Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

கற்றல் ஒரு ஆற்றல்- 44

க. பாலசுப்பிரமணியன்

மொழி கற்றலில் சில பார்வைகள்

education

மொழி கற்றலைப் பற்றிய பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெரஸினிச் என்ற மூளை நரம்பியல் விஞ்ஞானி இதைப்பற்றிய கருத்து தெரிவிக்கையில் கூறுவதாவது: “வளரும் பருவத்தில்   எட்டு வயது முதல் மூளையில் மொழிகள் கற்பதற்கான  முக்கிய பகுதி (critical Area ) தயாராகிறது. இந்தப் பருவத்தில் மொழிகள்  ஒன்றோ, இரண்டோ அல்லது இதை விட அதிகமாக மொழிகளோ கற்பதற்கு மூளையின் அந்தப் பகுதி  மிகவும்  பயனுள்ளதாக அமைகின்றது. எல்லா மொழிகளும் அதன் உச்சரிப்புகளும் அந்த ஒரே இடத்தில் பதிவு பெறுகின்றன. இதனால் அந்த வயதில் எல்லா மொழிகளும் அநேகமாக அவைகளுக்கு உள்ள இயற்கையான ஒலிகள் மற்றும் உச்சரிப்புக்களுடனேயே வெளிப்படுகின்றன.” இந்த வயது வரம்புக்கு அப்பால் கற்கப்படும் மொழிகள் தாய்மொழி போலவோ அல்லது கற்கப்படும்  முதல் மொழிபோலவோ எளிதாக கற்கப்படுவதில்லை. மற்றும் அவைகளின் உச்சரிப்புகள் பொதுவாக முதல் மொழி போலவோ அல்லது அதைப் பொதுவாக பேசுபவர்கள் உச்சரிப்புப் போலவோ அமைவதில்லை.

இதற்கான காரணத்தை விளக்கும் நிபுணர்கள் கருத்து இதோ :

“Language Development has a critical period that begins in infancy and ends between eight years and puberty. After the critical period closes, a person’s ability to learn a second language without an accent is limited. In fact, second languages learned after the critical period are not processed in the same part of the brain as is the native language.”

இதற்குக் காரணம் கற்றுக்கொள்ளப்படும் வளரும் பருவத்திற்குப் பின்   இரண்டாவது மொழி கற்றுக்கொள்ளும் பொழுது அந்தக் கற்றல் முதல் மொழி பதிவு செய்யப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு பகுதியில் பதிவு ஆகின்றது.  ஆகவே முதல் மொழி எவ்வளவு சரளமாகப் பேசப்படுகின்றதோ அது போல் இரண்டாவது மொழி பேசப்படுவதில்லை. இதைப்பற்றிய கருத்துக்களை வெளியிடும் Dr நார்மன் டொய்ட்ஜ் என்பவர் கூறுவதாவது ”   If two languages are learned at the same time, during the critical period, both get a foothold. Brain scans, show that in a bilingual child all the sounds of its two languages share a single map, a library of sounds from both the languages.”

ஆனால் சில நேரங்களில் நாம் இதற்கு சில விதி விலக்குகளையும்  பார்க்கலாம்.

மூளையின் மாறும் மற்றும் விரிவாக்கம் ( Neuro Plasticity ) பற்றிய ஆராய்ச்சிகள் அதிகப்படியான கற்றலுக்கு  மூளை தயாராக இருக்கிறது என்பதையும், வளர்ச்சியின் பின் பருவத்தில் கற்கப்படும் மொழிகள் எவ்வாறு சூழ்நிலைகள் மற்றும்  மாறுபட்ட முறைகள் மூலமாக முதல் மொழியைப்போல் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் விளக்குகின்றன. ஆனால் இதற்கு அதிக அளவிலான முயற்சியும் நேரமும் தேவைப்படும். இந்த விதமான கற்றல்  இயற்கையான கற்றலிலிருந்து சற்றே மாறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே இளமைப் பருவத்தில் மொழிகளைக் கற்றலும் அவைகளின்  பேசும் எழுதும் திறன்களை வளர்த்தலும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.

ஒருவேளை வளரும் பருவத்தில் அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால் மூளையின் சார்ந்த பகுதிகள் காலியாகவோ அல்லது வேலையற்றதாகவோ இருப்பதில்லை என்பதும் ஆராய்ச்சிகள் மூலமாக விளங்குகின்றன. அந்தப் பகுதி முதல் மொழியின் வளத்தையும் திறன்களையும் மேலும் வளர்ப்பதற்கும் போற்றுவதற்கும் உதவியாக அமைகின்றது. இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூளை நரம்பியல் மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சி வல்லுநர்கள்  நமக்குச் சொல்லும் மந்திரமாவது ” பயன்படுத்து அல்லது இழந்துவிடு ” (Use it or Lose it). ஆகவே மூளையைத் தொடர்ந்து பயன்படுத்துதல் அவசியமாகின்றது.

மேலும் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் பொழுது விழிகளால் பார்த்துக் கற்றுக்கொள்ளும் திறன் படைத்த  மாணவர்களை விட  கேட்டுக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள் வேகமாகவும் திறம்படவும் கற்றுக்கொள்கிறார்கள் என்று  கருதப்படுகின்றது. ஆகவேதான் மொழி கற்றலில்  ஆசிரியர்களின் பேசும் திறன் மற்றும் உரையாடும் திறன், விளக்கும் திறன், கற்பனைகளைத் தீண்டிவிடும் தூண்டிவிடும் திறன் ஆகியவை  சிறப்புக்கு பெருமளவில் பயனுள்ளதாக  அமைகின்றன.

சிறிய வகுப்புகள் முதல் முதுநிலைக் கல்வி வரையிலான மொழி வகுப்புகள் ஆர்வத்தை உண்டுபண்ணுவதாகவும் மொழி அறிவினை (Linguistic Intelligence) வளர்ப்பதாகவும் அமைதல் அவசியம்.

தொடரும்..

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க