செண்பக ஜெகதீசன்

 

பயனில பல்லார்முற் சொல்லல் நயனில                                        

நட்டார்கண் செய்தலின் தீது.

       -திருக்குறள் -192(பயனில சொல்லாமை)

 

புதுக் கவிதையில்…

 

யாரும் விரும்பாத செயல்களை

நண்பர்களிடம் செய்வது தீது,

அதனிலும் தீது-

அறிஞர் பலர்முன்

பலனற்ற சொற்களைப் பேசுதல்…!

 

குறும்பாவில்…

 

பலனற்ற சொற்களைப் பலர்முன் பேசுதல்,  

விரும்பாதவற்றை நண்பர்களிடம்   

செய்வதைவிடவும் தீயதே…!

 

மரபுக் கவிதையில்…

 

மற்றவர் யாரும் விரும்பாத

     மதிப்பு கெட்ட செயல்களைத்தான்

உற்ற நண்பரும் வேதனையில்

     உழன்றிடச் செய்தல் தீதாமே,

முற்றிலும் இதைவிடத் தீதாகும்

     முறைமை யற்ற ஒன்றாகும்,

கற்ற அறிஞர் சபைதனிலே

     கறையாய்த் தீச்சொல் பேசுதலே…!

 

லிமரைக்கூ..

 

நண்பரிடம் கொடுஞ்செயல்கள் தீது, 

அதனிலுந்தீது பயனிலாதவை பேசுதல்

கற்றறிந்த சபையோர் மீது…!

 

கிராமிய பாணியில்…

 

பேசாத பேசாத

பயனில்லாத பேச்சு பேசாத..

 

அதுவும்,

பேசாத பேசாத

படிச்ச பலபேர் சபயினிலே

பயனில்லாத பேச்சு பேசாத..

 

அது,

நம்ம நம்புற நண்பருக்கு

நாம செய்யிற

மதிப்புகெட்ட செயலவிட

மோசமான ஒண்ணாவும்..

 

அதால

பேசாத பேசாத

பயனில்லாத பேச்சு பேசாத…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *