Blog

  • அவன் அது ஆத்மா! (11)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: பதினொன்று

    S. N. N. சங்கரலிங்கம் ஐயர்

    avs1
    அவனிருக்கும் வீட்டிற்குப் பின்புறத்தில்தான் இராமச்சந்திரபுரம் தெரு இருக்கிறது. அது ஒரு அழகான அக்கிரஹாரம். இருபுறமும் வரிசையாக அழகான வீடுகள் உண்டு. தெருவின் கடேசியில் ஸ்ரீ ராமர் கோவில். ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேய சமேதராக இருக்கும் மூலஸ்தானம். இடதுபுறத்தில் லக்ஷணமான பெரிய வலம்புரி விநாயகர் சந்நிதி. அதற்கு முன்பாக சிறு ஹோமகுண்டம். தங்கக் குங்குமச் சிமிழ் போல இருக்கும் இந்தக் கோவில். அதன் பின்புறம் தெளிந்து பாயும் கன்னடியன் கால்வாய். தென்புறத்தில் ஏழு வீடுகள் கொண்ட எழாபுரம் அக்கிரஹாரம். கன்னடியன் கால்வாய்க்கு மேற்குப் பகுதியில் பழமையான, உயிர்ப்புடன் கூடிய ஒரு “கல் மண்டபம்” படித்துரையுடன் இருக்கும். இப்பொழுது கால்வாயை விரிவு படுத்துகிறோம் என்று பொதுப்பணிதுறையினர் அந்த மண்டபத்தை இடித்து விட்டனர். கால்வாயில் தண்ணீர் நிறைந்து ஓடும். அது அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொண்டாட்டந்தரும். அவர்கள் அந்த மண்டபத்தின் மேலே இருந்து தண்ணீரில் குதித்து நீந்தியபடியே சிதம்பரேஸ்வரர் கோவில் படித்துறையில் வந்து கரை ஏறுவார்கள். அந்த மண்டபத்திற்கு மேற்கே கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமையான வயல்காடுகள்தான். “ஒரு காலத்தில் இந்தத் தெருவில் “மாத்வ பிராமணர்கள்”, அதாவது ராயர் குடும்பத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தெய்வமான ஸ்ரீ ராமனுக்குக் கோவில்கட்டி வழிபட்டு வந்திருக்க வேண்டும். அதற்க்குச் சான்றாக இன்றும் சில மாத்வகுடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவில் சித்திரைத் திருநாளின் மூன்றாம் திருநாள் “ஆஞ்சநேயர் வாகனக்” கட்டளைக் காரர்கள் ராயர்குடும்பத்தினர்தான். அந்தத் திருநாள் செலவுக்கென்றே “வயலை” எழுதி வைத்திருந்தனர். அதில் விளையும் நெல்லை விற்றுவரும் பணத்தில் சுவாமி கட்டளையைச் செய்யவேண்டும் என்று இந்த ஏற்பாடு. சிலவருடங்களுக்கு முன்புதான் இந்தக் கட்டளைக்காரர்கள் மாறினார்கள்” என்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ஒய்வு பெற்று, அதே தெருவில் வசித்து வந்த, இலக்கியத்திலும், வரலாற்றிலும் ஈடுபாடுள்ள “பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா” அவனிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அந்த கிராம மக்களே கைங்கர்யம் செய்து வருகின்றனர். முக்கியமாக சங்கரலிங்கமையர் குடும்பத்தினரின் பங்கு அதிகமாக இருக்கும்.

    avs3S. N. N. சங்கரலிங்கம் ஐயர்தான் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் ஆணிவேர். அவர் மாட்டு வண்டியில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று இந்தியா சிமிண்ட்ஸ் துவங்குவதற்குத் தேவையான இடத்தையும், “ஜிப்சம்” போன்ற மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் தேடிக் கண்டு தாழையூத்தில் சிமென்ட் தொழிற்சாலையை நிறுவினார் என்றும் அவனது கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் அவரது கருப்பு நிறக் காரில் அவரும், அவரது மனைவி திருமதி. பிச்சு சங்கரலிங்கம் அம்மாள் (பிச்சுக்குட்டி மாமி) அவர்களும் கல்லிடைகுறிச்சியில் இருந்து தாழையூத்திற்குச் சென்று இரவு எட்டு மணிக்குத் திரும்புவதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு தனது தொழிற்சாலையில் வேலை கொடுத்திருக்கிறார். அப்படி வேலைக்குச் சேர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனிதர்கள் சங்கரலிங்கம் ஐயர் அவர்களின் நல்ல குணங்களையும், செய்த உதவிகளையும் அவனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    அவனுக்கு இன்றும் நினைவில் இருப்பது சங்கரலிங்கம் ஐயர், R. S. A. சங்கர ஐயர், ராயல் என்பீல்ட் K. R. சுந்தரம் ஐயர், ஈசன் குழுமத்தின் ஈஸ்வர ஐயர் போன்ற பெரியோர்கள் சேர்ந்து ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் மகாபாரத உபன்யாசத்தை 1966ம் வருடம் ஆடிமாதம், நாற்பத்தெட்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததுதான். இராமச்சந்திரபுரம் தெருவில் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு முன்பாக பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். தெரு முழுவதும் மக்கள் வெள்ளம் போல அமர்ந்து கேட்பார்கள். ஒலிபெருக்கி வடக்கு ரதவீதி (குத்துக்கல் தெருவின் கடேசி வரை) கடேசி வரை வைத்திருப்பார்கள். ஒரு பெரிய கல்யாண உற்சவம் போலத்தான் அது நடந்தது. தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு அம்மா அவன் நெற்றியில் விபூதி இட்டு அவனை அந்த மகாபாரத உபன்யாசம் கேட்கச் சொல்லி அனுப்புவாள். அவனுடன் அவனது நண்பன் நீலகண்டனும் வருவான். அவனுக்கு விளையாட்டில் தான் முதலில் கவனம் இருந்தது. இந்த உபன்யாசம் கேட்பதில் விருப்பம் இருக்கவில்லை. அம்மாவின் வற்புறுத்தலால் முதல்நாள் சென்றான். சரியாக ஏழு மணிக்கு,”தாபிஞ்ஜஸ் தப கர்த்விஷே தனுபிருதாம் தாரித்ர முத்ராத்விஷே” என்று அனதராம தீட்சிதரும், அவரது சீடர்களும் தியானஸ்லோகம் கம்பீரமாக ஒரே குரலில் சொன்னதைக் கேட்டு அதிலேயே அவன் சொக்கித்தான் போனான். தீட்சிதரின் கதை சொல்லும் பாணி அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவன் அந்தக் கதைக்குள்ளேயே சென்று விடுவான். மகாபாரதம் அவனைக் கட்டிப் போட்டது. அதில் உள்ள சூஷ்ம தர்மங்களை தீட்சிதர் சொல்லச் சொல்ல அவன் கவனமாகக் கேட்டு வந்தான்.

    சூதாட்ட சர்க்கத்தில் தர்மன் ஒவ்வொன்றாகப் பணயம் வைக்க, சகுனி பகடை உருட்ட “நான் ஜெயித்தேன்..அடுத்தது என்ன …” என்று சகுனி கேட்க, மீண்டும் தர்மன் தன் தம்பியரைப் பணயம் வைக்க, சகுனி கள்ளத்தனமாக எல்லோரையும் வென்ற பின்பு, தர்மா இன்னும் பாஞ்சாலி இருக்காளே…அவளைப் பணயம் வைத்தாடு என்று மகா பாபி சகுனி அந்தப் பதிவ்ரதையைக் கேட்டான்.. தர்மன் சரி பணயம்ன்னு சொல்லரத்துக்குள்ளே அவள ஜெயுச்சுட்டேன்னு…சபைல குதிச்சான்…தர்மர் சொக்கட்டானையே பாத்துண்டிருந்தார்….சூதாடரவாளுக்கு நாம அடுத்தாப்புல ஜெயுச்சுடலாம்னுதான் தோணுமாம்…. பட்டத்திரி குருவாயூரப்பனப் பார்த்து,

    “ஏய் குருவாயுரப்பா…நீ கண்கண்ட தெய்வமாச்சே….அந்த பாபி சகுனி சூதாட்டத்துல தர்மபுத்திரர்ட்டேந்து எல்லாத்தயும் ஏமாத்தி ஜெயிச்சுட்டானாமே..உனக்குத் தெயரியுமான்னு கேட்டாளாம்..அதுக்கு சுவாமி குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று கதையின் உச்சத்தை கேட்பவரின் மனதில் பதிய வைத்தார்.

    அவர் சொன்ன “யஷப்ப்ரச்னம்” அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தாகத்திற்க்காகத் தண்ணீர் எடுக்கத் தன் தம்பியர்avs ஒவ்வொருவராக அந்தக் குளத்தை நோக்கி அனுப்புவதையும், அந்தக் குளக்கரையில் உள்ள மிகப் பெரிய மரத்தில் இருக்கும் “யக்ஷன்” என்ற தர்ம தேவதையையும் தீட்சிதர் சொல்லச் சொல்ல, அந்த இயற்கைக் காட்சிகளும், பஞ்ச பாண்டவர்களும், அந்தச் சூழ்நிலையின் அடர்ந்த காட்டு மரங்களின் வாசனையும் ஒரு பிம்பமாக அவனுக்குள்ளே பதிந்து விட்டது. அவன் ஆற்றங்கரையில் சுடுகாட்டில் இருக்கும் அந்தப் பெரிய இலுப்பைமரத்தை நினைத்துக் கொள்வான். இப்பொழுதும் அந்த மரத்தைப் பார்க்கும் பொழுது “யக்ஷன்” நினைவுதான் அவனுக்கு வரும். அது தீட்சிதர் உரையின் உருவங்கள். இன்றும் அதே உருவங்கள்தான் அவனோடு உயிராக இருக்கிறார்கள். யக்ஷன் தர்மராஜனிடம் நூற்றிஎட்டு கேள்விகள் கேட்கிறான். அனைத்திற்கும் தர்மர் விடை கூறுவதை தீட்சிதர் தெளிவாகக் கூறினார். அந்த வயதில் அவனுக்குச் சில எளிய தர்மங்கள்தான் மனதில் பதிந்தது. குளத்தில் நீர்குடிக்கச் சென்ற தம்பியர்கள், குளத்தின் உரிமையாளர் சொல்லைக் கேட்காமல் தண்ணீர் குடித்தனர். மயங்கி விழுந்தனர். தர்மபுத்திரர் யக்ஷன் சொல்லை மதித்தார். தனக்குத் தெரிந்த பதிலைத் தந்தார். தர்மதேவதை அவரது தம்பியர்களை மீட்டுக் கொடுத்தார். அதனால் பிறர் பொருளை, அவரது உரிமை இல்லாமல் தொடாதே என்ற பாடத்தை அறிய முடிந்தது.

    “உலகில் ஆச்சரியமானது எது” என்ற கேள்விக்கு ,”தினமும் மனிதர்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் நான் என்றும் இருப்பேன் என்று நினைக்கிற அறியாமைதான் ஆச்சர்யமானது” என்ற தர்மபுத்திரரின் பதில் அவனுக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு அவன் அந்த கிராமத்திலோ, அவனது குடும்பத்திலோ யாரேனும் இறந்தால் இந்த தர்மபுத்திரரின் விடைதான் அவனது மனதில் ஒலிக்கும். அதுவும் தீட்சிதரின் குரலிலேயே.

    avs2அவர் கர்ணனின் கதையைச் சொன்னார். அவன் அன்று அழுதே விட்டான். ஆற்றில் மிதந்துவரும் தொட்டிலைத் தேரோட்டி எடுத்து வருவான். குழந்தை இல்லாத தன் மனைவியிடம் தருவான். ஒரு தாய் குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆற்றிலே விட்டாள். இன்னொருத்தி அதையே அன்பாக அணைத்துக்கொண்டு தாயானாள். தீட்சிதர் அப்படிச் சொன்னபொழுது அன்று அவனுக்கு அந்த கிராமத்தில் யாருக்கெல்லாம் குழந்தைகள் இல்லையோ அவர்களுக்கெல்லாம் அவன் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். இதுவும் மகாபாரதம் சொல்லும் சூஷ்ம தர்மம்தானே. போர்க்களத்தில் கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கும் பொழுது, கிருஷ்ணர் சொல்லி அர்ச்சுனன் அம்பு விட அது கர்ணனின் மார்பில் தைக்கிறது. கீழே சரிகிறான் கர்ணன். மீண்டும் அர்ஜுனன் விடும் அம்பெல்லாம் கர்ணனுக்கு மாலையாக விழும்படிச் செய்கிறாள் தர்மதேவதை. கண்ணன் போய் கர்ணனிடம் அவனுடைய புண்ணியத்தை தானமாகக் கேட்கிறான். தன் ரத்தத்தால் அதைக் கண்ணனுக்குத் தாரை வார்க்கிறான். கண்ணன் கர்ணனுக்குத் தன் விஸ்வரூபம் காட்டுகிறான். இந்த நிகழ்ச்சியைக் கதறக்கதறச் சொல்லி, “ஏய்..குருவாயூரப்பா..கர்ணனுக்கு நீ விஸ்வரூம் காட்டினயாமே…உண்மைதானான்னு பட்டத்ரி கேட்டார். அதுக்கு குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று தீட்சிதர் கதை சொல்லும் அழகே அழகு. பின்னொருநாள் அவன் அவனுக்குப் பெரியம்மாவுடன் அம்பாசமுத்திரம் கிருஷ்ணா தியேட்டரில் கர்ணன் திரைப்படம் பார்க்கப் போனான். கர்ணன் இறக்கும் பொழுது அவனும் அழுது, படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியில் வந்ததை அவனுக்குப் பெரியம்மா அவனிடம் அடிக்கடி நினைவு கூறுவாள். அவன் கர்ணன் திரைப்படத்தை எத்தனையோ முறை பார்த்து விட்டான். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலிலும் தீக்ஷிதரின் குரலையே அவன் அடிநாதமாகக் கேட்கிறான். அதே போல அபிமன்யு, பீஷ்மர், துரோணர் , நளசரித்ரம் எல்லாமே அவனுக்குள் அவர் அன்று நட்ட விதைகள்தான். பின்னாளில் அவன் மகாபாரதக் கதைகளுக்குள் தன்னைத் தொலைத்ததற்கு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரே காரணம் என்றால் அந்த உபன்யாசத்தை ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் ஐயர் போன்ற பெரியோர்களின் தர்ம சிந்தனையும் முக்கிய காரணம்.

    சங்கரலிங்கம் ஐயர் மறைந்த பிறகு, அவரது பிறந்த தினமான ஜனவரி 31ம் தேதி துவங்கி பதினைந்து தினங்கள் ப்ரும்மஸ்ரீ தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் அவர்களது உபன்யாசத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக K.S. ராமன் முன்னின்று நடத்தி வந்தார். தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் செய்த “பிரகலாத சரித்திரம்” சொற்ப்பொழிவை அதே தெருவில் பலவருடங்களுக்குப் பிறகு கேட்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. தூணில் இருந்து அந்த நரசிம்மன் வெளியில் வரும் காட்சியை அவர் அழகு தமிழில் நெருப்புப் பொறி பறக்கச் சொன்ன பொழுதும், ஹிரண்ய வதம் முடிந்து, சினம் தணிந்து ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹனாகப் பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைக் கூறும் பொழுதும் அவன் கண்கள் பனித்தன. அன்று அங்கு அந்தக் கதையைக் கேட்க வந்திருந்த L. M. சுந்தரம் ஐயர் (அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் அப்பா ) “கேட்டாயா விஸ்வநாதா…இப்படி உடம்பே புல்லரிக்கும்படியா எத்தனைபேர் கதை சொல்லறா” என்று வியந்தார். இப்படி எல்லாம் கிராமத்தில் தர்மத்தை வளர்த்தனர். அவனைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனம் உயரக் காரணமே கிராமத்துப் பெரியோர்கள் செய்த நல்ல தர்ம காரியங்கள் என்பதை அவன் நம்புகிறான்.

    (07.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • குடும்ப வண்டி..

    நாகினி

     

    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    வருடந்தவறாமல் இல்லறத்தின் நல்லறமாக
    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    செழிக்கும் மகிழ்ச்சி குடும்ப வண்டி

    அண்ணன் தம்பி கைகலந்து
    செல்லச் சண்டைகள் பூத்திடும்
    அரட்டை நிறைந்த வாழ்க்கை வண்டி
    செயலிழப்பு சோர்வு தொடும்நேரம்
    அன்பு கதைகளும் சளசள பேச்சாகி
    செவிக்கு இம்சை ஆனாலும்
    அரவணைக்கும் தாய்மை மனமோ-மழலைச்
    செல்வங்களுடன் பொழுதைச் சுகமாய் கழித்திடும்
    அழகு ஆனந்தம் விளையாடும் குடும்ப வண்டி

    எத்தனை கோடி பொருட்செல்வம் கொட்டியும்
    அழுது தொழுதாலும் கிடைக்காத பெருஞ்செல்வம்
    என்றென்றும் இனிமை சேர்க்கும்
    அமுதக்கலசம் மழலை துள்ளும் வாழ்க்கைவண்டி
    எக்காலத்தும் உறவுக் கிளைபரப்பி
    அலைந்து ஆர்ப்பரிக்கும் மனதை நேர்வழிப்படுத்தி
    அகிலம் காத்திடும் மழலை நிறைந்த குடும்ப வண்டி

    வீட்டுக்கொரு பிள்ளை போதுமென்று
    நீட்டி முழக்கலாமோ ஆணவத்தில்
    வீழும் உறவுகளை இழுத்துப் பிடித்து
    நீங்கா இல்லற பந்தத்தை
    நீட்சி உறவென மலரச்செய்யும் – மழலை தவழும்
    வீடு செல்வம் நிறைந்த வாழ்க்கைவண்டி
    நீட்டும் கைகளில் அன்பு
    வீற்றிருக்கும் இல்லற நலமதில் பூத்திருக்கும் மழலை
    நீயென மடியில் தாங்கி வளர்க்க சிரமமென
    வீணே இல்லம் தேடிவரும் பெருஞ்செல்வத்தை அழித்து
    நீங்கா பழிதேடும் வீணர்களின்
    வீண்வாதத்திற்குள் அடங்காத மழலை வரம்பெற்ற குடும்ப வண்டி

    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    வருடந்தவறாமல் இல்லறத்தின் நல்லறமாக
    செல்வம் சேர்ந்தே
    மழலைச் செல்வம் சேர்ந்தே
    செழிக்கும் மகிழ்ச்சி குடும்ப வண்டி!

    … நாகினி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும்,
    ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், -மேய்ச்சல்
    மனன்யன் முகுந்தன் மடியேந்தி தாளால்,
    அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு ….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    துருவ சரித்திரம்

     

    ——————–
    உத்தான பாதனுக்குப் பத்தி னிகளிரெண்டுcrazy1
    சுத்தாத்மா மூத்தாள் சுநீதியும் -பித்தாக்கி
    சக்கிர வர்த்தியை சேலைச் சிறைவைத்தாள்
    சக்களத்தி மாதுசுரு ஸி….(1)

    சித்திமகன் உத்தமன் அத்தன் மடியமர
    தத்துமகன் போல்வாழ்ந்த அத்துருவ -புத்திரனும்
    தாவி மடியேற தாங்காது சிற்றன்னைப்
    பாவி பிடித்திழுத்தாள் பாய்ந்து….(2)

    கருவ சுருஸி கடுஞ்சொற்கள் கேட்ட
    துருவன் மனக்குறையை தாய்முன் -உருக
    அநீதி முடிக்கு(ம்)அரி அப்பன் மடியில்
    சுநீதி அமரென்றாள் சேய்க்கு….(3)

    மாதாசொல் மிக்கதோர் மந்திரம் வேறிங்கு
    ஏதேனும் உண்டோவென்(று) எண்ணியசேய் -பீதாம்
    பரனை தரிசிக்கப் போகத்தம் பூரா
    கரனை தரிசித்தான் கண்டு….(4)

    வாசுதேவ மந்திரத்தை தேசிகர் நாரதர்crazy3
    தேசுமிகு சேய்க்குப தேசித்து -கேசவர்க்கு
    தாசனாய் வாசனாதி தோஷமின்றி வாழ்த்தென்றார்
    ஆசன தர்ப்பை அமர்ந்து….(5)

    கனியில் துவங்கியவன் காய்ந்த சருகை,
    பனிநீரை, காற்றைப் புசித்து -முனியாய்
    குடைசாய மூன்று குவலயங்கள் காலை
    திடமாக ஊன்றி தவம்….(6)

    ஈரைந்து மாதமேந்தி ஈன்றவள் சொற்கேட்டு
    பேரைந்து மூன்றெழுத்தைப் பார்த்திட -ஓரைந்து
    மாதங்கள் செய்த மகாதவத் தால்வியந்து
    வேதங்கள் மூக்கில் விரல்….(7)

    கும்பகத்தால் காற்று குறைந்திட மூச்சடைத்து
    உம்பர்கள் ஓடி உலகெடுத்த -கொம்பனை
    வேண்ட கருடாழ்வான் வாகனம் மீதமர்ந்து
    ஆண்டவன் காட்சி அளிப்பு….(8)

    உருவம் மறைந்திட உள்ளே, திகைத்து
    துருவன் விழிகள் திறக்க -அருவம்
    கருடனை விட்டிறங்கி கைச்சங்கால் கன்னம்
    வருடியபின் வாஞ்சையாய் வாக்கு….(9)

    மாண்டபின் செல்கின்ற மோட்சம் கொடுக்காது
    ஆண்டுகள் முப்பத்தா றாயிரம் -ஆண்டபின்
    வானில் துருவ விளங்குவாய் விண்மீனாய்
    ஆணில் சிறந்தோன் அளிப்பு….(10)

    பெற்றவளும் கூடவர புஷ்பகவி மானத்தில்
    உற்றான் துருவன் உயர்பதவி -கற்றவர்க்கும்
    கிட்டாத அந்தஸ்து கண்மூடி பக்திக்கு
    கிட்டுமெனக் கூறும் கதை….(11)….கிரேசி மோகன்….

    Share
  • தமிழ்க் களஞ்சியம் இணையதளம்: ஒரு பகுப்பாய்வு

    கி. கண்ணன்

    முன்னுரை:

    இணையம், இன்று உலகைத் தன் கைக்குள் கொண்டுவந்துள்ள ஓர் ஊடகமாகும். நூல்களாகக் கொண்டுவர முடியாத பல தகவல்களை இணையதளம் உடனுக்குடன் அளிக்கும் ஓர் ஒப்பற்ற பிணைப்பாக விளங்குகிறது. இலக்கியம், ஆன்மீகம், அரசியல், பொழுதுபோக்கு என்று இதனுள் இல்லாதததே இல்லை எனலாம். சமூக வலையகம், வலைப்பதிவு, வலைத்தளம் என்று பலவகைகளில் இணையமானது இன்று வளர்ச்சி பெற்றள்ளது. அவ்வகையில் இணையதளங்களின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இதில் தமிழ்க்களஞ்சியம்.காம் என்ற இணையதளம் எவ்வாறு தமிழ்மொழி, தமிழிலக்கியம் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்கிறது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    களஞ்சியம்:

    களஞ்சியம் என்ற சொல் பொதுவாக ஒரு பொருளை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும். குறிப்பாக தமிழில் களஞ்சியம் நெல் போன்ற தானியங்களை சேமித்து வைக்கும் இடத்தைக் குறிக்கும் என்று களஞ்சியத்திற்கு விளக்கமளிக்கின்றது விக்கிபீடியா. அறிவியல் களஞ்சியம், கலைக் களஞ்சியம், வாழ்வியற் களஞ்சியம் என களஞ்சியம் பலவகைப்படும். இணையத்தில் விக்கிபீடியா என்ற கட்டற்ற இணையம் மட்டுமே உலகளாவிய தகவல்களைத் தருகின்றது. தமிழ் இணையத்தில் தமிழ்க்களஞ்சியம் என்பது தமிழ் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒன்றிணைக்கின்றது.

    தமிழ்க்களஞ்சியம் (www.tamilkalanjiyam.com):

    thamizhkkalanjiyam

    தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல், கணேசன், பெருமாள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் கிடைக்கப்பெற்ற ஓர் அற்புத பொக்கிஷம் தமிழ்க் களஞ்சியம் என்னும் தமிழ் சேமிப்பான் ஆகும். இது எண்ணற்ற இலக்கியங்களையும் ஆவணங்களையும் பதிவு செய்து தற்கால மக்களின் அறிவிற்கும் வருங்கால தலைமுறையின் பயன்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது. தமிழர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் நம்மைவிட மேலை நாட்டவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டால்தான் நம்மிடையே இன மற்றும் மொழி உணர்வு வளரும். இதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்த தமிழ்க்களஞ்சியம்.காம் இணையதளம், என்று இதற்கு முன்னுரை அளிக்கிறார் ஆசிரியர் சக்திவேல்.

    பகுப்பு:

    இந்தத் தமிழ் களஞ்சியம் இணையதளத்தில்,
    இலக்கியம்,
    தமிழ் உலகம்,
    அறிவியல்
    பொதுஅறிவு
    ஆன்மீகம்
    ஜோதிடம்
    மருத்துவம்
    பெண்கள் பற்றி
    நகைச்சுவை
    கலையலகம்

    என்ற பத்து பகுப்புக்களின் கீழ் பலவகையான தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. களஞ்சியம் என்பதன் பொருளுக்கிணங்க பலதரப்பட்ட செய்திகளையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் தொடர்பான செய்திகளைத் தருவதாக அமைந்துள்ளது.

    இலக்கியம்:

    தமிழ் இலக்கியம் தொடர்பான அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் காணக் கிடைக்கின்றது. சங்க இலக்கியம், இலக்கணங்கள், காப்பிய இலக்கியங்கள், புராணங்கள், தல புராணங்கள், சைவ இலக்கியங்கள், வைணவ இலக்கியங்கள், கிறித்துவ இலக்கியங்கள், இசுலாமிய இலக்கியங்கள், சமண இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், திரட்டு நூல்கள், அவ்வையார் நூல்கள், கம்பர் நூல்கள், ஒட்டக்கூத்தர் நூல்கள் என பல பிரிவுகளும் மேலும், இதில் கவிதைகள், புதுக்கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    தமிழ் உலகம்:

    இத்தலைப்பின் கீழ், தமிழ் இலக்கிய நூல்கள், தமிழக மன்னர்கள், தமிழ்ப் புலவர்கள், தமிழ்க அறிஞர்கள், தமிழக தலைவர்கள், கலைஞர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், மாவட்டங்கள், ஊர்கள், சுற்றுலா தலங்கள், திருத்தலங்கள், அரசியல் கட்சிகள், ஆறுகள், ஏரிகள், மலைகள், கோட்டைகள், தமிழ்ப்பெயர்கள், தமிழ்ப் பணியார்கள் என்று தமிழ் மொழி, தமிழ்நாடு சார்ந்த தகவல்கள் இதில் ஒன்று திரட்டப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் சுட்டிப் படங்களுடனும் விளக்கப்பட்டுள்ளன.

    மேலும் இப்பிரிவில், தமிழ் தேடுபொறி, அகரமுதலி, தமிழ் ஆங்கில அகராதிகள், கலைச்சொற்கள், மின்னஞ்சல், உரையாடல், கட்டுரைகள் போன்ற இணைப்புகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

    அறிவியல்:

    அறிவியல் என்னும் பகுப்பின் கீழ் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகள் தொடர்பான பல கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில், கணிதவியல், மின்னியல், மின்னணுவியல், கனிமவேதியியல், கரிமவேதியியல், வானவியல், இரசவாதம், கணிப்பொறியியல், ஒளியியல், ஒலியியல், உளவியல், அணுஇயற்பியல், தாவர வகைப்பாட்டியல், உடல் அமைப்பியல், உடற்செயலியல், மரபியல் போன்றனவும் இது தொடர்பான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இப்பகுதியில், அடிப்படை கணிதவியல், அடிப்படை இயற்பியல், அடிப்படை வேதியியல், அடிப்படை உயிரியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் விதிகள் போன்றன இடம்பெற்று விளக்கப்பட்டுள்ளன.

    பொது அறிவு:

    இப்பகுப்பின் கீழ், உலக வரலாறு, இந்திய வரலாறு, இந்து, கிருத்துவ, இசுலாமிய குழந்தைப் பெயர்கள் இன்னும் பல பொது அறிவு சார்ந்த தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பொது அறிவுத் தகவல்கள், பொது அறிவுக் கட்டுரைகள், கேள்வி பதில்கள், சாதனைகள் ஆகியனவும் இதில் இடம்பெற்றள்ளன.

    ஆன்மீகம்:

    மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினையும் பற்றிய குறிப்புகள் இதில் காணப்படுகின்றது. சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாமியம், சமணம் ஆகிய மதங்கள் தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. திருமால். சிவன், முருகன், விநாயகர், அம்மன் ஆலயம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரக்கோயில்கள், கட்டுரைகள், மந்திரம், யந்திரம், சித்தர்கள் போன்றன பற்றி இதில் விவரிக்கப்பட்டுள்ளது. யோகக்கலைகள், யாகங்கள் பற்றியும் இத்துடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும்,

    ஜோதிடம்:

    தமிழ்க் களஞ்சியத்தில், அதிக பிரிவுகளைக் கொண்டு காணப்படுகிறது ஜோதிடம் பகுப்பாகும். பொது ஜோதிடம், வேத ஜோதிடம், நாடிஜோதிடம், எண் ஜோதிடம், ஆரூடங்கள், கைரேகை, பரிகாரங்கள், ஜாதகக் களஞ்சியம் என்று தலைப்பும் அதனைத் தொடர்ந்து உங்கள் ஜாதகம், பொருத்தம், பஞ்சாங்கம், சனி, குரு, ராகு-கேது ராசி பலன்கள், நவக்கிரக மந்திரங்கள், ஆரூடச் சக்கரங்கள் யோகங்கள் ஆகியன அதன் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் ஜோதிடக் கட்டுரைகள், குறிப்புகள், கேள்வி-பதில்கள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.

    மருத்துவம்:

    அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் தேவையான பகுதியாக இரு இருக்கிறது. சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம். ஹோமியோபதி பற்றிய விவரங்களுடன் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

    பெண்கள் பகுதி:

    அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்பு, சமையல் செய்முறை, குழந்தை வளர்ப்பு, மகளிர் மன்றம், கோலம். மருதாணி என்ற தலைப்புகளின் கீழ் பெண்கள் தொடர்பான குறிப்புகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    மேலும் இக்களஞ்சியத்தில், நகைச்சுவையும், கலையுகம் என்ற பகுப்புகளின் கீழ் நடிகர், நடிகையர், இசையமைப்பாளர்கள், கருவிகள், சினிமா செய்திகள் போன்றனவும் இ்டம் பெற்றுள்ளன.

