ஓலைத்துடிப்புகள் (9) ஆம் பாடலுக்கான பொழிப்புரை
===============================================

உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ

கவிஞர் ருத்ரா

oolaisuvadi

பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!

தலைவன் பால் காதல் உற்ற போதும் அது காதல் தான் என்று உணர்ந்து கொள்ள இயலாத ஒரு பால்வடியும் பிள்ளைத்தனம் மாறாத “மடப்பம்” உடையவள் தலைவி.மரப்பாச்சி வைத்து “அம்மா பிள்ளை”விளையாடும் தன்மையவள்.”பைஞ்சாய்” எனும் ஆற்றோர நுண்ணிய கோரையில் செய்யப்பட்ட பொம்மையை தன் பிள்ளையாக நினைத்து விளையாடுகிறாள்.உடல் அளவில் கூட இன்னும் முதிராதவள் தான்.சுரைக்கொடியின் காய் இன்னும் வளர்ச்சி நிலையில் நீள்தல் உறாது சிறிய பசுமையான காய் போல தோற்றம் தரும் முலையினை தாய்ப்பாசம் மிக்க முலையாய் அந்த பொம்மையின் வாய் அருகே காட்டி “பொய்ப்பால்” ஊட்டும் விளையாட்டில் ஆழ்ந்து விட்டாள்.இருப்பினும் அதனில் நாணம் கொண்டு மெல்லிய சிரிப்பை உதிர்க்கிறாள்.தன்மை படர்க்கை முன்னிலை என்னும் இலக்கணம் எல்லாம் அந்த பொம்மைப் பிள்ளையிடம் ஒன்றாய் நிரவி விட்டது.தன்னை தாயாய்(தன்மை) ஆக்கி பொம்மையை குழந்தையாய்க்கொண்டு (படர்க்கை) அதன் தந்தை நீ தான் என்று உன்னை நோக்கி ஓங்கிய குரலில்(தலைவனை நோக்கி) அழைப்பதே அவளது விளையாட்டு. (தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்)

வீடுகளில் அம்மா பால் ஊட்டும் போது பொய்யாய் அழைப்பது உண்டு.”அப்பா சீக்கிரம் வாங்க!உங்க பையன் பால் குடிக்க மாட்டேனென்கிறான்”என்று செல்லமாய் அழைப்பது உண்டு அல்லவா! அது போன்றது தான் இந்த பொய்ப்பால் ஊட்டல். தோழிக்கு ஆற்றமை தாங்க வில்லை.”என்ன மடச்சி இவள்?” விரைவாய் வந்து இவளை காப்பாற்று என்கிறாள் தலைவனை நோக்கி. (“மடவள் என் இவள்?வந்திசின் ஓம்புமன்.”)

முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
உறைநோய் உற்று நின்னை நோக்கும்
நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.

கிழடாய்ப்போன முதுகு கூன் விழுந்த நாரை ஒன்று தங்குமிடம் (இறை) தேடி திரிய கரையின் ஞாழற்பூவின் கிளை வளைந்து காற்றுக்கு ஏற்றபடி ஆட நெய்தல் பூக்கள் நெருக்கமாய் பூத்து ஆடி ஆடி அசைய (பதைப்ப..அசைய ;ததைந்த…நெருங்கிய) அந்த அழகிய உப்பங்கழியில் குளிர்பொருந்திய கரையோர பாசிபடர்ந்த நீரலைகளுடன (பைந்திரை) விளங்கும் கடற்கரைப்பட்டினத்து தலைவனே!உடலே உடலோடு போர் செய்தாற்போன்ற காதல் நோயின் வலியால் முறுக்கிய நிலையில் செம்பிழம்பாய் நெருப்பு பற்றிக்கொண்டது போல் அந்த உடம்பில் தங்கி அவளை துயர்ப்படுத்தும்.அதனால் அவள் உன்னை ஏக்கத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.நரம்புகளால் நன்கு முறுக்கப்பட்ட யாழின் இன்னிசை ஒத்த சொல்லை உடைய உன் தலைவி ஏதேதோ குழறுகிறாள்! இது தகுமோ?

ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.

ஒளிபொருந்திய மினுமினுப்பான மணலில் படுத்துக்கிடப்பதைப்போன்ற கரிய கொம்பின் எருமையை ஒத்த பளுமிகுந்த படகு அங்கே கரையில் ஒதுங்கிக்கிடக்கும்.அதன் மீது சிறகுகளால் மொய்க்கும் நாரைக் கூட்டங்கள் நிறைந்த துறையை சேர்ந்த தலைவனே!மடமை பொருந்திய இந்த சிறு பெண்ணின் பெரிய காதல் நோயை துடைக்கும் வழியை காண்பாயாக!உன் பார்வைகள் அவள் மீது தூவினாலே போதும்.அந்த பூமழையை நீயும் பார்த்து களிப்பாயாக!

வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.விதை முளைக்கும் விதமே விந்தை தான்.விதையின் முளை வெள்ளையாய் இருப்பது என்பது விதைக்குள் வெறுமையாய் இருந்து உள் விசைகளின் தொகுப்பே (வினைசெறி)பின் வெளியே முளைக்கிறது.எனவே மரப்பாச்சியாய் இருந்தவளுக்குள் பாய்ச்சிய மின்னலாய் ஆனதே இவள் காதல்.கண்ணின் முளைபோல் கருவிழிக்குள் நுழையும் ஒளிக்கதிர் (எல்கதிர்) வியப்புச்சிறகுகள் விரியும் வண்ணம் அவள் உள்மனத்தில் எண்ணங்கள் தேக்கி நிற்கின்றாள்.இருள் எல்லா வெளிச்சத்தையும் தின்றுவிடுதல் போல் ஒரு அடர் இருள் தோன்றி (உன்னைப் பிரிந்த துயரம்)அவளை அலைக்கழிக்கிறது.அலைகளால் அரித்து அரித்து உண்ணப்படும் அந்த நீர்க்கரையில் மண்ணே மறைந்து
போய்விடும் நிலையும் வந்து விடும் போல் இருக்கிறது.செறிவுற்ற மூங்கில் கட்டமைப்பின் தோள் அழகு மிக்கவனே இவளை இவள் துன்பத்திலிருந்து விடுவிப்பாயாக.

ஓலைத்துடிப்புகள் ( 10 )

கவிஞர் ருத்ரா

அம்மூவனார் எழுதிய “நெய்தல் செய்யுட்”கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

“வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை”..

என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் “செத்த” என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் “செத்தவன் கையில் வெத்தலை பாக்கு “இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த “செத்த நிலையை” தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் “தங்கப்பதக்கம்” திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

“செத்தென” என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் “மடநடை”அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் “மடம்” அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் “போல” என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் “போல” என்று வழங்கப்படுவதில் “சங்கத்தமிழின் சொல்லியல் முறை” ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படியென்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும்இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் “செத்தையாருக்குள் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவர்.இன்னொரு குறளில் “உறங்குவது போலும் சாக்காடு” என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி “நடைப்பிணங்களாய்”(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே “செத்த” “போல” என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே “வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென”என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது.அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.

இப்போதும் இதன் பொழிப்புரையை இந்த இதழிலேயே தர இயலவில்லை.செமஸ்டர் அர்ரியர்ஸ் போல வரும் இக்குவியலை வரும் இதழில் சமப்படுத்திவிடுவேன் என நம்புகிறேன்.சிரமத்தை பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென..”

பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

=================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *