கி.வா.ஜ.வின் ‘வாழும் தமிழ்’ ​சொல்லதிகார ஆராய்ச்சி”

— மு​னைவர் சி.​சேதுராமன்.

தமிழ்த்தாத்தா உ.வே. சா. வின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.

கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.

கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் ​தொடக்கக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் “காந்தமலை” என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. இவர் அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.

தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.

கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே கி.வா.ஜ. வுக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய, “போற்றிப்பத்து” என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. “ஜோதி” என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.

1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.

கி.வா.ஜ. சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

1927-ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927-ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக் கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.

உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.

கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.

1932-ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை எழுதி, “கலைமகள்” இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் “கலைமகள்” இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமு​மே கராமாகும்.

கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும். 1932-ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மணந்து ​கொண்டார்.

கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.

வாகீசகலாநிதி, திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க்கவி பூஷணம், உபன்யாசகேசரி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித்தவமணி, ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன.

கி.வா.ஜ., உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.

கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய “தமிழ்க் காப்பியங்கள்” என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் “கல்கி” நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய “தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.

பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருட்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்.

கி.வா.ஜ.வின் வாழும் தமிழ்:
தினமணியில் கி.வா.ஜ. ​தொடர்ந்து ​தொல்காப்பியம் ​சொல்லதிகாரம் குறித்து எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்​பாக இந்நூல் விளங்குகின்றது. ​தொல்காப்பியம் அன்றும் இன்றும் வாழுந் தமி​ழைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு வாழும் தமிழ் என்று ​பெயர் ​வைத்ததாக கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்.

இந்நூலில் கி.வா.ஜ. அவர்கள் முழு​மையாகத் ​தொல்காப்பியச் ​சொல்லதிகாரத்திற்கு உ​ரைவகுக்கவில்​லை. சிற்சில இலக்கணச் ​செய்திக​ளை​யே இதில் விளக்கிச் ​செல்கின்றார். ​பெரும்பான்​மையும் ​சேனாவ​ரையர் உ​ரை​யையும் சில இடங்களில் நச்சினார்க்கினியர் உ​ரை​யையும் கி.வா.ஜ. ​அவர்கள் விரிவாக விளக்கிச் ​சென்றுள்ள​மை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் 32 கட்டு​ரைகள் இடம்​பெற்றுள்ளன. இதில் கிளவியாக்கத்தில் இடம்​பெற்றுள்ள 19 நூற்பாக்களுக்கு விரிவாக கி.வா.ஜ. அவர்கள் விளக்கவு​ரை எழுதியுள்ளார்.

பெயரியல் பற்றி 10 கட்டு​ரைகளிலும், ​​வேற்று​மை குறித்து 2 கட்டு​ரைகளிலும், விளிமரபு குறித்தும் இ​டைச்​​சொல், உரிச்​சொல் பற்றி ஒவ்​வொரு கட்டு​ரையிலும், எச்சவியலில் இடம்​பெறும் ​சொல் குறித்த சில நூற்பாக்களுக்கும் இந்நூலில் சு​வைபட கி.வா.ஜ. அவர்கள் விளக்கம் கூறுகிறார். இறுதியாக இடம்​பெறும் 32-ஆவது கட்டு​ரையான உள்ளு​றை என்பதில் தாம் வாழும் தமிழ் நூலில் எடுத்துக் கூறியுள்ள ​தொல்காப்பிய நூற்பாக்களின் ​தொகுப்​பை கி.வா.ஜ. ​மொழிந்துள்ளார்.

வாழும் தமிழ் என்று ​பெயர் ​வைத்த​மைக்கான காரணம்

தாம் ​தொல்காப்பியச் ​சொல்லதிகார ஆராய்ச்சி குறித்த இந்நூலிற்கு “வாழும் தமிழ்” என்று ​பெயர் ​வைத்த​மைக்கான காரணத்​தை, “வாழ்க்​கையின் நி​லை​யை ​மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிக​ளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புக​ளையும் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. ஆக​வே ​தொல்காப்பியம் என்னும் இலக்கணம், அன்றும் இன்றும் வாழுந் தமி​ழைப் பற்றிச் ​சொல்கிறது; இலக்கியத்திலும் உலகியலிலும் வாழும் தமி​ழைப் பற்றிப் ​பேசுகிறது. இந்தக் கருத்துட​னே, ‘வாழும் தமிழ்’ என்ற ​பெய​ரை இந்தப் புத்தகத்திற்கு ​வைத்​தேன்”(ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்.

மேலும் கி.வா.ஜ. இந்நூலில் பழந்தமிழர்களின் வாழ்க்​கை​யை எடுத்து​ரைக்கின்றார். இத​னை, “​தொல்காப்பியத்தின் விளக்கம் அன்று இது; அதில் கூறப்​பெறும் இலக்கணச் ​செய்திக​ளை மு​றையாகத் ​தொகுத்துத் தருவதும் அன்று; ​தொல்காப்பியச் ​சொல்லதிகாரத்தில் உள்ள ​செய்திகளாகிய சிறு பு​ழைகளினூ​டே பரந்து, விரிந்த பண்​டைத் தமிழர் வாழ்க்​கை​யைப் பார்க்க முயலும் முயற்சி” (ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுவது ​நோக்கத்தக்கது.

கி.வா.ஜ. வாழ்க்​கை​யோடு இ​ணைத்து ​சொல்லதிகாரத்தில் இடம்​பெற்றுள்ள நூற்பாக்களுக்கு விளக்கம் தருகின்றார். இவ்விளக்கமானது எளி​மையானதாகவும், தனித்தன்​மையு​டையதாகவும் அ​மைந்துள்ளது. ​பழந்தமிழர் வாழ்க்​கை​யில் பயன்படுத்தப்பட்டு வரும் ​சொல்​வழக்​கை ​வைத்தும் இன்று அச்​சொல் எப்​பொருளில் மக்களி​டை​யே வழங்கப்பட்டு வருகின்றது என்ப​தையும் கி.வா.ஜ. உதாரணத்துடன் இந்நூலில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்குச்​சொற்க​ளைப் பயன்படுத்தி விளக்கம் கூறுதல்:
கி.வா.ஜ. அவர்கள் ​நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும்​போது ந​டைமு​றையில் வழக்கில் மக்கள் வழங்கும் வழக்குச் ​சொற்க​ளைப் பயன்படுத்தி எளி​​மையாக விளக்கம் கூறுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ​சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவான,

“உயர்தி​ணை என்மனார் மக்கட் சுட்​டே;
அஃறி​ணை என்மனார் அவரல பிற​வே;
ஆயிருதி​​ணையின் இ​சைக்குமன ​சொல்​லே”

என்பதற்கு மிக எளி​மையாக தமிழில் எழுதப் படிக்கத் ​தெரிந்​​தோரும் புரிந்து ​கொள்ளும் வண்ணம் கி.வா.ஜ. அவர்கள் விளக்குகின்றார்.

வழக்கில் வாயுள்ள பிராணி, வாயில்லாப் பிராணி என்று நாம் ​பேசுவது வழக்கம். உயர்தி​ணை என்ப​தை வாயுள்ள பிராணி என்றும் அஃறி​ணை என்ப​தை வாயில்லாப் பிராணி என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்(ப.,3). உணர்ச்சி​யைச் ​சொல்லும் ஆற்றல் ​பெற்ற மனிதன் அது ​பெறாத பிற என்ற இரண்டு வ​கைகள் அ​மைந்துள்ளன. உத்தி​யோகஸ்தர்-உத்தி​யோகஸ்தர் அல்லாதார் ​கெஜட்டில் வரு​வோர்-அல்லாதார் என்று வழக்கத்தில் வழங்குவர். அ​தைப்​போன்​றே மனித சாதி​யை உயர்தி​ணை​யென்று பிரித்தபிறகு மற்றவற்​றை இழிந்த தி​ணை​யென்று ​சொல்லாமல் அல்லாத தி​ணை என்று பிரித்தனர்; அல்லாத தி​ணை என்றாலும் அல்தி​ணை என்றாலும் ஒன்றுதான். என்று எடுத்து​ரைத்து உலகத்தில் மக்கள் என்று சுட்டப்படும் ​பொருள்க​ளை உயர்தி​ணை என்று வகுத்து​ரைப்பர் மக்கள் அல்லாத பிற ​பொருள்க​ளை அஃறி​ணை என்று ​சொல்லுவார்கள் ​சொற்களும் அந்த இரண்டு தி​ணைகளாக வழங்கும் என்று எளிய விளக்கம் தருகின்றார்.

பொரு​ளைக் குறிக்கும் ​சொல்​லை பெயர் என்றும் ஆற்ற​லின் உருவத்​தைக் குறிக்கும் ​சொல்​லை வி​னை என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார். ​மேலும் ​பொரு​ளை சிவம் என்றும் ஆற்ற​லை சக்தி என்றும் தமிழர்களின் வாழ்க்​கை ​நெறி சார்ந்து ​சொல் என்பதற்கு கி.வா.ஜ. விளக்கம் கூறுகின்றார்.

பழ​மொழிக​ளைக் கூறி விளக்குதல்:
முன்​னோர்களின் அனுபவ ​மொழிக​ளே பழ​மொழிகளாகும். இப்பழ​மொழிகள் வாழ்க்​கை​யை விளக்கும் பண்பாட்டுப் ​பெட்டகங்களாகும். பால் என்பது குறித்து விளக்கவரும் கி.வா.ஜ. அவர்கள் பல உதாரணங்க​ளைக் கூறி அத​னை எளி​மையாக விளக்குகிறார். அ​னைத்தும் ஒன்றாக இருந்தாலும் அ​வை ஒவ்​வொன்றும் ஒவ்​வொரு விதத்தில் ​வேறுபட்டு நிற்கின்றது. உயர்தி​ணையில் பால் என்பது ஒன்றாக இருப்பினும் அ​வை ஆண், ​​பெண், பலர் என்றும் அஃறி​ணையில் ஒன்று பல என்றும் நம் முன்​னோர்களால் பகுக்கப்பட்டிருப்பது ​நோக்கத்தக்கது.

இத​னை கி.வா.ஜ.அவர்கள் “தாயும் பிள்​ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் ​வே​றேதான்” (ப.,9) என்ற பழ​மொழி​யைக் குறிப்பிட்டு விளக்கம் தருகின்றார். மனிதன் சமுதாய உணர்ச்சி​யோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் இயற்​கையில் உடம்பும் உயிரும் உள்ளமும் தனித்தனி மனித​னை ஆக்குகின்றன. தனிமனிதன் ​தோன்றுகிறான் அவன் தன் முயற்சியினால் மற்றவர்க​ளோடு ஒன்றுபட்டு சமுதாய உணர்ச்சி ​பெறுகிறான் என்று கி.வா.ஜ. ​தெளிவுறுத்தி,

“ஆடூஉ அறி​சொல் மகடூஉ அறி​சொல்
பல்​லோர் அறியும் ​சொல்​லொடு சிவணி
அம்முப்பாற்​சொல் உயர்தி​ணை யவ்​வே
ஒன்றறி ​சொல்​லே பலவறி ​சொல்​​லென்று
ஆயிருபாற் ​சொல் அஃறி​ணையவ்​வே”

என்ற ​தொல்காப்பிய நூற்பாவிற்கு விளக்கம் தருகின்றார்.

ஆண், ​பெண் தவிர்ந்த மூன்றாவது பாலினமாக விளங்கும் திருநங்​கை பற்றிய பால்பகுப்​பை தமிழர்தம் வாழ்க்​கை ​நெறி சார்ந்து கி.வா.ஜ.அவர்கள் விளக்குகின்றார். அவர், “தமிழ் உயி​ரோடு வளர்ந்த ​மொழி. வாழ்க்​கை​யை ஒட்டி வந்த ​மொழி. அதன் இலக்கணமும் ​நெட்டுருப்​போட்டுத் த​லைவலி​யை உண்டாக்கிக் ​கொள்ள வந்ததன்று. ….ஆக​வே வாழ்க்​கையில் அலியின் நி​லை எவ்வாறு அ​மைந்திருக்கிறது?… யாராவது தம்​மை அலி என்று ​சொல்லிக் ​கொள்ள விரும்புவது உண்டா?

