மீ.விசுவநாதன்

amma
உயிருள் உயிரைக் காத்து
ஒருநாள் வெளியில் விட்டு
பயிலும் பாச மெல்லாம்
பாலுடன் ஊட்டி வந்து
வெயிலும் மழைக்கு முள்ள
வேற்றுமை உணர்வு காட்டிப்
பயிரைப் பசுமை யாக்கிப்
பருவத்தில் நடக்க விட்டாள் !

விட்ட தொரு வேகம்
விளக்க மேதும் இன்றிக்
கட்டை இதுசுகம் தேடிக்
கட்ட றுந்துபோய்த் தானே
தொட்ட தோபல துன்பம் !
சூழ்ந்துள கூட்ட மெல்லாம்
விட்டு வெகுதூர மோட
விலகா தென்னரு கிலே

பொட்டாகப் பொலிந்து நிற்பாள்!
பூமியின் புழுதிக் காற்றை
சிட்டுநான் சுவாசித் தாலோ
சிந்தையில் நொந்து போவாள் !
கெட்டு நான்போன போதும்
கீழ்மையில் கிழிந்த போதும்
கொட்டிய தன்கண்ணீ ராலும்
குழந்தை எனைவாழ்த்தி நாளே !

திட்டினேன் ! கோபப்புய லாகப்
பேசியும் தீர்த்தேன் ! நாவால்
சுட்டேன் ! அன்பு கூறும்
தூய மொழியெ லாமும்
தட்டிக் கழித்தேன் ! வாழ்வில்
தடம்புரண் தழுத என்னைக்
கட்டி அணைத்து அன்பு
காட்டிய கைகளைப் பார்த்து

வெட்கிப் போனேன் ! தீது
பேசி வேட்டை நாயாய்க்
கொட்டிய வார்த்தை எல்லாம்
குழந்தையின் மழலை என்றாள் !
மட்டிலா மனதின் ஊற்று
மண்விண் பிரவாக மாகத்
தட்டின்றிச் செழிப்ப தென்றால்
அம்மம்மா அனைத்தும் நீயே !

(20.09.1982)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *