எம்மொழியின் மன்னவனே!

-சுரேஜமீ​​

தமிழன்று தவமிருக்கத்
தாயென்று நீயிருக்கத்
துள்ளிவந்து விழுந்ததுவே
தெள்ளுதமிழ்ச் சொற்களெலாம்!        Kannadasan

தரணிபுகழ் கொண்டதுவே
தமிழரெலாம் மகிழ்ந்திடவே
தலைவனென்று புகழ்ந்திடவே
தலைமுறையும் வணங்கிடவே

தன்னையுணர் மனிதரெலாம்
தலைநிமிர்ந்து வாழ்ந்திடவே
தக்கதொரு நூல்படைத்துத்
தனையறியச் செய்திட்டாய்!

தானழித்து ஊனழித்துத்
தமிழ்செய்த பெருந்தகையே
தலைவணங்கி வேண்டுகிறேன்
தமிழ்கொடுத்து வரமளிக்க!

கவியரசர் எனும்நாமம்
கண்டவரும் கொண்டாலும்
கண்ணதாசன் உனக்கீடு
காவியத்தில் யார்வருவார்?

எண்ணமெலாம் தமிழாக
ஏற்றதொரு பண்பாடி
எட்டுத்திக்கும் பரவிநிற்கும்
எம்மொழியின் மன்னவனே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.