எழுத்து. 2
கோவைப் பதியில் (கோப்பாய்) நன்கு மலர்ந்து
டென்மார்க் வரை பறந்து பாய்கிறது
வெல்லும் இவ்வுணர்வுக் கவிதைச் சிறகுகளின்
வீரியப் பரம்புதலில் உயரப் பறக்கிறது.
எழுத்துக்களின் சங்கமம் சொல் தானே!
என்னெழுத்து வாசிப்பில் பேரின்பம் நிறைவு.
எழுத்து வயலில் அகழ்ந்து மேய்தல்
அழுத்தும் தத்துவங்கள் யதார்த்தச் சிறகடிப்பு.
எழுதல், வாழ்தல், மகிழ்தல் சாதனை
எழுத்தே மகா பெரும் உணர்வு.
எழுத்தொரு தவம் நானதைச் செய்கிறேன்.
என்னெழுத்து பலரை ஈர்த்து அணைக்கிறது.
இழுத்தணைக்க இன்னும் இன்னும் எழுதுகிறேன்.
பழுக்கிறது நவரசங்களும் வானவில் வண்ணமாக.
பொழுதிற்கும் தொலைவான நோக்கில் தேடும்
குழுநிலை எழுத்துக்களன்றி வேறு என்ன!
முழவதுமான ஊஞ்சலாட்டம் தான்! ஆம்!
எழுத்துகளோடு ஆடும் இலக்கிய ஊஞ்சல்.
இழுத்தாடுவது பெண்மை, பொறாமை அறியாமை
கழுத்து காதணியென்று கதம்ப ஆட்டம்.
விழுத்தகையாய்ப் புதிய எழுத்து விளையாட்டும்
மழுப்பலாகவும் சிலருக்கு, மலைப்பாகவும் ஆகிறது.
எழுதுவது பெண்ணெனவும் சிலருக்கொரு இழிவு.
முழுதாகக் கடலாழமும், வானுயரமும் காணவில்லை.
விழுப்பமாக பூவுலக வாழ்வியலின் எழுத்தே
விழுந்தோடும் ஊற்று நீராய் ஓடுகிறேன்.
பழுதற்ற மழை நீராகவும் மணந்து
அழுத்தியோடும் ஆறாகவும் மண்ணில் ஊடுருவுகிறேன்.
(விழுத்தகை – பெருஞ்சிறப்பு, விழுப்பம் – நன்மை)
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-6-2017