Blog

  • தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-15)

    முகில் தினகரன்

    “வாங்க.. வாங்க.. சீக்கிரம் கட்டிலுக்கு வாங்க!. எல்லாமே இப்ப நல்லா ஞாபகம் வந்திடுச்சு.. ”என்று சொல்லி, அவன் கையைப் பிடித்துப் பலவந்தமாய் கட்டிலுக்கு இழுத்துச் சென்ற ரேணுகா, அவன் பார்த்துக் கொண்டிருக்கவே உடைகள் ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்தாள்.

    “அய்யய்ய.. என்ன.. என்னம்மா இது?” சுந்தர் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ள,

    “அட.. இப்படித்தான் பண்ணனுமாம்!. நீலவேணி அத்தை சொல்லிச்சு!” என்றவள் அவன் வேட்டியையும் உருவ முயற்சித்தாள்.

    விலகி ஓடியவன், “த பாரும்மா.. இதெல்லாம் இப்ப பண்ணக் கூடாது!. மொதல்ல நீ பொடவையைக் கட்டு!” என்றான் சற்றுக் காட்டமாய்.

    “அய்யோ.. உங்களுக்கு ஒண்ணுமே தெரியலை!. நீலவேணி அத்தை உங்களுக்கு சொல்லித் தரலையா”

    “எனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலை!. நீ இப்பப் பொடவையைக் கட்டப் போறியா இல்லையா?” விழிகளை உருட்டி மிரட்டினான்.

    அந்த மிரட்டலில் பயந்து போன ரேணுகா, திடீரென்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

    தர்ம சங்கடத்துக்கு ஆளாகிப் போன சுந்தர், அவளைச் சமாதானப் படுத்தும் விதமாய் அவளை நெருங்கி வர, அவன் எதிர்பாராத வேளையில் சட்டென்று ஓடிப் போய் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

    வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் நடுக் கூடத்தில் நின்று கொண்டு “ஓ..”வென்று அவள் கத்தி அழ, ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களெல்லாம், என்னவோ?. ஏதோ?வென்று அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து அவளிடம் வந்து நின்றனர்.

    அவள் கோலத்தைப் பார்த்த அவளுடைய தாய் எங்கிருந்தோ ஒரு போர்வையைக் கொண்டு வந்து அவள் மீது போர்த்தி விட்டுத் தன் கணவன் பக்கம் திரும்பி, “என்னங்க நீங்க சும்மா பார்த்துக்கிட்டு நிக்கறீங்க?. மாப்பிள்ளையைக் கூப்பிட்டு என்ன? ஏது?ன்னு விசாரிங்க!”

    கூனிக் குறுகியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்தான் சுந்தர்.

    “என்ன மாப்பிள்ளை.. என்ன ஆச்சு?. ஏன் ரேணுகா அழறா?”

    பதில் சொல்ல முடியாமல் தவித்தான் சுந்தர். அவன் தவிப்பைத் தவறாகப் புரிந்து கொண்ட மற்றவர்கள், “அட.. புதுப் பொண்ணுல்ல அதான் மெரண்டிருக்கு!. மாப்பிள்ளை கொஞ்சம் மொரடு போலிருக்கு!” சொல்லியவாறே அங்கிருந்து குறுஞ்சிரிப்புடன் கலைந்து சென்றனர்.

    எல்லோரும் சென்றதும், சுந்தரை நெருங்கி வந்து, அவன் தோளில் கை போட்ட ரேணுகாவின் தந்தை, “என்ன மாப்பிள்ளை இப்படிப் பண்ணிட்டீங்க!. நான்தான் சொன்னேனில்ல.. “அவள் வயசுதான் இருபது.. ஆனா இன்னும் குழந்தை மாதிரி”ன்னு அதனால.. மொரட்டுத்தனம் வேண்டாம்!. கொஞ்சம் சாந்தமா.. பக்குவமாக் கையாளுங்க மாப்பிள்ளை.. உங்க பொஞ்சாதிதானே.. எங்க போயிடப் போறா?”

    செத்து விடலாம் போலிருந்தது சுந்தருக்கு, “நானா?. நானா?. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்?”

    “சரி.. சரி.. ரேணுகாவைக் கூட்டிக்கிட்டு உள்ளார போங்க!” என்றபடி அவளை மீண்டும் அறைக்குள் கொண்டு வந்து விட்டு விட்டுப் போனாள் மாமியார்க்காரி.

    கதவைத் தாழிட்டு விட்டு வந்த சுந்தர், படுக்கையில் விழுந்து வாயைப் பிளந்தபடித் தூங்கும் ரேணுகாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். “அடிப்பாவி.. ஒரே நிமிஷத்துல தூங்கிட்டாளே!”

    தலையணையை மட்டும் எடுத்துக் கொண்டு அறையின் மூலைக்குச் சென்று தரையில் படுத்தான். மறுநாள் காலை எப்படி மற்றவர்கள் முகத்தில் விழிக்கப் போகிறோமோ?. என்கிற கவலையில் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தான்.

    தன் தங்கையின் நிம்மதிக்காக ரேணுகாவைக் கைப்பிடித்ததில் தன் வாழ்க்கையின் நிம்மதியைத் தொலைத்து விட்டிருந்தான் சுந்தர். திருமணம் செய்தால் ரேணுகா குணமாகி விடுவாள் என்ற கூற்று பொய்யாகிப் போனது. நாளுக்கு நாள் அவளது ரகளை அதிகமாகிக் கொண்டே போனது. சில நாள் சமையலறையில் புகுந்து “நான் சமைக்கிறேன்.. அத்தை!” என்று சொல்லி மொத்தத்தையும் பாழாக்கி அனைவரையும் விரதமிருக்கச் செய்து விடுகின்றாள்.

    திடீர் திடீரென்று அர்த்தமேயில்லாமல் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்வதும், வீட்டுப் பொருட்களை உடைத்தெறிவதும், துணிமணிகளைக் கிழித்தெறிவதும் அவளது வாடிக்கையான வேடிக்கைகள்.

    தன் மகனின் நிலையை நினைத்து லட்சுமி கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. “ஹூம்.. இந்தப் பையனுக்கும் ஒரு நல்ல நாள் வராமலா போய்டும்?” என்று தனக்குத் தானே ஆறுதல் படுத்திக் கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அந்த முதிய ஜீவனால்.

     

    (தொடரும்)

    படத்திற்கு நன்றி: http://thedipaar.com/news/news.php?id=15413

    Share
  • பரமஹம்சர் கண்ட பராசக்தி

     
     
    ஷைலஜா
     

    காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

    “சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
     கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக  எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
     கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!”

    இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

    இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
    ஆடிக்களிப்பவன் யாரோ  அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

    விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
    கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.

     “பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
    எந்த படித்துறையிலும்  இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம்  என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
    பலவழிகளைக்  காட்டுகின்றன “என்கிறார் பரமஹம்சர்.

    சக்திசமயத்திலும்  பலபடித்துறைகள் உண்டு.

    தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.

    பாரதியாரின் ஊழிக்கூத்து  பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
     ஆகாயம்  கறுத்து  வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில்  பராசக்தி  இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது  நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

    மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று   பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

    மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய  பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும்  என மேலும் சொல்கிறார்.

    தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

    பேயைக்கொலையை
    பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

    என்கிறார் பாரதியார்.

    அன்னை !அன்னை! ஆடுங்கூத்தை
     நாடச்செய்தாய் என்னை…

    சக்திப்பேய்தான் தலையொடுதலைகள்முட்டிச்- சட்டச்
    சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
    நின் விழியனல்போய் எட்டித்-தானே
    எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

    ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

    பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

    காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
    அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

    தனது மார்க்கம்  இறையைத்  தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

    அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ  பாவித்துவணங்கலாம்  என்னும்
     பரமஹம்சர்”  நான் என்னைக்  குழந்தையாகபாவித்துக்கொண்டேன் “என்கிறார்.

    மனம் உள்முகமாகத்  திரும்பினால் அதுவாசற்கதவை   சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
    போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது   பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

    நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் என்று பலமதங்கள்கூறுவதை  ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

    பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

    அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
     நிலையில் உயரலாம்.

    யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
    தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?

    படத்துக்கு நன்றி

    http://www.facebook.com/pages/Jai-Kali-Maa/120065043581


    Share
  • தொல்லை காட்சி பெட்டி

    மோகன் குமார்

     

    ஜெயா டிவியில் ஆட்டோகிராப்

    ஜெயா டிவி நிகழ்ச்சியின் ஆட்டோகிராபில் மிக பெரும் வெற்றி இயக்குனரான எஸ். பி.முத்துராமன் வந்து பேசினார். ரஜினி, கமலின் பல ஹிட் படங்களின் இயக்குனர். ஏ. வி. எம் முக்கு ஆஸ்தான இயக்குனர். இவரை பல வருடம் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்து பேசினோம். மிக எளிமையானவர். நாங்கள் கேட்டே கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் தந்தார். 

    இந்த நிகழ்ச்சியில் சில படங்களை அவர் ஒரு மாசத்தில் எடுத்து முடித்ததும், மனைவி இறந்த செய்தி வந்த பின் கூட ஷூட்டிங் முடித்து விட்டே வீட்டுக்கு சென்றார் போன்ற தகவல்களும் தெரிய வந்தன. 

    ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு 

    தினமும் காலையில் விஜய் டிவியிலும் அப்புறம் ராஜ் உள்ளிட்ட பிற டிவிக்களிலும் ரியல் எஸ்டேட் காரர்கள் நிலத்தை விற்க விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் போடுறாங்க. பாத்துருக்கீங்களா? ஊரில உள்ள பல சின்னத்திரை நட்சத்திரங்களையும் கூட்டி வந்து ” இதை விட சிறந்த இடம்; சீப்பான இடம் உலகிலேயே இல்லை” என பேச வைப்பாங்க. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பார்த்தா அடுத்து இன்னொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும். அதிலும் அதே ஆட்கள் வந்து ” இது தான் சிறந்த இடம்; மறக்காம வாங்குங்க” அப்படின்னு சொல்லுவாங்க ! 

    ரோடு இருக்கு; பார்க்கு இருக்கு என சொன்னாலும் அவையெல்லாம் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டிங் என்பது நன்கு தெரிகிறது. இது தெரியாமல் எத்தனை பேர் நம்பி வாங்கி ஏமாறுகிறார்களோ !! 

    சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை

    ராஜ் டிஜிடல் பிளஸ் மற்றும் வின் டிவி உள்ளிட்ட பல சானல்களில் “சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலை ” என்று சொல்லி ஒருவர் வந்து பேசோ பேசுன்னு பேசிக்கிட்டிருப்பார். ஒரு முறை என்ன தான் அப்படி சொல்றார்னு பார்த்தேன். 

    “இளைஞர்களுக்கு கெட்ட பழக்கம் சொல்லி தருவதே நண்பர்கள் தான். அதனால் நண்பர்களே வச்சிக்காதீங்க (!!!??). உங்களுக்கு ‘முடியாம போகும்போது’ நண்பர்கள் வந்து உதவி செய்ய போவதில்லை” என்றார் ! மேலும் ஆண்மை குறைவுக்கு ஒரே தீர்வு இந்தியாவிலேயே தங்கள் நிறுவனத்தில் தான் கிடைப்பதாகவும், இளைஞர்கள் நண்பர்களிடம் இது பற்றி பேசாமல் தங்களை வந்து நாடுங்கள் என்றும் சொல்லி கொண்டிருந்தார். 

    இளைஞர்கள் மனதில் பயத்தை விதைத்து, அதை வைத்து வியாபாரம் செய்றாங்க ! ஹும் :(( 

    புது நிகழ்ச்சி : ராஜ் டிவியில் கோல்ட் கேசினோ

    சுகாசினி நடத்தும் புது நிகழ்ச்சி இது. கவுன் பனேகா க்ரோர்பதி ஸ்டைல் தான். வேறொண்ணும் இல்லை ! பத்து கேள்விகள்.. ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆப்ஷன்ஸ் தந்து, சரியான விடை தேர்ந்தெடுக்கணும். என்ன ஒன்று தப்பாய் சொன்னாலும் தொடர்ந்து ஆட விடுகிறார்கள். தருமி சொல்ற மாதிரி ” எவ்வளவு பிழை இருக்கோ அதற்கு தகுந்த மாதிரி பரிசில் குறைத்து கொள்ளுங்களேன்” தான் ! 

    ஆனால் அதிகப்படியான ரூல்ஸ் சொல்லி குழப்பி தள்றாங்க. முதல்லே தங்க காயின் தருகிறார்கள். கடைசியில் ஜெயித்த பின் கடனை திருப்பி தாங்க என்கிறார்கள். ஒரே குஷ்டமப்பா சே கஷ்டமப்பா ! 

    முரசு, சன் லைப் டிவிக்கள்

    சன் மியூசிக் வகை சானல்கள் அநேகமாய் புது பாடல்களையே ஒளிபரப்பும் நிலையில் பழைய பாடல்களுக்கென்றே ” முரசு” என ஒரு சானலை துவக்கியது கலைஞர் டிவி குழுமம். பழைய பாடல் விரும்பிகள் அதனை இரு கரம் நீட்டி வரவேற்க, இப்போது சன் டிவியும் சன் லைப் என ஒரு சானலை துவக்கி விட்டது. பழைய பாடல் விரும்பிகளுக்கு இப்போதெல்லாம் கொண்டாட்டம் தான் ! 

     

    சூப்பர் சிங்கர் இறுதி போட்டி 

    ஒய்ல்ட் கார்ட் சென்று சொல்லியே இரண்டு வாரம் இழு இழு என இழுத்து ஆஜித் மற்றும் யாழினி இருவரும் பைனல் செல்வதாக அறிவித்தனர். 

    இந்த வாரத்தின் ஹை லைட் அனு என்கிற சிறுமி மற்றும் அவள் தாயுடன் அவர்கள் பாட்டி போனில் பேசியது தான். அனு தாய் காதல் திருமணம் செய்ததால் 19 வருடமாய் பேசாமல் இருந்தவர், விஜய் டிவி முயற்சியால் பேசினார். அப்புறமென்ன ஒரே அழுகை மயம் தான் !

    ரக்ஷிதா பைனல் செல்லாததில் சிறு வருத்தமே. இருப்பினும் எப்படியும் அவள் ஒரு நல்ல பாடகியாக நிச்சயம் வருவாள் என நினைக்கிறேன். 

     

    Share
  • என் வீட்டு கொலு

    விசாலம்

    நவராத்திரி கொலு வந்தது,
    பத்துநாட்களும்  சுண்டல்  விருந்து.

    பாதி அறையை நிரப்பும் படிகள்,
    பல வித பொம்மைகள் அமரும்  படிகள்.

    முத்தேவிகள் அங்கு அமரும் இடம்,
    சிருஷ்டியின்  பொருட்கள் காணும் இடம்.

    மரப்பாச்சியுடன் முதல் படி ஆரம்பம்,
    மாவிலையுடன்  கலசமும் நிரம்பும்.

    தசாவதாரத்தின் அழகான வரிசை,
    நாதஸ்வரம் செட்  ஒலிக்கும் இசை.

    கிளிகள் மயில்களின் ஜோடி பார்க்கலாம்,
    மான்கள், யானைகளின் ஜோடியும் ரசிக்கலாம்.

    காந்தி, நேரு, விவேகானந்தர் அங்கே,
    நேதாஜி சுபாஷின் கம்பீரத்தோற்றம் அங்கே.

    கீழ்ப்படியில்  செட்டியார் கடையும் உண்டு,
    இடுப்பை அசைக்கும் பொம்மையும் உண்டு.

    மணப்பெண் மாப்பிள்ளை கல்யாணம் காணலாம்,
    கோபத்துடன் சிலம்புடன் கண்ணகி காணலாம்.

    கொலுப்படி முடிய  வண்ணக் கோலமும் உண்டு,
    அழகாக ஒளி விடும் குத்துவிளக்கும் உண்டு.

    லிங்கத்தைத் தழுவும் மார்க்கண்டேயன்,
    அவன் மேல் பாசவலை வீசும்  யமதர்ம ராஜன்.

    ஓரத்தில் பழனி மலை முருகனும் உண்டு,
    அதில் ஏறும் காவடிகளும் உண்டு.

    முதியோர் இல்லம் என் கை வரிசை,
    தட்டுவோம் இந்த வருடம்  பரிசை !!!
                    
    படத்திற்கு நன்றி

    http://www.indusladies.com/forums/topic-of-the-month-contest/111480-celebrate-festival-nine-nights-indusladies-5.html

    Share
  • முதலாளி

    விட்டு விட்டு இடியிடித்ததில்
    விடாமல் கொட்டியது
    மழை!

    தொட்டு தொட்டுப் பேசியதில்
    தொடாமல் கிட்டியது
    செருப்படி!

    ஓங்கி ஓங்கி அடித்ததில்
    ஓங்காமல் செத்தது
    பாம்பு!

    ஓடி ஓடி அடைத்ததில்
    ஓடாமல் அடைபட்டது
    முயல்!

    சொல்லிச் சொல்லிப் பாடமடித்ததில்
    சொல்லாமல் ஓடி வந்தாள்
    காதலி!

    தூங்கித் தூங்கி விழுந்ததில்
    தூங்காமல் தவித்தான்
    அண்மைக்காரன்!

    பேசிப் பேசிக் குலவியதில்
    பேசாமல் தந்து விட்டான்
    முதலாளி!

    Share
  • சக்தியும் சிவமும்

     

    இசைக்கவி ரமணன்

    உமையும் சிவனாரும் சொல்லாய்ப் பொருளாய்
    அமைந்திருக்கக் காணல் அழகு – குமையாதீர்
    ஒன்றிரண்டாய்த் தோன்றிடினும் ஒன்றென்றும் ஒன்றேயாம்
    நன்றே விளைக நமக்கு!

    மெளனம் சிவமானால் மொழியே என்சக்தி
    மொழியே சக்தியெனில் பொருளே எங்கள்சிவம்
    பொருளே சிவமானால் புரிவதுவே என்சக்தி
    புரிவது சக்தியெனில் பூரணமே எங்கள்சிவம்

     
    விதைக்கும் முன்னிருக்கும் விளங்காமை எங்கள்சிவம்
    விரிந்தும் திரிபுறாத வித்தகமே என்சக்தி
    கதைக்குக் களனாகச் சலனமற்ற தெங்கள்சிவம்
    கவிதையாய்க் கானமாய்க் கலகலப்ப தென்சக்தி

    வானந்தான் சிவமென்றால் நிலமென் பராசக்தி
    நிலந்தான் சிவமென்றால் விதையதிலே மஹாசக்தி
    விதைதான் சிவமென்றால் விழித்தெழுவாள் ஆதிசக்தி
    விழிப்பே சிவமென்றால் விரிபார்வை என்சக்தி!

     

    வெற்றுக் காகிதமே வெறும்சிவம் என்போம்நாம்
    வீசுகின்ற காற்றிலது வீரசக்தி நாட்டியமாம்
    சற்றும் அசைவின்றிச் சாலை கிடக்கிறது
    சங்கீதக் காற்றுவந்தால் சக்தியாட்சி நடக்கிறது!

     

    தானாய் இயங்குவதும் தன்னைப் பிரித்ததுவும்
    தான்பிரித்த அமைதியினுள் தான்புகுந்து சுழற்றுவதும்
    நானா விதமான நாட்டியங்கள் பலவாடி
    நாதவித்துள் ஒடுங்கிமீண்டும் நலம்நாடி விரிவதுவும்

     

    அன்னை மஹாசக்தி ஆடுகின்ற ஆட்டமடா!
    அவள்போக்கை யாரறிவார்? அதைநாம் யார் பகுத்தறிய?

     

    சின்னப் பொறியினிலே திருமுருகன் பிறந்ததுவும்
    சுண்ணாம்புக் காளவாயோர் தமிழ்ச்சொல்லால் குளிர்ந்ததுவும்
    சிறுகுருவி இலைதைத்துச் சிறுவீட்டில் வாழுவதும்
    சினங்கொண்ட பெருயானை இடமின்றித் திரிவதுவும்
    எறும்புக்குச் சுறுசுறுப்பும் சேவலுக்குப் பெருந்திமிரும்
    எவர்சொல்லி வந்ததடா? எவர்சொல்ல முடியுமடா?

     

    அன்னை மஹாசக்தி ஆடுகின்ற ஆட்டமடா!
    அவள்போக்கை யாரறிவார்? அதைநாம் யார் பகுத்தறிய?

     

    சின்னத் துளியினிலே ஜீவனைத் தவிக்கவிட்டாள்
    சீராய் அதுவளரச் சிற்றில்லம் கட்டிவைத்தாள்
    தன்னையே பெண்ணாக்கித் தன்னையே ஆணாக்கித்
    தானடங்கி அச்சிவத்தைத் தவிக்கவிட்டுப் பின் தணித்துத்
    தானே மீண்டும் தாரணியில் உருவெடுத்துத்
    தனியாகக் காத்திருப்பாள்! தன்னையெ எதிர்பார்த்திருப்பாள்!
    வானை இருளவைப்பாள் வண்ணமின்னல் வெட்டிடுவாள்
    வற்றிமண் வெடிக்கவைப்பாள் வாரிவாரிக் கொட்டிடுவாள்

     

    அன்னை மஹாசக்தி ஆடுகின்ற ஆட்டமடா!
    அவள்போக்கை யாரறிவார்? அதைநாம் யார் பகுத்தறிய?

     

    கண்ணீர் விழிவிளிம்பில் பளபளத்துத் ததும்புகையில்
    கழுத்தினைக் கைவிலங்கால் கட்டியொரு சிறுகுழந்தை
    தண்முத்தம் கொடுக்கையிலே தானாக மகிழ்ச்சிவரும்
    தானாக ஒருநெகிழ்ச்சி கண்ணீரைக் கங்கையாக்கும்
    ஏனழுதோம் ஏன்சிரித்தோம் என்றகேள்வி எழும்போது
    ஏதோவோர் அமைதிவரும் இன்பதுன்பம் இணைந்துவிடும்
    தானாய்ப் பிறக்குமிந்தத் தனியான அமைதியிலே
    தாண்டவச் சக்தியும் தனிச்சிவமும் ஒன்றிநிற்கும்!

     

    சக்திக்காய் ஏங்குவது தத்துவத்தில் வாராது
    சதாசிவம் என்னும்நிலை சாத்திரத்தால் நேராது
    பக்தியெனும் கனலினிலே பாய்ந்து கிடக்கவேண்டும்
    பாறை இளகிப் பசுவெண்ணெய் ஆகவேண்டும்!

     

    காரிருளே நிலைத்துவிட்டால் கவலையில்லை, நடுவினிலே
    கவின்மின்னல் சிலகாட்டிக் கதவடைத்து விட்டாயே?
    பேரிருளை மின்னலிட்டுப் பெரியதாக்கி விட்டாயே!
    பேதைக்குக் கண்சிமிட்டிப் பெரும்பேதை ஆக்கினாயே!

     

    ஏங்கி அழுவதல்லால் ஏழைநமக் கேதுவழி?
    ஏங்கி வரும் கண்ணீர்க்கு ஈடிங்கே எந்தமொழி?
    சிவமாய்க் கிடப்பதென்ன சிறிதான காரியமா?
    சிறகின்றிப் பறப்பதென்ன சிறியோர்க்குக் கிட்டிடுமா?
    சவமென்ப திங்கில்லை! சடமென்பதிங்கில்லை!
    சத்தியத்தைச் சொல்லுகிறேன் சக்திசிவம் தானுண்டு!

     

    சக்தியொன்றே உள்ளதெனக் கடலினிலே தக்கைபோல்
    தனக்காய்ச் சலனமின்றிச் சார்ந்திருத்தல் சிவமாகும்
    பக்தியொன்றால் அந்தப் பரமநிலை எய்திடலாம்
    பாடலினால் பராசக்திப் பாதத்தை அடைந்திடலாம்!

    படங்களுக்கு நன்றி:

    http://media.photobucket.com/image/shiva%20shakti/imnotababy/Spritual%20and%20People/shiva_shakti.jpg?o=13

     

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : மூலக்கூறு முகிலில் புவிக் கடல்கள் போல் 2000 மடங்கு நீர் ஆவி கண்டுபிடிப்பு

     

                                                                               (Water in Molecular Cloud Found 2000 Times Earth’s Oceans)


                          சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

    நீரின்றேல் ஒரு முரண்கோள் போல்
    கோரமாய்த் தோன்றும் பூமி !
    பொரி உருண்டை யானது நீர்ப்
    பொழிவால், ஈர்ப்பு விசையால்  !
    பூமிக்குள் அதன் ஆழ்கட லுக்குள்
    கோளுக்குள்
    கோளின் குடலுக்குள், பாறைக்குள்,
    உறங்கும் படு பாதாள
    ஊற்றுக்குள் நெளிந்தோடும்
    ஆற்றுக்குள்,
    நிலையான ஏரிக்குள்
    நிரம்பியது எப்படி
    நீர் வெள்ளம் ?
    எப்போது படைப் பானது ?
    நூறு கோடி ஒளியாண் டுக்கு
    அப்பால்
    பூர்வப் பிறப்பில் தோன்றியதா ?
    வேர் ஊன்றி பூமியில்
    நீர் மயமாய் விளைந்ததா ?
    மூலக மின்னியக்கம் இணைத்தா ?
    மூலக் கூறுகள் பிணைந்தா ?
    மின்னல் அடித்து உண்டான
    பின்னலா ?
    தோல் அடியில் பனி சுமக்கும்
    வால்மீன்கள் தாக்கி
    கோளில் வாரிக் கொட்டியதா ?
    விண்மீன் சந்தையில்
    அண்டவெளி மூலக்கூறு முகில்கள்
    விண்டு போய்ப் பொழிந்ததா ?
    ஆழ்ந்து உளவி னாலும் இந்தக்
    கேள்விக்கு முழு விடை இன்னும்
    கிடைக்க வில்லை !

    ++++++++++++++

    “எங்கள் கண்ணோக்குக்கு முன்பு அனைத்து நீர் மயமும் பனித்தூளாய் இருந்தது என்று கருதினோம்.   ஏனெனில்  அவை வாயு வடிவத்தில் மாற முடியாதபடி விண்வெளி முகிலில் குளிர்ச் சூழ்நிலை பரவிக் கிடந்ததது.   அதை நாங்கள் அளக்க இயலாது போனது என்று அறிந்தோம்.   ஆனால் இப்போது நாங்கள் அதை ஆழ்ந்து,  குறிப்பாக ஓரளவு நீர் ஆவி நிலை பெற,  இந்தத் திரண்ட அரங்கத்தில் இரசாயன இயக்கங்களைத் தூண்டும்,   “அகிலக் கதிர்களின்”  [Cosmic Rays] முக்கியத்துவம் பற்றி  ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிந்தோம்.”

    டாக்டர் பௌலா காசெல்லி  [University of Leeds, U.K.]

    fig-1-water-clouds-near-star

    “வெகு தூரப் பிரபஞ்சத்தில் ஈர்பாற்றல் பெரிது படுத்திய அண்டத்தில் (Gravitationally Magnified Object) நீர்மயத்தை நாங்கள் கண்டுபிடித்தது விந்தையான ஓர் நிகழ்ச்சியே.  நாம் முன்பு நினைத்தது போலின்றி நீர் மூலக்கூறுகள் பூர்வத் தோற்ற பிரபஞ்சத்தில் செழிப்புடன் இருந்ததை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.  மேலும் இதைப் பல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள பேரசுர நிறையுடைய கருந்துளைகள், ஒளிமந்தைகள் ஆகியவற்றின் படிப்படி வளர்ச்சியை (Supermassive Black Holes & Galaxy Evolution) அறிய அடுத்த கட்ட ஆய்வு நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.”

    ஜான் மெக்லீன், மாக்ஸ் பிளாங்க் ஆய்வகம், ரேடியோ வானியல் [டிசம்பர் 29, 2008]

    “மற்றவர்கள் நீரைக் காண முயன்று தோற்றுப் போயினர்.  மிக மங்கலான சமிக்கையைக் காண்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.  ஆகவே வெகு வெகு தூர அண்டத்தை நோக்கவும், அழுத்தமாகப் பதியவும் அகிலப் பெரிதுபடுத்திக் கண்ணாடியாக (Cosmic Magnifying Lens) முன்னுள்ள காலாக்ஸியைப் பயன்படுத்தி நீர் ஆவி (Water Vapour) துள்ளி எழுவதைக் கண்டுபிடித்தோம்.”

    வயலட் இம்பெல்லிஸெரி மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர் [டிசம்பர் 29, 2008]

    fig-1a-water-life-in-universe

    “நீர் மேஸர் (Water Maser) கதிர்கள் அண்டையில் உள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.”

    ஜான் மெக்லீன்.

    “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கி விடுகிறது.  அடுத்த பிறவி புது முறை ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட எமக்கு வழி திறந்துள்ளது.”

    வயலட் இம்பெல்லிஸெரி

    cover-image-swas-probe-1

    “சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்கா வின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது!”

    லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]

    “சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”

    வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]

    “பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்!”

    டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]

    fig-1e-formation-of-watery-earth1

    புவிக்கடல் போல் பன்மடங்குள்ள நீர் மய ஆவி முகிலைப் பற்றி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு:

    ஈசாவின் ஹெர்ச்செல் விண்ணோக்கி ஆய்வகம் [ESA : European Space Agency’s Herchel Space Observatory  ]  தூசி வாயு முகில் வடிவத்தில்  புவிக்கடலைப் போன்று 2000 மடங்கு பெரிதான நீர் மயத்தை முதன்முதல் கண்டிருப்பதாக அறிவித்துள்ளது.   அந்த அதிசய நீராவி முகில் நமது பரிதியைப் போன்றிருந்து சிதைந்து போகும்  புதியதொரு விண்மீனின் விளிம்பில்  காணப் பட்டது.   விண்மீன் உருவாகும் குளிர்ந்த வாயுத் தூள்  கருமை முகில்களில்  [விண்மீன் தோற்றக் கரு (Pre-Stellar Cores)]  ஒரு சூரிய குடும்பம் உண்டாவ தற்குரிய அனைத்து உபரிக் கூறுகள் [Ingredients] இருப்பதாய் அறியப் படுகிறது.

    பூமியில் உயிரினம் விருத்தி அடைய மூலாதாரமாக இருப்பது நீர் வளம்.    அந்த நீர்வளம் நமது பரிதி மண்டலத்துக்கு புறத்தே வாயுப் பனி பூசிய தூசித் தூள்களில் விண்மீன் ஆக்கு தளங்களின் அருகில் காணப் பட்டது.   மேலும் பூர்வ அண்டக்கோள் தட்டுகளும் [Pro-Planetary Discs] பிற அண்டங்கள் உருவாக்கும் திறமை கொண்டுள்ளன.

    ரிஸபம் விண்மீன் குழுகில் [Taurus Constellation (Lynds : 1554) உள்ள குளிர்ந்த பூர்வ விண்மீன் கருவை நோக்கிய ஹெர்செல் விண்ணாய்வுக் கருவியின் புதிய கண்டுபிடிப்பு : விண்மீன் தோற்ற ஆரம்பத்தில் மூலக்கூறு முகிலில் நீர் மய ஆவி இருப்பு.  “ஓர் அண்டத்தை நிரப்ப, பூமிக் கடல் போல் மூன்று மில்லியன் கொள்ளளவு  பரிமாண நீர் ஆவி முகிலில் இருக்க வேண்டும்,” என்று லீட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானி பௌலா காசெல்லி கூறுகிறார்.   அவரது ஆய்வுரை சமீபத்தில் வெளியான வானியல் பௌதிக வெளியீட்டில்  அறிவிக்கப் பட்டுள்ளது.

    “எங்கள் கண்ணோக்குக்கு முன்பு அனைத்து நீர் மயமும் பனித்தூளாய் இருந்தது என்று கருதினோம்.   ஏனெனில்  அவை வாயு வடிவத்தில் மாற முடியாதபடி விண்வெளி முகிலில் குளிர்ச் சூழ்நிலை பரவிக் கிடந்ததது.   அதை நாங்கள் அளக்க இயலாது போனது என்று அறிந்தோம்.   ஆனால் இப்போது நாங்கள் அதை ஆழ்ந்து,  குறிப்பாக ஓரளவு நீர் ஆவி நிலை பெற,  இந்தத் திரண்ட அரங்கத்தில் இரசாயன இயக்கங்களைத் தூண்டும்,   “அகிலக் கதிர்களின்”  [Cosmic Rays] முக்கியத்துவம் பற்றி  ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிந்தோம்.””  என்று டாக்டர் பௌலா காசெல்லி  கூறுகிறார்.

    நீரில்லாது போனால் பூமி உருண்டையாக இருக்காமல் குழிகளும், மலைகளும் நிரம்பிய ஒரு முரண் கோளாய்க் [Asteroid] காணப்படும்.    குழிகளில் ஏறாளமான நீர் நிரம்பி ஈர்ப்பு விசையால் முரண் கோள் பூமி உருண்டையாகத் தெரிகிறது.

    பிரபஞ்சத்தின் வெகு வெகு தொலைவில் நீர்மயமா ?

    2008 டிசம்பரில் ஜெர்மனியின் மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தின் ஆராய்ச்சிக் குழுவொன்று 100 மீடர் எஃபெல்ஸ்பெர்க் ரேடியோ தொலைநோக்கியில் (Effelsberg Radio Telescope) இதுவரை காணாத பூமியிலிருந்து வெகு வெகு தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தில் நீர்மயம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.  11 பில்லியன் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் நீர் ஆவி (Water Vapour) இருப்பதைக் கண்ட தளம் : குவஸார் (Quasar MG J0414 + 0534 at Redshift 2.64) (Redshift 2.64 means 11.1 Billion Light Years Distance).  அதாவது “சிவப்பு நகர்ச்சி 2.64″ என்றால் அந்த தளம் பிரபஞ்சமானது ஐந்தில் ஒரு பங்கு வயதில் (13.7 பில்லியன்/5 =2.74 பில்லியன் ஆண்டு வயது) இருந்த போது உண்டான பூர்வத் தோற்ற அமைப்பு !  இந்த அரிய நிகழ்ச்சியைக் காண வானியல் விஞ்ஞானிகள் சுமார் 14 மணிநேரம் எடுத்தனர்.

    fig-1f-what-controls-the-abundance-of-water

    பூர்வத் தோற்றப் பிரபஞ்சத்தில் நீர் இருந்த கண்டுபிடிப்பைக் காண முடிவதற்கு ஒரு நிபந்தனை : பல்லாயிரம் கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள குவஸாரும் (MG J0414 + 0534) அதற்கு முன்னால் அதை மறைக்கும் ஒளிமந்தை காலாக்ஸியும் நேர் கோட்டில் இணைந்திருக்க வாய்ப்பிருக்க வேண்டும் !  முன்னிற்கும் காலாக்ஸி குவஸார் அனுப்பும் ஒளியைத் திரிபு செய்யும் ஓர் “அகிலத் தொலை நோக்கி யாகவும்”, “அகிலப் பெரிது படுத்தியாகவும்” (Cosmic Telescope & Magnifier) உதவி செய்கிறது !  காலாக்ஸி புரியும் அத்தகைய “ஈர்ப்பாற்றல் பெரிதுபடுத்தி” (Gravitational Lensing) இல்லை யென்றால் இந்த விந்தை யான நிகழ்ச்சியைக் காண ஆய்வாளர்கள் 100 மீடர் ரேடியோ தொலைநோக்கி மூலம் தொடர்ந்து 580 நாட்கள் கண்காணித்து வந்திருக்க வேண்டும் !

    fig-2-molecular-clouds

    வெகு தொலைவில் நீர் ஆவி எழுச்சி எப்படிக் காணப்பட்டது ?

    நீர் ஆவி எழுச்சி லேஸர் ஒளிக்கதிர்போல் “மேஸர்” கதிரலையாக (Maser -Microwave Amplification by Simulated Emission of Radiation) நுண்ணலை அலைநீளத்தில் தெரிந்தது.  அந்த சமிக்கையானது பரிதியின் ஒளிக்காட்சி போல் (Luminosity) 10,000 மடங்கு வெளிச்சத்துக்கு ஒப்பானது.  அத்தகைய வானியல் பௌதிக மேஸர் கதிர்கள் அடர்த்தியான துகள், வாயு எழுகின்ற வெப்ப அரங்குகளைக் காட்டுகின்றன என்பது முன்பே அறியப் பட்டது.  அதாவது பெரு வெடிப்பு நேர்ந்து 2.5 பில்லியன் ஆண்டுகள் கடந்த பிரபஞ்சத்தின் பிள்ளைப் பிராயத்தில் இருந்த குவஸாரின் அடர்த்தி வாயுக்கள் அந்தச் சூழ் நிலையில் சேர்ந்து நீர் மூலக்கூறுகளை உண்டாக்கி உள்ளன என்பது அறியப்பட்டிருக்கிறது.

    fig-3-the-river-flow-patterns-in-mars

    நீர் மேஸர் கதிர்கள் நெருங்கியுள்ள அநேக காலாக்ஸிகளில் காணப்படுகின்றன !  காலாக்ஸியின் மையத்தில் இருக்கும் பேரசுர நிறையுள்ள கருந்துளையை மிக்க அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் சூடான வாயுக்கள், துகள்கள் இருக்கும் பகுதிகளில் நீர் மேஸர் கதிர்கள் தென்படுகின்றன. அதாவது நீர் மூலக்கூறுகள் உள்ள மேஸர் கதிர்கள் காலாஸி தட்டில் இல்லாமல் கருந்துளையின் ஈர்ப்பாற்றல் வீசி எறியும் பேரெழுச்சிக் கணைப் பொருட்களில் தெரிகின்றன.  “நீர் மேஸர் கதிர்கள் காலாக்ஸிகளின் கருவில் தென்படுவதால் இப்போது பேரசுர நிறையுள்ள கருந்துளைகளைப் பற்றி ஆய்வு புரிய எங்களுக்கு ஆர்வம் உண்டாக்கிப் புதிய கதவு திறக்கிறது.  மேலும் இப்போது கைவசமுள்ள தொலைநோக்கிகள் மூலம் நீர் மயமுள்ள வெகுதூரக் காலாக்ஸிகளை நோக்க மேம்பட்ட ஆராய்ச்சிகள் செய்ய ஊக்கம் ஊட்டுகிறது.  அடுத்த பிறவி புதுயுக ரேடியோ தொலை நோக்கிகள் மூலமும் தேட வழி திறந்துள்ளது,” என்று மாக்ஸ் பிளாங்க் ஆய்வகக் குழுத் தலைவர், வயலட் இம்பெல்லிஸெரி கூறினார்.

    fig-5-swas-space-probe-in-orbit

    பிரபஞ்சத்தில் நீர் மயத்தைத் தேடும் சுவாஸ் விண்ணுளவி

    வானியல் விஞ்ஞானிகள் ஊகிக்கும் பகுதிகளைத் தவிரப் பிரபஞ்சத்தில் எப்புறத்தில் நோக்கினாலும் அங்கே நீர் இருப்பது தெரிந்துள்ளது.  இந்த அறிவிப்பு 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாசா ஆய்வகத்தார் ஏவிய சுவாஸ் விண்ணுளவி (SWAS – Submillimeter Wave Astronomy Satellite) கண்டுபிடித்த விளைவுகளில் அறியப்பட்டது.  பூமியைச் சுற்றிய சுவாஸ் விண்ணுளவியின் குறிக்கோள்: விண்மீன்களின் வாயு முகில்களில் உள்ள இரசாயனக் கூட்டுப் பண்டங்கள் (Chemical Composition of Intersteller Gas Clouds) யாவை என்று அறிவது.  சுவாஸின் பிரதான தேடல் நீர் !  பிறகு விண்மீன் தோன்றும் காலாக்ஸி அரங்குகளில் ஆக்ஸிஜன் மூலக்கூறு, கார்பன், ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு ஆகியவற்றின் இருப்பைக் காண்பது.

    fig-6-swas-instrumentation

    1998 டிசம்பர் 5 இல் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் பெகஸஸ் ராக்கெட் (Pegasus-XL Launch Vehicle) மூலம் 288 கி.கி. எடையுள்ள சுவாஸ் துணைக்கோள் ஏவப்பட்டது.  அதுமுதல் சுவாஸ் ஏது பழுதின்றி ஒழுங்காய் பூமிக்கு மேல் 600 கி.மீடர் (360 மைல்) உயரத்தில் இயங்கி வருகிறது.  சூரியத் தட்டுகள் உதவியால் வெப்ப சக்தியை இழுத்து 230 வாட் மின்சக்தியை உற்பத்தி செய்து கொள்கிறது.  அது கொண்டுள்ள கருவிகள் கீழ்க்காணும் மூலக்கூறுகளை காலாக்ஸிகளில் காணும் திறமையுடையவை :

    1.  நீர் (Water H2O at 556.936 GHz)

    2.  ஆக்ஸிஜன் மூலக்கூறு (Molecular Oxygen O2 at 487.249 GHz)

    3.  நடுநிலைக் கார்பன் (Neutral Carbon C at 491.161 GHz)

    4.  ஏகமூலக் கார்பன் மானாக்ஸைடு (Isotopic Carbon Monoxide 13CO at 550.927 GHz)

    5.  ஏகமூல நீர் மூலக்கூறு (Isotopic Water 2H18O AT 548.676 GHz)

    fig-swas-space-probe-mission

    நீரைக் கண்டுபிடிப்பதுடன் விண்மீன்களின் மூலக்கூறு முகில்களில் சுவாஸ் விண்ணுளவி மற்ற மூலகங்களைக் (Elements) காணவும் டிசைன் செய்யப் பட்டுள்ளது.  சுவாஸ் ஐயமின்றி நமது சூரிய மண்டலத்தில் வால்மீன்கள் தாக்கிய வாயுக் கோள்களான வியாழன், சனிக் கோளை காட்டியுள்ளது.  மேலும் சுவாஸ் செவ்வாய்க் கோளின் வாயுக் கோள் மண்டலத்தில் 100% ஒப்பியல் நீர்மையைக் (Relative Humidity) காட்டியுள்ளது.  செவ்வாய் வாயுத் தளத்தில் நீர்ப் பரவல் 10 முதல் 45 கி.மீடர் உயரம் வரை 100% பூர்த்தி நிலையில் (100% Saturation) இருப்பதைக் காட்டியுள்ளது.

    சுவாஸ் விண்ணுளவி கண்டுபிடித்த விந்தைகள்

    மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளைச் சுவாஸ் விண்ணுளவி இதுவரை அறிவித்துள்ளது.  அண்ட வெளி விண்மீன் பகுதிகளில் நீர்மயச் செழிப்பு பல்வேறு விதங்களில் மாறியுள்ளதைக் காட்டுகிறது.  அநேகப் பேரசுர மூலக்கூறு முகில்களில் காணப்பட்ட நீர்மயச் செழிப்பு அண்டக் கோள் விண்மீன் பகுதிகளை விட ஓரளவு குறைவாகவே உள்ளது என்று காட்டியிருக்கிறது. மேலும் புதிதாக உருவாகும் விண்மீன்களிலும், செவ்வாய், வியாழன், சனிக் கோள்களின் வாயு மண்டலத்திலும், “வால்மீன் லீ” யிலிம் (Comet Lee) நீர் இருப்பதைச் சுவாஸ் காட்டியுள்ளது.

     

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
    20 (i) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603171&format=html (Elceladus & Mars)
    20 (ii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Mission-1)
    20 (iii) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40501202&format=html (Cassini-Huygens Space Mission-2)
    21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
    22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
    22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
    23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
    24. Scientific American – Secrets of Saturn’s Moon-Icy Enceladus Has Active Geysers & Perhaps a Hidden Sea that could Harbour Life [December 2008]
    25. NASA Exobiology & Terraforming By : Steven Lin
    26. The Primate Diaries – Parsimony & the Origin of Life in the Universe (Sep 5, 2007)
    27. Water in the Universe : Abundant ? Yes – But Not Where We Thought it Would Be ! By : Keith Cowing (Aug 20, 2000)
    28. University of Honolulu Astrobiology Team Studies Water & Life in the Universe By : Karen Meech & Eric Gaidos (June 2003)
    29. BBC News Astronomers Should Look for Life in Nearby Planetary Systems Where Comets Swirl Aound Blazing Stars, Releasing Vast Amounts of Water. By : Dr. David Whitehouse (July 12, 2001]

    30 Highlights of the SWAS Mission By : Gary J. Melnick (2003)
    31 Daily Galaxy : New Discovery Shows Water Abundant in Early Universe By : Jason McManus [Dec 29, 2008]
    32 Comet Crystals Found in a Nearby Planetary System [October 8, 2012]
    33 Daily Galaxy : Water in Molecular Cloud Found 2000 Times Earth’s Oceans [October 10, 2012]
    34 Large Water Reservoirs at the Dawn of Stellar Birth [October 10, 2012]

     

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (October 13, 2012)

    Share
  • நவராத்திரிப் பாடல்

     இசைக்கவி ரமணன்

     

    கண்ணுக்குக் கண்ணான என் காளியின் பாதம் முன்னே

    காளிக்கு முன்னே எந்தக் கருமமும் தருமமும் பின்னே

    மண்ணெங்கும் விண்ணானது மாரியின் கருணை கண்ணே

    மாரியின் சொந்தம் முன்னே மனிதரின் பந்தம் பின்னே

     

    ஏழைக்குக் கூழை ஊற்ற எங்கிருந்தோ அவள் வந்தாள்

    எல்லாமுமாகத்தானே எதிரே அன்னை நின்றாள்

    வாழத்தான் வேண்டுமென்று வாதைகள் தூசே என்று

    வளவிக்கை குலுங்கநம்முடன் வழியாய்த் துணையாய் வந்தாள், ஒரு

    வளைவினிலே வழியை மறித்து வாரித் தழுவிக் கொண்டாள்! (கண்)

     

    வேடங்கள் பொய்கள் யாவும் வெட்டிப்போடும் வீரி

    வெந்தண லில்நடந்தால் சந்திரன் மொழியும் மாயி

    பாடங்கள் தினமும் உண்டு படியவைக்கும் தண்டனை உண்டு

    பாராத வேளைதன்னில் பனிமுத்தங்கள் பரிசுண்டு

    பரிதவிக்கும் நேரம் அந்த மடியில் தூங்கும் சுகமுண்டு

     

    ஊருக்கு நானோர் ஏழை உண்மையில் நானே செல்வன்

    உலகம்போனாலும் எங்கும் போகாதம்மா என் செல்வம்

    யாருக்குக் கிட்டும் இந்தக் காளியின் கருமைப் பாதம்

    நீரோடும் விழியோடருகே நின்றால் அதுவே போதும்….

     

    இசைக்கவியின் குரலில் பாடலைக் கேளுங்கள்

     

    படங்களுக்கு நன்றி : 

    http://www.shaktipeethas.org/ashtadasa/topic533.html

    http://en.wikipedia.org/wiki/Mahakali

     

     

     

    Share
  • இன்னுயிர் ஈந்து மானம் காத்துக் காவல் செய்வோம்

    நாகராசன் 

    பசும்போன் முத்துராமலிங்கத் தேவர்

    தமிழகத்தின் வரலாற்றில் தமிழ் நாட்டின் தென்பகுதி, வீர இலக்கியப் பதிவுகளில் மறவர் பூமி என்று அழைக்கப்படும் பூமி.  இங்கு வாழ்ந்த மறவர் குமுகம், குறிப்பிடத்தக்க பண்புக் கூறுகளான மானம், தன்மானம், முதல் மரியாதை, வாழ்வுப் பழக்கம், காவல் என்ற தமிழனின் அரும் பெரும் பண்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போற்றி காத்துவரும் தமிழ்க் குமுகப் பிரிவாகும்.

    இலக்கியங்கள் குறிப்பிடும் வீரப் பண்புகளான செஞ்சோற்றுக்கடன், தலைவன் இறந்த செய்தி கேட்டால் தன் தலையைக் கொய்து வீர மரணம் அடைதல், வாளால் தலையை அறுத்துத் தலைவன் காலடியில் படைத்தல், அரசனுக்காக நாட்டுக்காக உயிர்துறக்க எக்கனமும் தயார் நிலையில் இருத்தல், ஆகியவை சற்றும் வழுவாமல் கடைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தலைசிறந்த போர்வீரர்கள் என்று பெருமை பெற்றவர்கள். 

    வீரச் செயல் புரிந்து வீரமரணம் அடைந்தவர்கள் நினைவைப் போற்றி, வீரர் நடுகல் நட்டு, அதில் அவர்களின் வீரப் பராக்கிரமம் பற்றிய புகழாரங்களைச் செதுக்குவதும், போரின் வெற்றிக்குக் காரணமானவர்களைக் குறுநில மன்னர்களாக்கி அழகு பார்ப்பதும், தமிழக வரலாற்றில் நிரவிக்கிடக்கும் தகவல்களாகும். 

    ஆங்கில ஆதிக்கம், அதன் நாடு பிடிக்கும் பேராசைக்குப் பெரும் தொல்லை தந்தவர்கள் என்ற முறையில், ஆங்கிலேயர்களுக்கு இந்த மறவர் குமுகத்தின் மீது அச்சமும் பகையும் வெறுப்பும் இருந்தது.  அவர்களின் வாழ்வியல் மரபை, அவர்களின் பழக்க வழக்கங்களை, சரிவரப் புரிந்துகொள்ளாத ஆங்கிலேயர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழும் சில பழங்குடிகளை குற்றப் பரம்பரை என்று அடையாளம் காட்டப்பட்டதுபோல், தமிழகத்திலும் அவர்களைக் குற்றப் பரம்பரையினர் என்று அடையாளப்படுத்தி அவர்களைக் குற்றப் பரம்பரை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 

    தங்கள் மண்ணுக்குள் வந்த மிலேச்சசர்கள் மறவர்களின் கோவில்களைத் தம் வசப்படுத்தி அவர்களின் இறைவழிபாட்டைத் தடை செய்தது மறவர்கள் மத்தியில் ஆங்கிலேயர் மீது மாறா வெறுப்பும் தீராப் பகையும் கொள்ள வைத்தது.  அவர்கள், அவர்களின் கிராமத் தெய்வங்களை வழிபாடு செய்து, இறைவன் சந்நதியில் முதல் மரியாதை பெற்று, உயர்தனிச் சிறப்புடன் சிறு குழுவாக வாழ்ந்த அவர்களின் வாழ்முறை சிதைந்ததை, அவர்கள் தங்களின் தன் மானத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதினார்கள்.  இதன் காரணமாக ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான உரிமைக்குரல் இந்த மறவர் பூமியில் தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் நிகழ்ந்தது. 

    சாத்வீகப் போர், தர்ம யுத்தம் என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது என்று சொல்லி, ஆயுதம் எடுப்போம் என்ற நேதாஜி அவர்களின் சங்கநாதம், சிங்கையிலும் மலாயாவிலும், தோட்டத் தொழிலாளர்களாகவும் ஏவலர்களாகவும் வேலை பார்த்தாலும் அவர்களின் இயல்பான போர்க்குணம் ஓங்க இந்தியத் தேசிய ராணுவமாக்க் கிளர்ந்தெழுந்து, புலம்பெயர்ந்த இந்திய அரசு வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்டு ஆங்கிலேயர்களை ராணுவ ரீதியில் சந்திக்க இந்த மறவர் படை பெரும் ஆற்றலுடன் போரிட்டது.  நமது லட்சியம் செங்கோட்டை என்ற முழக்கத்துடன் இந்தியாவில் மணிப்பூர் வரை வந்த இந்த மறவர்படை ஜப்பானின் தயக்கத்தால் ஆங்கிலேயர்களிடம் சிறைபட்டு வெஞ்சிறையில் வாழ நேர்ந்தது. 

    மானம், தன்மானம் என்று வாழ்ந்த இவர்களை ஒரு குற்றப் பரம்பரை என்று, வீர மாண்பு நிறைந்த ஒரு குமுகப் பிரிவையே கொச்சைப்படுத்தியதை, எதிர்த்துக் காங்கிரசில் இருந்து மதுரை வழக்கறிஞர் ஜோசப் (ரோசாப்பூ துரை) முயற்சி எடுத்து, அவர்கள் படும் இன்னல்களைக் குறைத்தாலும் அவர்களை அந்தக் குற்றப்பரம்பரை என்று மோச வலையிலிருந்து மீட்க இயலவில்லை. 

    மாபெரும் குறுநில மன்னர் வழி வந்து, அளவற்ற செல்வத்துடன் பசும்பொன் கிராமத்தையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அடக்கியுள்ள நிலப்பரப்பில் பிறந்து வளர்ந்த, முத்துராமலிங்கத் தேவர், தேவர்களாகிய மறவர்களை ஒருகுடைக்குள் கொணர்ந்து, அவர்களின் அரிய பண்புகளை மீண்டும் தழைக்கச் செய்து, அவர்களின் வீரம் இந்தியச் சுதந்திரத்துக்குச் செந்நீர் பாய்ச்சி, அவர்கள் குற்றப் பரம்பரையினர் அல்ல, ‘அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கில் இருந்த பண்புக்கூறுகளுடன், இறையுணர்வுடன், மற்றவர்களைக் காவல் காத்து, அவர்களுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள்’, என்று நிலை நிறுத்தியவர்.  

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாறாத மனித நேயம், குறையாத இறையுணர்வு, எளிமையான வாழ்வு என்று மானிடத்தின் உயர் பண்புகளுக்கு உறைவிடமாக இருந்து, லட்சக்கணக்கான மறவர்களை ஒன்று திரட்டி, அவர்களின் வீரத்தை, தியாகத்தை இந்திய அரசியல் வானில் வெளிச்சம் போட்டுக்காட்டத் தன் இன்னுயிர் தந்தவர் என்றால் மிகையாகாது.

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 14

    இன்னம்பூரான்

    அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே. இன்று (அக்டோபர் 5, 2012) இங்கிலாந்தில் பல வருடங்களாக நிலுவையிலிருந்த வழக்கு ஒன்றில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு இங்கு அலசப்படவில்லை. அந்த வழக்கின் போக்கும், தீர்ப்பின் தன்மையும் மட்டுமே அலசப்படுகின்றன, நமக்குப் பல படிப்பினைகள் இருப்பதால். மனித உரிமையின் சிக்கலான, பல பரிமாணங்களை முன்னெடுத்து வைக்கும் இந்த வழக்கில் விண்ணப்பதாரர்கள் ஐவர். அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே உள்ள உடன்பாட்டுக்கிணங்க, இவர்களை, அங்கு நீதி மன்றம் முன் நிறுத்த வேண்டி, அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பாக ஒரு வேண்டுகோள். மனித உரிமை பறி போகிறது. எங்களை அங்கு அனுப்பக்கூடாது என்று ஐவரின் தனித்தனி விண்ணப்பங்கள். ஒரு வழக்கு 14 வருடமாக நடக்கிறது; மற்றொன்று 13 வருடங்களாக. சாற்றப்பட்ட குற்றங்கள் தீவிரமானவை: 1. கிழக்காப்பிரிக்காவில் இரு அமெரிக்கத் தூதரகங்கள் மீது நடந்த தாக்குதலில் 200 பேர் மரணம்;4500 பேர் காயம். 2. யேமன் நாட்டில் சிலரை அபகரிப்பது, அமெரிக்காவின் ஆரகன் மாநிலத்தில் ஒரு பயங்கரவாதி மையம் அமைப்பது போன்ற செயல்கள். 3. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இணைய தளங்கள் மூலமாக பயங்கர வாதத்திற்கு நிதி திரட்டுவது. அது எல்லாம் ஒருபுறமிருக்க, மனித உரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கண்கூடு.

    பதினான்கு பக்கங்களுக்குள் எழுதப்பட்ட இந்தத் தீர்ப்பின் சாராம்சம், வழக்குகளின் வரலாறு, மனித உரிமை பற்றி இங்கிலாந்து கோர்ட்டுகளிலும், ஐரோப்பிய உயர்நீதி மன்றத்திலும், அமெரிக்க கோர்ட்டுகளிலும் நடைபெற்ற விவரங்கள், தீர்ப்புக்கள், சாட்சியம், மனித உரிமை நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் தெளிந்தோடும் பளிங்கு நீர் போல், துல்லியமாக அலசியதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

    ஐந்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. ஏன் என்பது விளக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கையும், தீர்ப்பையும், இன்று நான் எடுத்துக்கொண்டதின் காரணம், ‘அவ்வப்பொழுது மற்ற நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதே’ என்ற கருத்து.
    *

    தீர்ப்பின் நகலைப் படிக்க…

     

    புகைப்படத்துக்கு நன்றி:

    http://rpmedia.ask.com/ts?u=/wikipedia/commons/thumb/1/1a/Royal_Coat_of_Arms_of_the_United_Kingdom_(HM_Government).svg/115px-Royal_Coat_of_Arms_of_the_United_Kingdom_(HM_Government).svg.png

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(27)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    இதோ உங்கள் முன்னே மீண்டும் அடுத்தொரு மடலுடன்.

    “அரசியல்”இந்தச் சொல் அரங்கத்தில் இல்லாத நாடுகளிலே இவ்வகிலத்தில் இல்லை என்றே சொல்லலாம். அரசியல் திருவிழாக் காலம் இங்கிலாந்திலே வந்து விட்டது.

    அது என்ன”அரசியல் திருவிழாக்காலம்”என்கிறாயே என்கிறீர்களா?

    வருடா வருடம் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் மகாநாடு நடப்பதுண்டு. இம்மகாநாட்டிலே அரசாட்சி அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் கட்சி தாம் இதுவரை எடுத்த கொள்கைகளின் வெற்றியைப் பற்றிய ஆலாபனையும், தாம் இனி எடுக்கப்போகும் திட்டங்களையும் அவை மக்களுக்கு பயக்கப் போகும் நன்மைகளைப் பற்றிய விளக்கங்களையும், எதிர்க்கட்சிகளின் இயலாமையை எள்ளி நகையாடுவதையும் இம்மேடையில்தான் அரங்கேற்றுவார்கள்.

    அப்படியானால் அரசு முன்னெடுத்த கொள்கைகளில் ஏதாவது தோல்வியைத் தழுவியதைப் பற்றி விவரிப்பதில்லையா? என்ற கேள்வி புரிகிறது.

    தோல்வியா? உஷ்.. மூச்சு..

    எதிர்க்கட்சிகளோ அரசாங்கம் போகும் பாதையின் வழுக்கல்களை வகையாக விமர்சிப்பார்கள். தாம் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தால் நாடு எத்தகைய செழிப்படைந்திருக்கும் எனும் அழகான கதையளப்பார்கள்.

    அரசு எடுத்த கொள்கைகளில் ஏதாவது மக்களுக்கு நன்மை பயந்திருக்காதா அதைப்பற்றி எதிர்க்கட்சிகள் பேசுவது இல்லையா?

    நியாயமான கேள்விதான்! அரசியலில் நியாயம் எங்கே இருக்கிறது?

    ஆனால் இம்முறை இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமைந்திருப்பது ஒரு கட்சியல்ல. அரசியலில் கொள்கையளவில் இருவேறு துருவங்களாக இருந்த”பழமை பேணும் (Conservative)”கட்சியும்”சுதந்திர ஜனநாயகக் (Liberal Democrats)”கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டாட்சியே.

    இத்தகைய ஒரு கூட்டணியில் இணைந்திருக்கும் இக்கட்சிகளின் விழா மேடை கொஞ்சம் சிக்கலானதாகவே அமையும்.

    ஏன் என்கிறீர்களா?

    கூட்டணி அரசாங்கத்தில் அவர்கள் எடுக்கும் கொள்கைகளுக்கும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களுக்கும் அவை இரண்டுமே சேர்ந்து பொறுப்பெடுக்க வேண்டியது அவர்களது காலக்கட்டாயம்.

    அதே சமயம் தமது கட்சிகளின் தனித்துவத்தைப் பேணுவதற்காக தாம் மற்றைய கட்சிகளில் இருந்து எவ்வகையில் வேறுபட்டிருக்கிறோம் என்று தெளிவு படுத்த வேண்டிய இக்கட்டு வேறு.

    இதனிடையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எனும் சுழலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள்.

    இது இன்றைய இங்கிலாந்தின் அரசியல் திருவிழாவின் ஒரு அங்கம்.

    சரி இங்குதான் இப்படி என்றால், அமெரிக்காவின் நிலை என்ன? அநேக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகச் சரித்திரப் புத்தகத்தில் அமெரிக்காவின் முதலாவது கறுப்பு ஜனாதிபதி என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பராக் ஒபாமா முதன்முறையாக தான் ஜனாதிபதியானபின் வரும் தேர்தலைச் சந்திக்கிறார்.

    இத்தேர்தல் அவரின் மீது அமெரிக்க மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளுக்கும் அவற்றை எந்த அளவிற்கு அவர் பூர்த்தி செய்துள்ளார் என்று மக்கள் கணித்துள்ளார்கள் என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியத் தேர்தல் ஆகிறது.

    இன்றைய அமெரிக்க நாட்டுப் பிரச்சனைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சி என்றாலும் தமது நாடு அப்பிரச்சனைகளை எவ்வகையில் எதிர்கொண்டால் மக்களின் வாழ்க்கையிலுண்டாகும் பாதிப்புக்களைக் குறைக்கலாம் என்பதற்குரிய கொள்கைகளை வகுப்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்ற வகையில் இதன் பொறுப்பை ஒபாமா அவர்கள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்.

    அமெரிக்கத் தேர்தல் கூட ஒரு அரசியல் திருவிழாவே! ஆம் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக தொலைக்காட்சிகளில் திரையிடும் விளம்பரங்களும் அதற்கான விளம்பரங்களும்.. அப்பப்பா!

    அதைத்தவிர ஜனாதிபதியும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரும் மூன்று சுற்று நேரடித் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது அமெரிக்காவில் ஒரு சடங்கு போன்றே நடைபெறும்.

    இங்கேதான் என் மனதில் ஒரு பெரும் கேள்வியின் தாக்கம் சதிராடியது. நேற்று மாலை பணிமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது காரில் உள்ள வானொலியில் ஒரு கருத்தாடலைச் செவிமடுத்துக் கொண்டே வந்தேன்.

    அக்கருத்தாடலை நடத்திய வானொலி அறிவிப்பாளர்”ஜேம்ஸ் வேல் (James Whale)”என்ற ஒரு பண்பட்ட வானொலி அறிவிப்பாளர். அவர் ஒரு கருத்தாடலைத் தூக்கிப் போட்டார்.

    அதாவது ஒரு நாட்டில் அந்நாட்டின் மக்களின் வாழ்வைப் பாதிப்பது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கொள்கை வழி நடத்தலேயாகும். மக்கள் அரசாங்கத்திற்கு வரிப்பணத்தைச் செலுத்துகிறார்கள். அவ்வரிப்பணத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் அரசாங்கங்கள் அம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செலவிடுகிறார்கள்.

    அரசாங்கம் அமைக்கும் கட்சி தமது கட்சி எம்பிமார்களிள் தகுதிக்கேற்ப ஒவ்வொரு திணைக்களங்களிற்கும் பொறுப்பாக நியமிக்கிறார்கள். அப்பொறுப்பைக் கையாளும் அரசியல்வாதிகளே மக்களது வரிப்பணத்தைச் செலவு செய்கிறார்கள்.

    அத்தகைய முக்கியப் பொறுப்பை வகிக்கும் அரசியல்வாதிகள் அப்பொறுப்பை வகிப்பதற்குத் தகுதியானவர்கள்தானா? என்பதுவே அவர் கேள்வி.

    சுருக்கமாகப் பார்த்தால் அரசியல் வாழ்வில் ஈடுபடுவற்குரிய தகுதியை அவ்வாழ்வைத் தேர்ந்தெடுப்பவர்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு அமைப்பு வேண்டாமா? என்பதுவே அவர் கேள்வி.

    இது மிகவும் சிந்திக்க வேண்டிய கேள்வி. மிகவும் ஆழமான கருத்தைத் தனக்குள்ளே தாங்கி நிற்கும் ஒரு கேள்வி.

    தகுதி படைத்தவர் தான் மக்கள் பணியில் (அரசியல் = மக்கள் பணி) ஈடுபட முடியுமென்றால் அத்தகைய தகுதிதான் என்ன? வெறும் பட்டப்படிப்போ அன்றி கல்வித் தகமைகளோ மட்டும் தான் இதற்குத் தேவையா?

    பட்டம் பெறாமலே பெரும் பேர் பெற்ற அரசியல்வாதிகள் அரசியல்வானிலே மிளிரவில்லையா?

    காமராஜர்?.. புரட்சித் தலைவர்?..

    இது ஒரு புறவாதமாக அமையும்.

    மறுபுரத்திலே நாம் அரசியலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி விளாசித்தள்ளுகிறோம். லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பலரைக் காண்கிறோம்.

    மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்வோர், மக்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிப்போர் அப்பணியைச் செவ்வனே, மனத்தூய்மையுடன், வரவு, செலவு திட்டத்தைப் பற்றிய அறிவு கொண்டவர்களாக அமைந்திருப்பது அவசியமில்லையா? அத்தகைய ஒரு தகுதியை நிர்ணயிக்க மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஒன்று அவசியமில்லையா என்கிறார்கள் மறுபுறத்தினர்.

    ஆக மொத்தம் இது மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம். வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம்தான் எதிர்கால சுபிட்சம் அடங்கியுள்ளது. இளைய தலைமுறையினரின் அரசியல் தொலைநோக்குக் கொண்டதாகவும், தூயசிந்தை மனப்பான்மை கொண்டதாகவும், அனவரையும் அணைத்துச் செல்லக்கூடிய பரந்த சிந்தையுடயதாகவும் அமைவது அவசியம்.

    எதிர்க்கட்சி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது எனும் கடிவாளப் பார்வை உடையதாக இல்லாததாகவும், அரசு தான் எடுக்கும் முடிவுகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கும் அரசியல் பண்பை உட்கொண்டதாகவும் அமையும் வகை அரசியல் முன்னெடுக்கப்படுமாயின் அரசியலில் ஈடுபடுவோர் அனைவரும் மக்களின் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள் என்பது நிதர்சனம்.

    தெருத் தெருவாய்க் கூட்டுவது
    பொதுநலத் தொண்டு – ஊரார்
    தெரிந்து கொள்ள படம் பிடித்தால்
    சுயநலமுண்டு .

    என்ற கவிஞனின் வரிகள் இதை எண்ணித்தானோ!

    மீண்டும் அடுத்த மடலில்..

    Share
  • தமிழ்த்தேனீயின் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

     

    அன்பு நண்பர்களே

    வருகின்ற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை அம்பத்தூர்  சிரிப்பரங்கம்   “நகைச்சுவைமன்றம்” நடத்தும் ” வெற்றிச் சக்கரம் ” புத்தக வெளியீட்டு விழா.

    (அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்)

    சத்சங்கம் தெருவில் உள்ள சத்சங்கத்தில்  நடைபெற இருக்கிறது. விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்

    .
    நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர் எக்ஸ்னோரா இன்டர்னேஷனல் நிறுவனர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்.

    முதல் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர் எழுத்தாளர், முனைவர் திரு அண்ணா கண்ணன் அவர்கள்.

    முன்னிலை வகிப்பவர் திரு தீபம்   எஸ் திருமலை அவர்கள்.

    ஏற்புரை திரு தமிழ்த்தேனீ அவர்கள்.

    அனைவரையும் வரவேற்று   “தென்றல் வருடிய சிரிப்பு!   வழங்குபவர் பத்திரிகையாளர், எழுத்தாளர், உயர் திரு அரவிந்த் சாமிநாதன் அவர்கள்.

    நடத்துபவர்  திரு சிரிப்பானந்தா ,  சித்திரைச் சிங்கர் ,மற்றும்
    (Laughtoriuam) ,
    சிரிப்பரங்கம்  நண்பர்கள்.

    அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்-அனைவரும் வருக

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (16)

    மோகன்குமார்
     
    கேள்வி: ரவிச்சந்திரன் சென்னை
     

    வணக்கம்.  எனது தந்தையின் தந்தை (தாத்தா)வின் பெயரில் ஒரு வீடு உள்ளது.  அதில் எனது அண்ணன் தற்காலிகமாக குடிஇருந்தார். அப்போது அவர் வீட்டு வரி கட்டினார். அதில் வரி கட்டியவர் என அவர் பெயர் போட்டு, பின்பு அவர் பெயர் மட்டும் வருவது போல் செய்து இருக்கிறார். தற்போது அந்த வீட்டை தனக்கே உரிமை என்றும் அவருக்கே தர வேண்டும் அனைவரையும் கட்டாயப்படுத்துகிறார்.  

    நாங்கள் நான்கு  சகோதரர்கள். என்ன செய்வது? 

    பதில்: 

    உங்கள் தாத்தா சொத்தில் உங்கள் அண்ணன் இருந்து கொண்டு அவர் பெயரில் வரி கட்டுவதாக கூறி உள்ளீர்கள். உங்கள் தந்தை பற்றி ஏதும் சொல்லவில்லை. உங்கள் தாத்தா உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை என கருதுகிறேன். 

    மற்ற சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து சொத்தை பாகப்பிரிவினை செய்து தரச் சொல்லி அவர் மேல் வழக்கு தொடர்வது தான் இதற்கு சிறந்த வழி. இப்படி வழக்கு தொடர்ந்தாலே அவர் இறங்கி வர வாய்ப்புண்டு. 

    வழக்கு நடக்கும் போது அவர், தான் தான் வரி கட்டுவதாகக் கூறினால். அவர் தான் மூத்த  மகன் எனில் வரி அவர் பெயரில் கட்ட நீங்கள் தற்காலிக அனுமதி தந்ததாகக்  கூறலாம். 

    நீங்கள் அவசியம் உங்களுக்கு தெரிந்த நல்ல வழக்கறிஞரை நாடி உடனே வழக்கு தொடர ஏற்பாடு செய்யுங்கள்.

    Share
  • நாத்திகம்

    தமிழ்த்தேனீ

    என்னது, ராசைய்யா இறந்து போயிட்டாரா ! அதிர்ச்சியா.. துக்கமா… ஆச்சரியமா… ஏதோ ஒன்று தாக்கியது வேணுகோபாலை. செய்தி கேள்விப்பட்டு பதறி அடித்துக்கொண்டு கையில் கிடைத்த சொக்காயைப் போட்டுக்கொண்டு ஓடினார் வேணுகோபாலன். ராசையா வீட்டிற்கு சென்று அவருடைய உடல் கிடத்தப்பட்டு இருந்ததைப் பார்த்த  வேணுகோபாலுக்கு, ஏதோ ஒரு பாதி தன் உடலிலிருந்து பிரிந்து போனதைப் போன்ற உணர்வு ஆட்கொண்டது. அவரை அறியாமல் மனதின் துயரம் கண்களில் வெளிப்பட்டது.

    எழுவத்தி இரண்டு வயதான ராசைய்யா நேற்று இரவு வழக்கம் போல தூங்கச் சென்றார். ஆனால் காலையில் தூக்கத்திலேயே அலுங்காமல் குலுங்காமல் இல்லாமல் இறந்து போயிட்டார். ராசையா வீட்டு உள்ளே அவரின் பூத உடல் கிடத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. வேணுகோபால் உள்ளே நுழைந்தவுடன் அவரைப் பார்த்து, ராசையாவின் உறவினர் அனைவரும் ஒருமித்த குரலில் உரக்க அழ ஆரம்பித்தனர். யாருக்கும் ஆறுதல் சொல்ல வழியில்லாமல் மௌனமாய் இருந்தார் வேணுகோபாலன்.

    எத்தனையோ ஆத்திகர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் படுத்த படுக்கையாய் இராமல் பட்டென்று உயிர் போய் விடவேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருக்க, எந்த ஒரு வேண்டுதலும் இல்லாதிருந்த ராசைய்யா கல்யாணச்சாவு என்பார்களே அதுபோல ஒரு அருமையான முடிவை எட்டியிருந்தார்.

    கடந்த 72 வரை எந்த நோயும் தாக்காது, விருப்பமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்த அவர் இது வரையில் கடவுளைக் கும்பிட்டதே இல்லை. கோயிலுக்கு போனதில்லை, ஆனால் யார் வந்து உதவி என்று கேட்டாலும், அல்லது யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயங்கியதும் இல்லை. மற்றவர்களையும் உதவிகள் செய்யத் தூண்டுபவர். மொத்தத்தில் மனித நேயத்தை இறையாகக் கொண்டவர்.

    அப்படிப்பட்ட ராசைய்யா தன் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரே ஆதமார்த்தமான நண்பர்  வேணுகோபால். இறை நம்பிக்கை உடையவர். ராசையா போலவே மற்ற அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர். மாற்று சாதியைக் கொண்டவராக இருந்தாலும்  ராசையாவின்மேல் சிறு வயது முதற்கொண்டே ஒரு ஆதமார்த்தமான நட்பு கொண்டவர். இருவருக்கும் உள்ள மன ஒற்றுமை ஊரே வியக்கும் அளவுக்கு இருந்தது.

    ராசையாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் வேணுகோபால்.  ராசையாவின் மனைவி, “அண்ணா பாத்தீங்களா, என்னைத் தனியா விட்டுட்டு அவருமட்டும் போய்ட்டாரு. நான் என்னா செய்வேன் !” என்று கதறிக்கொண்டிருந்தாள்.

    ராசையாவின் மூத்த மகன் வேணுகோபாலின் அருகிலே சென்று, “மாமா பார்த்தீங்களா அப்பாவை !” என்றான். அதற்குமேல் அவனுக்கு வார்த்தை வரவில்லை. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான். ஆறுதலாக அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, “தம்பி சுரேஷ், நீங்கதான் தைரியமா இருக்கணும். அம்மாவை யார் சமாதானப் படுத்த முடியும்? ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்க. நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்! அவரோட ஆன்மா சுத்தமானதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவ்வளவு ஏன் ஊருக்கே தெரியும்.

    ஆறுதல் சொல்லி ப்ரயோசனமே இல்லாத ஒரு நிகழ்வு இதுதான் உலகத்திலே, என்னா செய்யிறது” என்றார் வேணுகோபால்.

    “உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவரோட ஆன்மா நல்லவிதமா கரையேற தேவையான காரியத்தை செய்யுங்க. வேறென்ன சொல்ல ?” என்றவர் அடுத்து மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தார். ஆனால் மனம் மட்டும் ராசைய்யாவையே சுற்றி வந்துகொண்டிருந்தது.

    மருமகள்களும்,மாப்பிள்ளையும், பெண்ணும் மற்றும் உறவுக்காரர்கள் அனைவருமே கதறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதரால் இப்படி வாழ முடியுமா.? வேணுகோபாலுக்கு ஆச்சரியம், ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கிறாரே  ராசையா. ராசையா போன்ற மனிதர்கள் இறக்கும் போதுதான் மனிதம் வாழவே ஆரம்பிக்கிறது என்னும் உண்மை வேணுகோபாலுக்கு உள்ளுக்குள் விளைந்தது.

    திரு ராசையாவுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு பெண். எல்லோரும் அவரவர் இல்லறத் துணைகளோடு வந்திருந்தனர். எல்லா சம்பந்திகளும் வந்திருந்தனர். அனைவரின் கண்களிலும் சத்தியமான வருத்தம், கண்ணீர். எப்படி இது சாத்தியமாயிற்று திரு ராசையாவுக்கு..?

    அவருக்கு இது நியாயமாகக் கிடைக்கவேண்டிய புஷ்பாஞ்சலிதான் என்று தோன்றியது வேணுகோபாலுக்கு. ஒவ்வொரு பிள்ளைக்கும் திருமணம் செய்து வைக்கும்போதும், பெண்ணைப் பெற்றவர்களிடம் நான் பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கேன், நீங்க பெண்ணை பெத்து வெச்சிருக்கீங்க, அவ்ளோதான் நமக்குள்ளே வித்யாசம். எனக்கு பணத்தைவிட மனுஷங்கதான் முக்கியம். அதுனாலே கடன்படாமல் உங்களாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க போதும். என்னோட பிள்ளைங்க கல்யாணம் மட்டுமில்லை இது பொண்ணா இருந்தா என்ன, பிள்ளையா இருந்தா என்ன? அதுனாலே நம்ம புள்ளைங்களோட கல்யாணம். அது நல்லபடியா மகிழ்ச்சியா நடக்கணும்.

    அதுக்கும் மேலே எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கு. உங்க பொண்ணுங்க என்னை மாமனாரா நடத்தக் கூடாது. என்னையும் தகப்பன் ஸ்தானத்திலே வச்சி அன்பு செலுத்தச் சொல்லுங்க, அது போதும். கல்யாணம் செய்துகொள்ளும் சின்னஞ்சிறுசுகள் மகிழ்ச்சியா இருக்கணும். அவங்க மனசுலே எந்த பாரமும் இருக்கக் கூடாது. பட்டாம் பூச்சி போல அவங்க வாழ்க்கையை மகிழ்ச்சியா அமைச்சுக்கணும்.

    அதுக்கு பெத்தவங்க நாமதானே உதவணும் ? அதுதான் நம்மோட கடமை. அதுனாலே கல்யாணச் செலவிலே பாதி எங்களோடது. நாம சேர்ந்து இந்தக் கல்யாணத்தை ஒரு மகிழ்ச்சியான விழாவா கொண்டாடலாம் என்று சொல்லி, அதே போல வரதக்ஷணையோ, வேற எந்தப் பொருட்களோ வாங்காமல், ஒரு தகப்பனா நீங்க உங்க பொண்ணுக்கு உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி கல்யாணம் செய்யுங்க போதும்னு சொல்லி, மூன்று கல்யாணத்தையும் நடத்தி வெச்சாரு ராசைய்யா. அதுக்கு ஏத்தா மாதிரி வந்த மூணு மருமகள்களும் ஒத்துமையா இன்னிக்கு வரைக்கும் குடும்பம் நட்த்திவராங்க.

    அது மட்டுமில்லே, அவர் பொண்ணுக்கும் இவரை மாதிரியே ஒரு நல்ல சம்பந்தியும் கிடைச்சது அதிர்ஷ்டம். மாப்பிள்ளையும் இவருக்கு மகன் மாதிரியே அமைஞ்சது அதைவிட அதிர்ஷ்டம். இப்பிடி ஒரு அதிர்ஷ்டமான வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கையை சரியான கோணத்தில் புரிந்து கொண்டவர் திரு ராசையா.
    உரில் உள்ள அனைவரும் அதிர்ச்சியையும் உண்மையான வருத்தத்தையும் கண்களில் தேக்கி, வீட்டு வாயிலில் குழுமி இருந்தனர். ஆளுக்கொரு வேலையை பொறுப்பெடுத்துக்கொண்டு செய்து கொண்டிருந்தனர். எப்படிப்பட்ட மனிதர் ! நினைவு தெரிந்த நாள் முதல் தன்னுடைய வேலையைத் தானே செய்துகொண்ட நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். ஒரு முறையும் கோயிலுக்குள் நுழையாதவர் திரு ராசையா. ஒரு நாளும் இறைவனை வணங்கியதும் இல்லை. நிந்தனை செய்ததும் இல்லை. இறைவன் இல்லையென்று அவர் வாயால் கூறியதும் இல்லை.

    எத்தனையோ பழுத்த ஆன்மீக வாதிகள் இல்லறத்திலிருந்துகொண்டு படுக்கையில் படுக்காமல் யாருக்கும் தொந்தரவு அளிக்காமல்,நினைத்தவுடன் உயிர் போய்விடவேண்டும் என்று பல வேண்டுதல்களைச் செய்தவர்களுக்கெல்லாம் கிட்டாத, அமைதியான முடிவை வெகு சுலபமாக எட்டியிருக்கிறார் திரு ராசைய்யா. திரு ராசையா மனிதர்களை மனித நேயத்தை மட்டுமே மதித்து வாழக்கற்றவர்.

    மகள் திருமணம், பிள்ளைகள் கல்வி, கோயில் திருவிழா எல்லாவற்றையும் சமமாகப் பார்க்க கற்றவர். யார் வந்து கேட்டாலும் எல்லோருக்கும் ஒரே விதமான மரியாதையை அளித்து அவரால் முடிந்த பொருளுதவியைச் செய்தவர். நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தாலும் வேணுகோபாலுக்கு இவையெல்லாம் பழகிப் போயிருந்தன. ஆனாலும் ஆச்சரியம் விலகவில்லை வேணுகோபாலுக்கு.