    முடிவுரை:

    இணையம், கட்டற்ற கலைக்களஞ்சியமாக இருக்கின்றது என்பதற்கு தமிழ்க்களஞ்சியம் ஓர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இதில், இலக்கியம், குழந்தைகள், சினிமா, பொழுதுபோக்கு, பெண்கள், ஆன்மீகம் என்று அனைத்து விதமான மக்களும் பயன்படுத்தும்படி இலக்கியத் தரத்துடன் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வகைகள் பிரிக்கப்பட்டுள்ள முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படியும் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

     

    பழமொழி:  தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர்

     

    நீ(று)ஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
    வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
    தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
    நூறா யிரவர்க்கு நேர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல்
    வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகி
    தாறா படினும் தலைமகன் தன் ஒளி
    நூறுஆயிரவர்க்கு நேர்

    பொருள் விளக்கம்:
    நீரினில் கிடந்தாலும் அதனுடன் ஒட்டாது விளங்கும் ஒப்பற்ற வைர மணியைப் போல, நன்கு வேறுபட்டுத் தெரியும் சிறந்த ஒளியை உடைத்தவர் சான்றோர், (தாற்றுதல் என்பது, தாத்துதல், தாத்திப் போடுதல் என்று வழக்கில் வழங்கி வரும், தானியங்களை தூசு தும்பற்று புடைத்துக் கொழித்துப் போடும் ஒரு முறை)  கொழித்துக் குப்பையில் நீக்கப்பட்டுவிட்டாலும் அந்தச் சான்றோரது பெருமை நூறாயிரம் மக்களின் பண்புடனும் ஒப்பிடும்பொழுது மங்காது தன்னொளி வீசி தனித்துத் தெரியும்.

    பழமொழி சொல்லும் பாடம்: சான்றோரின் புகழைப் புறக்கணிக்கலாம், ஆனால் மறைக்க இயலாது.

    இவ்வாறன சான்றோரின் புகழை,

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன் றில். (குறள்: 233)

    தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை என திருக்குறள் விளக்குவதாகவும் கொள்ளலாம், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்று கூறும் இக்காலக் கவிதையும் விளக்குவதாகக் கொள்ளலாம்.

    Share
  • காதல் நாற்பது – 37 என் ஐயமும் அச்சமும்

    ajay

     

    காதல் நாற்பது – 37

    என் ஐயமும் அச்சமும்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    மன்னிப்பாய் அந்தோ ! மன்னிப்பாய் !

    எல்லா வற்றுக்கும்

    உன்னத தெய்வீகச் சக்தியில்

    என் ஆத்மா

    உனக்காகவும், உரிமையாகவும்

    உண்டாக்க வேண்டும்

    ஒரு தோற்றத்தை,

    மாறுவதும் சரிவதுமான

    மணல் வடிவத்தில் !

    நீண்ட காலத்திய

    நின் விடுதலை வாழ்வு

    நீங்கும்

    பின்நோக்கி அடியோடு !

    மூழ்கி நீந்தும் என் மூளை

    அழுத்தமாய்

    ஐயத்திலும், அச்சத்திலும் தள்ளப்பட்டு

    தூயதாய்

    ஒருமைப்பாடு கொண்ட

    உனது

    தோற்றத்தைப் புறக்கணிக்கும் !

    ஏற்றுக் கொள்ளத் தகுந்த

    காதலையும்

    ஏற்கக் கூடாத

    களவு நட்பாய்த் திரித்து விடும் !

    கடவுளை நம்பாதவன்

    கப்பல் கவிழ்ந்து

    காப்புடன் துறைமுகத்தில்

    தப்புவதைப் போலாகும் !

    மெச்சத் தகுந்த

    அவரது கடல் குலதெய்வம்

    செதுக்கிய

    மூக்கிலாக் கடல்மீனை

    ஆலய வாசற் குள்ளே

    வாலாட்ட முடன்

    வடிக்க வேண்டும்

    வெடிமூச்சு

    விடுவது போல் !

    ************

     

    Poem -37

     

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

     

    Pardon, oh, pardon, that my soul should make,

    Of all that strong divineness which I know

    For thine and thee, an image only so

    Formed of the sand, and fit to shift and break.

    It is that distant years which did not take

    Thy sovranty, recoiling with a blow,

    Have forced my swimming brain to undergo

    Their doubt and dread, and blindly to forsake

    The purity of likeness and distort

    Thy worthiest love to a worthless counterfeit:

    As if a shipwrecked Pagan, safe in port,

    His guardian sea-god to commemorate,

    Should set a sculptured porpoise, gills a-snort

    And vibrant tail, within the temple-gate.

    **********

    Share
  • ஐந்து கை ராந்தல் (12)

    வையவன்

    சிவா ஒர்க்ஷாப்பின் சாவியைக் கையில் எடுத்தான். இது எனக்குரிய பளுதானா? இப்படி ஒரு ஒர்க்ஷாப்பை நான் ஏற்று நடத்த முடியுமா?

    திருப்பத்தூரில் அம்மா சொன்னது நினைவு வந்தது.
    நீ தானா ஏத்துக்கறது கட்டுப்பாடு ஆகாது.

    எதற்கும் அம்மாவைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாமோ?
    எங்காவது சேவகம் செய்து மாதச் சம்பளம் வாங்குவதில் எல்லா படித்த இளைஞர்களுக்கும் வருகின்ற பாதுகாப்பு தான் தனக்கும் வேண்டுமா?

    எதையும் யோசிக்க நேரமில்லை.

    சமுத்திரத்தில் குதித்தாகி விட்டது. நீந்த வேண்டும். அல்லது மூழ்க வேண்டும்.
    அவன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
    வெளியே திஷ்யா தென்பட மாட்டாளா என்று ஓர் ஏக்கம்.

    வழக்கப்படி அவனைக் கிண்டல் செய்து குத்தி விட்டால் கூடப்போதுமானது. அவன் படி மீது ஐந்து நிமிஷம் நின்றான். அவள் எதிர்ப்படவில்லை. உள்ளே சமையலறையிலோ பாத்ரூமிலோ மும்முரமாக இருந்தாள் போலும்.

    சிவா படியிறங்கி தெருவில் காலை வைத்தான். எங்காவது ஒரு நபர், கொஞ்சம் ஊக்கம் தர, உந்திவிட, ஒரு மனம் இந்தப் பரந்த பூமியில் அவனுக்கும் ஒரு புவியீர்ப்பு மையம் வாய்த்திருக்கிறது என்று அங்கீகரித்து உந்திவிட ஓர் உள்ளம்.
    அவனுக்கு உடனே பிரீதாவின் நினைவு வந்தது. எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தக் கையாட்ட உயர்த்தினான்.

    நோ. நான் ஒர்க்ஷாப் சொந்தக்காரன் அல்ல. மானேஜர். நான் முதலாளியுமில்லை. கூட்டாளியுமில்லை. வெறும் தொழிலாளி. கூட்டு அந்தஸ்து இல்லாத சாமான்யமான தொழிலாளி.

    “இன்னா சார்…” டிரைவர் அருகில் வந்தான்.
    “அதோ அந்த ப்ரெண்டை கூப்பிட்டேம்பா.”
    அவனது முறைப்பை அலட்சியம் செய்து பஸ் பிடிக்க ஓடினான்.

    வீட்டினுள் நுழையும்போது பிரீதா கண்ணாடி எதிரில் நின்று கூந்தலில் தென்பட்ட ஒரு நரையை அகற்றுவதில் ஈடுபட்டிருந்தாள்…

    கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிந்ததும் “வரூ” என்று கூறிக்கொண்டே நரைமுடியை வெடுக்கென்று அகற்றினாள்.
    காலை அவள் முகத்தில் குதூகலமாகக் குளித்துப் பவுடர் பூ விரித்திருந்தது.

    “எந்திணு பி.பி.கால்?”
    “ஃபாதர் சீரியஸ். தாமு மதனபள்ளி போய்ட்டாரு”

    அவன் கையிலிருந்த சாவிக்கொத்தைப் பார்த்து அவள் முகம் பரிசுத்தமான மகிழ்ச்சியில் மலர்ந்தது.
    “தாக்கோல் நிண்டே கையிலாயி” என்று பால் நுரை பொங்குவது மாதிரி சிரித்தாள் பிரீதா.

    “பிரச்னை” என்று அதைத் தூக்கி உலுக்கிச் சப்தமெழுப்பினான்.
    பிரீதாவின் கண்கள் அவன் மீது படிந்தன.

    “இரிக்கு”
    அவன் சோபாவில் உட்கார்ந்தான்.
    “வாட்ஸ் தி ப்ராப்ளம்?”
    “நான் ரைட்டரா… மெக்கானிக்கா?”
    “யூ ஆர் எ மேன்”

    பல் தெரியாமல் அவள் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது.

    அந்த உதடுகளின் சதைப் பற்றில் அவற்றின் ரோஜாச் செம்மையில் அங்கு ஊறித் தளும்பிய ஜீவ சக்தியில் ஏதோ அற்புதம் இருந்தது.

    அந்த உதடுகளைச் சொற்கள் கடந்து வெளிவரும் போது அவற்றிற்கு ஒலி மட்டுமில்லை, ஒளியும் சேர்ந்தன.
    சிரித்துக் கொண்டே ஏதோ கதை சொன்னவாறு ஸ்பிரிட் தடவி வலிக்காமல் ஊசி குத்துவது மாதிரி பிரீதா மெதுவாகச் சொன்னாள்.

    முறுக்கு ஏற்றுவது போலவோ செதுக்குவது போலவோ இடித்து உரைப்பது போலவோ அன்றி லகுவாகச் சொன்னாள்.
    “மனுஷ்யன்”
    பிரியமாகச் சிரித்து மீண்டும் ஒருமுறை நினைவூட்டினாள்.

    “மனுஷ்யன் ரைட்டராகும். மெக்கானிக்காகும். ரைட்டிங் மெக்கானிக் ஆகும். பக்ஷே?”
    அவள் மீண்டும் வரம் தரும் தேவதை மாதிரி சிரித்தாள்.

    “பக்ஷே?” என்று சிவாவும் தன்னையறியாது மலையாளத்திற்கு வந்தான்.
    “அங்ஙன மலையாளம் பரயூ. பக்ஷே நீ ஒரு மெக்கானிகல் ரைட்டர் ஆகான், உத்தேசிக்கருத… மனசிலாயோ”
    மெக்கானிகல் ரைட்டர். என்ன அழகான ‘காய்னேஜ்’. அவனுக்கு காளிசரண் கவனம் வந்தது.

    “சிவாவினு பேடியோ?”
    “பயமில்லை. இது எனக்கு ஒரு டைவர்ஷன் பாய்ண்ட். அதனால் ஒரு தயக்கம்.”
    “ஐ அண்டர் ஸ்டாண்ட். சிவாவினு ஏதாணு இஷ்டம். காப்பியோ, சாயயோ?” சமையலறையை நோக்கித் திரும்பினாள்.
    “இப்போ வேண்டியது கான்ஃபிடன்ஸ்.”

    “யூ ஹாவ் இட்” அவள் முகம் வளைத்து அவனைப் பார்த்து புன்னகை வழங்கினாள். “பட் யூ டோண்ட் நோ இட்”
    ஐந்து நிமிஷத்தில் டீ கோப்பையுடன் திரும்பி வந்தாள். மலையாளத்தில் மளமளவென்று சொல்லிக் கொண்டே நீட்டினாள்.
    “நான் போன வருஷம்தான் தாமுவை சந்தித்தேன். அவரை எனக்கு ஏன் பிடிச்சது தெரியுமா?”

    தாமுவைப் பற்றி இப்படி ஒரு வெளிப்படையான பேச்சை சிவா அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
    “ஹி ஈஸ் எ மேன். ரத்தம் சதை என்ற புற அளவீடுகளுக்கு சிக்காம மனிதன் என்று ஒரு காம்பீர்ய அந்தஸ்து உண்டே. அது தாமுவிடம் உண்டு. ஆனா அவ6ருக்கும் தளர்ச்சி உண்டு. சுகவீனம் உண்டு.”
    அவன் டீயை மெதுவாக உறிஞ்சியவாறே அவள் வார்த்தைகளைப் பருகினான்…

    “ஒவ்வொருத்தருக்கும் ஒரு பலவீனமான நேரமுண்டு. அது இயற்கை. மனிதன் ஜெயிப்பான். ஜெயிக்கிறான்.”
    அவன் கோப்பையை டீப்பாய் மீது வைத்தான்.

    “தாமு என்னிடம் அனேகமா எதையும் ஒளிக்கறதில்லே. ஹி ஈஸ் வீக் இன் ஸெக்ஸ், பெண்கள்தான் அவருடைய ஒரே பலவீனம். அவருடைய எல்லாப் பிரச்னைகளும் பெண்களாலேதான்.”
    சிவா நிசப்தமாய் விட்டான். அவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

    “சிவாவினு எண்டே ஃபிராங்க்னெஸ் இஷ்டப்படுன்னில்லா அல்லே?”
    “ஐ காண்ட் கமெண்ட் ஸிம்ப்ளி ஐ அம் அனேபில் டு கமெண்ட்”
    அவனது வெள்ளை உள்ளம் அவளுக்கு வெகுவாகப் பிடித்தது போல் பிரீதா சிரித்தாள்.

    “ஆனா உனக்கு இது தெரியணும் சிவா?”
    “இன்னிக்கு நீ ஒரு புதிய தொழிலுக்கு மானேஜரா மாஸ்டராகப் போறே. யு ஷûட் நோ திங்ஸ்.”
    “ஒய் ஷûட் ஐ?”
    “ஸின்ஸ் யு ஆர் சிவா.”
    “நான் எப்பவும் சிவாவாத்தான் இருப்பேன்.”

    அவள் தலையசைத்து அது முடியாது என்பது போல் புன்னகை செய்தாள்.
    “முடியாது சிவா… இந்தத் தொழில் அப்படிப்பட்டது. நெறய பணம் வரும். யூ ஆர் எஜூகேடட்.. கர்ள் ப்ரண்ட்ஸ் வருவாங்க. அப்படித்தான் தாமு லாஸ்ட் ஹிம் செல்ஃப். கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா தாமுவுக்குக் கூட ஒரு செக் வந்திருக்கும். ஆனா…” என்று பிரீதா நிறுத்தினாள்.

    பேச்சின் போக்கு மாறி அந்தரங்கத்தில் நுழைந்த மாதிரி சிவாவுக்கு மூச்சு முட்டிற்று. தாமுவைப் பற்றிப் பேச வேண்டாமே.
    ப்ரீதா மேலே பேசினாள்.

    “தாமுவுக்கு வந்திருக்க வேண்டிய மனைவி திஷ்யா மாதிரி டாமினேடிங்கா..ஆக்டிவ்வா இருந்திருக்கணும்.”
    தாமுவும் திஷ்யாவும்.

    அவன் வியப்போடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
    அவன் வியப்பை அவள் புரிந்து கொண்டாள்.
    “எஸ், தாமுவுக்கு அவளைப் பிடிக்கும்.”

    அவன் கண்ணிலிருந்த கேள்விக் குறி மேலும் அவளைப் பேசத் தூண்டியது.
    “கல்யாணம் பண்ணிக்கிற அளவு பிடிக்கும். அது நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே”

    சிவாவின் மனசிற்குள் இடி முழக்கம் கேட்டது. வெளிச்சமில்லாத மூலைகளில் ஒரு மின்னல் விளையாடிற்று. சென்னையில் அந்த வீடு தனக்கு ஆசிரமம் என்று சொன்னானே தாமு! இதுதான் அதற்கு அர்த்தமா?
    “ஒய் கான்ட் யூ?” என்று தன்னை மீறிக் கேட்டான்.

    அவள் சிரித்தாள். கசப்பு அதில் சிதறிற்று.
    “வி ஆர் ப்ரெண்ட்ஸ். கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அளவு டிவோஷன் ரெண்டு பேருகிட்டேயும் மியூச்சுவலா கிடையாது.”

    நேரமானதை உணர்ந்தான். அவளிடம் விடை பெறும் பொழுது பிரீதா மீண்டும் மாலையில் வரச் சொன்னாள். அங்கிருந்து வரும்போது அவன் மனசு ஏனோ பாரமாயிருந்தது.

    தொடரும்

    Share
  • ஓலைத்துடிப்புகள் – (3)

    ருத்ரா

    oolaisuvadi

    சங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன் பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோடையை.அதில் “கல்” “உயிர்” என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது.இவற்றிற்கு”ஒலி” என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த “வேர்” வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.

    அவன் அவிழ் ஒரு சொல்

    இடி உமிழ்பு இரும்பிழி வானம்
    இயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்
    நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
    கான்றல் பூ காந்தள் விரி இணர்
    காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
    ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
    நோதல்மன் என்செயும் முயங்கு இழைத்தோழி.

    =====================================================

    பொழிப்புரை
    =====================================================

    குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
    நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
    நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
    பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
    பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
    நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
    அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
    நரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்
    நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
    அற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.

    குட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து “பொதிகை”என அழைக்கப்படும்.அந்த மலையின் அருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.

    கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
    கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
    அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு தூஉய்
    எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
    புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
    புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
    ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
    மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.

    கல்லிலிருந்து ஒலிக்கும். உயிரிலிருந்தும் ஒலிக்கும். என்ன அந்த நுண்ணொலி?

    அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது. விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும் நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை வருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று விழும். ஒவ்வோரு பருவத்தேயும் பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும் விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே.அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.

    இடி உமிழ்பு இரும்பிழி வானம்
    இயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்
    நாள் ஈரும் வாளது கூர்முள்
    என்றுகொல் மலர்தலை சீர்க்கும்?
    நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
    கான்றல் பூ காந்தள் விரி இணர்
    காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
    ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
    நோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.

    இடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல் அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும்? அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும் பூவின் கொத்துகளாய் இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.

    Share
  • பரிசம் போட வாரேன்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    ஒத்தக்கடைக்குப்போற
    நேர்மண்ணுபாதப் போல – ஏ(என்)
    அத்தமக மேல என்னோட
    கண்ணு பார்வ தானே

    கோயிலுக்கு நேந்துகிட்டு
    கட்டிவச்சக் காசபோல
    அவ நெனப்பத்தானே
    நெஞ்சுக்குள்ளக்
    கட்டிவச்சேன் பாசத்தால

    வெறும் ஆசையெல்லாம்
    அவமேல இல்ல
    உயிர் நேசமெல்லாம் அவமேல
    நான் என்னத்தச் சொல்ல

    வேசமெல்லாம் போட்டதில்ல
    பாசாங்கும் செஞ்சதில்ல
    நெசமெல்லாம் பேசுறேனே
    பாசமாகப் பாக்குறேனே
    நேசமுள்ள அவகிட்டதானே

    ஆத்தங்கர மேட்டுலையும்
    மஞ்சக்கிழங்கு காட்டுலயும்
    ஒதுங்கி நாம பேசவேணாம்
    உரிமையுள்ள மச்சாங்கிட்ட
    வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே

    வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
    பரிசம் போடும் நாளுமாச்சு
    கரிசக்காட்டுக் குயிலுங்கூடப்
    பரிகாசம் காட்டிக் கூவியாச்சு
    மாரிமாசம் கழிஞ்சபின்னே
    மணமுடிக்க போறேன் உன்ன!

     

    Share
  • மனித இயல்பு!

    நாகினி

     

    சென்ற காலத்து துயரம் நினைந்து
    வருங்காலத்து விளைவின் பயம் கொண்டு
    நிகழ் காலத்து இன்பங்களைச்
    சோக இருளாக்குதல் மனித இயல்பு…

    நிகழ்கால நிகழ்வை ரசித்து இன்பமாய்
    வாழ்வை மாற்றிக் கொள்வதும்
    நொந்து வாழ்வைத் தூற்றிக் கொல்வதும்
    உலகியலில் விரும்பி நடக்கும் மனித இயல்பு…

    இரட்டை வேடதாரி மனிதன்
    சோக இருளிலும் நகைப்பான்
    மகிழ் இன்பத்திலும் அழுவான்
    நேரத்திற்கேற்ப மாறும்மனமே மனித இயல்பு…

    மாறும் மனத்தால் துயர் கழித்து
    சமூகநலனின் ஏற்றம் பெருக்கி
    பிறரை வழிநடத்தும் நேர்மை பண்பைக்
    கடைபிடித்தல் மாமனித இயல்பு…

    மாமனிதனாய் உயர்ந்து
    மனத் துயர்களை உடைக்கும்
    மனிதன் …மனிதன்…
    இவனே மாமனிதன் என்றே மதிக்கும்
    நிலைத்த நேர்வாழ்வு நடைபோடுதலே
    தெய்வப் பிறவியாக உயரும் மனித(த்தின்) இயல்பு!

    — நாகினி

    Share
  • அன்னப்பறவையே தூது செல்வாயோ ?

    -பா. ராஜசேகர்

     

    aaa

    நீர் பிரித்துப்
    பாலருந்தும்
    நீயறியாயோ
    நான் வருந்தும்
    காரணமே !

    நீர் நிலம்
    வான் உலவும்
    நீயறியாயோ
    என் மனமே !

    மான் என்றான்
    கண்ணிரண்டும்
    மீன் என்றான்
    மனம் கொய்தான்
    என் காதல்
    தூது செல்வாயோ?

    வழிதேடி
    விழி நொந்து
    நீர் வடித்த
    விழியிரண்டும்
    ஒளியிழந்த
    கதை சொல்வாயோ?

    தேனென்ற
    இதழிரண்டும்
    அவன் நாமம்
    உச்சரித்துச் சோர்வான
    கதை சொல்வாயோ ?

    அவன் உலவும்
    நந்தவனம்
    என்னிதயம்
    வேதனையைச்
    சொல்வாயோ?

    கார்கூந்தல்
    நீர் நனைத்துப்
    பொலிவிழந்து
    முடிந்து நாளான
    கதை சொல்வாயோ?

    திசையெல்லாம்
    அவனுருவம்
    முகர்பொழுது
    அவன் வாசம்
    சொல்வாயோ ?

    சலசலக்கும்
    சருகொலியில்
    அவன் குரலே
    ஒலிப்பதென்ன
    என் மனம் சொல்வாயோ
    அன்னப்பறவையே?

     

    படத்திற்கு நன்றி

    Share
  • அமெரிக்காவில் பாலுறவு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.  இளவயதுப் பெண் ஒருத்தி கூறுகிறாள்: நான் வாழ்க்கையில் நிறைய சாதிக்க விரும்புகிறேன்.  எனக்கு என்னென்னவோ செய்யத் திட்டங்கள் இருக்கின்றன.   என்னால் இப்போது பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.  பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுவதற்கு நான் ஸ்கைலா (skyla) பொருத்திக்கொண்டுள்ளேன்.  நீங்களும் அது மாதிரி செய்துகொள்ளலாம்.  இதைப் பொருத்திக்கொண்டால் மூன்று வருஷங்களுக்கு கர்ப்பமாவதைத் தடைசெய்யலாம்.  வேண்டும்போது அதை எடுத்துவிட்டால் மறுபடி பிள்ளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.

    கர்ப்பப் பையில் இந்த சாதனத்தைப் பொருத்திக்கொண்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப்போடும் யோசனை யாருக்கென்று நினைக்கிறீர்கள்?  திருமணம் செய்துகொண்ட  பெண்களுக்கும் காதலனோடு சேர்ந்துவாழும் பெண்களுக்கும்.  முக்கியமாக இரண்டாவதாகக் குறிப்பிட்டிருக்கும் பெண்களுக்கு.  விளம்பரத்தில் வரும் இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.  ஆயினும் காதல் தோழனோடு கணவன் மனைவிபோல் குடும்பம் நடத்தி வருகிறாள்.

    திருமணம் செய்துகொள்ளாத பெண்களுக்கும் கருத்தடை சாதனங்கள் பற்றி அமெரிக்காவில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.  இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நினைக்கும் பெண்களுக்குத்தான் இம்மாதிரியான விளம்பரங்கள் கொடுப்பார்கள்.  அமெரிக்காவில் பாலுறவு வைத்துக்கொள்ளும் வயது வந்தவுடனேயே ஆண்களும் பெண்களும் பாலுறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.  அதற்கு எந்தத் தடையும் விதிப்பதை விரும்புவதில்லை.  திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லையென்றாலும் தொடர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்னும் ஒரு விதி மட்டும் பரவலாக இருக்கிறது.  அப்படியும் கீழ் மட்டத்தில் இருக்கும் சில பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளுவது தங்களுக்கு ஒரு அந்தஸ்தைக் கொடுப்பதாக எண்ணிப் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்களாம்.  பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்களுக்காக மேற்குறிப்பிட்ட சாதனம் சந்தைக்கு வந்திருக்கிறது.  ஏற்கனவே பல மாத்திரைகள் சந்தையில் இருக்கின்றன.  இது அவற்றைவிட உபயோகிக்க எளிது என்பதாலும் ஒரு முறை பொருத்திக்கொண்டால் மூன்று வருடங்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் இது மற்றக் கருத்தடைச் சாதனங்களைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இந்தியாவில் ஒரு சில அல்ட்ரா மாடர்ன் பேர்வழிகளைத் தவிர திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தும் மனிதர்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.  அதனால் இப்படிப்பட்ட விளம்பரங்களும் திருமணமாகாத பெண்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

    பத்திரிக்கையில் வந்த இன்னொரு செய்தி.  மனைவியை இழந்த ஒருவரும் கணவனை இழந்த ஒரு பெண்ணும் தங்கள் எழுபது வயதில் மாதாகோவிலில் சேர்ந்து பாட்டுப் பாடியபோது காதல் வலையில் விழுந்து திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்.  (இந்தியாவில் அறுபது வயது முடிந்தவுடனேயே வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதுவார்கள்.)  சில ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு ஞாபக மறதி வியாதி (Alzheimer’s) ஏற்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்.  மனைவியை எப்போது பார்க்கலாம், எங்கு கூட்டிச் செல்லலாம், என்ன மாதிரியான உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு முதியோர் இல்லத்தில் சில விதிகள் இருக்கின்றன.  மனைவிக்கு ஞாபகமறதி வியாதி இருப்பதால் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவியால் சம்மதம் கொடுக்க முடியாது என்பதால்  மனைவியோடு உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும் எழுதப்படாத விதி. ஒரு முறை கணவர் மனைவியைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு மறுக்கப்பட்டிருந்த அந்த உரிமையை மனைவியின் சம்மதம் இல்லாமலேயே பயன்படுத்திக்கொண்டார் என்று மனைவியின் மகள் – இன்னொரு திருமணத்தில் பிறந்தவள் – மாற்றாந்தகப்பன் மீது வழக்குத் தொடர்ந்தார்.  கணவர் அவர்கள் வாழ்ந்துவந்த அயோவா மாநில சட்டமன்ற உறுப்பினர்.  வழக்குத் தொடரப்பட்டதும் அவர் பதவியைத் துறந்தார்.  வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது மனைவிக்கு அவ்வப்போது செக்ஸ் ஆசை வந்தபோது தான் அதை நிறைவேற்றிவைத்ததாகவும் அன்றும் அத்துமீறிப் போகாமல் நடந்துகொண்டதாகவும் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.  வழக்கு நடந்தபோது தேவையான ஆதாரங்கள் இல்லாததால் அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.  ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் கிடைத்திருக்கும்.  மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் அவளோடு உடலுறவு கொண்டால் கணவனுக்குப் பத்து வருடம் வரை சிறைவாசம் கொடுக்கலாம் என்பது சட்டம்.

    ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 92 வயது மனைவியையும் 94 வயது கணவனையும் (இவர்கள் முதியோர் இல்லத்தில் சந்தித்துக் காதல்கொண்டு திருமணம் செய்துகொண்டவர்கள்.  இருவருக்கும் அது எத்தனையாவது திருமணம் என்று கேட்காதீர்கள்) பேட்டி கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  அதில் பேட்டி கண்டவர் அவர்கள் இருவரிடமும் உங்கள் ‘இருவரிடையே செக்ஸ் உண்டா?’ என்று கேட்டார்.  மனைவி ‘இது என்ன கேள்வி?’ என்று பதிலுக்குப் பேட்டி கண்டவரைக் கேட்கவில்லை.  கணவரைக் கேட்குமாறு பேட்டி கண்டவரிடம் கூறி கணவரின் பக்கம் கையைக் காட்டுகிறார்.

    அமெரிக்காவில் செக்ஸ் உட்பட எதற்கும் ரேஷன் கிடையாது.  எந்த வயதிலும், திருமணம் ஆகியிருக்கவில்லை என்றால் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்.  திருமணம் நடந்திருந்தால் மனைவிக்கோ கணவனுக்கோ துரோகம் செய்யக் கூடாது, அதாவது திருமணத்திற்கு வெளியே யாருடனும் உடலுறவு கொள்ளக் கூடாது.  திருமணம் ஆகியிருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவளுடனேயே உடலுறவு கொள்வது தவறு மட்டுமல்ல, அதற்குத் தண்டனையும் உண்டு.

    என்ன சமூகம் இது?  புனிதமான உறவு என்று திரு.வி.க. போன்றவர்களால் கருதப்பட்ட இந்த உறவைக் கொச்சைப்படுத்திவிட்டார்களே!

    Share
  • சிகரம் நோக்கி – 3

    சுரேஜமீ

    புரிதல்

    peak1

    கடந்த பத்து ஆண்டுகள் கொடுத்த பொருளாதார வளர்ச்சி நம் சமூகத்தையே திருப்பிப் போட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. கல்வி வியாபாரமாக்கப் பட்டதும்; சேவை வணிகமாக்கப் பட்டதும் தந்த மிகப் பெரிய வளர்ச்சி இதுவென்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் தன்னை ஒரு தட்டு உயர்த்தி மேல் தட்டுக் குடும்பமாகக் காட்சியளிக்கிறது!

    இவை ஒரு பக்கம்.

    மறு பக்கம்,

    இந்தப் பத்து ஆண்டுகள் புரிதல்(Understanding) என்னும் சொல்லைக் கேள்விக்குரியதாக்கி இருக்கிறது! என்பதும்,

    அன்புகூட ஒரு விலை சார்ந்து நிற்கிறதோ என்ற ஐயமும், கூடி வாழ்ந்த காலங்கள் தானாகவே சிதைந்து, தனித்து வாழும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் உருவானதும், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின், இசைவில்தான் இல்லற வாழ்க்கையே தொடங்கும் ஒரு அவல நிலையும், நம் இதயங்களின் ஈரத்தைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல்,

    பெரும்பாலான இல்லற வாழ்க்கைத் தோல்விகளுக்கும் வழி வகுத்திருக்கிறதென்றால், மறுப்பாரும் சிந்திக்க வேண்டும்!

    இதற்கு அடிப்படைக் காரணமே புரிதலின்மைதான்!

    முதலில் புரிதல் என்றால் என்ன? புரிதலின் தொடக்கம் எது? புரிதல் அவசியமா? என்று கேள்விகளை உங்களுக்குள் அடுக்குங்கள். தெளிவு தானாக வரும். இதற்கு தூண்டுதலாக, சிலவற்றை, உங்கள் சிந்தை முன் வைக்க முயற்சிக்கிறேன்.

    நாம் அனைவருமே ஒரு தாயின் பிள்ளைகள்தான். நம் வீட்டில் உள்ள மூத்தோர்களுக்குத் தெரியும், நம்மை எப்படி வளர்த்தார்கள் என்று, நாமும் எத்தனையோ குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறோம். இதற்கும், தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

    ஒரு தாய்க்குத் தன் பிள்ளையின் பசி தெரியும்; வலி தெரியும்; செயல் புரியும்! தாய்தான் நம் புரிதலின் முதல் படியே என்றால், தந்தை அடுத்த படி! வளர்க்கும் விதத்திலேயே நம் நாடி நரம்புகளின் அடுத்த நொடியைத் தெளிவாகத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்!

    ஆக, புரிதலின் பால பாடம் அன்னை, தந்தையிடம் தொடங்குவதால்தான், நம் மொழி சொன்னது;

    ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! என

    நாம், மொழியால் புரிய வைப்பதற்கு முன்னரே, நம்மைக் குறிப்பால் புரிந்து நம் தேவையை உணர்ந்த பெற்றவர்கள் நிச்சயம் போற்றுதற்குரியவர்களே!

    ஆதலால், அவர்களிடம் நம் புரிதலின்மையைத் தெளிவு படுத்திக் கொள்ள, நமக்கு இருக்கும் முதல் வாய்ப்பு ‘பெற்றவர்கள்தான்’ என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்!

    அடுத்து புறச்சூழல்.

    ஐந்து வயது தொடங்கி குறைந்தது 15 முதல் 17 ஆண்டுகள் கல்விச் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. மனிதனுக்கே உண்டான மகத்தான வாய்ப்பு இது என்று சொன்னால்,

    இறைவனின் படைப்பின் பெருமையையும் நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!

    ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதென்று’!

    பல மனிதர்களுடன் இன, மத, மொழி வேறுபாடு கலைந்து, ஓன்றே குலமாக, ஒருவனே தேவனாக, நம்மைச் செதுக்குகின்ற கல்விக்கூடங்கள், புரிதலின் அடுத்த நிலையை, நமக்கு ஏற்படுத்தித் தருகின்றன.

    ஆனால், நாம் எப்படி இந்தப் ‘புரிதலை’ நுகர்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது!

    avaவள்ளுவன் அழகாகச் சொல்கிறான் பின்வரும் குறளிலே, ‘புரிதலின் அருமையை’!

    ‘குறிப்பிற் குறிப்புணர் வாரையுறுப்பினுள்
    யாதுங் கொடுத்துக் கொளல்.’

    இதுதான் மொழியின் ஆளுமை என்பது. எந்த மொழிக்கும் இல்லாத ஒரு பெருமை நம் தமிழ் மொழிக்கு! நம் மனித வாழ்வியல் சார்ந்த எந்த பிரச்சினைக்கும் உண்டான விடையைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒப்புயர்வற்ற ஒரே மொழி தமிழ்தான் என்பதே நமக்குப் பெருமைதானே!

    நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைக் குறிப்பாலேயே உணர்ந்து, அதன்படி குறிப்பறிந்து செயல்படுவோரை, நம்மிடம் இருப்பது எது கொடுத்தும், அவரைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என வள்ளுவரே சொல்லி இருக்கிறாரென்றால்,

    புரிதலின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயல்படுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதை மனதில் இருத்தல் அவசியம்!

    இப்படி ஒரு புரிதல் இருக்குமாயின், நம் அலுவலகத்தில், நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியிலும் வெற்றியடைவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. தலையாய எந்தப் பிரச்சினையின் துவக்கமுமே, புரிதலின்மையில் தான் தன் பயணத்தை ஆரம்பிக்கிறது.

    நான் மிகவும் வேதனைப் படக்கூடிய ஒரு செய்தி, தற்காலத்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகளும், இளைஞர் மற்றும் யுவதிகளின் கூட்டமும்தான்! இது நம்மிடையே சகிப்புத்தன்மை அற்ற நிலையையும், நமக்கு இருக்கும் பொருளாதாரத் தன்னிறைவின் தவறான புரிதலும்தான் என்று கருதத் தோன்றுகிறது.

    ஊடல் இல்லாத எதுவும் நல்ல கூடலுக்கு அழகாகாது. இது காதலுக்கு மட்டுமல்ல. நல்ல நட்புக்கும்தான். ஆசை வார்த்தைகளையும், போலி வாழ்க்கையையும் நம்பி வாழக்கூடாது.

    வாழ்வே ஒரு சுகம்; வாழ்வில் நல்ல புரிதல் இருந்தால்!

    வள்ளுவன் தன் 1330 குறளின் உச்சமாக, இந்தப் புரிதலை மையமாக வைத்துக் கடைசிக் குறளாக,

    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

    கூடி முயங்கப் பெறின்!

    என்று முடித்தான் என்று சொன்னால், அதன் வலிமையை நாம் ஆராயவேண்டும் என்பதற்காகத்தான்!

    இந்தக் குறளும், அதன் பொருளும் புரிந்த யாரும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்திருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்! ஊடலுக்குப் பின் வரும் கூடல்தான் இல்லற வாழ்விற்கே மகிழ்ச்சி என்றால்,

    சரியான புரிதலில்தான் இன்பம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

    புரிந்தால் சிகரம் தொட்டுவிடும் தூரம்தான்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும்

    – கி. கண்ணன்.

    முன்னுரை:
    தமிழ் மொழியை கணிப்பொறிக்கும் இணையத்திற்கும் கொண்டு செல்வதில் எழுத்துக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சைகைளாலும் மெய்ப்பாடுகளாலும் வளர்ந்த தமிழ்மொழி இன்று இணையத்தில் பலவாறு பயன்படும்படி உயர்ந்துள்ளது. கணினியில் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்யமுடியும், ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை முற்றிலுமாக மாறி இன்று தாய்மொழியான தமிழிலேயே தட்டச்சு செய்யலாம் என்ற நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட உயர்தனிச் செம்மொழியை கணினியிலும் இணையத்திலும் பதிவேற்றம் செய்யும்பொழுது தமிழ் எழுத்துருக்களின் வரலாற்றினையும் வகைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    மொழியும் எழுத்தும்:
    மனிதன் தோன்றி மொழி தோன்றாத பொழுது தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை மெய்ப்பாடு, சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் ஆகியவற்றின் முலமாக பிறருக்குத் தெரிவித்தான். அதுவரை ஊமை மொழிகள் (Dumb Language) என்றனர் என்று முதல் மொழிக்கு விளக்கமளிக்கிறார் தோ. பரமசிவம். இம்முதல் மொழியினைத் தொடர்ந்து பேச்சு மொழியாக மாறியதும் எழுத்துக்கள் உருவாகி வளர்ச்சியடைந்தன. கல்லெழுத்து, பிராமி எழுத்து, வட்டெழுத்து, நாகரி எழுத்து, தமிழி எழுத்து என்று உருமாறி தற்போதுள்ள தமிழ் எழுத்து என பலவாறு மாறிவந்திருப்பதை தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியில் காண முடிகிறது.

    கணினி குறியீட்டு முறை:
    கணினியில் அச்சேற்றப்படும் எழுத்துக்கள் எம்மொழி எழுத்துக்களாயினும் அவை 0,1 என்ற எண்களைக் கொண்டே கணினி இயங்குகின்றது. “கணிப்பொறி என்பது கணிப்பானாக மட்டுமே பயன்படும் போது எவ்வித சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களுக்குச் சேமிக்கும் பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும்.”[1] இவற்றை திரையில் எழுத்துக்களாக காண்பதற்கு எழுத்துருக்கள் (Font) தேவைப்படுகின்றது. இத்தகைய எழுத்துருக்களை பெற குறியீடுகள் அவசியமாகின்றது. ஒரே குறியீட்டைக் கொண்டு ஒரு எழுத்தைத்தான் உருவாக்க முடியும் என்பதாலும் தமிழில் அதிக எழுத்துக்கள் இருப்பதாலும் முழுமையாக எழுத்துக்களைப் பயன்படுத்துவது சிரமமாகவும் இருந்தது.

    தமிழில் எழுத்துரு தொடர்பான மென்பொருள்களின் வளர்ச்சியினால் இன்று இத்தகைய சிரமங்கள் சரிசெய்யப்பட்டாலும் சில தவிர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களைச் சேர்த்து தட்டச்சு செய்யும் நிலையில் இதனை உணரலாம்.

    எழுத்துருக்களின் வளர்ச்சி:
    கணினியில் இடும் கட்டளைகளை எழுத்துக்களாக மாற்றிக்காட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 7 பிட்டு(எ.கா.1000001), 8 பிட்டு (00001111) என்ற இரும எண் குறியீட்டு முறையில் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட கணினி மொழிகளாகக் கொள்ளப்பட்டன.

    கணினி மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பைட்டாகக் கணக்கிடப்படுகிறது. ஆங்கில எழுத்திற்கான எழுத்துரு வடிவத்தினை ஆஸ்கி ASCII (American Standard Code for Information Interchange) என்று அழைக்கப்பட்டது. இது 7 பிட்டு அளவுள்ளதாகக் இருந்தது. இதனைத் தொடர்ந்து 8 பிட்டு அளவிற்கு விரி ஆஸ்கி அமைப்பு உருவாக்கப்பட்டது. அட்டவணையில், ஆங்கில எழுத்துக்கள் போக மீதமுள்ள 128 – 255 வரையிலான இடங்களில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை ஒன்றிணைத்து பொதுவான முறை உருவாக்கப்பட்டது. இதற்கு இஸ்கி (ISCII – Indian Standard Code for Information Interchange) எழுத்துரு எனப் பெயரிட்டனர். இத தமிழ் விசைப்பலகையில் எழுத்துருக்களைக் கொண்டு வருவதற்கு முதன்மையாக அமைந்தது. இதில் மென்பொருள் பொறியாளர்களின் உதவியுடன் உலக தமிழறிஞர்கள் வடிவமைக்கப்பட்ட தமிழ் வடிவ எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

    தமிழ் லெசர், அணங்கு, ஆதமி, ஆதவின், திருவின், மயிலை, அஞ்சல், சரஸ்வதி, கணியன், வானவில் போன்ற எழுத்துருக்களைப் வல்லுனர்கள் பலரும் உருவாக்கினர். இதனால் ஒருவர் தட்டச்சு செய்த தகவல் அந்த எழுத்துரு படிப்பவரிடம் இருந்தால் மட்டுமே அவ்வெழுத்து திரையில் தோன்றும் நிலை உருவானது. இது பெரும் குழப்பத்தினையே உருவாக்கியது. ஆகவே, தமிழ் எழுத்துருக்களை முறைபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டிஸ்கி (TSCII – Tamil Standard Code for Information Interchange) என்ற முறை உருவாக்கப்பட்டது. இது தமிழ்மொழியில் ஏற்பட்ட அடுத்தகட்ட வளர்ச்சியைக் குறிக்கும்படி அமைந்தது. தற்போது நடைமுறையில் யுனிக்கோடு முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

    “உலக அமைப்பாகிய UNICODE குழுமத்தின் முயற்சியால் 16 பிட்டு அமைப்பில் பன்மொழிக்குறியீட்டு முறையும் தோன்றியது. அந்த யுனிக்கோடு அமைப்பில் இந்திய மொழிகளுடன் தமிழும் இருந்தது…. 128 இடங்களில் தமிழ் உயிர்எழுத்துக்கள், அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள், ஆய்த எழுத்து பிற உயிர் மெய் எழுத்துக்களின் துணைக் குறியீடுகள் ஆகியன இடம்பெற்றன.”[2] இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட எழுத்துருக்கள் மேற்கூறிய பல பெயர்களுடன் வெளியாயின.

    ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழிலும் ஒரே எழுத்துரு குறியீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், “இரண்டு உருக்குறியீட்டு முறைகளைத் தமிழக அரசு அங்கீகாரம் செய்து தரப்படுத்தியது. இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே மாநில அரசின் எழுத்துத் தரப்பாடு செய்யப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.”[4] இவை, 1. டாம் (TAM – Tamil Monolingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் எழுத்துக்களுக்காவும் 2. டாப் (TAB – Tamil Bilingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் – ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. யுனிக்கோடு முறையில் TAM, TAB போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தக்கூடியவை.

    தமிழ் எழுத்துரு வகைகள்:

    charactemap.tam1
    தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் அரசின் பங்களிப்புடன் வெளியாயின. தனி நபர்களாலும் குழுக்களாலும் பல வடிவங்களில் எழுத்துருக்கள் இன்றளவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை விசைப்பலகையின் அமைப்பிற்கேற்ப விண்டோஸ், லினக்ஸ், மேக்கின்தோஸ் போன்ற இயங்கு தளங்களில் பயன்படும்படி அமைக்கப்பட்டிரு்கின்றன.

    மயிலை
    1985 ஆம் ஆண்டில் கு. கல்யாண சுந்தரம் அவர்களால் “மயிலை” எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதில், தமிழ்க் குறியீடு இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்களைப் பெற முடியும். உ.ம். a என்பது அ என்றும், aa/A என்பது ஆ என்பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

    முரசு அஞ்சல்
    1986 இல் முத்து நெடுமாறன் என்பவரால் உருவாக்கப்பட்டது அஞ்சல் எழுத்துரு. இது எழுத்துருவை மட்டுமே கொண்டிராமல் எழுதி, மின்னஞ்சல், செயலி, விசைப்பலகை போன்ற வகைகளும் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஆண்ட்ராய்டு பேசிகளில் பயன்படும்படி Application ஆக பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கு என்ற எழுத்துருவிற்கு க+உ என்றும், சோ என்பதற்கு ச+ஓ என்றும் எழுத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    கீ மேன்
    செந்தமிழ் எழுத்துரு என அழைக்கப்படும் கீமேன் எழுத்து வடிவம் பெரும்பாலும் அச்சக பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. டாவ்லெட் சாப்ட் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட இது 285 விதமான எழுத்துரு வடிவங்களைக் கொண்ட பன்முக வடிவமாகும். பெரும்பான்மை யுனிக்கோடு வடிவத்துடன் ஒத்திருந்தாலும் இதில் சில எழுத்துருக்கள் விசைப்பலகையின் அமைப்பில் மாற்றம் பெற்றுள்ளன. கீமேன், விதவிதமான எழுத்துருக்கள் வடிவத்தில் புத்தகம் உருவாக்கம் போன்ற அச்சுப் பணிக்கு இது உகந்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஏ.கலப்பை
    தமிழ் இணையதளத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டது இ. கலப்பை எனப்படும் எ.கலப்பை. இதில் ஐந்து விதமான எழுத்துருக்கள் காணப்படுகின்றன.
    1. ஆங்கில ஒலியியல் முறை 2. பாமினி, 3. தமிழ் 99, 4. தட்டச்சு முறை, 5. இன்ஸ்கிரிப்ட் என்ற ஐந்து வகையான எழுத்துரு வடிவங்களைக் கொண்டது.

    NHM எழுதி
    தமிழ் எழுத்துருக்களில் இன்று பலரிடமும் பயன்படுத்தப்படுவதாக இவ்வெழுத்துரு அமைந்துள்ளது. கூகுள் குரோம், நெருப்புநரி (Firefox), ஒபேரா போன்ற எல்லாவிதமான இயங்குதளத்திலும் இவ்வமைப்பு பயன்படுகின்றது. தமிழிலிருந்து கீழே குறிப்பிட்ட இந்திய மொழிகளுக்கு எழுத்துக்களை மாற்றும் வசதி இதில் உள்ளது. இதனை இணையத்திலிருந்து இலவச மென்பொருளாகப் தரவிறக்கம் செய்து,
    1. Alt + 0 – சாதாரண விசைப்பலகை எழுத்துருவையும்
    2. Alt + 1 – ஒருங்குறி தமிழ் 99 எழுத்துருவையும்
    3. Alt + 2 – ஒருங்குறி தமிழ் ஒலியியல் முறையையும்
    4. Alt + 3 – ஒருங்குறி பழைய தட்டச்சு எழுத்துருவையும்
    5. Alt + 4 – ஒருங்குறி தமிழ் பாமினி எழுத்துருவையும்
    6.Alt + 5 – ஒருங்குறி தமிழ் இன்ஸ்கிரிப்ட் முறையினையும் கொண்டு காணப்படுகிறது. ஒருங்குறி முறையில் அமைந்திருப்பதால் அனைவராலும் பயன்படுத்தும்படி உள்ளது. இந்த எழுத்துருவில் தமிழ், அசாம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் போன்ற பத்து இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    பொன்மடல், பொன்மொழி எழுத்துரு
    ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என்ற இருவேறு இயங்கு தளங்களில் தட்டச்சு செய்யும் வசதி. காலத்திற்கேற்ப புதுமை என்ற விதத்தில் பல புதிய வசதிகள் இந்த எழுத்துருவில் காணப்படுகின்றன.
    1. தவறாக எழுதினால் ல, ர, ன ஒலிமாற்றச் சொற்களையும் சந்திப்பிழை திருத்தப்பட்ட சொற்களையும் இரு சொல் இணைந்ததையும் உடனுக்குடன் காட்டும்.
    2. சொற்பிழைகளை உடனுக்குடன் திருத்துவதுடன் திருத்துவதற்கு பல நிறங்களைக் காட்டுகின்றன.
    3. தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம் போன்ற தட்டல் அமைப்புகளுடன் கே12 என்னும் T9 போன்ற ஒரு மிக எளிய புதிய முறை இதன் சிறப்பு. 9 விசைகளில் செயல்படும் இதைக்கற்க 10 நிமிடங்கள் போதும்.
    4. ஆங்கிலத் தட்டச்சு இருப்பதால் இருமொழிகளுக்கும் பொன்மடல் ஒன்றேபோதும்.
    5. யூனிக்கோடு, டேம், டேப் குறியீடுகளில் உள்ளிடலாம்.
    6. புதிய பெயர்ச்சொற்களை அகராதியில் சேர்க்கலாம்.
    7. சுயதிருத்த வசதியால் ஒன்றிரண்டு எழுத்துக்களை எழுதியே பல சொற்களைச் சேர்க்கலாம். [3]
    இது போன்ற பல சிறப்பியல்புகளைக் கொண்டதாய் பொன்மடல், பொன்மொழி எழுத்துருக்கள் அமைந்துள்ளது.

    மென்தமிழ்
    சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற தெய்வசுந்தரம் அவர்களால் உருவாக்கப்பட்ட மென்தமிழ் எழுத்துரு கணினியில் தமிழ் மொழியியல் தொடர்பாகக் கொண்டுவரப்பட்டது. இம்மென்பொருள், ”தமிழ் ஆவணங்களை உருவாக்கி, அவற்றின் மொழி அமைப்பைச் சீரமைத்துப் பதிப்பிக்கும் அனைத்துக் கருவிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. கணினித்தமிழின் வளர்ச்சியையொட்டி தமிழ்மொழிக் கருவிகள் (சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி, அகராதிகள்) தொடர்ந்து மென்மேலும் செழுமைப்படுத்தப்படும்.”[4] என்ற உயரிய நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் சில…
    அழகி – ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் எழுத்துருவை காணலாம்.
    ஸ்ரீலிபி – தமிழ் ஒருங்கறி, தமிழ் 99, தட்டச்சு முறை போன்ற எழுத்துருக்களில் பயன்படுத்தலாம்.
    கம்பன் – விசைப்பலகையுடன் கூடிய ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை டேம், டேப் போன்றவற்றிற்கு உரு மாற்றி போற்ற எழுத்துருக்களில் பயன்படுத்தப்படுகிறது.
    வாணி – எழுத்துப்பிழை திருத்தி.
    நாவி – சந்திப்பிழை திருத்தி
    சுரதா – வலைக்கு உகந்த எழுத்துரு
    கண்டுபிடி – வலை எழுத்திற்கு உரியது
    போன்றவனவற்றையும் குறிப்பிடலாம்.

    முடிவுரை:
    தமிழ் எழுத்துரு, கணினி பயன்பாட்டிற்கு என தினந்தோறும் புதுப்புது மாற்றங்களுடனும் வடிவங்களுடனும் இன்றளவும் மென்பொருள்களை உருவாக்கி வருகின்றனர். ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை, பாமினி, இன்ஸ்கிரிப்ட் முறைகளிலிருந்து இன்று அழகி, வாணி, நாவி, பொன்மடல், மென்தமிழ், சுரதா, கண்டுபிடி போன்ற மென்பொருள்களாலும் கணினியில் மட்டுமல்லாது இணையத்திலும் தமிழினை எழுத்து வடிவம் மாறாமலும் பிழையில்லாமலும் காணக்கிடைக்கின்றது. அகராதிகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறையும் தற்போது வழக்கத்தில் உள்ளது. இத்தகைய எழுத்துருக்கள் தமிழ் மொழியினை அடுத்தத் தலைமுறைக்கு எவ்வித சேதமுமின்றி முழுமையாகக் கொண்டுபோய் சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

    சான்றெண் விளக்கம்:

    1. www.pathivugal.com, கணத்தமிழ், தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பும் சிக்கல்களும்
    2. முனைவர் மு. பொன்னவைக்கோ, இணையத் தமிழ் வரலாறு, ப. 10
    3. www.Learnfunsystems.com./Products. பொன்மடல்
    4. www.lingsoftsolutions.co

     

     

    கி. கண்ணன்,
    முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
    அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர்.

    Share