(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 18

R. சங்கர ஐயர்

amvஏழாம் வகுப்பில் அவனுக்கு விஞ்ஞானப் பாடம் எடுத்த ஆசிரியர் R. S. என்ற R. சங்கர ஐயர். மிகுந்த ஆசார சீலர். ஒழுக்கம் நிறைந்த அமைதியான மனிதர். பஞ்சகச்சமும், முழுக்கை சட்டையும் அணிந்து கழுத்தைச் சுற்றி அழகாக மடிக்கப்பட்ட ஒரு அங்கவஸ்திரமும் போட்டுக் கொண்டிருப்பார். சட்டையின் கழுத்துப் பகுதி மூடப்பட்டு, தொண்டைப் பகுதியில் ஒரு “டாலர்”ஐ மாட்டிக் கொண்டிருப்பார். அது அவரது தந்தையாரின் படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது தந்தையார் சன்யாசம் வாங்கிக் கொண்டவர். ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி என்பது சன்யாச ஆஸ்ரமத்தில் அவரது பெயர்.

“ஆர்.எஸ்.” சார் மாணவ மாணவியரிடம் ஒருபோதும் கோபப்படாதவர். அவரது வகுப்பை எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். காரணம், அவர் பாடம் நடத்திய பின்பு தினமும் ஒரு பத்து நிமிடங்கள் நல்ல நீதிக் கதைகளை ரொம்பவும் சுவாரஸ்யமாகச் சொல்லுவார். அவரது அந்தக் கதைகளைக் கேட்ட மாணவ, மாணவியர்கள் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல பாதையில்தான் செல்வார்கள். பள்ளிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும் உள்ளத்தில் பதியும் படிச் சொல்லும் நல்லாசிரியர்களில் அவர் ஒரு “ரத்தினம்”. அப்படி என்ன அவர் கதை சொல்லி விட்டார் என்கிறீர்களா? இதோ அவர் சொன்ன, அவன் நினைவில் உள்ள ஒரு சிறிய கதையைச் சொல்லுகிறான் , கேளுங்கள்.

amt
“உண்மையைச் சொல்லு, தர்மப்படி நட”

“அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் உள்ள அக்கிரஹாரத்தில் ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். அவர் தருமமும், நியாயமும் அறிந்த நல்ல மனிதர். அவரது வீட்டில் தினந்தோறும், வீட்டில் உள்ளவர்களைத் தவிர ஒரு பத்து பேர்களுக்காவது சாப்பாடு போடுவார்கள். இல்லை என்று சொல்லக் கூடாது என்ற குணம் கொண்ட குடும்பம். ஒரு நாள் அவரது வீட்டின் வாசலில் ஒரு அந்தணச் சிறுவன் “அம்மா சாப்பாடு போடுங்கோ” என்று, தனது கையில் ஒரு சிறிய பாத்திரத்தை ஏந்தியபடி நின்றிருப்பதைக் கண்டு, தனது மனைவியிடம் ,”யாரோ ஒரு குழந்தை பசிக் கரதுன்னு வாசல்ல நிக்கறான்…அந்த பிரும்பச்சாரிக் குழந்தையைப் பார்த்தா பாவமா இருக்கு..அவன உள்ள கூப்பிட்டு சாப்பாடு போடு” என்றார். அவரது மனைவியும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்து கை,கால்களை கழுவிக்கொண்டு வீட்டின் நடுக்கூடத்தில் வந்து அமரச் சொன்னாள். அதுபோலவே அந்தச் சிறுவனும் வந்து அமர்ந்து கொண்டான். அவனுக்கு முன்னால் ஒரு வாழை இலை போட்டு சாப்பாடு பரிமாறினாள் அந்த அம்மாள். அந்தச் சிறுவனும் சாப்பாட்டை வணங்கி விட்டு, சாதத்தைக் குழம்பு விட்டுப் பிசைந்து மெதுவாக முதல் கவளத்தை எடுத்துத் தனது வாயருகில் கொண்டு செல்லும் போது, அந்த வீட்டின் மற்றொரு அறையில் இருந்து “டங்..டங்” என்று ஒரு சத்தம் வந்தது. உடனே அந்தச் சிறுவன்,” கலக்கறா…கலக்கறா” என்று கத்தினான். அந்த நிமிடம் சத்தம் நின்றது. மீண்டும் அந்தச் சிறுவன் கையில் ஒரு கவளம் சாதம் எடுத்துத் தன் வாயருகில் கொண்டு செல்லும் போது அதே “டங்..டங்” சத்தம் கேட்டது. “கலக்கறா..கலக்கறா..” என்று மீண்டும் அந்தச் சிறுவன் கத்தினான். இப்போதும் அந்தச் சத்தம் நின்று விட்டது. அந்த வீட்டின் பெரியவர் அந்தச் சிறுவனிடம்,” என்னது கலக்கறா..கலக்கறான்னு கத்தறே” என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன்,” இந்த வீட்டில் யாரோ ஒரு ஆசாரி தங்கத்தில் செம்பைக் கலக்கறார்…அதனாலதான் கத்தினேன் ” என்றான். “உனக்கு எப்படி அது தெரியும்” என்று அந்தப் பெரியவர் கேட்டார். “எங்கப்பாவும் ஆசாரிதான்..நகைகள் செய்வார்…அதனால அந்தத் தட்டுகிற ஓசையிலேயே எவ்வளவு செம்பு தங்கத்தில் கலக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்” என்றான். “நீ ஏன் ஆசாரிப் பையன் என்று என்னிடம் சொல்லவில்லை” என்றார். “நீங்கள் என்னிடம் நீ யார் என்றே கேட்கவில்லையே” என்றான். உடனே பெரியவர் ,”சரி நீ முதல்ல சாப்பிடு..” என்று சொல்லிவிட்டு, பக்கத்து அறையில் தன்னுடைய வீட்டிற்கான நகைகளைச் செய்து கொண்டிருந்த ஆசாரியைக் கூடத்திற்கு அழைத்து வந்தார். “என்னப்பா நீ..தங்கத்தில் செம்பு கலந்தாயா..”என்று கண்டிப்பான குரலில் கேட்டார். தயங்கித் தயங்கி,” ஆமாம் ஐயா..” என்றார் அந்த ஆசாரி. “உன்னை நம்பி இந்த வேலையைத் தந்தேன்…நம்பிக்கை துரோகம் செய்துட்டயே..இனிமேல் நீ வேலை செய்ய வேண்டாம்…பண்ணின வேலைக்குக் கூலிய வாங்கிண்டு வீட்டுக்குப் போ” என்று அனுப்பி விட்டார். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த சிறுவனிடம் ,” நீ உண்மையச் சொன்னாய்..அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது…அதனால இந்த நகைசெய்யற வேலைய ஒன்னோட அப்பாவுக்குத் தரேன்..அவரைப் போய் இங்க கூட்டிண்டு வா…நீ நன்னாப் படி..ஒன்ன நானே படிக்கச் வைக்கறேன்…எப்போதும் உண்மையே பேசு…” என்று அந்தச் சிறுவனை அனுப்பிவைத்தார்.

எப்படி அரிச்சந்திரன் நாடகம் காந்தியின் மனதில் சத்தியம் பேச வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்ததோ அதேபோல அவனது “ஆர்.எஸ். சார்” சொன்ன இந்தக் கதையின் கருவும் அவன் உள்ளத்தில் ஆழப் பதிந்தது. அவன் பிற்காலத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற நாளில் அனைவரும் அவனை “நாணயமானவன்” என்று பரிசு கொடுத்துப் பாராட்டியதில் அவன் கர்வப்படவில்லை. அந்த “ஆர்.எஸ்.சாரின் பாதங்களையும், பெற்றோரின் பாதங்ககளையும்” மானசீகமாக நமஸ்கரித்தான்.

“ஸ்ரீ ஞானானந்த பாரதீ”

“ஆர்.எஸ்.சாரின்” மூத்த சகோதரர் திருநெல்வேலி வக்கீல் ஆர்.கிருஷ்ணசாமி ஐயர். ஒரு சிறந்த ஆன்மிகவாதி. தேர்ந்த எழுத்தாளரும் கூட. தமிழ், வடமொழி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நல்ல பாண்டித்யம் உள்ளவர். சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34 வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தவர். அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டதன் பலனாக தர்ம, நியாயங்களிலும், வேத சாஸ்திரத்திலும் ஆழமான பிடிப்புக் கொண்டிருந்தார். பிரபலமான வக்கீலாக இருந்த காலத்திலேயே (1965 ம் ஆண்டு) தனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டு சன்யாசம் வங்கிக் கொண்டார். அவருக்கு “ஸ்ரீ ஞானானந்த பாரதீ” என்று சன்யாசாஸ்ரமப் பெயர் வழங்கப்பட்டது. நீதிமஞ்சரி, வாசிஷ்டசாரம், குருகிருபா விலாசம், தேன்மொழிகள் போன்ற தமிழ் நூல்களும், The Saint of Sringeri, Dialogue with the Guru, போன்ற அற்புதமான ஆன்மிக நூல்களையும், மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார். அவர் 1975 ம் வருடம் தமிழ் நாட்டிலுள்ள “மன்னாடிமங்கலம்” என்ற கிராமத்தில் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைவதற்கு முன்பாக சிருங்கேரி ஜகத்குரு நாதர்கள் அனந்தஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள், அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் இருவரும் தங்களுடைய இராமேஸ்வரம் யாத்திரைக்குச் செல்லும் வழியில் மன்னாடிமங்கலத்திற்குச் சென்று அவருக்கு தரிசனம் தந்தனர். அவருடைய அதிஷ்டானத்தில் இப்பொழுதும் பூஜை, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகளின் நூல்களை எல்லாம் அவன் அடிக்கடி படித்துக்கொண்டே இருப்பான். முக்கியமாக “குருகிருபா விலாசம்” இரண்டாம் பாகம், நீதிமஞ்சரி போன்ற புத்தகங்களை அவன் விரும்பிப் படிப்பான். இந்தப் புத்தகங்களை சென்னையில் இருக்கும் “ஸ்ரீ ஞானானந்த பாரதி கிரந்த சமிதி” அறக்கட்டளை மூலமாக ஸ்ரீ ஞானானந்த பாரதி சுவாமிகளின் பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரன் ஆர்.சங்கரன் குடும்பத்தினர் வெளியிட்டு வருகின்றனர் .

“L. விஸ்வநாத ஐயர்”

அவனுக்கு ஏழாம் வகுப்பில் கணக்குப் பாடத்திற்கு எல்.விஸ்வநாத ஐயர் டியூஷன். அவர் அவனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கனிவும், கண்டிப்பும் உள்ள ஆசிரியர். அவனுக்கு அப்பா அவரிடம் ,” நம்ம கண்ணனுக்குக் கணக்குப் பாடம் சரியாப் புரியலைன்னு சொல்லறான்..ரொம்ப விளையாட்டுப் பிள்ளையா இருக்கான்.” என்று சொன்னார். அப்பொழுது அவர் ,” சுந்தரம் நீ ஒண்ணும் கவலைப் படாதே …அவன எங்கிட்ட அனுப்பு. நான் அவனுக்குச் சொல்லிக் கொடுக்கறேன்” என்றார். அடுத்த நாள் காலையில் ஆறரை மணிக்கு வடக்கு மாடத்தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அவன் டியூஷனுக்காகச் சென்றான். இன்னும் இரு மாணவர்கள் அங்கே இருந்தனர். நன்றாக மனதில் பதியும்படி அவர் சொல்லித் தருவார். அவரது கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பாடம் சொல்லித்தருவார். அவனுக்கு அப்பா அவரிடம் ,” அண்ணா .. டியூஷன் பீஸ் எவ்வளவு வேணும்?” என்று கேட்ட பொழுது அவர் கோபித்துக் கொண்டார். ” ஒங்கிட்ட நான் பணம் கேட்டேனா?” என்று அன்போடு கடிந்து கொண்டார். “இல்லை அண்ணா.”.என்று அவனுக்கு அப்பா இழுத்த பொழுது ,”ஒனக்கு முடிஞ்சதக் கொடு” என்று சொன்னார். அந்த மாதச் சம்பளம் வாங்கியவுடன் அவனுக்கு அப்பா அவனிடம் “ஐந்து ரூபாய்” தந்து,” இத இன்னிக்கு நீ டியூஷன் போகும் பொழுது சாரிடம் கொடுத்து நமஸ்காரம் பண்ணு” என்று சொன்னார். அவனும் அப்படியே செய்தான். “எல்.வி” சார் அதை சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டு,” இத பாரு கண்ணா..கணக்குப் புரியலைன்னா கேளு…சொல்லித்தரேன்..யாரப் பாத்தும் காப்பி அடிக்காதே…தெரியலைனா விட்டுடு..திரும்பத்திரும்ப நான் சொல்லிக் கொடுத்த கணக்குகளைப் போட்டுப் பாரு..” என்று கூறி நிறைய மாதிரிக் கணக்குகளைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். அடுத்தநாள் அதை சரிபார்த்து, ஒவ்வொரு படியாகச் சொல்லித்தருவார். விடுமுறை நாட்களில் ஒரு நோட்டுப் புத்தகம் முழுதும் பயிற்சிக் கணக்குகள் தந்து போடச் சொல்லுவார். அவன் படிக்கும் நேரத்தில் தெருவில் விளையாடுவதைப் பார்த்தால் உரிமையோடு கண்டிப்பார். இரண்டு வருடங்கள் அவரிடம் அவன் டியூஷன் படித்தான். அதன் பலன் எட்டாவது வகுப்பில் கணக்கில் நல்ல மார்க்குகள் வாங்கித் தேறினான். அதைவிட முக்கியமாக அவன் ஒருநாளும் யாரையும் பார்த்துக் காப்பி அடிக்கவும் மாட்டான். மற்றவர்களுக்கும் காட்ட மாட்டான். கணக்கின்மீது அவனுக்கு பயம் போய், ஆர்வம் வந்ததற்குக் காரணமே எல்.விஸ்வநாத ஐயரின் அணுகு முறைதான். டியூஷன் எடுக்கும் பொழுது அவருக்கு அவரது வீட்டில் குடிப்பதற்குக் “காப்பி” தருவார்கள். உடனே அவர் அவரது மகளிடம் ,” ஏடி…மதுரம் கண்ணனுக்கும் கொஞ்சம் காப்பி கொடு” என்பார். அதுபோன்ற அன்பான ஆசிரியர்களால்தான் அவன் வாழ்க்கைப் பாடத்தை நன்றாகக் கற்றுக் கொண்டான். வெறும் “ஐந்து ரூபாய்”க்காக அவர்கள் பாடம் நடத்த வில்லை. தன்னிடம் கற்ற மாணவன் வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்றும், இந்த ஏழைக் குழந்தை நன்றாக முன்னுக்கு வரவேண்டும் என்றுதான் அவர்கள் உழைத்தார்கள். அவரது மகள் மதுரம் அவனுக்கு சகோதரி பாலாவின் வகுப்புத் தோழி. அவருக்கு தர்மராஜன், சங்கர் என்று இரண்டு மகன்களும் உண்டு. எல்லோருமே அவனிடமும், அவனது குடுபத்தினரிடமும் இன்றுவரை அன்போடுதான் இருக்கின்றனர்.

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன், அது , ஆத்மா (18)

  1. Sri RS was also my teacher when I studied in tilak vidyalaya. My father iyengar sir (Lakshmipathi school, kallidaikurichi) was his close friend. Thanks a lot to enable me think of olden (golden) days.

  2. நமோநம:  ஸ்ரீ ஆர் எஸ் சார் தம்பதி போட்டோவை அச்சிட்டதர்க்கு மிக்க நன்றி . முதலியப்பபுரம் தெருவில் அவர் வீட்டில் நானும் ஓரிருவருடங்கள் ட்யூஷன் படிக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன் . சில சமயம் அவர் பெண் சாரதா அக்காவும் கிளாஸ் எடுத்துள்ளார். அதில் கணக்கில் ஒரு சந்தேகத்தை மிகவும் மனதில் பதியும் படி தெளிவாக சொல்லிக்கொடுத்தார். ஆர் எஸ் சார் குடுமியும்  வைத்திருப்பார் . அவர் பையன் ஸ்ரீ ரமணி தமிழ் புலவர். திலகர் வித்தியாலயத்தில் அவர் இயற்றிய  நிறைய பாட்டுக்கள்  ஆண்டு மலரில் வந்துள்ளன . ஸ்ரீ வாழவுகந்தாள், வடிவாம்பாள் முதலிய தேவிகளை பற்றி பாட்டுக்கள் இயற்றயுள்ளார்.அவர்கள் வீட்டு நவராத்திரி கொலு, சுவர்களில் மாட்டியுள்ள இராமாயண காலண்டர்கள், முதலியவை மிகவும் நுணுக்கமான கலை நயம் நிரம்பியவை . வண்ணாரப்பேட்டைக்கு மாற்றல் ஆகி குடும்பத்துடன் சென்று விட்டாலும் அவ்வப்போது வருவார்கள். ஸ்ரீ முருகா அகண்டநாமத்தில் அவர் சவுக்கை வைத்துக்கொண்டு ஆடி வருவார். அவர்கள் எதிர் வீட்டு காசி ஐயர் ஆத்து மாமி ஸ்ரீ ஆர் எஸ் சாரின் சஹோதரி ஆவார். காசி ஐயார் காலமானதும் உடன்கட்டை ஏறும் சம்ஸ்காரத்திற்கு சமமாக ருத்ரபூமி வரை சென்று சந்தனக்கட்டையை எரியூட்டி அதன் பின் தன் வீட்டில் ஒரு ரூமிற்குள்ளேயே அடைந்து கிடந்து காலத்தை கழித்தவர் .

    ஆரெஸ் சார் மாமி ,ஆரெஸ் சார் வீடிற்கு அடுத்த வீட்டு முத்துப்பொண் வீட்டு சீதா மாமி மற்று என் அம்மா ( VR கோமா ) மூவரும் சேர்ந்து  போட்டோ எடுத்துக்கொள்ளும் அளவிற்கு மூவரும்  நெருக்கமானவர்கள் . 

    பிற்காலத்தில் ஸ்ரீ ரமணி கபீர்தாஸ் சுப்ரமணியன் என்ற பெயரில் ஹைதராபாத்தில் தன் பையனுடன் வசித்து வந்தார். உபன்யாசம் முதலியவை செய்வார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.