    ஒரு சிறந்த நாணயமான நாத்திகவாதி. ஒரு நாத்திகவாதி, பகுத்தறிவுவாதி என்பவர் எப்படி வாழவேண்டும் என்றும் நாத்திகவாதியாக இருந்தாலும் ஆத்திகவாதிகளை மதிக்கத் தெரிந்த மனிதர். மனிதம் முக்கியம் என்றுணர்ந்த நாத்திகவாதியும் ஆத்திகவாதியே என்று உணர்ந்த மனிதர். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கும் உதாரண புருஷனாக வாழ்ந்த மறைந்தவர் நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது வேணுகோபாலுக்கு. அதனால்தான் இப்படி ஒரு அருமையான முடிவு கிடைத்ததோ..?

    எப்படி இது எப்படி முடிந்தது ? என் எண்ண ஓட்டங்கள் திரு ராசைய்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது . எப்படி இந்த மனிதருக்கு இப்படி ஒரு அருமையான முடிவு கிட்டியது? எல்லோருக்கும் இந்த சுபமான முடிவு கிடைக்குமா..? யோசிக்க யோசிக்க ஆத்திகவாதியான வேணுகோபாலுக்கு ஒரு எண்ணம். ஒரு முடிவு  திடமாக உறுதியானது.

    நிச்சயமாக பூர்வ ஜென்ம நடத்தைகள், நம்மை அடுத்த ஜென்மத்திலும் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஒன்று வாழவைக்கிறது அல்லது வீழ வைக்கிறது என்பது சத்தியமான உண்மை. பூர்வஜென்மம்,மறுஜென்மம் எனபதெல்லாம் கட்டுக்கதை இல்லை. சத்தியமான உண்மை. இந்த எண்ணங்கள் மனதில் வந்ததும், தம்மையறியாமல் சில மனிதர்களின் கபடநாடகங்களை எண்ணிப் பார்த்தார். எதற்குமே கொடுத்து வைக்க வேண்டும். வேணுகோபால் நாத்திகவாதியான ராசையாவையே கடவுளாக நினைத்து நண்பா ‘எனக்கும் இது போன்ற வரம் தா’ என்று வேண்டிக்கொண்டார்.

    அனுபவப்பட்டாலும் மனிதர்களுக்கு மாயை விலகுவதில்லை என்னும் உண்மை உறைக்கவே சிரிப்பு வந்தது. அவருக்கு அடுத்த கணமே,  யாராவது பார்த்தால் இந்த இடத்திலே சிரிக்கிறாரே என்று தவறாக நினைத்துக்கொள்ளப் போகிறார்களே என்று அந்த விரக்திச் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

    ஆனாலும் அவரை அறியாமலே அவருக்கு உள் மனதிலிருந்து துக்கம் பொங்கி வந்தது. வேணுகோபால் எதற்காக அழுகிறோம் என்பதே தெரியாமல் அவரையறியாமல் ஏதோ ஒன்று அவரை உலுக்கியது. ஒரு ஓரமாகச் சென்று மௌனமாகக் கண்ணீர் வடித்து துக்கத்தை தோளில் கிடந்த துண்டால் அடக்கியும் முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் வேணுகோபால். 

    Share
  • சராசரிகள்

    முகில் தினகரன்

    வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாயிருக்க எனக்குள் ஏதோவொன்று பிறாண்டியது. கைகளைப் பிசைந்தபடி கலவர முகத்துடன் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் மெல்ல விசாரித்தேன்.

    ‘அதையேன் சார் கேட்கறீங்க?…மெயின் ரோட்டுல ஏதோ ஜாதிக் கட்சியோட பேரணியாம்…இந்த ரோட்டுக்கு இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துக்கு பஸ்ஸே வராதாம்..கர்மம்..ஆபீஸ் முடிஞ்சு போகிற நேரத்தில்தானா இந்த சோதனையெல்லாம் வரணும்?…ச்சை’ சொல்லும் போது அஷ்டகோணலாய்ப் போனது அந்த அழகு முகம்.

    அவளைப் போலவே பல யுவதிகள் பஸ் இப்போதைக்கு வராதென்று தெரிந்தும் அது வரும் திசையை திரும்பித் திரும்பிப் பார்த்து திட்டிக் கொண்டிருந்தனர்.

    ‘ஏய்..நாம இப்படி நின்னுட்டிருந்தா நின்னுட்டே இருக்க வேண்டியதுதான்! டூவீலர்க போயிட்டுத்தானே இருக்கு? பாரு…எத்தனை ஆம்பளைங்க தனியாளா சிங்கிள்ஸ்லே போய்க்கிட்டிருக்காங்க!….அவங்களை நிறுத்தி லிப்ட் கேட்டா என்னடி?’ துணிச்சலாய்ப் பேசிய சுடிதார்ப்பெண் என் கவனத்தை ஈர்க்க, ‘அட…பரவாயில்லையே’ கவனிக்கலானேன்.

    சொன்னதோடு நில்லாமல் அந்தப் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்லும் டூவீலர் ஆசாமிகளை குறுக்கே கை நீட்டி மறித்தாள்.

    ‘என்னம்மா…என்ன வேணும்?’ ஹெல்மட் தலையனொருவன் கத்தலாய்க் கேட்க,

    ‘சார்..இந்த ரோட்டுக்கு இப்போதைக்கு பஸ் வராது..பாருங்க எத்தனை லேடிஸ் பரிதாபமா நின்னுட்டிருக்காங்க…நீங்க தனியாத்தானே போறீங்க…யாராவது ஒருத்தருக்கு லிப்ட் கொடுத்து உதவலாமில்ல?’

    ‘வாட?;…லிப்ட்டா?..நோ…நோ..நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கெடையாது…அதுக்குன்னு எவனாச்சும் வருவான் அவன்கிட்டக் கேளுங்க!..வழிய விடுங்க மொதல்ல..’

    ‘என்ன சார் லேடீஸ்க்கு லிப்ட் குடுத்தா என்ன சார் தப்பு?..மனுசனுக்கு மனுசன் இந்த உதவி கூடச் செய்யக் கூடாதா?’ சுடிதாரப்பெண் விடாமல் பேசினாள.;

    ‘த பாரும்மா..பொண்ணுங்களையெல்லாம் நான் டபுள்ஸ் ஏத்தினதில்லை…ஏத்தவும் மாட்டேன்’

    ‘அதான் ஏன்னு கேட்கறேன்?..பயமா?…யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கதை கட்டிடுவாங்களோன்னு பயமாயிருக்கா?..இல்ல உங்க சம்சாரத்துக்கு தெரிஞ்சு..குடும்பத்துல குழப்பம் உண்டாயிடுமோன்னு அச்சமாயிருக்கா?’

    அவன் மௌனமாய் விழிக்க,

    ‘என்ன சார்…அதைப் பத்திக் கவலைப்பட வேண்டிய பொண்ணுங்களே தைரியமா லிப்ட் கேக்கறாங்க…நீங்க ஆம்பளை..அதுவும் அடர்த்தியா மீசை வெச்சிருக்கற ஆம்பளை நீங்க பயப்படறீங்களே’

    ‘இல்லம்மா…அது..வந்து..பிரச்சினை…’

    ‘யோவ்…பிரச்சினைக்கு பயப்படற நீயெல்லாம் எதுக்கய்யா வெளிய வர்றே,..வீட்டுக்குள்ளாரவே முடங்கிக் கெடக்க வேண்டியதுதானே?’

    அவள் பேச்சில் மரியாதை தடாலென்று இறங்க அவன் தர்ம சங்கடமாய் எல்லோரையும் பார்த்தான்.

    ‘இங்க பாருய்யா..உம்மனசு சுத்தமான மனசுன்னா..யாராவது ஒருத்தரை கூட்டிக்கிட்டுப் போ’ என்றவள் பெண்கள் பக்கம் திரும்பி ‘ஏய் காயத்ரி…நீ இந்தப் பக்கம்தானே போகணும்?..வா..வந்து சார் வண்டில உட்காரு’ என்றழைக்க,

    அந்த காயத்ரி நிதானமாய் நடந்து வந்து ‘ணங்’கென்று பில்லியனில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

    ஹெல்மட்காரன் வேறு வழியில்லாமல் முனகியபடியே வண்டியைக் கிளப்பினான்.

    எனக்கு அந்தச் சுடிதார்ப்பெண்ணின் பேச்சும் செயல்பாடும் மிகவும் பிடித்திருந்தது. ‘வெரிகுட்..பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணும்..பாரதி கண்ட புதுமைப்பெண்’

    தொடர்ந்து அதே போல் பல இருசக்கர வாகனாதிபதிகளை நிறுத்தி சாம…பேத…தான…தண்ட முறைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அங்கிருந்து வெற்றிகரமாக அனுப்பி வைத்தாள்.

    இறுதியில் அந்த சுடிதார்ப்பெண் மட்டும் தனித்து நிற்கையில் ஒரு டூவீலர்க்காரன் கடந்து செல்ல நான் கேட்டேன். ‘என்னம்மா…ஒரு வண்டி போகுது…அத நிறுத்தி அதுல நீ போகலாமே?’

    ‘இல்ல சார் எங்க வீட்டுக்காரர் வந்திட்டிருக்கார்..என்னை பிக்அப் செய்ய’

    அடுத்த ஐந்தாவது நிமிடம் ஒரு பைக் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த இளம்பெண் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்…எங்க ஹாஸ்டல் இங்கிருந்து பக்கம்தான்…நான் நடந்தே போயிடறேன்’ என்று சொல்லி விட்டு நகர,

    அந்த பைக்காரனை நோக்கி வேகவேகமாயச் சென்றாள சுடிதார்க்காரி.

    ‘யார் அவ?’ கேள்வியில் கோபம் தெறித்தது.

    ‘தெரியாதுடா…இங்கதான் எங்கியோ லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருப்பா போலிருக்கு!..இந்த ரோட்டுலதான் பஸ் வரலையே…தனியா நடந்து வந்;திட்டிருந்தா…நான்தான் நிறுத்தி…கேட்டு..லிப்;ட் குடுத்தேன்’

    கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு பற்களை ‘நற..நற’வென்று கடித்த சுடிதார்க்காரி ‘கொஞ்சம் செவப்பா…அழகா இருந்தாப் போதுமே…உடனே.. ‘ஈஈஈஈ’ ன்னு இளிச்சுட்டு லிப்ட் குடுத்துடுவீங்களே’

    ‘அட என்னம்மா…இதுல என்ன இருக்கு?..மனுசனுக்கு மனுசன் செய்யற உதவிதானே?’

    ‘போதும் பேசாதீங்க’ ‘சட்’டென அவன் வாயை அடைத்து விட்டு, பிசாசுத்தனமாய் பில்லியனில் ஏறி அமர்ந்தாள்.

    அவன் நிதானமாக வண்டியைக் கிளப்ப,

    ‘வீட்டுக்குப் போய் உங்கள வெச்சுக்கறேன் இருங்க’

    போகிற போக்கில் அவள் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே சென்றது என் காதுகளில் விழ நான் மூரச்சையாகாத குறைதான். ‘அடிப்பாவி..போறவனையெல்லாம் நிறுத்தி…இல்லாத வசனமெல்லாம் பேசி லிப்ட் குடுக்க வெச்சிட்டு…உம்புருஷன் ஒரு பெண்ணுக்கு லிப்ட் குடுத்ததுக்கு இந்த உறுமு உறுமுறியே..ச்சே..உன்னைப் போயி புதுமைப்பெண்ணுன்னு நெனச்சேனே…நீயும் சராசரிதானா?’

    Share