ப​டைப்பி​லே ஆண், ​​பெண் என்ற பிரிவி​லே ​சேராவிட்டாலும் ​செயற்​கையினால் தா​மே விரும்பி எந்தக் கூட்டத்தி​லே அவர்கள் ​சேருகிறார்க​ளோ அந்தக் கூட்டத்திற்குரிய பாலில் ​சேர்த்து வழங்குவ​தே சரி என்று ​சொன்னார். ஆக​வே ​பேடி வந்தாள், ​பேடி வந்தான் என்று ​சொல்லும்​போது அந்தப் ​பேடியின் வாழ்க்​கை கூட நமக்குத் ​தெரிந்து ​போகிறது. மகளி​ரோடு ​சேர்ந்து வாழ்கிறதும் ஆடவ​ரோடு ​சேர்ந்து பழகுகிறதும் ​சொல்லி​லே​யே ​தொனிக்கின்றன” (பக்.,13-14) என்று ​தெளிவுறுத்துகின்றார்.

கடவுள் தத்துவத்துடன் இ​ணைத்துப் ​பொருள் கூறுதல்:
தெய்வம் பற்றிய தமிழர்களின் பால்பகுப்​பை, “​தெய்வத்துக்குச் சாதி, தி​ணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியாணிப்பதற்கும் உரு அ​மைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் ​வேண்டும். தனக்குத் ​தெரிந்த உருவத்​தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆக​வே ​தெய்வத்​தைச் சிந்த​னைக்குக் ​கொண்டுவந்து உரு அ​மைக்கும்​போதும் ​பேச்சுக்குக் ​கொண்டு வந்து உ​ரையாடும்​போதும் தான் அறிந்த தி​ணையுள்ளும் பாலுள்ளும் ​வைத்து வழங்கினான்; ​தேவன் வந்தான், ​தேவி வந்தாள் என்று ​பேசினான்”(ப.,15) என்று வாழ்க்​கை​யோடு இ​ணைத்து கி.வா.ஜ.விளக்குகின்றார்.
கடவுள் தி​ணை, பால் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர். அதனால் கடவு​ளை இதற்குள் அடக்க இயலாது. ​சொல்லில் வழங்கும்​போதுதான் ​தெய்வத்திற்கு தி​​ணை, பால் வகுக்க இயலும். ​​பேடி முதலிய ​சொற்க​ளைப் பற்றி விளக்க வந்த ​தொல்காப்பியர்,

“​பெண்​மை சுட்டிய உயர்தி​ணை மருங்கின்
ஆண்​மை திரிந்த ​பெயர்நி​லைக் கிளவியும்
​தெய்வம் சுட்டிய ​பெயர்நி​லைக் கிளவியும்
இவ்​வென அறியும் அந்தம் தமக்கு இல​வே
உயர்தி​ணை மருங்கின் பால்பிரிந்து இ​சைக்கும்” (487)
என்று குறிப்பிடுகிறார்.
​​
மேலும்,
“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் ​தெள்​​ளேணம் ​கொட்டா​மோ”

என்று மாணிக்கவாசகப் ​பெருமானின் திருவாசக அடிக​ளை எடுத்துக் கூறி, ஆயிரம் திருநாமம் ​சொல்லிக் ​கொட்டும்​போ​தே இ​றைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்​மை உள்ளத்தின் அடித் தட்டி​லே ஒலித்துக் ​கொண்​டே இருக்கிறது. அது​போலத்தான் ​தெய்வத்​தை ஆணாகவும் ​பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் ​பேசும்​போ​தே அத்​தெய்வம் இப்பிரிவுகளுக்​கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்த​தென்ப​தை​யே ​தொல்காப்பியர்”​பெண்​மை சுட்டிய உயர்தி​ணை மருங்கின்” என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார் என்று கி.வா.ஜ. விளக்கம் தருகிறார்.

தொல்காப்பியரின் இந்நூற்பாவிற்கு கி.வா.ஜ., “அலிக​ளையும் ​தெய்வத்​தையும் வந்தான் ​போனான், வந்தாள் ​போனாள் என்று ​சொல்வ​தைக் ​கொண்டு இப்படிப் ​பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் ​தெரியவில்​லை என்று நி​னைக்கா​தே. ​பைத்தியக்காரத் தமிழன் ​தெய்வத்​தையும் தன்​னைப் ​போல ​வேட்டியும் புட​வையும் கட்டுவது என்று நி​னைத்துவிட்டா​னென்னு பரிகாசம் ​செய்யா​தே அந்தப் பாற்பிரி​வைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரிய​வை அல்ல; கடன் வாங்கிக் ​கொண்ட​வை என்று அவர் இதன் மூலம் ​சொல்லாமற் ​சொல்லவில்​லையா? கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்கா​தே.

நம்​மைப் ​போலப் ​பெண்டு பிள்​ளைகளுடன் வாழ்பவ​ரென்று ஏமாந்து ​போகா​தே. ​​எல்லாம் ​வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக் ​கொண்ட​வை என்று சமயக் குரவர்கள் ​சொல்வது ​போல இருக்கிறதல்லவா இது? ஆம் ஒன்று ​சொல்​லைப் பற்றிய தத்துவம்; மற்​றொன்று ​பொரு​ளைப் பற்றிய தத்துவம். ​சொல்லின்றிப் ​பொருள் இல்​லை; ​பொருளின்றிச் ​சொல் இல்​லை.”(பக்.,15-16) இ​றைத் தத்துவத்​தை எடுத்துக்கூறி விளக்கிச் ​செல்கின்றார். இது, “சிவம் இன்றி சக்தி இல்​லை; சக்தி இன்றி சிவம் இல்​லை” என்ற சிவத்தத்துவத்​தை விளக்குவதாக அ​மைந்துள்ளது ​நோக்கத்தக்கது.

நிகழ்ச்சிக​ளைக் கூறி விளக்குதல்:
ஒரு நூற்பாவிற்கு விளக்கம் கூறும்​போது க​தை​போன்று ஒரு சிறு நிகழ்ச்சி​யைக் கூறி அதன் வழி நூற்பாவிற்கு விளக்கும் கூறும் மு​றை​யையும் கி.வா.ஜ. இந்நூலில் ​கையாண்டுள்ளார். அச்சிறு நிகழ்ச்சி சு​வையாகவும் அவர் காலத்திய ​சொல்லாடல்க​ளை அறியத்தகுவனவாகவும் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.
சுருங்கச் ​சொல்லி விளங்க ​வைக்கும் தன்​மையும் நிகழ்ச்சிக​ளைக் கூறி நூற்பாக்க​ளை விளக்கும் மு​றையில் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது. ​தொல்காப்பியர் கூறும்,

“​செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”(496)
​செப்​பே வழீஇயினும் வ​ரைநி​லை இன்​றே
அப்​பொருள் புணர்ந்த கிளவியான”(498)

என்ற ​செப்பு, வினா குறித்த நூற்பாக்களுக்கு கி.வா.ஜ. பின்வரும் க​தை​போன்ற நிகழ்ச்சிக​ளை எடுத்துக்கூறி விளக்கத் தருகின்றார்.

“ஒரு ​வேளாளன் நிலத்​தை உழுது ​​கொண்டிருக்கிறான். அந்த நிலம் ஒரு ​பெருவழியின் அருகில் இருக்கிறது. யா​ரோ பிரயாணி கடம்பூர் என்ற ஊருக்குப் ​போய்க் ​கொண்டிருக்கிறான். தான் ​போகிற ஊருக்கு அதுதான் சரியான வழியா என்று உறுதிப்படுத்திக் ​கொள்வதற்கு அவன் உழவ​னைப் பார்த்து, “ஐயா கடம்பூருக்கு வழி எது?” என்று ​கேட்கிறான். உழவன் இரண்டு மாடுக​ளை ஏரில் பூட்டி உழுகிறான். இடத்து மாடு, வலத்துமாடு என்று அந்த மாடுக​ளைச் ​சொல்வது வழக்கு. அந்தக் காலத்தில் இடம்பூணி, வலம்பூணி என்று ​சொல்லி வந்தார்கள். வலப்பக்கத்தில் பூட்டப்பட்டது, இடப்பக்கத்தில் பூட்டப்பட்டது என்பது அவற்றின் ​பொருள். “இடத்தி​லே இருக்கிற மாடு எங்கள் வீட்டில் உள்ள பசுவின் கன்று” என்று அந்த உழவன் ​சொல்கிறான். ‘கடம்பூருக்கு வழி யா​தோ?’ என்று ​கேட்ட வழிப்​போக்கனுக்கு அந்தக் காலத்துப் ​பேச்சில், “இடம்பூணி என் ஆவின் கன்று” என்று அந்த உழவன் ​சோல்கிறான். பட்டுக்​கோட்​டைக்கு வழி ​கேட்டவனிடம் ​கோட்​டைப் பாக்கின் வி​லை ​சொன்ன புத்திசாலிக்கு இந்த உழவன் அண்ணனாகத்தான் இருக்க ​வேண்டும். இந்த வினாவுக்கும் வி​டைக்கும் பட்டுக்​கோட்​டை, ​கொட்​டைப்பாக்கு, கடம்பூர், இடம்பூணி என்று எது​கையினால் ​தொடர்பு இருக்கிற​தே​யொழியப் ​பொருளால் ஒரு ​தொடர்பும் இல்​லை”(ப.,18)என்று விளக்கம் தருகின்றார். இந்நிகழ்​வை முதலில் கூறிய கி.வா.ஜ. அவர்கள் அந்நூற்பாக்களுக்குரிய எளி​மையான விளக்கத்​தை,
“வினா வி​டை என்னும் இரண்டிலும் குற்றம் இல்லாமல் இருக்க ​வேண்டும்” என்று ஒரு சூத்திரம் ​சொல்லுகிறது. பிறகு, “வினாவுக்கு ​நேர்முகமான வி​டையாக இல்லாவிட்டாலும் ம​றைமுகமானதாக இருந்தாலும் வி​டை ​என்​றே ​கொள்ளலாம் என்று ஒரு சூத்திரம் வருகிறது”(பக்.,18-19) என்று க​தை நிகழ்வி​னைக் கூறிய பின்னர் எடுத்து​ரைக்கின்றார்.
“வினாவுஞ் ​செப்​பே வினா​வெதிர் வரி​னே”(497)

எனும் நூற்பாவிற்கு, ஒரு வினாவிற்கு எதி​ரே வி​டை தரும் கருத்​தோடு ஒரு வினா​வே வந்தாலும் அதுவும் வி​டைதான் என்பது ​பொருளாகும். இத​னை கி.வா.ஜ. அவர்கள் ​நேர்வி​டை, ம​றைவி​டை, ஏவல் வி​டை என்ற வி​டை வ​கைக​ளைப் பற்றி விளக்கிவிட்டு,
“ஐந்நூறு ரூபாய் பணம் ​கொடுப்பாயா?”
“பணம் இல்​லை என்பது ​தெரிந்தும் ​கேட்பது நியாயமா?”
​கேட்ட ​கேள்விக்கு இல்​லை​யென்று ​நேர்முகமான பதில் வராவிட்டாலும் சுற்றி வ​ளைத்துச் ​சொல்வதில் அந்தப் பதில்தான் புலப்படுகிறது. ஆனால் அந்தப் பதில் மற்​றொரு ​கேள்வி உருவத்தில் இருக்கிறது இது வினா​வெதிர் வினாதல். “உனக்கு எத்த​னை பிள்​ளைகள்?” “அதற்​கெல்லாம் நான் புண்ணியம் பண்ணி யிருக்கி​றேனா என்ன?” இதுவும் வினா​வெதிர் வினாதல்”(பக்.,27-28) என்று உ​ரையாடல் வழி விளக்குவது எளி​​மையிலும் எளி​மையாகவும் இலக்கணத்​தைச் சு​மையாக இல்லாது சு​வையாகவும் ஆக்குகின்றது.

உ​ரையாசிரியர்களின் கருத்​தை வழி​மொழிதல்:
கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு உ​ரைகூறும்​போது ​பெரும்பான்​மையும் உ​ரையாசிரியர்களின் கருத்​தை ஒட்டி​யே உ​ரைகூறிச் ​செல்கின்றார். முதலில் தனது கருத்​தைக் கூறிவிட்டுப் பின்னர் உ​ரையாசிரியர்களின் கருத்​தை வழி​மொழிந்து கூறுவது கி.வா.ஜ.வின் உ​ரைத்திற​னை புலப்படுத்துவதாக உள்ளது. தகுதி வழக்​கையும் இயல்பு வழக்​கையும் பற்றி விளக்கும்​போது,

“தகுதி வழக்குகளுக்கு ஏ​தேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படியின்றி, இயற்​கைக் காரணமும் இன்றி ​வேறுபட்டு வரும் ​பேச்சு வ​கை உண்டு. ​

