Blog

  • படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

    leaves

    பச்சை இலைகளும் பழுத்த இலைகளும் கலந்தே இருக்கும் இம்மரக்கிளை வாழ்வின் பல நிலைகளை மொழியின்றி நமக்கு விளக்கி நிற்கக் காண்கிறோம்.

    பச்சிளம் குழந்தையாய் இருந்தநாம் பாலப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும்போது குழந்தைப் பருவம் மாண்டு போகிறது; காளைப் பருவத்தில் நுழையும்போது பாலப் பருவம் அழிந்துபோகிறது. இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சி நிலையுமே முந்தைய நிலையின் முடிவாய்…மரணமாய் அமைந்து விடுகின்றது. இதுவே வாழ்வின் நியதி. இதை உணராத மனிதனோ உடலைவிட்டு உயிர்பிரிவதொன்றே முடிவுநிலை என்றெண்ணுகின்றான் என்பதைச் சிறப்பாக எடுத்தியம்புகின்றது குண்டலகேசி எனும் நூலில் வரும் பாடலொன்று.

    பாளையாம் தன்மை செத்தும்
    –பாலனாம் தன்மை செத்தும்
    காளையாம் தன்மை செத்தும்
    –காமுறும் இளமை செத்தும்
    மீளும் இவ்வியல்பு பின்னே
    –மேல்வரு மூப்பும் ஆகி
    நாளும் நாள் சாகின்றாமால்
    –நமக்கு நாம் அழாதது என்னே!

    வழக்கம்போலவே, சிந்தனைக்கு இன்பம் நல்கும் இனிய கவிதைகளை வாரி வழங்கியிருக்கின்றனர் கவிஞர்கள்! அவைகளை இரசித்துவிட்டு வருவோம்!

    ***

    பருவகாலக் கன்னி மரங்களின் இலைகளில் பன்னிறம் வடித்து வானில் கோலமிட வருகிறாள் எனும் சுவையான கற்பனையைத் தன் கவிதையில் வழங்கியிருக்கும் திரு. ஜெயபாரதன், தன் மற்றொரு கவிதையில் ’பழுப்பு இலைகள் புயலில் பறக்கும் தட்டுகள்’ என்று இரசனையோடு வருணித்திருக்கின்றார்.

    அவ்விரண்டு கவிதைகள்…

    …பச்சை இலைகள்
    பழுப்பு இலைகளாய்
    மாறும் காலம்.
    நீல வானப் புடவை கட்டி
    மேகக் கன்னி
    மயக்க வரும் காலம் !
    குளிர்காலம்
    பச்சை நிறச் சேலையை
    உரிக்கப் போகுது !
    மரத்தின் மீது
    கிருஷ்ணன் வருவானா
    மஞ்சள் நிறப் புடவை
    அளிக்க !
    வெண்ணிலா தென்படும்
    பொன் முலாம் பூச !
    பருவக் கால கன்னி
    மரத்திலே பன்னிற
    ஓவிய
    இலைகள் வடித்து வானில்
    கோலமிட வருவாள்
    நம்முள்ளம்
    கொள்ளை கொள்ள !

    ***

    பழுப்பு நிற இலைகள்
    புயலில்
    பறக்கும் தட்டுகள் !
    பகலில் ஒளிக்கதிர் திரட்டிடும்
    ரேடார்  தட்டுகள் !
    பரிதிக் கதிர்கள் பெற்று
    பச்சைப் பசேலென்று
    பசுமை ஆக்கும்
    இலைகள் !
    பச்சை இலைகளைக் குளிர்ப்
    பருவ காலம்
    பழுப்படிக்கச் செய்யும் !
    மங்கிய இலைகள்
    தொங்கும் காட்சி ! …

    ***

    கிளையில் மோதிய லாரியில் ஏறித் தனியே பயணிக்கும் ஒரு கொத்து இலைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திரு. கவிஜி!

    கிளை முட்டி 
    சமாளித்து பயணித்த 
    லாரியில் 
    அனாதையாய் 
    ஒரு கொத்து இலைகள்…

    ***

    இலைகள் உதிர்ந்ததால் கருகும் காம்புகள் உறவின் சாட்சிகள் எனும் புதிய சிந்தனையைச் செப்பும் திரு. கனவு திறவோன், வீழ்ந்தழியும்வரை மற்றையோர்க்குப் பயன்தருபவை மரங்கள் என்று அவற்றின் தன்னலமற்ற வாழ்வைப் போற்றுகிறார்.

    உதிர்ந்த இலைகள்
    விட்டுச்சென்ற
    கருகும் காம்புகள்
    உறவின் சாட்சிகள்

    மிஞ்சியிருப்பதில்
    பச்சையென்றும்
    வெழுப்பென்றும்
    பேதமா?

    உன்னை படைத்திட
    என்னை இழக்கிறேன்
    நீ தரும் சக்தியில்
    என்னைக் கழிக்கிறேன்
    நானாக விழுவேன்
    அதுவரை
    உன்னைத் தாங்குவேன்!

    ***

    தன் இறுதிப் பயணத்திற்காய் உறுதியோடு காத்திருக்கும் பழுத்த இலையின் சாகசத்தைப் பாவாக்கியிருக்கிறார் திரு. சேயோன் யாழ்வேந்தன்.

    பழுத்த இலை காத்திருக்கிறது
    காற்றின் சிறு வருகைக்கு
    ஒரு பறவையின் அமர்வுக்கு
    அல்லது காம்பின் தளர்வுக்கு
    தன்னை விடுவித்துக் கொள்ள.

    பென்டுலம் போல் அசைந்துகொண்டோ
    உருளையைப் போல் சுழன்றுகொண்டோ
    தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை
    யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென
    அது காத்திருக்கிறது

    தன்னிடத்தை விட்டு
    இவ்வளவு தூரம் வந்ததை
    சிலர் வியந்து பேசவும் கூடும்
    ஓர் எறும்பைச் சுமந்து
    அது இறங்கும் அதிசயத்தை
    இரு கூரிய கண்கள்
    வியந்து பாடவும் கூடும்.

    பழுத்த இலை காத்திருக்கிறது
    தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

    ***

    சுயநலப் பந்தாட்டம் நடைபெறும் உலகில், பழுத்த இலைகளின் உயிர்கள் கிளையில் ஊசலாடுவதை வேதனையோடு பதிவு செய்திருக்கிறார் திருமிகு. லட்சுமி.

    நீல  வாழ்க்கைப் பாதையில்
    எழுதிய வினாக்குறி 
    பழுத்த இலை முதியோர்!
    முகவரி நரம்புகள் இழையோட
    ஒட்டியும் ஒட்டாத துளிர் இலைகள்
    துளிர்இலை மனிதர்களுக்காக
    நிகழ்வாழ்வின் மகிழ்ச்சியை
    ஈந்து வாழும் 
    வாழும் தியாக ஊற்றுகள்!
    பழுத்த இலைகள் சுயநலப் பெருங்காற்றினால்
    உதிர்வதுண்டு!
    தாமரை இலைத்தண்ணீர் பாசம் இருந்திருந்தால்
    பழுத்த இலைகள் என்றோ
    ஆரவாரமாக சலசலத்திருக்கும்!
    ஒட்டாத பாசந்தனில்
    ஒட்டிய கிளையில் பழுத்த இலைஉயிர்கள் அசைந்தாட
    சுயநலப் பந்தாட்டம் சுதந்திர உலகில்
    நடக்குதப்பா!

    ***

    ’பருவம் மாறி…தான்கொண்ட உருவம் மாறி உதிர்தல் என்பது இலைகளுக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கும் பொருந்துவதே!’ எனும் உலகியல் உண்மையை அழகாய் விளக்கியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

         பருவம் முதிர்ந்து சருகாகி
    மிச்ச மின்றி மண்ணாதல்
    மரந்தரு கிளைக்கு மட்டுமல்ல,
    இச்சை உடலில் கொண்டவனே
    இதுவும் முதுமை வந்தழியும்,
    நிச்சயம் இதனை நினைத்திருந்தால்
    நிம்மதி வாழ்வில் நிலைத்திடுமே…!

    ***

    இலைகளின் நிறமாற்றம் அவைகளை மலர்ச்செண்டுகளாய் மாற்றிக் காட்டுதே என வியந்துபோகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    …பசுமை இலைகளை கண்டாலே கண்ணுக்கு குளிர்ச்சி
    பல நிற இலைகளை கண்டாலே மனதிற்கு மகிழ்ச்சி
    அயல் நாட்டில் இலைகளே அழகிய பூக்களாய் மிளிரும்
    வசந்தத்தின் சிறப்பினை இலைகளே நினைவூட்டும் !

    வசந்தத்தில் இலைகளே மலர்களாய் மலர்ந்து காட்சி தரும்
    இதுவே காண்போர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி  தரும்,
    வான்னின்றும், சிகரத்தின் மேல் நின்று  கீழ் நோக்கின்
    மலர்ச்செண்டுகள், நட்டதுபோல்  காட்சி  தரும்.

    ***

    பச்சை வண்ண ஆடைகட்டிச் சலித்துப்போன மரப்பெண்ணின் உடைமாற்றந்தான் இலைகளில் தெரியும் புத்தம்புது வண்ணங்களோ? என வினா எழுப்புகிறார் திருமிகு. தமிழ்முகில்.

    …இலையதுவே மரத்திற்கு
    ஆடையாகிப் போக
    பச்சை நிற ஆடையே உடுத்தி
    சலித்துப் போனதோ
    இந்த மரப் பெண்ணிற்கு ?
    மஞ்சளும் அடர்சிவப்புமாய் – இளம்
    தளிரையும் பழுத்த இலையையும்
    உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?

    ***

    மழைக்கால மேகங்கள் இலைகளில் சேமிக்கும் வானவில்லை நமக்கும் காட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    மழைக்காலத்துக்கான மேகங்கள் 
    உதிர்கின்ற  இலைகளில்சேமிக்கின்றன
    வானவில்லுக்கான நிறங்கள்! 

    ***

    பழுப்பு வண்ண இலைகள் பகரும் வாழ்வின் நிலையாமையை விளக்கும் திருமிகு. வேதா இலங்காதிலகம், ’நிலையற்ற உலக வாழ்வை உணரும் ஞானம் அனைவர்க்கும் வாய்த்தால் வாழ்க்கை சுலபமே’ என விளம்புகிறார்.

    காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
    சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
    தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
    பாரேன் படமெனக் காட்டுதிங்கு.

    எம் கண் பறிக்கும் நீலமேகம்
    தன் வண்ணப் பின்ணனி மயக்க
    தலை நீட்டும் இலைக் கொத்து
    நிலையற்றது வாழ்வு என்கிறது.

    விலையற்ற பெரும் தத்துவ உண்மை
    தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்
    கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
    நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!

     ***

    வாழ்வியல் தத்துவங்களைத் தம் கவிதைகள் வழியே அழகாய்ப் பாய்ச்சியிருக்கும் கவிஞர்கள் அனைவர்க்கும் என் பாராட்டுக்கள்!

    ’பழுத்த ஓலை மண்ணில் வீழப்
    பச்சை
    ஓலை சிரித்ததாம்!
    காலம் என்னும் காலன் கணக்கில்
    பச்சை
    பழுக்கலானதாம்!
    தானும் கறுத்துப் போன போது
    தனது
    நிலைமை உணர்ந்ததாம்!’ என்றொரு சிறுவர் பாடல் உண்டு. ஆம்! நிலையாமை ஒன்றே வாழ்வில் நிலையானது. இந்த நிலையாமைத் தத்துவத்தையும், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பிறருக்குப் பயன்படவேண்டும் எனும் நல்லெண்ணத்தையும் இப் போதிமரத்திடம் தாம் கற்பதாய் ஒரு கவிதை பேசுகின்றது.

    அக்கவிதை…

    கிளை ஒன்றுதான் !
    ஆயினும் அதிலே
    உதிரப் போகும் இலைகளும்
    பச்சை நிற இலைகளும்
    கலந்தே துலங்குது !

    ஆம்
    இயற்கை
    அது நமக்கு
    போதிக்கும் உண்மை
    வாழ்வும் அது போலத்தான்

    உதிரும் இலைகள்
    சருகாக !
    மீண்டும் தன்னை
    வாழவைத்த மண்ணுக்கு
    உரமாக
    . . .

    மனிதனாய்ப் பிறந்தோம்
    மறைந்த பின்பு
    நாம் வாழ்ந்த மண்ணுக்கு
    பயனாய் எதை
    விட்டுச் செல்கிறோம் ?

    சிந்தையைக் கிளறிடும்
    விந்தையான பொறியைத்
    தட்டி விட்டு
    நம்மைப் பார்த்துச்
    சிரிக்கிறதோ
    அப் போதி மரம் ?

    நிலைத்திடும் என்று
    அகந்தையில் உழன்று
    நர்த்தனமாடிடும் எமக்கு
    காற்றிலசையும் இலைகள்
    கற்றுத் தருகின்ற ஞானம்
    தொட்டு நிற்கிறதோ
    முற்றுப் பெறாத காவியமாய் !

    ஆடை களைந்து
    நிர்வாணமாகப் போகும்
    ஒற்றைக் கிளை
    வரப்போகும் தன் நிலை
    எண்ணி நாணாமல்
    வருவதை ஏற்கும்
    பண்பதை மானிடர்
    எமக்குப் பறைசாற்றும்
    வாழ்க்கைப் புத்தகத்தின்
    வரலாற்று அத்தியாயமாய்
    . . .

    பொருட்செறிவுள்ள இக்கவிதையை யாத்திருக்கும் திரு. சக்தி சக்திதாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

    மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
    மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
    இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
    இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
    தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
    தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
    தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
    தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

    ***

    கவிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்! உற்சாகத்துடன் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்துக்கொள்ள படைப்பாளிகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

     

    Share
  • பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பு

    — சி. ஜெயபாரதன்.

     

    பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் 
    பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன
     

    Cosmic Turbulence

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++

    காந்த விண்மீன்கள்
    தீவிரக் கதிர்கள் விடுப்பவை !
    பிரபஞ்சம்  எங்கும் பூதச் சக்தியுள்ள
    காந்த தளங்கள்
    உருவாகிப் பாதிக்கும் !
    அசுரக் காந்த முள்ள
    பயங்கர விண்மீன்கள் சூழ்ந்தவை !
    காந்த விண்மீன் பூமியை நெருங்கின்
    மாந்தரின்
    உடல்மூலக் கூறுகளைச்
    சிதைத்து
    முடமாக்கி விடும் !
    உயிரினத் துக்குச் சீர்கேடு
    உண்டாக்கும்
    நியூட்ரான் விண்மீன்கள் !
    எரிசக்தி தீர்ந்த பின்
    வறிய விண்மீனாகி
    சிறிய தாகிப்
    பரிதிபோல் திணிவு நிறை
    பன்மடங்கு பெருத்துப்
    பூமியைக் குள்ள வடிவிலே
    காமாக் கதிர்க்
    குண்டுகளாய்த் தாக்கும்
    விண்மீன்கள் !

    +++++++++++++++++

    Mighty Magnetars

    பூர்வீக முதற்காந்த சக்தி தளங்களாகத் [Primordial Magnetic Fields] தோன்றி யவையே அகில்வெளி ஒளிமந்தைக் காந்தம் [Intergalactic Magnetism] என்பதில் எமக்கு ஐயப்பாடு உள்ளது.  பிரபஞ்சத்தைச் சுற்றியுள்ள அனைத்து காந்த தளங்களுக்கும் அவைதான் அடிப்படை மூதாதையக் காந்த சக்தி அளிப்பவை என்று இப்போது தெரிகிறது.

    ஜீனா மெய்நெக்  [Astrophysicist, University of Oxford, Leader of the Project]

    கணினிப் போலிக் கொந்தளிப்பு தூண்டும் மிகையாக்கிக் காந்த தளங்களின் கணிப்பீடு மாடல் [A Computer Model of Turbulence-Amplified Magnetic Fields] ஒருபோதும் மெய்யான காலக்ஸி கொத்துக்களின் சூழ்வெளி நிபந்தனை களை உருவாக்க முடியாது.  பிரபஞ்ச ஒளிமந்தைக் கொந்தளிப்பு காந்த தளங்களை உற்பத்தி செய்ய, நமக்குத் தெரியாத பல்வேறு பௌதிக முறைப்பாடுகள் கட்டுப்படுத்தும், பல்லரங்கு இயக்கம் [Multistage Process] படைக்கப் படவேண்டும்.

    ஆன்ரி நீரோநாவ் [Astrophysicist, University of Geneva] 

    +++++++++++++++

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RQ8Gvab6eO8

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dgNLaKkNejo

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=s8johKNthUI

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=rKpFFTGbaDc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JcD6Ia6o78I

    ++++++++++++++++++

    Computer Simulation Lab Experiment

    “பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் (Magnetars) இருக்கலாம்.  அவற்றால் பூதளத்துக்குக் கேடுகள் விளையலாம் !  அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடலாம்.  அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன !  பூமிக்கருகில் அத்தகைய காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்து விடலாம் !  அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முழுமையாய் அழிந்து போகலாம் (Mass Extinction).”

    டோனால்டு ஃபைகர் (Donald Figer, Rochester Institute of Tecnology, USA) 

    காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism).  குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) !  அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது !  அதன் காந்த சக்தி வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது !

    விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)

    Cover Image Magnetars

    பிரபஞ்சத்தில் அகிலவெளிக் காந்த தளங்களின் தோற்றங்கள் 

    நமது பிரபஞ்ச விண்வெளி பேரளவில் காந்த சக்தியைக் கொண்டது. அது ஏனென்று விஞ்ஞானிகளுக்குத் தெரியவில்லை.  ஆய்வகத்தில் கணிப்பீடு செய்யப்பட்ட காலக்ஸி மோதல்கள் [Galactic Collisions Computer Models] மெய்யான பிரபஞ்சத்தில் தோன்றிய பேராற்றல் கொண்ட காந்த தளங்களைப் பற்றி ஆராய உதவுகின்றன.  தற்போதைய கோட்பாடு, ஒளிமந்தைக் கொந்தளிப்பு சிறு “விதைக்” காந்த தளங்களை [Seed Magnetic Fields] மிகைப் படுத்திப் பேராற்றல் கொண்டவையாய் உருவாக்கி ஒளி மந்தைக் காலக்ஸிகளை ஆட்சி செய்கின்றன என்பதே.  அவற்றைப் புரிந்து கொள்ள இப்போது வானியல் பௌதிக விஞ்ஞானிகள் தமது ஆய்வுக் கூடத்தில் காலக்ஸிகள் மோதுவதைப் பிரதிபலித்து பிரபஞ்ச காந்த சக்தி தளங்களைப் பற்றி அறிய முற்படுகிறார்.

    நமது பிரபஞ்சத்தில் உள்ள பிண்டம் [Matter] அடர்த்தியாக நெய்த ஒளி மந்தைக் கொத்துக்களில் இடைவெளிகளுடன் பிரிந்தும் பின்னியும் பிணைந்துள்ளது.  முதன்முதல் வானியல் விஞ்ஞானிகள் விண்வெளிக் காந்த தளங்களை நோக்கிய போது, ஓர் விந்தையான நிகழ்வைக் கண்டனர்.  பிரபஞ்சம் அனைத்துமே காந்தத்தின் பிடியில் இருப்பதை அறிந்தார்.  ஒளிமந்தைக்குள் இருக்கும் விண்மீன்களின் பிளாஸ்மா [Plasma – ஒளிப்பிழம்பு] ஓட்டமுள்ள உயிர்ப்பு அரங்குகளில் மட்டும் காந்தம் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தார்.  ஆனால் காலியாக இருக்கும் சூன்யப் பகுதிகளிலும்  காந்த சக்தி பின்னியுள்ளதைக் கண்டார்.  பிரபஞ்ச காந்த தளங்களே விண்மீகள், ஒளிமந்தைகள் நகர்ச்சி, தோற்றம் ஆகியவற்றின் முக்கிய ஆளுமைக் களங்கள் என்பது தெளிவாக முடிவானது.  மேலும் அவற்றின் படைப்பு, வளர்ப்பு பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆய்வக முடிவு ஏதுவானது.

    Fig 1A Inside a Magnetar

    விண்வெளியில் பூதக் கதிர்கள் வீசும் காந்த விண்மீன்கள் !

    1987 ஆம் ஆண்டில்தான் முதன்முதல் வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் டங்கனும் கிரிஸ்டஃபர் தாம்ஸனும் (Robert Duncan & Christopher Thompson) அசுரக் காந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான் விண்மீன்களின் இருப்பைக் கண்டுபிடித்தனர்.  அவையே பின்னால் “காந்த விண்மீன்கள்” (Magnetars) அல்லது “சாவூட்டும் விண்மீன்கள்” (Deadly Magnetars) என்று பெயரிடப் பட்டன.  காந்த விண்மீன்கள் அசுரக் காந்த ஆற்றல் மட்டுமல்ல பூதச் சக்தி கொண்ட காமாக் கதிர்கள் (Mammoth Bursts of Energetic Gamma Rays) வீசி நாசமூட்டும் தீவிர விண்மீன்களாகவும் கருதப் படுகின்றன !  இந்தப் புதிரான மரண விண்மீன்கள் எப்படித் தீவிரக் காமாக் கதிர்களை வீசுகின்றன ஏன் வீசுகின்றன என்று விஞ்ஞானிகள் ஆழ்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

    Fig 1B Gamma Ray Flares from Magnetars

    நியூட்ரான் விண்மீன், துடிப்பு விண்மீன், காந்த விண்மீன் (Neutron Star, Pulsar & Magnetar) ஆகியவற்றின் வேறுபாடுகளை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.  எரிசக்தி தீர்ந்து போன நியூட்ரான் விண்மீன்களின் தனித்துவம் என்ன ?  ஒரு சூப்பர்நோவாவில் (Supernova) உருவான பெருத்த விண்மீன் (Massive Star) ஒன்றின் உட்கருவாய் மிஞ்சி விட்ட திணிவு மிக்க எச்சம் (Dense Remnant) அது !  அத்தகைய விண்மீன்கள் நமது பரிதியை விட இரண்டு மடங்கு நிறை கொண்டு சுமார் 12 மைல் (20 கி.மீ.) விட்டமுள்ள ஒரு சிறு கோளமாய்ச் சுருங்கி விடுகின்றன !  துடிப்பு விண்மீன் என்பது வெகு வேகமாய்த் தன்னச்சில் சுழலும் உருவித நியூட்ரான் விண்மீன் !  அதன் காமாக் கதிர்க் கற்றைகள் (Radiation Beams) ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு துடிப்பை உண்டாக்கிப் பூமியை ஊடுருவுகின்றன !  மெகனடார் எனப்படும் காந்த விண்மீனின் தனித்துவம் என்ன ?  ஒரு நியூட்ரான் விண்மீன் இயல்பு நிலையைப் போல் (Normal Staus) ஆயிரம் மடங்கு ஆற்றலுள்ள காந்த சக்தியை அடையும் போது அது காந்த விண்மீன் ஆகிறது.

    Fig 1B Magnetar SGR 1806-20

    இருபது ஆண்டுகளாய் விஞ்ஞானிகளிடையே ஐயப்பாடுகள் இருந்த பிறகு 2007 இல் காந்த விண்மீன்களின் மெய்யான இருப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டது.  புதிரான இந்த நியூட்ரான் விண்மீன்கள் ஒருவிதத் துடிப்பு விண்மீன்கள்தான் !  வெகு வேகமாய்ச் சுழலும் தீவிரக் காந்த ஆற்றல் கொண்டவை !  சூப்பர்நோவா வெடிப்பில் திணிவு நிறை மிக்க எச்ச விண்மீனாய் மரண நிலையில் இருப்பவை !  இந்த காந்த விண்மீன்கள் எப்படி உண்டாகின்றன ?  அவற்றின் அசுரத்தனமான காந்த ஆற்றலின் தீவிரம் எத்தனை அளவு ?  ஏன் சில விண்மீன்கள் மட்டும் புதிராகக் கருந்துளை யாகாமல் காந்த விண்மீன்களாக மாறுகின்றன ?  பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களின் இருப்புத் தொகை (Abundance) என்ன ?  இவை போன்ற வினாக்களுக்கு வானியல் விஞ்ஞானிகள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர் !

    Fig 1E Neutron Stars

    புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்

    1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர்.  அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக்களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர்.  அதன் பிறகு அடுத்த பத்தாண்டுகளில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை !  காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) !  அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது.  அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

    Fig 1E Magnetars Discovered

    இதுவரை (2007) விண்வெளியில் 16 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன.  முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப்படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars).  இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20.  அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம்.  பூமியின் காந்த தளம் : அரை காஸ்.  மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத் துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

    Fig 1F High Energy Observatories

    தீவிரக் காமாக் கதிர் வீசும் காந்த விண்மீன்

    2007 ஆண்டுவரை விஞ்ஞானிகள் 16 காந்த விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார்.  அவற்றின் பெயர்கள், இருப்பிடங்கள், சுழற்சி வேகங்கள், கண்டுபிடித்த ஆண்டுகள் ஆகிய விபரங்களை அட்டவணையில் காணலாம்.  அவற்றில் 1979 இல் கண்டுபிடிக்கப் பட்ட காந்த விண்மீன் SGR 1806-20 டிசம்பர் 27 2004 தேதி அன்று இதுவரைப் பதிவு செய்யப் படாத அளவு கதிர்ச் சக்தியை வெளியிட்டிருக்கிறது.  அந்தப் பேரளவு சக்தி நமது சூரியன் 250,000 ஆண்டுகள் தொடர்ந்து வெளியிடும் வெப்ப சக்தி அளவுக்கு ஒப்பாகும்.  வெளியிட்ட நேரம் : 0.2 வினாடி !  வெளியிட்ட அளவு : வினாடிக்கு 1 மில்லியன் ஒளித்துகள் (1000,000 Photons per Sec) !  இந்தக் காந்த விண்மீன் ஓர் எக்ஸ்-ரே துடிப்புக் களஞ்சியம் (Pulsating X-Ray Source).  பூமியிலிருந்து 50,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  அதன் சுழற்சி வேகம் : 7.56 வினாடிக்கு ஒரு சுற்று.  அதன் அசுரக் காந்த ஆற்றல் : 10^15 காஸ் (Gauss).  ஒப்பு நோக்கினால் பூமியின் காந்த தளத்தின் ஆற்றல் : 0.6 காஸ் !  அகில உலக விஞ்ஞானிகள் 2004 டிசம்பர் 27 ஆம் தேதி அன்று விளைந்த சம்பவங்களை ஆராய்ந்து டங்கன் தாம்ஸன் கோட்பாடுகளை ஒப்புக் கொண்டுள்ளனர்.  அதாவது காந்த விண்மீனின் முறிவுகளில் கதிர் வீச்சுகள் வெளிப்படுகின்றன என்றும் இந்த காந்த தளங்கள் விண்மீனின் மேற்தட்டைப் (Magnetar’s Crust) பல மைல் தூரம் தகர்த்துக் கிழிக்கின்றன !  இந்த முறிவு அரங்குகள் பூமியிலுள்ள பூகம்பப் பழுதுக் கோடுபோல் (Earth’s Tectonics Fault Line) காணப் படுகின்றன.  1998 ஆகஸ்டு மாதம் 20,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ள [SGR 1900+14] காந்த விண்மீன் மிகச் சக்தி வாய்ந்த காமா கதிர்களையும் எக்ஸ்-ரே கதிர்களையும் உமிழ்ந்தது !

    Fig 2 Making a Magnetar

    நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம்.  சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் !  பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன !  அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது.  விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது !  அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து

    [1 புரோட்டான் + 1 எலெக்டிரான் –>>  1 நியூட்ரான்]

    நியூட்ரான்களாக மாறிகின்றன.  அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

    Fig 2 Neutron Stars & Magnetars

    ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது.  அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது.  அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density).  நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும்.  நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது.  ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது !   அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு மிகுந்தது !

    Fig 4 Spitzer Space Telescope

    சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் !  தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் !  இரட்டைப் பிறவி விண்மீன்களாகக் (Binary Systems) காட்சி அளிக்கலாம் !  அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது.  அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ள தாக அறியப் படுகிறது !  கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமான தால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது !

    Fig 3 Supervova Explosion

    பால்வீதி விண்மீன் கொத்துக்களில் காந்த விண்மீன்களைத் தேடல்

    அமெரிக்காவின் ராச்செஸ்டர் தொழில் நுணுக்கக் கூடத்தின் வானியல் விஞ்ஞானி டோனால்டு ஃபைகர் நமது பால்வீதி காலக்ஸியின் விண்மீன் கொத்துக்களை (Star Clusters) உளவி குறைந்தது 100 காந்த விண்மீன்கள் அவற்றில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று கூறுகிறார்.  அப்பணிகளுக்கு நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ஸ்பிட்ஸர் விண்ணோக்கி, சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி, கிளாஸ்ட் தொலைநோக்கி போன்றவையும் ஹவாயியில் உள்ள உட்சிவப்புக் கருவிகள் பயன்படுகின்றன.  நாசாவின் கிளாஸ்ட் தொலைநோக்கி [Gamma-Ray Large Area Space Telescope (GLAST)] காமாக் கதிர் வெடிப்பு களைக் காணும்.  நியூட்ரான் விண்மீன், துடிப்பு விண்மீன் ஆகிய வற்றைக் கண்டுபிடிக்கும்.  கருந்துளை, கரும் பிண்டம், அகிலக் கதிர்களைப் பற்றி அறிய உதவும். அதாவது இதுவரை 10% காந்த விண்மீன்களைத்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.  இத்தகைய அசுரக் காந்த விண்மீன்களை ஏன் விஞ்ஞானிகள் தேடிப் பதிவு செய்ய வேண்டும் என்னும் வினா நம்மிடையே எழுகிறது.  உதாரணமாக 2004 டிசம்பர் 27 ஆம் தேதி அடித்த பேரளவுக் காமாக் கதிர்ப் புயலின் பூதள விளைவுகள் பல விஞ்ஞானிகளுக்கு அச்சத்தை உண்டாக்கி யிருக்கிறது !  விண்வெளியில் ஏற்படும் இயற்கையின் விந்தை நிகழ்ச்சிகளால் பூமியில் விளையும் பூகம்பங்கள், எரிமலைகள், சுனாமிகள், மின்காந்த அலை அபாயங்கள் ஆகியவற்றுக்கு எந்தத் தொடர்பும் உள்ளதா என்று உளவி ஆராய உதவியாய் இருக்கும்.

    Fig 6 Gamma Ray Bursts Initiate Extinction

    +++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html(Gamma Ray Bursts)
    10 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801031&format=html(Neutron Stars)
    10 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905121&format=html(Death Stars)
    10(d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40905281&format=html(Harmful Death Stars)
    11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
    12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
    13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
    14 From Wikipedea – Magnetar (May 1, 2009).
    15 Space & Earth – Integral Looks at Earth to Seek Source ogf Cosmic Radiation (Mar 16, 2006)
    16 BBC News – NASA’s Eye on the Violent Cosmos By Paul Rincon [June 6, 2008]
    17 BBC News – A Glimpse of Ancient Dying Stars By Victoria Gill (Sep 7, 2009)
    18 Astronomy – Gammy Rays from Monster Stars By Philips Plait (Feb 7, 2007)
    19 Thunderbolt Info – Magnetic Monsters (May 22, 2009)
    20 Astronomy Magazine – In Search of the Galaxy’s Magnetic Monsters By : Steve Nadis (September 2009)

    21. http://earthsky.org/space/magnetars-most-powerful-magnets-in-the-universe [May 14, 2014]

    22. https://en.wikipedia.org/wiki/Magnetar   [June 24, 2015]

    23.  http://www.scientificamerican.com/article/cosmic-turbulence-may-spawn-monster-magnetic-fields/?WT.mc_id=SA_DD_20150623   [June 23, 2015]

    ++++++++++++++++
    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  June 26, 2015

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”வழங்கினாய் செல்வம், வழங்கினாய் சேலை,
    வழங்கினாய் கீதை, வணக்கம் -வழங்கிடும்,
    காலம் முடிந்ததோ, கண்ணா மவுனமாய்,
    ஆலில் படுத்தாயோ ஆழ்ந்து”….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: மென்கண்ணன் ஆளான் அரசு

     

    எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
    தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
    வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான் அரசு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எம் கண் இனையர் எனக் கருதின், ஏதமால்;
    தம் கண்ணரானும் தகவு இல கண்டக்கால்,
    வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான், அரசு.

    பொருள் விளக்கம்:
    (நீதி கூறுமிடத்து நடுநிலை தவறி) எனது கண் போன்றவர் இவர் என்றெல்லாம் கருதத் துணிந்தால் அது நீதிதவறும் குற்றமாகும். தமது கண்ணைப் போன்றவராகவே இருந்தாலும், தகாத குற்றச் செயலில் ஈடுபடுபவராக அவரைக் காண நேர்ந்தால், வன் கண்மையோடு சினந்து தண்டிக்கவேண்டும். தண்டிக்காது மென்மையாக மன்னித்து விடுபவர் அரசாளத் தகுதியற்றவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: நடுநிலை தவறாமல் நீதிவழங்குவது அரசாட்சி செய்பவரின் கடமை. இதனைக் குறிக்கும் வள்ளுவர் வாய்மொழி,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

    குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு தக்க தண்டனையை வழங்குவதே நேர்மை தவறாத செயலாகும் என்று அறிவிக்கிறது.

    Share
  • எம்மொழியின் மன்னவனே!

    -சுரேஜமீ​​

    தமிழன்று தவமிருக்கத்
    தாயென்று நீயிருக்கத்
    துள்ளிவந்து விழுந்ததுவே
    தெள்ளுதமிழ்ச் சொற்களெலாம்!        Kannadasan

    தரணிபுகழ் கொண்டதுவே
    தமிழரெலாம் மகிழ்ந்திடவே
    தலைவனென்று புகழ்ந்திடவே
    தலைமுறையும் வணங்கிடவே

    தன்னையுணர் மனிதரெலாம்
    தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே
    தக்கதொரு நூல்படைத்துத்
    தனையறியச் செய்திட்டாய்!

    தானழித்து ஊனழித்துத்
    தமிழ்செய்த பெருந்தகையே
    தலைவணங்கி வேண்டுகிறேன்
    தமிழ்கொடுத்து வரமளிக்க!

    கவியரசர் எனும்நாமம்
    கண்டவரும் கொண்டாலும்
    கண்ணதாசன் உனக்கீடு
    காவியத்தில் யார்வருவார்?

    எண்ணமெலாம் தமிழாக
    ஏற்றதொரு பண்பாடி
    எட்டுத்திக்கும் பரவிநிற்கும்
    எம்மொழியின் மன்னவனே!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    மரபியலும் பரிணாம வளர்ச்சியும்

    உயிரினங்களின் தோற்றமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் இயற்கையின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்றாக இன்றளவும் மதிக்கத்தக்கவை. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கருத்துக்களை மேனாட்டு அறிஞர்கள் ஆய்வு செய்து வெளியிடுவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகவே தமிழரின் தலையாய இலக்கண நூலான தொல்காப்பியம் அவற்றைத் துல்லியமாக விளக்கியிருப்பது நம்மை வியப்பிலாழ்த்துவதாகும்.

    ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
    இரண்டு அறிவதுவே அதனொடு நாவே;
    மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே;
    நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே;
    ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே;
    ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;-
    நேரிதின் உணர்ந்தோர்
    நெறிப்படுத்தினரே. (தொல்: மரபியல்)

    என்று நூற்பா வகுத்த தொல்காப்பியர்,

    the-origin-of-speciesஓரறிவுயிர்கள் உடம்பினால் (மெய்) அறியும் தன்மையன; ஈரறிவுயிர்கள் உடம்பினாலும் வாயினாலும் அறியும் தன்மையன; மூவறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு இவற்றால் அறிபவை ; நாலறிவுயிர்கள் உடம்பு, வாய் , மூக்கு மற்றும் கண்ணினால் அறிபவை; ஐயறிவுயிர்கள் உடம்பு, வாய், மூக்கு , கண், செவி எனும் ஐம்புலன்களால் அறிபவை; ஆறறிவுயிர்கள் ஐம்புலன்களாலன்றியும் மனத்தினாலும் அறியும் தன்மையன என்று உயிர்களின் அறிவு வளர்ச்சியைப் படிப்படியாய் விளக்கிச் செல்கின்றார்.

    அத்தோடு நில்லாமல், புல்லும் மரமும் இவைபோன்ற பிற தாவரங்களும் ஓரறிவுயிர்கள். சங்கு, நத்தை, இப்பி, கிளிஞ்சல், ஏரல் முதலியவை ஈரறிவு படைத்தவை. கறையான், எறும்பு, அட்டை போன்றவை மூவறிவு உடையன. நண்டு, தும்பி, சுரும்பு, ஞிமிறு முதலியன நாலறிவு உடைய உயிர்கள். நாற்கால் விலங்குகளும், பறவைகளும், ஊர்வன மற்றும் நீர்வாழ் உயிரினங்களாகிய மீன், ஆமை முதலியவையும் ஐந்தறிவு படைத்த உயிர்கள். மக்கள் (மனிதர்கள்) ஆறறிவுயிர்கள்; மக்களேயன்றி தேவர், அசுரர், இயக்கர் போன்றோரும் இவ்வகையினரே என்று ஓரறிவுயிர்கள் தொடங்கி ஆறறிவுயிர்கள் ஈறாய் உள்ளவற்றைத் தக்க சான்றுகளோடும் அவர் விரித்துரைக்கும் திறம் அவர் அறிவின் ஆழத்தையும், நுட்பத்தையும் புலப்படுத்துகின்றது.

    இவ்வாறு தமிழிலக்கணம் விளக்கிப் போந்த பரிணாம வளர்ச்சியை, ஆய்வு செய்து தக்க ஆதாரங்களோடு உலகிற்கு விளக்கியவர், 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்த ’சார்லஸ் ராபர்ட் டார்வின்’ (Charles Robert Darwin) எனும் இயற்கையியல் அறிஞராவார். மருத்துவராக வரவேண்டும் எனும் தன் தந்தையின் ஆவலை நிறைவேற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த டார்வின், பின்பு அதில் ஆர்வம் இல்லாமல் சமய குருமார்களுக்கான கல்வியைக் கற்கத் தொடங்கினார். அப்போது தாவரவியல் பேராசிரியராக அங்கே பணியாற்றி வந்த ஜான் ஹென்ஸ்லோ (John Henslow) என்பவரின் நட்பைப் பெற்றார்.

    அவ்வேளையில் (1831-ஆம் ஆண்டு), ‘பீகில்’ (Beagle) எனும் அரசுக் கப்பல்Charles_Darwin தென் அமெரிக்காவுக்கும், பசிபிக் பெருங்கடலுக்கும் சென்று ஆராய்ச்சி செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து புறப்பட்டது. பேராசிரியர் ஹென்ஸ்லோவின் முயற்சியால் அக்கப்பலில் ‘இயற்கை விஞ்ஞானியாக’ நியமிக்கப்பட்டார் டார்வின்.

    உலகின் பலநாடுகளுக்கும் அக்கப்பலில் பயணம் மேற்கொண்ட அவர், இப்பயணத்தில் பற்பல இயற்கை அதிசயங்களைக் கண்டார்; ஆதி குடிகள் பலரைச் சந்தித்தார்; ஏராளமான புதைபடிவங்களைக் (Fossils) கண்டுபிடித்துச் சேகரித்தார்; எண்ணிலடங்காத் தாவர இனங்களையும், விலங்கினங்களையும் ஆராய்ந்தார். தாம் கண்டறிந்த அனைத்தைப் பற்றியும் விரிவான குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டார். இக்குறிப்புக்களே இவருடைய பிந்தைய நூல்களுக்கு ஆதாரங்களாக அமைந்திருந்தன.

    டார்வின்  நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. அதன் பயனாய் மனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திடமிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை அவர் வெளியிட்டார். அவர் அறிமுகப்படுத்திய இப்பரிணாமக் கொள்கையானது (Theory of Evolution), கடவுள் உலகைப் படைத்தார் எனும் மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரான புரட்சிகரமான அறிவியல் கொள்கையாய் அன்று அமைந்திருந்தது. ஆதலால், மதவாதிகள் உள்ளிட்ட அறிவியலாளர்கள் பலரும்கூட டார்வினின் பரிணாமக் கொள்கையை எள்ளி நகையாடினர்.

    தன் ஆய்வுகளின் வாயிலாய்க் கண்டறிந்த உண்மைகளை ’உயிர்களின் தோற்றம்’ (The origin of Species) எனும் நூலாக 1859-ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார். அந்நூல் இன்றளவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கிவருவதை நாமறிவோம்.

    சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன என்று கூறிய டார்வின், இப்போராட்டத்தில் தாக்குப் பிடிக்கக்கூடிய வலிமை வாய்ந்த உயிரினங்களே நிலைத்து வாழ்கின்றன என்பதை விளக்கும் ‘தக்கன பிழைக்கும்’ ( survival of the fittest) என்ற கருதுகோளை முன்வைத்தார். இதில் இயற்கையின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதுவே ’இயற்கைத் தேர்வு’ (natural selection) என்று அழைக்கப்படுகின்றது.

    டார்வினால் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாடுகள், இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துள்ளன. மனித மரபுக்கூறுகளை (genes) ஆராய்ந்து அவற்றின் தன்மைகளைக் கண்டறிந்து சொல்லும் அளவிற்கு இன்றைய அறிவியல் வளர்ச்சிகண்டுள்ளது.

    உலக உயிர்களின் தோற்றத்தை, அவற்றின் படிநிலைகளை, வாழ்க்கைப் போராட்டங்களை அறிந்துகொள்ளப் பெரிதும் துணைபுரியும் டார்வினின் கொள்கைகளும், அவற்றை மையமாக வைத்து அவர் எழுதிய நூல்களும் உலகின் தலைசிறந்த உயிரியலறிஞர்களில் ஒருவர் என்ற புகழை அவருக்கு ஈட்டித் தந்துள்ளன.

    Share
  • வளவன் கனவு – 4

    சு.கோதண்டராமன்

    vallavan-kanavu1

    காரைக்கால் அம்மையார்

    பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

    சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்– நிறந்திகழும்

    மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

    எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.               1

                                                           -அம்மையார்

    ஏழு நாட்களில் அமைச்சர் தான் திரட்டிய தகவல்களுடன் அரசரைச் சந்தித்தார். “அந்தப் பாடல்களை இயற்றியவர் புனிதவதி என்ற பெயருடன் காரைக்காலில் ஒரு சமணக் குடும்பத்தில் தோன்றியவர். அவர் சிறுமியாக இருந்தபோது அவர் வீட்டு வாசலில் ஒரு அடியார் உணவு கேட்டு வந்தார். தாயிடமிருந்து அவருக்கு உணவு பெற்றளித்தாள் புனிதவதி. அதன் பின் அடியார் திண்ணையில் அமர்ந்து அங்குள்ள சிறுவர், சிறுமியரைக் கூட்டிக் கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை ஆலமர்செல்வன் என்னும் தெய்வத்தைப் பற்றியவை. அவை புனிதவதியின் மனதில் ஆழப் பதிந்தன.

    புனிதவதியின் பெற்றோர்கள் நாத்திகர்கள் என்பதால் அவர் அதற்கு முன் உலகைப் படைத்துக் காக்கும் இறைவன் ஒருவன் உண்டு என்பதையே அறியாதிருந்தார். அந்தக் கதைகளைக் கேட்ட பின் அவர் இறைவனைப் பற்றியே இரவும் பகலும் சிந்திக்கலானார்.

    வயது வந்ததும்    நாகையைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகனுடன் அவருக்குத் திருமணம் ஆயிற்று. காரைக்காலிலேயே ஒரு தனி வீட்டில் இருவரும் இல்லறம் நடத்தினர். ஒரு நாள் தன் கடைக்குச் சென்றிருந்த அவளது கணவன் இரண்டு மாங்கனிகள் வாங்கி வீட்டிற்கு அனுப்பினான்.

    வீட்டு வாசலில் ஒரு அடியார் வந்து, ஈசனைப் போற்றிப் பாடி, உணவு யாசித்தார். புனிதவதி அவருக்குச் சோறு பரிமாறினார். கறியமுதம் எதுவும் சித்தம் ஆகாததால் அதற்கு மாற்றாக, கணவன் அனுப்பிய பழங்களில் ஒன்றை இட்டு அடியவரின் பசி மாற்றி மகிழ்ந்தார்.

    வீட்டுக்கு வந்த பரமதத்தன், உணவுடன் கூட மாங்கனியைச் சுவைத்தான். உயர்வான சுவையுடன் கூடியதாக இருக்கவே, இன்னொன்றையும் போடுமாறு கேட்டான். ஈசனடியார்க்குக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால், நாத்திகனான தன் கணவன் கோபிப்பானோ என்று அஞ்சிய புனிதவதி இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இறைவனை வேண்டினார். இறை அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குப் படைத்தார். அது மேலும் அதிகச் சுவையுள்ளதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கவே அது பற்றி அவன் வினவினான். இறைவன் கொடுத்தது என்னும் செய்தியை அவன் நம்பவில்லை. நிரூபணம் வேண்டினான். இறை அருளால் புனிதவதி மீண்டும் ஒரு பழம் வருவித்தார். இறைவனை நம்பாத அவன் அவளைப் பேய்மகள் என்று கருதி அவளை விட்டு நீங்கிப் பாண்டிநாடு சென்றான். வருடங்கள் பல ஆகியும் அவன் திரும்பாத நிலையில், கணவனே தனக்குக் கதி என்று எண்ணிய அவர் கணவன் இருக்குமிடத்தைத் தேடி விசாரித்துக் கொண்டு சென்றார்.

    அங்கு பரமதத்தன் வேறு பெண்ணை மணம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றிருந்தான். புனிதவதியார் அவனது வீட்டிற்கு வந்ததும், “பேய் அணங்கே,  எங்களைத் துன்புறுத்தாதே, சென்று விடு” என்று வேண்டி தன் மனைவியுடன் அவரது காலில் விழுந்தான். இதைப் பார்த்த அவளது பெற்றோரும் உறவினர்களும் அவளைப் பேய் எனவே கருதிப் புறக்கணித்தனர்.

    அதன் பின் அவர் தன்னைப் பேய் என்று கூறிக் கொள்வதில் இன்பம் அடைந்தார். இறைவனைக் குறித்துப் பாடல்கள் இயற்றிப் பாடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பலரும் அவரிடம் அஞ்சி ஓடினர். சிலர் மட்டும் அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் கூறும் பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதி வந்தனர். இன்று நம்மிடம் வந்துள்ள கவிராயரின் தந்தை அத்தகையோரில் ஒருவர்” என்று சொல்லி முடித்தார் அமைச்சர்.

        அரசர் வியப்படைந்தார். “இதுவரை அவருடைய பாடல்களைக் கேட்டு அளவிலா வியப்பும் மகிழ்வும் அடைந்தேன். இத்தகைய சிறந்த பாடல்களை இயற்றியவர் நிச்சயம் பேயாக இருக்க முடியாது. சேற்றில் பிறந்த செந்தாமரை போல் நாத்திகக் கூட்டத்தில்  தோன்றிய இந்த அம்மையாரை அவரது இயற்பெயர் கொண்டு அழைப்பதும் மரியாதை ஆகாது. இனி அவரைக் காரைக்கால் அம்மையார் என்றே அழைப்போம். அமைச்சரே, காரைக்கால் அம்மையாரைப் போற்றிய மனிதர்கள் யார் யார், எங்குள்ளனர் என்று விசாரியுங்கள்” என்று கட்டளை இட்டார் அரசர்.

    தொடரும்

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 3

    – புலவர் இரா.  இராமமூர்த்தி.

    காலம்தோறும் புதுப் புதுப் பொருள்தருவது நல்ல நூலுக்குரிய தனித்தன்மை! திருக்குறள் உருவான காலத்தில் முடியாட்சிமுறையே நாட்டில் நிலவியது! சேர சோழ பாண்டியர் அரசாண்டகாலம்தான் அது. ஆனால் திருவள்ளுவர் இந்த மூவேந்தர்களைப் பற்றிய எந்தக் குறிப்பையும் தம் நூலில் குறிப்பிடவில்லை! அது மட்டுமல்ல தமிழ் மொழியிலேயே எழுதப் பெற்ற திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை. இதற்குக் காரணம், இந்த நூல் எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் உரிய பொது மறை என்பதை நுட்பமாக விளக்கவே என்பதாகும்!

    இந்த நூல், முதற்குறள், ‘அகர’ எனத் தமிழின் முதல் எழுத்தில் தொடங்கி, இறுதி 1330- ஆம் குறளில் ‘பெறின்!’ என்ற ஈற்றுச்சீர் தமிழ் மொழியின் இறுதிஎழுத்தாகிய ‘னகரத்தில் நிறைவு பெறுகிறது. அதனால் இந்த நூலின் மொழி தமிழே என்பதை வள்ளுவர் நுட்பமாகப் புலப்படுத்துகிறார். மேலும், கடவுள் வாழ்த்தில் எந்தக் குறிப்பிட்ட மதத்துக்கும் உரிய கடவுளர் பெயரைக் குறிக்கவில்லை; ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற பொதுவான பெயர்களால் மட்டுமே இறைவனைப் பற்றி அறிமுகம் செய்கிறார்! அதனால் இந்நூல் எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்பதை புலப் படுத்துகிறார்! ஆனால் இதே அதிகாரத்தில் கடவுளின் மாணடி , நற்றாள், தாள், இறைவனடி என்ற சொற்களால் இறைவனின் திருவுருவத்தையும், அவன் திருவடியையும் குறிப்பிட்டு இந்துக் கடவுளரின் உருவ வழிபாட்டை நுட்பமாகப் புலப்படுத்துகிறார்! அதனால் இந்த நூல் இந்தியநாட்டில் , சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலவிய இந்துமதம் சார்ந்த நூல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்! மேலும் இந்துசமய இதிகாச புராண வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த தொடர்களையும் ஆங்காங்கே அமைத்துப் பாடுகிறார்!

    இராமாயணம் இந்திய தேசத்தின் உயர்ந்த இதிகாசம். இந்தக் கதை இந்திய நாடெங்கும் பரவி, எல்லா மொழி மக்களாலும் புரிந்து கொள்ளப் பெற்றதாகும். இதனை சமஸ்கிருத மொழியில் வான்மீகியும், தமிழ் மொழியில் கம்பரும், இந்தியில் துளசிதாசரும், தெலுங்கிலும், மலையாளத்திலும் பலராலும் எழுதப் பெற்றுப் படித்துப் புரிந்து கொள்ளப் பெற்றது! இந்த இராமாயணத்தின் கதைத்தலைவராகிய இராமர், கடவுளின் அவதாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட கதை நிகழ்ச்சி நமக்குப்
    புலப்படுத்துகிறது! அதாவது இராமன் விசுவாமித்திர முனிவருடன் முதன் முதலாக மிதிலை நகர் நோக்கிச் செல்லும்போது, அவருடைய கால்தூசு பட்டுக் கல்லாய்க் கிடந்த அகலிகை சாப விமோசனம் பெற்று எழுகிறாள்! இந்த நிகழ்ச்சியைப் பழந்தமிழ் இலக்கியமாகிய பரிபாடலின் பத்தொன்பதாம் பாடல் குறிப்பிடுகிறது.

