கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் – சிறப்புப் பதிவு

2

கவிஞர் காவிரிமைந்தன்.

‘கண்ணதாசன்’ – இந்த ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனைப் புதையல்கள்? எத்தனைப் பொக்கிஷங்கள்? கடந்த நூற்றாண்டில், கால வெள்ளம் கரைத்துவிட முடியாத அளவு, தமிழ் பேசத் தெரிந்த மக்களின் இதயங்களில் நிறைந்திருக்கும் பெயர் ‘ கண்ணதாசன்.’

பாரதி, பாரதிதாசன் காலங்களுக்கு பின் வந்த கவிஞர்கள் வரிசையில், மக்கள் மனதில் இடம்பெற்ற கவிஞரின் சிறப்புகள் ஒன்றல்ல… இரண்டல்ல… ஓராயிரம்…
நாம் வாழ்கின்ற நூற்றாண்டில் நம் கண்முன்னே வாழ்ந்து…
அன்பன் கண்ணதாசன் என்று அழகுக் கையொப்பமிட்டு…
கவிஞர் கண்ணதாசன் என்று திரையுலகில் கோலோச்சி…
கவியரசு கண்ணதாசன் என்று தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டு…
கோடான கோடி தமிழ் நெஞ்சங்களில் இனிக்கின்ற பெயர் கண்ணதாசன்…
கொஞ்சும் தமிழ் மகளுக்குக் கொலுசு கட்டி சந்தக்கவி பல்லாயிரம் படைத்தவர் கண்ணதாசன்!

கவியரசரின் பாடல் வரிகள் என்பது..

kannadasan2* வெறும் கதைக்காக மட்டும் எழுதப்பட்டவை அல்ல…
* கதாநாயக, நாயகியர் பாத்திரப் படைப்புக்காக மட்டுமல்ல…
* இசை வடிவிற்கு வார்த்தைகள் வழங்கிய விழா மட்டுமல்ல, மாறாக என்றைக்கும் மாறாத வாழ்க்கைத் தத்துவங்களாக…
* மனித குலம் என்றைக்கும் நினைவில் கொள்ளத்தக்க வரிகளாய், வார்த்தைகளாய்…
* உறவுக்கும் பிரிவுக்கும் தக்கதோர் பாலமாய் …
* உணர்வின் வடிகாலாய்…
* பண்பாட்டிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் மிகச் சிறந்த உதாரணமாய்…
* பழமொழிகள் முதலாக மரபில் வரும் அத்தனை முத்துக்களையும் கோர்த்தெடுத்த மலர்ச்சரமாய்…
* வாழ்த்துகள் என்றால்.. வகை.. வகையாய்.. சூடிக் கொடுத்த பாங்கு..
* பக்தி என்றால் இசைந்து… கனிந்து உருகிடும் உள்ளம்…
* அனுபவ முத்திரைகள் கொட்டிக்கிடக்கும் அதிசயச் சுரங்கமாய்…
* வேதங்கள், உபநிடதங்கள் முதலான பல்வேறு புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் என்பனவற்றின் சாரங்களை எத்தனை எளிமையாக்கி…
* வார்த்தை வரிகளாய் வடித்து வைத்த வள்ளல்… கண்ணதாசன்… கண்ணதாசன்…

கவியரசர் தம் பாடல்களில் உள்ள சுகம் – தனி ராகம் – எளிய சொற்களை மட்டுமே கையாண்டு அவர் எட்டியிருக்கும் உயரம் விழியிமைகளை விரிய வைக்கும். வெறும் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த கண்ணதாசனிடம் தமிழ் எப்படி இப்படி கொட்டிக்கவிழ்த்த தமிழமுத சுரபியாய் அமைந்தது என்று வியக்காத பண்டிதரில்லை!

கவிதை, நயம், பொருள், சொல்லழகு என்று இலக்கணம் பயின்ற தமிழ்ப் புலவர்களுக்கும் வசப்படாத கற்பனை வளம் கொடிகட்டிப் பறந்தது கவிஞரிடம்! எழுதப்படிக்கத் தெரியாத எவரும்கூட கண்ணதாசனின் பாடல் அமுதம் கேட்டபின் தமிழின் இனிமையில் மூழ்கினர் என்பதே அந்த வெற்றித்திருமகன் வெள்ளித்திரையில் படைத்த வரலாறு. அப்பாடல்கள் காலத்தை வென்றவை என்பதற்கு இதுவே சாட்சி!

மனித குலத்திற்குத் தேவைப்படும் கருத்து முத்துக்களை – தமிழ்த்திரைப் பாடல் என்னும் ஊடகத்தின் வாயிலாக கோடான கோடி மக்களுக்கு ஆறுதலும், அறிவுரையும், தேறுதலும் தருகின்ற கண்ணதாசனை தரிசித்தேன்… இன்றும் தரிசிக்கிறேன்… என்றும் தரிசிப்பேன்!

கண்ணதாசன் – என்னைப் பொறுத்தவரை ஒரு மந்திரச்சொல் போல மகத்துவம் நிறைந்தது. இனிக்கும் தமிழை இதயம் வழிய வழிய தந்த வள்ளல். எளிய நடையில் பாமரனது நாவிலும் பைந்தமிழ் பரவச் செய்தவன். திரைப்பாடல் மூலமாக தெள்ளத் தெளிவாக மானுட வாழ்வின் சுக துக்கங்களைப் பதிவு செய்தவன். அனுபவ முத்திரையோடு அழகு தமிழும் ஆடிவரும் பேரழகை இசையின் வடிவோடு பெற்றிட்ட நாம் பேறு பெற்றவர்கள்… இதைவிடப் பேரின்பம் ஏது?

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் – சிறப்புப் பதிவு

 1. கண்ணதாசன் என்ற கவிதை வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரக் குவியல்களைக் காண உதவும் ஒரு “பைனாக்குலர்” பார்வையாக இந்தக் கட்டுரையைத் தந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
  அன்பன்,
  மீ.விசுவநாதன்

 2. .கண்ணதாசன் பிறந்த நாள் 

  உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்
  அயிவேலன் வாக்கென்ற, அந்த -மயிலிறகு
  கண்ணனின் தாசன் கவிச்சக்ர வர்த்தியின்று
  மண்ணில் பிறந்தார் மலர்ந்து”   என ….கிரேசி மோகனின் 
  வெண்பாவிற்கு ஏற்ப,  

  பொன் எழுத்தில் பொறிக்கவேண்டிய நாள்
  பாமரனுக்கும், பாட்டாளிக்கும் பாட்டுஎழுதிய கவிஞ்சன்
  மனித குலத்திற்காக  பாட்டு எழுதிய  கவிஞ்சன்
  உறவிற்கும், உணர்விற்கும் பாட்டு எழுதிய கவிஞ்சன்
  அன்பையும், பாசத்தையும், நிலைநாட்டிய கவிஞ்சன்
  பண்பாட்டையும், ஒருமை பாட்டையும் அறிவுறுத்திய கவிஞ்சன்,

  மற்றும், கண்ணதாசனின் பிறந்தநாளை, பாங்குற 
  எடுத்துரைத்த கண்ணதாசனின், தாசனாய் விளங்கும் 
  திரு. காவேரிமைந்தன் எழுத்துக்கள் நம்மை 
  பரவசபடுத்துகின்றது.

  ரா.பார்த்தசாரதி   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *