கிரேசி மோகன்
———————————-
மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
ஆணை எனக்கு அருள்….(126)

வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)

பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)

சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)

புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)

காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)

வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)

பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *