— எல். கார்த்திக்.

பார்த்துப் பல வருடங்கள் ஆகி இருந்தாலும் அவள் கண்கள் இன்னும் மாறவில்லை என்றே அவனுக்குத் தோன்றியது. இன்னுமும் அதே கூர்மையான பார்வை. பாரதி பாடியது போன்ற ஒளிப் படைத்தக் கண் அவளுடையது என்றே ராஜா கருதினான்.

மெல்ல அவன் நினைவுகள் கல்லூரி முதல் வருடத்திற்குச் சென்றது. முதல் முதலாய் அவளைப் பார்த்தது அன்று அவள் அணிந்திருந்த சிகப்பு தாவணி இன்னும் அவன் கண்களை விட்டு அகலவில்லை. தூர இருந்து பார்த்ததோடு சரி பேசவெல்லாம் முயலவில்லை. கல்லூரியின் கட்டுப்பாடு அவனை பயமுறுத்தியது.

சில சமயம் பத்தாவதில் கூடப் படித்த அவனது ஒருதலைக் காதல் நாயகி உமாவின் முட்டைக் கண்களை சுமதியின் சிறிய கண்களோடு ஒப்பிட்டிருக்கிறான். ஒருதலைக் காதல் என்றால் உமாவிற்கும் தெரியாத காதல் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். இப்பொழுது கல்லூரிக்கு வந்தவுடன் மனம் குரங்காய் தாவத் துடித்தது.

சுமதி பேரழகி என்று சொல்ல இயலாது என்றாலும் அவள் வகுப்பில் இருந்தவர்களில் அவள் பேரழகி என்றே சொல்ல வேண்டும். கூர்மையான பார்வை வீசும் கண்கள், அந்தக் கண்களில் பூசிய அஞ்சனம் , கண்ணியமான உடை அதை அணியும் விதம், பேசும் பொழுது காதில் ஆடும் ஜிமுக்கி, எப்பொழுதும் எதிராளியை நேரடியாய் கண்ணில் பார்த்து பேசும் தைரியம் இதெல்லாம் அவனைக் கவர்ந்தது. அனைவற்றிற்கும் மேல், வகுப்பில் இருந்த ஆண்களில் இவனைத் தவிர அவள் வேறு யாரிடமும் பேசாதது அவனுக்குத் தைரியம் அளித்தாலும் பயமும் கூடவே இருந்தது. உன்னிடம் நட்பாய் பழகினேன் இப்படி செய்து விட்டாயே இப்படி கேட்டுவிட்டாயே என சொன்னால் என்ன செய்வது என மனதிற்குள் போட்டுத் தன் காதலை புதைத்து விட்டான். மாதங்கள் செல்ல, அவர்கள் பழக்கம் அதிகரித்தது. வீட்டிற்கு போன் செய்யும் அளவிற்கு பழக்கம் அதிகரிக்க அவர்கள் நட்பு வட்டங்களில் வதந்தி புகையத் துவங்கியது.

சுமதியும் அதை மறுக்க, ராஜா மறுக்கத் துவங்கினான். மெலிதாய் விழுந்த விரிசல் பெரிதாக , பார்வை மட்டுமே என்றாகியது. இரண்டாமாண்டில் துவங்கிய விரிசல் இறுதி வரை நீண்டது.

இன்றும் கல்லூரி இறுதி நாள் அவன் நினைவில் பசுமையாய் இருந்தது. இன்று அவளிடம் கேட்டுவிடலாம் என்றெண்ணினான். மற்றவர் அனைவரும் சென்றுவிட அவளைத் தடுத்தான். வெளியே செல்ல எத்தனித்தவள் டெஸ்கில் சாய்ந்து நிற்க, அவளெதிரே ராஜா. அவனை விட உயரம் குறைவால் அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே நின்றாள்.

“ எனக்கு இன்னிக்குத் தெரிஞ்சாகனும் “

“என்ன ?”

“ உண்மையை சொல்லு. அது உண்மைதானே ?”

“ இன்னிக்கு கேட்டு தெரிஞ்சிகிட்டு என்னாகப் போகுது ? இனிமே தெரிஞ்சு எந்த உபயோகமும் இல்லை “.

மின்னலாய் சொன்னவள் அவனைத் தள்ளிவிட்டு வெளியேறினாள். அன்றுப் பார்த்தவளை ஆறு வருடம் கழித்து நேற்றுதான் சந்தித்தான். இடையில் இவனுக்குக் கல்யாணம் ஆகி, முதல் பிரசவத்திற்கு இப்பொழுது மனைவி ஊருக்கு சென்றிருந்தாள். நண்பர்கள் மூலம் இவன் விலாசம் பெற்று திருமணத்திற்கு அழைக்க வந்து சென்றாள் .

இன்று வரை அவனுடைய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

 

2 thoughts on “நட்பா காதலா ?

 1. “ இன்னிக்கு கேட்டு தெரிஞ்சிகிட்டு என்னாகப் போகுது ? இனிமே தெரிஞ்சு எந்த உபயோகமும் இல்லை “.

  மின்னலாய் சொன்னவள் அவனைத் தள்ளிவிட்டு வெளியேறினாள். அன்றுப் பார்த்தவளை ஆறு வருடம் கழித்து நேற்றுதான் சந்தித்தான். இடையில் இவனுக்குக் கல்யாணம் ஆகி, முதல் பிரசவத்திற்கு இப்பொழுது மனைவி ஊருக்கு சென்றிருந்தாள். நண்பர்கள் மூலம் இவன் விலாசம் பெற்று திருமணத்திற்கு அழைக்க வந்து சென்றாள் .

  இன்று வரை அவனுடைய கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

  ஒரு வேளை  எனக்கு புரியவில்லையா?

  அல்லது  இன்னமும் தெளிவாக எழுதியிருக்கலாமோ?

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க