Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(155)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இனியதோர் வாரத்தில், இதயத்தில் உருளும் இனிமையான உணர்வுகளின் துணையோடு மீண்டும் உங்களோடு உறவாட விழைகிறேன்.

    இந்தவாரம் அதாவது எம் கண் முன்னே கடந்து சென்ற வாரம் தன்னோடு சுமந்து சென்ற பெருமையென்ன ?

    தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கேயுரிய அந்தஸ்தோடு கோலோச்சிய எமது கவியரசர், கவிதைக்கோமகன் கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தை தனக்குள் தாங்கிச் சென்ற ஒரு உன்னதமான வாரம்.

    புலம்பெயர்ந்து அந்நியநாடுகளை தமது சொந்தநாடுகளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் லட்சோப லட்சம்.

    இவர்கள் புலம்பெயர்ந்ததற்கான காரணங்கள் பல. குறிப்பாக இலங்கைத் திருநாட்டைச் சேர்ந்த எனது ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் யுத்த காலங்களில் அங்கு பாதுகாப்பாக வாழமுடியாத சூழலினால் இடம் பெயர்ந்தவர்கள் பலர்.sakthi.sakthithasanஎன்னைப் போன்ற நிலையிலுள்ள பலர் தமது உயர் கல்வியை பல்வேறு காரணங்களினால் தொடரமுடியாமல் வெளிநாடுகளில் தமது உயர் கல்விக்காகப் புலம் பெயர்ந்து பின்னர் அந்நாடுகளின் சூழல்களில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்ட காரணத்தினால் தொடர்ந்தும் தமது வாழ்வை அந்நாடுகளிலே தொடரும் நிலை.

    அப்படிப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறை அவர்கள் வாழும் அந்தப்புலம் பெயர் மண்ணையே தமது தாய் மண்ணாகக் கருதி வாழும் ஒரு நிலை காணப்படுகிறது.

    இந்தச் சூழலிலே தாய்நாட்டின் ஏக்கங்களையும், தமிழின் மீது கொண்ட காதலின் கனத்தையும் தமது இதயங்களிலே சுமந்து வாழும் அம்மக்களோடு கவியரசர் பின்னிப் பிணைந்திருப்பது காலத்தால் மாற்ற முடியா உண்மை.

    அவரது பாடல்கள், அப்பாடல்களில் புதைந்துள்ள எளிமையான கருத்துக்களின் ஆழம் என்பன தமது தாய்மண்ணைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாகி நிற்கும் பல உடன்பிறப்புகளின் உள்ளத்தின் ரணங்களுக்கு களிம்பாகிறது என்பது வெள்ளிடை மலை போலத் தெரிகிறது.

    ஒரு திரைப்படப் பாடலாசிரியர் எனும் பணியினால் உயர்ந்து நவீன கால தமிழன்பர்களுக்கு கண்ணதாசன் என்றால் தமிழ் எனும் வகையில் அவரை அவர்களுடன் இணைத்து வைத்துள்ள உண்மை புலனாகிறது.

    அவர் வரைந்த காதல் பாடல்கள் பல, சோகப் பாடல்கள் பல , தத்துவப் பாடல்கள் பல. ஆனால், இவைகள் அனைத்திலும் புதைந்துள்ள சிலவரிகளை எடுத்துப் பார்த்தால் அவை எமது மண்ணைப் பிரிந்த எமது ஏக்கப் பிரதிபலிப்புகளை எடுத்துக்காட்டுபவை போல அமைகிறது.

    அப்போது நான் லண்டன் வந்த ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும். தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தந்த இருள் நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்க இலண்டன் நகர பனிக்கால இருளோடு குளிரும் இணைந்து உடலை வாட்டும் ஒரு இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.

    அப்போது கை எனது கட்டிலருகே தலைமாட்டில் எப்போதும் எனக்குத் துணையிருக்கும் ஒரு டேப்ரிக்கார்டரைத் தட்டி விட்டது.

    காதல் சிறகைக் காற்றில் விரித்து
    வானவீதியில் பறக்கவா ?

    எனும் கவியரசரின் அழகிய வரிகளோடு சுசீலா அம்மாவின் குயில் குரல் ஒலித்தது. மனம் பாட்டின் வரிகளோடு லயித்தது. கவிதைபால் நாட்டம் கொண்டிருந்ததாலோ என்னவோ எப்போதும் மனம் பாட்டின் இசையை ரசித்தாலும் அதன் பொருள் தேடி ஏங்கும்.

    அப்போது ,

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா
    இரு கை கொண்டு வணங்கவா

    kdasan1எனும் வரிகள் ஒலித்தது. என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆமாம் எனது தாய்மண்ணின் பிரிவோடு நான் அவ்வரிகளை இணைத்துப் பார்த்தேன். பல்லாயிரம் மைல்களுக்கப்பால் தாய்மண்ணை விட்டுப் பிரிந்து இருக்கும் நான் எப்படி என் தாய்நாட்டை அக்கணத்தில் அடைவேன்? எண்ணங்களினாலே பாலம் அமைப்பது ஒன்று மட்டும்தானே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஒரு புலம்பெயர் மாணவனால் இயலும், அதைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

    எத்தனை காலம் பிரிந்து இருந்தேன் என் தாய்மண்ணை அதை எண்ணிக் கண்ணீர் வடிப்பது ஒன்று தானே அப்போது உணர்வுகளை ஆற்றிக் கொள்ள ஒரே வழியாகிறது. அதுதான் கவியரசரின் மகத்துவம். எளிமையான வரிகள் அதனுள் எத்தனையோ வகைகளில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆழமான கருத்துக்கள்.

    மற்றுமொரு இனிய பாடல் …

    ஆண் நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

    ஆமாம் இது போன்ற கவியரசரின் பாடல்கள்தான் என் போன்ற புலம் பெயர்ந்தவர்களை மிகவும் கடினமான தாய்நாட்டு ஏக்க காலங்களில் கரை சேர்க்க உதவியது. காலத்தால் அழியாத கவிஞன், எத்தனையோ நாடுகளில் வாழும் எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த தமிழர்களால் இன்றும் போற்றிப் பேசப்படும் ஒரு ஈடற்ற படைப்பாளி.

    அவரது இந்தப் பிறந்த தின வாரத்தின் வாயிலாக அவரை நினைவுகூற கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    ”பூஜையின் வேளை புகுந்த மனக்கரடி
    யோஜனை செய்யும்அ யோக்கியனே, -வாசனையாம்(பூர்வ வாசனைகள்)
    எண்ணம் தொலைத்தந்த ஏகாந்தம் வாய்த்திட,
    கண்ணன்கை கன்னக்கோல் காப்பு”….

     
    ”வாஸனாதி கர்மங்கள் பூசிமகிழ் பூர்வநெஞ்சே
    தேசம்நூற் றெட்டுடைய தேவனை -யோசனையில்
    வைத்து வழிபட்டுக் கைத்தலத்தால் கும்பிடப்
    பொய்த்திடும்ஐம் பூதப் புதிர்”….

    ”போலெ’ன்(று) உவமை புகல முடியாது
    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று
    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா
    எந்தனை கன்றாக ஏற்பு”….கிரேசி மோகன்….

    Share
  • மாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் — 4

    ஒரு அரிசோனன்

    நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்;  எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்தோ செயல்படுத்த மொழி வேண்டும்.  மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம்.  குமுகம் மட்டுமல்ல, செயல்படும் அனைத்தின் இணைப்புப் பாலமும் கூட.  மொழி ஒளியாகத்தானே வெளிவருகிறது!

    அந்த ஒலியின் முதல் ‘அ’தானே!

    அந்த ‘அ’காரமே மிகச் சுருக்கமாக ‘அ’காரத்தை அறிந்தவன், விஸ்வாநரன் என்று சொல்லப்படும், விழித்திருக்கும் நிலையில் உள்ள ஆத்மனின் முதல் பகுதியை அறிந்தவன், அதற்கேற்பச் செயல்பட்டால் [நனவு நிலையில்] விருப்பப்பட்டதை அடையலாம் என்று பூடகமாகச் சொல்லுகிறது உபநிஷத்து…

    mu10

    ஸ்வப்னஸ்தா2னஸ்தைஜஸ உகாரோ த்3விதீயா மாத்ரோத்கர்ஷாது3ப4யத்வாத்3வோத்கர்ஷதி ஹ வை ஞானஸந்ததிம் ஸமானஸ்ச ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ய ஏவம் வேத3||                                                          —  10

    கனவு நிலையில் இருக்கும் தைஜஸன் இரண்டாம் ஒலியான [எழுத்தான] ‘உ’காரமாக உயர்ந்த நிலையிலும், இடைநிலையிலுமே இருக்கிறான்.  யார் இவ்வாறு அறிகிறானோ அவன் ஞான வழிமரபை உயர்த்துகிறான்.  சமமானவனாகவும் ஆகிறான்.   அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார்.        – 10

     பதவுரை: ஸ்வப்னஸ்தான: – கனவுநிலையில் இருக்கும்; தைஜஸ: – தைஜஸன்; த்விதீயா மாத்ரா – இரண்டாம் ஒலியான [எழுத்தான];  உகார: – உகாரமாக [அ என்னும் ஒலியாக]; உத்கர்ஷாது – உயர்ந்தவனாகவும்; உபயத்வாது ஹ வை  – இடையில் இருப்பவனாக்கவுமே இருக்கிறான்; ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; ஞான சந்ததிம் – ஞானவழி மரபை; உத்கர்ஷதி – உயர்த்துகிறான்; ஸமான: ’ச – சமமானவனாகவும்; ப4வதி –  ஆகிறான்;  அஸ்ய குலே – அவனது வழித்தோன்றல்களில்; அ ப்ரஹ்மவித் – பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் ; ந ப4வதி –  இருப்பதில்லை..

    விளக்கம்:  இரண்டாம் ஒலியான ‘உ’காரமானது உயர்ந்தவனும்,, இடைப்பட்டவனுமான ஆத்மனின் இரண்டாம் பகுதியான தைஜஸன் என்று உபநிஷத் உரைக்கிறது.

    அத்துடன் இவ்வுண்மையை உணர்ந்து அறிபவன் ஞானவழி மரபை உயர்த்துவதோடு மட்டுமல்லாது, அனைவருக்கும் சமமானவன், என்றும் சொல்கிறது.

    சமமானவர் என்றால் யார் என்று பார்ப்போம்.

    சமம் என்றால் உயரத்திலா, எடையிலா, நிறத்திலா, அறிவிலா, திறமையிலா, செல்வத்திலா, மற்ற  எதில் சமம்?

    ஆத்மனே பரம்பொருள் என்றும், இருந்தது, இருப்பது, இருக்கப்போவது எல்லாமே ஓங்காரம்தான், ஓங்காரமே பரம்பொருள் என்றால் ஆத்மனின் பகுதிகளும் சமமாகத்தானே இருக்கவேண்டும்!  அதுமட்டுமா? வெளியுலகில் அறிந்த அனைத்தும் கனவுநிலையில் நுண்ணறிவாகத்தானே புலப்படுகின்றன!  அந்த ஒளிமயமான எண்ணப் பதிவுகளில் அனைத்தும் சமமே!  எல்லா அறிவுகளும் அங்கு ஒன்றன்மேல் ஒன்றாக வந்து பதிகின்றன.  கனவுலகமே ஒரு ஒளிமயமான நூலகம்.அங்கு எல்லா அறிவுகளும் உள்ளன.  அறிவின் முன்னர் அனைத்தும் சமமே.  ஏழை-பணக்காரன், ஆண்-பெண், பலசாலி-வலிமையற்றவன் என்ற வேறுபாடே கிடையாது.இவர்கள் அனைவரின் அறிவும் அங்கு நிறைந்துள்ளது.  நினைவுகளின் முன்பு அனைவரும் சமமே.  இந்த அறிவின் கருவூலமான தைஜஸன் அனைத்துக்கும் சமமானவன்.

    ஞானவழி மரபை உயர்த்துபவன் என்றால்…

    சந்ததி என்றால் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைகள் என்றுதானே பொருள், ஞானசந்ததி என்றால் அறிவுள்ள குழந்தைகள் என்றுதானே புரிந்துகொள்ளவேண்டும், ஞானவழி மரபு என்ற புதுப் பொருள் கொடுத்தால் எப்படி என்று கேள்வி எழலாம்.

    teacher and studentsஒருவர் தன்னிடம் இருக்கும் அறிவை இன்னொருவருக்குப் புகட்டினால் புகட்டுபவர் புகடப்படுபவருக்குத் தந்தை ஆகிறார்.  எனவேதான் ஆசானைத் தந்தை என்றும் சொல்லப்படுகிறது.

    இதெல்லாம் பத்தாம்பசலித்தனம், ஆசானாவது, தந்தையாவாது, இதெல்லாம் பேத்தல், அறிவுக்கு ஒவ்வாதது என்றுதான் இன்றைய அறிவியல் வாதிக்கும்.  நாம் ஒன்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்.  கல்விக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்துகிறோம்;  அதில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு நமக்கு கல்வி கற்பிக்கிறார்கள்.  அதற்காக அவர்களை நமது பெற்றோருக்கு இணையாகக் கருதமுடியுமா என்றுதான் கேள்வி வரும்.

    இந்தக் கேள்வியெல்லாம் நான் காசு கொடுக்கிறேன், எனக்குக் கல்வி போதிக்கப்படுகிறது;  எனவே, எனக்குக் கல்வி கற்பிப்பவர்கள் எனது வேலைக்காரர்கள் என்ற மனநிலையால் ஏற்படும் மயக்கமேயன்றி வேறொன்றுமில்லை. எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் கல்வி தானாக வந்துவிடாது. ஆசான், மாணவர் இருவருமே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு அக்கறையோடு செயல்பட்டால்தான் அது கல்வியாகும்.  அதனால்தான் கல்விக்கூடத்தை ஊட்டி வளர்க்கும் அன்னை [Alma-mater] என்றழைக்கும் பழக்கம் இருக்கிறது.  கல்விக்கூடத்தை அன்னை என்றால், கற்பிப்பவர்கள் தந்தையாகவும், தாயாகவும்தானே ஆகமுடியும்.

    அதனால்தான் இங்கு சந்ததி என்பதற்கு மரபு என்ற பொருள் பகரப்படுகிறது.  ஆத்மனின் அறிவின் கருவூலம் என்று அறிபவர் அனைவரையும் சமமாகத்தான் கருதுவார் அறிவை, ஞானத்தை அனைவருக்கும் சமமாக வழங்குவார்; ஞானவழி மரபை உயர்நிலைக்குக் கொண்டுவருவார்.  அதுவே இந்தச் சொற்றொடர் மூலம் விளங்குகிறது.

     அவனது வழித்தோன்றல்களில் பரம்பொருளை [பிரம்மத்தை] அறியாதவர் இருக்கமாட்டார் என்று பதவுரை தருகிறீர்களே, குலம் என்றுதானே போட்டிருக்கிறது, குலம் என்றால் சாதிதானே, இந்த உபநிஷத்து மறைமுகமாக சாதி உணர்வைத்தானே வளர்க்கிறது, அதை மறைக்க வழித்தோன்றல் என்று பொருள் கொடுத்து அதை மறைக்கலாமா என்று ஒரு கேள்வியும் எழலாம்.

    அதற்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.mother and child

    தாய்க்குலம் என்று சொல்கிறோமே, அப்படியென்றால் தாய் என்பது ஒரு சாதியா, இல்லையே!  பெண்கள் அனைவரும் தாய் ஆகிறார்கள், எனவே அவர்கள் அனைவரையும் ஒருமைப்படுத்தி, தாய்க்குலம் என்று வழங்கப்படுகிறது.  அதுபோலத்தான் ஒரே மாதிரியானவர்களைக் குலம் என்று சொல்லப்படுகிறது.

    இங்கும் அதேமாதிரியான கருத்துடன்தான் குலம் என்று கூறப்படுகிறது.

    மெய்ஞானத்தால் பரம்பொருளை அறிய இயலும் என்னும்போது, அப்படிப்பட்ட அறிவை, ஞானத்தைக் கற்பிப்பவர்கள் அந்த அறிவை வாழையடி வாழையாகத் தனது சீடர்களுக்குக் கற்பிக்கிறார்கள.  எனவே அந்த மெய்ஞானத்தை அறிபவர்களின் குமுகம், கூட்டம், குழு, வழித்தோன்றல்கள் [வழிவழியாக மெய்ஞானத்தைக் கற்பவர்கள்] பரம்பொருளின் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள் என்று உபநிஷத்து உரைக்கிறது…

    இங்கு ஆதி சங்கரரின் விளக்கத்தையும் அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இரண்டாம் எழுத்தான ‘உ’காரத்திற்கும், தைஜஸனுக்கும் என்ன ஒற்றுமை?  ஒரு பொதுவான சிறப்பியல்பாக உயர்வைச் சொல்லலாம்.  ‘உ’ என்ற ஒலி ‘அ’வைவிடச் உயர்ந்தது[1].  அதைப்போலவே தைஜஸன் வைஸ்வாநரனைவிட உயர்ந்தவன்[2].  இன்னொரு பொதுவான சிறப்பியல்பாகச் சொல்லக் கூடியது – ‘உ’, ‘அ’வுக்கும், ‘ம்’க்கும் இடையில் இருக்கிறது;  அதுபோல, தைஜஸனும், வைஸ்வாநரனுக்கும், ப்ராக்ஞனுக்கும் இடையில் இருக்கிறான். 

    இப்பொழுது இந்த அறிவின் [ஞானத்தின்] விளைவு, பயன் விளக்கப்படுகிறது.  அறிவு – ‘உ’காரத்தை இனம் கண்டுகொண்டதனால் ஏற்படும் அறிவு – எப்பொழுதுமே அதிகமாகிறது.  அதாவது, அவனது அறியும் திறன் மிகவும் அதிகமாகிறது.  இவ்வறிவு பெற்றவன் அனைவராலும் அவ்வாறே [அறிவாளி என்றே] அறியப்படுகிறான் அவனது நண்பர்களைப் போல அவனது எதிரிகளும் அவனைக்கண்டு [அவனது அறிவைக்கண்டு] பொறாமைப் படுவதில்லை. மேலும், இவனது மரபில் [இவனிடம் அறிவைப் பெற்றவர்கள்] பரம்பொருளை அறியாதவராக இருக்கமாட்டார்கள்.

    [1] ‘அ’ என்னும் ஒலி முதலில் வருவதால் அது அனைத்து ஒலிகளைக் காட்டிலும் உயர்ந்ததானாலும், ‘அ’வுக்குப் பின்னால் வருவதால் ‘உ’ உயர்ந்தது என்று மறைமுகமாக எண்ண வாய்ப்பிருக்கிறது.

    [2] விஸ்வாநரன் தூலப் பொருள்களையே [ஐம்புலன்களால் உள்ளி உணர்வதையே] விரும்புவதாலும், அவனது அறிவு தூலப் பொருள்களையே நம்பி இருப்பதாலும், நுண்ணுணர்வு மூலம் அனைத்தையும் அறியும் தைஜஸன் விஸ்வாநரனைவிட உயர்வாக அறியப்படுகிறான்.

    mu11

    ஸுஷுப்தஸ்தா2ன: பராக்ஞோ மகாரஸ்த்ருதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இதஹும் ஸர்வமபீதிஸ்ச ப4வதி ய ஏவம் வேத3 ||                                                            —  11

    அளப்பதினாலும், ஒன்றியதாலும், ஆழ்உறக்க நிலையினான  அறிவாளி [ப்ராக்ஞன்] உண்மையில் ‘மூன்றாம் ஒலி[எழுத்து]யான ம’காரமே [‘ம்’ என்ற ஒலியே]. எவன் இவ்வாறு அறிகிறானோ [அவன்] இவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டு தன்னுள் ஒடுங்குகிறான்.                                                                                                                                     – 11

    பதவுரை: ஸுஷுப்தஸ்தான: – ஆழ்உறக்கநிலையில் இருக்கும்; ப்ராக்ஞ: – பிராக்ஞன் [அறிவாளி]; மிதே: அபி – அளப்பதினாலும்; அபீதே: வா – உள்ளே ஒடுங்குவதலுமே த்ருதீயா மாத்ரா – மூன்றாம் ஒலியான [எழுத்தான];  மகார: – ‘ம’காரமே [ம் என்னும் ஒலியே]: ய:: – எவன்;  ஏவம் வேத – இவ்வாறு அறிகிறானோ; இதஹும் சர்வம் – இவை எல்லாவற்றையுமே; அபீதி: ச – உள்ஒடுங்குபவனாகவும் பவதி – ஆகிறான்; மினோதி ஹ வா  – நிச்சயமாக உள் அளப்பவனாகவும் [ஆகிறான்].

    விளக்கம்:  நாம் எதிர்பார்த்தபடி மூன்றாம் ஒலியான ‘ம்’ ஆத்மனின் மூன்றாவது பகுதியான பிராக்ஞன் என்று உபநிஷத்தின் பதினொன்றாவது சொற்றொடர் செப்புகிறது.  முந்தைய சொற்றொடர்களைப் போலவே, பிராக்ஞனுக்கும் இரண்டு குணங்களைக் குறிப்பிடுகிறது – அளப்பவன், உள்ளே ஒடுங்குபவன் அல்லது ஒன்றுபவன்.

    அளப்பவன் என்றால் எதை அளக்கிறான்?  எங்கு ஒன்றுகிறான்?

    ஆழ்உறக்க நிலையில் உள்ளே இறையுடன் ஒன்றுகிறான் என்றான் ஒருவகையில் ஒப்புக்கொள்ளலாம்.  ஆனால் எண்ணங்களின் குவியல்களாக இருக்கும் பிராக்ஞன் எதை அளக்கிறான்?

    ஆதி சங்கரர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.sankaracharya

    ஒரு பயிர் வளரும்போது அது பலவிதமாக அளக்கப்படுகிறது.  முதலில் விதையாக இருக்கும் அது, தூவப்பட்ட இடத்தில் முளைவிட்டு நிலத்தைவிட்டு வெளிக்கிளம்புகிறது.  பிறகு நாற்றாக இருக்கும்போது அது இருக்கும் இடத்தைவிட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு சரியான இடைவெளிவிட்டு, நன்கு வளரும்படி நடப்படுகிறது.  அப்படி நடப்பட்ட பயிர் நன்கு வளர்ந்து, பூத்துக் கதிர்விடுகிறது.  இவை அனைத்தையும் குடியானவன் கவனித்து, பயிரின் வளர்ச்சியை அளந்து, அதற்கு நீர்பாய்ச்சுகிறான். அவன் ஆதிக்கமாகவும் நீர் பாய்ச்சுவதில்லை, குறைத்தும் விடுவதில்லை.  சரியான அளவுக்கே நீர் பாய்ச்சுகிறான்.  நாற்றைப் பிடுங்கி நடும் முன்னரும், அது சரியான அளவுக்கு வரந்திருக்கிறதா என்று அளவிட்டபின்னே அதைச் செய்கிறான்.

    கதிர் முற்றியபின்னரும், அது அறுவடை செய்யத்தக்க நிலையை அடைந்துவிட்டதா என்று அளந்தபின்னரே அதை மேற்கொள்கிறான்.farmer

    அதைப்போலவே வைஸ்வாநரனும், தைஜஸனும் அவர்களது பரிணாம வளர்ச்சியின்போதும், உள்ஒடுங்கி, ஆழ்உறக்கத்தில் ஒன்றி பிராக்ஞனாக பரிணாம மாற்றமடையும்போதும் பிராக்ஞநால் அளக்கப்படுகிறார்கள்.

    அதேமாதிரி ஓம் என்னும் சொல்லில் உள்ள அகாரமும், உகாரமும் ஒன்றி ஓகாரமாகி ‘ம்’முடன் ஒன்றுவதையே இச் சொற்றொடர் குறிக்கிறது.  மீண்டும் ஓங்காரத்தை ஒலிக்க, மகாரத்திலிருந்தான் – ‘’ம்’ என்னும் ஒலி நின்றபின்னரே, அகாரமும், உகாரமும் வெளிக்கிளம்புகின்றன.

    இன்னொருவிதமாக விளக்கினால், விழித்திருக்கும்போது ஆத்மனாகிய நாம் வெளியுலகிலிருந்து பெரும் அத்துணை உணர்வுகளும், அறிவுகளும், கனவுறக்க நிலையில் அதே ஆத்மனாகிய நாம் காணும் ஒளிமயமயமான நுண்ணுணர்வுகளும், தோற்றமற மறைந்து, ஆழ்உறக்க நிலையில் இருக்கும் ஆத்மனாகிய நம்மிடம் ஒடுங்கிவிடகின்றன —  மீண்டும் நாம் நனவு, கனவு நிலைக்குத் திரும்பும் வரையும்.

    எனவே பிராக்ஞன் வைஸ்வாநரன், தைஜஸன் இவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், அறிவுகள் இவையெல்லாம் வைக்கப்படும் ஒரு கொள்கலமாக ஆழ்உறக்கநிலையில் இருக்கும் பிராக்ஞன் ஆகிறான்.

    அதாவது வைஸ்வாநரனும், தைஜஸனும் ஆழ்உறக்க நிலையில் பிராக்ஞனுடன் ஒன்றி விடுகிறார்கள் —  ஒடுங்கிவிடுகிரார்கள் – ஒன்றாக ஆகிவிடுகிறார்கள்…merging atmans

    இப்படி எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்குகிறது என்றால் என்ன, ஓங்காரத்தின் ஒவ்வொரு ஒலியையும் அறிந்தவர் இப்படிப்பட்ட பலன்களை அடைவார்கள் என்று உபநிஷத்து சொல்கிறதே,  ஒலியை ஆத்மனின் ஒவ்வொரு பகுதி என்று அறிவதா, புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதே என்ற கேள்வி பிறக்கிறது.

    இதற்கு பதிலாகச் சொல்லபடுவதுதான் தியானம் [meditation].

    ஒரு மந்திரம் என்பது மனதிற்குள் சொல்லப்படுவது.

    ஓம் என்பது ஒரு மந்திரம்.  இந்த மந்திரத்தை மனதில் சொல்லும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் பொது – ‘அ’ என்ற ஒலியிலோ, ‘உ’ என்ற ஒலியிலோ, ‘ம்’ என்ற ஒலியிலோ மனதை ஒருநிலைப்படுத்தித் தியானிக்கும்போது, தியானிப்பவர்கள், அவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் ஒலிக்குத் தகுந்தாவாறு வைஸ்வாநரனையோ, தைஜஸநியோ, பிராக்ஞனையோ உணருகிறார்கள்/ஒன்றுகிரார்கள்/அறிகிறார்கள். அப்படி நடக்கும்போது தன்னுள் இருக்கும் ஆத்மனை அறிகிறார்கள்

    அந்தந்த ஆத்மனின் பிரிவுக்குள்ள குணங்கள் அனைத்தும் கைவரப்பெறுகிறார்கள்.

    அதுசரி, ஏன் வைஸ்வாநரன் தைஜஸனுடன் ஒன்றவேண்டும், அப்படி ஒன்றியபின், தைஜஸன் ஏன் பிராக்ஞனுடன் ஒன்றவேண்டும்?  இவர்கள் ஆத்மனின் மூன்று பிரிவுகள் தானே, ஏன் ஒவ்வொன்றாக ஒன்றுகிரார்கள் என்ற நியாயமான கேள்வியும் நம்முள் எழுகிறது.

    உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தில் பாலை வைத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்;  அதை நான்காகப் பிரித்து, வெவேறு நிறங்களுடைய கண்ணாடிப் பாத்திரங்களில் ஊற்றிவைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.  பாலின் நிறம் அது ஊற்றிவைக்கப்படும் கண்ணாடிப் பாத்திரத்தின் நிறமாகத்தானே தெரியும்?

    முதல் பாத்திரம் மஞ்சள் நிறம் – அதனுள் இருக்கும் பால் [ஆத்மனின் பிரிவாகிய வைஸ்வாநரன் – நமது வெளிஅறிவால் உணரக்கூடிய அண்டம்]

    இரண்டாம் நீல நிறப் பாத்திரத்தில் இருக்கும் பால் தைஜஸன் – அண்ட மனம்.

    மூன்றாவது சிவப்புப் பாத்திரத்தில் பிராக்ஞன் இருக்கிறது.  அதுதான் குணமுள்ள ஈஸ்வரன் [சகுணப் பிரம்மம்]  ஈஸ்வரனே அனைத்தின் தோற்றமாகவும், அதன் முடிவாகவும் இருக்கிறான்.  அவனே விழிப்புநிலையில் நாம் ஐம்புலன்களாலும் உணரும் அண்டங்களையும், கனவுநிலையில் காணும் உணர்வுகளையும், காட்சிகளையும், ஆழ் உறக்க நிலையில் ஒன்றுமில்லா நிலைக்கும் ஒன்று சேர்க்கிறான்.  நனவும், கனவும் ஒன்றுமில்லா நிலையில் [ஆழ்உறக்க நிலையில்] ஒன்றிவிடுகின்றன.

    water in colored utensilsமுதலில் மஞ்சள் நிறமாக இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பகுதி வைஸ்வாநரன் என்று வைத்துகொண்டு, அந்தப் பாத்திரத்தில் இருக்கும் பாலை, நீல நிறத்தில் இருக்கும் பாத்திரத்தில் இருக்கும் பாலில் [தைஜஸன்] சேர்த்தால் பால் நீலமும், மஞ்சளும் சேர்ந்த பச்சை நிறமாகத் தெரியாது, நீல நிறமாத்தான் தெரியும். இப்பொழுது இரண்டும் இணைந்தாலும் ஒரே நிறமாகத்தானே நமக்குத் தோன்றுகிறது!

    இப்படிச் சேர்த்த பாலை முன்பு இருந்ததுபோல மீண்டும் பிரிக்க முடியுமா?  இரண்டறக் கலந்ததுவிட்டபின் அவற்றை தனித்தனியாக எப்படிப் பிரித்தெடுக்கமுடியும்?  தண்ணீரும், எண்ணையும் என்றால் – மணலும் சர்க்கரையும் என்றால் முடியும்.  ஏனென்றால் அவை தனித்தனியான பொருள்கள்.  ஆத்மன் தனித்தனி அல்லவே!  ஒன்றாக இருந்த ஒன்றை இரண்டாகப் பிரித்து, ஒன்றுசேர்த்தபின், முதலில் இருக்கும் பிரிவுக்கு எப்படிக் கொண்டுசெல்ல இயலும்?

    அடுத்தபடியாக நீலப் பாத்திரத்தில் இருக்கும் பாலை [இரண்டறக் கலந்த வைஸ்வாநரன் + தைஜஸன்] சிவப்புப் பாத்திரத்தில் இருக்கும் பாலுடன் [பிராக்ஞன்] ஊற்றினால், பால் கலவை ஊதா நிறமாகத் தெரியாது.  சிவப்பாகத்தான் தெரியும். ஒன்றிய பால் பிராக்ஞன்தான்.  இக்கலவையையும் பழையபடி பிரிக்க இயலாது.

    இதற்கடுத்த நிலைதான் துரிய நிலை.  ஓங்காரத்தின் இறுதி விளக்கம்.

     mu12

    அமாத்ரஸ்சதுர்த்தோ2 அவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஸ’ம: சி’வோஅத்3வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஸ’த்யாத்மநாத்மானம் ய ஏவம் வேத3 ய ஏவம் வேத3 ||                     –  12

    செயல் ஒன்றுமில்லாத, ஒலியற்றவனுமான, நான்காமவன் [துரியன்] அண்டத்தைத் முடிவுறச்செய்பவன், மங்கலமானவன், இருமையற்றவன், இப்படிப்பட்ட ஓங்காரம் ஆத்மன்தான்.  எவன் இப்படி அறிகிறானோ, அவன் தானாகவே தன்னுள் [ஆத்மனுள்] ஒன்றுகிறான்.                                                                                                                                                – 12

    பதவுரை: அவ்வியவஹார்ய: – செயல்களற்றவன்; மிதே அமாத்ர: ச – ஒலி இல்லாமல் இருப்பதாலும்; சதுர்த்த2:: – நான்காமவன் [துரியன் ஆகிறான்]; பிரபஞ்ச உபச’ம: – அண்டத்தை [அனைத்து நிகழ்வையும்] முடிவுறச் செய்பவன்;  சி’வ: – ‘மங்கலமானவன்; அத்3வைத:: – இருமையற்றவன்;  ஏவம் ஓங்கார: – இப்படிப்பட்ட ஓங்காரம்; ஆத்ம: ஏவ – ஆத்மனே; ய: – எவன்; ஏவம் வேத3 – இவ்வாறு அறிகிறானோ; ஆத்மனா  – தன்னால் [தானாகவே]; ஆத்மானம் – தன்னை [தன்னுள் இருக்கும் ஆத்மனுடன்]]; ஸம்விஸ’தி – ஒன்றுகிறான்.

    விளக்கம்:  இந்த சொற்றொடரில் பரம்பொருளுடன் ஒன்றுவது எப்படி என்று சொல்லப்படுகிறது.  அத்துடன் மட்டுமல்ல, ‘ஓம்’ என்ற சொல் மூன்று ஒலிகளால் ஆனது மட்டுமல்ல, நான்காவதாக ஒலியற்ற நிலைமையும் ஓங்காரத்திற்கு இருக்கிறது, அதுவே ஆத்மனின் ‘துரிய’ நிலை என்றும் எடுத்துரைக்கிறது.

    paramaathamaஅந்நிலையில் ஆத்மன் செயல் எதுவும் ஆற்றுவதில்லை.  அந்நிலையில் – ஆத்மனின் செயலற்ற நிலையில் – அண்டமே —  நனவில் திடப்போருளாகக் காணப்படும், கனவுநிலையில் ஒளிமயமான உணர்வுகளாகத் தோன்றும், ஆழ்உறக்க நிலையில் எண்ணங்களின் குவியலாக உருவமற்று இருக்கும் – அந்த அண்டமே முடிந்துபோகிறது.  ஈஸ்வரன் என்று அழைக்கப்படும்  காரிய, காரணங்கள் உள்ள பரம்பொருள், சிவமாக, மங்கலமான ஒன்றாக, தான் வேறு, மற்ற உயிர்கள் – ஜீவாத்மாக்கள் வேறு என்ற மாயத்தோற்றம் இல்லாது – இருமையில்லாது ஒன்றாகி நிற்கிறான்/நிற்கிறாள்/நிற்கிறது.

    முதலீட்டியம் / ஒருமை
    முதலீட்டியம் / ஒருமை

    இதையே அறிவியல் ஒருமை, முதலீட்டியம் [singularity] என்று சொல்லுகிறதோ என்னவோ!  பெருவெடிப்பு நிகழ்ந்து அண்டம் உருவாகும் தருணத்தில் அவ்வண்டமே ஒரு முதலீட்டியமாக/ஒருமையாக – இனம் பிரித்து அறியாதவண்ணம் ஒன்றாக இருந்தது என்று பொதுச் சார்பியல் [ஜெனரல் ரிலேட்டிவிட்டி] கூறுகிறது[1] துரியன் இருமையற்றவன் என்றால் அவனை ஒரு முதலீட்டியம்/ஒருமையானவன் [singularity] என்று சொல்வதில் பிழை இருக்கிறதா என்ன?

    அது மட்டுமல்ல, பால்வழி மண்டலங்கள் [galaxies] உருவாகக் காரணமான கரும் துளைகள் [black holes] உள்ளே முதலீட்டியம் உள்ளது என்றும் அறிவியல் ஆராய்ந்து உரைக்கிறது.[1]

    எதுவும் உருவாகாமல் ஒன்றி இருந்த ஒன்று, இருமை இல்லாமல் இருந்த ஒன்று — பால்வழி மண்டலங்கள், மற்றும் பெரும்வெடிப்பு தோன்றி அண்டமே உருவாக வழிவகுத்தது என்று — அறிவியலே சொல்லும்போது, அந்த முதலீடியமே பரம்பொருள், ஆத்மன் என்று பொருள்கொள்வதில் தவறென்ன!

    இந்த வழியிலேயே தொடர்ந்தால் —

    1. இங்கு நாம் காணும் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு முதலீட்டியத்திலிருந்துதான் –பெருவெடிப்பின் மூலம் தோன்றின.
    2. அப்படித் தோன்றியவை அனைத்தும் அந்த முதலீட்டியத்தில்தான் இருந்தன.
    3. உயிரும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் தோன்றியிருக்கவேண்டும்.
    4. நாம் கண்ட, காணும் அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
    5. இவ்வண்டத்தில் நாம் காணும் சக்தி அனைத்தும் அந்த முதலீட்டியத்திலிருந்துதான் வந்தன.
    6. இவ்வண்டம் தோன்றுமுன்னே முதலீட்டியம்தான் இருந்தது. எனவே அந்த முதலீட்டியத்தினுள்தான் அண்டமே ஒடுங்கி இருந்த்திருக்கவேண்டும்.
    7. இந்த அண்டம் தோன்றும் முன்னர் முதலீட்டியம் செயலற்றே இருந்திருக்கவேண்டும்.
    8. எனவே இந்த முதலீட்டியத்தையே — ஆத்மனின் நான்காம் பகுதியான — வைஸ்வாநாரன், தைஜஸன், பிராக்ஞன் இவற்றை உள்ளடக்கிய – ஓங்காரத்தின் நான்காவது ஒலியற்ற ஒன்றாக – துரியனாக அறியலாமே.

    நாம் வெளியில் இருந்து, நனவுலகிலோ, கனவுலகிலோ, ஆழ்உறக்க நிலையிலோ, துரிய நிலையை எய்த இயலுமா?

    இயலவே இயலாது!

    ஏனெனில், வெளியில் இருந்து நோகும்போது இருமைதான் இருக்கும், ஒருமை இருக்காது.  எனவே, அந்த ஒருமையான பரம்பொருளினபால் சித்தத்தைச் செலுத்தி ஒன்றி, நிர்விகல்ப சமாதி நிலையை அடையும்போதுதான், அப்பரம்பொருளுடன் நாம் ஒன்ற இயலும்.

    ‘அ’விலிருந்து ‘உ’’வுக்கும், ‘ம்’க்கும் வருவோம்.

    ஆதி சங்கரர் என்ன சொல்கிறார், துரியனைப் பற்றி?

    அவர் பரம்பொருளையே இரண்டுவிதமாகப் பிரிக்கிறார், சகுணப் பிரம்மம், நிர்குணப் பிரம்மம் என்று.

    இந்த சகுணப் பிரம்மமே —  குணங்களுடன் கூடிய ஈஸ்வரனே – இவ்வண்டத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருக்கிறார்.  அவரை [சகுண பிரம்மத்தை] அறிய, கௌடபாதரின் காரிகையில் (விளக்கம்) உள்ள சுலோகத்தின் 26ம் சுலோகத்தின் முதல் வரிப்படி மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும் என்கிறார்.

    அந்த முதல் வரி எது?

    ப்ரணவோ ஹ்யபரம் [ப்ரணவ: ஹி அபரம்] ப்ரஹ்ம ப்ரணவஸ்’ச பர: ஸ்ம்ருத:  |

    ஓங்காரமோ எனில் மற்றொரு பிரம்மமே!  ஓங்காரமும் பரப்பிரம்மமாகவே எண்ணப்படுகிறது.

    கூர்ந்து கவனித்தால் மற்றொரு பிரம்மம், அப்படியே எண்ணப்படுகிறது என்று சொல்லப்படுவதைக் காணலாம். மற்றொரு பிரம்மம் என்பதுதான் சகுணப்பிரம்மம் [பரம்பொருள்/ஈஸ்வரன்].  பரம்பொருளை முதலில் அறிய விரும்புபவர்கள் —  அதாவது, முதல் முயற்சி எடுப்பவர்கள் —  ஓங்காரத்தைப் பரம்பொருளாக [ஈசனாக] எண்ணித் தியானிக்கவேண்டும் என்று சொல்வது புரியும்.

    தியானம் செய்யப் புகுபவர்கள் — அனைத்தையும் வெளியுலகின் வாயிலாக அறிபவர்கள் – அம்மாதிரித்தான் தியானம் செய்ய – மனதை ஒருநிலைப்படுத்த இயலும்.  எனவேதான் அகர, உகர், மகரமாக, ஒலியாக நிற்கும் ஈசனை, பரம்பொருளை, ஓங்காரத்தை தியானம் செய்யவேண்டும்.  இது கைகூடினால் ‘சகுண சமாதி’ நிலை கிட்டும்.  இந்நிலையை அடைந்தவர்கள் மீண்டும் கார, காரியம் உள்ள இவ்வண்டத்திற்குத் திரும்பி வருவார்கள்.

    அதன்பின் ஒலியற்ற ஓங்காரமான துரியனை, நிர்குணப் பிரம்மத்தின்பால் ஒருநிலைப்படுத்த வேண்டும்.

    இப்பொழுது இரண்டாம் வரிக்குச் செல்லுவோம்.

    அபூர்வோஅனந்தரோஅபா3ஹ்யோஅனபர: ப்ரணவோஅவ்யய:  ||

    முன்தோற்றமற்றதும், முடிவற்றதும், வெளியில் இல்லாததும், தனித்தன்மை வாய்ந்ததுமான ஓங்காரம் மாற்றமில்லாதது.

    முன்தோற்றமற்றது என்றால் என்ன?  இதற்குமுன் எதுவும் தோன்றவில்லை, இதுவேதான் இருந்துவருகிறது, இதை யாரும் படைக்கவில்லை, உருவாக்கவில்லை, இதுவும் தோன்றவில்லை.

    தோன்றவில்லையா, அப்பொழுது இது எப்படி இருக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.  நமது வெளியுல உணர்வுப்படி நோக்கினால் —  ஒன்று தோன்றியது என்றாலே, அதற்குத் துவக்கம் இருக்கவேண்டும், அதை யாராவது உருவாக்கி இருக்கவேண்டும் என்றுதானே பொருள்?  அப்பொழுது அது பரம்பொருளாக இருக்கமுடியுமா?  முடியாதே!  அதனால் அப்பரம்பொருள் தோற்றமற்றது, துவக்கமற்றது.  அது எப்பொழுதும் இருக்கிறது.

    இது முடிவும் அடையாதது: முடிவு என்று ஒன்று இருந்தால் அதற்குத் துவக்கம் என்றும் ஒன்றும் இருக்கவேண்டும் அல்லவா!  எனவே, துவங்காத ஒன்று முடிவும் அடையாது.

    அது வெளியிலும் இல்லை என்றால் என்ன?  எல்லாமே அதுதான், அப்பரம்பொருள்தான்!  எனவே எதுவும் அதற்கு வெளியில் இருக்கமுடியாது.

    அறிவியல்படி நோக்கினால், பெருவெடிப்புக்குமுன் அண்டமே இல்லை, அண்டத்தில் இருக்கும் எதுவுமே இல்லை.  அண்டமே அண்டத்தில், பரம்பொருளுள் அடங்கி இருந்தது.  அந்நிலையில்தான் நிர்குணப் பிரம்மமும் இருக்கிறது.

    தனித்தன்மை வாய்ந்தது: இப்படிப்பட்டது எதுவும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  அப்படிப்பட்டது தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதானே!

    அப்படி தோற்றமும் இல்லாமல், முடிவும் இல்லாமல், வெளியிலும் இல்லாத, தனித்தன்மை வாய்ந்த அது மாற்றமின்றித்தான் இருக்கும்.  அங்கு காரணமும் இல்லை, காரியமும் இல்லை.  ஒரே அமைதிதான்.  படைப்பும் இல்லை, காப்பும் இல்லை, அழிப்பும் இல்லை, மறைப்பும் இல்லை, அருளும் இல்லை. எல்லாம் ஓய்ந்துபோன நிலையில் எதுவுமில்லாமல் “சிவனே” என்றிருக்கும் நிலை.

    அந்த நிலையில் இருக்கும் – ஒலியற்ற ஓங்காரமாக இருக்கும் இறைவன்/வி ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அதுவுமல்ல.  ஏனெனில் அதை வெளியில் இருக்கும் எதுவும் பார்க்கமுடியாது, அளவிடமுடியாது – ஏனென்றால் அந்த அமைதியான நிலையில் வெளியில்தான் எதுவுமே இல்லையே!

    இப்படிப்பட்ட பரம்பொருளை அடைய, அதுவேறல்ல, நான் வேறல்ல என்று உணர்ந்து அதனுடன் ஒன்றிப் பரம்பொருளாகவே ஆக, ஒலியற்ற ஓங்காரத்தை தியானம் செய்து மனத்தை ஒருநிலைப்படுத்தவேண்டும்.

    இப்படித் தன்னுள் இருக்கும் பரம்பொருளுடன் ஒன்றுவதே நிர்விகல்ப [வேறுபாடற்ற/பிரித்தறியாத] சமாதி நிலை. இந்நிலையை அடைந்தோருக்கு இவ்வுலகமில்லை, பிறப்பு இறப்பு என்னும் காரிய, காரணம் இல்லை. ஆணவம், கர்ம வினைகள், மாயையினால் கட்டப்படாது — அவை நீங்கி — தான், தனது, எனது, மற்றவை, என்ற எண்ணம் இல்லாமல் — பிறித்தறியாமல் — எல்லாமே ஒன்று என்று இருமையற்ற நிலையில், ஒருமையாகி — ஒலியற்ற ஓங்காரத்துடன், பரம்பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றிய அவர்கள் — பரம்பொருளாகவே ஆகிவிடுகிறார்கள் [நிர்விகல்ப சமாதி அடைந்து விடுகிறார்கள்]!  பேரின்பநிலையை எய்துகிறார்கள்.

    நிர்விகல்ப சமாதி
    நிர்விகல்ப சமாதி

    thuriyan

    இத்துடன் எனது மாண்டூக்கிய உபநிஷத்தின் எளிய விளக்கம் நிறைவு பெறுகிறது.  இராமனுக்கு கடலின் மேல் பாலமமைக்க ஒரு அணில் தனது முன்னங்கால்களால் ஒரு சிறுகல்லை உருட்டிப்போட்டதுபோல என்னால் இயன்றதை எழுதியுள்ளேன்.  நான் எழுதியதில் தவறு இருந்தால், பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் என் தவறைத் திருத்திக்கொள்வேன்.

    அமைதி மந்திரம்:sankaara and students

    எந்த ஒரு உபநிஷத்துவிற்கும் துவக்கத்தில் ஒரு அமைதி மந்திரம் [சாந்தி ஸ்லோகம்] உண்டு.  எதையும் கற்பதற்குமுன் ஆசிரியரும், மாணவர்களும் அமைதியுடன் இருந்து கற்பிக்க/கற்கவேண்டும் என்பது அதன் காரணமாகும்.  இந்த உபநிஷத்துவுக்கான அமைதி மந்திரத்தை முதலில் எழுதாததற்கு ஒரு காரணம் உண்டு.  இங்கு நான் கற்பிப்பவனும் அல்லன்.  இதைப்படிப்பவர்கள் எனது மாணவர்களும் அல்லர்.

    எனவே, முதலில் சொல்லவேண்டிய அமைதி மந்திரத்தைக் முடிவில் கொடுத்து முடிக்கிறேன்.

    mu santhi

    ப4த்3ரம் கர்ணேபி4: ஸ்ருணுயாம தே3வா: | ப4த்3ரம் பஸ்’யேமாக்ஷபி4ர்யஜத்ரா: | ஸ்த்தி2ரைரங்கை3ஸ்துஷ்டுவாஹும்ஸஸ்தநூபி4:  வ்யசே’ம தேவஹிதம் யதா3யு: | ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஸ்ரவா: |  ஸ்வஸ்தி ந: பூஷா விஸ்’வவேதா3:  |  ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி: | ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர்த3தா4து | ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

    தேவர்களே [தெய்வங்களே]!  காதுகளால் நல்லதையே கேட்போமாக.  போற்றுதலுக்கு உரியவர்களே, கண்களால் நல்லதையே பார்ப்போமாக.  உறுதியான புலன்களுடன் [திட அறிவுடன்] நுணுக்கமாக [உங்களைப்] புகழ்ந்து, எவ்வளவு ஆயுள் இறைவனால் கொடுக்கப்பட்டதோ [அதை] அனுபவிப்போமாக.  நிகரற்ற புகழுள்ள இந்திரனே எங்களுக்கு [கல்வி கற்பதில்] வெற்றி [உண்டாகட்டும்]!  அனைத்தையும் அறிந்த ஆதவனே, எங்களுக்கு வெற்றி!   தடையின்றிச் செல்லும் [பறக்கும்] கருடனே, எங்களுக்கு வெற்றி!  பிரஹஸ்பதியே, எங்களுக்கு வெற்றி!  ஓம்1  அமைதி! அமைதி!! அமைதி!!!

    [நிறைவு பெறுகிறது]

    [1] Curiel, Erik & Peter Bokulich. “Singularities and Black Holes”. Stanford Encyclopedia of Philosophy. Center for the Study of Language and Information, Stanford University. Retrieved 26 December 2012.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி: குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வதில்

     

    எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
    தெய்வ முடிப்புழி என்செய்யும்? – மொய்கொண்டு
    பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
    கோப்புக் குழிச்செய்வ தில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    எவ்வம் துணையாய்ப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
    தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
    பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும்
    கோப் புக்குழி, செய்வது இல்.

    பொருள் விளக்கம்:
    துன்பமே துணையாக (வரும் பொழுதில்), தான் செய்து முடிக்க விரும்புவதைச் செய்யும் முயற்சிகள், விதி வலியால் நடைபெறாது போக நேர்ந்தால் என்ன செய்யமுடியும், முயல்வதால் பலனில்லை. பூவுக்குள் வண்டு புகுந்து ஒலியெழுப்பும் ஊரைச் சேர்ந்தவரே, குறுநில அரசனால், எத்திசையும் வெற்றியை நிலைநாட்டி வரும் பேரரசன் ஒருவன் தனது நாட்டில் போரிடப் புகுந்தால் அடங்கிப் போவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: தனது முயற்சிக்கு எதிராக விதி சதி செய்யும் பொழுது முயற்சிகள் பயனளிப்பதில்லை. நாம் எவ்வளவுதான் முயன்றாலும், சில நேரம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள் நமது முயற்சிக்கேற்ற பலனைத் தருவதில்லை. இவ்வாறு நிகழும் கைமீறிய விளைவுகளுக்கு வள்ளுவர் ஊழினைக் காரணமாகக் காட்டுகிறார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும். (குறள்: 380)

    ஊழை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வலிமையானவை வேறு எவை என்று கூறமுடியும் என்பது விதி வலியது என அறிவுறுத்தும் வள்ளுவர் வாக்கு.

    Share
  • கவிச்செருக்கு கண்ணதாசனின் உடன்பிறப்பு!

    பவள சங்கரி

    கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

    வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி      – பாரதி.

     

     images (3)

    கன்னித்தமிழுக்குக் காவியமண்டபம் அமைத்து

    பண்ணிசையால் பூமாலையும் தொடுத்து

    ஆன்மீகம், ஆனந்தம், காதல், தத்துவம், சோகம்,

    சுகமென, அனைத்தும் அடித்தளமாய் அமைத்து

    கவிச்சொல் வீச்சின் மூலம் இப்புவியனைத்தையும்

    ஆளும் பெருங்கவி! ‘படைப்பதால் நானும் இறைவன்’

    “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும்

    எனக்கு மரணமில்லை” என்ற கவிச்செருக்கு

    அவன் உடன்பிறப்பு! கவித்துளிகள் காலக்காற்றில்

    கரைந்தொழியும் கற்பூரமாயிராமல், எதிர்க்காற்றில்

    ஏறிப்பறக்கும் காற்றாடியாய் காவியமானவன், கண்ணதாசன்!!

     

    தம்மை மறந்து தம்மையே அதனுள் கரைத்து

    தன்னூன் கலந்து உயிர் கலந்து பொருளுணர்ந்து

    இசையோடு இயைந்து இனிமையும் கலந்து

    கருத்துடன் கவியாய்ப் புனைந்து சிந்தையள்ளும்

    வன்மையுடையாய்! கன்னித் தமிழ்நாட்டின்

    வளமையான கழனியில் விளைந்த வளமான

    செங்கரும்பின் அடிச்சுவையவன்! தனிக்கனியவன்!!

    தரணிபோற்றும் தங்கமகன்! மனம்தளராச் சிங்கமவன்!!! …. பவளா

     

    கம்பனின் புகழ் பாடும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்,images (2)

    “கையில் கம்பன் கவியுண்டு

    கலசம் நிறைய மதுவுண்டு

    வையம் தருமிவ் வளமின்றி

    வாழும் சுவர்க்கம் வேறுண்டோ?”

    என்பார்.

     இப்படி கம்பன் கவியில் கட்டுண்டுடவர் கவியரசர் கண்ணதாசனும்தான்! ஆம். கம்ப ரசத்தை ஆழ்ந்து சுவைத்து அதன் சாரத்தையெல்லாம் தம் கவி மொழியில் திணித்து, நம்மைச் சுவைக்கடலில் திக்குமுக்காட வைத்திருக்கும் ஓர் அற்புதக் கவிஞன் நம் கண்ணதாசன்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பனை, நம் கவியரசர் கண்ணதாசன் வாயாற புகழ்வதைப் பாருங்கள்……

    பத்தாயிரம் கவிதை முத்தாக

    அள்ளி வைத்த சத்தான

    கம்பனுக்கு ஈடு இன்னும்

    வித்தாகவில்லை என்று பாடு!

    என்று கம்பனின் கீர்த்தியைப் பாடியவன் அப்பெரும் புலவனின் கவிதைகளின் தாக்கமே தம் பெரும்பாலான பாடல்கள் என்றும் பதிந்துச் சென்றிருக்கிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே? இதோ அந்த ஒரு சில சோறுகள்…

    1949ம் ஆண்டு, ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலி’எனும் திரைப்படத்திற்காக  எழுதியது முதல் பாடல் என்றால் நம்புவது எளிதாகத்தான் இல்லை. மூன்றாம் பிறை என்ற திரைப்படத்தில் மிகவும் பிரபலமான,  `கண்ணே கலைமானே’ என்பதுதான் கவிப்பேரரசரின் கடைசிப் பாடல். உலகத்தோரின் உள்ளம் கொள்ளைகொண்ட அற்புதமும் இதில்தான்!

    ஆலயமணி எனும் திரைப்படத்தில்  டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈசுவரி பாடிய இப்பாடல் கவிஞரின் திரைப்பாடல் பயணத்தின் ஒரு மைல்கல் எனலாம்.

    கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?

    கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

    சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?

    சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?

    அடடா.. அடடா…. இந்தத் தமிழ்க்காதலன்,

    வார்த்தை விளையாட்டில் மன்னனவன்!!

    கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

    கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்

    ஆன்மீகமும், இலக்கிய நேசமும், காதல் சுவாசமும் என அனைத்தையும் ஒருங்கே ஓரிரு வரிகளில் உரைப்புடன் அழகாய் வசப்பட்டிருக்கிறது கவிஞருக்கு.

    கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா?

    காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?

    அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி

    சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி

     

    தம் காதலியைக் கம்பன் கண்ட, சீதை மகளாகவும், சகுந்தலை எனும் சேயாகவும் காணும் காதலனின் மொழியை அம்பிகாபதியும், அமராவதியும் பாடுவதையும், அதைச் சுவைத்து மகிழும் பாவலரின் கதியும் நம் கண் முன்னே படமாக விரிவதை மறுக்கவும் இயலுமோ?

    கண்மூடி, மனதை ஒரு நிலைப்படுத்தி, உள்ளத்தைச் சற்றே தெளிவாக்கி, அமைதியாக உட்கார்ந்து கொண்டு, அருகில் மெல்லிய ஒலியில், இந்தப் பாடலை ஒலிக்கவிட்டுப் பாருங்களேன். அப்போது தெரியும், இதன் அருமை.. ஆம், தவழ்ந்து வரும் தென்றலுடன், செந்தாழம் பூவின் மணமும் கமழ்ந்து வந்து மேலே மோதுவதை உணர முடியும்!  ஆனந்தத்தில் திளைக்கும் உள்ளமும் உரித்தாகும்..  வார்த்தைகளில் மந்திரத்தைப் புகுத்தி உன்மத்தமாக்கும் கலையில் வல்லவர் இந்த கவியரசர் என்பதே நிதர்சனம்! இதோ பாடலின் சில முத்தாய்ப்பான வரிகள்..

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    என் மீது மோதுதம்மா

    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

    என் மீது மோதுதம்மா

    பூ வாசம் மேடை போடுதம்மா

    பெண்போல ஜாடை பேசுதம்மா

    அம்மம்மா ஆனந்தம்

    அம்மம்மா ஆனந்தம்

     

    வளைந்து நெளிந்து போகும்பாதை

    மங்கை மோகக் கூந்தலோ?

    மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்

    பருவ நாண ஊடலோ?

     

    அடடா … இந்தக் காட்சி கண் முன்னே விரியும்போது உடலும் மெலிதாகி உடன் பறந்து மேகத்தினுள் நுழைந்து, பனிக்காற்றின் வருடலில் நெகிழ்ந்து நிற்கும் அனுபவத்தைப் பெறமுடியும்! கம்பன் செய்த வர்ணனை என்ற சத்தியப்பிரமாணமும் கொடுத்து, சாட்சிக்கு அழைத்துக்கொள்ளும் யுக்தி.

    அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்

    போகிறாள்

    ஜரிகை நெளியும் சேலை கொண்டு

    மலையை மூடப் பார்க்கிறாள்

     

    இளைய பருவம் மலையில் வந்தால்

    ஏகம் சொர்க்க சிந்தனை

    இதழில் வருடும் பனியின் காற்று

    கம்பன் செய்த வர்ணனை

    ஓடை தரும் வாடைக் காற்று வான்

    உலகைக் காட்டுது

    உள்ளே வரும் வெள்ளம் ஒன்று

    எங்கோ என்னைக் கூட்டுது

    மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

    மகிழ்ச்சியோ, கோபமோ, வேதனையோ அல்லது அன்போ எதுவாகிலும் அதனை அபரிமிதமாகக் காட்டும் வல்லமை பெற்ற கவியரசர்கள் ஆச்சரியத்திற்குரியவர்கள்.  பக்தியும், காதலும், ஊடலும், உன்மத்தமும் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் அழகைக் கூர்ந்து கவனிப்பவர்கள் தவிர்க்க இயலாது! அந்த வகையில் நம் கவியரசரின் சில பாடல்கள் நம் உள்ளத்தை உருக்கிக் கொள்ளை கொண்டுவிடும் என்பதே சத்தியம். இது ஒருநாள் நிகழ்வு அல்ல என்பதே உச்சம். ஆம், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் முதல் முறை கேட்கும்போது ஏற்பட்ட அதே அதிர்வு ஏற்படத்தான் செய்கிறது. இது எங்கனம் சில கவிஞர்களுக்கு மட்டுமே சாத்தியமாகிறது என்று சிந்திக்கும்போதுதான், சிலர் பிறவி ஞானம் பெற்று வருபவர்கள் என்ற கூத்தை ஒப்புக்கொள்ள வேண்டியவராகிறோம். இந்தப் பாடல் அப்படி ஒன்றுதான் இல்லையா?

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்….

     

    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே

    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

    மனிதர் வாழ்வில் மரணம் என்ற ஒன்று தவிர்க்கவே முடியாதது என்பதை நாம் அறியாதது அல்ல.  ஆனால் ஒரு அன்பு நண்பன், அருமைத் தோழன் அருகிருந்து கண் துடைத்து, ஆறுதளிப்பது போன்றதொரு நெருக்கம் இந்த எழுத்திற்கு எங்கனம் சாத்தியமானது?

    ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

    யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது

    ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை

    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

    எத்துனை யதார்த்தமான வாசகங்கள்! மனிதர் வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஊர்ந்து சென்று உறைந்திருந்து, உருவகப்படுத்தியுள்ள வல்லமையை என்ன சொல்லி பாராட்டுவது!

    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்

    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

    பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்

    மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

     

    எத்துனை நம்பிக்கையான வார்த்தைகள்! ஒரு சரித்திரத்தையே ஒரு பாடலுக்குள் அடக்க முடியும் என்று ஆதாரம் கொடுத்துள்ள உன்னதம்!

    ‘அச்சம் என்பது மடமையடா,’ ‘மலர்ந்தும் மலராத.’ ‘போனால் போகட்டும் போடா..,’ ‘கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’  ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா,‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?’, ‘மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா’, ‘ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே’, போன்ற இன்னும் எத்தனை, எத்தனை காவியங்கள் இக்கவிச்சக்கரவர்த்தியின் புகழ் பாடுபவைகள்!

    //எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.//  தி.ஜானகிராமன் எழுதிய,  ‘சிறுகதை எழுதுவது எப்படி’ – என்ற கட்டுரையின் ஒரு பகுதி இது. கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கும் இது முழுமையாகப் பொருந்தும். நாமும் அன்றாடம் எத்தனையோ விதமான படைப்புகளை கடந்து வந்துகொண்டுதான் இருக்கிறோம். என்றாலும் ஒரு சில நேரங்களில், குறிப்பிட்ட ஒரு சில படைப்புகளே, ஒரு சில சூழல்களுக்கு உகந்ததாக, இதமாக அமையும். உதாரணமாக,

    பாலும் பழமும் (1961) திரைப்படத்தில்,  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடிய, ‘போனால் போகட்டும் போடா’ என்ற பாடலை அதற்கான ஒரு துக்ககரமான சூழலில் கேட்டுப்பாருங்கள்.. அந்த துக்கத்தின் வலியை முழுவதுமாக உணர்ந்து ஓவென்று அழுது தீர்த்தபின்பு ஒரு ஆழ்ந்த அமைதியைப் பெற முடியும் என்றால் அதுதான் தெய்வத்தின் சன்னதி என்றே கூற முடியும் அல்லவா.. இதோ அப்படி ஒரு முத்தான, சொத்து!

    போனால் போகட்டும் போடா

    போனால் போகட்டும் போடா – இந்த

    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

    போனால் போகட்டும் போடா

     

    வந்தது தெரியும் போவது எங்கே

    வாசல் நமக்கே தெரியாது

    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த

    மண்ணில் நமக்கே இடமேது?

     

    இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை

    இல்லை என்றால் அவன் விடுவானா?

    உறவைச் சொல்லி அழுவதனாலே

    உயிரை மீண்டும் தருவானா?

    கூக்குரலாலே கிடைக்காது – இது

    கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்

    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

     

    எத்துனை யதார்த்தம்.. எத்துனை சத்தியமான வார்த்தைகள். அப்பப்பா கண்ணதாசனைத் தவிர யாரால் இப்படி எழுத முடியும்?

    கவிஞர் கண்ணதாசன், தன்னைத்தானே கொஞ்சமும் தயவு  தாட்சண்யமில்லாமல், ஆய்வு  செய்து  கொண்டு அவர் வெளியிட்ட சில  அறிக்கைகள் பலவுண்டு… அதில் சில…

    நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்

    நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்

    மனிதர்களின் எல்லையற்ற கவலைகள், நோய்கள்,தேடல்கள், தவிப்புகள் போன்ற அனைத்தையுமே சமநோக்கோடு பார்த்ததன் விளைவாகக்  கவிஞர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான சொற்களே இவை.

    காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்

    யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்

     

    சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்

    மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன

     

    கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே

    கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்

    இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு

    இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு

     

    எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்

    உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்  

    கோடைநாளின்  சாலைவழிப் பயணத்தின் களைப்பான வேளையில் வழியில் தென்படும் படர்ந்த குளிர் நிழல்போன்ற இதமான வரிகள் இவை.

    உலகில் தான் கண்ட எத்தனையோ விசயங்களின் மூலம்  தனக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி கவிஞர் சொல்வதைப் பாருங்களேன்…

    “ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

    காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்

    ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

    மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்

    பார்த்தது கோடி பட்டது கோடி

    சேர்த்தது என்ன? சிறந்த அனுபவம்”

    அனுபவங்களின் அமுத சாரமே கண்ணதாசன் கவிதைகள். பலமுறை, திரைப் பாடல்களில் சூசகமாகத் தமது சொந்தக் கருத்துகள், விருப்பங்களைப் பதிவு செய்து அவற்றை சம்பந்தப்பட்டவர் மட்டுமே அறிந்துக் கொள்ளும் வகையில் திறம்பட எழுதக் கூடியவர் கண்ணதாசன். இவர் திமுக கட்சியில் இருந்த போது காமராஜரின் மீது தனிப்பட்ட முறையில் பற்று கொண்டிருந்தாலும், தான் சார்ந்திருந்த கட்சிக்காக  தன் விருப்பத்தையும் மீறி, அவரை எதிர்க்க வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில் பட்டணத்தில் பூதம் என்ற  படத்துக்காக எழுதப்பட்ட ,  “அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி” என்று எழுதினார். காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐயாயிரத்துக்கும் அதிகமான திரைப்பாடல்கள் மட்டுமின்றி, தனிக்கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், இலக்கியத் திறனாய்வுகள், நாடகங்கள், சுயசரிதை என இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களிலும் பகலவனாய் பரிமளித்தவர் கவியரசர். தனது “சேரமான் காதலி” எனும் படைப்பிற்காக சாகித்ய அகாதமியின் விருதும் பெற்றார்.

    இவையனைத்திற்கும் மேலாக, இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்ட கவிஞர் இவராகத்தான் இருக்க முடியுமோ என்றுதான் தோன்றுகிறது. எத்துனை துணிவு வேண்டும் இதற்கு.. மனிதர் ஒரு முறை தானே, தன் நெருங்கிய உறவுகள், நட்புகள் என அனைவருக்கும் தான் இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்பிவிட்டு உட்கார்ந்திருக்கிறாராம்.. அப்படி என்னதான் கற்பனை செய்திருப்பாரோ..?

    அவருடைய சுய இரங்கற்பாவின்  இறுதி பத்தி இப்படி முடியும்…

    போற்றியதன் தலைவனிடம் போகின்றேன்

       என்றவன்வாய் புகன்ற தில்லை;

    சாற்றியதன் தமிழிடமும் சாகின்றேன்

       என்றவன்வாய் சாற்ற வில்லை;

    கூற்றவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன்

       படுத்தவனைக் குவித்துப் போட்டு

    ஏற்றியசெந் தீயேநீ எரிவதிலும்

       அவன்பாட்டை எழுந்து பாடு!

     

    தனக்கே ஒரு கவிஞன் இரங்கற்பா பாடிக்கொண்ட புதுமையைச் செய்தவர் கவியரசு கண்ணதாசன். ஆம் ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது.

    “அவனது வாழ்க்கை அதிசயமான வேடிக்கை. அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான சுபாவம். தவறுகளைப் புரிந்து கொண்டே அவற்றை மறந்து நியாயம் கற்பிக்க முயன்றான். அவன் மனம் அழுத பொழுதும் வாய் சிரித்துக் கொண்டிருந்தது. பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான்” – தன்னைப் பற்றிய சுயசரிதையில் எழுதிய வரிகள் தான் இது!

    Share
  • கவியரசர் கண்ணதாசன்

    மீ.விசுவநாதன்

    images (2)
    கவிதை எழுத வேண்டும் !
    கண்ண தாசன் போலத்
    தவிக்கும் ஆத்ம தாக
    தர்மத் துடன் என்றும்
    புவியில் நிலைத்து நிற்கும்
    புதுப்புது எளிய சொல்லால்
    செவியும் மனதும் ஈர்க்கும்
    செந்தமிழ்ப் பழக்கத் தாலே !

    வலியோர் எளியோர் என்று
    வருவோர் போவோர் கூட
    சலியா மனதைக் கொள்ள
    சர்க்கரைப் பாடல் தந்து
    புலியாய்ப் பாயச் செய்தும்
    பூவாய் மலர வைத்தும்
    பொலிந்த கண்ண தாசன்
    பொன்னடி தொழுது நிற்பேன்!
    (இன்று 24.06.2015 கவியரசரின் பிறந்த தினம்)

    Share
  • இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்….

    எத்தனையோ ஸ்லோகங்கள் இருந்தாலும், எனது பிரார்த்தனை வரிகள் ”கந்தன் கருணை” படத்தில் பி.சுசிலா அம்மையார் அவர்களின் தேனினும் இனிய குரலில், கே.வி.மகாதேவன் இசையமைப்பில் பார்வதி(சாவித்திரி அம்மா) தன் மகன் முருகனைக் கொஞ்சும் கவிஞரின் தாலாட்டு வரிகள் ”உயிரினங்கள் ஒன்றையொன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா உன் குரலன்றோ”….கிரேசி மோகன்….

    kannadasan2

    இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்….
    ——————————————————-
    ”உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்
    அயிவேலன் வாக்கென்ற, அந்த -மயிலிறகு
    கண்ணனின் தாசன் கவிச்சக்ர வர்த்தியின்று
    மண்ணில் பிறந்தார் மலர்ந்து”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”கண்ணா பிதற்றல் கவிதை அளிக்கின்றேன்,
    உன்னால் முடியும் உவந்தேற்க: -முன்னால்,
    முழங்கால் மடித்துவிழும் மாட்டுக்(கு) அளித்தாய்,
    தொழுங்கால் ஆசீர்வா தம்”….கிரேசி மோகன்….

    Share
  • கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் – சிறப்புப் பதிவு

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    ‘கண்ணதாசன்’ – இந்த ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனைப் புதையல்கள்? எத்தனைப் பொக்கிஷங்கள்? கடந்த நூற்றாண்டில், கால வெள்ளம் கரைத்துவிட முடியாத அளவு, தமிழ் பேசத் தெரிந்த மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் பெயர் ‘ கண்ணதாசன்.’

    பாரதி, பாரதிதாசன் காலங்களுக்கு பின் வந்த கவிஞர்கள் வரிசையில், மக்கள் மனதில் இடம்பெற்ற கவிஞரின் சிறப்புகள் ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம்…
    நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து…
    அன்பன் கண்ணதாசன் என்று அழகுக் கையொப்பமிட்டு…
    கவிஞர் கண்ணதாசன் என்று திரையுலகில் கோலோச்சி…
    கவியரசு கண்ணதாசன் என்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டு…
    கோடான கோடி தமிழ் நெஞ்சங்களில் இனிக்கின்ற பெயர் கண்ணதாசன்…
    கொஞ்சும் தமிழ் மகளுக்குக் கொலுசு கட்டி சந்தக்கவி பல்லாயிரம் படைத்தவர் கண்ணதாசன்!

    கவியரசரின் பாடல் வரிகள் என்பது..

    kannadasan2* வெறும் கதைக்காக மட்டும் எழுதப்பட்டவை அல்ல…
    * கதாநாயக, நாயகியர் பாத்திரப் படைப்புக்காக மட்டுமல்ல…
    * இசை வடிவிற்கு வார்த்தைகள் வழங்கிய விழா மட்டுமல்ல, மாறாக என்றைக்கும் மாறாத வாழ்க்கைத் தத்துவங்களாக…
    * மனித குலம் என்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வரிகளாய், வார்த்தைகளாய்…
    * உறவுக்கும் பிரிவுக்கும் தக்கதோர் பாலமாய் …
    * உணர்வின் வடிகாலாய்…
    * பண்பாட்டிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிகச் சிறந்த உதாரணமாய்…
    * பழமொழிகள் முதலாக மரபில் வரும் அத்தனை முத்துக்களையும் கோர்த்தெடுத்த மலர்ச்சரமாய்…
    * வாழ்த்துகள் என்றால்.. வகை.. வகையாய்.. சூடிக் கொடுத்த பாங்கு..
    * பக்தி என்றால் இசைந்து… கனிந்து உருகிடும் உள்ளம்…
    * அனுபவ முத்திரைகள் கொட்டிக்கிடக்கும் அதிசயச் சுரங்கமாய்…
    * வேதங்கள், உபநிடதங்கள் முதலான பல்வேறு புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் என்பனவற்றின் சாரங்களை எத்தனை எளிமையாக்கி…
    * வார்த்தை வரிகளாய் வடித்து வைத்த வள்ளல்… கண்ணதாசன்… கண்ணதாசன்…

    கவியரசர் தம் பாடல்களில் உள்ள சுகம் – தனி ராகம் – எளிய சொற்களை மட்டுமே கையாண்டு அவர் எட்டியிருக்கும் உயரம் விழியிமைகளை விரிய வைக்கும். வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த கண்ணதாசனிடம் தமிழ் எப்படி இப்படி கொட்டிக்கவிழ்த்த தமிழமுத சுரபியாய் அமைந்தது என்று வியக்காத பண்டிதரில்லை!

    கவிதை, நயம், பொருள், சொல்லழகு என்று இலக்கணம் பயின்ற தமிழ்ப் புலவர்களுக்கும் வசப்படாத கற்பனை வளம் கொடிகட்டிப் பறந்தது கவிஞரிடம்! எழுதப்படிக்கத் தெரியாத எவரும்கூட கண்ணதாசனின் பாடல் அமுதம் கேட்டபின் தமிழின் இனிமையில் மூழ்கினர் என்பதே அந்த வெற்றித்திருமகன் வெள்ளித்திரையில் படைத்த வரலாறு. அப்பாடல்கள் காலத்தை வென்றவை என்பதற்கு இதுவே சாட்சி!

    மனித குலத்திற்குத் தேவைப்படும் கருத்து முத்துக்களை – தமிழ்த்திரைப் பாடல் என்னும் ஊடகத்தின் வாயிலாக கோடான கோடி மக்களுக்கு ஆறுதலும், அறிவுரையும், தேறுதலும் தருகின்ற கண்ணதாசனை தரிசித்தேன்… இன்றும் தரிசிக்கிறேன்… என்றும் தரிசிப்பேன்!

    கண்ணதாசன் – என்னைப் பொறுத்தவரை ஒரு மந்திரச்சொல் போல மகத்துவம் நிறைந்தது. இனிக்கும் தமிழை இதயம் வழிய வழிய தந்த வள்ளல். எளிய நடையில் பாமரனது நாவிலும் பைந்தமிழ் பரவச் செய்தவன். திரைப்பாடல் மூலமாக தெள்ளத் தெளிவாக மானுட வாழ்வின் சுக துக்கங்களைப் பதிவு செய்தவன். அனுபவ முத்திரையோடு அழகு தமிழும் ஆடிவரும் பேரழகை இசையின் வடிவோடு பெற்றிட்ட நாம் பேறு பெற்றவர்கள்… இதைவிடப் பேரின்பம் ஏது?

     

    Share
  • ஜூன் 24: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்

    பிதற்றலும் கவிதையே…..

     

    எஸ் வி வேணுகோபாலன்

    kannadasan2

    கண்ணதாசன் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் சார்..என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தவரை அன்றுதான் நான் அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் என் வாழ்க்கை இணையின் கைக் கடிகாரத்திற்கு அவர் புதிய செல் எடுத்துப் பொருத்திக் கொண்டிருந்தார். கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள அந்தச் சிறிய கடைவாசலில் நின்றவாறு வழக்கம்போல் எனக்குப் பிடித்த ஒரு திரைப்படப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது தற்செயலாகத் தொடங்கிய பேச்சின் நிறைவில் மிகப் பெரிய கவிதை ரசிகரை, பாடல் வழிபாட்டாளரை நான் கண்டுகொண்டேன்.

    அந்த எளிய மனிதர், தனது காதல் மனைவியைப் பறிகொடுத்த துயரமிக்க இரவுகளில் வாழ்க்கையின் கசப்பிலிருந்து விடுதலை பெறத் துடித்தபோது, அவரது உள்ளத்தில் கண்ணதாசனின் துன்பியல் பாடல்கள் மாற்றுவினை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவரது கண்களில், தானே கண்ணதாசன்தான் என்பது போன்ற பெருமித வெளிச்சம் மின்னுவதை நான் அதற்குப் பிறகு பலமுறை பார்ப்பதுண்டு.

    இப்படி லட்சக்கணக்கான ரசிக இதயங்களில் கால காலமாகக் குடி இருக்கும் வண்ணம் எப்படி அவரால் ஒரு ரசவாதம் செய்ய முடிந்தது…இத்தனைக்கும் எளிமையோ எளிமையான சொற்களால் நிரம்பித் ததும்புகின்றன அவரது பாடல் மதுக் கிண்ணங்கள். தலைவன், தலைவி, நண்பன், எதிரி, ஊடல், கூடல், காதல், காமம், குறும்பும் சேட்டையும், கனிவும் பரிவும், சிரிப்பு, கண்ணீர், பாசம், வஞ்சகம், அருளுதல் மருளுதல், வேண்டுதல் மீறுதல், கேள்வியும் பதிலும், நெருப்பும் குளிர்ச்சியும்…..என்னதான் பாடவில்லை, கண்ணதாசன்!

    காதலில் தோற்றவன் கடவுளை நொந்து கொள்ளுதல் உலக நியதி, ஆனால், ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும், பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும், அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்…’ என்று (வானம்பாடி) சாபமிட முடிந்தது அவருக்கு. ‘கண்ணனையும் இந்த இடம் கலக்கவில்லையா, இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயம் இல்லையா’ என்று காதல் உருகுதலை வடிக்கவும் முடிந்தது.

    புராண பாத்திரங்களை கதைக்கருவிற்கு ஏற்ப பாடலில் இழைத்துக் கொண்டுவருவதில் பேரார்வம் மிகுந்திருந்தது அவரிடம். ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் தனது நண்பனுக்காகப் பெண் பார்க்கச் செல்கையில் அங்கே தனது காதலியைக் கண்டு திடுக்கிடும் நாயகன்முன் அந்தப் பெண் பாடுவதான ‘ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்’ என்ற அற்புதப் பாடலின் இலக்கிய நயம் அசாத்திய சுவை கொண்டிருப்பது. ‘கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே, அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே….’ என்று நிறைவடையும் அந்தப் பாடல் ஓர் அழகு சிற்பம்.

    வாழ்க்கைப் படகு திரைப்படத்தின் ‘உன்னைத்தான் நான் அறிவேன்’ என்ற அருமையான பாட்டின் சரணத்தில், ;காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ, கண்களே பாவம் என்றால் பெண்மையே பாவம் அன்றோ’ என்று கொஞ்சும் சுசீலாவின் குரல், ‘பெண்மையே பாவம் என்றால்..’ என இழுத்து, ‘மன்னவனின் தாய் யாரோ?’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் ரசிகர், கண்ணதாசன் நினைவில் தனது உயிர் மூச்சை ஒரு சொடுக்கு போடும் நேரம் நிறுத்தி இழுத்துக் கொள்வார் அல்லவா…

    ‘நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்ற மிடுக்கோடு கே பாலச்சந்தரின் கதாநாயகி அவள் ஒரு தொடர்கதையாக நடந்து போகும்போதும், ‘தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே’ என்று தங்கையின் உயிரைக் காக்க ஓர் அண்ணன் போராடிக் கொண்டிருக்கும் போதும், ‘இங்கே என் காலம் எல்லாம் முடிந்துவிட்டாலும், ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்’ என்று நிச்சயதாம்பூலத்திற்கு ஒரு காதலன் தவிப்பாய்த் தவிக்கும்போதும் கண்ணதாசன் இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    பாடல்களில் அரசியலைக் கலந்த அந்த கால கட்டத்தில், காமராசரைக் கருத்தில் கொண்டு பல பாடல்களில் அவரைக் குறிக்கும் சொற்களைப் போட்டு எழுதியவர் கண்ணதாசன். சிவகாமி உமையவளே முத்துமாரி, உன் செல்வனுக்கும் காலம் வரும் முத்துமாரி (பட்டிக்காடா பட்டணமா), நல்லோர்கள் தம்நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும், ஆர்ப்பாட்ட அலை ஓசை வரவேண்டும், எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே….(ராஜபார்ட் ரங்கதுரை) என்று செல்கிறது அந்த அலைவரிசை.

    எலந்தப்பயம் (பணமா பாசமா) போன்ற கொச்சையான பாடல்களையும் உள்ளடக்கியதுதான் கண்ணதாசனின் படைப்புலகம். திரைப் பாடல்கள் மூலம் பெற்ற அவரது பாடலின்பம் ஒரு பக்கம். கவிதைகளாக அவரிடமிருந்து பாய்ந்துவந்த பெருவெள்ளம் இன்னோர் அரிய பக்கம். அவரது அறுசீர், எண்சீர் விருத்தங்களின் ஓசைநயம், சொற்களின் வீச்சு, தாளகதி எல்லாம் உள்ளத்தைக் கொள்பவை. கம்ப ராமாயணச் செய்யுளை மிகுந்த ரசனையோடு தனது மேடைப் பேச்சுக்களில் சங்குசக சங்குசக சங்குசக சங்சங் என்று அவர் மெட்டுப் போட்டுச் சொல்வதைக் கேட்டோர் இசைநதி நுரைபொங்க வழிந்தோடும் அவரது உள்ளத்தை நேரில் கண்டிருப்பர்.

    அவரது அரசியல் உணர்வுகளின் மாற்றங்களின் பதிவாகவும் அவரது கவிதைத் தொகுதிகள் அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். திராவிட இயக்கத்தின் செல்லப் பிள்ளையான அவரே, ‘இந்திய மலைகள் தோறும் இந்திரா பேர் கேட்டாயா’ என்றும் எழுதினார் வேறொரு கட்டத்தில். ஆட்டுக்குட்டி முட்டை இட்டு என்ற திரைப்பாடலின் முன் வடிவம், திராவிட நாடு குறித்த அவரது பகடியான, ‘குதிரை ஒரு முட்டையிட கோழி அதை அடைகாக்க குட்டியானை பிறக்கும்….’ என்ற கவிதைதான்.

    எழுபதுகளின் பிற்பகுதியில் குமுதம் இதழில் வாரா வாரம் கண்ணதாசன் எழுதி வந்த கவிதைகள் ரசனை மிக்கவை. கேள்வனே கண்ணபிரானே என்ற தலைப்பிலான கவிதையில், ‘கண்வழி சொற்களும் கைவளை சொர்க்கமும் கள்ளமோ கானலோ தோற்றேன், பெண்மையே பொய்மையோ பொய்மையே பெண்மையோ பேதையர் கூடலை ஏற்றேன்..’ போன்ற இடங்களில் சித்தர் மரபினைக் காண முடியும்.

    “நான்தான் கண்ணதாசன், எனது கதை கவிதை கட்டுரைகளைப் படிக்க கண்ணதாசன் மாத இதழ் படியுங்கள், கண்ணதாசன், சென்னை 17” என்ற கம்பீரக் குரலை எழுபதுகளின் பிற்பகுதியில் விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டோர் மறக்க முடியாது.

    தனக்குத் தானே இரங்கற்பா எழுதி வைத்துவிட்டுப் போன கவிஞர், தான் இறந்த செய்தி கேட்டால் யார் முதலாவதாக வந்து நிற்பார் என்று தான் இருக்கும்போதே பார்க்கத் துடித்த வித்தியாசமான மனிதர், திருப்பூர் தொழிற்சாலை அரவத்தின் நடுவே அமர்ந்துகூட தன்னால் கவிதை எழுத முடியும் என்று சவால் விடுத்த குழந்தை உள்ளம், கண்ணதாசன்.

    முத்தையா என்ற தன்பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்ட கவியரசு, கண்ணனை முன்வைத்து அடுக்கித் தள்ளிய சுவைமிகுந்த கவிதைகளின் ஒளிக் கீற்றுக்கு இந்த எடுத்துக்காட்டு போதுமானது. ஏனெனில், அவர் உள்ளத்தின் எதிரொலி அதில் கேட்கிறது.

    நள்ளிராப் போழ்தினில் நானுமென் கண்ணனும்
    உள்ளுறும் பொருள்களை உரைப்பதுண்டுகாண்
    கள்ளினும் இனியவென் கண்ணன் சொன்னது
    பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே!

    வாழ்வைத் துறக்க முடிவெடுத்த மனிதரையே தனது பாடல்கள் மூலம் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முடிந்த கவிஞரின் பாடல்களும் நிரந்தரமானவை ஆகத் தானே இருக்க முடியும்….எந்த நிலையிலும் அவருக்கும் மரணமில்லைதான்!

    *******************

    Share
  • காதலின் பொன்வீதியில் – 8

    – மீனாட்சி பாலகணேஷ்.

    பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் …

     

    ‘பெண்களுக்கு அழகின் பயன் ஒன்றுதான்; காதலன் மனதைத் தன் வசப்படுத்தி, அவனது அன்பை நிரந்தரமாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற இயலாத தன் அழகைப் பார்வதி நொந்து கொண்டாள்’- என்கின்றது குமாரசம்பவம் எனும் சமஸ்கிருத நூல்.

    ‘ஆகவே மனதை ஒருமைப்படுத்தித் தவம் செய்து சிவனை அடைவதன் மூலம் தனது அழகினைப் பயனுடையதாக்க அவள் விரும்பினாள்,’ என்கிறார் இதனை இயற்றிய காளிதாசர்.

    யத் துஷ்கரம் யத் துராபம் யத் துர்கம் யச்ச துஸ்தரம்
    தத் ஸர்வம் தபஸா ப்ராப்யம் தபோஹி துரதிக்ரமம் II

    ‘வேறு எந்த உபாயத்தினாலும் அடைய இயலாததையும் தவத்தினால் அடைய இயலும்’ என்பது ஸ்லோகம்.

    இதை நன்றாக அறிந்தவள் பார்வதி. ஆகவேதான் கடினமான தவம் இயற்றத் துணிந்தாள் அவள். யாராலும் அவள் உறுதியைக் குலைக்க முடியவில்லை. தான் விரும்பிய பொருளில் உறுதியான மனத்தை உடையவரையும், பள்ளத்தை நோக்கி ஓடுகின்ற வெள்ளத்தினையும் யாரால் திசை திருப்ப இயலும்?

    தவம் செய்வதற்கு ஏற்ற கோலம் பூண்டு மரவுரி அணிந்து கூந்தலை சடைகளாகச் செய்து கொண்டாள். கையில் ஜபமாலையை ஏந்தினாள். இமவானின் அருமை மகளாக சுகவாழ்வு வாழ்ந்த அவள் கடினமான தரையில் அமர்ந்து தவம் இயற்றினாள்; கையைத் தலையணையாகக் கொண்டு உறங்கினாள். தினம் மூன்று முறை நீராடி உடலைத் தூய்மை செய்து கொண்டாள்.

    ஆனால், இவ்வாறு அவள் செய்த தவத்தினால் விரும்பிய பயன் கிட்டவில்லை! சற்றும் மனம் தளராத பார்வதி, தன் சரீரத்தின் மென்மையைப் பொருட்படுத்தாமல் மேலும் கடினமான தவத்தை இயற்றலானாள். ‘பஞ்சாக்னி தபஸ்’ எனும் கொடிய தவத்தை மேற்கொண்டாள். அது என்ன? நாற்புறமும் தீயை வளர்த்து, அதன் நடுவே நின்று கொண்டு, சூரியனையே பார்த்தபடி தவம் செய்யலானாள்.

    பனிக்காலத்தில் தாமரை இல்லாத தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தவம் செய்தாள். மென்மையான தாமரை போன்ற தனது தேகத்தை இவ்வாறு வருத்திக் கொண்டு அவள் கடுந்தவம் செய்தது, மகரிஷிகளின் தவத்தினையும் தாழ்ந்ததாகச் செய்தது.

    ஏன்? என்ன ஆயிற்று? அவளுடைய காதல் ஏன் நிறைவேறவில்லை? பார்வதி ஏன் கடுந்தவம் இயற்ற விரும்புகிறாள்? காரணம் என்ன?

    ***************************************************************

    பண்டொரு நாள்…………………..
    சிவபிரான் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார். மற்ற தினங்களைப் போல அன்றும் அவருக்குப் பணிவிடை செய்யப் பார்வதி அவருடைய ஆசிரமத்து வாயிலை அடைந்தாள்.

    அவள் அழகே உருவானவள். வசந்த காலத்தின் ஒளி மிகு மலர்களான அசோக மலர்கள் இரத்தினங்கள் போலவும், கர்ணிகார மலர்கள் தங்க நகைகள் போன்றும், சிந்து வார மலர்கள் முத்துமாலைகளாகவும் அவளை அலங்கரித்தன. இளம் சூரியன் போல் மென்சிவப்பு நிறம் கொண்ட உடையுடுத்தி, பூங்கொத்தினால் வளைந்து ஒசிந்து ஒல்கும் சிவந்த தளிர்களையுடைய மெல்லிய பூங்கொடி போன்ற உடலமைப்புக் கொண்டவள்.

    இமவான் மகள் பார்வதி வந்திருப்பதாக நந்திதேவன் அறிவிக்கிறான். சிவனும் தலையை அசைத்து ஆமோதிக்கிறார்.

    பலவித மலர்களை அணிந்திருந்த பார்வதி சிரத்தை மிகத் தாழ்த்தி அவரை நமஸ்கரித்தாள். அப்போது அவளுடைய காதுகளின் மேல் வைத்திருந்த மலர்கள் நழுவிக் கீழே விழுந்தன.

    “பார்வதி! உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக ஏற்காத கணவனை நீ அடைவாயாக!” எனச் சிவபிரான் அவளை ஆசிர்வதித்தார் (அவர் வாக்கு முற்றிலும் உண்மையானது. பெரியோர்களின் வாக்கு என்றுமே பொய்ப்பதில்லை!).

    இச்சமயம் தேவர்களின் வேண்டுகோளுக்கும் தூண்டுதலுக்கும் இணங்க இவர்கள் இருவரையும் காதல் வயப்படச் செய்வதற்காகத் தனது மலரம்பை எய்யச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு மன்மதனும் ரதியுடன் மறைந்திருந்தான்.

    parvathi1

    தவம் செய்பவர்கள் அணிந்து கொள்ளத்தக்கதும், ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களின் விதைகளாலானதும் ஆன ஒரு மணிமாலையைப் பார்வதி தனது அழகிய சிவந்த கரங்களால் எடுத்துச் சிவனுக்கு அளிக்கிறாள். தலையைச் சிறிது தாழ்த்தி அம்மாலையை ஏற்றுக் கொள்ள சிவன் தயாராகிறார்.

    மன்மதன் தனது குறிதவறாத பாணமான ‘சம்மோஹன’த்தை வில்லில் நாணேற்றுகிறான்!

    parvathi2

    கோவைப்பழம் போலச் சிவந்த உதடுகளை உடைய பார்வதியின் முகத்தைச் சிவபிரான் ஆவலுடன் நோக்குகிறார். பார்வதியும் நாணத்தினால், மெய்ப்புளகமுற்றவளாகித் தனது காதலை வெளிப்படுத்துபவளாக, சிறிதே தன் தலையைச் சாய்த்துக் கடைக்கண்களால் சிவனை நோக்கி நிற்கிறாள்.

    கண்கள் கலந்து, காதல் கதை பேசி, உள்ளங்கள் உறவாடி மகிழ வேண்டிய போதில், அடடா! என்ன கொடுமை! சிவபிரான் தன் நிலை உணர்ந்து, புலன்களை அடக்கியவராகி, தன் மனதை இவ்வாறு தடுமாற வைத்தது யார் என நாலாபுறமும் நோக்குகிறார். மன்மதனைக் கண்டதும், சினத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து, அவனை எரித்துச் சாம்பலாக்குகிறார். பின் அவ்விடத்தை விட்டுத் தவம் செய்யச் சென்று விட்டார்.

    இப்போது பார்வதியின் நிலைமையை நாம் பார்க்க வேண்டும்.

    விரும்பிய காதலன், ‘காதல் வயப்பட்டோம்’ எனக் கண்களால் நொடிப்பொழுது கட்டுரைத்தவன், அந்த இன்பத்தினை அதே நொடியில் சிதைத்துத் துவைத்து விட்டு, அவளுடைய நிலை பற்றி ஒரு சிறிதும் கவலைப் படாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டால், ஒரு பெண்ணின் மனம் என்ன பாடு படும்? எவ்வளவு துயர் கொள்ளும்?

    அதுவும் அவளுடைய தோழிகளும் ரதி-மன்மதனும் காணும் வண்ணம் இது நிகழ்ந்ததால் அவள் இன்னுமே அவமானமடைந்து வெட்கிக் குறுகி நின்றாள்.

    உலகிற்கே தலையாய அழகி அவள். அவள் உயர்வான அழகும், மென்மை நிறைந்த பெண்மையும் நளினமும் அவள் மனம் வரித்துக் கொண்ட சிவபிரான் முன்பு பயனற்றதாயிற்று. மூர்ச்சையடைந்து துவண்டு கொடியெனத் தரையில் வீழ்ந்தாள் அவள்.

    ***************************************************************

    நினைவு வந்ததும் அவள் செய்யத் துணிந்த செயல் ஒன்றே தான்- அது தவம் செய்து தனது காதலனை, கணவனாகப் பெறுவது என்பது. அதனால் தான் தவம் இயற்றப் புகுந்தாள்.

    ***************************************************************

    செய்தற்கரிய உயர்ந்த தவத்தைச் செய்ததால், தவப்பயன் தானே வரவேண்டும் அல்லவோ? இப்போது பார்வதியின் தவச்சாலைக்குச் சென்று என்னவாயிற்று எனப் பார்க்கலாமா? செய்த தவத்தின் பலன் நெருங்கி வரும் வேளை- ஆஹா! சிவபூஜையில் கரடி போல , யார் இது?

    பார்வதியின் ஆசிரமத்தில், மிகுந்த ஒளி பொருந்திய உடலும், மான்தோல் அணிந்து கையில் ஏந்திய தண்டத்துடன், சடாமுடி தரித்த ஒரு பிரம்மசாரி* நுழைந்தார். பார்வதி அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தாள்.

    மரியாதையை ஏற்றுக் கொண்டவர், களைப்பு நீங்கியதும் சொன்ன சொற்கள்…..

    இவர் யார்? தவசீலரா அல்லது கலா ரசிகரா? காமுகரா?

    “இக்கொடிகளின் தளிர்கள், சாயம் பூசாவிடினும் இயற்கையிலேயே சிவந்த உனது உதடுகள் போல உள்ளன!”

    “ஆசிரமத்திலுள்ள இந்த மான்கள் உனது கண்களுக்கு உவமையாக இருக்குமாறு தமது கண்களைச் செய்து கொள்ள முயலுகின்றன!”

    “நீ கங்கையினும் உயர்வானவள்! உனது நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த நட்பின் உரிமையால் நான் உன்னை ஒன்று கேட்கிறேன். நீ எதனை விரும்பித் தவம் செய்கிறாய்? உனக்கு செல்வமும், சுகங்களும், அழகும், இளமையும் பருவமும் உள்ளனவே. இன்னும் வேறென்ன வேண்டும்?” என்றார் அந்த பிரம்மசாரி.

    இப்போது, கச்சியப்பச் சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தில் இந்தக் கதை தொடர்வதைக் காணலாமா?

    “உனது இந்த அழகெல்லாம் அழியுமாறு எதற்காக இந்தத் தவம் செய்கிறாய்?” எனக் கேட்டார் வயதில் முதிர்ந்த அந்த பிரம்மசாரி.

    “அப்பொழுது உமை தன்னை ஆதரவொடு பாராச்
    செப்புதல் அரிதாம் உன் திரு நலன் அழிவு எய்த
    மெய்ப்படு தசை ஒல்க மிகுதவம் முயல்கின்றாய்
    எப்பொருள் விழைவுற்றாய் எண்ணியது உரை” என்றான்.

    “சுவாமி! பரமேசுவரனாகிய சிவபிரானை அடைய வேண்டியே எம் தலைவியார் தவம் செய்கின்றார்கள், ” என்றாள் தோழியான விசையை.

    ‘கட கட’வெனச் சிரித்தவர், “அயனும் மாலும், தேவரும் மூவரும் காணவொண்ணா ஒருவனை அடையவா தவம் செய்கிறாய்? அது நடக்கக் கூடிய செயலல்லவே?” என எள்ளி நகையாடுகிறார்.

    பார்வதிக்குச் சினம் மிகுகிறது. “முடிவற்ற அந்த இறைவன் என் விருப்பத்தினை முடித்து வைக்காவிடினும் இன்னும் கடுமையாய்த் தவம் செய்து அன்பினால் அவரை அடைவேன். அறிவு முதிர்ந்தவர் போல் காணப்படும் நீர் ஏன் பித்தன் போன்று பேசுகின்றீர்?” என்கின்றாள்.

    “முடிவிலாது உறை பகவன் என் வேட்கையை முடியாது
    விடுவன் என்னினும் தவத்தினை விடுவனோ மிக இன்னம்
    கடிய நோன்பினை அளப்பு இல செய்து உயிர் கழிப்பேன் நான்
    நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீ” என்றாள்.

    இவ்விளம் பெண்ணின் திட உள்ளம் அந்தணருக்கு வியப்பை மூட்டியதோ என்னவோ, இன்னும் சிறிது பார்வதியிடம் விளையாடத் துணிந்தார் அவர். “ஆமாம்! அவர் என்ன அவ்வளவு உயர்வானவரோ? அவர் அணிவது யானை, புலி இவைகளின் தோலாலான ஆடை; ஏறுவது ஒரு கிழமாடு! பாம்பு தான் அணிகலன்கள். எலும்பு மாலை; மண்டையோட்டு உண்கலம்; கொடிய நஞ்சே உணவாகும்,” எனப் பழித்துப் பட்டியலிட்டு அவளது சினத்தைக் கூட்டுகிறார்.

    “ஆடை தோல் விடை ஏறுவது அணிகலம் அர என்பு
    கேடு இல் வெண் தலை மாலிகை கேழலின் மருப்பு இன்ன
    ஓடு கொள்கலம் ஊண் பலி வெய்ய நஞ்சு உலப்பு உற்றோர்
    காடு அதே நடம் புரி இடம் கண்ணுதல் கடவுட்கே.”

    “நீர் இவ்வாறு இறைவனைப் பழிக்கிறீர். உம்மெதிரே நிற்பதும் பாவம்; மறை ஓதியவர், பெரியவர் என மதித்தேன். இவ்வாறெல்லாம் பேசுவதாயின், இப்போதே இங்கிருந்து சென்று விடுங்கள்,” என்றாள் பார்வதி.

    அவர் விடாக்கண்டன்! “பெண்ணே! என்னை இவ்வாறு நீ விரட்டலாகுமோ? நான் இங்கு வந்த காரணமே உன்மீது மையல் கொண்டு உன்னை முறைப்படி மணந்து கொள்ள ஆசை கொண்டதனால் தானே,” என்று கூறிப் புன்னகை புரிந்து நின்றார் முதிய அந்தணர்!

    அறத்தினைப் புரிவாள் இவ்வாறு அறைதலும் “அணங்கே ஈங்கு உன்
    திறத்தினில் ஆர்வம் செய்து சென்ற என் செயல் கேளாது
    புறத்திடைப் போதி என்று புரைவதோ புகுந்த பான்மை
    மறைச் சடங்கு இயற்றி நின்னை வரைந்திடற்கு ஆகும்” என்றான் அந்த அந்தணப் பிரம்மசாரி*!

    தவத்தால் வருத்திய உடலைக் கொண்ட இமவான் மகள் திடுக்குற்று நின்றாள்.

    உள்ளம் பதைக்க விம்மி விம்மி அழுதவாறு, “நீர் தகாத சொற்களைக் கூறினீர். நீர் செல்லாவிடின் நான் இங்கிருந்து செல்கிறேன்,” எனத் திரும்பிப் போக எத்தனித்தாள் பார்வதி.

    (இங்கு குமாரசம்பவத்தில் காளிதாஸர் கூறுவதைப் பார்க்கலாமா?)

    திரும்பிச் செல்ல முயன்றவளின் கரத்தினை வலிந்து பற்றி இழுத்தார் பிரம்மசாரி- எல்லையற்ற சினத்துடன் அவரை எதிரெடுத்து நோக்கியவள் பிரமிப்பிலும், வியப்பிலும், நாணத்திலும் மூழ்கினாள். அங்கு அவள் கண்டது யாரை? முதிய அந்தணர் வடிவை விடுத்து தமது உண்மை உருக்கொண்டு காதலில் கனிந்த புன்னகை பூத்த வண்ணம் சிவபிரானே அங்கு நின்றார்.

    திகைத்து நின்றாள் பெண்ணணங்கு! தனது தவத்தின் பயன் நேரில் எதிர்பாராது வந்ததாலும், அவரைப் பற்றி வாய்விட்டுப் புகழ்ந்து பேசித் தன் காதலையும் வெளியிட்டதாலும், நெகிழ்ந்து நாணி நின்றாள்.

    காதலனான சிவன் அவளை நோக்கிக் கூறுவார்: “உனது கடும் தவத்தினை விலையாகக் கொடுத்து நீ என்னை அடிமைப் படுத்திக் கொண்டு விட்டாய். இனி என்றென்றும் நான் உந்தன் அடிமை.”

    பார்வதி தனது தவத்தின் பயனைக் கண்ணுற்றாள்; அவர் இனிய சொற்களைக் காதால் கேட்டாள்; உவகைப் பெருக்கு மிக்கிட ஆனந்த வெள்ளத்தில் நீந்தலானாள்.

    ***************************************************************

    ( *காளிதாசரின் குமாரசம்பவம் சிறிது வயது முதிர்ந்த பிரம்மசாரி என்கிறது; கச்சியப்பரின் கந்தபுராணம் கிழ அந்தணர் என்கிறது. நாம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்)

    ***************************************************************

    தவப்பயனைத் தருபவர், நேரில் வந்து காதலியைக் கைப்பிடிக்க வேண்டியது தானே! இவ்வாறெல்லாம் வம்பு செய்து, அவளை இன்னும் தொடர்ந்து வருத்தி மகிழ வேண்டுமோ என நாம் எண்ணலாம். இதுவும் ஒரு காரணத்திற்காகத்தான்- தன்னிடம் அவள் கொண்ட காதலை அவள் வாயினாலேயே கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த விளையாட்டு. சிவபிரானாகிய தலைவனுக்குத் தான் திருவிளையாடல்கள் மிகவும் விருப்பமானவை ஆயிற்றே!

    தன் காதலியாகிய பார்வதியிடம், சிவபிரான் அவளழகை வருணிப்பதாக வேறொரு நூலிலும் நாம் காணவில்லை; காளிதாசர் அந்தக் குறையை தமது குமாரசம்பவம் எனும் இந்நூலில் பூர்த்தி செய்கின்றார்! மேலும், பார்வதியின் திருவாயிலிருந்தே தமது மேன்மைகளை அவள் கூறக் கேட்டு மகிழவும் இது ஒரு உபாயம், ஈசன் செய்தது!

    தனதழகின் பயன் வீணாயிற்றே என வருந்தியல்லவா அவள் தவம் செய்யப் புகுந்தாள்? காதலியைத் தவிக்க விடலாமா? காதலின் இனிய தருணங்கள், காதலியைக் காதலன், “பொன்னே, முத்தே, என் உயிரே,” எனவெல்லாம் வருணித்து அவள் அழகையும் குணங்களையும் போற்றுவது தான். அதைத்தான் அண்ணலும் செய்து மகிழ்கிறான்.

    பார்வதியின் அன்பின் மேன்மையை அறிந்ததால் அன்றோ அண்ணல் சிவபிரான் தன் சக்தியான அவளுக்குத் தன் உடலிலேயே பாதியை அளித்தான் ?

    முழுமையான நிபந்தனையற்ற அன்பும், ஒருமைப்பட்ட செம்மையான மனமும் தான் காதலுக்கு இன்றியமையாத தேவைகள் என்பது காதலின் பொன்வீதியில் நடை பயிலும் இளம் காதலர்கள் உணர வேண்டியனவாகும்.

    குமார சம்பவத்தில் வரும் பார்வதியின் தவம் இதனைத் தெளிவாக விளக்கி உள்ளது!

    ***************************************************************

    படம் உதவி:
    நன்றி; © அம்புலிமாமா
    நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்தவரும், படம் எடுத்தவரும் – மீனாட்சி பாலகணேஷ்.

     

     

    Share
  • இணையத் தமிழே இனி…

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    சுணையற்று உறைந்தவர் மணை விட்டெழுகிறார்!
    அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!
    புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!
    இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!
    இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்குப்
    பணையுடைப் பாட்டரும் காணாத சுரபி           surfing-the-internet
    பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி
    கணைச் சூடாகாது வெல்லல் வாசி

    தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்
    பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்
    ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து
    வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை
    பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்
    கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்
    நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்
    யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

    கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,
    கொட்டிய கலைகள், சமயம், அரசியல்
    எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென
    சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்த்
    தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!
    தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!
    எட்டும் இணையத் தமிழே இனி
    கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

     (மணை – அமரும் பலகை, சிறு பீடம்;   புணை – தெப்பம்
    பணை – பெருமை;  கணைச் சூடு – நோய் வகை
    சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் ( 10 )

    ஓலைத்துடிப்புகள் (9) ஆம் பாடலுக்கான பொழிப்புரை
    ===============================================

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
    நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
    பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
    அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
    தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
    மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!

    தலைவன் பால் காதல் உற்ற போதும் அது காதல் தான் என்று உணர்ந்து கொள்ள இயலாத ஒரு பால்வடியும் பிள்ளைத்தனம் மாறாத “மடப்பம்” உடையவள் தலைவி.மரப்பாச்சி வைத்து “அம்மா பிள்ளை”விளையாடும் தன்மையவள்.”பைஞ்சாய்” எனும் ஆற்றோர நுண்ணிய கோரையில் செய்யப்பட்ட பொம்மையை தன் பிள்ளையாக நினைத்து விளையாடுகிறாள்.உடல் அளவில் கூட இன்னும் முதிராதவள் தான்.சுரைக்கொடியின் காய் இன்னும் வளர்ச்சி நிலையில் நீள்தல் உறாது சிறிய பசுமையான காய் போல தோற்றம் தரும் முலையினை தாய்ப்பாசம் மிக்க முலையாய் அந்த பொம்மையின் வாய் அருகே காட்டி “பொய்ப்பால்” ஊட்டும் விளையாட்டில் ஆழ்ந்து விட்டாள்.இருப்பினும் அதனில் நாணம் கொண்டு மெல்லிய சிரிப்பை உதிர்க்கிறாள்.தன்மை படர்க்கை முன்னிலை என்னும் இலக்கணம் எல்லாம் அந்த பொம்மைப் பிள்ளையிடம் ஒன்றாய் நிரவி விட்டது.தன்னை தாயாய்(தன்மை) ஆக்கி பொம்மையை குழந்தையாய்க்கொண்டு (படர்க்கை) அதன் தந்தை நீ தான் என்று உன்னை நோக்கி ஓங்கிய குரலில்(தலைவனை நோக்கி) அழைப்பதே அவளது விளையாட்டு. (தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்)

    வீடுகளில் அம்மா பால் ஊட்டும் போது பொய்யாய் அழைப்பது உண்டு.”அப்பா சீக்கிரம் வாங்க!உங்க பையன் பால் குடிக்க மாட்டேனென்கிறான்”என்று செல்லமாய் அழைப்பது உண்டு அல்லவா! அது போன்றது தான் இந்த பொய்ப்பால் ஊட்டல். தோழிக்கு ஆற்றமை தாங்க வில்லை.”என்ன மடச்சி இவள்?” விரைவாய் வந்து இவளை காப்பாற்று என்கிறாள் தலைவனை நோக்கி. (“மடவள் என் இவள்?வந்திசின் ஓம்புமன்.”)

    முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
    ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
    பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
    பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    உறைநோய் உற்று நின்னை நோக்கும்
    நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.

    கிழடாய்ப்போன முதுகு கூன் விழுந்த நாரை ஒன்று தங்குமிடம் (இறை) தேடி திரிய கரையின் ஞாழற்பூவின் கிளை வளைந்து காற்றுக்கு ஏற்றபடி ஆட நெய்தல் பூக்கள் நெருக்கமாய் பூத்து ஆடி ஆடி அசைய (பதைப்ப..அசைய ;ததைந்த…நெருங்கிய) அந்த அழகிய உப்பங்கழியில் குளிர்பொருந்திய கரையோர பாசிபடர்ந்த நீரலைகளுடன (பைந்திரை) விளங்கும் கடற்கரைப்பட்டினத்து தலைவனே!உடலே உடலோடு போர் செய்தாற்போன்ற காதல் நோயின் வலியால் முறுக்கிய நிலையில் செம்பிழம்பாய் நெருப்பு பற்றிக்கொண்டது போல் அந்த உடம்பில் தங்கி அவளை துயர்ப்படுத்தும்.அதனால் அவள் உன்னை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.நரம்புகளால் நன்கு முறுக்கப்பட்ட யாழின் இன்னிசை ஒத்த சொல்லை உடைய உன் தலைவி ஏதேதோ குழறுகிறாள்! இது தகுமோ?

    ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
    ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
    சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
    மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
    துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.

    ஒளிபொருந்திய மினுமினுப்பான மணலில் படுத்துக்கிடப்பதைப்போன்ற கரிய கொம்பின் எருமையை ஒத்த பளுமிகுந்த படகு அங்கே கரையில் ஒதுங்கிக்கிடக்கும்.அதன் மீது சிறகுகளால் மொய்க்கும் நாரைக் கூட்டங்கள் நிறைந்த துறையை சேர்ந்த தலைவனே!மடமை பொருந்திய இந்த சிறு பெண்ணின் பெரிய காதல் நோயை துடைக்கும் வழியை காண்பாயாக!உன் பார்வைகள் அவள் மீது தூவினாலே போதும்.அந்த பூமழையை நீயும் பார்த்து களிப்பாயாக!

    வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
    கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
    இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
    உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
    உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

    விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.எனவே மரப்பாச்சியாய் இருந்தவளுக்குள் பாய்ச்சிய மின்னலாய் ஆனதே இவள் காதல்.கண்ணின் முளைபோல் கருவிழிக்குள் நுழையும் ஒளிக்கதிர் (எல்கதிர்) வியப்புச்சிறகுகள் விரியும் வண்ணம் அவள் உள்மனத்தில் எண்ணங்கள் தேக்கி நிற்கின்றாள்.இருள் எல்லா வெளிச்சத்தையும் தின்றுவிடுதல் போல் ஒரு அடர் இருள் தோன்றி (உன்னைப் பிரிந்த துயரம்)அவளை அலைக்கழிக்கிறது.அலைகளால் அரித்து அரித்து உண்ணப்படும் அந்த நீர்க்கரையில் மண்ணே மறைந்து
    போய்விடும் நிலையும் வந்து விடும் போல் இருக்கிறது.செறிவுற்ற மூங்கில் கட்டமைப்பின் தோள் அழகு மிக்கவனே இவளை இவள் துன்பத்திலிருந்து விடுவிப்பாயாக.

    ஓலைத்துடிப்புகள் ( 10 )

    கவிஞர் ருத்ரா

    அம்மூவனார் எழுதிய “நெய்தல் செய்யுட்”கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

    “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
    காணிய சென்ற மடநடை நாரை”..

    என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் “செத்த” என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் “செத்தவன் கையில் வெத்தலை பாக்கு “இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த “செத்த நிலையை” தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் “தங்கப்பதக்கம்” திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

    “செத்தென” என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

    ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் “மடநடை”அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் “மடம்” அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் “போல” என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் “போல” என்று வழங்கப்படுவதில் “சங்கத்தமிழின் சொல்லியல் முறை” ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படியென்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் “செத்தையாருக்குள் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் “உறங்குவது போலும் சாக்காடு” என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி “நடைப்பிணங்களாய்”(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே “செத்த” “போல” என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென”என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.

    இப்போதும் இதன் பொழிப்புரையை இந்த இதழிலேயே தர இயலவில்லை.செமஸ்டர் அர்ரியர்ஸ் போல வரும் இக்குவியலை வரும் இதழில் சமப்படுத்திவிடுவேன் என நம்புகிறேன்.சிரமத்தை பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென..”

    பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
    உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
    தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
    நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
    விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
    வெண்ணிப்பறந்தலை ததையநூறி
    குருதி பொத்திய அகல் அறை மன்று
    ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
    மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
    முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
    மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
    கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
    அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
    வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
    மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
    வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
    அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
    வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
    காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
    கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
    எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
    பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
    அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
    படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

    =================================================================

    Share
  • போய்விடு போதையே!

    -துஷ்யந்தி

    சுதந்திர நாட்டில் சுதந்திரம் பறிக்க
       ஏவினாய் விதை தூவினாய்
    தலையை ஆட்டும் மந்தையாய் எமை
       மீட்டினாய் ஆசை யூட்டினாய்!

    அற்பமாய் மனதிலேபல ஆசைகள்
        காட்டினாய் பழி ஈட்டினாய்
    கற்பினை அழிக்கக் கயவர்கள் சிலரைத்
       தோற்றினாய் புன்மை ஆக்கினாய்!              intoxication

    போதைக்கு அடிமையா யிருத்தல்
        நியாயமோ இது தேவையோ?
    சிந்தனை செய்யா மனிதனேயிது
        நீதமோ பிடி வாதமோ!

    உன்னதவாழ்வின் அழகிய நொடிகள்
          மாறுமோ வீண் போகுமோ
    புத்தி கூறிநல் வழிப்படுத்தல்
          பாபமோ மனஸ் தாபமோ?

    பெற்றதாய்க்கு இல்லை பிள்ளையெனப்
       போகவோ நாங்கள் சாகவோ?
    குற்றம் செய்வித்துச் சிறைக்குள்ளே
       தள்ளுவாயோ பழி கொள்ளுவாயோ!

    நல்ல மரத்திலே புல்லுருவியாய்நீ
       தொற்றுவாயோ கைப் பற்றுவாயோ
    வெற்றி வாகை சூடும்நேரம்
      தாழ்த்துவாயோ எமை வீழ்த்துவாயோ?

    புற்றுநோயாய்த் தொற்றி உயிர்குடிக்க
       வந்திட்டாய் சமூகம் அழித்திட்டாய்
    இன்னும்நீ செய்யும் கொடுமைக்கு
       மலைவுறோம் சித்தம் கலைவுறோம்!

    வந்தவழிதனில் திரும்பிப் பார்க்காது
       போய்விடு எம்மை வாழவிடு!
    நாளைய நாட்கள் வாசனைமலராய்
       மலரட்டும் யுகம் புலரட்டும்!

     

    Share
  • கவிதையாகும் விளங்காமை!

    -மெய்யன் நடராஜ்

    விளக்கமாக விளக்கிச் சொல்லியும்
    விளங்காத நிலையில்
    விளங்குச்சா என்னும்
    வாத்தியாரின் அதட்டலில்
    விளங்காததையும்
    விளங்கியதாய் தலையசைக்கும்
    விடலைநாட்களின் தொடர்ச்சி
    விடவே இல்லை இன்னும்….

    விளங்கிப் படிச்சவங்க எல்லாம்
    விலங்கியலும் பௌதீகமும் என
    விரிவாகப் படிக்கப் போனபோது
    விளங்காம படிச்ச எனக்கும்
    விளங்கிப் படிச்சிருந்தா கொஞ்சம்
    விளக்கமாப் படிக்கலாமுன்னு
    விளங்கியது,
    விளங்க வேண்டிய நேரத்தில்
    விளங்கிக்காம இருந்துட்டு
    விளங்காததை இப்போ
    விளக்கமாக விளக்குமாறு
    விளங்கியவர்களிடம் கேட்க, எடு
    விளக்கமாத்த என்பதில்
    விரிகிறது விசனத்தின் விசும்பு.

    விளக்குமாறு பற்றி
    விளக்குமாறு கேட்டால்
    விளக்குமாறே விளக்கும்

    விளக்கு மாதிரி இருந்தும்
    வெளிச்சம் தர மறுக்கும்
    விளக்கமானோர் எல்லாம்
    விளங்கியும் விளங்காமல் நடிக்கும்
    விவஸ்தைஇல்லா அவஸ்தைகளில் நின்று
    விடுதலைக்காய் போராடுவதிலும்
    விளங்காமல் இருப்பதே மேலென்று
    விளங்குவதில் விளங்குகிறது
    விளங்காம படிக்காததின் விளக்கம்

    விளக்கமாக படித்ததின்
    விலைகளில் நிர்ணயமாகின்ற
    விளக்கங்கள் இருதயம் மூடும்
    விசித்திரங்களில் விளையாடும்
    விளையாட்டு மைதானத்தில்
    விளையாடப்படும் பந்தாய்
    விளையாட்டுக்கும் விளையாடாமல்
    விளைவிக்கப்படும் சந்தோசங்களில்
    விளையாடுகிறது
    விலைகொடுத்தும் கிடைக்கா வான
    வில்லின் அழகுகள்

    விளங்கியதை விளங்காததாய் நோக்கும்
    விலங்கு மனசு வேண்டுவதற்கு
    விளக்கமாகும் விளக்கங்களுக்கு
    விலைகொடுக்கும் கொலைகளிலும்,
    விளங்காமலிருக்கும் கலைகளில்தான்
    வீணை வாசிக்கிறாள் என் சரஸ்வதி
    என்பதால்தான்
    வைத்தியமும் உபாத்தியாயமும்
    பொறியியலும் வணிகமும் என்ற
    பணம்பிடுங்கும் பிழைப்புகளிலும் நுழைந்து
    கவிதையாகி நிற்கிறது என் விளங்காமை!

     

    Share