பேச்சு வழக்கி​லே அ​வை அப்படி வந்து விட்டன. அவற்​றை வழக்கு என்று வகுத்திருக்கின்றனர். ​வெள்ளாடு என்று ஒரு வ​கை ஆட்​டைச் ​சொல்கி​றோம். தமிழ்நாட்டில் வாழ்ந்து ​வெள்ளாட்​டைப் பார்க்காத அயல்நாட்டார் ஒருவர் புதிதாகத் தமிழ் படிக்கிறார். அவர் ​வெள்ளாடு என்ற ​சொல்​லைக் கண்டவுடன், ​​வெள்​ளை நிறமு​டைய ஆடு என்றுதான் அர்த்தம் ​செய்து ​கொள்வார். இர்​கே வாழ்ந்து ​பேச்சு வழக்​கை அறிந்தவருக்குக் கறுப்பு ஆடானாலும் அது ​செவள்ளாடுதான் என்று ​தெரியும். அப்படிச் ​சொல்லக் காரணம் என்ன? ​தெரியாது. ​நெடுங்காலமாக அப்படித்தான் வழர்குகிறார்கள் என்பது​வே காரணம். இத​னை வழக்கு என்று கூறுவர். பாத்திரத்தில் இருக்கும் சிறிதளவு நீ​ரை, சில நீர் என்று முற்காலத்தில் ​சொன்னார்களாம். அதனால் உ​ரையாசிரியர்கள் அத​னை வழக்குக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். ‘குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீ​ரைச் சிறிது என்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப்பு​டை​யை மீயடுப்பு என்றலும் ​போல்வன வழக்காம்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.

காரணம் பற்றிய தகுதியிலும், காரணம் இல்லாமல் வரும் வழக்கிலும் பிற இடங்களில் வரும் ​சொற்க​ளே வருகின்றன. ஆனாலும் அவற்றின் ​பொரு​ளைக் கண்டுபிடிக்க, ச​பை மரியா​தை​யையும் உலக வழக்​கையும் பற்றிய அறிவு இருந்தாலன்றி இயலாது. ​சொல்லுக்குச் ​சொல் ​வைத்து இதற்கு இது ​பொருள் என்று காண சூவண்டிய ​மொழியில் இது ஒரு விந்​தை. ​சொல்லுக்குப் புறம்​பே அ​மைந்த ​பொரு​ளை உ​டையனவா​கையால் இ​வை வறு என்று தள்ளக் கூடாது. தள்ளினால் வாழ்க்​கை​யைப் புறக்கணித்தவர்கள் ஆ​வோம். இவற்​றைத் தள்ளாமல் ​கொள்ள ​வேண்டும் என்று ​தொல்காப்பியர் ​சொல்கிறார்.”(பக்.,42-43)
என்று எடுத்து​ரைக்கின்றார். அதன் பின்னர்…

“தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வ​ரைநி​லை இல​வே”
என்ற நூற்பாவி​​னைக் இயம்பி, தகுதி​யையும் உலக வழக்​கையும் தழுவிப் ​பேசப்படும் பகுதியி​லே வரும் ​சொற்கல் நீக்கப்படுவன அல்ல. அவற்​றைக் ​கொள்ள ​வேண்டும் என்பது இதன் ​பொருள்” (ப.,43) என்று எளிய மு​றையில் தனது விளக்கத்​தை எடுத்​தோதுகின்றார். இது கி.வா.ஜ. அவர்களின் உ​ரைகூறும் தனித்தன்​மைக்கு எடுத்துக்காட்டாக அ​மைந்துள்ளது.

தமிழ்ப் பண்பாட்​டை விளக்கி உ​ரை கூறுதல்:
கி.வா.ஜ.அவர்கள் தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் உயர்ந்த எண்ணங் ​கொண்டவர். எதற்காகவும் கூட தமிழ்ப் பண்பாட்​டையும் தமிழினத்​தையும் விட்டுக்​ கொடுக்காத ​நெஞ்சுரங் ​கொண்டவர். கி.வா.ஜ.,

“இனச்சுட்டில்லாப் பண்பு​கொள் ​பெயர்க்​கொ​டை
வழக்காறு அல்ல ​செய்யுள் ஆ​றே”
எனும் ​தொல்காப்பியச் சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ.

“தமிழர் ​தெளிவாகப் ​பேசத் ​தெரிந்தவர்கள். அவர்கள் ​மொழியில் ​சொல்லுக்குப் பஞ்சம் இல்​லை. இப்​போது எத்த​னை​யோ வார்த்​தைகளுக்குத் தமிழ் ​தெரியாமல் இடர்ப்படுகி​றோ​மே! என்று சில நண்பர்கள் ​கேட்கலாம். இந்த நாட்டி​லே எண்ணும் எண்ணத்துக்கும் ​சொல் இல்​லை என்றால் அதுதான் கு​றைபா​டே ஒழிய இறக்குமதியான சரக்குக்குப் ​பேர் இல்​லை​யே என்றால் ​பொருள் இறக்குமதியாகும்​போது ​பெயரும் இறக்குமதியாக ​வேண்டியதுதான். அந்தப் ​பெயர் இங்​கே வந்து உரு மாறி​யோ ​சொல்​லே மாறி​யோ வழங்குவதும் உண்டு. தமிழ் நாட்டு இட்டிலிக்கு இங்கிலீஷில் வார்த்​தை இல்​லை என்றால் அது இங்கிலீஷின் கு​றை அல்ல. அவர்கள் ஊரில் இட்டிலியாகிய ​பொருள் இல்​லை. அதனால் அதற்குரிய ​சொல்லும் இல்​லை. உலக வழக்காகிய ​பேச்சி​லே மயக்கமில்லாமல் இருக்க ​வேண்டும்”(பக்.,45-46)

நம்வீட்டு ​வே​லைக்காரர்களில் இரண்டு ​பேருக்கு ராமன் என்ற ​பெயர் இருக்கிறது. அந்த இரண்டு ​பே​ரையும் ​வேறு பிரிக்க ​நெட்​டை ராமன், குட்​டை ராமன் என்று அ​டை​கொடுத்துப் ​பேசுவதுதான் ​தெளிவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒ​ரே ராமன் இருக்​கையில், ​நெட்​டை ராம​னைக் கூப்பிடு என்றால் புதிதாக யாராவது அ​தைக் ​கேட்கும்​போது அவர் ​நெஞ்சில் குழப்பம் உண்டாகிவிடும். குட்​டை ராமன் ​வேறு இருக்கிறான் ​போலும்! என்று அவர் எண்ணுவார். ஆக​வே ராம​னைக் கூப்பிடு என்று ​சொன்னா​லே ​போதும்.

“ஆழிசூழ் உலக​மெல்லாம் பரத​னே ஆள” என்று கம்பர் பாடுகிறார். ​பேசும்​போது, ஆழி சூழ் உலகத்தில் மனிதன் நடமாடுகிறான் என்பது அநாவசியம். ஆழி சூழாத உலகம் இருந்தாலன்றி அப்படிச் ​சொல்வது சில சமயங்களில் மயக்கத்​தைக் கூட உண்டுபண்ணும் கம்பர் பாடலாமா? என்றால் அது கவி​தைக்குரிய உரி​மை. அலங்காரம் பற்றி அப்படிச் ​சொல்லக் கவிஞருக்கு அதிகாரம் உண்டு(ப.,48)
என்று தமிழர்தம் பண்பாட்டு மரபும் ​பெரு​மையும் புலப்படுமாறு விளக்கம் கூறுகின்றார்.

அ​​தோடு மட்டுமல்லாது தமிழர்கள் இறக்குமதி ​செய்யாது புதிய புதிய ​பொருள்க​ளைத் தாங்க​ளே உருவாக்குதல் ​வேண்டும் என்ற கருத்​தையும் கி.வா.ஜ. அவர்கள் ​சொல்லாமல் ​சொல்லிச் ​சென்றிருப்பது அவரின் உயர்ந்த எண்ணத்​தைப் புலப்படுத்துவதாக அ​மைந்துள்ளது. ​தொல்காப்பியத்திற்கு தமிழர் பண்பாட்டு அடிப்ப​டையில் காலத்திற்கு ஏற்ப விளக்கம் கூறும் பாங்கு இதில் புலப்படுவது ​நோக்கத்தக்கது.

ந​கைச்சு​வையுடன் உ​ரைகூறுதல்:
கி.வா.ஜ. அவர்கள் ந​கைச்சு​வையுடன் ​உ​ரையாற்றுவதில் வல்லவர். எப்படிப்பட்ட சூழலிலும் அவர் ந​கைச்சு​வை மிளிர உ​ரையாடுவார். சி​லே​டையாகப் ​பேசி எல்​லோ​ரையும் ந​கைச்சு​வையில் ஆழ்த்திவிடும் க​லை கி.வா.ஜ. ​அவர்களுக்​கே ​கைவந்த ஒன்றாகும். இத்த​கைய ந​கைச்சு​வைப் பண்பு இலக்கணத்திற்கு ​விளக்கம் கூறும் கி.வா.ஜ. வின் உ​ரையிலும் இடம்​பெற்றுள்ளது.

“பால் மயக்குற்ற ஐயக்கிளவி
தான் அறி ​பொருள் வயின் பன்​மை கூறல்”

“உரு என ​மொழியினும் அஃறி​ணைப் பிரிப்பினும்
இருவீற்றும் உரித்​தே சுட்டுங்கா​லை”

என்ற நூற்பாக்களுக்கு விளக்கம் கூற வந்த கி.வா.ஜ. அவர்கள்,
“குழந்​தை தா​யைப் பார்த்து, அம்மா உன்​னை என் கல்யாணத்துக்குக் கூபட்பிடமாட்​டேன் என்றதாம் தாய், “ஏன் அப்பா?” என்று ​கேட்டாள்.

“ நீ உன் கல்யாணத்துக்கு என்​னைக் கூப்பிட்டா​யோ?” என்று ​கேட்டது குழந்​தை. ​கேள்வி​யைக் ​கேட்ட தாய் சிரித்து மகிழ்கிறாள். குழந்​தைத் தன்​மை யா​கையால் அந்த மகிழ்ச்சி உண்டாகிறது. ….சந்​தேகத்​தை ​வெளிப்படுத்தும் விஷயத்தில் ​பைத்தியக்காரத்தனத்​தை ​வெளிப்படுத்தாமல் பார்த்துக் ​​கொள்ள ​வேண்டும் என்ற கவ​லை இலக்கணக்காரருக்கு உண்டாகி இருக்கிறது. .. ஆ​ணென்றும் ​பெண்​ணென்றும் ​தெரியாத சந்​தேகத்​தைச் சந்​தேக பா​ஷையி​லே ​பொதுவாகச் ​சொல்ல​வேண்டும். ஆணுக்கும் ​​பெண்ணுக்கும் ​பொதுவாக ஒரு வார்த்​தை இருந்தால் ​சொல்லலாம். அந்த வார்த்​தை இன்ன​தென்று இலக்கணம் ​சொல்கிறது. வாழ்க்​கையிலிருந்து ​தெரிந்து ​கொண்டுதான் ​சொல்கிறது.”(பக்.,54-55) என்று தமக்​கேயுரிய ந​கைச்சு​வை உணர்வுடன் விளக்குகின்றார்.

க​தையி​னைக் கூறி ​விளக்கம் தருதல்:
கி.வா.ஜ.அவர்கள் ஒரு ​பொருள் பற்றி விளக்க முற்படும்​போது அத​ன் ​பொருள் ​கேட்​போருக்கு மனதில் பதியும் வண்ணம் சிறு சிறு க​தைக​ளைக் கூறி அத​னை விளக்கிச் ​செல்வார். விளிமரபு​னைப் பற்றி விளக்க வந்த கி.வா.ஜ. அண்​மை விளி குறித்தும் ​சேய்​மை விளி குறித்தும் ஒரு க​தையி​னைக் கூறி விளக்கிச் ​செல்கிறார்.

ஒரு ​செட்டியார் இரவில் படுத்துத் தூங்கிக் ​கொண்டிருந்தார். ஏ​தோ சத்தம் ​கேட்டு விழித்துக் ​கொண்டார். படுத்தபடி​யே கவனித்த​போது தம் வீட்டில் திருடன் வந்திருப்பது குறிப்பாகத் ​தெரிந்தது. உட​னே எழுந்திருந்து ஏதாவது எசய்தால் திருடன் தம்​மை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன ​செய்வது என்று பயந்தார். ​மெல்ல அருகில் இருந்த தம் ம​னைவி​யைச் சத்தம் ​போடாமல் நிமிண்டி எழுப்பிப் ​பேச ஆரம்பித்தார்.

“ஆண்டவன் அருளால் நமக்கு ஒரு குழந்​தை பிறக்கப் ​போகிறது. அதற்கு என்ன ​பெயர் ​வைப்பது?” என்று ​செட்டியார் ​கேட்டார்.

“எங்கள் தகப்பனார் ​பெய​ரை ​வைக்கலாம்” என்றாள் அவள்.

அ​தெல்லாம் கூடாது. நான் ராமன் என்ற ​பெய​ரைத்தான் ​வைக்கப்​போகி​றேன். பல நாளாக அப்படித்தான் மனசில் நி​னைத்துக் ​கொண்டிருந்க்கி​றேன். நீயும் நல்லபடியாகப் பிள்​ளை ​பெற்றுக் குழந்​தை கடவுள் அருளால் நன்றாக இருந்தால் அவ​னை அலங்காரஞ் ​செய்து ​கொஞ்சு​வேன். ராமா ராமா என்று வாயார அ​ழைப்​பேன். “ என்றார்.

“நான் ​வேறு ​பெயர்தான் ​வைப்​பேன்” என்றாள் அவர் ம​னைவி.

“முடியா​வே முடியாது. நான் ராமன் என்றுதான் ​பெயர் ​வைப்​பேன். ராமா ராமா என்றுதான் கூப்பிடு​வேன். நீ என்ன எனக்குச் ​சொல்வது?” என்று ​பேசிக்​கொண்​டே; ராமாஅஅ! ராமாஅஅ! என்று பலமாக அ​ழைத்துக் கூவத் ​தொடங்கிவிட்டார்.

பக்கத்து வீட்டு ராமன் ​செட்டியார் இந்தக் குர​லைக் ​கேட்டுத் தம்​மைச் ​செட்டியார் அ​ழைக்கிறா​ரென்று எண்ணி, ஏ​தோ அபாயம் ​போலும்! என்ற நி​னைவினால் அவசரமாக எழுந்து வந்து கத​வைத் தட்டினார். இந்தச் ​செட்டியார் எழுந்து ​போய்க் கத​வைத் திறந்து அவ​ரை அ​​ழைத்து வந்தார்.

“என்​னை ஏன் அ​ழைத்தீர்கள்?” என்று வந்தவர் ​கேட்டார்.

“பாதி ராத்திரியில் உங்க​ளை நான் எதற்காக அ​ழைக்கி​றேன்? எனக்குப் பிள்​ளை பிறந்தால் என்ன ​பெயர் ​வைப்பது என்பது பற்றி எனக்கும் இவளுக்கும் விவாதம் ஏற்பட்டது. நான் ராமன் என்றுதான் ​பெயர் ​வைத்து அ​ழைப்​பேன் என்​றேன். இவள் ​வேறு ​பெயர்தான் ​வைக்க ​வேண்டும் என்றாள். நான் ஒ​ரே பிடிவாதமாக ராமா என்றுதான் கூப்பிடு​வேன் என்று இவளுக்குக் கூப்பிட்டுக் காடடி​னேன். நான் ​சொல்வதில் நம்பிக்​கை இல்லாவிட்டால் அ​தோ இருக்கிறா​ரே அவ​ரைக் ​கேட்டுப் பாருங்கள்” என்று ​சொல்லி ​மேல்பர​ணைக் காட்டினார்.

செட்டியார் விழித்துக் ​கொண்டது முதல் ஒன்றும் ​செய்யத் ​தோன்றாமல் திருடன் அங்​கே ஒளிந்து ​கொண்டிருந்தான். ​செட்டியார் சுட்டிக் காட்டிய பிறகுதான் ராமன் ​செட்டியாருக்கு நண்பரு​டைய தந்திரம் ​தெரிந்தது. திருட​னை இரண்டு​பேரும் ​சேர்ந்து பிடித்துச் ​செய்ய ​வெண்டிய​தைச் ​செய்தார்களாம்.”

இப்படி ஒரு க​தை ​வெகு காலமாகத் தமிழ் நாட்டில் வழங்குகிறது. ​செட்டியார் குழந்​தை​யை அ​ழைப்பதாக இருந்தால் அவ்வளவு சத்தம் ​போட்டிருக்க ​வேண்டாம்; ராமாஅஅஅ என்று நீட்டியிருக்கவும் ​வேண்டாம். அவர் அயல் வீட்டு ராம​னை அ​ழைக்க​வே அப்படிச் ​செய்தார்; அவன் தூங்குவான் என்று எண்ணி​யே அதிகமாக நீட்டினார்.

அயலில் இருப்ப​வ​ரை அ​ழைப்பது ஒரு விதம்; தூரத்தில் இருப்பவ​ரை அ​ழைப்பது ​வேறு விதம். அ​ழைப்ப​தை விளித்தல் என்றும் ​சொல்வதுண்டு. இப்​போது ம​லையாளத்தில் அந்தச் ​சொல்சாதாரண வழக்கில் இருக்கிறது. ஒருவ​னை முன்னிட்டு அ​ழைப்ப​தை விளி என்று ​சொல்வார்கள். அப்படி அ​ழைக்கும்​போது அவனு​டைய ​பெயரின் உருவம் ​வேறுபடுகிறது. ராமன் என்பவ​னை விளிக்கும்​போது அந்தச் ​சொல் ராமா என்று ஆகிறது. ​பெண்​ணை விளிக்கும்​போது ​பெண்​ணே என்று ​சொல்கி​றோம். இந்த ​வேறுபாடு ​பெயர்ச்​சொல்லுக்கு உரிய, ​வேற்று​மை என்னும் பகுதியில் வருகிறது. விளி ​வேற்று​மை அல்லது எட்டாவது ​வேற்று​மை என்று இ​தைச் ​சொல்வார்கள்”(பக்.,144-145)

என்று விளி என்ப​தைப் பற்றி கி.வா.ஜ. அவர்கள் க​தையின் வழியாக விளக்கிக் கூறுகின்றார். இதுசு​வையாகவும் மனதில் பதியும் வண்ணமும் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.

இலக்கியப் பகுதி​க​ளைக் கூறி ​சொல்லாய்வு ​செய்தல்:
கி.வா.ஜ.அவர்கள் சூத்திரங்களுக்கு விளக்கம் கூறும்​போது இலக்கியப் பகுதிகளில் இருந்து பாடல்க​ளைக் ​கொடுத்து ​சொல்லாய்வு ​செய்கின்றார். இரண்டாம் ​வேற்று​மையின் ​பொருள்க​ளான காத்தல், ஒப்பல் ஊர்தியின் இ​ழையின் உள்ளிட்டவற்​றை விளக்கும்​போது,

“ஆக்க ​வே​லை, அழிவு ​வே​லை என்று இப்​போது ​சொல்கி​றோம் ஆக்க ​வே​லை​யைக் கடவு​ளே முதல்ல் ​செய்துவிடுகிறார் அவர் ஆக்கிய உயிர்க​ளையும் உடல்க​ளையும் உலகத்துப் ​பொருள்க​ளையும் தக்க வண்ணம் காத்த​லே ஆற்றலு​டையவரு​டைய கட​மை.
“ஆபயன் குன்றும் அறு​தொழி​லோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”

என்று திருக்குறள் ​சொல்கிறது….. மனிதனு​டைய ​செய்​கைக்கு உட்படும் ​பொரு​ளைப் பற்றிச் ​செல்லும்​போது ஐ என்ற இரண்டாம் ​வேற்று​மை உரு​பைக் கூட்டிச் ​சொல்வது தமிழ் மரபு. அ​தைப் பற்றிச் ​சொல்லும் இடத்தில் ​தொல்காப்பியர், ​பொருளானது எந்த எந்தத் ​தொழிலுக்குஉட்படும் என்ப​தைச் சிறிது ​சொல்கிறார். மனிதன் ​செய்யும் ​தொழில் அ​னைத்​தையும் ​சொல்லி முடிக்க முடியுமா? ஆனாலும் அவர் மிக முக்கியமான​வை என்று கருதிய 28 ​தொழில்க​ளைச் ​சொல்லிவிட்டு, இ​வை ​போன்ற பிறவற்​றையும் ​சேர்த்துக் ​கொள்க என்று குறிப்பிடுகிறார்.

காப்புக்குப் பின் பல ​தொழில்க​ளைச் ​சொல்லும் ​தொல்காப்பியர் க​டைசியில் சி​தைப்பு என்ற ​தொழி​​லைச் ​சொல்கிறார். அழித்தல் என்பது அதன் ​பொருள்.

காத்தலும் சி​தைத்தலுமாகிய இரண்டு ​தொழில்க​ளையும் நி​னைக்கும்​போது அரசனு​டைய நி​னைவுதான் தமிழருக்கு வருகின்றது. இவ்விரண்டுக்கும் உதாரணம் ​சொல்ல வந்த உ​ரையாசிரியர்கள், ஊ​ரைக் காக்கும், நாட்​டை அழிக்கும் என்​றே காட்டுகிறார்கள். அரசனது முதல் கட​மை தன் நாட்​டைப் பாதுகாத்தல். அவசியமாக இருக்குமானால் பலவாறு ​யோசித்து முடிவு கட்டியபிற​கே ​வேறு வழியின்றி இறுதியாக ​வைத்துப் ப​கைவன் நாட்​டை அழித்தல் அவன் ​செயல் என்ற கருத்து இவற்றிலிருந்து ​தோன்றுகிறது.

ஊ​ரையும் நாட்​டையும் காப்பாற்றுகின்ற அரச​னைக் குடிமக்கள் ​போற்றுவார்கள்; புகழ்வார்கள். இவன் கடவு​ளை ஒப்பான் என்றும் அன்பினால் தா​யை ஒப்பான் என்றும் நன்​மை பயப்பதனால் தவத்​தை ஒப்பான் என்றும் உபமானம் ​சொல்வார்கள். கம்பர் தசரத​னைப் பற்றிச் ​சொல்லும்​போது இப்படிப் பல உவ​மைக​ளைக் கூறுகின்றார்.

“தாய்ஒக்கும் அன்பில்
தவம் ஒக்கும் நலம் பயப்பில்
சேய்ஒக்கும் முன்னின்​றொரு
செல்கதி உய்க்கும் நீரால்
​நோய் ஒக்கும் என்னில்
மருந்​தொக்கும், நுணங்கு ​கேள்வி
ஆயப் புகுங்கால் அறி​வொக்கும்”
என்று வருகிறது இராமாயணப் பாட்டு.” (பக்.,125-126)

என்று திருக்குற​ளையும் கம்பராமாயணத்​தையும் எடுத்துக்கூறி இரண்டாம் ​வேற்று​மைப் ​பொருளாகிய காத்தல் என்ற ​​தொழிற்​சொல்​லை கி.வா.ஜ. ஆய்வு ​செய்கின்றார்.

இங்ஙனம் கி.வா.ஜ. அவர்களின் ​சொல்லாராய்ச்சி தமிழின் சிறப்​பையும் தமிழர்களின் சிறப்​பையும், பண்பாட்​டையும் எடுத்துக்காட்டுவதாக அ​மைந்துள்ளது. வழக்கில் வழங்கும் ​சொற்க​ளை ​வைத்து கி.வா.ஜ. அவர்கள் ​சொல்லாய்வு ​செய்வது என்​றென்றும் தமிழ் வாழும் என்று அறுதியிட்டுக் கூறுவதாக அ​மைந்துள்ளது. கி.வா.ஜ. அவர்களின் ​சொல்லாய்வில் தமிழர்தம் வாழ்வியல் ​நெறிமு​றைகள் புலப்படுவதுடன் தமிழ் ​மொழியின் தனித்தன்​மை, அதன் இலக்கண இலக்கியத் ​தொன்​மை உள்ளிட்டனவும் ​தெளிவுறுத்தப்பட்டுள்ளன.

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி),
புதுக்​கோட்​டை.
[email protected]

1 thought on “கி.வா.ஜ.வின் ‘வாழும் தமிழ்’ ​சொல்லதிகார ஆராய்ச்சி”

 1.     கி வா ஜ பற்றி மிகவும் நல்ல தகவல்களை அவரது வரலாற்றோடு தொடர்பு படுத்தி இன்றய தலை
  முறையினரும் அறியும் நோக்கில் .. முனைவர் சேதுராமன் அவர்கள் தந்தமை மிகவும் பயனுடைய
  முயற்சியாகும்.முனைவர் சேதுராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் ! என்னுடைய 
  மாணவப் பருவத்தில் கி வா ஜ அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
  முனைவர் சேதுராமன் அவர்களது கட்டுரையை வாசித்ததும் பழையஞாபகங்கள் மனத்தில் படமாக 
  ஓடியது! நல்ல கட்டுரை ! பயனுள்ள கட்டுரை ! 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க