நிர்மலா ராகவன்

ஆண்-பெண்-பள்ளி

நலம்-1-1

பெண்களும் பையன்களும் சேர்ந்து படிக்கும் இடைநிலைப்பள்ளி அது. ஆரம்பப் பள்ளியிலிருந்தே அப்படித்தான் என்றாலும், இந்த வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு உயர்பதவியிலிருந்த சில ஆசிரியைகளுக்கு வந்தது.

அதன் பலனாக, கோலாலம்பூருக்கு அருகிலிருந்த அப்பள்ளியில் ஒரு புதிய விதி அமலுக்கு வந்தது. எல்லா வகுப்பறைகளிலும் ஆண்கள்தாம் முதல் வரிசைகளில் அமர வேண்டும். காரணம்: பெண்கள் முன்னிருக்கைகளில் உட்கார்ந்தால், அவர்களுடைய பின்னழகைப் பார்க்கும் விடலைப் பையன்களின் மனம் சலனப்பட்டுவிடும். பிறகு, பாடங்களில் மனம் செலுத்துவது எப்படி?

ஆசிரியர்களின் பொதுக்கூட்டத்தில் இந்த விதி தெரிவிக்கப்பட்டபோது, `பெண்கள் மட்டும் பையன்களைப் பார்க்கலாமா?’ என்று யாரோ முணுமுணுத்தார்கள். (சத்தியமாக நானில்லை). நான் முணுமுணுப்பதெல்லாம் கிடையாது. போட்டால் சண்டைதான்).

மேலதிகாரிகள் என்ன சொன்னாலும், (பிதற்றினாலும்), ஆமோதிக்கும் வண்ணம் தலையாட்டி வைக்கவேண்டும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, பாவம்!
நான் புருவத்தை மட்டும் உயர்த்தினேன், `இது என்ன முட்டாள்தனம்?’ என்பதுபோல்.
மாணவர்களுக்கோ பெருமை தாங்கவில்லை. அவர்களிடம் உண்மைக் காரணம் சொல்லப்படாததால், இருபாலரில் தாங்களே உயர்ந்தவர்கள், அதனாலேயே அப்படி ஒரு சிறப்பு என்று எண்ணினார்கள்.

நான் போதித்த பரிசோதனைக்கூடத்துக்கு வந்தபோது, வழக்கமாக பெண்கள் உட்காரும் இடத்துக்குப் பையன்கள் வந்தார்கள். நடையிலேயே ஒரு துள்ளல். பெண்களைக் கேலியாகப் பார்த்தார்கள்.

ஒரு மாதம் ஆகியது. ஆண்களுக்குப் பெருமை அடங்கவில்லை. தாங்கள் அவ்வளவு உயர்வானால், உழைத்துப் படிப்பானேன் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். வாய் ஓயாமல் பேசினார்கள். நான் கற்பித்தது பின்னாலிருந்த பெண்களுக்குக் கேட்கவில்லை. அவ்வளவு இரைச்சல். அவர்களை நான் திட்டப்போனால், `Racist’, எங்கள் இனத்திற்கு இவள் எதிரி!’ என்ற பழி வரும். எதற்கு வம்பு!

மாணவிகள் ஒன்று திரண்டு வந்து, `பையன்கள் உயரமாக இருக்கிறார்கள். எங்களுக்குக் கரும்பலகை தெரிவதில்லை!’ என்று என்னிடம் முறையிட்டார்கள்.

சிறிது யோசித்துவிட்டு, “அடுத்த முறை நீங்கள் சற்று சீக்கிரம் வந்து, முன்னால் உட்கார்ந்துகொள்ளுங்கள்!” என்றேன்.

வழக்கம்போல், வெகு நிதானமாக வந்த மாணவர்கள் கோபமாக, “ஏய்! இது எங்கள் இடம்! பெண்கள் எல்லாரும் எழுந்திருங்கள்!” என்று விரட்ட, “டீச்சர்தான் சொன்னார்கள்!” என்று பதிலளித்தார்கள், பிடிவாதத்துடன் இறுகிய உதட்டுடன்.
“டீச்சர்! உங்களுக்குப் பள்ளிக்கூட விதி தெரியாதா?” என்று ஒரு மாணவன் சவாலாகக் கேட்க, “இது உங்கள் வகுப்பறை இல்லை. என் இடம்! இங்கு நான் வைத்ததுதான் சட்டம். உங்களுக்குத்தான் படிப்பில் அக்கறை இல்லையே! பின்னால் உட்கார்ந்து, தாராளமாகப் பேசுங்கள்!” என்றேன்.

அதிர்ந்தவர்களாக பின்னால் நகர்ந்தவர்கள், `எல்லாம் உன்னால்தான்!’ என்று ஒருவரையொருவர் திட்டிக்கொண்டார்கள்.
ஆனால், அவர்கள் மனம் படிப்பில் லயிக்கவில்லை. அவமானம் தாங்காது, குனிந்த தலையுடன் இருந்தார்கள்.

அவர்களைக் கவனிக்காததுபோல் நான் பாடத்தை நடத்த, பெண்கள் உற்சாகமாகக் கற்றார்கள். (மலாய் பெண்கள் ஆண்களைவிட கல்வியில் அதிக கவனம் செலுத்தி, உயர்கல்விக்குப் போகிறார்கள் என்ற தகவல் தினசரிகளில் வந்திருக்கிறது. ஏதாவது தடங்கல் இருக்கும்போதுதான் அதைத் தாண்டிக்கொண்டு, முன்னேற வேண்டும் என்ற உந்துதல் பிறக்கிறதுபோலும்!ஒரு மாதம் கழிந்தது. மாணவர்களின் உற்சாகம் அறவே வடிந்தது. தங்கள் நிலையை ஏற்றுக்கொண்டார்கள். எப்போதும்போல் பேச ஆரம்பித்தார்கள்.

நான் பெண்களுடன் கலந்தாலோசித்துவிட்டு, பழையபடி, மாணவர்களை முன்னால் உட்காரச் சொன்னேன். “தாங்க்யூ டீச்சர்!” என்றார்கள், மலர்ந்த முகத்துடன்.
இப்போது அவர்கள் பேசத் துணியவில்லை. `மீண்டும் பெண்களுக்குப் பின்னால் தள்ளப்படும் இழிநிலைக்கு ஆளாகிவிடுவோமோ?’ என்ற பயத்தால் படிப்பில் கவனம் போயிற்று.

பதின்மூன்று வயதில், `நீங்கள் பெண்களைவிட உயர்ந்தவர்கள்!’ என்று இந்த ஆண்பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கப்படுவதால், பெற்ற தாயாக இருந்தாலும், அவளுக்கு அடங்குவதில்லை. தாய் மரியாதையாக அவர்களை நடத்த வேண்டும்.

என் சக ஆசிரியை ஒருத்தி தன் மகனை அதட்டியபோது, `நீ பெண்! எனக்குப் புத்தி சொல்லும் தகுதி உனக்கில்லை!’ என்றானாம். ஆசிரியர்களின் பொதுஅறையில் புலம்புவாள்.

அவளுக்கு அப்போது எழுந்த வருத்தம் பிறர்மேல் ஆத்திரமாக மாறியது. தனக்குக் கீழே வேலை பார்த்தவர்களை படாதபாடு படுத்தினாள்.

தனியார் பள்ளிகளில் மாணவ மாணவிகளை பால் ரீதியாக வித்தியாசப்படுத்துவதில்லை. அதனால் ஒன்றாகப் பேசிப் பழகுவார்கள்.

`இதெல்லாம் பெண்கள் சமாசாரம்!’ என்ற பாகுபாடு இல்லாததால், பதின்ம வயது ஆண்கள் மாதவிடாய்பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். உடல் வலியுடன் பெண்கள் இருக்கும் அச்சமயத்தில் கனமான பொருள் எதையாவது தூக்க பெண்களுக்கு உதவி செய்கிறார்கள்.

`இது பெண்கள் வேலை!’ என்று எதையும் இழிவாகக் கருதாது, சமையலிலும், வீட்டைச் சுத்தப்படுத்துவதிலும் ஈடுபாடு செலுத்துகிறார்கள்.

அப்படி ஒரு பையன், `எனக்குப் புத்தகத்தை எடுத்துப் படிக்கப் பிடிக்காது. அதனால் படிப்பதே கிடையாது,’ என்றபோது, `பின்னே எப்படி நல்ல தேர்ச்சி பெறுகிறாய்?’ என்று கேட்டேன்.

`பெண்கள் ஓயாமல் பாடங்களை விவாதிப்பார்கள். அதைக் கேட்டாலே போதுமே!’ என்றான், அலட்சியமாக.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒருவிதமான உறவுதான் இருக்கமுடியும், அவர்கள் கலந்து பேசினால், நிச்சயம் நடக்கக்கூடாதது நடக்கும் என்ற மனப்பான்மை இன்றும் நம்மில் பலருக்கு இருக்கிறது. இதன் விளைவாக, யாரைப் பார்த்தாலும் வேண்டாத ஈர்ப்புதான் ஏற்படும்.

திருமணம் ஆனபின்னர், மனைவி கணவனைப் பார்த்துப் பயப்படுவதும், `இவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று கணவனுக்கு ஆயாசம் ஏற்படுவதும் இயல்பு. இதனால் இவர்களுடைய தாம்பத்திய உறவு நெருக்கமானதாக இருக்க முடியுமா?

அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாக, தம்மைப் போன்றில்லாது, இன்னொரு பாலருடன் சகஜமாகப் பேசுபவர்களைப் பழிக்கிறார்கள் நான் பார்த்த பெண்கள். (ஆண்களும் இப்படி வம்பு பேசுகிறார்களா என்று தெரியவில்லை).

நான் ஆரம்பக்கல்வி பயின்றபோது, கூடப்படித்த பையன்களுடன் பேசிப் பழகினால் காது அறுந்துவிடும் என்று ஆசிரியர்கள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். அதனால், சொந்த அண்ணனைக்கூடத் தெரியாததுபோல் நடந்துகொள்ள வேண்டிய நிலை. இப்படிப் பயமுறுத்தி வைத்தால், பதின்ம வயதில் வேண்டாத கற்பனைகளும் நடத்தையும்தான் வரும்.

நம் குழந்தைகள் தம்முடன் படிப்பவர்களையோ, உத்தியோகம் பார்ப்பவர்களையோ வீட்டுக்கு அழைத்துவந்தால், அவர்களுடன் நாமும் கலந்து பேசினால், அவர்களுக்கு நம் மீது மரியாதையும், தம்மீதே நம்பிக்கையும் ஏற்படாதா! அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள்.

படித்து முடித்து பதினைந்து வருடங்கள் ஆனபின்னர் எங்கள் வீட்டுக்கு வந்தான் என் மகளுடன் பள்ளியில் படித்த ஒருவன். அப்போது இரவு பத்து மணி இருக்கும். எங்கோ இருந்தவன் அந்தப் பக்கமாக வந்தவன், முன்பு எங்கள் வீட்டுக்குத் தீபாவளி சமயத்தில் நினைவு வைத்துக்கொண்டு, மீண்டும் வந்திருந்தான்.

“அம்மா! ங் வந்திருக்கான்!” என்று என் மகள் அழைக்க, “சரி,” என்று மட்டும் சொன்னேன். இரண்டு, மூன்று முறை அவள் கூப்பிட, புரிந்து, “ஓ! என்னைப் பாக்கணும்கிறானா?” என்று அறைக்கு வெளியே வந்தேன்.

மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தோம்.

“ஆன்ட்டி! நான் ரவை உருண்டை சாப்பிடுவதையே விட்டுவிட்டேன்,” என்று அவன் கேலியாகச் சொல்ல, சிரிப்பு பலத்தது.

அவனுக்குப் பதினேழு வயதாக இருந்தபோது, `எங்கள் சம்பிரதாயம்! உருண்டையை முழுவதாகத்தான் வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்,’ என்று நான் அளக்க, அந்த சீனப்பையனும் அதை நம்பி, அப்படியே செய்து, விழி பிதுங்க திண்டாடினதை மறக்க முடியுமா?!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *