பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வதில்
எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
தெய்வ முடிப்புழி என்செய்யும்? – மொய்கொண்டு
பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
கோப்புக் குழிச்செய்வ தில்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
எவ்வம் துணையாய்ப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும்
கோப் புக்குழி, செய்வது இல்.
பொருள் விளக்கம்:
துன்பமே துணையாக (வரும் பொழுதில்), தான் செய்து முடிக்க விரும்புவதைச் செய்யும் முயற்சிகள், விதி வலியால் நடைபெறாது போக நேர்ந்தால் என்ன செய்யமுடியும், முயல்வதால் பலனில்லை. பூவுக்குள் வண்டு புகுந்து ஒலியெழுப்பும் ஊரைச் சேர்ந்தவரே, குறுநில அரசனால், எத்திசையும் வெற்றியை நிலைநாட்டி வரும் பேரரசன் ஒருவன் தனது நாட்டில் போரிடப் புகுந்தால் அடங்கிப் போவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
பழமொழி சொல்லும் பாடம்: தனது முயற்சிக்கு எதிராக விதி சதி செய்யும் பொழுது முயற்சிகள் பயனளிப்பதில்லை. நாம் எவ்வளவுதான் முயன்றாலும், சில நேரம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள் நமது முயற்சிக்கேற்ற பலனைத் தருவதில்லை. இவ்வாறு நிகழும் கைமீறிய விளைவுகளுக்கு வள்ளுவர் ஊழினைக் காரணமாகக் காட்டுகிறார்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள்: 380)
ஊழை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதியை விட வலிமையானவை வேறு எவை என்று கூறமுடியும் என்பது விதி வலியது என அறிவுறுத்தும் வள்ளுவர் வாக்கு.