மூங்கிலன்ன தோளிரெண்டும், மோனலிஸா -பாங்கியைப்,
போல்முறுவல் ஏனுனக்கு போரடித்த தோமாட்டின்
கால்வருடும் கிச்சுக் கிசுப்பு’’….கிரேசி மோகன்
மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர்
அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி
திருவாடானை
அன்புடையீர் வணக்கம்
இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன்.
தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்
நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை
மீ.விசுவநாதன்

உயிருள் உயிரைக் காத்து
ஒருநாள் வெளியில் விட்டு
பயிலும் பாச மெல்லாம்
பாலுடன் ஊட்டி வந்து
வெயிலும் மழைக்கு முள்ள
வேற்றுமை உணர்வு காட்டிப்
பயிரைப் பசுமை யாக்கிப்
பருவத்தில் நடக்க விட்டாள் !
விட்ட தொரு வேகம்
விளக்க மேதும் இன்றிக்
கட்டை இதுசுகம் தேடிக்
கட்ட றுந்துபோய்த் தானே
தொட்ட தோபல துன்பம் !
சூழ்ந்துள கூட்ட மெல்லாம்
விட்டு வெகுதூர மோட
விலகா தென்னரு கிலே
பொட்டாகப் பொலிந்து நிற்பாள்!
பூமியின் புழுதிக் காற்றை
சிட்டுநான் சுவாசித் தாலோ
சிந்தையில் நொந்து போவாள் !
கெட்டு நான்போன போதும்
கீழ்மையில் கிழிந்த போதும்
கொட்டிய தன்கண்ணீ ராலும்
குழந்தை எனைவாழ்த்தி நாளே !
திட்டினேன் ! கோபப்புய லாகப்
பேசியும் தீர்த்தேன் ! நாவால்
சுட்டேன் ! அன்பு கூறும்
தூய மொழியெ லாமும்
தட்டிக் கழித்தேன் ! வாழ்வில்
தடம்புரண் தழுத என்னைக்
கட்டி அணைத்து அன்பு
காட்டிய கைகளைப் பார்த்து
வெட்கிப் போனேன் ! தீது
பேசி வேட்டை நாயாய்க்
கொட்டிய வார்த்தை எல்லாம்
குழந்தையின் மழலை என்றாள் !
மட்டிலா மனதின் ஊற்று
மண்விண் பிரவாக மாகத்
தட்டின்றிச் செழிப்ப தென்றால்
அம்மம்மா அனைத்தும் நீயே !
(20.09.1982)
— முனைவர் சி.சேதுராமன்.
தமிழ்த்தாத்தா உ.வே. சா. வின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.
கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.
கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் “காந்தமலை” என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. இவர் அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.
தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.
கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே கி.வா.ஜ. வுக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய, “போற்றிப்பத்து” என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. “ஜோதி” என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.
1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.
கி.வா.ஜ. சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.
1927-ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927-ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக் கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.
உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.
கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.
1932-ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை எழுதி, “கலைமகள்” இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் “கலைமகள்” இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமுமே கராமாகும்.
கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும். 1932-ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மணந்து கொண்டார்.
கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.
வாகீசகலாநிதி, திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க்கவி பூஷணம், உபன்யாசகேசரி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித்தவமணி, ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன.
கி.வா.ஜ., உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.
கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய “தமிழ்க் காப்பியங்கள்” என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் “கல்கி” நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய “தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.
பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருட்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.
மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்.
கி.வா.ஜ.வின் வாழும் தமிழ்:
தினமணியில் கி.வா.ஜ. தொடர்ந்து தொல்காப்பியம் சொல்லதிகாரம் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. தொல்காப்பியம் அன்றும் இன்றும் வாழுந் தமிழைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு வாழும் தமிழ் என்று பெயர் வைத்ததாக கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்.
இந்நூலில் கி.வா.ஜ. அவர்கள் முழுமையாகத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரைவகுக்கவில்லை. சிற்சில இலக்கணச் செய்திகளையே இதில் விளக்கிச் செல்கின்றார். பெரும்பான்மையும் சேனாவரையர் உரையையும் சில இடங்களில் நச்சினார்க்கினியர் உரையையும் கி.வா.ஜ. அவர்கள் விரிவாக விளக்கிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் 32 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதில் கிளவியாக்கத்தில் இடம்பெற்றுள்ள 19 நூற்பாக்களுக்கு விரிவாக கி.வா.ஜ. அவர்கள் விளக்கவுரை எழுதியுள்ளார்.
பெயரியல் பற்றி 10 கட்டுரைகளிலும், வேற்றுமை குறித்து 2 கட்டுரைகளிலும், விளிமரபு குறித்தும் இடைச்சொல், உரிச்சொல் பற்றி ஒவ்வொரு கட்டுரையிலும், எச்சவியலில் இடம்பெறும் சொல் குறித்த சில நூற்பாக்களுக்கும் இந்நூலில் சுவைபட கி.வா.ஜ. அவர்கள் விளக்கம் கூறுகிறார். இறுதியாக இடம்பெறும் 32-ஆவது கட்டுரையான உள்ளுறை என்பதில் தாம் வாழும் தமிழ் நூலில் எடுத்துக் கூறியுள்ள தொல்காப்பிய நூற்பாக்களின் தொகுப்பை கி.வா.ஜ. மொழிந்துள்ளார்.
வாழும் தமிழ் என்று பெயர் வைத்தமைக்கான காரணம்
தாம் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்ச்சி குறித்த இந்நூலிற்கு “வாழும் தமிழ்” என்று பெயர் வைத்தமைக்கான காரணத்தை, “வாழ்க்கையின் நிலையை மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிகளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புகளையும் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. ஆகவே தொல்காப்பியம் என்னும் இலக்கணம், அன்றும் இன்றும் வாழுந் தமிழைப் பற்றிச் சொல்கிறது; இலக்கியத்திலும் உலகியலிலும் வாழும் தமிழைப் பற்றிப் பேசுகிறது. இந்தக் கருத்துடனே, ‘வாழும் தமிழ்’ என்ற பெயரை இந்தப் புத்தகத்திற்கு வைத்தேன்”(ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்.
மேலும் கி.வா.ஜ. இந்நூலில் பழந்தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கின்றார். இதனை, “தொல்காப்பியத்தின் விளக்கம் அன்று இது; அதில் கூறப்பெறும் இலக்கணச் செய்திகளை முறையாகத் தொகுத்துத் தருவதும் அன்று; தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உள்ள செய்திகளாகிய சிறு புழைகளினூடே பரந்து, விரிந்த பண்டைத் தமிழர் வாழ்க்கையைப் பார்க்க முயலும் முயற்சி” (ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
கி.வா.ஜ. வாழ்க்கையோடு இணைத்து சொல்லதிகாரத்தில் இடம்பெற்றுள்ள நூற்பாக்களுக்கு விளக்கம் தருகின்றார். இவ்விளக்கமானது எளிமையானதாகவும், தனித்தன்மையுடையதாகவும் அமைந்துள்ளது. பழந்தமிழர் வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் சொல்வழக்கை வைத்தும் இன்று அச்சொல் எப்பொருளில் மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது என்பதையும் கி.வா.ஜ. உதாரணத்துடன் இந்நூலில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வழக்குச்சொற்களைப் பயன்படுத்தி விளக்கம் கூறுதல்:
கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும்போது நடைமுறையில் வழக்கில் மக்கள் வழங்கும் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி எளிமையாக விளக்கம் கூறுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவான,
“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே;
அஃறிணை என்மனார் அவரல பிறவே;
ஆயிருதிணையின் இசைக்குமன சொல்லே”
என்பதற்கு மிக எளிமையாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் கி.வா.ஜ. அவர்கள் விளக்குகின்றார்.
வழக்கில் வாயுள்ள பிராணி, வாயில்லாப் பிராணி என்று நாம் பேசுவது வழக்கம். உயர்திணை என்பதை வாயுள்ள பிராணி என்றும் அஃறிணை என்பதை வாயில்லாப் பிராணி என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்(ப.,3). உணர்ச்சியைச் சொல்லும் ஆற்றல் பெற்ற மனிதன் அது பெறாத பிற என்ற இரண்டு வகைகள் அமைந்துள்ளன. உத்தியோகஸ்தர்-உத்தியோகஸ்தர் அல்லாதார் கெஜட்டில் வருவோர்-அல்லாதார் என்று வழக்கத்தில் வழங்குவர். அதைப்போன்றே மனித சாதியை உயர்திணையென்று பிரித்தபிறகு மற்றவற்றை இழிந்த திணையென்று சொல்லாமல் அல்லாத திணை என்று பிரித்தனர்; அல்லாத திணை என்றாலும் அல்திணை என்றாலும் ஒன்றுதான். என்று எடுத்துரைத்து உலகத்தில் மக்கள் என்று சுட்டப்படும் பொருள்களை உயர்திணை என்று வகுத்துரைப்பர் மக்கள் அல்லாத பிற பொருள்களை அஃறிணை என்று சொல்லுவார்கள் சொற்களும் அந்த இரண்டு திணைகளாக வழங்கும் என்று எளிய விளக்கம் தருகின்றார்.
பொருளைக் குறிக்கும் சொல்லை பெயர் என்றும் ஆற்றலின் உருவத்தைக் குறிக்கும் சொல்லை வினை என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார். மேலும் பொருளை சிவம் என்றும் ஆற்றலை சக்தி என்றும் தமிழர்களின் வாழ்க்கை நெறி சார்ந்து சொல் என்பதற்கு கி.வா.ஜ. விளக்கம் கூறுகின்றார்.
பழமொழிகளைக் கூறி விளக்குதல்:
முன்னோர்களின் அனுபவ மொழிகளே பழமொழிகளாகும். இப்பழமொழிகள் வாழ்க்கையை விளக்கும் பண்பாட்டுப் பெட்டகங்களாகும். பால் என்பது குறித்து விளக்கவரும் கி.வா.ஜ. அவர்கள் பல உதாரணங்களைக் கூறி அதனை எளிமையாக விளக்குகிறார். அனைத்தும் ஒன்றாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டு நிற்கின்றது. உயர்திணையில் பால் என்பது ஒன்றாக இருப்பினும் அவை ஆண், பெண், பலர் என்றும் அஃறிணையில் ஒன்று பல என்றும் நம் முன்னோர்களால் பகுக்கப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.
இதனை கி.வா.ஜ.அவர்கள் “தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறேதான்” (ப.,9) என்ற பழமொழியைக் குறிப்பிட்டு விளக்கம் தருகின்றார். மனிதன் சமுதாய உணர்ச்சியோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் இயற்கையில் உடம்பும் உயிரும் உள்ளமும் தனித்தனி மனிதனை ஆக்குகின்றன. தனிமனிதன் தோன்றுகிறான் அவன் தன் முயற்சியினால் மற்றவர்களோடு ஒன்றுபட்டு சமுதாய உணர்ச்சி பெறுகிறான் என்று கி.வா.ஜ. தெளிவுறுத்தி,
“ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம்முப்பாற்சொல் உயர்திணை யவ்வே
ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று
ஆயிருபாற் சொல் அஃறிணையவ்வே”
என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு விளக்கம் தருகின்றார்.
ஆண், பெண் தவிர்ந்த மூன்றாவது பாலினமாக விளங்கும் திருநங்கை பற்றிய பால்பகுப்பை தமிழர்தம் வாழ்க்கை நெறி சார்ந்து கி.வா.ஜ.அவர்கள் விளக்குகின்றார். அவர், “தமிழ் உயிரோடு வளர்ந்த மொழி. வாழ்க்கையை ஒட்டி வந்த மொழி. அதன் இலக்கணமும் நெட்டுருப்போட்டுத் தலைவலியை உண்டாக்கிக் கொள்ள வந்ததன்று. ….ஆகவே வாழ்க்கையில் அலியின் நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது?… யாராவது தம்மை அலி என்று சொல்லிக் கொள்ள விரும்புவது உண்டா?
படைப்பிலே ஆண், பெண் என்ற பிரிவிலே சேராவிட்டாலும் செயற்கையினால் தாமே விரும்பி எந்தக் கூட்டத்திலே அவர்கள் சேருகிறார்களோ அந்தக் கூட்டத்திற்குரிய பாலில் சேர்த்து வழங்குவதே சரி என்று சொன்னார். ஆகவே பேடி வந்தாள், பேடி வந்தான் என்று சொல்லும்போது அந்தப் பேடியின் வாழ்க்கை கூட நமக்குத் தெரிந்து போகிறது. மகளிரோடு சேர்ந்து வாழ்கிறதும் ஆடவரோடு சேர்ந்து பழகுகிறதும் சொல்லிலேயே தொனிக்கின்றன” (பக்.,13-14) என்று தெளிவுறுத்துகின்றார்.
கடவுள் தத்துவத்துடன் இணைத்துப் பொருள் கூறுதல்:
தெய்வம் பற்றிய தமிழர்களின் பால்பகுப்பை, “தெய்வத்துக்குச் சாதி, திணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியாணிப்பதற்கும் உரு அமைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் வேண்டும். தனக்குத் தெரிந்த உருவத்தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆகவே தெய்வத்தைச் சிந்தனைக்குக் கொண்டுவந்து உரு அமைக்கும்போதும் பேச்சுக்குக் கொண்டு வந்து உரையாடும்போதும் தான் அறிந்த திணையுள்ளும் பாலுள்ளும் வைத்து வழங்கினான்; தேவன் வந்தான், தேவி வந்தாள் என்று பேசினான்”(ப.,15) என்று வாழ்க்கையோடு இணைத்து கி.வா.ஜ.விளக்குகின்றார்.
கடவுள் திணை, பால் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர். அதனால் கடவுளை இதற்குள் அடக்க இயலாது. சொல்லில் வழங்கும்போதுதான் தெய்வத்திற்கு திணை, பால் வகுக்க இயலும். பேடி முதலிய சொற்களைப் பற்றி விளக்க வந்த தொல்காப்பியர்,
“பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்
தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்
இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்” (487)
என்று குறிப்பிடுகிறார்.
மேலும்,
“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”
என்று மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசக அடிகளை எடுத்துக் கூறி, ஆயிரம் திருநாமம் சொல்லிக் கொட்டும்போதே இறைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்மை உள்ளத்தின் அடித் தட்டிலே ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதுபோலத்தான் தெய்வத்தை ஆணாகவும் பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் பேசும்போதே அத்தெய்வம் இப்பிரிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்ததென்பதையே தொல்காப்பியர்”பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்” என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார் என்று கி.வா.ஜ. விளக்கம் தருகிறார்.
தொல்காப்பியரின் இந்நூற்பாவிற்கு கி.வா.ஜ., “அலிகளையும் தெய்வத்தையும் வந்தான் போனான், வந்தாள் போனாள் என்று சொல்வதைக் கொண்டு இப்படிப் பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் தெரியவில்லை என்று நினைக்காதே. பைத்தியக்காரத் தமிழன் தெய்வத்தையும் தன்னைப் போல வேட்டியும் புடவையும் கட்டுவது என்று நினைத்துவிட்டானென்னு பரிகாசம் செய்யாதே அந்தப் பாற்பிரிவைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரியவை அல்ல; கடன் வாங்கிக் கொண்டவை என்று அவர் இதன் மூலம் சொல்லாமற் சொல்லவில்லையா? கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்காதே.
நம்மைப் போலப் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்பவரென்று ஏமாந்து போகாதே. எல்லாம் வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக் கொண்டவை என்று சமயக் குரவர்கள் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? ஆம் ஒன்று சொல்லைப் பற்றிய தத்துவம்; மற்றொன்று பொருளைப் பற்றிய தத்துவம். சொல்லின்றிப் பொருள் இல்லை; பொருளின்றிச் சொல் இல்லை.”(பக்.,15-16) இறைத் தத்துவத்தை எடுத்துக்கூறி விளக்கிச் செல்கின்றார். இது, “சிவம் இன்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவம் இல்லை” என்ற சிவத்தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
நிகழ்ச்சிகளைக் கூறி விளக்குதல்:
ஒரு நூற்பாவிற்கு விளக்கம் கூறும்போது கதைபோன்று ஒரு சிறு நிகழ்ச்சியைக் கூறி அதன் வழி நூற்பாவிற்கு விளக்கும் கூறும் முறையையும் கி.வா.ஜ. இந்நூலில் கையாண்டுள்ளார். அச்சிறு நிகழ்ச்சி சுவையாகவும் அவர் காலத்திய சொல்லாடல்களை அறியத்தகுவனவாகவும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையும் நிகழ்ச்சிகளைக் கூறி நூற்பாக்களை விளக்கும் முறையில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. தொல்காப்பியர் கூறும்,
“செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”(496)
செப்பே வழீஇயினும் வரைநிலை இன்றே
அப்பொருள் புணர்ந்த கிளவியான”(498)
என்ற செப்பு, வினா குறித்த நூற்பாக்களுக்கு கி.வா.ஜ. பின்வரும் கதைபோன்ற நிகழ்ச்சிகளை எடுத்துக்கூறி விளக்கத் தருகின்றார்.
“ஒரு வேளாளன் நிலத்தை உழுது கொண்டிருக்கிறான். அந்த நிலம் ஒரு பெருவழியின் அருகில் இருக்கிறது. யாரோ பிரயாணி கடம்பூர் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறான். தான் போகிற ஊருக்கு அதுதான் சரியான வழியா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அவன் உழவனைப் பார்த்து, “ஐயா கடம்பூருக்கு வழி எது?” என்று கேட்கிறான். உழவன் இரண்டு மாடுகளை ஏரில் பூட்டி உழுகிறான். இடத்து மாடு, வலத்துமாடு என்று அந்த மாடுகளைச் சொல்வது வழக்கு. அந்தக் காலத்தில் இடம்பூணி, வலம்பூணி என்று சொல்லி வந்தார்கள். வலப்பக்கத்தில் பூட்டப்பட்டது, இடப்பக்கத்தில் பூட்டப்பட்டது என்பது அவற்றின் பொருள். “இடத்திலே இருக்கிற மாடு எங்கள் வீட்டில் உள்ள பசுவின் கன்று” என்று அந்த உழவன் சொல்கிறான். ‘கடம்பூருக்கு வழி யாதோ?’ என்று கேட்ட வழிப்போக்கனுக்கு அந்தக் காலத்துப் பேச்சில், “இடம்பூணி என் ஆவின் கன்று” என்று அந்த உழவன் சோல்கிறான். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டவனிடம் கோட்டைப் பாக்கின் விலை சொன்ன புத்திசாலிக்கு இந்த உழவன் அண்ணனாகத்தான் இருக்க வேண்டும். இந்த வினாவுக்கும் விடைக்கும் பட்டுக்கோட்டை, கொட்டைப்பாக்கு, கடம்பூர், இடம்பூணி என்று எதுகையினால் தொடர்பு இருக்கிறதேயொழியப் பொருளால் ஒரு தொடர்பும் இல்லை”(ப.,18)என்று விளக்கம் தருகின்றார். இந்நிகழ்வை முதலில் கூறிய கி.வா.ஜ. அவர்கள் அந்நூற்பாக்களுக்குரிய எளிமையான விளக்கத்தை,
“வினா விடை என்னும் இரண்டிலும் குற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று ஒரு சூத்திரம் சொல்லுகிறது. பிறகு, “வினாவுக்கு நேர்முகமான விடையாக இல்லாவிட்டாலும் மறைமுகமானதாக இருந்தாலும் விடை என்றே கொள்ளலாம் என்று ஒரு சூத்திரம் வருகிறது”(பக்.,18-19) என்று கதை நிகழ்வினைக் கூறிய பின்னர் எடுத்துரைக்கின்றார்.
“வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே”(497)
எனும் நூற்பாவிற்கு, ஒரு வினாவிற்கு எதிரே விடை தரும் கருத்தோடு ஒரு வினாவே வந்தாலும் அதுவும் விடைதான் என்பது பொருளாகும். இதனை கி.வா.ஜ. அவர்கள் நேர்விடை, மறைவிடை, ஏவல் விடை என்ற விடை வகைகளைப் பற்றி விளக்கிவிட்டு,
“ஐந்நூறு ரூபாய் பணம் கொடுப்பாயா?”
“பணம் இல்லை என்பது தெரிந்தும் கேட்பது நியாயமா?”
கேட்ட கேள்விக்கு இல்லையென்று நேர்முகமான பதில் வராவிட்டாலும் சுற்றி வளைத்துச் சொல்வதில் அந்தப் பதில்தான் புலப்படுகிறது. ஆனால் அந்தப் பதில் மற்றொரு கேள்வி உருவத்தில் இருக்கிறது இது வினாவெதிர் வினாதல். “உனக்கு எத்தனை பிள்ளைகள்?” “அதற்கெல்லாம் நான் புண்ணியம் பண்ணி யிருக்கிறேனா என்ன?” இதுவும் வினாவெதிர் வினாதல்”(பக்.,27-28) என்று உரையாடல் வழி விளக்குவது எளிமையிலும் எளிமையாகவும் இலக்கணத்தைச் சுமையாக இல்லாது சுவையாகவும் ஆக்குகின்றது.
உரையாசிரியர்களின் கருத்தை வழிமொழிதல்:
கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு உரைகூறும்போது பெரும்பான்மையும் உரையாசிரியர்களின் கருத்தை ஒட்டியே உரைகூறிச் செல்கின்றார். முதலில் தனது கருத்தைக் கூறிவிட்டுப் பின்னர் உரையாசிரியர்களின் கருத்தை வழிமொழிந்து கூறுவது கி.வா.ஜ.வின் உரைத்திறனை புலப்படுத்துவதாக உள்ளது. தகுதி வழக்கையும் இயல்பு வழக்கையும் பற்றி விளக்கும்போது,
“தகுதி வழக்குகளுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படியின்றி, இயற்கைக் காரணமும் இன்றி வேறுபட்டு வரும் பேச்சு வகை உண்டு.
பேச்சு வழக்கிலே அவை அப்படி வந்து விட்டன. அவற்றை வழக்கு என்று வகுத்திருக்கின்றனர். வெள்ளாடு என்று ஒரு வகை ஆட்டைச் சொல்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்ந்து வெள்ளாட்டைப் பார்க்காத அயல்நாட்டார் ஒருவர் புதிதாகத் தமிழ் படிக்கிறார். அவர் வெள்ளாடு என்ற சொல்லைக் கண்டவுடன், வெள்ளை நிறமுடைய ஆடு என்றுதான் அர்த்தம் செய்து கொள்வார். இர்கே வாழ்ந்து பேச்சு வழக்கை அறிந்தவருக்குக் கறுப்பு ஆடானாலும் அது செவள்ளாடுதான் என்று தெரியும். அப்படிச் சொல்லக் காரணம் என்ன? தெரியாது. நெடுங்காலமாக அப்படித்தான் வழர்குகிறார்கள் என்பதுவே காரணம். இதனை வழக்கு என்று கூறுவர். பாத்திரத்தில் இருக்கும் சிறிதளவு நீரை, சில நீர் என்று முற்காலத்தில் சொன்னார்களாம். அதனால் உரையாசிரியர்கள் அதனை வழக்குக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். ‘குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிது என்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்றலும் போல்வன வழக்காம்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
காரணம் பற்றிய தகுதியிலும், காரணம் இல்லாமல் வரும் வழக்கிலும் பிற இடங்களில் வரும் சொற்களே வருகின்றன. ஆனாலும் அவற்றின் பொருளைக் கண்டுபிடிக்க, சபை மரியாதையையும் உலக வழக்கையும் பற்றிய அறிவு இருந்தாலன்றி இயலாது. சொல்லுக்குச் சொல் வைத்து இதற்கு இது பொருள் என்று காண சூவண்டிய மொழியில் இது ஒரு விந்தை. சொல்லுக்குப் புறம்பே அமைந்த பொருளை உடையனவாகையால் இவை வறு என்று தள்ளக் கூடாது. தள்ளினால் வாழ்க்கையைப் புறக்கணித்தவர்கள் ஆவோம். இவற்றைத் தள்ளாமல் கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியர் சொல்கிறார்.”(பக்.,42-43)
என்று எடுத்துரைக்கின்றார். அதன் பின்னர்…
“தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே”
என்ற நூற்பாவினைக் இயம்பி, தகுதியையும் உலக வழக்கையும் தழுவிப் பேசப்படும் பகுதியிலே வரும் சொற்கல் நீக்கப்படுவன அல்ல. அவற்றைக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருள்” (ப.,43) என்று எளிய முறையில் தனது விளக்கத்தை எடுத்தோதுகின்றார். இது கி.வா.ஜ. அவர்களின் உரைகூறும் தனித்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தமிழ்ப் பண்பாட்டை விளக்கி உரை கூறுதல்:
கி.வா.ஜ.அவர்கள் தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் உயர்ந்த எண்ணங் கொண்டவர். எதற்காகவும் கூட தமிழ்ப் பண்பாட்டையும் தமிழினத்தையும் விட்டுக் கொடுக்காத நெஞ்சுரங் கொண்டவர். கி.வா.ஜ.,
“இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்காறு அல்ல செய்யுள் ஆறே”
எனும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ.
“தமிழர் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள். அவர்கள் மொழியில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை. இப்போது எத்தனையோ வார்த்தைகளுக்குத் தமிழ் தெரியாமல் இடர்ப்படுகிறோமே! என்று சில நண்பர்கள் கேட்கலாம். இந்த நாட்டிலே எண்ணும் எண்ணத்துக்கும் சொல் இல்லை என்றால் அதுதான் குறைபாடே ஒழிய இறக்குமதியான சரக்குக்குப் பேர் இல்லையே என்றால் பொருள் இறக்குமதியாகும்போது பெயரும் இறக்குமதியாக வேண்டியதுதான். அந்தப் பெயர் இங்கே வந்து உரு மாறியோ சொல்லே மாறியோ வழங்குவதும் உண்டு. தமிழ் நாட்டு இட்டிலிக்கு இங்கிலீஷில் வார்த்தை இல்லை என்றால் அது இங்கிலீஷின் குறை அல்ல. அவர்கள் ஊரில் இட்டிலியாகிய பொருள் இல்லை. அதனால் அதற்குரிய சொல்லும் இல்லை. உலக வழக்காகிய பேச்சிலே மயக்கமில்லாமல் இருக்க வேண்டும்”(பக்.,45-46)
நம்வீட்டு வேலைக்காரர்களில் இரண்டு பேருக்கு ராமன் என்ற பெயர் இருக்கிறது. அந்த இரண்டு பேரையும் வேறு பிரிக்க நெட்டை ராமன், குட்டை ராமன் என்று அடைகொடுத்துப் பேசுவதுதான் தெளிவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒரே ராமன் இருக்கையில், நெட்டை ராமனைக் கூப்பிடு என்றால் புதிதாக யாராவது அதைக் கேட்கும்போது அவர் நெஞ்சில் குழப்பம் உண்டாகிவிடும். குட்டை ராமன் வேறு இருக்கிறான் போலும்! என்று அவர் எண்ணுவார். ஆகவே ராமனைக் கூப்பிடு என்று சொன்னாலே போதும்.
“ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள” என்று கம்பர் பாடுகிறார். பேசும்போது, ஆழி சூழ் உலகத்தில் மனிதன் நடமாடுகிறான் என்பது அநாவசியம். ஆழி சூழாத உலகம் இருந்தாலன்றி அப்படிச் சொல்வது சில சமயங்களில் மயக்கத்தைக் கூட உண்டுபண்ணும் கம்பர் பாடலாமா? என்றால் அது கவிதைக்குரிய உரிமை. அலங்காரம் பற்றி அப்படிச் சொல்லக் கவிஞருக்கு அதிகாரம் உண்டு(ப.,48)
என்று தமிழர்தம் பண்பாட்டு மரபும் பெருமையும் புலப்படுமாறு விளக்கம் கூறுகின்றார்.
அதோடு மட்டுமல்லாது தமிழர்கள் இறக்குமதி செய்யாது புதிய புதிய பொருள்களைத் தாங்களே உருவாக்குதல் வேண்டும் என்ற கருத்தையும் கி.வா.ஜ. அவர்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றிருப்பது அவரின் உயர்ந்த எண்ணத்தைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்திற்கு தமிழர் பண்பாட்டு அடிப்படையில் காலத்திற்கு ஏற்ப விளக்கம் கூறும் பாங்கு இதில் புலப்படுவது நோக்கத்தக்கது.
நகைச்சுவையுடன் உரைகூறுதல்:
கி.வா.ஜ. அவர்கள் நகைச்சுவையுடன் உரையாற்றுவதில் வல்லவர். எப்படிப்பட்ட சூழலிலும் அவர் நகைச்சுவை மிளிர உரையாடுவார். சிலேடையாகப் பேசி எல்லோரையும் நகைச்சுவையில் ஆழ்த்திவிடும் கலை கி.வா.ஜ. அவர்களுக்கே கைவந்த ஒன்றாகும். இத்தகைய நகைச்சுவைப் பண்பு இலக்கணத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ. வின் உரையிலும் இடம்பெற்றுள்ளது.
“பால் மயக்குற்ற ஐயக்கிளவி
தான் அறி பொருள் வயின் பன்மை கூறல்”
“உரு என மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்றும் உரித்தே சுட்டுங்காலை”
என்ற நூற்பாக்களுக்கு விளக்கம் கூற வந்த கி.வா.ஜ. அவர்கள்,
“குழந்தை தாயைப் பார்த்து, அம்மா உன்னை என் கல்யாணத்துக்குக் கூபட்பிடமாட்டேன் என்றதாம் தாய், “ஏன் அப்பா?” என்று கேட்டாள்.