    ‘‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
    சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
    ஒன்றிய படி இது‘ என்று உரை செய்வோரும்:
    இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,”

    இப்பகுதியில் அகலிகை, கவுதம முனிவன் ஆகியோர் வரலாறு கூறப்படுகிறது. கவுதம முனிவன் கொடுத்த சாபத்தால் அகலிகை கல்லாய் மாறிக்கிடந்த காட்சி அந்த எழுநிலை மாடத்தில் ஓவியமாய்த் திகழ்ந்தது! இதனைத் திருவள்ளுவர் அறிந்து கொண்டு, ஒரு குறட்பா இயற்றியுள்ளார்! அக்குறள்,

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி!

    என்பதாகும். மற்றும்,

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தா னிடை

    என்ற குறட்பாவும், இந்திர பதவி பெற்ற நகுஷன் தன சிவிகையைத் தாங்கி வந்த குறுமுனி அகஸ்தியரை , ”விரைந்த,விரைந்து ” என்ற பொருளில் ”சர்ப்ப, சர்ப்ப” என்றான். அகத்தியர் அவ்வாறே நீ சர்ப்பம் ஆவாயாக என்று சபித்தார். அறவோராக விளங்கிய அகஸ்திய முனிவர் அன்போடு சிவிகை சுமந்தார்; ஆனால் சிவிகை மேலிருந்த நகுஷன் அறவுணர்வு சிறிதுமில்லாமல், அன்பின்றி முனிவரை ஏவினான். சிவிகை பொறுத்த அகத்தியர் மூலமும், சிவிகை ஊர்ந்த நகுஷன் மூலமும் அறத்தின் நெறி இதுவென்று நம்மால் விளங்கி கொள்ள இயலாது.

    இவ்வகையில் இந்திய இதிகாச புராணங்களைத் திருவள்ளுவர் தேவையான விளக்கம் தர எடுத்துக் கொண்டார்; இனி அவர் இயற்றிய வேறொரு திருக்குறளுக்குப் புதிய விளக்கம் காண்போம்! வாமனனாக வந்த திருமால் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். அவருடைய வாமன உருவம் குட்டையானது. அந்த உருவத்தின் காலடியால் மூன்றடி நிலம் என்பது மிகவும் சிறியது! ஆனால் அதே திருமால் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த போது , இரண்டடியால் மூன்று உலகங்களையும் அளந்தார்; பின்னர் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமையால் மகாபலி தன் தலையையே தந்தான்! இங்கே,
    அனைத்துலகங்களையும், மகாபலி தலையையும் அளந்து எடுத்துக் கொண்ட திருமால் வஞ்சனை செய்தார்; ஆனால் எவ்வித வஞ்சனையும் செய்யாமல் ஓர் அரசன் சோம்பலின்றி அரசாண்டால், அவன மிக எளிதாகத் திருமால் வஞ்சனையால் அடைந்த மூவுலகங்களையும் தப்பாமல் அடைவான், என்று திருவள்ளுவர் கூறுகிறார். அக்குறள்,

    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅய தெல்லாம் ஒருங்கு!

    என்பதாகும். இக்குறளுக்குப் பொருள் காணும் போது, அடியளந்தான் (வஞ்சனையால்) தாஅயதெல்லாம் ஒருங்கே , மடியிலா (வஞ்சனையில்லாத) மன்னவன் எய்தும் என்று பொருள் கொண்டால், மடியில்லாதவன் வஞ்சனை செய்யாத அறவோனாகவும் விளங்குவான் என்பது புலனாகும்! மடிஎன்னும் சோம்பலுடையவனிடம் மிக்க வஞ்சனை புரியும் மூதேவி தங்கிவிடுவாள்; ஆனால் சோம்பலற்றவனின், முயற்சியாகிய தாளின்கீழ் திருமகளே உறைவாள்” என்ற பொருளில், அடுத்த அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் குறளைப் பயின்றால் மடியின்மையுடன் அறவுணர்வு நீங்காமல் இருக்கும் என்பது புலனாகும்!

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ​​

    வள்ளுவம் ஏகிநிற்போர் வாழ்வினில் பெற்றிடுவர்
    எண்ணுவம் எல்லாம் உலகில் – மாநிலம்
    போற்றிடத் தானுயர் சான்றோராய் என்றும்   valluvar
    பெருமையாய் வாழ்வர் சிறந்து!

    தவறிலார் வாழ்வு சிலநேரம் தள்ளாடும்
    தன்னகத்தே வீற்றிருக்கும் தெய்வம் துணையாக
    வள்ளுவம் சிந்தையில் ஏகிடத் தேடிவரும்
    வாய்ப்பு உணர்வீர் மெய்!

    மண்ணில் இறைவன் எங்கும் உளமிருக்க
    பொன்னும் பொருளும் வாரா உதவிக்கு
    மாறாய் மனிதம் தேடிஎடு – வள்ளுவம்
    கூறும் நெறியில் வாழ்!

    நல்லவை ஏதெனின் யாவர்க்கும் அல்லவை
    என்றும் செயாமை யான்கெட்டும் – வள்ளுவம்
    சொன்னவை பின்பற்ற வாழ்வின் சுகமதுதான்
    பின்னவை போற்றும் உலகு!

    எண்ணம் பிறழ்செய் ஏற்றம் தருநிழல்
    சொற்பம்; முடிவில் துன்பம் வரும்நேரம்
    தெய்வமும் தள்ளிநிற்கும் தானுணர – வள்ளுவம்
    தேறிமாற வாழ்வு நலம்!

     

    Share
  • ஜன்னல் நிழல்

     

    -கனவு திறவோன்

     

    மீண்டும் மீண்டும்
    கேமராவைப் பாருங்கள்
    என்று போட்டோகிராபர்
    கூறிக் கொண்டிருக்க
    நான்
    ஜன்னலில் ஆடிய
    அவளது நிழலைப்
    பார்த்துக் கொண்டிருந்தேன்.
    போட்டோ பிரிண்ட்
    பார்த்தவர்கள் பார்வை
    ஜன்னலை நோக்கித் திரும்பியது
    சுவாதினமில்லாமல்

     

     

    Share
  • மணல் – மழை – அவன்

    கனவு திறவோன்

     

    மணல் கொள்ளை

    நதியை உலர்த்தி
    லாரியில்
    கடத்துகிறார்கள்
    வழியெங்கும் வெள்ளம்

    *

    மழை

    மேகத்தைச் சுமந்து
    களைத்த
    வானத்துக்கு
    வியர்த்தது

    *

    அகல்

    விளக்கைத் தேடி வந்து
    விட்டில்கள் விழுவது
    இயல்புதானே?
    ‘அகல்’ என்கிறாய்
    எங்கே போவேன்?

    *

    அவன்

    வாசிப்பதற்கு
    வரமாக வாங்கி
    வாசிக்காமல்
    மறந்து விட்ட
    சாபக்கவிதை

    – கனவு திறவோன்

    Share
  • காலம் (11)

     

    மீ.விசுவநாதன்

    vallamai111-300x15011111

    ஆத்திரம் , ஆணவம் , ஆசை , அதெல்லாமே
    கோத்திரம் பார்த்தா குவிகிறது – ஆத்திகன்
    நாத்திகன் யார்க்குமே ஞானம் பொதுச்சொத்து!
    மாத்திரைப் போதில் வரும். (101) 10.04.2015

    மழைத்துளி ஆச்சர்யம் ; மண்புழு நண்பன் ;
    பழையபடம் ஆனந்தம் ; பண்ணும் பிழையிலாப்
    பாட்டுக் கொடுப்பினை ; பாரமே ஏதுமில்லாக்
    கூட்டுக் களிதான் குஷி. (102) 11.04.2015

    ஓவியம் பார்ப்பதும் , ஓர்கவிதை உள்ளத்தில்
    தாவி உதிப்பதும் , தாமரைப் பூவிலே
    ஆவி கலப்பதும் , ஆண்டவன் ஆசியைத்
    தூவித் தெளிக்கும் துளி. (103) 12.04.2015

    கவிழ்ந்தும் நிமிர்ந்தும் கனிந்தும் சிரித்தும்
    தவழ்ந்தும் விழுந்தும் தளிராய் எழுந்தும்
    தவறாத நம்பிக்கை சக்தியுடன் பிள்ளைத்
    தமிழாய் வளர்தல் தவம் (104) 13.04.2015

    படிப்பது நன்கு பதிவதும் , நாடித்
    துடிப்பெலாம் என்றும் துடிப்பாய் முடிகொண்ட
    சங்கத் தமிழ்போல சத்தாய் ஒலிப்பதும்
    எங்கள் குருவருள் ஈர்ப்பு (105) 14.04.2015

    மீன்நீந்தும் ஆறுமாய் விண்மீனின் வானுமாய்
    “நான்”நீந்தும் ஆழ்மனதில் ஞானமே வீண்தானே !
    ஏனென்றால் ஆணவம் என்றுதான் ஓயுமோ ?
    ஏனத்தில் ஓட்டை எனில். (106) 15.04.2015

    ஓடும் ரயிலில் ஒருநாள்ப் பயணமாய்
    நாடும் உறவினை நான்காண ஓடினேன் !
    போடும் உணவிலும் பூசலைப் பேசினார் !
    காடுவரை நீங்காத காய். (107) 16.04.2015

    பெரிதான கோவில் ! பிரும்மாண்ட சிற்ப
    அரிதான காட்சி ! அழகாய் எரியும்
    விளக்கில்லை பூஜை விளக்கங்க ளில்லை !
    பளபளப்பி லேது பரம். (108) 17.04.2015

    குடுகுடுப்பைப் காரனைக் கூட்டிவா இங்கே !
    கடுகடெனப் பேசும் கலியில் , படுகுஷியாய்
    “நல்லகாலம் ஐயா ! நடப்பது நல்லதென்பான் !”
    பொல்லாப்பு வேண்டாப் புகழ் (109) 18.04.2015

    வெளிநாடோ உள்நாடோ வேடங்கள் ஒன்றே ;
    துளிகூட மாறாத தோற்றம் வெளிவேஷம் !
    உள்ளே கலகமும் ஊர்முன் சிரிப்புமாய்
    கள்ளனாய் வாழும் கலி. (110) 19.04.2015

    Share
  • ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 4

    –சி. ஜெயபாரதன்.

    kahlil-gibran

    (1883-1931)

    ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

    மூலம் : கலில் கிப்ரான்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    பேராற்றல் பெறும் அமெரிக்கா

    சங்கமம் அடையும் புத்துலகுக்கு
    ஓர் ஆத்மா உண்டு !
    உறுதியாய் அந்த ஆத்மாவுக்கு
    ஒரு குரலும் உண்டு !
    அமெரிக் காவின் குரல்
    அகில தேசக் குரலாய்
    அமைவது அவனி விதி !
    அந்நாட்டுக் கலை, கலாச்சாரம்,
    சந்ததிகள்
    அந்நியர் ஈடுபாட்டால்
    கறைபடும் நிறம் மாறி !
    உன்னத யுரேசிய
    ஆன்மாக் களின்
    உண்மை அழகு
    உருவாகி வருகிறது அதன்
    கருவாகி !

