ஜூன் 24: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்

1

பிதற்றலும் கவிதையே…..

 

எஸ் வி வேணுகோபாலன்

kannadasan2

கண்ணதாசன் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் சார்..என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தவரை அன்றுதான் நான் அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு ஆண்டுகளுக்குமுன் என் வாழ்க்கை இணையின் கைக் கடிகாரத்திற்கு அவர் புதிய செல் எடுத்துப் பொருத்திக் கொண்டிருந்தார். கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள அந்தச் சிறிய கடைவாசலில் நின்றவாறு வழக்கம்போல் எனக்குப் பிடித்த ஒரு திரைப்படப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது தற்செயலாகத் தொடங்கிய பேச்சின் நிறைவில் மிகப் பெரிய கவிதை ரசிகரை, பாடல் வழிபாட்டாளரை நான் கண்டுகொண்டேன்.

அந்த எளிய மனிதர், தனது காதல் மனைவியைப் பறிகொடுத்த துயரமிக்க இரவுகளில் வாழ்க்கையின் கசப்பிலிருந்து விடுதலை பெறத் துடித்தபோது, அவரது உள்ளத்தில் கண்ணதாசனின் துன்பியல் பாடல்கள் மாற்றுவினை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய அவரது கண்களில், தானே கண்ணதாசன்தான் என்பது போன்ற பெருமித வெளிச்சம் மின்னுவதை நான் அதற்குப் பிறகு பலமுறை பார்ப்பதுண்டு.

இப்படி லட்சக்கணக்கான ரசிக இதயங்களில் கால காலமாகக் குடி இருக்கும் வண்ணம் எப்படி அவரால் ஒரு ரசவாதம் செய்ய முடிந்தது…இத்தனைக்கும் எளிமையோ எளிமையான சொற்களால் நிரம்பித் ததும்புகின்றன அவரது பாடல் மதுக் கிண்ணங்கள். தலைவன், தலைவி, நண்பன், எதிரி, ஊடல், கூடல், காதல், காமம், குறும்பும் சேட்டையும், கனிவும் பரிவும், சிரிப்பு, கண்ணீர், பாசம், வஞ்சகம், அருளுதல் மருளுதல், வேண்டுதல் மீறுதல், கேள்வியும் பதிலும், நெருப்பும் குளிர்ச்சியும்…..என்னதான் பாடவில்லை, கண்ணதாசன்!

காதலில் தோற்றவன் கடவுளை நொந்து கொள்ளுதல் உலக நியதி, ஆனால், ‘கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும், பிரிவென்னும் கடலினிலே மூழ்கவேண்டும், அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்…’ என்று (வானம்பாடி) சாபமிட முடிந்தது அவருக்கு. ‘கண்ணனையும் இந்த இடம் கலக்கவில்லையா, இந்த கர்ணனுக்கு மட்டுமென்ன இதயம் இல்லையா’ என்று காதல் உருகுதலை வடிக்கவும் முடிந்தது.

புராண பாத்திரங்களை கதைக்கருவிற்கு ஏற்ப பாடலில் இழைத்துக் கொண்டுவருவதில் பேரார்வம் மிகுந்திருந்தது அவரிடம். ரோஜாவின் ராஜா திரைப்படத்தில் தனது நண்பனுக்காகப் பெண் பார்க்கச் செல்கையில் அங்கே தனது காதலியைக் கண்டு திடுக்கிடும் நாயகன்முன் அந்தப் பெண் பாடுவதான ‘ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்’ என்ற அற்புதப் பாடலின் இலக்கிய நயம் அசாத்திய சுவை கொண்டிருப்பது. ‘கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே, அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே….’ என்று நிறைவடையும் அந்தப் பாடல் ஓர் அழகு சிற்பம்.

வாழ்க்கைப் படகு திரைப்படத்தின் ‘உன்னைத்தான் நான் அறிவேன்’ என்ற அருமையான பாட்டின் சரணத்தில், ;காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ, கண்களே பாவம் என்றால் பெண்மையே பாவம் அன்றோ’ என்று கொஞ்சும் சுசீலாவின் குரல், ‘பெண்மையே பாவம் என்றால்..’ என இழுத்து, ‘மன்னவனின் தாய் யாரோ?’ என்று கொண்டு நிறுத்தும் இடத்தில் ரசிகர், கண்ணதாசன் நினைவில் தனது உயிர் மூச்சை ஒரு சொடுக்கு போடும் நேரம் நிறுத்தி இழுத்துக் கொள்வார் அல்லவா…

‘நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும், நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்ற மிடுக்கோடு கே பாலச்சந்தரின் கதாநாயகி அவள் ஒரு தொடர்கதையாக நடந்து போகும்போதும், ‘தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே’ என்று தங்கையின் உயிரைக் காக்க ஓர் அண்ணன் போராடிக் கொண்டிருக்கும் போதும், ‘இங்கே என் காலம் எல்லாம் முடிந்துவிட்டாலும், ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்’ என்று நிச்சயதாம்பூலத்திற்கு ஒரு காதலன் தவிப்பாய்த் தவிக்கும்போதும் கண்ணதாசன் இல்லாமல் போயிருந்தால் என்னவாகி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடல்களில் அரசியலைக் கலந்த அந்த கால கட்டத்தில், காமராசரைக் கருத்தில் கொண்டு பல பாடல்களில் அவரைக் குறிக்கும் சொற்களைப் போட்டு எழுதியவர் கண்ணதாசன். சிவகாமி உமையவளே முத்துமாரி, உன் செல்வனுக்கும் காலம் வரும் முத்துமாரி (பட்டிக்காடா பட்டணமா), நல்லோர்கள் தம்நெஞ்சம் நவசக்தி பெறவேண்டும், ஆர்ப்பாட்ட அலை ஓசை வரவேண்டும், எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே….(ராஜபார்ட் ரங்கதுரை) என்று செல்கிறது அந்த அலைவரிசை.

எலந்தப்பயம் (பணமா பாசமா) போன்ற கொச்சையான பாடல்களையும் உள்ளடக்கியதுதான் கண்ணதாசனின் படைப்புலகம். திரைப் பாடல்கள் மூலம் பெற்ற அவரது பாடலின்பம் ஒரு பக்கம். கவிதைகளாக அவரிடமிருந்து பாய்ந்துவந்த பெருவெள்ளம் இன்னோர் அரிய பக்கம். அவரது அறுசீர், எண்சீர் விருத்தங்களின் ஓசைநயம், சொற்களின் வீச்சு, தாளகதி எல்லாம் உள்ளத்தைக் கொள்பவை. கம்ப ராமாயணச் செய்யுளை மிகுந்த ரசனையோடு தனது மேடைப் பேச்சுக்களில் சங்குசக சங்குசக சங்குசக சங்சங் என்று அவர் மெட்டுப் போட்டுச் சொல்வதைக் கேட்டோர் இசைநதி நுரைபொங்க வழிந்தோடும் அவரது உள்ளத்தை நேரில் கண்டிருப்பர்.

அவரது அரசியல் உணர்வுகளின் மாற்றங்களின் பதிவாகவும் அவரது கவிதைத் தொகுதிகள் அமைந்திருப்பதைப் பார்க்க முடியும். திராவிட இயக்கத்தின் செல்லப் பிள்ளையான அவரே, ‘இந்திய மலைகள் தோறும் இந்திரா பேர் கேட்டாயா’ என்றும் எழுதினார் வேறொரு கட்டத்தில். ஆட்டுக்குட்டி முட்டை இட்டு என்ற திரைப்பாடலின் முன் வடிவம், திராவிட நாடு குறித்த அவரது பகடியான, ‘குதிரை ஒரு முட்டையிட கோழி அதை அடைகாக்க குட்டியானை பிறக்கும்….’ என்ற கவிதைதான்.

எழுபதுகளின் பிற்பகுதியில் குமுதம் இதழில் வாரா வாரம் கண்ணதாசன் எழுதி வந்த கவிதைகள் ரசனை மிக்கவை. கேள்வனே கண்ணபிரானே என்ற தலைப்பிலான கவிதையில், ‘கண்வழி சொற்களும் கைவளை சொர்க்கமும் கள்ளமோ கானலோ தோற்றேன், பெண்மையே பொய்மையோ பொய்மையே பெண்மையோ பேதையர் கூடலை ஏற்றேன்..’ போன்ற இடங்களில் சித்தர் மரபினைக் காண முடியும்.

“நான்தான் கண்ணதாசன், எனது கதை கவிதை கட்டுரைகளைப் படிக்க கண்ணதாசன் மாத இதழ் படியுங்கள், கண்ணதாசன், சென்னை 17” என்ற கம்பீரக் குரலை எழுபதுகளின் பிற்பகுதியில் விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு விளம்பரங்களைக் கேட்டோர் மறக்க முடியாது.

தனக்குத் தானே இரங்கற்பா எழுதி வைத்துவிட்டுப் போன கவிஞர், தான் இறந்த செய்தி கேட்டால் யார் முதலாவதாக வந்து நிற்பார் என்று தான் இருக்கும்போதே பார்க்கத் துடித்த வித்தியாசமான மனிதர், திருப்பூர் தொழிற்சாலை அரவத்தின் நடுவே அமர்ந்துகூட தன்னால் கவிதை எழுத முடியும் என்று சவால் விடுத்த குழந்தை உள்ளம், கண்ணதாசன்.

முத்தையா என்ற தன்பெயரை கண்ணதாசன் என்று மாற்றிக் கொண்ட கவியரசு, கண்ணனை முன்வைத்து அடுக்கித் தள்ளிய சுவைமிகுந்த கவிதைகளின் ஒளிக் கீற்றுக்கு இந்த எடுத்துக்காட்டு போதுமானது. ஏனெனில், அவர் உள்ளத்தின் எதிரொலி அதில் கேட்கிறது.

நள்ளிராப் போழ்தினில் நானுமென் கண்ணனும்
உள்ளுறும் பொருள்களை உரைப்பதுண்டுகாண்
கள்ளினும் இனியவென் கண்ணன் சொன்னது
பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே!

வாழ்வைத் துறக்க முடிவெடுத்த மனிதரையே தனது பாடல்கள் மூலம் வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க முடிந்த கவிஞரின் பாடல்களும் நிரந்தரமானவை ஆகத் தானே இருக்க முடியும்….எந்த நிலையிலும் அவருக்கும் மரணமில்லைதான்!

*******************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஜூன் 24: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்

  1. கண்ணதாசன் படைப்புகளைப் பற்றிய அருமையான கட்டுரையைத் தந்த அன்பர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *