மீனாட்சி பாலகணேஷ்

‘சிவனுக்கு உகந்தது சிவராத்திரி; அவன் தேவிக்கு உகந்தது நவராத்திரி,’ என சீர்காழி கோவிந்தராஜனின் இனிய குரலில் ஒரு அழகான பாடலைக் கேட்டதுண்டு. சிவராத்திரி என்பதற்கு வெவ்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. அவற்றுள் ஒன்று: சிவராத்திரி அன்று சிவபிரான் ‘தாண்டவம்,’ என்ற ஆனந்தமயமான பிரபஞ்ச நடனத்தை ஆடியதாகக் கூறப்படுவது. இன்னொரு விளக்கம்: சிவனும் சக்தியும் இணைந்த நாளே- அவர்கள் திருமணம் நடந்த நாளே சிவராத்திரி என்பது. இது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும் என்பது ஆன்றோர் கூறும் அருமையான உயர்ந்த விளக்கம்.

amain

சிவபிரானுடைய தாண்டவம் என்பது யாது?

எப்பொருளின் இயக்கத்திற்கும் அடிநிலையாய் இருப்பவன் இறைவன் ஒருவனே. இறைவனது அசைவு தாண்டவம், கூத்து அல்லது விளையாட்டு எனப்படும். இது இரண்டு இடங்களில் சிறப்பாக நிகழ்வதாகக் கூறப்படுகிறது- ஒன்று, உயிர்களின் அறிவு; மற்றொன்று, தில்லைச் சிற்றம்பலம்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி

பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி’ என மாணிக்கவாசகர் இவ்விரு இடங்களையும் திருவாசகத்தில் குறிப்பிடுகிறார்.
உயிர்களின் அறிவில் பொருந்தி நின்று இடைவிடாது தனது இருப்பிடத்தை அவன் உணர்த்தி வருகிறான். இது அவனை, அவன் திருநட்டத்தை, நாம் அறிவால் உணர்ந்து அவனே அவ்வறிவு எனவும் உணர்ந்து கொள்வது. ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றும் இல்லாத இறைவன், நாம் கண்டு உய்யுமாறு தில்லைப்பதியில் ஓர் உருவம் கொண்டு, ஆடவல்லான் எனும் திருநாமமும் கொண்டு ஐந்தொழிலும் புரிந்து நடனமிடுகிறான். நமக்கு பிறப்பு, முத்தி எனும் இரு நிலைகளையும் மாற்றி மாற்றித் தந்த வண்ணம் ஆடுகிறான். இதனைச் சேக்கிழார்,

‘ஆயும் நுண்பொரு ளாகியும் வெளியே
அம்பலத் துள்நின்று ஆடுவார்,’ எனப் போற்றுவார்.

ஆதிசங்கரர் இந்தத் தத்துவத்தினை மிகச் சுவைபட ‘அழகின் அலைகள்,’ எனப்படும் ‘சௌந்தர்ய லஹரி’யில் விவரிக்கிறார். மூலாதாரத்தில் அம்மையும் ஐயனும் ஆடும் ஆனந்த நடனத் தைப் பற்றிக் கூறுகிறார். “மூலாதார சக்கரத்தில், லாஸ்யம் என்கிற நடனம் செய்வதில் விருப்பம் உள்ளவளும் ‘ஸமயா’ எனப் பெயர் கொண்டவளுமான உன்னுடன் சேர்ந்து நவரசங்களும் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகின்ற ஆனந்த பைரவரை தியானம் செய்கிறேன். பிரளய காலத்தில் உலகம் அழிந்து படும்; அதனைத் திரும்பப் படைக்கக் கருணை கொண்டு நீங்கள் இருவரும் இணைந்து இவ்வுலகிற்கே தாய் தந்தையாகி அதனைப் படைத்துக் காக்கின்றீர்கள்,” என்கிறார். ஆகவே ஐயனும் அம்மையும் இணைந்து நடனம் செய்தபடி ஒருவரை ஒருவர் பார்க்கவே உலகம் உற்பத்தியாகின்றது என அற்புதமானதொரு விளக்கத்தைத் தருகிறார் சங்கரர்.

இந்த நட்டத்தைப் (நடனத்தை) பற்றித் திருமூலரும்,

‘எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே!‘ என்கிறார்.

திருநட்டமாவது முன்பே கூறியது போல அறிவு எனும் ஆகாயத்தில் ஐயன் ஆடுவதாகும். சிவம் அகண்டமாய் வியாபித்துள்ளது போல அதன் சத்தியும் அகண்டமாய் உள்ளதாம். சிவபெருமானுக்குத் திருமேனி சிவசத்தியே ஆவாள். அவனுடைய அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்கிறார்.

சிவபிரான் ஆடுவதற்குக் கொள்ளும் உருவம் ‘சிவாயநம, என்னும் ஐந்து திருவெழுத்துக்களே. அன்பர்கள் நாடும் திருவடி ‘ந’காரம் ஆக இருக்கும்; திருவயிறு ‘ம’காரம் ஆகும்; திருத்தோள்கள் ‘சி’காரம் ஆகும்; வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய திருமுகம் ‘வா’ஆகும்; திருமுடி ‘ய’ ஆகும்.

ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலே நகரம்- கூடும்
மகரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடியப் பார். (உண்மை விளக்கம்)

இந்த நடனம் பக்குவமடையாத உயிர்களுக்கு ஊன நடனமாகவும், பக்குவமடைந்த உயிர்களுக்கு ஞான நடனமாகவும், அனைத்துயிர்களும் உய்ய ஆனந்த நடனமாகவும் பரிணமிக்கிறதாம். எவ்வாறு?

ஐயன் தனது நடனத்தின் மூலமாக நிகழ்த்தும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்) ஐந்தொழில்களும் ‘ஊன நடனம்’ எனக் கூறப்படும். இத்தொழில்களால் உயிர்களுக்கு உலக நுகர்ச்சியும் சிற்றறிவும் உண்டாகி, அவை உலக வாழ்வில் மயங்கி நிற்கின்றன. ஆதலால் இது ‘ஊன நடனம்’ எனப்பட்டது.

துடி எனும் உடுக்கையால் ஒலி ஏற்படுத்தி, படைத்தல் தொழிலை நிகழ்த்துகிறான் இறைவன். அமைத்த திருக்கரத்தால் (அபயக் கரத்தால்) காத்தல் தொழிலைச் செய்கிறான். நெருப்பைக் கையில் ஏந்தி அழித்தல் தொழிலைப் புரிகிறான். முயலகன் மீது ஊன்றியிருக்கும் திருப்பாதம் திரோதம் என்னும் மறைத்தல் தொழிலைக் குறிக்கும். தூக்கிய திருவடி முத்தி அளித்து அருளும் தொழிலையும் குறிக்கும்.

‘தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு,’ என்பது ஊன நடனத்தைக் குறித்த உண்மை விளக்கப் பாடல்.

ஞான நடனமாவது, உயிர்களுக்கு முத்தி எனும் நிலையினைத் தருவதற்காக ஈசன் ஆடும் நடனம்.
துடி: எனும் உடுக்கையை அசைத்து, பக்குவம் எய்திய உயிர்களின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குகிறான்;
நெருப்பை எந்திய அவனது கரம்: அடியார்களின் வல்வினையைச் சுட்டெரிக்கும்;
ஊன்றிய திருவடி: ஆணவ மலத்தை அடக்கி (சாய அமுக்கி) வைக்கும்;
தூக்கிய திருவடி: பிறப்பு இறப்புகளில் சுழன்று உழலும் உயிர்களை அருளால்
(நேயத்தால்) எடுத்துச் சுமக்கும்.

அமைந்த கரம்: ஞானத்தை அளித்து பேரின்பக் கடலில் ஆழ்த்தும்.

‘மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து- நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தை யார்பரதம் தான்.’ (உண்மை விளக்கம்)

பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கு இவ்வுலகில் பேரானந்தத்தை இடையறாது தருகின்ற நடனம் சிவனுடைய ஆனந்தக் கூத்தாகும்.

இதனைத் திருமூலர் பல மந்திரங்களில் விளக்குகிறார்.
‘ஆனந்தம் ஆடரங்கம் ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே,’ என்பது ஒரு மந்திரம்.

ஈசன் உயிர்கள் எல்லாம் பேரின்பம் எய்தும் பொருட்டே ஆனந்தக் கூத்தினை நிகழ்த்தியருளுகிறான். தனது திருக்கூத்தின் மூலமாக ஐந்தொழில்களைப் புரிகிறான். அதனால் இறைவனின் இத்திருவருட் செயல்களும் , அவன் ஆடும் போது பாடப்படும் திருமுறைப் பாடல்களும், இசைக்கப்படும் பலவிதமான இசைக்கருவிகளும், வாத்தியங்களும் இன்பமானவை என அறியப்படுகின்றன. உலகிலுள்ள அசையும், அசையாப் பொருட்கள் அனைத்தும் அவனது ஆனந்தக் கூத்தினால் இன்புறுகின்றன.

இந்த ஆனந்தக் கூத்தின் போது எல்லாமே ஆடுகிறது.

‘வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட
நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே.’

இந்த மந்திரத்தில் நால் வேதங்களும் ஆடின என்கிறார். அது வேதத்தில் கண்டுள்ளபடி உலகத்தோர் ஒழுகி உய்யத் துணை நின்று அருள் செய்து ஈசன் ஆடியதை விவரிக்கும். அவற்றின் விளைவான ஆகமங்களும் (ஆடின) உலகத்தோர்க்கு வழி காட்டுமாறு ஆடினான் என்பதாம். அடுத்து கீதங்கள் எனப்படும் பண் சிறந்த இசை நூல்கள் சிறக்குமாறு ஆடினான் என்கிறார். ஏழு அண்டங்களும், பஞ்ச பூதங்களும் அசைய (ஆட; இங்கு, தத்தம் இயக்கங்களைச் செய்து ஒழுக எனப் பொருள் கொள்ள வேண்டும்), நாத தத்துவத்தை இடனாகக் கொண்டு ஆனந்தக் கூத்தை ஐயன் நிகழ்த்துகிறான் என்பார்.

‘ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட
ஓதுஞ் சடையாட உன்மத்த முற்றாடப்
பாதி மதியாடப் பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதாந்த நட்டமே.’

சிவபிரான் இவ்வாறு நடனமாடிய போது அவன் கையில் ஏந்திய கனல் ஆடிற்று;

எல்லோரும் போற்றிப் பரவும் சடையும் ஆடிற்று; அதில் சூடிய ஊமத்த மலரும் ஆடிற்று! கீற்றுப் பிறைமதி ஆடிற்று; அண்ட சராசரங்களும் இயைந்து ஆடின. சைவர்கள் உயர்வாகப் போற்றும் முப்பத்து ஆறாம் மெய்யாகிய நாதத்தின் கண் திருவருள் நிரம்ப நாதாந்த நட்டத்தை ஆடுகிறான் ஈசன்.

சிவப்பரம்பொருளின் இந்த அற்புத நடனத்தில் சத்தியின் பங்கு மிகப்பெரிதானது.

‘இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே.’

சிவனுடைய இடப்பாகம் கொண்டவள் சத்தி. அவளைப் பிரியாது சிவபெருமான் அவளுடன் திருநடம் புரிகின்றான். அதை ஞான ஆன்மாக்கள் உணர்ந்து கொள்வர். திரை போல நின்று மறைக்கும் ஆணவ மலத்தைக் கொண்டுள்ள உயிரினங்கள் அனைத்தும் அதனை நீங்கி உய்யுமாறு சிவபிரான் அடங்கலும் தாமாக நின்று ஆடியருளுகின்றான்.

இதனால் எல்லாம் எவ்வாறு சிவபெருமானுக்கு சிவராத்திரி உகந்ததாயிற்று என அறிந்து கொள்ளலாம்.

தத்துவங்களையும், ஆகமங்களையும் கற்றுணர்ந்தோரும், அவர்கள் மூலம் கேட்டு உணர்வோருமே இக்கருத்துக்களையும், சிவப்பரம்பொருள் உயிர்கள் மாட்டுக் கொண்ட அன்பால் நிகழ்த்தும் கூத்தின் தன்மையையும் உணர்ந்து இன்புற முடியும். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மூவருள் ஒருவரான முத்துத் தாண்டவர், எளிய இனிய சொற்களைக் கொண்டு தமிழில் ஆடவல்லான் மேல் பல பாடல்களை, இத்தகைய அரிய பெரிய கருத்துக்களைப் பொதிந்து, இயற்றினார். ‘ஆடினதெப்படியோ,’ எனும் கல்யாணி ராகப் பாடலில் ‘ஐயனே, இத்தகைய அரிய திருநடனத்தை நீ எவ்வாறு ஆடினையோ?’ என வியந்து துதித்துப் பாடுகிறார். தத்துவங்களையும், ஆகமங்களையும் கற்றுணராத எளிய மக்களும் இவற்றைக் கேட்டு, பாடி மகிழும் தரத்தில் அமைந்த பாடல் இதுவாகும்.

ஆடினதெப்படியோ திருநடனம் ஆடினதெப்படியோ
தேடிய மெய்ப்பொருளே வளமேவுஞ்
சிதம்பரத் தேயொரு சேவடி தூக்கிநின்(றாடின)

என ஆடியதை வியந்தவர், “மன்றுள் (அம்பலத்தில்) ஆடுவதற்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அது, ஆணாகவோ, பெண்ணாகவோ, ஏதாவது ஒரு வடிவு கொண்டோ இருக்க வேண்டும். நீ ஒன்றாக உள்ள ஆண் உருவம் கொண்டவன் அல்ல; அம்மையும் அப்பனுமான இரண்டு வடிவமும் அல்ல; ஒன்றில் இரண்டான மாதொரு பாக வடிவும் அல்ல.

ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிரண்டு மல்ல
நன்றல்ல தீதல்ல நாதவிந்து மல்ல
அன்றல்ல இன்றல்ல ஆதியந்த முமல்ல
மன்றுள் மரகத வல்லிகொண் டாடநின் (றாடின)

“கண்ணால் எவரும் காணக் கூடிய உருவம் கொண்டவன் அல்ல. காண இயலாத அருவமானவனும் அல்ல. உன் வடிவின் நீள அகலங்களை அறியக் கிடைக்காது. வாள் நுதல் பச்சை மடந்தை ஆகிய மரகதவல்லி சிவகாமி கொண்டாட நின்று ஆடுகின்றனையே ஐயா!

ஆணல்ல பெண்ணல்ல அன்றி அலியுமல்ல
காணும் உருவம் அல்ல காணா அருவமல்ல
சேண் அல்ல வேயொரு தேவர்க்குள் ளேதேவே
வாணுதற் பச்சை மடந்தைகொண் டாடநின் (றாடின)

“பூதங்களாகவும், உள்ளும் புறமுமாயும் உள்ளவன் நீயல்ல! வேதங்கள் விளக்கிக் கூறும் பொருளும் நீ அல்லவே! ஆதவன் கிழக்கே உதித்து மறைவது போலத் தளர்ச்சி உடையவன் அல்ல. (இங்கு ஆதவனை உவமித்தது, உலகத்தோர் அவனை உயர்வும் திண்மையும் பெருமையும் உடையவனாகக் கருதுவதால் தான்!) மாது உமையாள் உன்னைக் கொண்டாடுகின்றனளே அப்பா!” என முத்தான வரிகளில் பரம் பொருளைக் கொண்டாடுகிறார் முத்துத் தாண்டவர்.

பூதங்கள் அல்ல புறம்பல்ல உள்ளல்ல
வேதங்க ளாலே விளங்கும் பொருளல்ல
ஆதவன் போலே அசையும் வடிவல்ல
மாதுமை யாள்பச்சை வல்லிகொண் டாடநின் (றாடின)

சைவ சித்தாந்தப் பேரறிவாளர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயாஅவர்கள் சிவப்பரம்பொருளின் தன்மையைப் பின் வருமாறு அருமையாக விளக்குகிறார்:

‘சிவப்பரம்பொருளுக்கு இரு நிலைகள் கூறப்படும். ஒன்று- சொரூபநிலை. மற்றொன்று- தடத்தம். (ஸ்வரூபம், தடஸ்தம்) சொரூபநிலை உண்மை என்றும் கூறப்படும். தடத்தம் உயிர்களுக்கு அருளும் பொருட்டுப் பெருமான் எடுக்கும் வடிவம். அது நிஷ்களம், நிஷ்கள சகளம், சகளம் என மூவகைப்படும். நிஷ்களம் அருவம் என்றும் நிஷ்கள சகளம் அருவுருவம் என்றும் சகளம் உருவம் என்றும் கூறப்படும். சகளம் மாகேசுவர வடிவம். சிவனின் மாகேசுவர வடிவம் தட்சிணாமூர்த்தி, பிட்சாடணர், சந்திரசேகரர் முதலிய 25 என்றும் கூறப்படும் சதாசிவ மூர்த்தி, நிஷ்கள சகளம். அது இலிங்க வடிவினதாகும்.
‘இலிங்கத்திற்கு ஐந்து முகமும் ஐந்து நிறமும் கூறப்படும். ஈசானமுகம்- உச்சி பளிங்கு நிறமுள்ள பாலர் முகம். தத்புருஷமுகம்- கிழக்கு. பொன்னிறமான அரசர் முகம். தெற்கு- அகோரம்- தாடியுடன் கூடிய கரிய முதியவரின் முகம். வாமதேவம்- வடக்கு. குங்குமம் போன்று சிவந்த மாதர் முகம். சத்யோஜாதம்- மேற்கு. வெள்ளை நிறமுள்ள இளைஞர் முகம். சதாசிவத்தின் ஐந்து முகங்களுள் சத்தியோஜாத முகத்தால் படைப்பும்; வாமதேவமுகத்தால் அளிப்பும்; அகோரமுகத்தால் துடைப்பும்; தத்புருஷ முகத்தால் மறைப்பும்; ஈசான முகத்தால் அருளும் நடைபெறும் என ஆகமங்கள் கூறும்.

‘இறைவன் கொள்கின்ற மூர்த்தங்களில் அட்ட மூர்த்தி வடிவங்களும் ஒருவகை. அவையாவன பஞ்சபூதங்கள் ஐந்தும் சூரியன் சந்திரன் ஆன்மா (புருடன்) எனும் மூன்றுமாக எட்டு. இறைவன் பஞ்ச பூதங்களையும் தனக்கு உடைமையாகக் கொண்டுள்ளதால் அவற்றின் நிறங்களும் அவனுக்கு உரியன என்பர்,’ என்கிறார் பேராசிரியர் ஐயா.

இந்தப் பாடலின் அடுத்த சரணத்தில் கூறப்பட்ட பஞ்சபூதம், பஞ்சவர்ணம், அஞ்சுமுகம், ஆறாதாரம் எல்லாம் இறைவன் ஆன்மாக்களுக்கு அருளும் பொருட்டு எடுத்துக்கொண்ட சகள வடிவங்களே. தடத்தமே; உண்மை வடிவம் அல்ல. அவனுடைய சொரூபநிலை அருவமுமல்ல, அருவுருவமுமல்ல; உருவமுமல்ல. இந்த மூன்றும் தடத்த வடிவங்களே. இந்த தடத்த வடிவங்கள் எல்லாம் அவனது சொரூப நிலை அல்லது உண்மை அல்ல என்று கூறுவது இப்பாடலின் கருத்தாகும்.

பஞ்ச வர்ணமுமல்ல பஞ்ச பூதமுமல்ல
நெஞ்சில் நினைவுமல்ல நினைவிற் கனவுமல்ல
அஞ்சு முகமுமல்ல ஆறாதா ரமுமல்ல
வஞ்சி மரகத வல்லி கொண்டாடநின் (றாடின)

‘இதுவுமல்ல, அதுவுமல்ல; எதுவுமல்ல; எல்லாம் நீயே’ எனப் பொருள் கொள்ள வேண்டும்.
அடுத்து சமீப காலத்தில் இயற்றப் பட்டு, பாடப்பெறும் ஒரு பாடல்; இதில் பராசத்தியின் நடனம் போற்றப்படுகிறது. இதனை இயற்றியவர் பாபநாசம் சிவன் ஆவார். (சிலர் சுத்தானந்த பாரதியார் எனவும் கூறுகின்றனர்!) இதில் ஆனந்த நடனத்தைப் பராசக்தி ஆடியருளியதாகக் கூறப்படுகிறது. சிறிது உற்று நோக்கின், ‘ன்’ ‘ள்’ எனும் ஒரே ஒரு எழுத்து வேற்றுமையால் ஐயனையும் அன்னையையும் ஒன்றுபடுத்திக் காணலாம்!! இத்தகைய பொருத்தம் தன்னிச்சையாக அமைந்ததா அல்லது கவிஞர் வேண்டுமென்றே அமைத்ததா என அறிய இயலவில்லை! பொருட் செறிவும், இசையழகும் மிகுந்து காம்போதி ராகத்தில் பாடப்படும் இந்தப் பாடல் தனி அழகு வாய்ந்தது. தேடுவோருக்குத் தத்துவப் பொருளையும் தன்னுள் அடக்கியது. சிறிது ஆழ்ந்து நோக்கலாமா?

ஆனந்த நடனம் ஆடினாள்- சச்சி
தானந்த நடனம் ஆடினாள்

வானும் புவியும் வணங்கி மகிழ்ந்திட
ஞானவெளியினில் வீணை ஓம் ஓம் என (ஆனந்த)

பஞ்சபூதங்கள் முழங்க- குணங்கள்
பாய்ந்து தாளம் வழங்க
அஞ்சு தொழிலும் துலங்க- காலம்
அதிரப் புவிகள் குலுங்க
தஞ்சம் தஞ்சம் என்றுள் அன்பர் முறையிடத்
தம்தாம் தம்தாம் தாகிட தகதீம் என (ஆனந்த)

வானும் புவியும் வணங்கி மகிழ, ஞான வெளியினில் எழும் வீணையின் இன்னிசையும் அவளுடைய ஆனந்த நடனம் தான்;

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் இயக்கமும் இந்த ஆனந்த நடனம் தான்; அவை முழங்குகின்றன; குணங்கள் என்பன பிரகிருதி மாயையுடன் சம்பந்தப்பட்ட சத்துவ ரஜஸ தாமச குணங்கள். இவைதான் ஐம்பூதங்களின் தோற்றத்திற்கும் இயல்புக்கும் காரணம் ஆகும். இந்தப் பிரபஞ்ச ஆட்டமெல்லாம் முக்குணங்களால் நடப்பது தான். இதைத்தான் குணங்கள் தாளம் வழங்குகின்றன எனப் பாடல் உரைக்கின்றது. தனது ஆட்டத்தின் மூலம் அஞ்சு தொழில்களான, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவற்றையும் செய்கிறாள் பராசக்தி! இவளுடைய ஆனந்த நடனத்தில் பிரபஞ்சச் சுழற்சியாகக் காலம் அதிர்கின்றது; அண்ட சராசரமும் இதனால் (புவிகள்) குலுங்குகின்றது. மாயையில் உழலும் மானுட உயிர்களும் மற்றும் பிரபஞ்ச உயிர்களும், ‘நீயே தஞ்சம்,’ என, ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் ஆட்டுவிப்பானும் அடங்குவிப்பானுமான அம்மையப்பனிடம் சரணமடைகின்றனர். இவையெல்லாம் நடத்திக் கொண்டு, ‘தம் தாம்,’ ‘தம் தாம்’ எனச் சீரான ஒரு அற்புத லயத்துடன் சிவசத்தியின் ஆனந்த நடனம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது……………………..

ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் சர்வ வாங்மயம்
ஆஹார்யம் சந்த்ரதாராதி தம் நம ஸாத்விகம் சிவம்.

அவனது நடனமெல்லாம் உலகின் இயக்கம்
அவனது வாக்கெல்லாம் உலகத்தின் மொழி
அவனது அணிகளெல்லாம் சந்திரனும் தாரகைகளுமே
அவனை, நம் சிவனை, நாயகனை, நாளும் வணங்குவோம்.
*****************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *