”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
முகமூடிக்காரன்
ரோஷான் ஏ.ஜிப்ரி
காலத்தின் வழியே
தொலைத்த சுயத்தை
தெருத்தெருவாய் தேடியலையும் நான்
அண்மையிலிருந்து
காசுக்காகவும்,கடமைக்காகவும்
முழுநேர முகமூடிக்காரன்
என்னிடம் ஒரு முகமும்
சில..முகமூடிகளும் இருக்கின்றன
குழந்தைகள்முன் ஒருமுக மூடியையும்
மனைவியிடம் ஒரு முக மூடியையும்
உறவினர்களிடம் ஒரு முகமூடியையும்
நண்பர்கள் முன் ஒரு முக மூடியையும்
வேலை தளத்தில்
வேறொரு முகமூடியையும்
அணிய வேண்டியது அவசியமாகி விட்டது
எத்தனை நேர்த்தியாக இருப்பினும்
மாறி,மாறி மாட்டிக் கொள்ளும்
ஒவ்வொரு முகமூடியையும்
களற்றி வைக்கையில்
மாட்டிக் கொள்ளவும் நேர்கிறது
நிம்மதியை தொலைத்தவன்
துயிலற்று அலைவதுபோல் ஆயிற்று
வாழ்க்கையில் வசித்தல்
முகமூடிகளற்ற
என்னுடைய பழைய முகத்தை
யாரிடம் பறிகொடுத்தேன்
என்பதைத்தான் இன்னும்
தெரியாமல்
தேடி அலைகிறேன்.
-
அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 72
ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி
முனைவர்.சுபாஷிணி
ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் எழுத்துக்கள் இதுவரை அறுபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் அவரது எழுத்துக்களால் அவர் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.
தான் ஒரு இலக்கியவாதி.. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் அவரது தந்தையார் ஒரு லூதரன் மதபோதகராகப்பணியாற்றியதாலும் அவரது தாயார் ஒரு லூதரன் மத போதகரின் மகள் என்பதாலும் பெற்றோரின் எண்ணம் தன் மகனும் அதே பணியைத் தான் மேற்கொள்ளப்போகின்றான் என்பதாக இருந்தது. ஆனால் தனது எண்ணம் முழுமையும் இலக்கியத்திலே தோய்ந்திருப்பதை அவர் உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை தன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு, அழியாப் புகழை இன்று பெற்றிருக்கின்றார்.

ஹெர்மான் ஹெஸ்ஸ ஜெர்மனியின் பாடர்னுர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் கால்வ் நகரில் 1877ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி பிறந்தார். இந்த கால்வ் ஒரு அழகிய சிற்றூர். எனது இல்லம் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 27 கிமீ தூரம் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஊர் இது.
மதபோதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஹெர்மான் ஹெஸ்ஸவிற்குப் ப்ராட்டஸ்டண்ட் சமய நம்பிக்கைகளை இளமைக் காலம் முதல் பெற்றோர் மற்றும் அவர் வளர்ந்த சூழல் அவருக்கு இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதில் மனம் நிறைவடையாமல் தனது சுயத்தைத் தேடுவதிலே அவர் கவனமும் ஆர்வமும் இருந்தது. ஒருபள்ளியை விட்டு மற்றொன்று என திருப்தியுறா நிலையிலேயே தன் கல்வியைத் தொடர்ந்து பின்னர் தன் 15ம் அகவையில் கல்வியை விட்டு விட்டு ஒரு கடிகாரம் செய்யும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்குக் கடிகாரம் பழுது பார்த்தலோடு புத்தக விற்பனை செய்வதும் தொழிலாக அமைந்தது.
சமயத்திலிருந்து விடுதலை என்பதாகவும், தனி மனித சுதந்திர எண்ணங்களின் செயல்பாடு எவ்வகையில் அமைத்துக் கொள்வது என்றும் அவரது சிந்தனை இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகள் அவரது தேடலில் இருந்தன. தனது சுய அனுபவங்களையே தனது இலக்கியப்படைப்புகளில் புகுத்தி இலக்கியங்களைப் படைத்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ.
அவரது நாவலான Peter Camenzind அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றியை அளித்தது. இது அவருக்கு இலக்கியத்தின் வழியே அவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்டும் வழியை அமைத்துக் கொடுத்தது. ஒரு புகைப்படக்கலைஞரான மரியா பெர்னோலியை திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியின் தெற்குப் பகுதியான கான்ஸ்டன்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரது மண வாழ்க்கை இனிமையாகத் தொடரவில்லை. இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். பின்னர் பயணங்களில் தன் வாழ்க்கையைச் செலவிட ஆரம்பித்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ. புதிய ஊர்களும் மக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சமய அனுபவங்களும் அவர் தேடுதலுக்கு விருந்தாக அமைந்தன. இலங்கைக்குச் சென்று பின்னர் இந்தோனீசியா சென்று சேர்ந்தார். ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அவருக்குப் புதிய அனுபவங்களைத் தர, வாழ்க்கையில் புதிய கோணங்களை அவர் உணர வாய்ப்பாக இது அமைந்தது. இந்தப் பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் தந்த அனுபவத்தின் சாராம்சமாக சித்தார்த்தா என்ற காப்பியத்தை இவர் வடித்தார்.
திருமண முறிவுக்குப் பின்னர் பல இடங்களில் பயணித்து பின்னர் சுவிச்சர்லாந்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குதான் அவரது பல இலக்கிய ஆக்கங்கள் படைக்கப்பட்டன. 1924ம் ஆண்டில் சுவிச்சர்லாந்தின் குடியுரிமை பெற்று ரூத் வாகனர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. பின்னர் வரலாற்றுத்துறை நிபுணரான நினோன் டோல்பின் என்பவரைத் திருமணம் செய்து தன் புது வாழ்க்கையை மீண்டும் 1931ம் ஆண்டில் தொடங்கினார். இவர்கள் உறவு அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்தது.

culture-hermann-hesse-museum இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா முழுமையையும் பாதிக்கச் செய்த ஒரு நிகழ்வு. ஹெர்மான் ஹெஸ்ஸ, நாசி அரசின் மீதான தனது எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டியதோடு ஜெர்மானிய அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1946ஆம் ஆண்டில்தான் இவரது இறுதி படைப்பான “The Glass Bead Game” நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்தப்பரிசு அவரது மனித உரிமைக் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் உரக்கச்சொல்லும் அவரது இலக்கியப்படைப்புக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்து அவரைப் பெருமைப்படுத்தியது. ஹெர்மான் ஹெஸ்ஸேவின் நூல்கள் ஜெர்மனியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் பின்னர் அவரது நூல்களுக்கான புகழ் சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அவரது மறைவு நேரத்தில் அவர் இலக்கிய உலகால் மறக்கப்படுவார் என சிலரால் பேசப்படும் அளவிற்கு அவரது நூல்கள் மேல் விமர்சனம் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாக்கப்பட்டதை காலம் நிரூபித்தது.
அவரது நூல்கள் ஜெர்மனி மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவரது சித்தார்த்தா என்ற நாவல் தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் வாசகர்களின் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. ஞானத்தேடலினை மையமாக வைத்து அவர் புனைந்த இந்த நாவல் பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.
ஹெர்மான் ஹெஸ்ஸே அவர்களின் பிறந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக கால்வ் நகரில் அமைக்கபப்டுள்ளது. நதி பாயும் ஓர் அழகிய சிற்றூர் இது. இங்கே நகரின் மையப்பகுதியில் ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் வெண்கல சிலை வருவோரை வரவேற்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் முகவரி
Hermann-Hesse-Museum
Marktpl. 30, 75365 Calw,Germany
00 497051 7522 -
சும்மா இரு !
( எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
சும்மாஇரு என்று சொல்லுவது எளிதாகும்
சும்மா இருப்பதுதான் சுகமான நிலையாகும்
சும்மா இருந்துவிட நினைக்கின்றார் யாவருமே
இம்மா நிலத்தினிலே என்றுமே உயர்ந்துநிற்பார் !
சும்மா இருப்பது சுமையான காரியமே
சுகம்கண்ட யாவருமே சும்மாஇருக்க மாட்டார்
சுழன்றோடும் மனத்தாலே சும்மா இருப்பதற்கு
சுதந்திரத்தைப் பெற்றுவிடல் சுகமான விஷயமல்ல !
சும்மா இருந்ததனால் சுமைவிட்டார் ஞானியர்கள்
இம்மா நிலத்தினிலே இவர்வணங்கும் பேறுபெற்றார்
சும்மா இருந்தபடி சுவாசத்தால் பலபெற்றார்
சுகமனைத்தும் துறந்ததனால் சும்மாவே இருந்தார்கள் !
சும்மா இருந்துவிட்டால் சோறுதான் கிடைத்திடுமா
சும்மா இருப்பதுதான் சோம்பலின் நிலையாகும்
சும்மா இருந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்திடுமா
சும்மாவை தூக்கியெறி துள்ளலுடன் வாழ்ந்திடலாம் !
சும்மா இருந்துவிடின் அம்மாவும் வெறுத்திடுவாள்
சும்மா இருந்துவிடின் துணையுமே துரத்திடுவாள்
சும்மா இருந்துவிடின் தோழமையும் கிட்டவரான்
சும்மா இருந்துவிடின் சுகத்துக்கே கேடாகும் !
சும்மா இருப்பாரை சொறிநாயும் நோக்காது
சும்மா இருப்பாரைச் சொந்தமுமே பார்க்காது
சும்மா இருப்பார்க்கு சொர்கமுமே நரகமாகும்
சும்மா இருப்பதற்கு சொல்லுகின்றார் பலகருத்தை !
சும்மா இருஎன்று சொல்லுகின்ற நிலையினிலே
சும்மா இருந்துவிடின் சோறுபற்றி நினைத்திடலாம்
சும்மா இருஎன்னும் பொருள்பொதிந்து பார்த்துவிடில்
இம்மா நிலத்திற்கது எட்டாத தத்துவமே !
தத்துவமாய் இருக்கின்ற தகைமையுடை சொல்லதனை
சாதாரண நிலையில் நாமெடுத்தால் வேறு அர்த்தம்
உள்விழுந்து நோக்கிவிடின் உயர்கருத்தை கொள்ளுவதால்
சும்மா நாமெண்ணிவிடும் சொல்லல்ல சும்மாயிரு !
-
வாழநினைத்தால் வாழலாம்
ரா.பார்த்தசாரதி
வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் ,
மனிதனின் மனதில் சட்டென்று மாறும் யோசனைகள்
ஏன் நடந்தது என்று தெரியாத ஒரு மன வருத்தம்
மனதினில் சத்தம் போடாமல் எழும் ஆசைகள் !
எதை கண்டும் நெஞ்சினுள் ஏற்படும் ஒரு ஏக்கம்
கெட்டதை நினைத்து மனதினில் வேதனை கலந்த துக்கம் ,
யார் மீதோ ஏற்படும் காரணம்மில்லாத கோபம் !
வெற்றி பெற முடியாமல், கண்ணீர் சிந்தும் தோல்வி !
வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்,
வாழ்க்கையில் சந்தித்த மறக்க முடியாத உறவுகள்
மனிதனின் மனதினில் அலைபாயும் நிலையில்லாக் காதல்
அவன் முன்னேற்றத்திற்காக செய்யும் செயல்கள்!
மனித வாழ்க்கையில், விட முடியாத தொடர்புகள்
வாழ்க்கையில் விட்டொழிக்க முடியாத தொல்லைகள்
வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் அவமானங்கள்
உறங்கும்போது கலைய மறுக்கும் கனவுகள் !
நிலையில்லாத வாழ்க்கையில் நிரந்தரத்தை நினைப்பதும்,
வாழ்க்கையில், இன்ப, துன்பங்களை சமமாக நோக்காமலிருப்பதும் ,
ஆறடி நிலமே சொந்தம் என அறியாமல் இருப்பதும்,
உன்னுடன் வருவதோ நீ செய்த பாவ புண்ணியங்கள் என தெரிந்தும் !
இன்றைய ஆடம்பரமும்,கலாசாரமும், மனிதனை வாழ விடுவதில்லை
ஆண், பெண் இருவர் சம்பாதித்தாலும், நிம்மதி என்பது இல்லை ,
ஒருவக்கொருவர் புரிதலுடன் , விட்டுக்கொடுத்தால் துன்பம்மில்லை
மனிதனே, வாழ நினைத்தால் வாழலாம், வழியாய் இல்லை !
-
குறளின் கதிர்களாய்…(137)
–செண்பக ஜெகதீசன்
இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும். திருக்குறள் -448: பெரியாரைத் துணைக்கோடல்)புதுக் கவிதையில்…
தவறும்போது
தட்டிக் கேட்கும்
தக்க பெரியோர்
துணையற்ற மன்னனுக்கு,
கெடுக்கும் பகைவரின்றியே
கேடு வரும்!குறும்பாவில்…
இடித்துரைத்துத் திருத்திடத் துணையாயப்
பெரியோரில்லா மன்னன்,
பகைவரின்றியே பெரிதும் கெடுவான்!மரபுக் கவிதையில்…
தவறிடும் போதெலாம் எடுத்துரைத்தே
–தட்டிக் கேட்கும் பெரியோரை
அவைதனில் அறிவுத் துணையாக
–அமைத்துக் கொள்ளா மன்னவரும்,
புவியதன் வாழ்வில் பொறாமையுடன்
–பொருதிட நிற்கும் பகைவர்கள்
எவரு மின்றியே கெட்டிடுவார்
–எல்லா மிழந்து நிற்பாரே!லிமரைக்கூ…
இடித்துரைக்கும் பெரியோரென்றும் துணையே,
இல்லையெனில் மன்னவரும் கெடுவர்
எதிரியின்றியே,
இல்லையென்றும் பெரியோருறவுக் கிணையே!கிராமிய பாணியில்…
தொணவேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்,
தவறுசெஞ்சா தட்டிக்கேக்கும்
பெரியவங்க தொணவேணும்…தொணயிதுபோல் இல்லயிண்ணா
தொலஞ்சிபோவான் ராசாவுமே,
கெடுக்கவரும் எதிரியில்லாமலே
கெட்டுப்போவான் ராசாவுமே…அதால,
தொணவேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்! -
எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு
-பா.ராஜபாண்டி
சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அகம், புறம் என்ற இரு பொருண்மைக்கு உட்பட்டு வந்த பாக்களைப் பெற்று அமைந்துள்ளன. இவற்றுள் செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்கள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகின்றன. இப்பாக்களில் ஈற்றடியில் கடைசி எழுத்து உயிர்மெய் கலந்து ஏகார ஓசையுடன் அமைந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில பாடல்கள் இவ்விதியிலிருந்து சற்று மாறுபட்டு உயிர்மெய்யீராக அல்லாமல் மெய்யெழுத்தாகவே வந்துள்ளன. தொல்காப்பியர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களும் ஈற்றடியில் இறுதியாக வந்து அமையும் செய்யுட்களை இயைபுவனப்பு எனக் கூறுகின்றார். எட்டுத்தொகை நூல்களில் சில செய்யுட்கள் தொல்காப்பியரின் எண்வகை வனப்புகளுள் ஒன்றான இயைபுவனப்பு செய்யுட் வகையைச் சார்ந்தவையாகும். இந்நூலில் உள்ள தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் இலக்கண அமைப்பு கொண்ட செய்யுட்களைக் கண்டறிந்து, அவற்றின் பாடுபொருள் நிலையினையும், சிறப்பினையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
தொல்காப்பியரின் எண்வகை வனப்பு:
வனப்பு என்பது அழகு, அலங்காரம் எனப் பொருள்படும். வனப்பின் வகைமை பற்றிக் கூறும் தொல்காப்பியர், “பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ” (தொல்.செய்யுளியல்.நூ.1) எனக் கூறுகின்றார். அதாவது, வனப்பு எட்டு வகைப்படும். அவை, 1.அம்மை, 2.அழகு, 3.தொன்மை, 4.தோல், 5.விருந்து, 6.இயைபு, 7.புலன், 8.இழைபு போன்றவையாகும். இவர் செய்யுளியலில் முதலில் கூறிய 26 செய்யுள் உறுப்புகளோடு அம்மை முதலாக இழைபு ஈறாகச் சொல்லப்பட்ட எண்வகை வனப்புகளோடு சேர்த்து மொத்தம் 34 செய்யுள் உறுப்புகள் என்று கூறுகின்றார்.
தொல்காப்பியரின் இயைபுவனப்பு:
இயைபு என்னும் வனப்பு இலக்கியச்செய்யுளில் இறுதியில் அமையும் மெல்லின, இடையின எழுத்துக்கள் அடிப்படையில் இனங்காணப்படும் செய்யுளுறுப்பாகும். அதாவது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களில் ஏதேனும் ஒன்று ஈற்றில் பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவதை இயைபுவனப்பு என்கிறார் தொல்காப்பியர். இதனை,
“ஞகார முதலா னகார ஈற்றுப்
புள்ளி இறுதி இயைபெனப் படுமே” (தொல்.செய்.இளம்பூரணர் உரை. நூ.232)என்ற நூற்பா மூலம் விளக்குகின்றார். இளம்பூரணர், “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுள் இயைபென்னும் செய்யுளுறுப்புகளாகும் என்பார்.”1 இவ்வுறுப்புக்கு உதாரணம் வந்த வழிக் காண்க என்று கூறி, இறுதியில் முடியும் மணிமேகலை பாட்டுக்களைக் கூறுகின்றார். பேராசிரியர், “மேலே கூறப்பட்ட பதினொரு புள்ளியீற்றினுள் ஒன்றினை இறுதியாகச் செய்யுள் பொருள் தொடராகவும், சொற்றொடராகவும் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”2 இவர் இயைபு என்பது பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவது என்கிறார். சான்றாக மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட கொங்குவேண்மாக்கதையினையும் காட்டுகின்றார். இவர் “அவை இப்பொழுது வீழ்ந்தன போலும்’’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஏனைய பத்து மெய்களும் ஈற்றில் அமையும் தொடார்நிலைச் செய்யுள் கிடைக்கவில்லை என்பது நன்கு புலனாகின்றது. நச்சினார்க்கினியர், “முன்னர்க் கூறிய பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈற்றில் வந்து செய்யுளை பொருட்டொடராகச் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”3 சான்றாக மணிமேகலையும், உதயணன் கதையும் இக்காலத்தவர் கூறும் அந்தாதிச் சொற்றொடரும் கொள்க எனக் கூறுகின்றார்.
தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்து,
“ஞகார முதலா னகார ஈற்றுப்
புள்ளி யிறுதி இயைபெனப் படுமே” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.552)என்ற நூற்பாவினையும், மொழிக்கு இறுதியாக வரும் எழுத்துக்களைக் கூறும் போது ‘ங்’ என்ற மெய்யொற்றைத் தவிர்த்து,
“ஞணநம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழி.நூ.45)என்ற நூற்பாவினையும் படைத்துள்ளார். ‘ங்’ என்ற மெய்யொற்றை ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை. மேலும் தொல்காப்பியர் மொழி மரபில் மொழிக்கு ஈறாகும் எழுத்துக்களைக் கூறும்போது,
“உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும்”
(தொல்.எழுத்து.மொழி.நூ.36) என்றும்,“கவவோ டியையின் ஒளவு மாகும்” (தொல்.எழுத்து.மொழி.நூ.37)
என்றும் நூற்பாக்களைக் கூறுகின்றார். அதாவது, உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் மொழிக்கு ஈறாக வரும் என்று கூறுகின்றார்.
‘ங்’என்ற மெய்யொற்றைத் தவிர்த்து மீதமுள்ள பதினொரு மெய்யீறுகள் இலக்கியச் செய்யுளின் இறுதியில் தொடர்நிலைச் செய்யுளாக வந்து, அழகுற அமைவது இயைபுவனப்புச் செய்யுளாகும், இதேபோல் தொடை வகையினைக் கூறும்போது ‘இயைபுத் தொடை’ என்றும், வண்ணம் வகையினைக் கூறும்போது ‘இயைபு வண்ணம்’ என்றும் கூறுகின்றார். இவற்றில், இயைபுத் தொடை என்பது அடிதோறும் இறுதி எழுத்தோ அல்லது இறுதிச் சீரோ ஒன்றி வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,
“இறுவாய் ஒப்பின தியைபென மொழிப” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.408)
என்று நூற்பா மூலம் விளக்குகிறார். ‘இயைபு வண்ணம்’ என்பது இடையின எழுத்துக்கள் மிகுதியாக வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,
“இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே” (தொல்.பொருள்.செய்.தமிழண்ணல் உரை.நூ.1474)
என்ற நூற்பாவின் மூலம் சுட்டுகின்றார். ஆகையால் தொல்காப்பியர் காலத்தில் எண்வகை வனப்புகளில் ஒன்றான இயைபு வனப்பு பிற்காலத்தில் ஒரு தொடை வகையாகக் கருதப்பெற்றது எனலாம்.
தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்துள்ளார். மீதமுள்ள பதினொரு மெய்களும் இலக்கியச்செய்யுளில் இறுதியில் வந்து அழகுற அமைவது இயைபுவனப்பு செய்யுளுறுப்பாகும். க.வெள்ளைவாரணார், ”ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றினை இறுதியாகக் கொண்டு முடியும் செய்யுள் இயைபு என்னும் வனப்புடையது என்பார்.”4 ச.பாலசுந்தரம், “விட்டிசையின்றிச் சொற்களைப் புணரியல் விதிப்படி இயைந்து யாப்பது இயைபெனப்படும். ஞகார முதலா னகாரம் ஈறாக மொழியிறுதி நிற்கும் புள்ளி எழுத்துப் பதினொன்றையும் வருமொழியொடு புணர்த்தி யாப்பது இயைபென்னும் உறுப்பாகும். உரையாசிரியர்கள், பதினொரு மெய்யெழுத்துகளும் செய்யுள் ஈறாக நிற்குமாறு அமைதல் இயைபு என்பர். ஆனால் ஞ.ந.வ ஆகிய ஈறுகள் அங்கனம் நிற்றற்குரியன அல்ல, ஆகலின் அவர்கள் கருத்து பொருந்துமாறு இல்லை என்பார்.”5 இவரின் கருத்து தொல்காப்பிய எழுத்ததிகார மொழிமரபு என்ற இயலின்,
“உச்ச காரமோடு நகாரம் சிவணும்” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.46)
என்ற நூற்பாவினையும்,
“உப்ப காரமோடு ஞகாரையும் அற்றே
அப்பொருள் இரட்டாது இவணை யான” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.47)என்ற நூற்பாவினையும்,
“வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.48)
என்ற நூற்பாவினையும் ஒட்டியே அமைந்துள்ளது. அதாவது நகர மெய் பொருந், வெரிந் என்றும், ஞகர மெய் உரிஞ் என்றும், வகர மெய் அவ், இவ், உவ், தெவ் என்றும் வருகின்ற சொற்களின் மட்டும் இறுதியில் வரும் என்ற கருத்துரை உள்ளதைக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால் உரையாசிரியர்கள் கருத்தானது,
“ஞணநம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.45)என்ற நூற்பாவினை ஒட்டியே அமைந்துள்ளது. அடிகளாசிரியர், “இயைபு என்பன மேலே கண்ட பதினொரு புள்ளி ஈறாய் வந்த பாட்டெல்லாம்”6 என்றும், தமிழண்ணல், “ஞகரமெய், னகரமெய் ஆகியன செய்யுள் இறுதியில் வருமாறு இயற்றுதல்”7 என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இயைபுவனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது.
தொல்காப்பியர் மெல்லினம், இடையினம் சார்ந்த எழுத்துக்கள் (ஙகரத்தை தவிர) மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறியவர் வல்லின எழுத்துக்களில் குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும் என்பதை புணரியலில்,
“அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்”
(தொல்.எழுத்து.புணரியல்.நூ.1)என்ற நூற்பாவில் சுட்டிச் செல்கின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் இருபத்தாறு எழுத்துக்கள் வரும் என்று கூறியவர் அவற்றுள் உயிரீற்றுக் குற்றியலுகர ஈறுகளை ஒழித்து, ஏனைய பதினொரு ஒற்றுகளே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். எனவே ஒற்றுகள் என்பது இயைபு வனப்பிற்குச் சிறந்த இயல்பாகும் என்பதை உணர முடிகின்றது.
தமிழண்ணல் “ஞ,ண,ந,ம,ன என்ற புள்ளியிறுதியில் முடியும் பாடல்கள் இயைபு வனப்பாகும். இந்நூற்பாவின் பொருள் விளங்கவில்லை. அவ்வாறு முடியும் பாடல்கள் எவையும் இல்லை’’8 என்றும், “இயைபு வனப்பு என்பது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுட்கள். இது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு வகையாகத் தோன்றுகின்றது. நெடும்பாடல்களின் தொகுப்பு போன்ற பழங்காப்பியங்களில் இவ்வியைபு வனப்பு அமையும்”9 என்றும் எடுத்துரைக்கின்றார்.
சோ.ந.கந்தசாமி, “செய்யுளின் இறுதி எழுத்து கூறப்பட்ட புள்ளி எழுத்துக்களில் ஒன்றாக வருவது இயைபு வனப்பாகும்”10 என்றும், சொ.பரமசிவம் “மெல்லினம் ஆறனுள் ஞ்,ண்,ந்,ம்,ன் என்னும் ஐந்தும், ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்ற இடையினம் ஆறும் சேர்ந்த பதினொரு புள்ளி எழுத்துக்கள் ஈறாக வந்த பாட்டுக்கு இயைபுவனப்பு என்று பெயர். இயைபுப் பொருள் தொடராகவும், சொற்றொடராவும் செய்யப்படும் பாட்டு’’11 என்றும், வை.கா.சிவப்பிரகாசம் “ஞகரம் முதலா னகரம் ஈறாகவுள்ள பதினொரு மெய்கள் அமைவது இறுதியில் இயைபு வனப்பின் சிறப்பு’’12 என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறு இயைபு வனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது. தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி மொழி மரபில் நூற்பா 36,37 ஆகியவற்றில் கூறுகின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி கூறியவர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்களே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். பிற்கால இலக்கண நூலான யாப்பருங்கல விருத்தியுரை, “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் சொற்றொடராய்ச் செய்யப்படும் பாட்டு இயைபு எனப்படும்”13 என்று கூறுகின்றது. இவ்வாறு பதினொரு மெய்களும் ஈற்றில் அமைவது இயைபுவனப்பு இலக்கியம் என்று இலக்கணம் உள்ளதே தவிர, இவற்றுக்கான இலக்கியம் மறைந்தன போலும் என்பதும் இடைக்கால உரையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.
எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு:
எட்டுத்தொகை நூல்களின் செய்யுட்களில் தொல்காப்பியரின் இயைபு வனப்பில் அமைந்த செய்யுட்களைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.
ஐங்குறுநூற்றில் பொருளீட்டச் சென்ற தலைவன் தன் மனைக்குக் காலம் தாழ்த்தி வந்தவனைக் கண்ட தலைவி அவன் புறத்தொழுக்கம் (பரத்தமை ஒழுக்கம்) புரிந்துள்ளான் என வருந்துகின்றாள். அவ்விடத்தில் தோழி தலைவனின் நல்லொழுக்கத்தினைக் கூறித் தெளிவுபடுத்துகின்றாள். இதனை ஓரம்போகியார்,
“செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
றண்ணக மண்ணளைச் செல்லு மூரற்
கெல்வளை நெகிழச் சாஅ
யல்லல் உழைப்பது எவன் கொல் அன்னாய்” (ஐங்குறுநூறு. பா-27) என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். செந்நெற் கதிர்களை நண்டுகள் மண்ணாலான குளிர்ந்த வளையத்திற்குள் (நண்டுபொந்து) கொண்டு சொல்வதைப் போன்று தலைவன் தன் முயற்சியால் பொருளீட்டித் தன் மனைக்கு வருவான் எனத் தலைவனின் கடமையைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள். இப்பாடலில் ஈற்றடியின் கடைசிச்சொல் “அன்னாய்” என்று “யகர” மெய்யெழுத்தில் வந்து முடிவதைக் காணமுடிகிறது.தலைவன் மீது காதல்மனம் கொண்ட தலைவி அவன் பிரிவினை நினைத்து உடல் மெலிவுற்றாள். செவிலி உடல் மெலிவிற்குக் காரணம் அணங்கினால் வந்திருக்கும் என எண்ணி வெறியாட்டு நிகழ்த்த முயன்றாள். அதனை அறிந்த தோழி தலைவியின் கற்பினைக் காப்பதற்குச் செவிலியிடம் தலைவியின் உடல் மெலிவுக்கான காரணத்தைத் தோழி அறத்தோடு நின்று கூறுகின்றாள். இதனை ஓரம்போகியார்,“உண்டுறை யணங்கிவ ளுறைநோ யாயிற்
றண்சேறு கள்வன் வார்க்கு மூரற்
கொண்டொடி நெகிழச் சாஅய்
மென்றோள் பசப்ப தெவன்கொ லன்னாய்” (ஐங்குறுநூறு.பா-28)என்ற பாடலின் மூலமாகச் சுட்டுகின்றார்.பசலை நோயானது ஊரார் நீர் எடுக்கும் துறையின்கண் உள்ள தெய்வத்தால் உண்டானதல்ல. தலைவியின்மேல் உள்ள இந்நோய் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் ஊர்ந்து கோலம் போடுவதற்கு ஏற்ற ஊரினையுடைய தலைவனால் வந்த காதலே, தலைவியின் உடல் மெலிந்து ஒளிமிக்க வளையல் நெகிழ்வதற்கு காரணம் எனத் தோழி தன் தாயான செவிலியிடம் கூறுகின்றாள். இப்பாடலில் “உண்துறை அணங்கு” என்ற சொல் ஊரில் குடிநீர் எடுக்கும் இடத்தினையும், அவ்விடத்தில் மனிதர்களைத் தீண்டி வருத்தும் அணங்கு (பேய் அல்லது தெய்வம்) தங்கும் என்ற பண்டைய மக்களின் நம்பிக்கையும் கூறப்பட்டுள்ளன. இப்பாடலில் ஈற்றடியின் இறுதி எழுத்து யகர மெய்யுடன் முடிவதைக் காணமுடிகின்றது.
