பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: மென்கண்ணன் ஆளான் அரசு
எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
எம் கண் இனையர் எனக் கருதின், ஏதமால்;
தம் கண்ணரானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு.
பொருள் விளக்கம்:
(நீதி கூறுமிடத்து நடுநிலை தவறி) எனது கண் போன்றவர் இவர் என்றெல்லாம் கருதத் துணிந்தால் அது நீதிதவறும் குற்றமாகும். தமது கண்ணைப் போன்றவராகவே இருந்தாலும், தகாத குற்றச் செயலில் ஈடுபடுபவராக அவரைக் காண நேர்ந்தால், வன் கண்மையோடு சினந்து தண்டிக்கவேண்டும். தண்டிக்காது மென்மையாக மன்னித்து விடுபவர் அரசாளத் தகுதியற்றவர்.
பழமொழி சொல்லும் பாடம்: நடுநிலை தவறாமல் நீதிவழங்குவது அரசாட்சி செய்பவரின் கடமை. இதனைக் குறிக்கும் வள்ளுவர் வாய்மொழி,
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)
குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு தக்க தண்டனையை வழங்குவதே நேர்மை தவறாத செயலாகும் என்று அறிவிக்கிறது.