பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: தலைமகன் தன்னொளி நூறாயிரவர்க்கு நேர்
நீ(று)ஆர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும் தலைமகன் தன்னொளி
நூறா யிரவர்க்கு நேர்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல்
வேறாக தோன்றும் விளக்கம் உடைத்தாகி
தாறா படினும் தலைமகன் தன் ஒளி
நூறுஆயிரவர்க்கு நேர்
பொருள் விளக்கம்:
நீரினில் கிடந்தாலும் அதனுடன் ஒட்டாது விளங்கும் ஒப்பற்ற வைர மணியைப் போல, நன்கு வேறுபட்டுத் தெரியும் சிறந்த ஒளியை உடைத்தவர் சான்றோர், (தாற்றுதல் என்பது, தாத்துதல், தாத்திப் போடுதல் என்று வழக்கில் வழங்கி வரும், தானியங்களை தூசு தும்பற்று புடைத்துக் கொழித்துப் போடும் ஒரு முறை) கொழித்துக் குப்பையில் நீக்கப்பட்டுவிட்டாலும் அந்தச் சான்றோரது பெருமை நூறாயிரம் மக்களின் பண்புடனும் ஒப்பிடும்பொழுது மங்காது தன்னொளி வீசி தனித்துத் தெரியும்.
பழமொழி சொல்லும் பாடம்: சான்றோரின் புகழைப் புறக்கணிக்கலாம், ஆனால் மறைக்க இயலாது.
இவ்வாறன சான்றோரின் புகழை,
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். (குறள்: 233)
தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை என திருக்குறள் விளக்குவதாகவும் கொள்ளலாம், “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்று கூறும் இக்காலக் கவிதையும் விளக்குவதாகக் கொள்ளலாம்.