இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(155)
–சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
இனியதோர் வாரத்தில், இதயத்தில் உருளும் இனிமையான உணர்வுகளின் துணையோடு மீண்டும் உங்களோடு உறவாட விழைகிறேன்.
இந்தவாரம் அதாவது எம் கண் முன்னே கடந்து சென்ற வாரம் தன்னோடு சுமந்து சென்ற பெருமையென்ன ?
தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கேயுரிய அந்தஸ்தோடு கோலோச்சிய எமது கவியரசர், கவிதைக்கோமகன் கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தை தனக்குள் தாங்கிச் சென்ற ஒரு உன்னதமான வாரம்.
புலம்பெயர்ந்து அந்நியநாடுகளை தமது சொந்தநாடுகளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் லட்சோப லட்சம்.
இவர்கள் புலம்பெயர்ந்ததற்கான காரணங்கள் பல. குறிப்பாக இலங்கைத் திருநாட்டைச் சேர்ந்த எனது ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் யுத்த காலங்களில் அங்கு பாதுகாப்பாக வாழமுடியாத சூழலினால் இடம் பெயர்ந்தவர்கள் பலர்.என்னைப் போன்ற நிலையிலுள்ள பலர் தமது உயர் கல்வியை பல்வேறு காரணங்களினால் தொடரமுடியாமல் வெளிநாடுகளில் தமது உயர் கல்விக்காகப் புலம் பெயர்ந்து பின்னர் அந்நாடுகளின் சூழல்களில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்ட காரணத்தினால் தொடர்ந்தும் தமது வாழ்வை அந்நாடுகளிலே தொடரும் நிலை.
அப்படிப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறை அவர்கள் வாழும் அந்தப்புலம் பெயர் மண்ணையே தமது தாய் மண்ணாகக் கருதி வாழும் ஒரு நிலை காணப்படுகிறது.
இந்தச் சூழலிலே தாய்நாட்டின் ஏக்கங்களையும், தமிழின் மீது கொண்ட காதலின் கனத்தையும் தமது இதயங்களிலே சுமந்து வாழும் அம்மக்களோடு கவியரசர் பின்னிப் பிணைந்திருப்பது காலத்தால் மாற்ற முடியா உண்மை.
அவரது பாடல்கள், அப்பாடல்களில் புதைந்துள்ள எளிமையான கருத்துக்களின் ஆழம் என்பன தமது தாய்மண்ணைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாகி நிற்கும் பல உடன்பிறப்புகளின் உள்ளத்தின் ரணங்களுக்கு களிம்பாகிறது என்பது வெள்ளிடை மலை போலத் தெரிகிறது.
ஒரு திரைப்படப் பாடலாசிரியர் எனும் பணியினால் உயர்ந்து நவீன கால தமிழன்பர்களுக்கு கண்ணதாசன் என்றால் தமிழ் எனும் வகையில் அவரை அவர்களுடன் இணைத்து வைத்துள்ள உண்மை புலனாகிறது.
அவர் வரைந்த காதல் பாடல்கள் பல, சோகப் பாடல்கள் பல , தத்துவப் பாடல்கள் பல. ஆனால், இவைகள் அனைத்திலும் புதைந்துள்ள சிலவரிகளை எடுத்துப் பார்த்தால் அவை எமது மண்ணைப் பிரிந்த எமது ஏக்கப் பிரதிபலிப்புகளை எடுத்துக்காட்டுபவை போல அமைகிறது.
அப்போது நான் லண்டன் வந்த ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும். தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தந்த இருள் நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்க இலண்டன் நகர பனிக்கால இருளோடு குளிரும் இணைந்து உடலை வாட்டும் ஒரு இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.
அப்போது கை எனது கட்டிலருகே தலைமாட்டில் எப்போதும் எனக்குத் துணையிருக்கும் ஒரு டேப்ரிக்கார்டரைத் தட்டி விட்டது.
காதல் சிறகைக் காற்றில் விரித்து
வானவீதியில் பறக்கவா ?
எனும் கவியரசரின் அழகிய வரிகளோடு சுசீலா அம்மாவின் குயில் குரல் ஒலித்தது. மனம் பாட்டின் வரிகளோடு லயித்தது. கவிதைபால் நாட்டம் கொண்டிருந்ததாலோ என்னவோ எப்போதும் மனம் பாட்டின் இசையை ரசித்தாலும் அதன் பொருள் தேடி ஏங்கும்.
அப்போது ,
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா
எனும் வரிகள் ஒலித்தது. என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆமாம் எனது தாய்மண்ணின் பிரிவோடு நான் அவ்வரிகளை இணைத்துப் பார்த்தேன். பல்லாயிரம் மைல்களுக்கப்பால் தாய்மண்ணை விட்டுப் பிரிந்து இருக்கும் நான் எப்படி என் தாய்நாட்டை அக்கணத்தில் அடைவேன்? எண்ணங்களினாலே பாலம் அமைப்பது ஒன்று மட்டும்தானே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஒரு புலம்பெயர் மாணவனால் இயலும், அதைத் தவிர வேறு மார்க்கம் ஏது?
எத்தனை காலம் பிரிந்து இருந்தேன் என் தாய்மண்ணை அதை எண்ணிக் கண்ணீர் வடிப்பது ஒன்று தானே அப்போது உணர்வுகளை ஆற்றிக் கொள்ள ஒரே வழியாகிறது. அதுதான் கவியரசரின் மகத்துவம். எளிமையான வரிகள் அதனுள் எத்தனையோ வகைகளில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆழமான கருத்துக்கள்.
மற்றுமொரு இனிய பாடல் …
ஆண் நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது
ஆமாம் இது போன்ற கவியரசரின் பாடல்கள்தான் என் போன்ற புலம் பெயர்ந்தவர்களை மிகவும் கடினமான தாய்நாட்டு ஏக்க காலங்களில் கரை சேர்க்க உதவியது. காலத்தால் அழியாத கவிஞன், எத்தனையோ நாடுகளில் வாழும் எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த தமிழர்களால் இன்றும் போற்றிப் பேசப்படும் ஒரு ஈடற்ற படைப்பாளி.
அவரது இந்தப் பிறந்த தின வாரத்தின் வாயிலாக அவரை நினைவுகூற கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan