மீனாட்சி பாலகணேஷ்.

பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் …

 

‘பெண்களுக்கு அழகின் பயன் ஒன்றுதான்; காதலன் மனதைத் தன் வசப்படுத்தி, அவனது அன்பை நிரந்தரமாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற இயலாத தன் அழகைப் பார்வதி நொந்து கொண்டாள்’- என்கின்றது குமாரசம்பவம் எனும் சமஸ்கிருத நூல்.

‘ஆகவே மனதை ஒருமைப்படுத்தித் தவம் செய்து சிவனை அடைவதன் மூலம் தனது அழகினைப் பயனுடையதாக்க அவள் விரும்பினாள்,’ என்கிறார் இதனை இயற்றிய காளிதாசர்.

யத் துஷ்கரம் யத் துராபம் யத் துர்கம் யச்ச துஸ்தரம்
தத் ஸர்வம் தபஸா ப்ராப்யம் தபோஹி துரதிக்ரமம் II

‘வேறு எந்த உபாயத்தினாலும் அடைய இயலாததையும் தவத்தினால் அடைய இயலும்’ என்பது ஸ்லோகம்.

இதை நன்றாக அறிந்தவள் பார்வதி. ஆகவேதான் கடினமான தவம் இயற்றத் துணிந்தாள் அவள். யாராலும் அவள் உறுதியைக் குலைக்க முடியவில்லை. தான் விரும்பிய பொருளில் உறுதியான மனத்தை உடையவரையும், பள்ளத்தை நோக்கி ஓடுகின்ற வெள்ளத்தினையும் யாரால் திசை திருப்ப இயலும்?

தவம் செய்வதற்கு ஏற்ற கோலம் பூண்டு மரவுரி அணிந்து கூந்தலை சடைகளாகச் செய்து கொண்டாள். கையில் ஜபமாலையை ஏந்தினாள். இமவானின் அருமை மகளாக சுகவாழ்வு வாழ்ந்த அவள் கடினமான தரையில் அமர்ந்து தவம் இயற்றினாள்; கையைத் தலையணையாகக் கொண்டு உறங்கினாள். தினம் மூன்று முறை நீராடி உடலைத் தூய்மை செய்து கொண்டாள்.

ஆனால், இவ்வாறு அவள் செய்த தவத்தினால் விரும்பிய பயன் கிட்டவில்லை! சற்றும் மனம் தளராத பார்வதி, தன் சரீரத்தின் மென்மையைப் பொருட்படுத்தாமல் மேலும் கடினமான தவத்தை இயற்றலானாள். ‘பஞ்சாக்னி தபஸ்’ எனும் கொடிய தவத்தை மேற்கொண்டாள். அது என்ன? நாற்புறமும் தீயை வளர்த்து, அதன் நடுவே நின்று கொண்டு, சூரியனையே பார்த்தபடி தவம் செய்யலானாள்.

பனிக்காலத்தில் தாமரை இல்லாத தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தவம் செய்தாள். மென்மையான தாமரை போன்ற தனது தேகத்தை இவ்வாறு வருத்திக் கொண்டு அவள் கடுந்தவம் செய்தது, மகரிஷிகளின் தவத்தினையும் தாழ்ந்ததாகச் செய்தது.

ஏன்? என்ன ஆயிற்று? அவளுடைய காதல் ஏன் நிறைவேறவில்லை? பார்வதி ஏன் கடுந்தவம் இயற்ற விரும்புகிறாள்? காரணம் என்ன?

***************************************************************

பண்டொரு நாள்…………………..
சிவபிரான் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார். மற்ற தினங்களைப் போல அன்றும் அவருக்குப் பணிவிடை செய்யப் பார்வதி அவருடைய ஆசிரமத்து வாயிலை அடைந்தாள்.

அவள் அழகே உருவானவள். வசந்த காலத்தின் ஒளி மிகு மலர்களான அசோக மலர்கள் இரத்தினங்கள் போலவும், கர்ணிகார மலர்கள் தங்க நகைகள் போன்றும், சிந்து வார மலர்கள் முத்துமாலைகளாகவும் அவளை அலங்கரித்தன. இளம் சூரியன் போல் மென்சிவப்பு நிறம் கொண்ட உடையுடுத்தி, பூங்கொத்தினால் வளைந்து ஒசிந்து ஒல்கும் சிவந்த தளிர்களையுடைய மெல்லிய பூங்கொடி போன்ற உடலமைப்புக் கொண்டவள்.

இமவான் மகள் பார்வதி வந்திருப்பதாக நந்திதேவன் அறிவிக்கிறான். சிவனும் தலையை அசைத்து ஆமோதிக்கிறார்.

பலவித மலர்களை அணிந்திருந்த பார்வதி சிரத்தை மிகத் தாழ்த்தி அவரை நமஸ்கரித்தாள். அப்போது அவளுடைய காதுகளின் மேல் வைத்திருந்த மலர்கள் நழுவிக் கீழே விழுந்தன.

“பார்வதி! உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக ஏற்காத கணவனை நீ அடைவாயாக!” எனச் சிவபிரான் அவளை ஆசிர்வதித்தார் (அவர் வாக்கு முற்றிலும் உண்மையானது. பெரியோர்களின் வாக்கு என்றுமே பொய்ப்பதில்லை!).

இச்சமயம் தேவர்களின் வேண்டுகோளுக்கும் தூண்டுதலுக்கும் இணங்க இவர்கள் இருவரையும் காதல் வயப்படச் செய்வதற்காகத் தனது மலரம்பை எய்யச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு மன்மதனும் ரதியுடன் மறைந்திருந்தான்.

parvathi1

தவம் செய்பவர்கள் அணிந்து கொள்ளத்தக்கதும், ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களின் விதைகளாலானதும் ஆன ஒரு மணிமாலையைப் பார்வதி தனது அழகிய சிவந்த கரங்களால் எடுத்துச் சிவனுக்கு அளிக்கிறாள். தலையைச் சிறிது தாழ்த்தி அம்மாலையை ஏற்றுக் கொள்ள சிவன் தயாராகிறார்.

மன்மதன் தனது குறிதவறாத பாணமான ‘சம்மோஹன’த்தை வில்லில் நாணேற்றுகிறான்!

parvathi2

கோவைப்பழம் போலச் சிவந்த உதடுகளை உடைய பார்வதியின் முகத்தைச் சிவபிரான் ஆவலுடன் நோக்குகிறார். பார்வதியும் நாணத்தினால், மெய்ப்புளகமுற்றவளாகித் தனது காதலை வெளிப்படுத்துபவளாக, சிறிதே தன் தலையைச் சாய்த்துக் கடைக்கண்களால் சிவனை நோக்கி நிற்கிறாள்.

கண்கள் கலந்து, காதல் கதை பேசி, உள்ளங்கள் உறவாடி மகிழ வேண்டிய போதில், அடடா! என்ன கொடுமை! சிவபிரான் தன் நிலை உணர்ந்து, புலன்களை அடக்கியவராகி, தன் மனதை இவ்வாறு தடுமாற வைத்தது யார் என நாலாபுறமும் நோக்குகிறார். மன்மதனைக் கண்டதும், சினத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து, அவனை எரித்துச் சாம்பலாக்குகிறார். பின் அவ்விடத்தை விட்டுத் தவம் செய்யச் சென்று விட்டார்.

இப்போது பார்வதியின் நிலைமையை நாம் பார்க்க வேண்டும்.

விரும்பிய காதலன், ‘காதல் வயப்பட்டோம்’ எனக் கண்களால் நொடிப்பொழுது கட்டுரைத்தவன், அந்த இன்பத்தினை அதே நொடியில் சிதைத்துத் துவைத்து விட்டு, அவளுடைய நிலை பற்றி ஒரு சிறிதும் கவலைப் படாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டால், ஒரு பெண்ணின் மனம் என்ன பாடு படும்? எவ்வளவு துயர் கொள்ளும்?

அதுவும் அவளுடைய தோழிகளும் ரதி-மன்மதனும் காணும் வண்ணம் இது நிகழ்ந்ததால் அவள் இன்னுமே அவமானமடைந்து வெட்கிக் குறுகி நின்றாள்.

உலகிற்கே தலையாய அழகி அவள். அவள் உயர்வான அழகும், மென்மை நிறைந்த பெண்மையும் நளினமும் அவள் மனம் வரித்துக் கொண்ட சிவபிரான் முன்பு பயனற்றதாயிற்று. மூர்ச்சையடைந்து துவண்டு கொடியெனத் தரையில் வீழ்ந்தாள் அவள்.

***************************************************************

நினைவு வந்ததும் அவள் செய்யத் துணிந்த செயல் ஒன்றே தான்- அது தவம் செய்து தனது காதலனை, கணவனாகப் பெறுவது என்பது. அதனால் தான் தவம் இயற்றப் புகுந்தாள்.

***************************************************************

செய்தற்கரிய உயர்ந்த தவத்தைச் செய்ததால், தவப்பயன் தானே வரவேண்டும் அல்லவோ? இப்போது பார்வதியின் தவச்சாலைக்குச் சென்று என்னவாயிற்று எனப் பார்க்கலாமா? செய்த தவத்தின் பலன் நெருங்கி வரும் வேளை- ஆஹா! சிவபூஜையில் கரடி போல , யார் இது?

பார்வதியின் ஆசிரமத்தில், மிகுந்த ஒளி பொருந்திய உடலும், மான்தோல் அணிந்து கையில் ஏந்திய தண்டத்துடன், சடாமுடி தரித்த ஒரு பிரம்மசாரி* நுழைந்தார். பார்வதி அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தாள்.

மரியாதையை ஏற்றுக் கொண்டவர், களைப்பு நீங்கியதும் சொன்ன சொற்கள்…..

இவர் யார்? தவசீலரா அல்லது கலா ரசிகரா? காமுகரா?

“இக்கொடிகளின் தளிர்கள், சாயம் பூசாவிடினும் இயற்கையிலேயே சிவந்த உனது உதடுகள் போல உள்ளன!”

“ஆசிரமத்திலுள்ள இந்த மான்கள் உனது கண்களுக்கு உவமையாக இருக்குமாறு தமது கண்களைச் செய்து கொள்ள முயலுகின்றன!”

“நீ கங்கையினும் உயர்வானவள்! உனது நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த நட்பின் உரிமையால் நான் உன்னை ஒன்று கேட்கிறேன். நீ எதனை விரும்பித் தவம் செய்கிறாய்? உனக்கு செல்வமும், சுகங்களும், அழகும், இளமையும் பருவமும் உள்ளனவே. இன்னும் வேறென்ன வேண்டும்?” என்றார் அந்த பிரம்மசாரி.

இப்போது, கச்சியப்பச் சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தில் இந்தக் கதை தொடர்வதைக் காணலாமா?

“உனது இந்த அழகெல்லாம் அழியுமாறு எதற்காக இந்தத் தவம் செய்கிறாய்?” எனக் கேட்டார் வயதில் முதிர்ந்த அந்த பிரம்மசாரி.

“அப்பொழுது உமை தன்னை ஆதரவொடு பாராச்
செப்புதல் அரிதாம் உன் திரு நலன் அழிவு எய்த
மெய்ப்படு தசை ஒல்க மிகுதவம் முயல்கின்றாய்
எப்பொருள் விழைவுற்றாய் எண்ணியது உரை” என்றான்.

“சுவாமி! பரமேசுவரனாகிய சிவபிரானை அடைய வேண்டியே எம் தலைவியார் தவம் செய்கின்றார்கள், ” என்றாள் தோழியான விசையை.

‘கட கட’வெனச் சிரித்தவர், “அயனும் மாலும், தேவரும் மூவரும் காணவொண்ணா ஒருவனை அடையவா தவம் செய்கிறாய்? அது நடக்கக் கூடிய செயலல்லவே?” என எள்ளி நகையாடுகிறார்.

பார்வதிக்குச் சினம் மிகுகிறது. “முடிவற்ற அந்த இறைவன் என் விருப்பத்தினை முடித்து வைக்காவிடினும் இன்னும் கடுமையாய்த் தவம் செய்து அன்பினால் அவரை அடைவேன். அறிவு முதிர்ந்தவர் போல் காணப்படும் நீர் ஏன் பித்தன் போன்று பேசுகின்றீர்?” என்கின்றாள்.

“முடிவிலாது உறை பகவன் என் வேட்கையை முடியாது
விடுவன் என்னினும் தவத்தினை விடுவனோ மிக இன்னம்
கடிய நோன்பினை அளப்பு இல செய்து உயிர் கழிப்பேன் நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீ” என்றாள்.

இவ்விளம் பெண்ணின் திட உள்ளம் அந்தணருக்கு வியப்பை மூட்டியதோ என்னவோ, இன்னும் சிறிது பார்வதியிடம் விளையாடத் துணிந்தார் அவர். “ஆமாம்! அவர் என்ன அவ்வளவு உயர்வானவரோ? அவர் அணிவது யானை, புலி இவைகளின் தோலாலான ஆடை; ஏறுவது ஒரு கிழமாடு! பாம்பு தான் அணிகலன்கள். எலும்பு மாலை; மண்டையோட்டு உண்கலம்; கொடிய நஞ்சே உணவாகும்,” எனப் பழித்துப் பட்டியலிட்டு அவளது சினத்தைக் கூட்டுகிறார்.

“ஆடை தோல் விடை ஏறுவது அணிகலம் அர என்பு
கேடு இல் வெண் தலை மாலிகை கேழலின் மருப்பு இன்ன
ஓடு கொள்கலம் ஊண் பலி வெய்ய நஞ்சு உலப்பு உற்றோர்
காடு அதே நடம் புரி இடம் கண்ணுதல் கடவுட்கே.”

“நீர் இவ்வாறு இறைவனைப் பழிக்கிறீர். உம்மெதிரே நிற்பதும் பாவம்; மறை ஓதியவர், பெரியவர் என மதித்தேன். இவ்வாறெல்லாம் பேசுவதாயின், இப்போதே இங்கிருந்து சென்று விடுங்கள்,” என்றாள் பார்வதி.

அவர் விடாக்கண்டன்! “பெண்ணே! என்னை இவ்வாறு நீ விரட்டலாகுமோ? நான் இங்கு வந்த காரணமே உன்மீது மையல் கொண்டு உன்னை முறைப்படி மணந்து கொள்ள ஆசை கொண்டதனால் தானே,” என்று கூறிப் புன்னகை புரிந்து நின்றார் முதிய அந்தணர்!

அறத்தினைப் புரிவாள் இவ்வாறு அறைதலும் “அணங்கே ஈங்கு உன்
திறத்தினில் ஆர்வம் செய்து சென்ற என் செயல் கேளாது
புறத்திடைப் போதி என்று புரைவதோ புகுந்த பான்மை
மறைச் சடங்கு இயற்றி நின்னை வரைந்திடற்கு ஆகும்” என்றான் அந்த அந்தணப் பிரம்மசாரி*!

தவத்தால் வருத்திய உடலைக் கொண்ட இமவான் மகள் திடுக்குற்று நின்றாள்.

உள்ளம் பதைக்க விம்மி விம்மி அழுதவாறு, “நீர் தகாத சொற்களைக் கூறினீர். நீர் செல்லாவிடின் நான் இங்கிருந்து செல்கிறேன்,” எனத் திரும்பிப் போக எத்தனித்தாள் பார்வதி.

(இங்கு குமாரசம்பவத்தில் காளிதாஸர் கூறுவதைப் பார்க்கலாமா?)

திரும்பிச் செல்ல முயன்றவளின் கரத்தினை வலிந்து பற்றி இழுத்தார் பிரம்மசாரி- எல்லையற்ற சினத்துடன் அவரை எதிரெடுத்து நோக்கியவள் பிரமிப்பிலும், வியப்பிலும், நாணத்திலும் மூழ்கினாள். அங்கு அவள் கண்டது யாரை? முதிய அந்தணர் வடிவை விடுத்து தமது உண்மை உருக்கொண்டு காதலில் கனிந்த புன்னகை பூத்த வண்ணம் சிவபிரானே அங்கு நின்றார்.

திகைத்து நின்றாள் பெண்ணணங்கு! தனது தவத்தின் பயன் நேரில் எதிர்பாராது வந்ததாலும், அவரைப் பற்றி வாய்விட்டுப் புகழ்ந்து பேசித் தன் காதலையும் வெளியிட்டதாலும், நெகிழ்ந்து நாணி நின்றாள்.

காதலனான சிவன் அவளை நோக்கிக் கூறுவார்: “உனது கடும் தவத்தினை விலையாகக் கொடுத்து நீ என்னை அடிமைப் படுத்திக் கொண்டு விட்டாய். இனி என்றென்றும் நான் உந்தன் அடிமை.”

பார்வதி தனது தவத்தின் பயனைக் கண்ணுற்றாள்; அவர் இனிய சொற்களைக் காதால் கேட்டாள்; உவகைப் பெருக்கு மிக்கிட ஆனந்த வெள்ளத்தில் நீந்தலானாள்.

***************************************************************

( *காளிதாசரின் குமாரசம்பவம் சிறிது வயது முதிர்ந்த பிரம்மசாரி என்கிறது; கச்சியப்பரின் கந்தபுராணம் கிழ அந்தணர் என்கிறது. நாம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்)

***************************************************************

தவப்பயனைத் தருபவர், நேரில் வந்து காதலியைக் கைப்பிடிக்க வேண்டியது தானே! இவ்வாறெல்லாம் வம்பு செய்து, அவளை இன்னும் தொடர்ந்து வருத்தி மகிழ வேண்டுமோ என நாம் எண்ணலாம். இதுவும் ஒரு காரணத்திற்காகத்தான்- தன்னிடம் அவள் கொண்ட காதலை அவள் வாயினாலேயே கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த விளையாட்டு. சிவபிரானாகிய தலைவனுக்குத் தான் திருவிளையாடல்கள் மிகவும் விருப்பமானவை ஆயிற்றே!

தன் காதலியாகிய பார்வதியிடம், சிவபிரான் அவளழகை வருணிப்பதாக வேறொரு நூலிலும் நாம் காணவில்லை; காளிதாசர் அந்தக் குறையை தமது குமாரசம்பவம் எனும் இந்நூலில் பூர்த்தி செய்கின்றார்! மேலும், பார்வதியின் திருவாயிலிருந்தே தமது மேன்மைகளை அவள் கூறக் கேட்டு மகிழவும் இது ஒரு உபாயம், ஈசன் செய்தது!

தனதழகின் பயன் வீணாயிற்றே என வருந்தியல்லவா அவள் தவம் செய்யப் புகுந்தாள்? காதலியைத் தவிக்க விடலாமா? காதலின் இனிய தருணங்கள், காதலியைக் காதலன், “பொன்னே, முத்தே, என் உயிரே,” எனவெல்லாம் வருணித்து அவள் அழகையும் குணங்களையும் போற்றுவது தான். அதைத்தான் அண்ணலும் செய்து மகிழ்கிறான்.

பார்வதியின் அன்பின் மேன்மையை அறிந்ததால் அன்றோ அண்ணல் சிவபிரான் தன் சக்தியான அவளுக்குத் தன் உடலிலேயே பாதியை அளித்தான் ?

முழுமையான நிபந்தனையற்ற அன்பும், ஒருமைப்பட்ட செம்மையான மனமும் தான் காதலுக்கு இன்றியமையாத தேவைகள் என்பது காதலின் பொன்வீதியில் நடை பயிலும் இளம் காதலர்கள் உணர வேண்டியனவாகும்.

குமார சம்பவத்தில் வரும் பார்வதியின் தவம் இதனைத் தெளிவாக விளக்கி உள்ளது!

***************************************************************

படம் உதவி:
நன்றி; © அம்புலிமாமா
நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்தவரும், படம் எடுத்தவரும் – மீனாட்சி பாலகணேஷ்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “காதலின் பொன்வீதியில் – 8

  1. உங்கள் கட்டுரைத்தொடர் அருமை.

    உங்களது திருநடனம் ஆடினது எப்படியோ?
    https://www.vallamai.com/?p=54571

    கட்டுரையில்   காணப்படும் பொம்மைகளும் நீங்கள் செய்தவைதானா மீனாட்சி?

  2. தங்கள் கருத்துக்கு நன்றி தேமொழி அவர்களே!
    ஆம். நானே பொம்மைகள் செய்து நவராத்திரியில் வைப்பதுண்டு. திருநடனம் ஆடியது எப்படியோ கட்டுரைக்கான பொம்மைகளும் அவ்வாறு செய்யப்பட்டவையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.