– புலவர் இரா.  இராமமூர்த்தி.

காலம்தோறும் புதுப் புதுப் பொருள்தருவது நல்ல நூலுக்குரிய தனித்தன்மை! திருக்குறள் உருவான காலத்தில் முடியாட்சிமுறையே நாட்டில் நிலவியது! சேர சோழ பாண்டியர் அரசாண்டகாலம்தான் அது. ஆனால் திருவள்ளுவர் இந்த மூவேந்தர்களைப் பற்றிய எந்தக் குறிப்பையும் தம் நூலில் குறிப்பிடவில்லை! அது மட்டுமல்ல தமிழ் மொழியிலேயே எழுதப் பெற்ற திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இல்லை. இதற்குக் காரணம், இந்த நூல் எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் உரிய பொது மறை என்பதை நுட்பமாக விளக்கவே என்பதாகும்!

இந்த நூல், முதற்குறள், ‘அகர’ எனத் தமிழின் முதல் எழுத்தில் தொடங்கி, இறுதி 1330- ஆம் குறளில் ‘பெறின்!’ என்ற ஈற்றுச்சீர் தமிழ் மொழியின் இறுதிஎழுத்தாகிய ‘னகரத்தில் நிறைவு பெறுகிறது. அதனால் இந்த நூலின் மொழி தமிழே என்பதை வள்ளுவர் நுட்பமாகப் புலப்படுத்துகிறார். மேலும், கடவுள் வாழ்த்தில் எந்தக் குறிப்பிட்ட மதத்துக்கும் உரிய கடவுளர் பெயரைக் குறிக்கவில்லை; ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற பொதுவான பெயர்களால் மட்டுமே இறைவனைப் பற்றி அறிமுகம் செய்கிறார்! அதனால் இந்நூல் எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்பதை புலப் படுத்துகிறார்! ஆனால் இதே அதிகாரத்தில் கடவுளின் மாணடி , நற்றாள், தாள், இறைவனடி என்ற சொற்களால் இறைவனின் திருவுருவத்தையும், அவன் திருவடியையும் குறிப்பிட்டு இந்துக் கடவுளரின் உருவ வழிபாட்டை நுட்பமாகப் புலப்படுத்துகிறார்! அதனால் இந்த நூல் இந்தியநாட்டில் , சிறப்பாகத் தமிழ் நாட்டில் நிலவிய இந்துமதம் சார்ந்த நூல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்! மேலும் இந்துசமய இதிகாச புராண வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த தொடர்களையும் ஆங்காங்கே அமைத்துப் பாடுகிறார்!

இராமாயணம் இந்திய தேசத்தின் உயர்ந்த இதிகாசம். இந்தக் கதை இந்திய நாடெங்கும் பரவி, எல்லா மொழி மக்களாலும் புரிந்து கொள்ளப் பெற்றதாகும். இதனை சமஸ்கிருத மொழியில் வான்மீகியும், தமிழ் மொழியில் கம்பரும், இந்தியில் துளசிதாசரும், தெலுங்கிலும், மலையாளத்திலும் பலராலும் எழுதப் பெற்றுப் படித்துப் புரிந்து கொள்ளப் பெற்றது! இந்த இராமாயணத்தின் கதைத்தலைவராகிய இராமர், கடவுளின் அவதாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட கதை நிகழ்ச்சி நமக்குப்
புலப்படுத்துகிறது! அதாவது இராமன் விசுவாமித்திர முனிவருடன் முதன் முதலாக மிதிலை நகர் நோக்கிச் செல்லும்போது, அவருடைய கால்தூசு பட்டுக் கல்லாய்க் கிடந்த அகலிகை சாப விமோசனம் பெற்று எழுகிறாள்! இந்த நிகழ்ச்சியைப் பழந்தமிழ் இலக்கியமாகிய பரிபாடலின் பத்தொன்பதாம் பாடல் குறிப்பிடுகிறது.

‘‘இந்திரன், பூசை; இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது‘ என்று உரை செய்வோரும்:
இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம்,”

இப்பகுதியில் அகலிகை, கவுதம முனிவன் ஆகியோர் வரலாறு கூறப்படுகிறது. கவுதம முனிவன் கொடுத்த சாபத்தால் அகலிகை கல்லாய் மாறிக்கிடந்த காட்சி அந்த எழுநிலை மாடத்தில் ஓவியமாய்த் திகழ்ந்தது! இதனைத் திருவள்ளுவர் அறிந்து கொண்டு, ஒரு குறட்பா இயற்றியுள்ளார்! அக்குறள்,

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி!

என்பதாகும். மற்றும்,

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை

என்ற குறட்பாவும், இந்திர பதவி பெற்ற நகுஷன் தன சிவிகையைத் தாங்கி வந்த குறுமுனி அகஸ்தியரை , ”விரைந்த,விரைந்து ” என்ற பொருளில் ”சர்ப்ப, சர்ப்ப” என்றான். அகத்தியர் அவ்வாறே நீ சர்ப்பம் ஆவாயாக என்று சபித்தார். அறவோராக விளங்கிய அகஸ்திய முனிவர் அன்போடு சிவிகை சுமந்தார்; ஆனால் சிவிகை மேலிருந்த நகுஷன் அறவுணர்வு சிறிதுமில்லாமல், அன்பின்றி முனிவரை ஏவினான். சிவிகை பொறுத்த அகத்தியர் மூலமும், சிவிகை ஊர்ந்த நகுஷன் மூலமும் அறத்தின் நெறி இதுவென்று நம்மால் விளங்கி கொள்ள இயலாது.

இவ்வகையில் இந்திய இதிகாச புராணங்களைத் திருவள்ளுவர் தேவையான விளக்கம் தர எடுத்துக் கொண்டார்; இனி அவர் இயற்றிய வேறொரு திருக்குறளுக்குப் புதிய விளக்கம் காண்போம்! வாமனனாக வந்த திருமால் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டார். அவருடைய வாமன உருவம் குட்டையானது. அந்த உருவத்தின் காலடியால் மூன்றடி நிலம் என்பது மிகவும் சிறியது! ஆனால் அதே திருமால் திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்த போது , இரண்டடியால் மூன்று உலகங்களையும் அளந்தார்; பின்னர் மூன்றாம் அடி வைக்க இடமில்லாமையால் மகாபலி தன் தலையையே தந்தான்! இங்கே,
அனைத்துலகங்களையும், மகாபலி தலையையும் அளந்து எடுத்துக் கொண்ட திருமால் வஞ்சனை செய்தார்; ஆனால் எவ்வித வஞ்சனையும் செய்யாமல் ஓர் அரசன் சோம்பலின்றி அரசாண்டால், அவன மிக எளிதாகத் திருமால் வஞ்சனையால் அடைந்த மூவுலகங்களையும் தப்பாமல் அடைவான், என்று திருவள்ளுவர் கூறுகிறார். அக்குறள்,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு!

என்பதாகும். இக்குறளுக்குப் பொருள் காணும் போது, அடியளந்தான் (வஞ்சனையால்) தாஅயதெல்லாம் ஒருங்கே , மடியிலா (வஞ்சனையில்லாத) மன்னவன் எய்தும் என்று பொருள் கொண்டால், மடியில்லாதவன் வஞ்சனை செய்யாத அறவோனாகவும் விளங்குவான் என்பது புலனாகும்! மடிஎன்னும் சோம்பலுடையவனிடம் மிக்க வஞ்சனை புரியும் மூதேவி தங்கிவிடுவாள்; ஆனால் சோம்பலற்றவனின், முயற்சியாகிய தாளின்கீழ் திருமகளே உறைவாள்” என்ற பொருளில், அடுத்த அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் குறளைப் பயின்றால் மடியின்மையுடன் அறவுணர்வு நீங்காமல் இருக்கும் என்பது புலனாகும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *