலகை தெரிவதில்லை!’ என்று என்னிடம் முறையிட்டார்கள்.

    சிறிது யோசித்துவிட்டு, “அடுத்த முறை நீங்கள் சற்று சீக்கிரம் வந்து, முன்னால் உட்கார்ந்துகொள்ளுங்கள்!” என்றேன்.

    வழக்கம்போல், வெகு நிதானமாக வந்த மாணவர்கள் கோபமாக, “ஏய்! இது எங்கள் இடம்! பெண்கள் எல்லாரும் எழுந்திருங்கள்!” என்று விரட்ட, “டீச்சர்தான் சொன்னார்கள்!” என்று பதிலளித்தார்கள், பிடிவாதத்துடன் இறுகிய உதட்டுடன்.
    “டீச்சர்! உங்களுக்குப் பள்ளிக்கூட விதி தெரியாதா?” என்று ஒரு மாணவன் சவாலாகக் கேட்க, “இது உங்கள் வகுப்பறை இல்லை. என் இடம்! இங்கு நான் வைத்ததுதான் சட்டம். உங்களுக்குத்தான் படிப்பில் அக்கறை இல்லையே! பின்னால் உட்கார்ந்து, தாராளமாகப் பேசுங்கள்!” என்றேன்.

    அதிர்ந்தவர்களாக பின்னால் நகர்ந்தவர்கள், `எல்லாம் உன்னால்தான்!’ என்று ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள்.
    ஆனால், அவர்கள் மனம் படிப்பில் லயிக்கவில்லை. அவமானம் தாங்காது, குனிந்த தலையுடன் இருந்தார்கள்.

    அவர்களைக் கவனிக்காததுபோல் நான் பாடத்தை நடத்த, பெண்கள் உற்சாகமாகக் கற்றார்கள். (மலாய் பெண்கள் ஆண்களைவிட கல்வியில் அதிக கவனம் செலுத்தி, உயர்கல்விக்குப் போகிறார்கள் என்ற தகவல் தினசரிகளில் வந்திருக்கிறது. ஏதாவது தடங்கல் இருக்கும்போதுதான் அதைத் தாண்டிக்கொண்டு, முன்னேற வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறதுபோலும்!ஒரு மாதம் கழிந்தது. மாணவர்களின் உற்சாகம் அறவே வடிந்தது. தங்கள் நிலையை ஏற்றுக்கொண்டார்கள். எப்போதும்போல் பேச ஆரம்பித்தார்கள்.

    நான் பெண்களுடன் கலந்தாலோசித்துவிட்டு, பழையபடி, மாணவர்களை முன்னால் உட்காரச் சொன்னேன். “தாங்க்யூ டீச்சர்!” என்றார்கள், மலர்ந்த முகத்துடன்.
    இப்போது அவர்கள் பேசத் துணியவில்லை. `மீண்டும் பெண்களுக்குப் பின்னால் தள்ளப்படும் இழிநிலைக்கு ஆளாகிவிடுவோமோ?’ என்ற பயத்தால் படிப்பில் கவனம் போயிற்று.

    பதின்மூன்று வயதில், `நீங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள்!’ என்று இந்த ஆண்பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவதால், பெற்ற தாயாக இருந்தாலும், அவளுக்கு அடங்குவதில்லை. தாய் மரியாதையாக அவர்களை நடத்த வேண்டும்.

    என் சக ஆசிரியை ஒருத்தி தன் மகனை அதட்டியபோது, `நீ பெண்! எனக்குப் புத்தி சொல்லும் தகுதி உனக்கில்லை!’ என்றானாம். ஆசிரியர்களின் பொதுஅறையில் புலம்புவாள்.

    அவளுக்கு அப்போது எழுந்த வருத்தம் பிறர்மேல் ஆத்திரமாக மாறியது. தனக்குக் கீழே வேலை பார்த்தவர்களை படாதபாடு படுத்தினாள்.

    தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை பால் ரீதியாக வித்தியாசப்படுத்துவதில்லை. அதனால் ஒன்றாகப் பேசிப் பழகுவார்கள்.

    `இதெல்லாம் பெண்கள் சமாசாரம்!’ என்ற பாகுபாடு இல்லாததால், பதின்ம வயது ஆண்கள் மாதவிடாய்பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் வலியுடன் பெண்கள் இருக்கும் அச்சமயத்தில் கனமான பொருள் எதையாவது தூக்க பெண்களுக்கு உதவி செய்கிறார்கள்.

    `இது பெண்கள் வேலை!’ என்று எதையும் இழிவாகக் கருதாது, சமையலிலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதிலும் ஈடுபாடு செலுத்துகிறார்கள்.

    அப்படி ஒரு பையன், `எனக்குப் புத்தகத்தை எடுத்துப் படிக்கப் பிடிக்காது. அதனால் படிப்பதே கிடையாது,’ என்றபோது, `பின்னே எப்படி நல்ல தேர்ச்சி பெறுகிறாய்?’ என்று கேட்டேன்.

    `பெண்கள் ஓயாமல் பாடங்களை விவாதிப்பார்கள். அதைக் கேட்டாலே போதுமே!’ என்றான், அலட்சியமாக.

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவிதமான உறவுதான் இருக்கமுடியும், அவர்கள் கலந்து பேசினால், நிச்சயம் நடக்கக்கூடாதது நடக்கும் என்ற மனப்பான்மை இன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதன் விளைவாக, யாரைப் பார்த்தாலும் வேண்டாத ஈர்ப்புதான் ஏற்படும்.

    திருமணம் ஆனபின்னர், மனைவி கணவனைப் பார்த்துப் பயப்படுவதும், `இவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று கணவனுக்கு ஆயாசம் ஏற்படுவதும் இயல்பு. இதனால் இவர்களுடைய தாம்பத்திய உறவு நெருக்கமானதாக இருக்க முடியுமா?

    அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, தம்மைப் போன்றில்லாது, இன்னொரு பாலருடன் சகஜமாகப் பேசுபவர்களைப் பழிக்கிறார்கள் நான் பார்த்த பெண்கள். (ஆண்களும் இப்படி வம்பு பேசுகிறார்களா என்று தெரியவில்லை).

    நான் ஆரம்பக்கல்வி பயின்றபோது, கூடப்படித்த பையன்களுடன் பேசிப் பழகினால் காது அறுந்துவிடும் என்று ஆசிரியர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அதனால், சொந்த அண்ணனைக்கூடத் தெரியாததுபோல் நடந்துகொள்ள வேண்டிய நிலை. இப்படிப் பயமுறுத்தி வைத்தால், பதின்ம வயதில் வேண்டாத கற்பனைகளும் நடத்தையும்தான் வரும்.

    நம் குழந்தைகள் தம்முடன் படிப்பவர்களையோ, உத்தியோகம் பார்ப்பவர்களையோ வீட்டுக்கு அழைத்துவந்தால், அவர்களுடன் நாமும் கலந்து பேசினால், அவர்களுக்கு நம் மீது மரியாதையும், தம்மீதே நம்பிக்கையும் ஏற்படாதா! அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள்.

    படித்து முடித்து பதினைந்து வருடங்கள் ஆனபின்னர் எங்கள் வீட்டுக்கு வந்தான் என் மகளுடன் பள்ளியில் படித்த ஒருவன். அப்போது இரவு பத்து மணி இருக்கும். எங்கோ இருந்தவன் அந்தப் பக்கமாக வந்தவன், முன்பு எங்கள் வீட்டுக்குத் தீபாவளி சமயத்தில் நினைவு வைத்துக்கொண்டு, மீண்டும் வந்திருந்தான்.

    “அம்மா! ங் வந்திருக்கான்!” என்று என் மகள் அழைக்க, “சரி,” என்று மட்டும் சொன்னேன். இரண்டு, மூன்று முறை அவள் கூப்பிட, புரிந்து, “ஓ! என்னைப் பாக்கணும்கிறானா?” என்று அறைக்கு வெளியே வந்தேன்.

    மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தோம்.

    “ஆன்ட்டி! நான் ரவை உருண்டை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன்,” என்று அவன் கேலியாகச் சொல்ல, சிரிப்பு பலத்தது.

    அவனுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, `எங்கள் சம்பிரதாயம்! உருண்டையை முழுவதாகத்தான் வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்,’ என்று நான் அளக்க, அந்த சீனப்பையனும் அதை நம்பி, அப்படியே செய்து, விழி பிதுங்க திண்டாடினதை மறக்க முடியுமா?!

    தொடருவோம்

    Share
  • எழுத்து. 2

     

     

    கோவைப் பதியில் (கோப்பாய்) நன்கு மலர்ந்து
    டென்மார்க் வரை பறந்து பாய்கிறது
    வெல்லும் இவ்வுணர்வுக் கவிதைச் சிறகுகளின்
    வீரியப் பரம்புதலில் உயரப் பறக்கிறது.

    எழுத்துக்களின் சங்கமம் சொல் தானே!
    என்னெழுத்து வாசிப்பில் பேரின்பம் நிறைவு.
    எழுத்து வயலில் அகழ்ந்து மேய்தல்
    அழுத்தும் தத்துவங்கள் யதார்த்தச் சிறகடிப்பு.

    எழுதல், வாழ்தல், மகிழ்தல் சாதனை
    எழுத்தே மகா பெரும் உணர்வு.
    எழுத்தொரு தவம் நானதைச் செய்கிறேன்.
    என்னெழுத்து பலரை ஈர்த்து அணைக்கிறது.

    இழுத்தணைக்க இன்னும் இன்னும் எழுதுகிறேன்.
    பழுக்கிறது நவரசங்களும் வானவில் வண்ணமாக.
    பொழுதிற்கும் தொலைவான நோக்கில் தேடும்
    குழுநிலை எழுத்துக்களன்றி வேறு என்ன!

    முழவதுமான ஊஞ்சலாட்டம் தான்! ஆம்!
    எழுத்துகளோடு ஆடும் இலக்கிய ஊஞ்சல்.
    இழுத்தாடுவது பெண்மை, பொறாமை அறியாமை
    கழுத்து காதணியென்று கதம்ப ஆட்டம்.

    விழுத்தகையாய்ப் புதிய எழுத்து விளையாட்டும்
    மழுப்பலாகவும் சிலருக்கு, மலைப்பாகவும் ஆகிறது.
    எழுதுவது பெண்ணெனவும் சிலருக்கொரு இழிவு.
    முழுதாகக் கடலாழமும், வானுயரமும் காணவில்லை.

    விழுப்பமாக பூவுலக வாழ்வியலின் எழுத்தே
    விழுந்தோடும் ஊற்று நீராய் ஓடுகிறேன்.
    பழுதற்ற மழை நீராகவும் மணந்து
    அழுத்தியோடும் ஆறாகவும் மண்ணில் ஊடுருவுகிறேன்.

    (விழுத்தகை – பெருஞ்சிறப்பு, விழுப்பம் – நன்மை)

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-6-2017

    Share
  • குறளின் கதிர்களாய்…(171)

     

    செண்பக ஜெகதீசன்

     

    பயனில பல்லார்முற் சொல்லல் நயனில                                        

    நட்டார்கண் செய்தலின் தீது.

           -திருக்குறள் -192(பயனில சொல்லாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    யாரும் விரும்பாத செயல்களை

    நண்பர்களிடம் செய்வது தீது,

    அதனிலும் தீது-

    அறிஞர் பலர்முன்

    பலனற்ற சொற்களைப் பேசுதல்…!

     

    குறும்பாவில்…

     

    பலனற்ற சொற்களைப் பலர்முன் பேசுதல்,  

    விரும்பாதவற்றை நண்பர்களிடம்   

    செய்வதைவிடவும் தீயதே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    மற்றவர் யாரும் விரும்பாத

         மதிப்பு கெட்ட செயல்களைத்தான்

    உற்ற நண்பரும் வேதனையில்

         உழன்றிடச் செய்தல் தீதாமே,

    முற்றிலும் இதைவிடத் தீதாகும்

         முறைமை யற்ற ஒன்றாகும்,

    கற்ற அறிஞர் சபைதனிலே

         கறையாய்த் தீச்சொல் பேசுதலே…!

     

    லிமரைக்கூ..

     

    நண்பரிடம் கொடுஞ்செயல்கள் தீது, 

    அதனிலுந்தீது பயனிலாதவை பேசுதல்

    கற்றறிந்த சபையோர் மீது…!

     

    கிராமிய பாணியில்…

     

    பேசாத பேசாத

    பயனில்லாத பேச்சு பேசாத..

     

    அதுவும்,

    பேசாத பேசாத

    படிச்ச பலபேர் சபயினிலே

    பயனில்லாத பேச்சு பேசாத..

     

    அது,

    நம்ம நம்புற நண்பருக்கு

    நாம செய்யிற

    மதிப்புகெட்ட செயலவிட

    மோசமான ஒண்ணாவும்..

     

    அதால

    பேசாத பேசாத

    பயனில்லாத பேச்சு பேசாத…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 115-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    boomboom maadu

    அழகிய அலங்காரத்தோடு பூம்பூம் மாடும் அதனருகே மாட்டுக்காரரும் நிற்கும் இக் காட்சியைப் படம்பிடித்தவர் திருமதி. பவளசங்கரி. இப்படத்தைப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்மணிகள் இவ்விருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

    தன் வயிற்றுப்பாட்டுக்காக மாட்டோடு அலைந்து திரியும் மனிதனைக் காண்கையில் மனம் வேதனையில் கனக்கின்றது. மாடே செல்வமாய் இருந்த அன்றைய நிலைமாறி, மாட்டை அலங்காரப்பொருளாக்கி மனிதன் பொருள்தேடும் அவலநிலை இன்று! காலம்போடும் கோலங்கள்தாம் எத்தனை எத்தனை!

    இனி, இப்படத்துக்குக் கவிபாடக் காத்திருக்கும் கவிஞர்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்!

    ஒல்லும் வகையெல்லாம் அறவினை செய்யவேண்டும் என்றார் வள்ளுவர். வாயில்லா சீவனோடு தன் வயிற்றுப்பாட்டுக்குப் போராடும் இம்மனிதனின் துயர்தீர்க்க உதவுவதே உண்மையான மனிதநேயம் என்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    பூம், பூம் மாட்டுக்காரன் வாசலில் வந்து நின்றான்
    வீடுதோறும் நல்ல சேதி சொல்லி அழைத்தான்
    வளர்க்கும் காளை மாட்டிற்கு அலங்காரம் செய்தான்!
    அதனை வீட்டில் உள்ளவர்க்கு வணக்கம் செய்ய சொன்னான்!
    நிலம் காய்ந்து போனதால் பிழைப்புத் தேடி மாட்டுடன் செல்கின்றான்!
    கால் வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்கு அதனை காட்டி பிழைக்கின்றான்!
    ஈட்டிய பொருளில் தானும் உண்டு அம்மாட்டினையும் காக்கின்றான்!
    நல்லெண்ணம் கொண்டு அவன் கூறுவதைச்சற்றே நம்புகின்றான்!
    அவன் கேட்பதோ பழம் துணியும், சிறிது அரிசியும், பணமும்
    அவன் வந்ததைக் கண்டு நாய் விரட்டுவது போல் அதிகாரமும்,
    கடன்காரனைப் பார்த்தது போல் அவனை விரட்டி அடிப்பதும்,
    ஏனோ முன் ஜென்மத்தில் பயனாய் நம்மிடம் கையேந்தி நிற்பதும்!
    அவனும் மனிதன்தான் என்ற எண்ணம் வேண்டும்
    மனிதநேயம் கொண்டு அவன் குறை தீர்க்கவேண்டும்
    அவன் நிலைகண்டு உதவ முன்வர வேண்டும்!
    அந்த ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவேண்டும்!முடிந்த வரையில் பிறர்க்குக் கொடுத்து உதவ வேண்டும்
    உனது தர்மம் சிறிது எனினும் பின் உன் தலைமுறையைக் காக்கும்
    ஒல்லும் வகையான் அறத்தை செய் என்கிறார் வள்ளுவர்
    ஒரு மனிதனும் வாயில்லா ஜீவன் வாழ்கிறது என நினைக்கவேண்டும்!

    *****

    ”சின்னப்பிள்ளைகள் மனமகிழ்ந்து சிரிக்கும்படிப் பூம்பூம் மாட்டோடு அலைந்து திரியும் மனிதனின்  பசி போம்படி அவன் வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    எல்லாமே…

    மன்னர் வேடம் போட்டால்தான்
    மறுநாள் உண்ண வழிபிறக்கும்
    தன்மை எங்கும் பொதுவேதான்
    தாங்காப் பசியை ஆற்றிடத்தான்,
    தின்ன உணவு தேடியேதான்
    தெருவி லெங்கும் அலைவதுவும்,
    சின்னப் பிள்ளைகள் மனமகிழ்ந்து
    சிரித்திட பூம்பூம் மாட்டுடனே…!

    *****

    ”வீட்டுவாசலில் நல்வரவை நோக்கும் மாந்தருக்கு நல்வார்த்தை சொல்லும் மனிதர் யாம்; எல்லாருக்கும் நல்வாக்கைச் சொல்லும் எமக்கு என்றுதான் அமையும் நல்வாழ்க்கை?” என்று கழிவிரக்கத்தோடு மொழியும் பூம்பூம் மாட்டுக்காரனைக் காண்கின்றோம் பெருவை திரு. பார்த்தசாரதியின் கவிதையில். 

    மங்களேஸ்வரி மங்களமா அருள்வா..பூம் பூம் மாட்டுக்காரன்

    கற்பனைவளத்தோடு கல்லிலே கலைவண்ணம் காட்டி
    —கல்லையும் பேசச்சிரிக்க வைத்தான் தம்கைத்திறத்தால்!
    வாழும்கலையறிந்து கலாசார வழியறிந்து வகையாய்
    —வாயில்லா ஜீவனையும் பேசவைத்தான் தன்சைகையால்!

    அரிய பழந்தமிழ்க் கலையாய் பூம்பூம் மாடுண்டு!
    —அருகிவரும் கலையாக ஆனதுவு மெங்கள்கலையே!
    அலங்கார ஆடையுடன் ஆரூடம் சொல்லும்ஜீவன்!
    —அருங்கலை வளர்க்கும் மாட்டை வாங்கவிற்கமுடியாது!

    மக்களப்பெத்த மவராசி!..புள்ளயப்பெத்த புண்ணியவதி!
    —மங்களேஸ்வரி வந்துருக்கா! மங்களமாவுன வாழ்த்துவா!
    பாட்டுடன் இதுபோல வீடுவீடாய்ச்சென்று நற்குறிநல்கும்
    —மாட்டுடன்பேசும் மனித நேயமுடையது ஆதியனெனுமினம்!

    குலத்தொழிலாய்க் குறிசொல்லிக் குடும்பம்பல காப்பதற்கு..
    —கொடுப்பதையே தானமாய்ப்பெறக் கொம்புடன் பழக்கினான்!
    வீடுவீடாய்ச் சென்றுதலையாட்டி வித்தைபல காட்டி..
    —விருப்பமுடன் மனமுவந்து மனிதருடன் பேசவைத்தான்!

    நல்லகாலம் வருமென நல்வார்த்தை சொல்வோம்யாம்!
    —வாழ்க்கை விளிம்பிலேயே வாழ்நாள் முழுதும்நின்று..
    வீட்டுவாசலில் நல்வரவை எதிர்நோக்கும் மனிதர்களுக்கு..
    —வாழ்வியல் நலம்சொல்லும் நல்லமனிதர்கள் நாங்கள்!

    சிற்றன்னைக் கொடுமைபோல் பலகாலம் நாங்களும்
    —இயற்கையன்னை பரிவின்றி எம்ஜீவனுக்கு வழியில்லை!
    அடிமாடாய் ஆகாமல் அரசுதானதைக் காக்குமா..?
    —ஆண்டியாய்த் திரியுமெங்கள் வேதனை யாருக்கும் புரியுமா?

    குடும்பமுண்டு ஆனால் குடும்பஅட்டை இல்லை?
    —வாக்குரிமையுண்டு வாக்காளர் அட்டை இல்லை?
    மரபுசார்ந்த யெம்வாழ்வின் மேலரசுமனம் வைக்குமா?
    —தனிக்கவனம் செலுத்த தலைசாய்க்குமா அரசு..?

    ஐந்தறிவில் பூம்பூம் மாடுனக்குக் கலையில் பங்குண்டு!
    —ஆறறிவில் பூம்பூம்மாடெனப் பட்டம் பெற்றவருமுண்டு!
    அனைத்துக்கும் ஆம் இல்லை தெரியுமானால்..
    —அருங்கவிதைக் கேள்விக்கும் பதில்சொல் மங்களேஸ்வரி!

    *****

    பூம்பூம் மாட்டுக்காரனின் பசிப்பிணி போக்கவும், அவன் வாழ்வில் மகிழ்ச்சி பூக்கவும் தம் கவிதைகளில் அக்கறையோடு குரல்கொடுத்திருக்கும் கவிஞர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    நல்ல சேதி

    கல்யாணச் சேதி சொல்ல காளை வந்தது!
    கழுத்தில் தாலி ஏறும் வேளை வந்தது!
    மாப்பிள்ளை காசு கேட்டதால் கல்யாணம் நின்றது!
    கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளை பாருங்கள்!
    பிள்ளையை விற்கும் பெற்றோரைப் பாருங்கள்!
    தன்மானம் விற்று, சன்மானம் கேட்கின்ற விபரீதம் பாருங்கள்!
    பிள்ளையின் படிப்பும், வேலையும் சந்தைப் பொருளான
    சங்கடம் பாருங்கள்!
    கரும்புதின்னக் கூலி கேட்கும் கேவலம் பாருங்கள்!
    வரதட்சணை உங்களை,
    மனைவி பேச்சுக்குத் தலையாட்டும்
    பூம் பூம் மாடாய் மாற்றிய அவலம் பாருங்கள்!
    வரும் காலத்தில் வரதட்சணை எனும் வார்த்தைக்குத்
    தடை விதியுங்கள்!
    பெண்ணின் இதயத்தைத் தட்சணையாய்க்
    கேட்டிடுங்கள்!
    உங்கள் அன்பைப் பெண்ணுக்குக் கைம்மாறாய்க்
    கொடுத்திடுங்கள்!
    இனி வரும் நாட்களில் பூம் பூம் மாடுகள்
    கல்யாணச் சேதி சொல்லும்!
    வரதட்சணை வேண்டாம் , வாழ்க்கைத் துணை
    போதும் என்று சொல்லும் இளைஞர்களின்
    புகழ் சொல்லும்!

    ”பூம்பூம் மாடுகள் சொல்லும் சேதிகள் மாறட்டும்!
    திருமணச் சந்தையில் தன்மானம் விற்றுச் சன்மானம் கேட்கும் கேவலம் ஒழியட்டும்! தட்சணை வேண்டாம்; வாழ்க்கைத்துணையின் காதல் இதயமே போதும் என்றுகூறும் உத்தம இளைஞர்களின் இனிய புகழைப் பூம்பூம் மாடுகள் நித்தம் பேசட்டும்!” எனும் உணர்ச்சிமிகு வரிகளால் தன் கவிதையை மிளிரச் செய்திருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed

    ’’ஆலால கண்டர்(ஈசர்) அருமை மைத்துனர்,
    ஆலா பனைசெய்யும் ஆண்டவர், -கோலோகர்,
    மேலோட் டவாசிப்பு(வைகுண்ட வாசிப்பு) வாலாட்டும் மாட்டுக்கு:
    மேலோட் டமாய்பார்க்க மேய்ப்பு’’….கிரேசி மோகன்…!

    Share
  • இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் மின்னுந்துவிசை விண்சிமிழ் சுமந்த அசுர ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது

     unnamed (1)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    ஆழ விண்வெளி ஆய்வுகளுக்கு அனுப்பும் பளுமிக்கத் துணைக்கோள்கள் இப்போது நிதி சுருங்கிய மின்னுந்து விசையால் இயக்கப்படப் போகின்றன. மின்னுந்து விசை ஏற்பாடுகள் மெதுவான வேகத்தில், வெகுதூரம் செல்லக் குறைவான உந்துவிசைத் திரவத்துடன் [Propellants] பயணம் செய்ய பூதப்பெரும் ராக்கெட்டில் பயன்படுகின்றன.

    எம். என். வகியா [டாடா அடிப்படை ஆய்வக விஞ்ஞானி, மொம்பை]

    GSLV MK III ROCKET READY FOR LAUNCHING

    இந்திய விண்வெளி ஆய்வகம் முதன்முதல் ஏவிய பூதப்பெரும் ராக்கெட்.

    2017 ஜூன் 5 ஆம் தேதி இந்தியாவின் பேராற்றல் படைத்த பூதப்பெரும் ராக்கெட் முதன்முதல் வெற்றிகரமாக ஏவப்பட்டு, மனிதனோடு பூமியைச் சுற்றிவரப் போகும் விண்வெளிப் பயணத்துக்கு அடுத்த ஓர் மைல் கல் நாட்டியது.  140 அடி [43 மீடர்] உயரமும், 640 டன் எடையுள்ள அந்த அசுர வடிவ ராக்கெட் தென்னிந்தியாவில் உள்ள ஶ்ரீகரி கோட்டாவிலிருந்து ஏவப்பட்டது.   அந்த ராக்கெட்டில் உள்ள பேராற்றல் படைத்த எஞ்சின், இந்தியப் பொறியியல் நிபுணர் டிசைன் செய்துப் பல்லாண்டுகளாய் விருத்தி செய்தது.  இனிமேல் இந்தியா ஈரோப்பிய எஞ்சின்களை வாங்க வேண்டியதில்லை.  ஏவப்பட்ட அந்த ராக்கெட் மூன்று டன் பளுவுள்ள துணைக்கோள் ஒன்றை முதன்முறைத் தூக்கிச் சென்று, அதி உயரச் சுற்றுப்பாதையில் விட்டது.  இதற்கு முன் 2 டன் பளுவுள்ள துணைக் கோள்தான் தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.

    விண்வெளிப் போட்டியில் 2014 ஆண்டில், குறைந்த செலவில், இந்தியா சைனாவுக்கு முன்பு செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்றியதற்குப் பிறகு இந்த பூதப்பெரும் ராக்கெட் சோதனை அடுத்த பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.  அமெரிக்கா தனது நாசா மாவன் மார்ஸ் [NASA’s MAVEN MARS] பயணத்துக்கு 671 மில்லியன் டாலர் செலவழித்தது. செந்நிறக்கோள் செவ்வாய் செல்ல இந்தியா செலவழித்தது 73 மில்லியன் டாலர்.  அடுத்து, 4 டன் பளுச் சுமக்கும் தகுதியுள்ள இந்த பூதப்பெரும் ராக்கெட் மூலம், துணைக்கோள்கள் பூதக்கோள் வியாழனுக்கும், வெள்ளிக் கோளுக்கும் அனுப்பும் திட்டங்கள் இஸ்ரோ இந்திய விண்வெளித் தேடல் ஆணை யகத்தின் குறிக்கோளாய் உள்ளன.  இம்முறை தூக்கிச் சென்ற மின்னுந்து விசைத் துணைக்கோள் மூன்று விண்வெளி விமானிகள் அமர்ந்து செல்லும் தகுதி உடையது. ஆனால் இன்னும் 7 ஆண்டுகள் கடந்து 2024 ஆண்டில்தான், மனிதர் இயக்கிப் பூமியைச் சுற்றும் விண்ணுளவி தயாராகும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    unnamed

    ‘நினைத்திட நம்முள் நவநீதம் பொங்கும்
    கனைத்திடக் காமம் கலங்கும்: -மணத்துழாய்
    உச்சியில் ஏந்தி, உவக்கும் பசுக்(கு)உம்மா:
    கச்சிதம் கேசவ் கிரேட்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ’’ஸ்ரீநிவாசர்’’….!(கண்ணன் வந்தார் எங்கள் கண்ணன் வந்தார்)….!

    ’’அன்புள்ள அனைவர்க்கும்’’…..அடியேன் நாத்திகன் கிரேஸி மோகன் நிச்சயமாய் அல்ல….விடிகாலை பத்து மணிக்கு துயிலெழும் சோம்பேறி ஆத்திகன் ‘’லேஸி மோகன்’’….கோயிலுக்குச் சென்று ஸ்ரீனிவாசரை ‘’காதலிக்க நேரமில்லை’’….இருந்தாலும் செடியாய் வல்வினை தீர்க்க சீனிவாசர், வருடா வருடம் அடியேன் தரிசிக்க வீதியுலா வந்திடும் வாத்ஸல்யர்….(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன்)….!இது முன்னூட்டம்….இனி பின் ஊட்டச் சத்து-சித்து-ஆனந்தம்….!

    சென்ற வருடம் ஸ்ரீனிவாசப் பெருமாள் வீட்டு வாசலில்
    விடி காலை எழுந்தருளினார்….அப்போது எழுதிய வெண்பா….
    ———————————————————————————————————–

    சுற்றிடும் ஆழியை, சூழ்கடல்வெண் ஆழியைப்
    பற்றி, எதிற்புரம் பத்தினிகள் -நிற்றிருக்க
    புள்ளனெழாப் போதினிலே பல்லக்கில் ஊர்வலமாய்
    கள்ளனென வந்தவரே காப்பு….!

    சேதியொன்று கேளீரோ வீதியுலா செங்கமல
    மாதுவுடன் சீனு மயிலையில் -காதினில்
    கொட்டொலி கேட்கிறது விட்டொழி தூக்கத்தை
    சட்டென வாராய்வா சல்….!

    பேயோடு பொய்கையும் பூதமும் பாடிய
    மாயோன் மணிவண்ணன் மாம்பழ -வாயோன்
    வருகின்றான் வாசலுக்கு வந்தவனை வந்தி
    தருகின்றான் நாளும் தவம்….!

    வாநீவா சல்பக்கம் வீதியுலா வந்துள்ளார்
    தூணிவாச சிங்கன் திருமார்பன் -சீனிவாசர்
    பிம்மாலைப் போதில் பெருமாளை சேவிக்க
    நம்மாள் அருள்வார் நலம்….!

    இந்த வருடம் வந்த போது ஸேவித்து எழுதியது….!
    ————————————————————————————————

    ‘’சனிக்கிழமை காலை சரியாக மூன்று
    மணிக்கு மயிலையின் மாலர் -மணிக்கண்ணன்
    செங்கமலத் தாயார் சமேதராய் வந்திருந்து
    சங்கொலி செய்தார் சீனு’’….கிரேசி மோகன்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 91

    பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி

    முனைவர் சுபாஷிணி

    உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.

    1

    பீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, அதன் மணிக்கூண்டு உள்ள இந்த பீசா சாய்ந்த கோபுரம், அதன் சாய்வான கட்டிட அமைப்பிற்காகவே உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

    2

    பீசா சாய்ந்த கோபுரத்தின் அடித்தளத்தில் தான் பீசா கோபுர அருங்காட்சியகப் பகுதி இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் இந்தக் கோபுரத்தின் கட்டுமான விபரங்களை அளிக்கும் ஒரு அருங்காட்சியகம் மட்டுமே. இச்சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானப்பணிகள் தொடர்பான விபரங்களும் குறிப்புக்களும் புகைப்படங்களாகவும் விபரக்குறிப்புக்களாகவும் இப்பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் இக்குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

    3

    கோபுரம் சாய்ந்துகொண்டிருப்பதை பார்ப்போருக்கு அதற்குள் மனிதர்கள் சென்று வரலாமா ? அப்படிச் செல்லும் போது சாய்ந்த கோபுரம் சாய்ந்து விடுமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழலாம்.ஆனால் நாம் அஞ்சத்தேவையில்லை. பீசா சாய்ந்த கோபுரத்தின் உள்ளே சென்று மேல் மாடி வரை நடந்து சென்று அங்கிருந்து எழில் மிகும் பீசா நகரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்து மகிழலாம். இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இத்தேவாலயத்தைக் கட்டியபோது, அதன் பின்னால் இருப்பது போல இந்த மணிக்கூண்டு கட்டிடத்தை அமைத்தனர். கட்ட ஆரம்பித்தபோது அடித்தளம் மென்மையானதாக இருந்தமையால் ஒரு பக்கம் தாழ்ந்த நிலையில் கட்டிடம் இறங்கிவிட்டது. கோபுரத்தைக் கட்டி முடித்தபோது, அதாவது கி.பி.13ம் நூற்றாண்டில் இந்தக் கோபுரம் இன்று நாம் பார்ப்பதற்கும் அதிகமாகச் சாய்ந்த நிலையில் இருந்தது. 20ம் நூற்றாண்டிலும் கடந்த நூற்றாண்டிலும் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதன் வழி இந்தக்கட்டிடத்தை ஓரளவு நிமிர்த்தியிருக்கின்றார்கள். ஆனாலும் இன்றும் இது சாய்ந்துதான் இருக்கின்றது. இந்தத் தன்மையே இதற்குத் தனிச்சிறப்பையும் அளித்திருக்கின்றது எனலாம்.

    4

    ஒரு பக்கம் சாய்ந்த வகையிலிருப்பதால் சாய்ந்த பக்கம் 55.86 மீட்டர் உயரமும் நேராக இருக்கும் பக்கத்திலிருந்து 56.67மீட்டர் உயரமும் கொண்டது பீசா கோபுரம். கோபுரத்தின் மொத்த எடை 14,500 மெட்ரிக் டன் ஆகும். தற்சமயம் இதன் சாய்ந்தபகுதி 3.99 பாகைச் சரிந்த வகையில் உள்ளது.

    இந்தக் கோபுரத்தை வடிவமத்த கட்டிடக்கலைஞர் யார் என்பதில் ஆய்வாளர்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருந்தன. டியோட்டிசால்வி (Diotisalvi) என்ற கட்டுமானக் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான கிபி.12ம் நூற்றாண்டு அரிய கலைப்படைப்புதான் இந்த பீசா கோபுரம் என்பது ஆய்வுகளுக்குப் பின்னர் நிரூபணமானது. பீசா நகரிலிருக்கும் சான் நிக்கோலா கட்டிடத்தையும் இங்கிருக்கும் பாப்டிஸ்ட்ரியையும் வடிவமைத்தவரும் இவரே. கி.பி. 1173ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தான் முதலில் இதன் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கி.பி. 1198ம் ஆண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டு முதல் ஆலயமணி கோபுரத்தில் பொருத்தப்பட்டது. கி.பி. 1272ம் ஆண்டில் கியோவான்னி டி சிமோன் என்ற கட்டுமானக் கலைஞரின் மேற்பார்வையில் கட்டுமானப் பணி மேலும் தொடரப்பட்டது. ஆறு தளங்களைக் கடந்து ஏழாவது தளத்தையும் கட்டு முடித்து இந்தக் கோபுரம் 1319ம் ஆண்டில் இன்றிருக்கும் வடிவத்தைப் பெற்றது. கீழ்த் தளத்திலிருந்து மேல் தளம் வரை செல்ல 251 படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறுகலான பளிங்குப்படிக்கட்டுக்களில் ஏறித்தான் ஒவ்வொரு தளமாகச் சென்று கண்டு வரமுடியும்.

    5

    இன்றைய நிலையில் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வந்து கூடுகின்றனர். ஆண்டில் 365 நாளும் இங்குச் சுற்றுப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மிக அதிகமாக உலக மக்களால் வந்து பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்லப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது என்றால் அது மிகையல்ல. பீசா கோபுரத்தின் உள்ளே சென்று வரக் கட்டணம் கட்டி டிக்கட் பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களை மட்டுமே காவல் அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கின்றனர். கோபுரத்தின் அளவு சிறியதாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

    இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க இரண்டு நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக கட்டுமானப் பணிகள் நடந்தன என்பதை நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கின்றது. இத்தாலியின் பீசா நகருக்குச் சிறப்பு சேர்க்கின்ற ஓர் அம்சம் என்று மட்டுமில்லாமல், இத்தாலிக்கும் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் புகழ் சேர்க்கும் சிறப்புச் சின்னமாக பீசா சாய்ந்த கோபுரம் திகழ்கின்றது.

    Share