“ நீ உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிட்டாயோ?” என்று கேட்டது குழந்தை. கேள்வியைக் கேட்ட தாய் சிரித்து மகிழ்கிறாள். குழந்தைத் தன்மை யாகையால் அந்த மகிழ்ச்சி உண்டாகிறது. ….சந்தேகத்தை வெளிப்படுத்தும் விஷயத்தில் பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கவலை இலக்கணக்காரருக்கு உண்டாகி இருக்கிறது. .. ஆணென்றும் பெண்ணென்றும் தெரியாத சந்தேகத்தைச் சந்தேக பாஷையிலே பொதுவாகச் சொல்லவேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக ஒரு வார்த்தை இருந்தால் சொல்லலாம். அந்த வார்த்தை இன்னதென்று இலக்கணம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொண்டுதான் சொல்கிறது.”(பக்.,54-55) என்று தமக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் விளக்குகின்றார்.
கதையினைக் கூறி விளக்கம் தருதல்:
கி.வா.ஜ.அவர்கள் ஒரு பொருள் பற்றி விளக்க முற்படும்போது அதன் பொருள் கேட்போருக்கு மனதில் பதியும் வண்ணம் சிறு சிறு கதைகளைக் கூறி அதனை விளக்கிச் செல்வார். விளிமரபுனைப் பற்றி விளக்க வந்த கி.வா.ஜ. அண்மை விளி குறித்தும் சேய்மை விளி குறித்தும் ஒரு கதையினைக் கூறி விளக்கிச் செல்கிறார்.
ஒரு செட்டியார் இரவில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். படுத்தபடியே கவனித்தபோது தம் வீட்டில் திருடன் வந்திருப்பது குறிப்பாகத் தெரிந்தது. உடனே எழுந்திருந்து ஏதாவது எசய்தால் திருடன் தம்மை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார். மெல்ல அருகில் இருந்த தம் மனைவியைச் சத்தம் போடாமல் நிமிண்டி எழுப்பிப் பேச ஆரம்பித்தார்.
“ஆண்டவன் அருளால் நமக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. அதற்கு என்ன பெயர் வைப்பது?” என்று செட்டியார் கேட்டார்.
“எங்கள் தகப்பனார் பெயரை வைக்கலாம்” என்றாள் அவள்.
அதெல்லாம் கூடாது. நான் ராமன் என்ற பெயரைத்தான் வைக்கப்போகிறேன். பல நாளாக அப்படித்தான் மனசில் நினைத்துக் கொண்டிருந்க்கிறேன். நீயும் நல்லபடியாகப் பிள்ளை பெற்றுக் குழந்தை கடவுள் அருளால் நன்றாக இருந்தால் அவனை அலங்காரஞ் செய்து கொஞ்சுவேன். ராமா ராமா என்று வாயார அழைப்பேன். “ என்றார்.
“நான் வேறு பெயர்தான் வைப்பேன்” என்றாள் அவர் மனைவி.
“முடியாவே முடியாது. நான் ராமன் என்றுதான் பெயர் வைப்பேன். ராமா ராமா என்றுதான் கூப்பிடுவேன். நீ என்ன எனக்குச் சொல்வது?” என்று பேசிக்கொண்டே; ராமாஅஅ! ராமாஅஅ! என்று பலமாக அழைத்துக் கூவத் தொடங்கிவிட்டார்.
பக்கத்து வீட்டு ராமன் செட்டியார் இந்தக் குரலைக் கேட்டுத் தம்மைச் செட்டியார் அழைக்கிறாரென்று எண்ணி, ஏதோ அபாயம் போலும்! என்ற நினைவினால் அவசரமாக எழுந்து வந்து கதவைத் தட்டினார். இந்தச் செட்டியார் எழுந்து போய்க் கதவைத் திறந்து அவரை அழைத்து வந்தார்.
“என்னை ஏன் அழைத்தீர்கள்?” என்று வந்தவர் கேட்டார்.
“பாதி ராத்திரியில் உங்களை நான் எதற்காக அழைக்கிறேன்? எனக்குப் பிள்ளை பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்பது பற்றி எனக்கும் இவளுக்கும் விவாதம் ஏற்பட்டது. நான் ராமன் என்றுதான் பெயர் வைத்து அழைப்பேன் என்றேன். இவள் வேறு பெயர்தான் வைக்க வேண்டும் என்றாள். நான் ஒரே பிடிவாதமாக ராமா என்றுதான் கூப்பிடுவேன் என்று இவளுக்குக் கூப்பிட்டுக் காடடினேன். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாவிட்டால் அதோ இருக்கிறாரே அவரைக் கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி மேல்பரணைக் காட்டினார்.
செட்டியார் விழித்துக் கொண்டது முதல் ஒன்றும் செய்யத் தோன்றாமல் திருடன் அங்கே ஒளிந்து கொண்டிருந்தான். செட்டியார் சுட்டிக் காட்டிய பிறகுதான் ராமன் செட்டியாருக்கு நண்பருடைய தந்திரம் தெரிந்தது. திருடனை இரண்டுபேரும் சேர்ந்து பிடித்துச் செய்ய வெண்டியதைச் செய்தார்களாம்.”
இப்படி ஒரு கதை வெகு காலமாகத் தமிழ் நாட்டில் வழங்குகிறது. செட்டியார் குழந்தையை அழைப்பதாக இருந்தால் அவ்வளவு சத்தம் போட்டிருக்க வேண்டாம்; ராமாஅஅஅ என்று நீட்டியிருக்கவும் வேண்டாம். அவர் அயல் வீட்டு ராமனை அழைக்கவே அப்படிச் செய்தார்; அவன் தூங்குவான் என்று எண்ணியே அதிகமாக நீட்டினார்.
அயலில் இருப்பவரை அழைப்பது ஒரு விதம்; தூரத்தில் இருப்பவரை அழைப்பது வேறு விதம். அழைப்பதை விளித்தல் என்றும் சொல்வதுண்டு. இப்போது மலையாளத்தில் அந்தச் சொல்சாதாரண வழக்கில் இருக்கிறது. ஒருவனை முன்னிட்டு அழைப்பதை விளி என்று சொல்வார்கள். அப்படி அழைக்கும்போது அவனுடைய பெயரின் உருவம் வேறுபடுகிறது. ராமன் என்பவனை விளிக்கும்போது அந்தச் சொல் ராமா என்று ஆகிறது. பெண்ணை விளிக்கும்போது பெண்ணே என்று சொல்கிறோம். இந்த வேறுபாடு பெயர்ச்சொல்லுக்கு உரிய, வேற்றுமை என்னும் பகுதியில் வருகிறது. விளி வேற்றுமை அல்லது எட்டாவது வேற்றுமை என்று இதைச் சொல்வார்கள்”(பக்.,144-145)
என்று விளி என்பதைப் பற்றி கி.வா.ஜ. அவர்கள் கதையின் வழியாக விளக்கிக் கூறுகின்றார். இதுசுவையாகவும் மனதில் பதியும் வண்ணமும் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
இலக்கியப் பகுதிகளைக் கூறி சொல்லாய்வு செய்தல்:
கி.வா.ஜ.அவர்கள் சூத்திரங்களுக்கு விளக்கம் கூறும்போது இலக்கியப் பகுதிகளில் இருந்து பாடல்களைக் கொடுத்து சொல்லாய்வு செய்கின்றார். இரண்டாம் வேற்றுமையின் பொருள்களான காத்தல், ஒப்பல் ஊர்தியின் இழையின் உள்ளிட்டவற்றை விளக்கும்போது,
“ஆக்க வேலை, அழிவு வேலை என்று இப்போது சொல்கிறோம் ஆக்க வேலையைக் கடவுளே முதல்ல் செய்துவிடுகிறார் அவர் ஆக்கிய உயிர்களையும் உடல்களையும் உலகத்துப் பொருள்களையும் தக்க வண்ணம் காத்தலே ஆற்றலுடையவருடைய கடமை.
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”
என்று திருக்குறள் சொல்கிறது….. மனிதனுடைய செய்கைக்கு உட்படும் பொருளைப் பற்றிச் செல்லும்போது ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைக் கூட்டிச் சொல்வது தமிழ் மரபு. அதைப் பற்றிச் சொல்லும் இடத்தில் தொல்காப்பியர், பொருளானது எந்த எந்தத் தொழிலுக்குஉட்படும் என்பதைச் சிறிது சொல்கிறார். மனிதன் செய்யும் தொழில் அனைத்தையும் சொல்லி முடிக்க முடியுமா? ஆனாலும் அவர் மிக முக்கியமானவை என்று கருதிய 28 தொழில்களைச் சொல்லிவிட்டு, இவை போன்ற பிறவற்றையும் சேர்த்துக் கொள்க என்று குறிப்பிடுகிறார்.
காப்புக்குப் பின் பல தொழில்களைச் சொல்லும் தொல்காப்பியர் கடைசியில் சிதைப்பு என்ற தொழிலைச் சொல்கிறார். அழித்தல் என்பது அதன் பொருள்.
காத்தலும் சிதைத்தலுமாகிய இரண்டு தொழில்களையும் நினைக்கும்போது அரசனுடைய நினைவுதான் தமிழருக்கு வருகின்றது. இவ்விரண்டுக்கும் உதாரணம் சொல்ல வந்த உரையாசிரியர்கள், ஊரைக் காக்கும், நாட்டை அழிக்கும் என்றே காட்டுகிறார்கள். அரசனது முதல் கடமை தன் நாட்டைப் பாதுகாத்தல். அவசியமாக இருக்குமானால் பலவாறு யோசித்து முடிவு கட்டியபிறகே வேறு வழியின்றி இறுதியாக வைத்துப் பகைவன் நாட்டை அழித்தல் அவன் செயல் என்ற கருத்து இவற்றிலிருந்து தோன்றுகிறது.
ஊரையும் நாட்டையும் காப்பாற்றுகின்ற அரசனைக் குடிமக்கள் போற்றுவார்கள்; புகழ்வார்கள். இவன் கடவுளை ஒப்பான் என்றும் அன்பினால் தாயை ஒப்பான் என்றும் நன்மை பயப்பதனால் தவத்தை ஒப்பான் என்றும் உபமானம் சொல்வார்கள். கம்பர் தசரதனைப் பற்றிச் சொல்லும்போது இப்படிப் பல உவமைகளைக் கூறுகின்றார்.
“தாய்ஒக்கும் அன்பில்
தவம் ஒக்கும் நலம் பயப்பில்
சேய்ஒக்கும் முன்னின்றொரு
செல்கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னில்
மருந்தொக்கும், நுணங்கு கேள்வி
ஆயப் புகுங்கால் அறிவொக்கும்”
என்று வருகிறது இராமாயணப் பாட்டு.” (பக்.,125-126)
என்று திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் எடுத்துக்கூறி இரண்டாம் வேற்றுமைப் பொருளாகிய காத்தல் என்ற தொழிற்சொல்லை கி.வா.ஜ. ஆய்வு செய்கின்றார்.
இங்ஙனம் கி.வா.ஜ. அவர்களின் சொல்லாராய்ச்சி தமிழின் சிறப்பையும் தமிழர்களின் சிறப்பையும், பண்பாட்டையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. வழக்கில் வழங்கும் சொற்களை வைத்து கி.வா.ஜ. அவர்கள் சொல்லாய்வு செய்வது என்றென்றும் தமிழ் வாழும் என்று அறுதியிட்டுக் கூறுவதாக அமைந்துள்ளது. கி.வா.ஜ. அவர்களின் சொல்லாய்வில் தமிழர்தம் வாழ்வியல் நெறிமுறைகள் புலப்படுவதுடன் தமிழ் மொழியின் தனித்தன்மை, அதன் இலக்கண இலக்கியத் தொன்மை உள்ளிட்டனவும் தெளிவுறுத்தப்பட்டுள்ளன.
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி),
புதுக்கோட்டை.
Malar.sethu@gmail.com
நாகேஸ்வரி அண்ணாமலை
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள முன்னாள் தமிழக அரசின் முதல்வர் – ஜெயலலிதாவின் ஆதரவாளர்களால் என்றென்றும் தமிழக மக்களின் முதல்வர் என்று அழைக்கப்படுபவர் – ஜெயலலிதா அதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வழக்கிலிருந்து அவர் விடுதலை பெற வேண்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பிரார்த்தனைகள் அ.தி.மு.க.வினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை மேயர் 1008 ஓமகுண்டங்களை வளர்த்து 1008 பிராமணர்களை வைத்துப் பூஜைகள் நடத்தியிருக்கிறார். இவையும், குறிப்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும், அவரது விடுதலைக்காகச் செய்யப்பட்ட வழிபாடுகளாகத்தான் இருந்தன. அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை தங்கள் தெய்வமாகவே கொண்டாடட்டும்; அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கட்டும்; அந்தத் தெய்வத்தை யாரும் தண்டிக்க முடியாது என்று நினைக்கும் அறிவிலிகளாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.
ஆனால் இப்போது அவர் வழக்கிலிருந்து விடுதலை பெற தமிழக அரசின் அறநிலையத் துறை ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு ஏற்பாடுகள் பற்றிய தகவல்கள்தான் இவர்கள் செய்யும் செயல்களின் அறியாமையால் வேதனையையும் தமிழக மக்களின் வரிப் பணத்தை இப்படி செலவழித்து தமிழக அரசின் கஜானாவைக் காலிபண்ணுகிறார்களே என்பதால் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன.
அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிய வந்துள்ள செய்திகள்: தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 32,000-க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்கள் உள்ளனவாம். இதில் பல பெரிய கோவில்கள்; மற்றவை சிறியவை. இவற்றில் இருந்து தினமும் ஐந்து கோவில்களில் வழிபாடு நடத்தப்பட்டு அதன் பிறகு அந்த பிரசாதங்கள் அந்தந்த கோவில் ஊழியர்களால் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒப்படைக்கப்படுகின்றனவாம். காலை பத்து மணிக்கு பார்த்தசாரதி கோவிலை வந்தடையும் இந்தப் பிரசாதங்களை பார்த்தசாரதி கோவில் அதிகாரி ஒருவர் ஜெயலலிதாவின் வீட்டில் சமர்ப்பித்துவிடுவாராம். கடந்த மூன்று மாதங்களாக நாள் தவறாமல் இப்பணி நடந்து வருகிறதாம். ஒவ்வொரு கோவிலிலிருந்தும் அந்தக் கோவில் ஊழியர்கள் பிரசாதத்தை பார்த்தசாரதி கோவிலுக்கு எடுத்து வரும் செலவை அறநிலையத் துறையே ஏற்றுக்கொள்கிறதாம். என்றைக்கு எந்தெந்த கோவிலிலிருந்து பிரசாதம் வர வேண்டும் என்பதையும் அறநிலையத் துணை ஆணையர்களே முடிவுசெய்கிறார்களாம்.
இப்படிப் பூஜை நடத்துபவர்களும் பரிகாரம் செய்பவர்களும் இறைவன் இளிச்சவாயன் என்று நினைக்கிறார்கள் போலும். தவறு செய்தவர்களை அவர்கள் தவறு செய்தவர்கள்தானா, அந்தத் தவற்றுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா என்று நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து, குற்றம்சாட்டப்பட்டவர் தவறு செய்யவில்லை என்று இவர்கள் நினைப்பதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுபவர்கள் இறைவனை இளிச்சவாயன் என்று நினைக்காமல் வேறு என்ன நினைக்கிறார்கள்?
இறைவனை இளிச்சவாயன் என்று அம்மாவின் பக்தர்கள் நினைப்பது ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் தமிழக அரசின் அறநிலையத் துறையிலிருந்து இந்த பூஜைகளுக்கும் பரிகாரங்களுக்கும் பணம் செலவழிப்பது சட்டப்படி சரியில்லை என்பதை இதுவரை யாரும் உணரவில்லையா? முதலாவதாக, மதச்சார்பற்ற ஒரு அரசின் பணத்தை ஒரு மதத்தின் – அதாவது இந்து மதத்தின் – செயல்களுக்கு மட்டுமே செலவிடுவது சட்டப்படி குற்றம். இரண்டாவதாக, தனி மனிதர் நன்மைக்காக ஒருவருக்கு அரசு பொதுப் பணத்தைச் செலவிடுவதும் குற்றம். மூன்றாவதாக, கீழ்நிலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மேல்நீதிமன்றத்தில் இன்னும் அக்குற்றத்திலிருந்து விடுவிக்கப்படாதவருக்குப் பூஜைகள் செய்வதற்கு அரசு பணத்தைச் செலவிடுவதும் குற்றம்.
இப்படிக் குற்றங்கள் புரிந்துவரும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் செயல்களைத் தடுக்க யாருமே முன்வரவில்லையா? இதுதான் தமிழகத்தில் ஜனநாயகம் செயல்படும் முறையா? தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா? தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.
பி.கு. இது கட்டுரையாளர் நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமையின் கருத்து அல்ல – ஆசிரியர்
வையவன்
2
“அக்கா”
“ம் ம் ம்”
“அக்கோவ்”
“கேக்குது.. சொல்லு”
“ஷூ இல்லாமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.”
“ப்ரேவோ”
“நெஜம்மா சொல்றேன்!”
“நானும் நெஜம்மாதான் பாராட்டறேன். உள்ளிருப்பு வேலை நிறுத்தமோ!”
“ஆமாம்”
“சரி… ஒடனே கவனிக்க வேண்டியதுதான்…”
“……”
“என்ன ஷூ சார் ஒங்களுக்கு வேணும்?”
இடையில் இட்லிப் பாத்திரத்தின் மூடியைத் திறந்து மூடும் ஒலி.
“அம்பாஸிடரா… கட் ஷூவா.. கமாண்டரா… கான்வாஸ் ஷூவா… ஒனக்கு எது வேணும்?”
வேறொரு குரல் குறுக்கிட்டது.
“திஷ்யா… டிபன் ரெடியாம்மா”
“இட்லி வெந்துகிட்டிருக்குப்பா”
இடைவெளி விட்டுப் பின் ஒரு வயசான கரகரத்த குரல் கந்தர் சஷ்டிக் கவசம் சொல்ல ஆரம்பித்தது.
“காக்கக் காக்க கதிர்வேல் காக்க…”
“அக்கா, ஒனக்கு கேலியா இருக்கா?”
கடுகு பொரிந்தது. தாளிதம் மணந்தது.
“நீ ஒரு ஜோக் அடிக்கும்போது நான் அடிக்கக் கூடாதா?”
“ஷý கேக்கறது ஒரு ஜோக்கா? நீ கூட போன வருஷம் வரிக்கும் ஒரு ஸ்டூடண்ட் தானே! எல்லாப் பெண்களும் ப்ளஸ்-டூ க்ளாஸ்லே வாட்ச் கட்டிக்கிட்டு வர்றாங்கன்னு நீ என்ன அடம்பிடிச்சே! இப்போ நான் கிரிக்கெட் ப்ராக்டிஸ் வேற பண்றேன்.”
“நான் ஒரு சின்ன அட்வைஸ் தரட்டுமா?”
“ஷý”
“மொதல்ல இதக் கேளு.”
“சொல்லு”
“ஷý இல்லாமே ஸ்கூலுக்குப் போக அவமானமா இருந்தா போகாதே.. நின்னுடு.. பொட்டலம் கட்டப்போ.. சுண்டல் வித்துப் பார்… கிரிக்கெட் கத்துகிட்டு நீ டெஸ்ட் மாட்ச் விளையாடப் போறதில்லே!
வேலைக்கு அலையறப்ப பிச்சைக்காரன் நோட்டீஸ் நீட்டறா மாதிரி நீ ஸ்போர்ட் சர்ட்டிபிகேட்டைக் காட்டறதைவிட சுண்டல் விக்கறது மேல்.”
“அக்கா…”
“இரு… இரு… நான் முடிக்கல்லே… நீ ஏன் ரிஸ்ட் வாட்ச் கட்டிக்கிட்டேண்ணுதான் கேட்கப் போறே….? நான் நர்ஸ் ட்ரெயினிங்கை மனசிலே வச்சிகிட்டுதான் அதை வாங்கணும்னு அடம் பிடிச்சேன்! இப்ப எல்லாமே எவ்வளவு பெரிய மடத்தனம்ணு தெரியுது!”
நடுவிலே ஓர் அபாய அறிவிப்பு கிறீச்சிட்டது. சீதா கத்தினாள்.
“அக்கா… இந்த ஆனந்து என் கலர் பாக்ஸை எடுத்துணு தரமாட்டேங்கறான்.”
திஷ்யாவின் கவனம் ஆனந்துக்குத் திரும்பிற்று.
“ஆனந்து… கீதா கலர் பாக்ஸ் அழுக்கு… கோரம்.. உவ்வே… ஒனக்கு வேண்டாம்டா கண்ணு…”
“நான் தரமாத்தேன்… எனக்கு அவளுக்குதான் ஓணும்… உவ்வேதான் ஓணும்”
“அப்ப சரி… அதை நீயே வச்சுக்க… சீதா நான் ஒனக்கு பளபளாண்ணு கோல்டன் கலர்பாக்ஸ் வாங்கிக் குடுக்கறேன்… என்ன?”
“எனுக்கு?”
“ஒனக்குதான் உவ்வே
போதுமே”
“வாந்தாம்… எனக்குத்தான் கோத்லன் கலர் பாக்ஸ்… இது கோரம்… ஆயி…”
“அம்மாடி… அக்கா, நீ ஜீனியஸ்”
“ஒன் சர்டிபிகேட் போதும். கொழந்தையே எதிரிலே வச்சுகிட்டு கலர் பாக்ஸை ஏன் காட்டறே…?”
“ஸாரிக்கா”
“அக்கா…”
“என்ன பிரேம்?” ஆயாசமாகப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கேட்டாள் திஷ்யா.
“நீ சுண்டல் விக்கச் சொல்றியே… விக்கறேன்… பண்ணித் தர்றியா?”
“ஓ… எஸ்…”
“திஷ்யா…”
“வாங்கப்பா டிபன் ரெடி”
“இன்னிக்கு டி.எம்.ஓ. இன்ஸ்பெக்ஷன்! வந்திருக்கிற ஆள் கிங்கரன். கம்பவுண்டர்னாலே எரிச்சலாம். ஸ்டாக் ரிஜிஸ்டரைக் குடை குடைண்ணு குடையறானாம். சாப்பாட்டுக்கு வர டயம் இருக்காது. வார்டு பாயை அனுப்பறேன். நீ கொடுத்து அனுப்பிச்சுடு”
“சரிப்பா… நீங்க வாங்க”
திஷ்யாவுக்கு குரல் தாழ்ந்தது.
“டேய் பிரேம், ஒன் ‘பிரச்னை’ புரியுது. கீழ்ப் போர்ஷன் பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போறதாம். வாட்ச் ஒண்ணு வேணும்னாங்க. என் வாட்சைக் காட்டினேன். பிடிச்சுப் போச்சாம். ஒண்ணாந்தேதி பணம் தருவாங்க. அப்பறம் நீ ஷý வாங்கலாம்.. ரைட்டா?”
“ரைட்… ரைட்… டபிள் ரைட்…”
“அப்ப தட்ட எடுத்துட்டு வந்து நீயும் உட்காரு… ஸ்கூலுக்கு டயம் ஆகப்போறது”
சிவா வெகு நேரமாக வெங்காயம் அரிந்து கொண்டிருந்தான். பக்கத்துப் போர்ஷனில் நடந்த ஒலிச் சித்திரம் நின்று விட்டது. மாடிப்படி ஏறியதும் நேர்க்குத்தாகத் தெரியும் சமையல் அறையில் அவன் காதில் பக்கத்துப் போர்ஷன் சங்கதிகள் ஒட்டுக் கேட்காமல் தானாகக் காதில் வந்து விழுந்தன.
இந்த திஷ்யாவுக்ள் எத்தனை திஷ்யாக்கள்.
சண்டைக்காரி… சமாதான விரும்பி… சைக்காலஜிஸ்ட்… ராஜதந்திரி…
இந்தப் பாராட்டை அவளிடமே வாய்விட்டுச் சொல்லத் தோன்றியது. சொன்னால்?
முந்தானையை விசுக்கென்று வரிந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டுக் கொண்டு சூடு பறக்க திஷ்யா முறைத்து நிற்கும் ஒரு காட்சியை அவன் கற்பனை செய்தான்.
“இப்படித்தான் ஐஸ் வைக்க ஆரம்பிக்கறது. பூ சுத்தி விட்டு லவ்வுண்ணு வந்து அசடு வழிய வேண்டியது!”
வாணலியில் காய்ந்த எண்ணெயில் அவன் சிதறிய நீர்த்துளி ஆக்ரோஷமாய்ச் சீறிற்று. சிவா கடுகைத் தூவினான்.
“இது காதலா?”
அட கஷ்டகாலமே.. அந்தக் கேள்வியை நிஜமாகவே திஷ்யா கேட்டு விட்ட மாதிரி சிவா மிரண்டான்.
“டூ ஐ லவ் ஹர்?”
என்ன சனியன் இங்கிலீஷ் வேண்டியிருக்கிறது. நான் அவளைக் காதலிக்கிறேனா?
கடுகு கருகிவிட அரிந்த வெங்காயத்தை சிவா அதில் கொட்டினான்.
ரஷ்ய நாவலாசிரியர் டர்ஜனீவின் கதாநாயகன் மாதிரி தான் கொண்டிருப்பது காதல் தானா என்று அலசுகிற வியாதிக்குத் தான் ஆளாய் விட்டது அவனுக்கே விநோதமாக இருந்தது.
டாங்.. டாங்.. என்று கூடத்துக் கடிகாரம் மிலிட்டரிக் கண்டிப்போடு ஒன்பது அடித்தது.
பத்தரைக்கு இண்டர்வ்யூ. இன்னும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. பல்லவன் பிடித்து வேர்த்து விறுவிறுத்து பல்லைக் காட்டத் தயாராக வேண்டும்.
இன்னும் ‘சிக்கன்’ தயாராகவில்லை. அவனுக்கு இருக்க நிழலும் உண்ணச் சோறும் ஒரு விலாசமும் தந்திருக்கும் தாமுவுக்கு இந்த ‘சிக்கன்’ பிடிக்க வேண்டும்!
காலையில் எழுந்ததும் அவன் எங்கே போனான்?
சிவாவின் மனசு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு மீண்டும் காதலுக்கு வந்தது.
திருப்பத்தூரில் கல்லூரி வாழ்க்கையில்… மேல்நிலைப் பள்ளியில் படிக்கையில்… நூற்றுக்கணக்கான இளைஞர்களின் அசட்டுத்தனங்களும் துணிச்சல்களும் நினைவு வந்தன.
கான்வெண்ட் விடும்போது… சினிமா விடும்போது… ஆரம்பிக்கும்போது… கோவில் வாசலல்… எவ்வளவு அசட்டு மூட்டைகள்… எத்தனை பரிதாப ரகங்கள்.
கடைசியில் அவர்களிடமிருந்து விலகி விலகி இப்போது நானும் அதற்கு ஆட்பட்டு விட்டேனா?
தெரியவில்லை.
நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வேலை இல்லை.
வேலை இல்லாத ஒவ்வொருத்தனும் கொஞ்சம் காதல் பண்ணிக் கொண்டிருப்பான். வேலை கிடைத்ததும் எல்லாம் சரியாகிவிடும்.
வேலை என்ற எண்ணம் ஒரு பந்தயக் குதிரை மாதிரி ஓடி வெற்றிக் கம்பத்தின் அருகே நின்றது.
சர்ட்டிபிகேட்டுகள் அரைக் கிலோ தேறும். அந்தப் போட்டியில் முதல்… இந்தப் போட்டியில் இரண்டாவது அந்த கேம்ஸ்… இந்த ஸ்போர்ட்ஸ்…
சிவாவுக்கு அவற்றின் மீதிருந்த நம்பிக்கை பொய்த்து விட்டது. தாமுவின் சிநேகிதி பிரீதா ஒரு சிபாரிசுக் கடிதம் வாங்கிக் கொடுத்திருந்தாள். அமைச்சரின் பி.ஏ.வுடைய ஆசை நாயகிக்கு பிரீதா தங்கள் பிரைவேட் நர்ஸிங் ஹோமில் பிரசவம் பார்த்திருந்தாள். கஷ்டமான கேஸாம். அவளது வாஞ்சையான சிகிச்சைக்குக் கிடைத்த சின்ன வெகுமதி அது.
அதை வாங்கிக் கொள்ள முதலில் அவனுக்குப் பிடிக்கவில்லை.
“இதாணு லோகம்” என்று அவன் கையில் திணித்தாள் பிரீதா.
அதை வாங்கும்போது அவன் கை தயங்கியது.
வெற்றிவேல் நினைவு வந்தான்.
‘மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்களென்றால்என் கூட வெளியினில் வாருங்காணும்?’ – என்று டெஸ்கின் மீது இரண்டு கைகளால் தாளம் தட்டிக் கொண்டு அவன் பாடும் பாட்டு நினைவு வந்தது.
வெற்றிவேல்… மன்னித்துக் கொள்… நீயும் நானும் மீசையுள்ள ஆண்பிள்ளைச் சிங்கங்கள்தான்…
இப்போது சிங்கங்களை மதிப்பவன் இல்லையடா… சிங்கங்கள் அசட்டு மிருகங்கள் என்று உதறிவிட்டு ஜனம் பறக்கிறது. சிங்கத்தைவிட சிங்க மேக்கப்தான் இப்போது கவர்ச்சி…
அரைத்த மசாலாவை எண்ணையில் வெந்து கொண்டிருந்த சிக்கனில் கலந்து கொண்டே உள்ளூர சிவா தொலைதூரத்தில் இருந்த வெற்றிவேலிடம் மன்னிப்புக் கோரினான்.
ராயப்பேட்டை ஹைரோடில் ஒரு மாவு மிஷின் கிறீச்சிடுகின்ற ஒலி காற்றில் மிதந்து வந்தது. அந்த ஓசை. மாவை அரைத்து முடித்துவிட்டு கைப்பிடிச் சக்கரத்தை சுழற்றிவிடும் அந்த ஓசை அவனுக்குப் பிடிக்கும்.
திருப்பத்தூர் முதலியார் ரைஸ் மில்லின் ஓசையில் ஒரு பாராயண ஒலி கேட்டும்.
அதை நாராயண நாமமாகெ நனைத்துக் கொண்டே தவிடு விடுவாள் அம்மா.
அவளைப் பார்க்கப் போகும் போதெல்லாம் கர்ண கடூரமாகக் கிறீச்சிடும் அந்த ஓசை பழகிப் பிடித்து விட்டது.
எதுவெல்லாம் மனிதனுக்குப் பிடித்து விடுகிறது!
பிடிப்பதற்குப் பழக்கம்தான் தேவையோ! இடை விடாத பழக்கம். அப்புறம் லயிப்பு. இப்போது திஷ்யாவிடம் லயிக்கிற மாதிரி. தின்று தின்று தின்றதையே மீண்டும் தின்கிற வேட்கை மாதிரி.. தாமுவுக்குப் பிடித்த சிக்கன் மாதிரி… தாமுவுக்குப் பிடித்த பிரீதா மாதிரி…
தாமுவுக்கு பிரீதா ஒருத்தி தானா? எத்தனையோ…? மீண்டும் மீண்டும் இந்தப் பெண்களிடம்… அவ்வப்போது ஒவ்வொருத்தியுடன் தாமு எதைத் தேடுகிறான்? என்ன கண்டுபிடிக்கிறான்?
‘சிக்கன்’ மணம் கும்மென்று வந்தது.
போன வாரம் தான்செய்தது ‘டாப்’ என்று தாமு பாராட்டிய ஞாபகம் வந்தது. இன்றைக்கு அப்படி இருக்குமா?
போன வாரத்தின் சுவை… அதற்கொரு மறுபதிப்பு… மீண்டும் ஒரு புதுப்பதிப்பு…
பழக்கம் என்ற பாதையில் மனதனின் மனச் சக்கரம் முன்னும் பின்னும் பின்னும் முன்னும் விடுதலை இல்லாமல் ஓடி அதற்குச் சுகம் என்று அர்த்தம் கற்பித்துக் கொள்கிறதோ!
சுகம்…அது என்னவென்று இன்னும் முழுக்கப் பரிச்சயமாக வில்லை.
கெரஸின் தீர்ந்து வருவதால் ஸ்டவ்வில் ஒலி குறைந்தது. அடுத்த வாரம் காஸ் அடுப்பு வந்து விடுமென்று தாமு சொல்லிக் கொண்டிருந்தான்.
சுகம் என்பது கெரஸின் அடுப்பிலிருந்து காஸ் அடுப்பில் சமைக்கும் மாற்றமா?
சுகம் தெரியவில்லை. துக்கம் தெரிந்தது. பளு தெரிந்தது.
என்ன படித்து என்ன பட்டம் வாங்கி என்ன பயன் என்ற உழற்சியில் நெஞ்சை ஏதோ ஒரு பாறாங்கல் அழுத்திற்று.
ரைஸ் மில்லின் தவிட்டு நெடியிலிருந்து இம்மி இம்மியாக அம்மாவின் நுரையீரல்களுக்குள் இறங்கிக் கொண்டிருந்த வியாதியிலிருந்து அவளுக்கு ஒரு சிறை மீட்சிக்கு வழியில்லை.
ஒண்ட இடம் தந்து உணவளிக்கும் தாமுவுக்கு இன்னும் சோற்றுச் சுமையாயிருப்பதிலிருந்து விடுதலையில்லை.
“ஸார்…ஸார்”
வெளியே ஓர் அதிகாரக் குரல்.
அவன் எழுந்து வருவதற்குள் மீண்டும் ஓர் அவசரம்.
“வீட்லே யாரு?”
சிவா லுங்கியை இறக்கிவிட்டு வெளியே வந்தான் தந்திச் சேவகன் கேசவன்.
“ஹலோ நீங்களா சார்?…இங்கியா இருக்கீங்க?”
சிவா புன்னகையுடன் தலையசைத்தான்.
“போன மாசம் அனுப்பிச்சீங்களே கதை… அது வந்துடுச்சா சார்”
கதையைப் போஸ்ட் செய்யும்போது அவன் பார்த்தான்.
“இன்னும் வரலியே…”
“வந்தா எனக்கு பத்திரிகையைக் கொடுங்க சார்”
“வந்தாதானே… ஓ”
“டெலிகிராம் சார்.”
“பேரு”
“ஜே. தாமோதரன்”
“அவர் வெளியே போயிருக்காரே”
“நீங்க ஸைன் பண்ணி வாங்கிக்குங்க”
சிவா கையெழுத்திட்டான்.
மதன பள்ளியிலிருந்து வந்த தந்தி. தாமுவின் அப்பா அடித்திருக்க வேண்டும்.
எப்போதோ பார்த்த அவர் போட்டோ மனசில் ஒரு ‘ப்ளாஷ்’ அடித்துவிட்டுப் போயிற்று.
இருபுறமும் ஒதுக்கிவிட்ட கிருஷ்ண தேவராயர் மீசை. கண்ணில் இன்னும் ஜமீன் மிடுக்கு. இறுகிய கீழுதட்டில் ராஜரீகம்.
ஜமீன் போய்விட்டது.
ஜமீன் வம்சக் கொடியில் பீட்டர்ஸ் ரோடில் ஆட்டோ ஒர்க்ஷாப் நடத்தும் மெக்கானிக் முளைத்தாயிற்று. இன்னும் மிடுக்கு போகவில்லை.
தர்மராஜ ரெட்டிகாரு உடம்பில் ஓடும் அதே ஜமீன் ரத்தம் தாமுவிடமும் ஓடுகிறது. அதே ராஜரீகம்.
நான் தான் என் ஹீரோ. இதே செய்திதான் அவனிடமும் ஓடுகிறது.
தாமு மதனபள்ளி மண்ணை உதறி எட்டு வருஷமாகப் போகிறது. நூற்றுப் பதினெட்டு ஏக்கர் நிலத்தை தந்தை சொன்ன ஒரு சொல்லுக்காக உதறிவிட்டு சென்னைக்கு வந்தவன் தாமு.
ராயப்பேட்டையில் மட்டுமல்ல, சென்னையில் பல பகுதிகளில் காரும் ஸ்கூட்டரும் வைத்திருப்பவர்கள் தாமுவுக்குப் புன்னகையுடன் கை உயர்த்துகிறார்கள்.
அவனது ஒர்க்ஷாப்பில் கார்களும் வேன்களும் கியூவிலே காத்திருக்கின்றன.
சிவா வந்த எட்டு மாதத்தில் எத்தனையோ மதன பள்ளிக்காரர்கள் தாமுவைத் தேடி வந்து போயினர். தர்மராஜ ரெட்டிகாரு வந்ததில்லை.
மகனின் பாதை சரியாயிருக்கும் என்ற எண்ணமா? அல்லது வெறும் மோட்டார் மெக்கானிக் என்ற இளக்காரமோ?
எவனானால் என்ன?
வெற்றிவேல் பாடுவது மாதிரி ஆண்பிள்ளைச் சிங்கம்.
மரியாதை அவனைத் தேடிவரும். பிரீதா மாதரி… பல பெண்கள் மாதிரி.
பிரீதாவும் தாமுவும்…
ஒழுக்கத்தின் எந்த அளவு கோலை வைத்து அவர்கள் உறவை அளப்பது?
அவன் அங்கே ராத்தங்குகிறான்… அவர்கள் இருவரும் விஸ்கி குடிக்கிறார்கள்.
இப்படி ஒருத்தியல்ல பலர் உண்டு என்று தர்மராஜ ரெட்டிகாருவுக்குத் தெரியுமா?
இந்த தந்தி என்ன சொல்ல வந்திருக்கிறது?
தொடரும்
விவேக் ரவிச்சந்திரன்

உயிரே என்னை நீ தாங்கினாய்..
உலகை எனக்கு நீ காட்டினாய்
உனக்கு நான் என்ன தருவேனோ…
அம்மா அம்மா என் ஆசை அம்மா..
அம்மா அம்மா என் ஆசை அம்மா..
அன்பின் உருவம் நீ ஆகினாய்..
அடைக்கலம் தருமோர் குடையாகினாய்
அதிசயம் நீ இன்றி காண்பேனோ….
ஆலயம் வாழும் தெய்வமுண்டோ?
அம்மா அம்மா என் ஆசை அம்மா..
அம்மா அம்மா என் ஆசை அம்மா..
தொப்புள் கொடி சொந்தமிது…
தொட்டில்முதல் பந்தமிது..