இவ்வாறு ஐங்குறுநூற்றில் மூன்றாம் பத்தான கள்வன் பத்தில் உள்ள பத்துப்பாடல்களும், யகர மெய்யெழுத்து இறுதியில் வந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. இப்பாடல்களில் அன்னாய் என்ற சொல் தலைவி, தோழி, செவிலி, ஆகியோரைக் குறித்து வருகின்றது. இப்பாடலில் ஈற்றடியில் முடியும் அன்னாய் என்ற சொல் கூற்றின் பொருளை விளக்க வருமிடத்து முதல் சொல்லாக வந்து நிற்கின்றது. எனவே, உரையாசிரியர்களின் விளக்க உரைகளின்படி யகர மெய்யுடன் அமைந்த இப்பாடல்களை இயைபு வனப்புச் செய்யுளாகக் கொள்ளலாம். மேலும் கபிலரின் குறிஞ்சித் திணையில் ‘அன்னாய்ப் பத்து’ என்னும் பகுதியில் ‘அன்னாய்’என யகரமெய் ஈற்றில் வந்து முடிவதாக பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ‘அன்னாய்’ என்ற சொல் தலைவியைக் குறிப்பதாக ஆறு பாடல்களிலும், செவிலியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும், தோழியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.
எனவே ‘அன்னாய்’என்ற சொல் தோழி, செவிலி, தலைவி ஆகியோரைக் குறித்து நிற்கின்றது. தோழி தலைவியை பெருமாட்டி, அன்னை என்று அழைப்பதாகவும், தலைவி தோழியை தோழியே என்று விளித்து அழைப்பதாகவும், தோழி செவிலியை அன்னை, தாய் என அழைப்பதாகவும் ‘அன்னாய்’ என்ற சொல் பொருள்படுவதை உணரமுடிகின்றது.
தோழி தலைவியிடம் கேட்காமலே தலைவனிடம் சென்று இரவுக்குறி நேர்ந்து பின்னர் தலைவியிடம் தலைவன் இரவுக்குறியில் வருவதை உணர்த்தியபொழுது தலைவி நீ நேர்ந்தமை நன்றே எனத் தோழியிடம் தலைவி கூறுகின்றாள். இதனை மாடலூர் கிழார்,
“ சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
உள்ளின், உள்நோய் மல்கும்:
புல்லின் மாய்வது எவன்கொல்? – அன்னாய்” (குறுந்தொகை.பா.150)என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். ‘அன்னாய்’ என்ற சொல் இறுதியில் வந்து முடிவதால் யகரமெய் ஈற்றில் வருகிறது. இப்பாடலில் அன்னாய் என்பது தோழியைக் குறிக்க வரும் சொல்லாகும். மேலும், சங்க நூலான எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் பல மெய்யெழுத்துக்களை ஈற்றில் எழுத்துக்களாகக் கொண்டு முடிகின்றது.
இயற்கைப் புணார்ச்சிக்குப் பின்னர் தலைவி மாட்டு நிகழும் செயல் வேறுபாடுகளைத் தலைவியது நாற்றம், தோற்றம் முதலான ஏழன் முதலாகத் தலைவியின் ஒழுக்கத்தை உணர்ந்த தோழி, தலைவி தன்னை மறையாமை காரணமாக மெய்யாகவும், பொய்யாகவும் பிழை நிகழாவண்ணம் கவர் பொருள் நாட்டத்தாள் என்று புனைந்து தலைமகனுக்குக் கூறுகின்றாள். இதனைக் கபிலர்,
“கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
ஆங்கண் உடைய அவன்”(கலித்தொகை.பா.37)என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலில் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற மெய்யெழுத்து ‘அவன்’ என்று பயின்று வந்துள்ளது. இதே போன்று கலி.51(அவன்), கல்-56(உடையான்), கல்-84 (தவறுடையேன்), கலி-86 (மகன்), கலி-11(மன்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற எழுத்தானது பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.
தலைமகளது குறிப்பினைக் கண்டு பிரிய இருக்கின்றான் என ஐயம் கொண்ட தலைவி, ஐயுற்றுச் செல்கின்ற அக்காலத்து தலைவன் கனவில் அரற்றினமைக் கேட்ட தலைவி, பொருள் வயிற் பிரிவான் எனத் துணிந்து ஆற்றாதவளாய்த் தோழியிடம் கூறுகின்றாள். இதனைப் பெருங்கடுங்கோ,
“நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும் தாம்
போயின்று சொல் என் உயிர்” (கலித்தொகை.பா.24)என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்ற எழுத்தினைக் கொண்டு ‘உயிர்’ என அமைந்துள்ளது. இதே போன்று கலி-141 (தமர்), கலி-145 (துயர்) போன்ற பாடல்களில் ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்னும் மெய்யெழுத்து பாடலின் இறுதி எழுத்தாகப் பயின்று வருவதைக் காணலாம்.
தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வந்த பொழுது காமக்கிழத்தி தன் அன்பு மிகுதியால் ஊடியதைக் கண்ட தலைவன் அங்கு சென்றான். இதனைக் கண்ட காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாளாயாகக் கூறினாள். இதனை மருதனிளநாகனார்,
“பொது அவிழ் பனிப்பொய்கை புதுவது தளைவிட்ட
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.” (கலித்தொகை.பா.69)என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் மெய்யெழுத்து ‘அற்றக்கால்’ என பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-70 (கால்), கலி-82(தொழில்), கலி-85 (பால்), கலி-91 (செயல்), கலி-96 (செல்) போன்ற பாடல்களின் இறுதியில் ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் எழுத்து பயின்று வந்தமையை உணர முடிகின்றது.
தலைவன் பரத்தையிடமிருந்து வீட்டுக்கு வந்து, இல்லத்துள் நுழையாமல் வேலிக்கு அப்பால் நிற்கின்றானாகத் தலைவி தலைமகனுக்கு உரைக்கின்றாள். இதனை மருதனிளநாகனார்,
“நயம் தலை மாறுவார் மாறாக மாறா
கோதை பார்ப்பு ஆட காண்குவம்.” (கலித்தொகை.பா.80)என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் மகர மெய்யான ‘ம்’ என்ற மெய்யெழுத்து இறுதி எழுத்தாக ‘காண்குவம்’ எனப் பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-81(நாம்), கலி-90(உடையேம்), கலி-109(வரும்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக மகர மெய்யான ம்’ என்ற மெய்யெழுத்து பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.
தலைவனது கொடுமை உள்ளத்தைச் சுடுகின்றது என்று கூறிய தலைவியிடம் பாணன் முதலிய வாயிலோர் நயந்து கூறும் வழி, தலைவியானவள் பரத்தையரைக் குறும்பூழ்ப் பறவை என்று கூறுகின்றாள். இதனை மருதநிளநாகனார்,
“நில் ஆங்கு நில் ஆங்கு இவார்தரல் எல்லாநீ
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ்.” (கலித்தொகை.பா.95)என்ற பாடல் மூலம் விளக்குகிறார். இப்பாடலின் இறுதியடியில் ழகர மெய்யான ‘ழ்’ என்னும் மெய்யெழுத்து ‘பூழ்’ என்று இறுதி எழுத்தாகப் பயின்று வந்துள்ளது.
பாண்டியனுடைய தலைநகராகிய மதுரை அறிவானே ஆராய்ந்து நோக்குமிடத்து இவ்வுலகினுள்ள ஏனைய நகரங்கள் அனைத்தினும் சிறந்தது என்பதை,
“உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவார் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடத தன்மைத்தே
தென்னவன்
நான்மடக் கூடல் நகர்.” (பரிபாடல்திரட்டு, ஆறாம்பாடல். மதுரை.பக்.475)என்ற பாடல் மூலம் அறியமுடிகின்றது. இப்பாடலானது பாண்டியனது மதுரை நகர் நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே இவ்வுலகத்தில் உள்ள நகரங்கள் அனைத்தினது பெருமையினையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு சீர்தூக்குமிடத்து உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களின் பெருமையும் தாழ்ந்து நிற்க, தன்பெருமை அங்கனம் தாழ்ந்து நிற்காமல் சிறப்பினைப் பெறும் தன்மை உடைத்ததாகும் என்று கூறுகின்றது. இப்பாடலின் கடைசி அடியின் இறுதிச் சீரில் இறுதி எழுத்தானது இயைபு வனப்பின் இலக்கணமான ரகர ஒற்று இடம் பெற்றுள்ளதை உணரலாம்.
முடிவுகள்
தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் பாடுபொருளானது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்கள் பாடலின் இறுதியில் பயின்று வருவன என்பதாகும். எட்டுத்தொகையில் பதினொரு மெய்களில் ன்,ர்,ல்,ம்,ழ்,ய் போன்ற மெய்யெழுத்துகளே பாடலின் இறுதியில் பயின்று வந்துள்ளது. மற்ற ஐந்து மெய்களான ண்,ஞ்,ந்,வ்,ள் போன்றவை பயின்று வரவில்லை. சங்க இலக்கியங்களுக்கு உரித்தான ஏகார ஓசையுடன் எழுத்துக்கள் வராமல் இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்கள் இறுதியாக வருவதால் இப்பாடல்களின் அடியானது மிகச் சிறப்பினைப் பெறுகிறது. இவை தவிர மற்ற உயிர் மெய் எழுத்துகளும் எட்டுத்தொகையில் பயின்று வருவதைக் காணலாம். சங்க இலக்கியத்திற்கான ஏகார ஓசையில் முடியும் என்ற பாடுபொருள் அமைப்பு, இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்களின் வழியில் பாடுபொருள் மாற்றி அமைவதால் பாடல்கள் மிகச்சிறப்பினைப் பெற்றுள்ளமையினை உணரலாம்.
***
குறிப்புகள்
- தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.167
- தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை,பக்.429-430
- தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சர் உரை,ப.240
- வெள்ளைவாரணர்.க, செய்யுளியல் உரைவளம்,ப.1031
- பாலசுந்தரம்.ச, செய்யுள் உறுப்புக்கள்,ப.136.
- அடிகளாசிரியர்(ப), தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.428
- தமிழண்ணல், சங்க மரபு,ப.89
- தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்- 2,ப.97
- தமிழண்ணல், இந்திய இலக்கியச் சிற்பிகள்,தொல்காப்பியர்,ப.108
10.கந்தசாமி. சோ.ந, தமிழ் யப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், பாகம்-1,ப.282
- பரமசிவம். சொ.ம, நற்றமிழ் இலக்கணம்,ப.645
- சிவப்பிரகாசம். வை.கா, செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும்,ப.425
- யப்பருங்கல விருத்தியுரை.ப.172
***
துணை நின்றவை:
குறுந்தொகை மூலமும் உரையும், (2009), பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18.
ஐங்குறுநூறு மூலமும் உரையும், (2009), பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18
கலித்தொகை. மூலமும் உரையும், (2007), நச்சர் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18
பரிபாடல் மூலமும் உரையும், (2007) பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18
தொல்காப்பியம்,பொருளதிகாரம், (2001), கழக வெளியீடு,
522,டி.டி.கே.சாலை, சென்னை-18
தமிழண்ணல் – தொல்காப்பியம்,பொருளதிகாரம் மூலமும் கருத்துரையும், (2008), மீனாட்சி புத்தக நிலையம்,
48,தானப்ப முதலி தெரு, மதுரை-1
பாலசுந்தரம்.ச – தொல்காப்பியம்,பொருளதிகாரம்,காண்டிகையுரை (1991), தாமரை வெளியீட்டகம்,367,மேலவீதி, தஞ்சாவூர்-9
வெள்ளைவாரணர்.க – தொல்காப்பியம், செய்யுளியல் உரைவளம் (1989),மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை, மதுரை-21
பரமசிவம்.சொ.ம – நற்றமிழ் இலக்கணம்,(2010), பட்டுப் பதிப்பகம்,
1269,32-ம் தெரு, அண்ணா நகர் மேற்கு, கம்பர் குடியிருப்பு,
சென்னை-40
தமிழண்ணல் – சங்க மரபு, (1991), மீனாட்சி புத்தக நிலையம்,
48, தானப்ப முதலி தெரு, மதுரை-1
தமிழண்ணல் – தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்-2,
செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1
சிவப்பிரகாசம்.வை,கா – செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும், (1963) தமிழ் பண்பாட்டு மையம்,மதுரை-1
***
-பா.ராஜபாண்டி
முனைவா் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46.Email:rajapandiraja1986@gmail.com
-
கற்றல் ஒரு ஆற்றல்- 44
க. பாலசுப்பிரமணியன்
மொழி கற்றலில் சில பார்வைகள்
மொழி கற்றலைப் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரஸினிச் என்ற மூளை நரம்பியல் விஞ்ஞானி இதைப்பற்றிய கருத்து தெரிவிக்கையில் கூறுவதாவது: “வளரும் பருவத்தில் எட்டு வயது முதல் மூளையில் மொழிகள் கற்பதற்கான முக்கிய பகுதி (critical Area ) தயாராகிறது. இந்தப் பருவத்தில் மொழிகள் ஒன்றோ, இரண்டோ அல்லது இதை விட அதிகமாக மொழிகளோ கற்பதற்கு மூளையின் அந்தப் பகுதி மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. எல்லா மொழிகளும் அதன் உச்சரிப்புகளும் அந்த ஒரே இடத்தில் பதிவு பெறுகின்றன. இதனால் அந்த வயதில் எல்லா மொழிகளும் அநேகமாக அவைகளுக்கு உள்ள இயற்கையான ஒலிகள் மற்றும் உச்சரிப்புக்களுடனேயே வெளிப்படுகின்றன.” இந்த வயது வரம்புக்கு அப்பால் கற்கப்படும் மொழிகள் தாய்மொழி போலவோ அல்லது கற்கப்படும் முதல் மொழிபோலவோ எளிதாக கற்கப்படுவதில்லை. மற்றும் அவைகளின் உச்சரிப்புகள் பொதுவாக முதல் மொழி போலவோ அல்லது அதைப் பொதுவாக பேசுபவர்கள் உச்சரிப்புப் போலவோ அமைவதில்லை.
இதற்கான காரணத்தை விளக்கும் நிபுணர்கள் கருத்து இதோ :
“Language Development has a critical period that begins in infancy and ends between eight years and puberty. After the critical period closes, a person’s ability to learn a second language without an accent is limited. In fact, second languages learned after the critical period are not processed in the same part of the brain as is the native language.”
இதற்குக் காரணம் கற்றுக்கொள்ளப்படும் வளரும் பருவத்திற்குப் பின் இரண்டாவது மொழி கற்றுக்கொள்ளும் பொழுது அந்தக் கற்றல் முதல் மொழி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு பகுதியில் பதிவு ஆகின்றது. ஆகவே முதல் மொழி எவ்வளவு சரளமாகப் பேசப்படுகின்றதோ அது போல் இரண்டாவது மொழி பேசப்படுவதில்லை. இதைப்பற்றிய கருத்துக்களை வெளியிடும் Dr நார்மன் டொய்ட்ஜ் என்பவர் கூறுவதாவது ” If two languages are learned at the same time, during the critical period, both get a foothold. Brain scans, show that in a bilingual child all the sounds of its two languages share a single map, a library of sounds from both the languages.”
ஆனால் சில நேரங்களில் நாம் இதற்கு சில விதி விலக்குகளையும் பார்க்கலாம்.
மூளையின் மாறும் மற்றும் விரிவாக்கம் ( Neuro Plasticity ) பற்றிய ஆராய்ச்சிகள் அதிகப்படியான கற்றலுக்கு மூளை தயாராக இருக்கிறது என்பதையும், வளர்ச்சியின் பின் பருவத்தில் கற்கப்படும் மொழிகள் எவ்வாறு சூழ்நிலைகள் மற்றும் மாறுபட்ட முறைகள் மூலமாக முதல் மொழியைப்போல் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் விளக்குகின்றன. ஆனால் இதற்கு அதிக அளவிலான முயற்சியும் நேரமும் தேவைப்படும். இந்த விதமான கற்றல் இயற்கையான கற்றலிலிருந்து சற்றே மாறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே இளமைப் பருவத்தில் மொழிகளைக் கற்றலும் அவைகளின் பேசும் எழுதும் திறன்களை வளர்த்தலும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.
ஒருவேளை வளரும் பருவத்தில் அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால் மூளையின் சார்ந்த பகுதிகள் காலியாகவோ அல்லது வேலையற்றதாகவோ இருப்பதில்லை என்பதும் ஆராய்ச்சிகள் மூலமாக விளங்குகின்றன. அந்தப் பகுதி முதல் மொழியின் வளத்தையும் திறன்களையும் மேலும் வளர்ப்பதற்கும் போற்றுவதற்கும் உதவியாக அமைகின்றது. இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூளை நரம்பியல் மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நமக்குச் சொல்லும் மந்திரமாவது ” பயன்படுத்து அல்லது இழந்துவிடு ” (Use it or Lose it). ஆகவே மூளையைத் தொடர்ந்து பயன்படுத்துதல் அவசியமாகின்றது.
மேலும் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் பொழுது விழிகளால் பார்த்துக் கற்றுக்கொள்ளும் திறன் படைத்த மாணவர்களை விட கேட்டுக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் வேகமாகவும் திறம்படவும் கற்றுக்கொள்கிறார்கள் என்று கருதப்படுகின்றது. ஆகவேதான் மொழி கற்றலில் ஆசிரியர்களின் பேசும் திறன் மற்றும் உரையாடும் திறன், விளக்கும் திறன், கற்பனைகளைத் தீண்டிவிடும் தூண்டிவிடும் திறன் ஆகியவை சிறப்புக்கு பெருமளவில் பயனுள்ளதாக அமைகின்றன.
சிறிய வகுப்புகள் முதல் முதுநிலைக் கல்வி வரையிலான மொழி வகுப்புகள் ஆர்வத்தை உண்டுபண்ணுவதாகவும் மொழி அறிவினை (Linguistic Intelligence) வளர்ப்பதாகவும் அமைதல் அவசியம்.
தொடரும்..
-
சுகவனம் – 6
-இன்னம்பூரான்
செப்டம்பர் 9, 2016நாளை வெளிவரும் லான்ஸெட் என்ற உலகபுகழ் வாய்ந்த மருத்துவ இதழ் ஒரு மாபெரும் சாதனையை வெளிக்கொணரும். அதுவும் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சரும், உலக சுகாதார மையத்தின் பிராந்திய தலைவரும் கலந்தாலோசித்து எழுதியதை நாம் யாவரும் படித்து, இயங்கி, நமது சுகவனத்தை போற்ற வேண்டும்.
ஶ்ரீலங்காவின் சாதனை: மலேரியாவை ஒழித்ததும், அதற்கான நற்சான்றை நான்கு நாட்களுக்கு முன்பு WHO விடமிருந்து பெற்றுக்கொண்டதும். உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த போதே, இந்த ஆய்வும், செயலும் நடந்து வந்தன. அந்த நாட்டின் மக்களில் பெரும்பாலோர் கீழ் நடுத்தர வகையினர். 80% கிராமங்களில் வாழ்பவர்கள். கொசுவின் சிரஞ்சீவி வாழ்க்கைக்கு வேறு ஒன்றும் வேண்டாம். அத்தனை சொகுசு கொசுவுக்கு அங்கே! கலோனிய ஆட்சியில் மலேரியாவால் மாண்டோர், லக்ஷக்கணக்கில். 1934-35 காலகட்டத்தில் மலேரியா எங்கெங்கும் தீ போல் பரவி, ஜனத்தொகையில் 1.5% மக்களை விழுங்கியது.
அந்த நாடு 1945ல் டி.டி.டி தெளிப்பதை மும்முரமாக கையாண்டு பலன் கண்டாலும், அந்த முறையின் விளைவுகளை கண்டு நிறுத்தியவுடன், நாட்டில் மலேரியா தாக்கம் 17 பேர் மட்டுமே என்று 1963ல் சாதனை படைத்திருந்தாலும், கொசு புத்துயிர் பெற்றது; மலேரியா 1967-69 காலகட்டத்தில் 15 லக்ஷம் பேர் மலேரியாவினால் தாக்கப்பட்டனர்.
1980க்கு பிறகு பத்து வருடங்களில் ஶ்ரீலங்கா கொசுவை பபமுனைகளில் தாக்கி ஒழிக்க முற்பட்டனர் – நீர்நிலைகளிலும், ஈரப்பதமுள்ள விளைநிலங்களிலும் கொசுவை அழிப்பது, அபாயம் நிறைந்த பகுதிகளில் மட்டும் மருந்து தெளிப்பது, டி.டி.டி.யை தவிர்த்த பூச்சிக்கொல்லிகள், சிசுவதம், கொசுவலை, பரந்த இடைவிடாத ஆழ்ந்த மேற்பார்வை, வகையறா.
கொசு என்றால் சும்மாவா? இதுவெல்லாம் போதவில்லை. 1980, 1980, 1987 களில் ஆறு லக்ஷம் கேசுகள். 264,349 1999ல். உடனடி மருத்துவம், சாவுகளை குறைத்தது. இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் அங்கு ஒரு திருப்புமுனை அமைந்தது எனலாம். ஒரே வருடத்தில் 68% குறைந்தது, மலேரியா. 2008ம் வருடம் உள்நாட்டு மலேரியா தலையெடுக்கவில்லை.
இந்தியாவின் உள்குத்து வீரர்களே! மறக்காதீர்கள். ஶ்ரீலங்கை அரசுக்கு, மலேரியாவின் தாக்கம் அறிந்த விடுதலை புலிகள், இந்த மலேரியா ஒழிப்புப்போரில் ஒத்துழைத்தார்கள். நம் புத்தியும் அவ்வழி செல்ல வேண்டும். நம் நாட்டில் கொசு தர்பார் தடபுடல் என்பதால்.
-#-
விடுதலை புலிகளின் ஒத்துழைப்பு பற்றி:
Abeyasinghe, RR, Galappaththy, GN, Smith Gueye, C, Kahn, JG, and Feachem, RG. Malaria control and elimination in Sri Lanka: documenting progress and success factors in a conflict setting. PLoS One. 2012; 7: e43162
உதவி :DOI: http://dx.doi.org/10.1016/S0140-6736(16)31572-0
சித்திரத்துக்கு நன்றி:
***
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com -
படக்கவிதைப் போட்டி 79-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரத்தின் போட்டிப் புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திருமிகு. ஷாமினிக்கும், அதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் முதற்கண் நம் நன்றி!
சிரத்தின்மீது குவிந்திருக்கும் கரங்கள் இம்மனிதரின் முகத்தில் கவிந்திருக்கும் கவலையின் பிரதிபலிப்பாய் இருக்குமோ?
நமக்கேன் அந்தக் கவலை? புகைப்பட மனிதரின் அகத்தைத் திறந்துகாட்ட நம் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்! ஆதலால், அப்பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடலாம்!
***
என்ன தப்பு நிகழ்ந்திருந்தாலும் தலைமீது கைவைக்காதே தோழா! கடல் அலையெனக் கவலைகள் ஆர்ப்பரித்து வரும்போதும் நம்பிக்கையொன்றே தெப்பமாய் உன்னைக் கரைசேர்க்கும்!” என்று துணிவூட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
கப்பல் மூழ்கிப் போனாலும்
கடலாய்த் துன்பம் வந்தாலும்,
எப்பவும் எதற்கும் சோர்ந்திடாதே
எல்லாம் போய்விடும் கடலலைபோல்,
தப்பே நடந்து போனாலும்
தலையில் கைகள் வைக்கவேண்டாம்,
தெப்பமாய் உதவிடும் நம்பிக்கை
துணிவுடன் செயல்படு வென்றிடவே…!***
தம்பி! உன் கைகள் தலையைத் தாங்கிப்பிடித்திருப்பது எதற்காக? கப்பல் கவிழ்ந்ததாலா…இல்லைத் தலைநோவாலா? காரணம் ஏதாகிலும் இருக்கட்டும்! கவலையை விடு; நம்பிக்கையை விடாதே! என்பது திரு. ரா. பார்த்தசாரதியின் அறிவுரை!
கப்பல் மூழ்கியது போல் தலையில் இரு கைகள் வைத்தாயோ
தலை வலிக்கின்றது து என இரு கைகள் வைக்கின்றாயோ
தலையில் இருகை வைத்து எதை நோக்குகின்றாயோ
தலையில் இருகை வைப்பது நல்லது அல்ல என்பார் சான்றோர்
உன் இரு கைக்கொண்டு,நம்பிக்கையுடன் உழைத்தாலே போதும்
கைகளும், கால்களும் நமக்கு தருமே பெரும் பதவி
அதில் காணும் திறமைதான் நமது செல்வம்!***
”நீந்திய சிறுவனை இரக்கமின்றி அள்ளிச்சென்றது கடல்; துள்ளிச்சென்று நான் காக்கத் தவறியதால் வென்றது விதி!” என்று தன்னையே நொந்துகொள்ளும் மனிதன் இவன் என்கிறார் திருமதி. ராதா.
தன்னம்பிக்கை தலை தூக்கினால்
கொக்கரிக்கும் அலைகள் –அங்கு
கொஞ்சி விளையாடிய சிறுவன்காப்பாற்ற நினைக்க
என் வீரத்தில் நீச்சலில்
நான் வென்ற பதக்கத்தில்
அசையா நம்பிக்கைதாவி குதித்து நீந்த முயல
நீண்டது என் நீச்சல் நேரம்
கண் இமைக்கும் நேரத்தில்
கடல் காலனுக்கு அவனை தாரை வார்க்கஐய்யோ
காணாமல் போனான் சிறுவன்
வென்றது கடல்
வெந்து தோற்றேன் நான்என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
என்னால் தான் முடியும் என்பது அகம் பாவம்
உண்மை உறுத்துகிறது–இனி
உணர்ந்தும் பயனில்லைநான் கொண்டது தன்னம்பிக்கையா இல்லை
அகம் பாவமா…….
ஆனால் இது நிஜம்..
காப்பாற்றுவேன் என்ற நிஜம்
நிழலாக நெஞ்சை பிளக்க
அலையை தள்ளிய கைகள்–என்
தலையை தஞ்சமடைகிறது தற்போது***
புறமுதுகிட்டவன் புறவுலகை வென்றதில்லை; விறலோடு புறப்படு; வெற்றியை வசப்படுத்து! என்று துவண்ட நெஞ்சுக்குத் தெம்பூட்டுகின்றார் முனைவர் மா. பத்மபிரியா.
விரல்கள் பத்தும் மூலதனம்
கரம் கோத்துச் சிரம் சேர்க்காதே
[…]
விரலின் விந்தையால்
வீணை தீண்டினால் ராகம் பெறலாம்
உளி எடுத்தால் சிலை செதுக்கலாம்
எழுத்தாணி பிடித்தவனும்
பேனாமுனை பிடித்தவனும்
அறியாமை இருளை விரட்டி
அறிவொளியை வித்திட்டனர்
புறமுதுகுகாட்டியவன்
புறஉலகை வென்றதில்லை
உண்மையை நேருக்குநேர் நோக்கு
உள்ளொளி பெருக்கி உன்னதம் பெறுவாய்!***
”இருகரத்தைச் சிரமேற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பதால் கருநாடகம் சிந்தையிரங்கித் தண்ணீர் தந்துவிடப் போவதில்லை. யோசனையை விடுத்துப் புயலெனச் செயலில் இறங்கு! போராட்டத்தில் குதி! வழிபிறக்கும் நீருக்கு!” என்று வீரவுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.
பற்று பாசத்தால் பரிதவித்து
சுற்றுச் சூழலால் துடிதுடித்து
கற்றதும் பயனில்லையேஎன்று
கதறும்போது
கரங்கள் சிரம்மேல் அமர்வது இயல்பு
வெட்ட வெளிகளில் நின்று யோசித்தல்
நினைவுகளின் மயக்கத்திலிருந்து விடுபடும்இருகரம் இறக்கு சிரம் தனை விடுத்து
இடையூறுகளை களைந்திட புறப்படு
பொறுப்புடன்கூடும் போராட்டம்
விருப்புடன் ஏற்கப்படும்
கர் நாடகா மனம் இறங்கி நீர் தரும்
கருகும் பயிர்கள் செழிப்புரும்முடியாப்பொருளும்முடிந்துவிடும்
விடாமுயற்சி செய்வதால்
எடுத்தஎடுப்பு இனிதே முடிய
தொடுத்தே தொடர் தொழில் செய்***
இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…
சுதந்திர தாகம்
ஆயுத மனிதா! நாங்கள்
காயிதப் படகுகள்!
அடிக்கும் புயலில்
துடிக்கும் எமது கொடிகள்!
குப்புறச் சாயும்
பாய்மரம்!
குடியுள்ள சொந்த நாட்டில்
விடுதலை கேட்டுக்
கண்ணீர் விட்டோம்!
குருதி கொட்டினோம்!
ஆடை நீக்கப் பட்டு
மானம் இழந்தார் மங்கையர்,
[…]தந்தையர் இழந்தோம்!
தாயை இழந்தோம்!
தனையனை இழந்தோம்!
அடே! பாவிகளா!
ஆயுத மில்லா
ஆவி மனிதர் நாங்கள்!
உணவின்றி, உடையின்றி,
உற்றார் உறவினர்,
மேற்கூரை இன்றிக்
காயும் வெயிலில் வேகின்றோம்!
ஆயுத மனிதா!
கரம் தூக்கி விட்டேன்!
சுடாதே ! சுடாதே ! சுடாதே என்னை
என்று சொன்னேன் !
செத்தவர் எல்லாம் சுதந்திரம்
பெற்றார் !
சுட்டெனக்கும் நிரந்தரச்
சுதந்திரம் அளித்திடு!”அடிமை விலங்கை ஒடிக்க விரும்பினால் ஆயுதமேந்திய இந்த விலங்குகள் அனுமதிக்க மறுக்கின்றனவே! மண்ணுக்குச் சுதந்திரம் வேண்டினால் இங்கே கிடைப்பதோ மண்ணைவிட்டு விண்ணுக்கேகும் சுதந்திரம் ஒன்றே! அதையேனும் அளிக்கட்டும் இந்த ஆயுதபாணி!” என்று நொந்த உள்ளத்தோடு சிந்திக்கும் மனிதனைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில். நெகிழ்வூட்டும் இக்கவிதையைப் படைத்தமைக்காக இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அவரைத் தேர்வு செய்கிறேன்.
-
’’குமார சம்பவம்’’
கிரேசி மோகன்
———————————-
மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
ஆணை எனக்கு அருள்….(126)வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….கிரேசி மோகன்….! -
நலம் .. நலமறிய ஆவல் (21)
நிர்மலா ராகவன்
மனதை மயக்கும் மருந்துகள்
கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்துப் பேசிய மூன்று பெண்மணிகள் குறுகிய காலத்தில் மிகப் பருமனாக ஆகியிருந்தார்கள்.
`எனக்கு ஐம்பது வயதாகிவிட்டதே! மெனோபாஸ்! ஓயாமல் தலைவலி. இழுப்புவேறு! அதனால் ஏதோ மருந்து சாப்பிடுகிறேன்’.முப்பது வயதே ஆகிய இசை ஆசிரியையான சீதாவின் பிரலாபம்: `அடிக்கடி சளியும் இருமலும் வருகின்றன. இப்படியே இருந்தால், நான் எப்படி பாட்டு வகுப்புகள் நடத்துவது?’
மலேசிய நாடு தழுவிய நாட்டியப் போட்டி ஒன்றில் முதல் பரிசு வாங்கி, அத்துறையில் பட்டம் பெற்றவள் லதா. ஐந்தாண்டுகள் கழித்து அவளைப் பார்த்தபோது, `காலில் தாங்க முடியாத வலி. ஒரு வருடம் ஆடக் கூடாது என்கிறார் டாக்டர். மருந்து சாப்பிட்டால்தான் ஆடவே முடிகிறது!’ என்றாள்.
இவர்களிடையே இருந்த ஒற்றுமை: மூவருக்குமே வெவ்வேறு மருத்துவர்கள் ஸ்டீராய்டு (Steroid) மருந்துகளைப் பரிந்துரைத்திருந்ததுதான்.
அது என்னது அது, ஸ்டீராய்டு?
நம் உடலில் இயல்பாகச் சுரக்கும் ஹார்மோன் அது. உடலில் உள்ள உறுப்புகள், திசு, உயிரணுக்கள் ஆகியவை தம் வேலையைச் சரிவரச் செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இவை உபயோகப்படுகின்றன. இந்த ஹார்மோன் சரியாகச் சுரக்காதபோது, பல உபாதைகள் ஏற்படும்.
அவைகளைப் போக்கவென மனிதனால் தயாரிக்கப்பட்ட மருந்தாக (வேதியப் பொருள் கலக்கப்பட்ட) அதையே உட்கொள்ளும்போது, மந்திரம் போட்டதுபோல உடல் தொல்லை காணாமல் போய்விடும். அடுத்த முறை அதே உடல் உபாதைக்கு ஆளாகும்போது, ஒருவரை வலியப்போய் அதையே நாடும்படி செய்துவிடுகிறது. சுருங்கச் சொன்னால், ஸ்டீராய்டு ஒரு போதைப்பொருள்.
கஞ்சா, ஹெரோயின் மற்றும் மது வகைகள் உடனுக்குடனே ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த, போதை உண்டாகும் என்பது தெரிந்த சமாசாரம். ஒருவர் குடித்தவுடன் தன் வருத்தம், கவலை, ஏமாற்றம் எல்லாவற்றையும் மறந்துவிட்டதுபோல் சில கணங்கள் இருப்பார். ஆனால், அவைகளின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால்தான் அவர் தான் நாடும் மனக்கிறக்கத்தை அடைய முடியும்.
ஸ்டீராய்டு அப்படியல்ல. மனப்போக்கில் ஒரு மாற்றமும் இருக்காது. கிறக்கமும் கிடையாது — சில காலம்வரை. சில ஆண்டுகளுக்குப்பின் மெதுவாகத் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்.
கதை 1: விக்னேஸ்வரி பதின்ம வயதிலிருந்தே ஆஸ்துமாவால் அவதிப்பட்டவள். சுமார் முப்பது வயதானபோது மருத்துவர் ஸ்டீராய்டு கொடுத்ததில், இதுவரை பாடாய்படுத்திய வியாதி குணமானது போலிருந்தது.
`சரியாகப் போகும்வரை இம்மருந்தை உட்கொண்டுவிட்டு, பிறகு விட்டுவிடலாமே!’ என்றுதான் நினைத்திருந்தாள். அது முடியவில்லை. இப்பழக்கம்தான் ஒருவரைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுமே! அடுத்த முறை தானே அதைத் தேடிப் போகையில் சற்று அதிகமான அளவு தேவைப்பட்டது.
ஆரம்ப காலத்தில், விக்னேஸ்வரிக்கு அசுர பலம் வந்ததுபோல் இருந்தது. `SUPER HUMAN!” என்று பெருமிதமாக இருந்தது. எல்லாரும் தன்னைப்போல் இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஏளனம் எழுந்தது. பிறரை மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்தாள். சிடுசிடுப்பு, அநாவசிய சந்தேகம் என்று பல பக்கவிளைவுகள் ஏற்பட்டதில் குடும்ப அமைதி கெட்டது. கை கால்களில் வீக்கம். மொத்தத்தில் உடல் பூராவும் பருத்தது.
`இப்பழக்கத்தை விடு!’ என்று யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இருக்கவில்லை.இருபது ஆண்டுகள் கழிந்ததும், இரண்டு கை முட்டிகளும் மூடியபடி இருந்தன. திறக்க முடியவில்லை. `இனி இப்பழக்கத்தை விட்டால், உங்கள் உயிர் போய்விடும். அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்!’ என்றார்கள் மருத்துவர்கள். சுமார் ஓராண்டுகாலம் படுத்த படுக்கையாக இருக்க நேரிட்டது.
அந்தச் சமயம் பார்த்து, `நம்மை இவள் எப்படியெல்லாம் அவமானப்படுத்தினாள்!’ என்று பிறர் இவளிடம் சொல்லிக்காட்ட, `கதறிக் கதறி’ அழுததாகப் பிறர் தெரிவித்தார்கள்.
இப்போது விக்னேஸ்வரியால் அதிகம் நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை. பேனா பிடித்து எழுதக்கூட முடியாது. காலம் கடந்து வருந்துகிறாள்.
நான் முதலில் குறிப்பிட்ட மூன்று பெண்களிடமும் இக்கதையைச் சொல்லி, `வேண்டாம் இந்தப் பழக்கம்!’ என்று மன்றாடினேன்.
முதலில் சற்று பயந்தாலும், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்: `உடல்நிலை உடனே சீராகி விடுகிறதே!’
கதை 2: எனக்கு ஐம்பது வயதானபோது, H.R.T (Hormone replacement therapy) என்று நான் கேளாமலேயே ஒரு மருத்துவர் என்னை அதைச் சாப்பிடும்படி பல முறை வற்புறுத்தினார். `இருதய நோய் வராது!’ என்றார். நான் கொஞ்ச காலம் சாப்பிட்டேன். முகத்தில் முடி வளர ஆரம்பித்தது.
சில மாதங்களுக்குப்பின் அமெரிக்கா செல்ல நேரிட்டது. அங்குள்ள மருந்துக்கடையில் மருந்துச் சீட்டைக் காட்டியபோது, `இது தடை செய்யப்பட்ட மருந்து!’ என்றார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சியும், கோபமும். ஏனெனில், அங்கு தயார் செய்த மருந்தைத்தான் பிற நாடுகளுக்கு அனுப்புகிறார்கள்!
அது நல்லதல்ல என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலில்லை. நம் நாட்டில்தான் சட்டம் நமக்கு அனுகூலமாக இல்லை, பிற நாட்டு மக்கள் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மெத்தனம்! பெருமளவில் தயாரித்த மருந்துகள் வீணாகிவிட்டால், நஷ்டமாகிவிடுமே என்ற கவலை அவர்களுக்கு.
நாடு திரும்பியதும், என்னை எச்சரிக்கை செய்யவே வெளியிட்டதுபோல, `ஸ்டீராய்டு நீண்ட காலம் கழித்து தசைகளை பலகீனமாக்கிவிடும்,’ என்று தினசரி ஒன்றில் படித்தேன். முதல் வேலையாக மிச்சமிருந்த மாத்திரைகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்தேன்.
நோய்வாய்ப்பட்டவர்களோ, வயது முதிர்ந்தவர்களோதான் இப்பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில்லை. குழந்தை நடிகர்கள் வளர்ந்துவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என்று அவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்க பெற்றோரே வழிசெய்வதாகப் படித்திருக்கிறேன். எத்தனை காலம்தான் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும்! முகத்தில் முதுமை தெரிவதை மறைக்க முடியுமா?
பதின்ம வயதினர் இப்பழக்கத்துக்கு ஆளானால் என்றுமே உயரமாக வளர முடியாது. உடல் வளர்ச்சி குன்றிவிடும்.
மிகக் குறுகிய காலத்தில் புஜங்கள் திரண்டு, ஆணழகனாக ஆக வேண்டும் என்று `ஜிம்’மிற்குப் போகும் ஆண்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொள்கிறார்கள்.
`என் தசைகளைப் பார்!’ என்று அவர்கள் முதலில் பெருமிதம் கொள்ளலாம். ஆனால், நாளடைவில் கல்லீரல், இருதயம் போன்ற அவயவங்களில் நோய் வருகிறது. போதாக்குறைக்கு, விந்து குறைதல், ஆணுறுப்பு சிறுத்துப்போவது, தலையில் வழுக்கை, கை நடுக்கம், பெண்களைப்போன்ற மார்பகம் வளர்வது என்று பல பக்க விளைவுகள்.
எதையுமே தவிர்க்க முடியாதபோது, `என்னை யார் மிஞ்ச முடியும்!’ என்ற களிப்பு மறையும்.மிஞ்சுவது, `நான் எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்!’ என்ற சுயவெறுப்பும், கசப்பும்தான்.
தொடருவோம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”கன்றுபோல் பார்த்தன் கிருஷ்ணனவர் கால்வருட
குன்றேந் தியவர் குஷியாகி -நன்றந்த
கீதை உரைத்தனர்: கீழ்படிந்த் தோர்க்கெல்லாம்
பாதை பயணம் பகிர்வு”….கிரேசி மோகன்….! -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘வெண்பா’கவதம்….!
————————————————————
துருவ சரித்திரம்
———————
உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டு
சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
சக்களத்தி மாதுசுரு ஸி….(1)சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….(2)கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
சுநீதி அமரென்றாள் சேய்க்கு….(3)மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா(தம்பூரா -நாரதர்)
கரனை தரிசித்தான் கண்டு….(4)வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்
தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
ஆசன தர்ப்பை அமர்ந்து….(5)கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
குடைசாய மூன்று குவலயங்கள் காலை
திடமாக ஊன்றி தவம்….(6)ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
வேதங்கள் மூக்கில் விரல்….(7)கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
ஆண்டவன் காட்சி அளிப்பு….(8)உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
துருவன் விழிகள் திறக்க -அருவம்
கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….(9)மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
ஆணில் சிறந்தோன்(புருஷோத்தமர்) அளிப்பு….(10)பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
கிட்டுமெனக் கூறும் கதை….(12)….கிரேசி மோகன்….! -
முதன்முதல் முரண்கோளின் [Asteroid] மண் மாதிரி எடுத்து பூமிக்கு மீள விண்ணூர்தி ஏவியது நாசா
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா+++++++++++++++++++++++++நிலவினில் தடம் வைத்தார்
நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
செவ்வாய்க் கோள் ஆராயத்
தளவுளவி சிலவற்றை
நாசாவும்
ஈசாவும் இறக்கின !
வால்மீன் வயிற்றில் அடித்து
தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
நாசா விஞ்ஞானிகள் !
வால்மீனை விரட்டிச் சென்று
தூசியைப் பற்றிக்
காசினியில் இறக்கினார் !
முரண் கோள் ஒன்றின்
மாதிரி மண் தூசியை
வையத்தில் இறக்கும் ஜப்பான்
ஹயபுஸா விண்ணுளவி !
அயான் எஞ்சினை இயக்கி
பில்லியன் மைல்கள்
பயணம் செய்து
முரண் கோள் வெஸ்டாவை
முற்றுகை இட்ட பின்
நாசா விண்ணுளவி சுற்றியது
செரிஸ் குள்ளக் கோள் !
முரண்கோள் மண் மாதிரி எடுக்கப் போகுது
நாசா விண்ணூர்தி இப்போது !+++++++++++
கார்பன் செழிப்பான பென்னு [Bennu] போன்ற பூர்வ முன்னோடி முரண் கோள்களில்தான் 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன் சேர்ந்த மண் தாதுக்கள் சேமித்துக் கிடக்கின்றன. நமது பூமியிலோ அல்லது நமது சூரிய மண்டலக் கோள்களிலோ உயிரினத் தோற்ற மூலத்திற்கு அவை காரணமாய் இருக்கலாம்.
கிரிஸ்டினா ரிச்சி [விண்ணூர்தி நாசா துணைத் திட்ட அதிகாரி]
இதுவரை நாங்கள் முன்னறியாத இந்தப் புதிய உலகின் [Asteroid] தளவியல் படத்தைப் பதிவு செய்யப் போகிறோம். பல்வேறு காமிராக்கள், லேசர் கதிர்கள், ஒளிப்பட்டை மானிகள் மூலம், அதன் உலோகத் தாதுக்கள் அந்த முரண்கோள் தளம் நெடுவே பரவியுள்ளதை நாங்கள் ஆழ்ந்து அறியப் போகிறோம். விஞ்ஞான வரலாறு அவ்வித நிகழ்ச்சியை வேண்டுவதால், அம்மாதிரித் தேடலுக்கு நாங்கள் முன்னோடியாய் இருக்கிறோம்.
பேராசியர் தாந்தே லராட்டா [ முதன்மை ஆய்வாளர், அரிசோனா பல்கலைக் கழகம்]
நாசா முதன்முதல் ஏவும் முரண்கோள் மண் மாதிரி எடுத்து மீளும் விண்ணூர்தி.
2016 செப்டம்பர் 9 ஆம் தேதி நாசா முதன்முதல் முரண்கோள் ஒன்றின் மண் தூசியை எடுத்து பூமிக்கு மீளும் விண்ணூர்தியை அனுப்பி உள்ளது. 800 மில்லியன் டாலர் செலவில் பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றிவரும் “பென்னு” [ASTEROID BENNU] என்னும் முரண்கோளை ‘ஓஸிரிஸ்-ரெக்ஸ்’ [OSIRIS-REx] எனப் பெயரிடப்பட்ட விண்ணூர்தி ஈராண்டுகள் பயணம் செய்து தளப்பதிவு படமெடுக்கப் போகிறது. பென்னு முரண்கோள் சூரிய குடும்பத்தின் 500,000 முரண்கோள்களில் பூமிக்கு அருகில் சுற்றுமோர் சிறிய பூர்வீக முரண்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. அது கார்பன் செழிப்பான முரண்கோள். பூமியிலும், சூரிய குடும்பக் கோள்களிலும் உயிரினத் தோற்ற மூலத்துக்கு, அது அடைப்படைத் தாதுக்களைக் கொண்டிருக்கலாம். முரண்கோள்களில் எப்படி நீர், உலோகங்கள் தோன்றின என்று அதனால் அறிய முடியலாம்.

நாசா விண்ணூர்தி பென்னு முரண்கோளை 2018 ஆகஸ்டில் நெருங்கும். அதை விண்ணூர்தி ஈராண்டுகள் சுற்றி ஆராய்ந்து, 2020 ஜூலையில் அதன் மண்தூசியை அள்ளிக் கொண்டு பூமிக்கு வந்து சேரும். அள்ளும் நீள்கரச் சாதனத்தால் மண்தூசி 300 கிராம் [10 அவுன்ஸ்] வரை எடுத்துக் கொண்டு வர முடியும். விண்ணூர்தி முரண்கோள் தளத்தில் இறங்காமலே, நீள் கரத்தில் மண்தூசியை அள்ளிக் கொண்டு வரும். காற்று அழுத்தமுடன் வீசி, தளத்தில் தூசியைக் கிளப்பி, அது உறிஞ்சப்படும். அந்த மண் தூசியில் 4% கனடாவுக்கும், 0.5% ஜப்பனுக்கும் தரப்படும். இரு நாடுகளும் தம் சோதனைகள் புரிய நாசாவுக்கு நிதி அளித்துள்ளன.

அடுத்த சோதனை “சுற்றுவீதி தள்ளல்” [Orbital Nudges] எனப்படும் எர்கோவ்ஸ்கி விளைவு [Yarkovsky Effect] பற்றி ஆராய்வது. சூரினைச் சுற்றிவரும் முரண்கோள் எப்படிச் சூரிய ஒளி அதன் சுற்றுவீதியைத் தள்ளி நெருக்குகிறது என்று அளப்பது. அதன் மூலம் முரண்கோள் எதிர் காலத்தில் பூமியை நெருங்கி மோதிவிடும் அபாய எதிர்பார்ப்பு வாய்ப்பை அறிந்து விடலாம். இந்த முயற்சிபோல் 2010 ஆண்டில் முதன்முதல் ஜப்பான் விண்வெளித் தேடல் ஆணையகம் [JAXA] தனது “ஹயபுஸா” விண்ணூர்தியை முரண்கோள் ஒன்றுக்கு அனுப்பி, சில மைக்ரோ கிராம் பொருளைப், பூமிக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளது. 2014 டிசம்பரில் அடுத்து ஜப்பான் ஹயபுஸா-2 முரண்கோள் “ரியூகு” [RYUGU] அனுப்பி, அதன் தளவுளவி “மஸ்காட்” [MASCOT] இறக்கி மண்தூசி எடுத்து 2020 ஆண்டில் புவிக்கு மீளும்.
+++++++++++++
முரண்கோளை ஆராயப் போன நாசா விண்ணிளவி
“முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது. அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”
சார்லஸ் போல்டன் (NASA Administrator)
“2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”
ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

“புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம். விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)
“வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம். பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.
அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம். பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
“வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும். முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது. பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”
டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)
நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் சென்றது.
முதல் விண்வெளிக் குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்” [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது. 2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது. ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.
2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி 2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி அதைச் சுற்ற ஆரம்பித்தது. விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது. சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது. இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப் படுகிறது. புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்து, இப்போது சுற்றி வருகிறது.

இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System]. அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300 மைல்கள். அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ. இப்போது [2012 நவம்பர்] புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது. புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.
நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.
நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது. பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன. நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.

விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது. வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன. ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும். 2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.
2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. 10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது 2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த திட்டத் துக்குச் செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர். பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.
வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வா யிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ). தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது. பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது ! திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது. சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது
பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும். புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.! முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார். வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.


முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ். அதன் பூதளத் தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி. செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ). ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது. செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?
புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும், பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது. இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது. உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.
பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :
1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.
2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.
3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.
4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.
புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது. 2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும். பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

(தொடரும்)
************************
தகவல்:Picture Credits: NASA, JPL, ESA, JAXA
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.
gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [ Author’s Article on Mars Missions]
5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id= 41006061&format=html (Plasma Rocket Engines)
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
By : John Matson (June 11, 2010)
13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp[Dawn Update]
26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [ October 17, 2012]
28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp[ October 31, 2012] 29. http://www.pcmag.com/
article2/0,2817,2417734,00.asp [April 23, 2013] 30. http://www.nasa.gov/content/
goddard/new-nasa-model-gives- glimpse-into-the-invisible- world-of-electric-asteroids/#. U8ldUjC_gcE [June 25, 2014] 31. http://www.youtube.com/
watch?feature=player_embedded& v=ejIXRFzXgsg 32. https://en.wikipedia.org/
wiki/Sample_return_mission [September 6, 2016] 33. http://eandt.theiet.org/news/
2016/sep/osiris-rex-launch.cfm [September 8, 2016] 34. http://www.universetoday.
com/130635/osiris-rex- asteroid-mission-seeks-to- search-for-origin-of-life- chemistry/[September 8, 2016] 35. http://www.cbc.ca/news/
technology/nasa-osiris-rex- launch-1.3750426 [September 8, 2016] 36. http://www.space.com/34020-
nasa-hails-osiris-rex- asteroid-mission-launch.html [September 9, 2016] ++++++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) (September 9, 2016) [R-1]Attachments areaPreview YouTube video NASA’s OSIRIS-REx Asteroid Sample Return Mission
NASA’s OSIRIS-REx Asteroid Sample Return MissionPreview YouTube video OSIRIS-REx Tech – Surveying an Asteroid with X-rays
OSIRIS-REx Tech – Surveying an Asteroid with X-raysPreview YouTube video NASA | OSIRIS-REx Investigates Asteroid Bennu
NASA | OSIRIS-REx Investigates Asteroid BennuPreview YouTube video NASA | Asteroid Bennu’s Journey
NASA | Asteroid Bennu’s JourneyPreview YouTube video Pre-Launch Briefing for NASAs Asteroid Sample Return Mission – OSIRIS-REx
Pre-Launch Briefing for NASAs Asteroid Sample Return Mission – OSIRIS-RExPreview YouTube video OSIRIS-REx Tech: Mapping an Asteroid with Lasers
OSIRIS-REx Tech: Mapping an Asteroid with LasersPreview YouTube video NASA Announces Asteroid Identification, Capture and Sampling Initiative
NASA Announces Asteroid Identification, Capture and Sampling Initiative


