    அகில நாடுகள் தழுவும்
    மகத்துவ
    ஒருமைப் பாட்டுணர்வை
    உருவாக்கும் !
    பல்வேறு கலாச்சாரம்
    பின்னிடும்
    பன்னிறப் பேழை அது !
    அந்த அந்த தேச மாந்தர்
    மாறுபாடாய்ச்
    சிரம்மேல் கொள்கிறார்
    அவரவர் சமூகத்து
    வரலாற்றுப் பழக்கத்தை !

    அனைவரும் ஒருமித்து
    நோக்குவது
    அமெரிக்க மண்ணை
    ஒரு பொதுத் தளமாய் ! ஆயினும்
    பொதுவில்லாக்
    கருணை உள்ளம்
    உதிக்கிறது அங்கே
    எதிர்பாராது !
    அந்தப் பரம்பரையில்
    படிப்படியாய்
    விருத்தி யாகி
    அனைவரையும் பிணைக்கும்
    ஓரின உணர்ச்சி !
    கலப்புக் கலாச்சாரமே
    கவர்ந்து
    உருவாகி வருகுது
    அமெரிக்க ஐக்கியம்
    பேராற்ற லோடு !

     

    சுதந்திர மனிதர் நாம் !

    சுதந்திர மனிதர்கள் நாம் !
    கிழக்கையோ மேற்கையோ
    தழுவியோர் அல்லர் !
    எல்லைக் கோடுகள் நமது
    இதயத்தில் இல்லை !
    சிலுவை, பிறை நிலவை
    வழிபடுவோர் இல்லை !
    ஏசுவையோ புத்தரையோ
    நேசிப்போர் இல்லை !
    யூதர் மீதோ, இஸ்லாமியர் மீதோ
    பேதமை இல்லை !
    சுதந்திர மனிதர்கள் நாம் !

    Share
  • அவன், அது , ஆத்மா (18)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 18

    R. சங்கர ஐயர்

    amvஏழாம் வகுப்பில் அவனுக்கு விஞ்ஞானப் பாடம் எடுத்த ஆசிரியர் R. S. என்ற R. சங்கர ஐயர். மிகுந்த ஆசார சீலர். ஒழுக்கம் நிறைந்த அமைதியான மனிதர். பஞ்சகச்சமும், முழுக்கை சட்டையும் அணிந்து கழுத்தைச் சுற்றி அழகாக மடிக்கப்பட்ட ஒரு அங்கவஸ்திரமும் போட்டுக் கொண்டிருப்பார். சட்டையின் கழுத்துப் பகுதி மூடப்பட்டு, தொண்டைப் பகுதியில் ஒரு “டாலர்”ஐ மாட்டிக் கொண்டிருப்பார். அது அவரது தந்தையாரின் படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது தந்தையார் சன்யாசம் வாங்கிக் கொண்டவர். ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி என்பது சன்யாச ஆஸ்ரமத்தில் அவரது பெயர்.

    “ஆர்.எஸ்.” சார் மாணவ மாணவியரிடம் ஒருபோதும் கோபப்படாதவர். அவரது வகுப்பை எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். காரணம், அவர் பாடம் நடத்திய பின்பு தினமும் ஒரு பத்து நிமிடங்கள் நல்ல நீதிக் கதைகளை ரொம்பவும் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். அவரது அந்தக் கதைகளைக் கேட்ட மாணவ, மாணவியர்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல பாதையில்தான் செல்வார்கள். பள்ளிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும் உள்ளத்தில் பதியும் படிச் சொல்லும் நல்லாசிரியர்களில் அவர் ஒரு “ரத்தினம்”. அப்படி என்ன அவர் கதை சொல்லி விட்டார் என்கிறீர்களா? இதோ அவர் சொன்ன, அவன் நினைவில் உள்ள ஒரு சிறிய கதையைச் சொல்லுகிறான் , கேளுங்கள்.

    amt
    “உண்மையைச் சொல்லு, தர்மப்படி நட”

    “அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள அக்கிரஹாரத்தில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவர் தருமமும், நியாயமும் அறிந்த நல்ல மனிதர். அவரது வீட்டில் தினந்தோறும், வீட்டில் உள்ளவர்களைத் தவிர ஒரு பத்து பேர்களுக்காவது சாப்பாடு போடுவார்கள். இல்லை என்று சொல்லக் கூடாது என்ற குணம் கொண்ட குடும்பம். ஒரு நாள் அவரது வீட்டின் வாசலில் ஒரு அந்தணச் சிறுவன் “அம்மா சாப்பாடு போடுங்கோ” என்று, தனது கையில் ஒரு சிறிய பாத்திரத்தை ஏந்தியபடி நின்றிருப்பதைக் கண்டு, தனது மனைவியிடம் ,”யாரோ ஒரு குழந்தை பசிக் கரதுன்னு வாசல்ல நிக்கறான்…அந்த பிரும்பச்சாரிக் குழந்தையைப் பார்த்தா பாவமா இருக்கு..அவன உள்ள கூப்பிட்டு சாப்பாடு போடு” என்றார். அவரது மனைவியும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்து கை,கால்களை கழுவிக்கொண்டு வீட்டின் நடுக்கூடத்தில் வந்து அமரச் சொன்னாள். அதுபோலவே அந்தச் சிறுவனும் வந்து அமர்ந்து கொண்டான். அவனுக்கு முன்னால் ஒரு வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறினாள் அந்த அம்மாள். அந்தச் சிறுவனும் சாப்பாட்டை வணங்கி விட்டு, சாதத்தைக் குழம்பு விட்டுப் பிசைந்து மெதுவாக முதல் கவளத்தை எடுத்துத் தனது வாயருகில் கொண்டு செல்லும் போது, அந்த வீட்டின் மற்றொரு அறையில் இருந்து “டங்..டங்” என்று ஒரு சத்தம் வந்தது. உடனே அந்தச் சிறுவன்,” கலக்கறா…கலக்கறா” என்று கத்தினான். அந்த நிமிடம் சத்தம் நின்றது. மீண்டும் அந்தச் சிறுவன் கையில் ஒரு கவளம் சாதம் எடுத்துத் தன் வாயருகில் கொண்டு செல்லும் போது அதே “டங்..டங்” சத்தம் கேட்டது. “கலக்கறா..கலக்கறா..” என்று மீண்டும் அந்தச் சிறுவன் கத்தினான். இப்போதும் அந்தச் சத்தம் நின்று விட்டது. அந்த வீட்டின் பெரியவர் அந்தச் சிறுவனிடம்,” என்னது கலக்கறா..கலக்கறான்னு கத்தறே” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன்,” இந்த வீட்டில் யாரோ ஒரு ஆசாரி தங்கத்தில் செம்பைக் கலக்கறார்…அதனாலதான் கத்தினேன் ” என்றான். “உனக்கு எப்படி அது தெரியும்” என்று அந்தப் பெரியவர் கேட்டார். “எங்கப்பாவும் ஆசாரிதான்..நகைகள் செய்வார்…அதனால அந்தத் தட்டுகிற ஓசையிலேயே எவ்வளவு செம்பு தங்கத்தில் கலக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான். “நீ ஏன் ஆசாரிப் பையன் என்று என்னிடம் சொல்லவில்லை” என்றார். “நீங்கள் என்னிடம் நீ யார் என்றே கேட்கவில்லையே” என்றான். உடனே பெரியவர் ,”சரி நீ முதல்ல சாப்பிடு..” என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் தன்னுடைய வீட்டிற்கான நகைகளைச் செய்து கொண்டிருந்த ஆசாரியைக் கூடத்திற்கு அழைத்து வந்தார். “என்னப்பா நீ..தங்கத்தில் செம்பு கலந்தாயா..”என்று கண்டிப்பான குரலில் கேட்டார். தயங்கித் தயங்கி,” ஆமாம் ஐயா..” என்றார் அந்த ஆசாரி. “உன்னை நம்பி இந்த வேலையைத் தந்தேன்…நம்பிக்கை துரோகம் செய்துட்டயே..இனிமேல் நீ வேலை செய்ய வேண்டாம்…பண்ணின வேலைக்குக் கூலிய வாங்கிண்டு வீட்டுக்குப் போ” என்று அனுப்பி விட்டார். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த சிறுவனிடம் ,” நீ உண்மையச் சொன்னாய்..அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது…அதனால இந்த நகைசெய்யற வேலைய ஒன்னோட அப்பாவுக்குத் தரேன்..அவரைப் போய் இங்க கூட்டிண்டு வா…நீ நன்னாப் படி..ஒன்ன நானே படிக்கச் வைக்கறேன்…எப்போதும் உண்மையே பேசு…” என்று அந்தச் சிறுவனை அனுப்பிவைத்தார்.

    எப்படி அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் மனதில் சத்தியம் பேச வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததோ அதேபோல அவனது “ஆர்.எஸ். சார்” சொன்ன இந்தக் கதையின் கருவும் அவன் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. அவன் பிற்காலத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற நாளில் அனைவரும் அவனை “நாணயமானவன்” என்று பரிசு கொடுத்துப் பாராட்டியதில் அவன் கர்வப்படவில்லை. அந்த “ஆர்.எஸ்.சாரின் பாதங்களையும், பெற்றோரின் பாதங்ககளையும்” மானசீகமாக நமஸ்கரித்தான்.

    “ஸ்ரீ ஞானானந்த பாரதீ”

    “ஆர்.எஸ்.சாரின்” மூத்த சகோதரர் திருநெல்வேலி வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி ஐயர். ஒரு சிறந்த ஆன்மிகவாதி. தேர்ந்த எழுத்தாளரும் கூட. தமிழ், வடமொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நல்ல பாண்டித்யம் உள்ளவர். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34 வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தவர். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டதன் பலனாக தர்ம, நியாயங்களிலும், வேத சாஸ்திரத்திலும் ஆழமான பிடிப்புக் கொண்டிருந்தார். பிரபலமான வக்கீலாக இருந்த காலத்திலேயே (1965 ம் ஆண்டு) தனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டு சன்யாசம் வங்கிக் கொண்டார். அவருக்கு “ஸ்ரீ ஞானானந்த பாரதீ” என்று சன்யாசாஸ்ரமப் பெயர் வழங்கப்பட்டது. நீதிமஞ்சரி, வாசிஷ்டசாரம், குருகிருபா விலாசம், தேன்மொழிகள் போன்ற தமிழ் நூல்களும், The Saint of Sringeri, Dialogue with the Guru, போன்ற அற்புதமான ஆன்மிக நூல்களையும், மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார். அவர் 1975 ம் வருடம் தமிழ் நாட்டிலுள்ள “மன்னாடிமங்கலம்” என்ற கிராமத்தில் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைவதற்கு முன்பாக சிருங்கேரி ஜகத்குரு நாதர்கள் அனந்தஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள், அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் இருவரும் தங்களுடைய இராமேஸ்வரம் யாத்திரைக்குச் செல்லும் வழியில் மன்னாடிமங்கலத்திற்குச் சென்று அவருக்கு தரிசனம் தந்தனர். அவருடைய அதிஷ்டானத்தில் இப்பொழுதும் பூஜை, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகளின் நூல்களை எல்லாம் அவன் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பான். முக்கியமாக “குருகிருபா விலாசம்” இரண்டாம் பாகம், நீதிமஞ்சரி போன்ற புத்தகங்களை அவன் விரும்பிப் படிப்பான். இந்தப் புத்தகங்களை சென்னையில் இருக்கும் “ஸ்ரீ ஞானானந்த பாரதி கிரந்த சமிதி” அறக்கட்டளை மூலமாக ஸ்ரீ ஞானானந்த பாரதி சுவாமிகளின் பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரன் ஆர்.சங்கரன் குடும்பத்தினர் வெளியிட்டு வருகின்றனர் .

    “L. விஸ்வநாத ஐயர்”

    அவனுக்கு ஏழாம் வகுப்பில் கணக்குப் பாடத்திற்கு எல்.விஸ்வநாத ஐயர் டியூஷன். அவர் அவனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கனிவும், கண்டிப்பும் உள்ள ஆசிரியர். அவனுக்கு அப்பா அவரிடம் ,” நம்ம கண்ணனுக்குக் கணக்குப் பாடம் சரியாப் புரியலைன்னு சொல்லறான்..ரொம்ப விளையாட்டுப் பிள்ளையா இருக்கான்.” என்று சொன்னார். அப்பொழுது அவர் ,” சுந்தரம் நீ ஒண்ணும் கவலைப் படாதே …அவன எங்கிட்ட அனுப்பு. நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கறேன்” என்றார். அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்கு வடக்கு மாடத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அவன் டியூஷனுக்காகச் சென்றான். இன்னும் இரு மாணவர்கள் அங்கே இருந்தனர். நன்றாக மனதில் பதியும்படி அவர் சொல்லித் தருவார். அவரது கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பாடம் சொல்லித்தருவார். அவனுக்கு அப்பா அவரிடம் ,” அண்ணா .. டியூஷன் பீஸ் எவ்வளவு வேணும்?” என்று கேட்ட பொழுது அவர் கோபித்துக் கொண்டார். ” ஒங்கிட்ட நான் பணம் கேட்டேனா?” என்று அன்போடு கடிந்து கொண்டார். “இல்லை அண்ணா.”.என்று அவனுக்கு அப்பா இழுத்த பொழுது ,”ஒனக்கு முடிஞ்சதக் கொடு” என்று சொன்னார். அந்த மாதச் சம்பளம் வாங்கியவுடன் அவனுக்கு அப்பா அவனிடம் “ஐந்து ரூபாய்” தந்து,” இத இன்னிக்கு நீ டியூஷன் போகும் பொழுது சாரிடம் கொடுத்து நமஸ்காரம் பண்ணு” என்று சொன்னார். அவனும் அப்படியே செய்தான். “எல்.வி” சார் அதை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டு,” இத பாரு கண்ணா..கணக்குப் புரியலைன்னா கேளு…சொல்லித்தரேன்..யாரப் பாத்தும் காப்பி அடிக்காதே…தெரியலைனா விட்டுடு..திரும்பத்திரும்ப நான் சொல்லிக் கொடுத்த கணக்குகளைப் போட்டுப் பாரு..” என்று கூறி நிறைய மாதிரிக் கணக்குகளைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். அடுத்தநாள் அதை சரிபார்த்து, ஒவ்வொரு படியாகச் சொல்லித்தருவார். விடுமுறை நாட்களில் ஒரு நோட்டுப் புத்தகம் முழுதும் பயிற்சிக் கணக்குகள் தந்து போடச் சொல்லுவார். அவன் படிக்கும் நேரத்தில் தெருவில் விளையாடுவதைப் பார்த்தால் உரிமையோடு கண்டிப்பார். இரண்டு வருடங்கள் அவரிடம் அவன் டியூஷன் படித்தான். அதன் பலன் எட்டாவது வகுப்பில் கணக்கில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேறினான். அதைவிட முக்கியமாக அவன் ஒருநாளும் யாரையும் பார்த்துக் காப்பி அடிக்கவும் மாட்டான். மற்றவர்களுக்கும் காட்ட மாட்டான். கணக்கின்மீது அவனுக்கு பயம் போய், ஆர்வம் வந்ததற்குக் காரணமே எல்.விஸ்வநாத ஐயரின் அணுகு முறைதான். டியூஷன் எடுக்கும் பொழுது அவருக்கு அவரது வீட்டில் குடிப்பதற்குக் “காப்பி” தருவார்கள். உடனே அவர் அவரது மகளிடம் ,” ஏடி…மதுரம் கண்ணனுக்கும் கொஞ்சம் காப்பி கொடு” என்பார். அதுபோன்ற அன்பான ஆசிரியர்களால்தான் அவன் வாழ்க்கைப் பாடத்தை நன்றாகக் கற்றுக் கொண்டான். வெறும் “ஐந்து ரூபாய்”க்காக அவர்கள் பாடம் நடத்த வில்லை. தன்னிடம் கற்ற மாணவன் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றும், இந்த ஏழைக் குழந்தை நன்றாக முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் அவர்கள் உழைத்தார்கள். அவரது மகள் மதுரம் அவனுக்கு சகோதரி பாலாவின் வகுப்புத் தோழி. அவருக்கு தர்மராஜன், சங்கர் என்று இரண்டு மகன்களும் உண்டு. எல்லோருமே அவனிடமும், அவனது குடுபத்தினரிடமும் இன்றுவரை அன்போடுதான் இருக்கின்றனர்.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • அயோத்தி அரண்மனை பஞ்சணையில் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    V. Dakshinamurti

     

    Jeevanadi..இசையெனும் இன்பநதியில் இதயம் மூழ்கிவிட்டால் மனம் இன்பலஹரியில் மோகனம் பாடும்! பாண்டித்துவம் பெற்ற விற்பன்னர்கள் மட்டுமே அனுபவித்துவந்த இசையை, பாமரனும் அனுபவிக்கும்வண்ணம் வழி வகை செய்தது திரையிசையால் மட்டுமே சாத்தியமானது. தமிழ்த் திரையிசை இதுநாள் வரை எத்தனையோ ஜாம்பவான்களைக் கண்டிருக்கிறது! அவர்கள் ஒவ்வொருவரின் பாணியும் தனித்துவம் மிக்கதென்பதும் மறுக்க முடியாதது.

    இந்தச் சரித்திரத்தில் இசையமைப்பாளர் வி.தக்ஷிணாமூர்த்தி ஏனைய இசையமைப்பாளர்களால் போற்றிப் புகழ்ந்து வணங்கி மகிழும் ‘மகா’ மனிதர். தமிழ்த்திரையில் இவர் இசை அமைத்த படங்கள் குறைவு என்றாலும் எல்லோரின் இதயங்களிலும் ரீங்காரமிடும் இன்னிசைப் பதிவுகள் இவருடையதாகும்.

    அப்படி ஒரு சுகானுபவத்தை இவரின் ஒவ்வொரு பாடலும் தட்டாமல் தந்து விடும். கர்நாடக சங்கீதத்தின் வாயிலாக கவிதை சொல்லும் யுக்தியிது என்று கூட நான் நினைப்பதுண்டு.

    காவியக் கவிஞர் வாலி அவர்களின் விரல்களில் வழிந்த வார்த்தை நதியில் அயோத்தி அரண்மனைப் பஞ்சணை … இதோ அலங்கரிக்கப்படுகிறது. சுகராக ஜீவிதம் பேர் விரும்புவர்கள் இப்பாடலைக் கேட்டு மகிழலாம்.

    அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
    அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
    வராத சுகம் இன்று வந்ததென
    மடியினில் கிடந்தாள் வைதேகி
    [ அயோத்தி அரண்மனை ]

    சீதையை ராமன் பாராட்டினான்
    சீதா ராமனைத் தாலாட்டினாள்
    திரும்பவும் காலம் வென்றதென
    தேன் எனும் குரலில் சீராட்டினாள்
    [ அயோத்தி அரண்மனை ]

    கல்லில் நடந்த ராமனுக்கு
    கால்கட்டு போட்டாள் வைதேகி
    கண்ணில் கலந்த ராமனுக்கு
    கால்கட்டு போட்டாள் வைதேகி
    ஒரு நாள் ராமனை உறங்க வைக்க
    பலநாள் ஜானகி தவமிருந்தாள்
    ரகுபதி ராகவன் துயில் கொண்டான்
    ரசனையை ஜானகி பயில்கின்றாள்

    அயோத்தி அரண்மனை பஞ்சணையில்
    அமைதி கொண்டிருந்தான் ஸ்ரீராமன்
    வராத சுகம் இன்று வந்ததென
    மடியினில் கிடந்தாள் வைதேகி

    அற்புத வரிகளோடு கவியாட்சி நடக்க, இசையங்கே முடிசூட்டு விழா நடத்திவிடுகிறது. பி.சுசீலாவின் தெய்வீகக் குரலில் தேன் வந்து விழுகிறது. தென்றல் ஒன்று நடந்து வருவதைப் போன்ற சுகம் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம்.

    ஜீவநாடி திரைப்படத்தில் நம் ஜீவன் தொடும் வி.தக்ஷிணாமூர்த்தி இசையில் வாலி அவர்களின் வரிகள் நம்மை அயோத்திக்கு அழைத்துச் செல்கின்றதல்லவா?

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    பட: ஜீவநாடி ( 1970 )
    இசை: வி. தக்க்ஷிணாமூர்த்தி
    பாடல்: வாலி
    குரல்: பி. சுசீலா
    காணொளி: https://youtu.be/dRd14z6MOTo

    https://youtu.be/dRd14z6MOTo

    “””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    Share