உரைத்திட மொழிகள் இருந்தாலும் – நான்
உரைத்திட்ட முதல் வார்த்தை…
அம்மா அம்மா
தாய் மடி மெத்தையது
தலை சாய்க்கும் சொர்க்கமது
உறங்கிட உலகே இருந்தாலும் – என்
உலகமே நீ தான்
அம்மா அம்மா
விவேக் ரவிச்சந்திரன்
சென்னை
நாகினி
நேர்படப் பேசி
நேர்படச் செயலாற்றி
நேர்பட நடந்தால்
நேர்படமாகும் நித்தியவாழ்க்கை
கூர் புத்தியைக்
கூர் நல்நூலால்
கூர் ஆழ்படிப்பால்
கூர் வழிநடத்தலே உயர்வாழ்க்கை
பார் விளக்கும் பண்பை
பார் போற்றும் தெம்பை
பார் வணங்கும் நல்லோரைப்
பார் தொழப்பற்றுதலே அருள்வாழ்க்கை
நாள் கோள் தாள் ஒன்றும் குறைதரா
கோள் மூட்டும் தீப்பண்பே
நாள் முழுதும் துயர்தரும்
தாள் எனவுணர்தலே சத்தியவாழ்க்கை..!!
… நாகினி
ஆர்.எஸ். கலா
வெளி நாட்டு வாழ்க்கை
விவகாரம் நிறைந்ததடா….
விட்டெறியும் காசை
நோக்கி செல்லும்
போது விட்டுச் செல்வது
உறவை மட்டும் இல்லையடா….
உணர்வு உணர்ச்சி ஆசை
அதனுடன் சேர்த்து நாம்
நம் நாடு உயிருடன்
திரும்புவோம் என்ற நம்பிக்கை
இத்தனையும் விட்டுச்சென்றால்
கிடைப்பது வெளிநாட்டு
வாழ்க்கை………
வாழ்க்கை அது என்ன வாழ்கையடா
வாய்திறந்து விவாதிக்க முடியாத
ஓட்டமடா…….
உட்கார முடியாத உழைப்படா
உறவுக்கு மடல் போட முடியாத
பணிச்சுமையடா……
விட்ட காசை எடுக்க வேண்டும்
என்ற வேகமடா அடகு வைத்த
பத்திரம் மீட்ட வேண்டும் என்ற
இலட்சியமடா……
கட்டிய மனைவியைக் கனவில்
கட்டி அணைத்து பாசமான
மகளுக்கு நினைவில் முத்தம்
கொடுத்து காச்சி மூச்சி என்று
கத்தும் சத்தங்களுடன் கண்
மூடி தூங்கும் நிலைமையடா….
இளமை ஆசைகளை பலியாக்கி
இளமையை இரையாக்கி
இன்பத்தைக் கொலை செய்து
துன்பத்தில் துவண்டு எடுப்பது
தான் வெளிநாட்டுப் பணமடா……
விபத்து என்று ஒன்று நடந்து
இறப்பை நோக்கினால் இறுதிக்
கடமையும் நமக்கு சரிவரக் கிடைப்பது
இல்லையடா…..
தொட்டு உடலை துடைக்க
உறவுகள் பக்கம் இல்லையடா
கொட்டி விடுவான் அரபி ஏதோ
ஒரு திரவியத்தை மூடி விடுவான்
பெட்டியை…….
போட்டு விடுவான் பெட்டியை
பொதியோடு பொதியாக மாதங்கள்
பல கடந்து நாடு வந்து சேரும் உடலடா…..
உடல் அடக்கம் இன்றி கடைமைக்
காரியங்களும் கைவிடப்பட்டு
உறவுகள் கவலையில் இருந்து
விடுபட்ட பின்னே நம் உடல்
கிடைப்பது திண்ணமடா….
மனைவி மக்கள் புகைப்படம்
பார்க்க ஆசை என்று அனுப்புங்கள்
என்று கூறவும் தைரியம் இல்லையடா
பாவிகள் சிலர் கையில் சிக்கினால்
என் மனைவி மானம் புகையாக
போகுமடா……
ஊரார் கண்ணுக்கு தெரிவது
எங்கள் ஊதியம்
ஓட்டு வீடு கிடைத்தமையால்
உறவுக்கு குதூகலம்
உண்மை நிலவரத்தை மறைத்து
உள்ளுக்குள் அழுது உடலை
வருத்தியே வாழ்வது எங்கள்
வெளி நாட்டு வாழ்க்கையடா…..
திணார் டாலர் ரியால்
கொடுக்கும் வலி கொஞ்சம்
இல்லையடா சொல்லவே வார்த்தை
நிறையவே உள்ளதடா அதுக்கு
எல்லையே இல்லையடா…….
கவிக்குயில் ஆர் எஸ் கலா
இலங்கை தளவாய்
-திருக்குவளை மீ.லதா
பால் நிலவாய் வண்ணம் கொண்டேன்
பருவம் மாறக் கனவு கண்டேன்
கார்முகில் வண்ணன் கரம் பிடித்தேன்
காவிரி நதியில் சங்கமித்தேன்
யுத்த பூமியாய் மாறி நிற்கப்
பூத்ததோ புதிய பூ ஒன்று!
புன்னகை சிந்திட நிற்குது இங்கு
கவலை இல்லாது வாழ்ந்திட்டேன்
காலம் முழுவதும் மகிழ்ந்திட்டேன்
காலன் வந்ததும் கலங்கிட்டேன்
வாழ்ந்த வாழ்க்கை நினைத்திட்டேன்
இதுவே போதுமென்று அமைதியுற்றேன்
கல்லறை தனிலே உறங்குகின்றேன்!
ஆர் எஸ் கலா

====================
உறவு என்று நாம்
உரிமையாக வில்லை
பந்தம் என்னும்
சொந்தத்தில் பலமாக
இணைந்தோம்…!!!
சொந்தத்தை
வளர்த்தோம்
பிரியாமல்
வாழ்வோம்..!!
உணர்வாலும்
உணர்ச்சியாலும்
அன்பாலும்
இன்ப துன்பத்திலும்
உதவுவோம் பக்க பலமான
உறவு என்று உலகுக்கு
உணர்த்துவோம்…!!!
தோள் கொடுப்பேம்
இறுதி ஊர்வலத்தில்
மட்டும் இல்லை..!!
சோகம் கொண்டு
துவண்டு விடும்
வேளையிலும்..!!!
நாடு விட்டு நாடு
சென்றாலும்
நாகரீக வாழ்வை
நோக்கிச்
சென்றாலும்.
நாட்டுப் பற்றை
நாம் மறக்காது
நினைத்திருப்போம்..!!
மழலைப் பருவ
நட்பையும்
தெப்பக் குளக்
குளியலையும்
மனதில் ஓட
விட்டு ரசித்துப்
பார்ப்போம்..!!
உடல் பிரிந்து
தொலை தூரம்
வந்த பின்னும்
உணர்வால்
நட்புக்களைப்
பிரியாமல்
வாழ்வோம்..!!
பிரிவு என்பது
வாழ்வில் ஒரு
அங்கம் அதை
பட்டா போட்டு
அமர விடாமல்
விரட்டவே மனதில்
உள்ள அன்பு என்னும்
அதிகாரியால் மட்டுமே
முடியும்..!!
பிரிவு வரட்டும்
நாம் பிரியாமல்
வாழ்வோம்
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை….
சொந்த பந்தங்கள்
நட்புக்களையும்
நினைவாலும்
உணர்வாலும்
உள்ளத்தாலும்
பிரியாமலே
வாழ்வோம் …!!!!
கவிக்குயில் ஆர் எஸ் கலா
மலேசியா
— கவிஞர் காவிரிமைந்தன்.
மலரிதழ் திறப்பு எப்போது தெரியுமா? மனிதர்கள் கண்டதுண்டா? இயற்கையின் நிகழ்வினில் எல்லாம்.. எப்போதும் ஒரு ரகசியப் பதிவாகவே இருக்கும்! அவையவை தத்தம் இயல்பினில் இயங்கிக் கொண்டிருக்க.. கவிஞர்களின் கற்பனை வலை விரிப்பில் மட்டும் கருத்து முத்துக்கள் – அந்த ரகசியங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கும்!
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
‘மன்னிப்பு’ திரைப்படத்திற்காக ஒரு மந்தகாசப் பாடல் ஒன்றை கவிஞர் வாலி அவர்கள் தீட்டியிருக்கிறார். அந்த மாலைப் பொழுதில் மங்கிய நல் நிலவொளியில் காதலர்கள் சந்திக்கின்றனர்! முத்தமிழும் மோகனமும் கூடிநிற்க.. காதல் பாமாலை சூடுகின்றனர்!
நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?
அழகிய தமிழ்மொழியில் எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதைக் காணுங்கள்!
முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?
அமரர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களின் இசையிலே டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் இழைந்தோடும் இனிய நாதமிது! இதுபோன்ற பாடல்களை ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஆனந்த ராகமிது ஆரம்பமாகிறது! அணைக்கின்ற வேளையிது.. அனுபவிப்பெல்லாம் அனுபல்லவியாகிறது! கவிதை மழை பொழிகிறது! இசையருவி வழிகிறது! இதயமது நனைகிறது! இன்னுமென்ன சொல்ல வேண்டும் இந்தப் பாடல்பற்றி!!
மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் நாட்டியச் செல்வி வெண்ணிற ஆடை நிர்மலாவும் திரையில்…
http://youtu.be/d3WYzyc_8ME
காணொளி: https://www.youtube.com/watch?v=d3WYzyc_8ME&spfreload=10
பாடல்: வெண்ணிலா வானில் வரும் வேளையில்
திரைப்படம்: மன்னிப்பு (1969)
இயற்றியவர்: வாலி
இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
_______________________________________________________________
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ………………..
நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
நாலு வித குணமிருக்கும் அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை அனல் போல் கொதிப்பதெது?
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
வான வில்லின் நிறமெடுத்து மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால் நான் வரைந்த கோலமெது?
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
கன்னி என்தன் வடிவமது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
காமன் கை வில்லெடுத்து அஞ்சு விதப் பூத் தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே போர் தொடுக்கும் நேரமெது?
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
மஞ்சள் வெயில் மாலை அது
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
முத்துச் சிப்பி வாய் திறக்க மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்?
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ………………..
முத்து ஒன்று பிறந்து வரும்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில் எதையெதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்