-மேகலா இராமமூர்த்தி

திரு. திவாகரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் நன்றிகள்.

leaves

பச்சை இலைகளும் பழுத்த இலைகளும் கலந்தே இருக்கும் இம்மரக்கிளை வாழ்வின் பல நிலைகளை மொழியின்றி நமக்கு விளக்கி நிற்கக் காண்கிறோம்.

பச்சிளம் குழந்தையாய் இருந்தநாம் பாலப் பருவத்தில் அடியெடுத்துவைக்கும்போது குழந்தைப் பருவம் மாண்டு போகிறது; காளைப் பருவத்தில் நுழையும்போது பாலப் பருவம் அழிந்துபோகிறது. இவ்வாறு நம்முடைய ஒவ்வொரு வளர்ச்சி நிலையுமே முந்தைய நிலையின் முடிவாய்…மரணமாய் அமைந்து விடுகின்றது. இதுவே வாழ்வின் நியதி. இதை உணராத மனிதனோ உடலைவிட்டு உயிர்பிரிவதொன்றே முடிவுநிலை என்றெண்ணுகின்றான் என்பதைச் சிறப்பாக எடுத்தியம்புகின்றது குண்டலகேசி எனும் நூலில் வரும் பாடலொன்று.

பாளையாம் தன்மை செத்தும்
–பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
–காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பு பின்னே
–மேல்வரு மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால்
–நமக்கு நாம் அழாதது என்னே!

வழக்கம்போலவே, சிந்தனைக்கு இன்பம் நல்கும் இனிய கவிதைகளை வாரி வழங்கியிருக்கின்றனர் கவிஞர்கள்! அவைகளை இரசித்துவிட்டு வருவோம்!

***

பருவகாலக் கன்னி மரங்களின் இலைகளில் பன்னிறம் வடித்து வானில் கோலமிட வருகிறாள் எனும் சுவையான கற்பனையைத் தன் கவிதையில் வழங்கியிருக்கும் திரு. ஜெயபாரதன், தன் மற்றொரு கவிதையில் ’பழுப்பு இலைகள் புயலில் பறக்கும் தட்டுகள்’ என்று இரசனையோடு வருணித்திருக்கின்றார்.

அவ்விரண்டு கவிதைகள்…

…பச்சை இலைகள்
பழுப்பு இலைகளாய்
மாறும் காலம்.
நீல வானப் புடவை கட்டி
மேகக் கன்னி
மயக்க வரும் காலம் !
குளிர்காலம்
பச்சை நிறச் சேலையை
உரிக்கப் போகுது !
மரத்தின் மீது
கிருஷ்ணன் வருவானா
மஞ்சள் நிறப் புடவை
அளிக்க !
வெண்ணிலா தென்படும்
பொன் முலாம் பூச !
பருவக் கால கன்னி
மரத்திலே பன்னிற
ஓவிய
இலைகள் வடித்து வானில்
கோலமிட வருவாள்
நம்முள்ளம்
கொள்ளை கொள்ள !

***

பழுப்பு நிற இலைகள்
புயலில்
பறக்கும் தட்டுகள் !
பகலில் ஒளிக்கதிர் திரட்டிடும்
ரேடார்  தட்டுகள் !
பரிதிக் கதிர்கள் பெற்று
பச்சைப் பசேலென்று
பசுமை ஆக்கும்
இலைகள் !
பச்சை இலைகளைக் குளிர்ப்
பருவ காலம்
பழுப்படிக்கச் செய்யும் !
மங்கிய இலைகள்
தொங்கும் காட்சி ! …

***

கிளையில் மோதிய லாரியில் ஏறித் தனியே பயணிக்கும் ஒரு கொத்து இலைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திரு. கவிஜி!

கிளை முட்டி 
சமாளித்து பயணித்த 
லாரியில் 
அனாதையாய் 
ஒரு கொத்து இலைகள்…

***

இலைகள் உதிர்ந்ததால் கருகும் காம்புகள் உறவின் சாட்சிகள் எனும் புதிய சிந்தனையைச் செப்பும் திரு. கனவு திறவோன், வீழ்ந்தழியும்வரை மற்றையோர்க்குப் பயன்தருபவை மரங்கள் என்று அவற்றின் தன்னலமற்ற வாழ்வைப் போற்றுகிறார்.

உதிர்ந்த இலைகள்
விட்டுச்சென்ற
கருகும் காம்புகள்
உறவின் சாட்சிகள்

மிஞ்சியிருப்பதில்
பச்சையென்றும்
வெழுப்பென்றும்
பேதமா?

உன்னை படைத்திட
என்னை இழக்கிறேன்
நீ தரும் சக்தியில்
என்னைக் கழிக்கிறேன்
நானாக விழுவேன்
அதுவரை
உன்னைத் தாங்குவேன்!

***

தன் இறுதிப் பயணத்திற்காய் உறுதியோடு காத்திருக்கும் பழுத்த இலையின் சாகசத்தைப் பாவாக்கியிருக்கிறார் திரு. சேயோன் யாழ்வேந்தன்.

பழுத்த இலை காத்திருக்கிறது
காற்றின் சிறு வருகைக்கு
ஒரு பறவையின் அமர்வுக்கு
அல்லது காம்பின் தளர்வுக்கு
தன்னை விடுவித்துக் கொள்ள.

பென்டுலம் போல் அசைந்துகொண்டோ
உருளையைப் போல் சுழன்றுகொண்டோ
தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை
யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென
அது காத்திருக்கிறது

தன்னிடத்தை விட்டு
இவ்வளவு தூரம் வந்ததை
சிலர் வியந்து பேசவும் கூடும்
ஓர் எறும்பைச் சுமந்து
அது இறங்கும் அதிசயத்தை
இரு கூரிய கண்கள்
வியந்து பாடவும் கூடும்.

பழுத்த இலை காத்திருக்கிறது
தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

***

சுயநலப் பந்தாட்டம் நடைபெறும் உலகில், பழுத்த இலைகளின் உயிர்கள் கிளையில் ஊசலாடுவதை வேதனையோடு பதிவு செய்திருக்கிறார் திருமிகு. லட்சுமி.

நீல  வாழ்க்கைப் பாதையில்
எழுதிய வினாக்குறி 
பழுத்த இலை முதியோர்!
முகவரி நரம்புகள் இழையோட
ஒட்டியும் ஒட்டாத துளிர் இலைகள்
துளிர்இலை மனிதர்களுக்காக
நிகழ்வாழ்வின் மகிழ்ச்சியை
ஈந்து வாழும் 
வாழும் தியாக ஊற்றுகள்!
பழுத்த இலைகள் சுயநலப் பெருங்காற்றினால்
உதிர்வதுண்டு!
தாமரை இலைத்தண்ணீர் பாசம் இருந்திருந்தால்
பழுத்த இலைகள் என்றோ
ஆரவாரமாக சலசலத்திருக்கும்!
ஒட்டாத பாசந்தனில்
ஒட்டிய கிளையில் பழுத்த இலைஉயிர்கள் அசைந்தாட
சுயநலப் பந்தாட்டம் சுதந்திர உலகில்
நடக்குதப்பா!

***

’பருவம் மாறி…தான்கொண்ட உருவம் மாறி உதிர்தல் என்பது இலைகளுக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கும் பொருந்துவதே!’ எனும் உலகியல் உண்மையை அழகாய் விளக்கியிருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

     பருவம் முதிர்ந்து சருகாகி
மிச்ச மின்றி மண்ணாதல்
மரந்தரு கிளைக்கு மட்டுமல்ல,
இச்சை உடலில் கொண்டவனே
இதுவும் முதுமை வந்தழியும்,
நிச்சயம் இதனை நினைத்திருந்தால்
நிம்மதி வாழ்வில் நிலைத்திடுமே…!

***

இலைகளின் நிறமாற்றம் அவைகளை மலர்ச்செண்டுகளாய் மாற்றிக் காட்டுதே என வியந்துபோகிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

…பசுமை இலைகளை கண்டாலே கண்ணுக்கு குளிர்ச்சி
பல நிற இலைகளை கண்டாலே மனதிற்கு மகிழ்ச்சி
அயல் நாட்டில் இலைகளே அழகிய பூக்களாய் மிளிரும்
வசந்தத்தின் சிறப்பினை இலைகளே நினைவூட்டும் !

வசந்தத்தில் இலைகளே மலர்களாய் மலர்ந்து காட்சி தரும்
இதுவே காண்போர்க்கு மட்டற்ற மகிழ்ச்சி  தரும்,
வான்னின்றும், சிகரத்தின் மேல் நின்று  கீழ் நோக்கின்
மலர்ச்செண்டுகள், நட்டதுபோல்  காட்சி  தரும்.

***

பச்சை வண்ண ஆடைகட்டிச் சலித்துப்போன மரப்பெண்ணின் உடைமாற்றந்தான் இலைகளில் தெரியும் புத்தம்புது வண்ணங்களோ? என வினா எழுப்புகிறார் திருமிகு. தமிழ்முகில்.

இலையதுவே மரத்திற்கு
ஆடையாகிப் போக
பச்சை நிற ஆடையே உடுத்தி
சலித்துப் போனதோ
இந்த மரப் பெண்ணிற்கு ?
மஞ்சளும் அடர்சிவப்புமாய்இளம்
தளிரையும் பழுத்த இலையையும்
உடுத்தி தன் அழகினை இரசிக்கிறாளோ ?

***

மழைக்கால மேகங்கள் இலைகளில் சேமிக்கும் வானவில்லை நமக்கும் காட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

மழைக்காலத்துக்கான மேகங்கள் 
உதிர்கின்ற  இலைகளில்சேமிக்கின்றன
வானவில்லுக்கான நிறங்கள்

***

பழுப்பு வண்ண இலைகள் பகரும் வாழ்வின் நிலையாமையை விளக்கும் திருமிகு. வேதா இலங்காதிலகம், ’நிலையற்ற உலக வாழ்வை உணரும் ஞானம் அனைவர்க்கும் வாய்த்தால் வாழ்க்கை சுலபமே’ என விளம்புகிறார்.

காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
பாரேன் படமெனக் காட்டுதிங்கு.

எம் கண் பறிக்கும் நீலமேகம்
தன் வண்ணப் பின்ணனி மயக்க
தலை நீட்டும் இலைக் கொத்து
நிலையற்றது வாழ்வு என்கிறது.

விலையற்ற பெரும் தத்துவ உண்மை
தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்
கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!

 ***

வாழ்வியல் தத்துவங்களைத் தம் கவிதைகள் வழியே அழகாய்ப் பாய்ச்சியிருக்கும் கவிஞர்கள் அனைவர்க்கும் என் பாராட்டுக்கள்!

’பழுத்த ஓலை மண்ணில் வீழப்
பச்சை
ஓலை சிரித்ததாம்!
காலம் என்னும் காலன் கணக்கில்
பச்சை
பழுக்கலானதாம்!
தானும் கறுத்துப் போன போது
தனது
நிலைமை உணர்ந்ததாம்!’ என்றொரு சிறுவர் பாடல் உண்டு. ஆம்! நிலையாமை ஒன்றே வாழ்வில் நிலையானது. இந்த நிலையாமைத் தத்துவத்தையும், வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பிறருக்குப் பயன்படவேண்டும் எனும் நல்லெண்ணத்தையும் இப் போதிமரத்திடம் தாம் கற்பதாய் ஒரு கவிதை பேசுகின்றது.

அக்கவிதை…

கிளை ஒன்றுதான் !
ஆயினும் அதிலே
உதிரப் போகும் இலைகளும்
பச்சை நிற இலைகளும்
கலந்தே துலங்குது !

ஆம்
இயற்கை
அது நமக்கு
போதிக்கும் உண்மை
வாழ்வும் அது போலத்தான்

உதிரும் இலைகள்
சருகாக !
மீண்டும் தன்னை
வாழவைத்த மண்ணுக்கு
உரமாக
. . .

மனிதனாய்ப் பிறந்தோம்
மறைந்த பின்பு
நாம் வாழ்ந்த மண்ணுக்கு
பயனாய் எதை
விட்டுச் செல்கிறோம் ?

சிந்தையைக் கிளறிடும்
விந்தையான பொறியைத்
தட்டி விட்டு
நம்மைப் பார்த்துச்
சிரிக்கிறதோ
அப் போதி மரம் ?

நிலைத்திடும் என்று
அகந்தையில் உழன்று
நர்த்தனமாடிடும் எமக்கு
காற்றிலசையும் இலைகள்
கற்றுத் தருகின்ற ஞானம்
தொட்டு நிற்கிறதோ
முற்றுப் பெறாத காவியமாய் !

ஆடை களைந்து
நிர்வாணமாகப் போகும்
ஒற்றைக் கிளை
வரப்போகும் தன் நிலை
எண்ணி நாணாமல்
வருவதை ஏற்கும்
பண்பதை மானிடர்
எமக்குப் பறைசாற்றும்
வாழ்க்கைப் புத்தகத்தின்
வரலாற்று அத்தியாயமாய்
. . .

பொருட்செறிவுள்ள இக்கவிதையை யாத்திருக்கும் திரு. சக்தி சக்திதாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

அடுத்து, முற்றிலும் புதிய கோணத்தில் படத்திலுள்ள கிளையை நோக்கி, ’பூமியில் பிரிவினைகள் செய்துவிட்ட மாந்தர்காள்! வானத்திலும் அவ்வேலையை ஆரம்பித்து விடாதீர்கள்! என்று இக்கிளை கைநீட்டித் தடுப்பதாய்க் கவிபாடியிருக்கிறார் திரு. எஸ். பழனிச்சாமி. அவரின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

மனிதன் பிரித்த விதங்கள்தான் எத்தனை
மனத்தால் மதமும் மதத்தால் இனமும்
இனத்தால் மொழியும் மொழியால் நிலமுமாய்
இவ்வுலகைப் பிரித்து துண்டாடி நின்றாய்
தனித்தனித் தீவுகளாய் ஆகிவிட்ட மானுடமே
தனியேவிடு நீலநிற வானத்தை என்கிறதோ
தனித்தன்மை யோடுபல வண்ண இலைகொண்ட
தகுதியால் கைகாட்டி ஆகநின்றே!

***

கவிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்! உற்சாகத்துடன் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்துக்கொள்ள படைப்பாளிகள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 18-இன் முடிவுகள்

  1. வெற்றி வரியாளர், பாராட்டு வரியாளர், சிறப்பு வரியாளர் பங்கு பற்றிய அனைவருக்கும், தீர்பாளருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

  2. அனைத்துக் கவிதைகளும் மிக அருமை…மெய்யனின் ஹைக்கூ , வேதாவின் ஓசைநயம் மிகும் கவிதையும், சக்தியின் போதிமரமாய்க் காட்டும் கவிதையும் கொள்ளை கொள்கின்றன மனதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *