இன்னுயிர் ஈந்து மானம் காத்துக் காவல் செய்வோம்
நாகராசன்

தமிழகத்தின் வரலாற்றில் தமிழ் நாட்டின் தென்பகுதி, வீர இலக்கியப் பதிவுகளில் மறவர் பூமி என்று அழைக்கப்படும் பூமி. இங்கு வாழ்ந்த மறவர் குமுகம், குறிப்பிடத்தக்க பண்புக் கூறுகளான மானம், தன்மானம், முதல் மரியாதை, வாழ்வுப் பழக்கம், காவல் என்ற தமிழனின் அரும் பெரும் பண்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போற்றி காத்துவரும் தமிழ்க் குமுகப் பிரிவாகும்.
இலக்கியங்கள் குறிப்பிடும் வீரப் பண்புகளான செஞ்சோற்றுக்கடன், தலைவன் இறந்த செய்தி கேட்டால் தன் தலையைக் கொய்து வீர மரணம் அடைதல், வாளால் தலையை அறுத்துத் தலைவன் காலடியில் படைத்தல், அரசனுக்காக நாட்டுக்காக உயிர்துறக்க எக்கனமும் தயார் நிலையில் இருத்தல், ஆகியவை சற்றும் வழுவாமல் கடைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தலைசிறந்த போர்வீரர்கள் என்று பெருமை பெற்றவர்கள்.
வீரச் செயல் புரிந்து வீரமரணம் அடைந்தவர்கள் நினைவைப் போற்றி, வீரர் நடுகல் நட்டு, அதில் அவர்களின் வீரப் பராக்கிரமம் பற்றிய புகழாரங்களைச் செதுக்குவதும், போரின் வெற்றிக்குக் காரணமானவர்களைக் குறுநில மன்னர்களாக்கி அழகு பார்ப்பதும், தமிழக வரலாற்றில் நிரவிக்கிடக்கும் தகவல்களாகும்.
ஆங்கில ஆதிக்கம், அதன் நாடு பிடிக்கும் பேராசைக்குப் பெரும் தொல்லை தந்தவர்கள் என்ற முறையில், ஆங்கிலேயர்களுக்கு இந்த மறவர் குமுகத்தின் மீது அச்சமும் பகையும் வெறுப்பும் இருந்தது. அவர்களின் வாழ்வியல் மரபை, அவர்களின் பழக்க வழக்கங்களை, சரிவரப் புரிந்துகொள்ளாத ஆங்கிலேயர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழும் சில பழங்குடிகளை குற்றப் பரம்பரை என்று அடையாளம் காட்டப்பட்டதுபோல், தமிழகத்திலும் அவர்களைக் குற்றப் பரம்பரையினர் என்று அடையாளப்படுத்தி அவர்களைக் குற்றப் பரம்பரை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.
தங்கள் மண்ணுக்குள் வந்த மிலேச்சசர்கள் மறவர்களின் கோவில்களைத் தம் வசப்படுத்தி அவர்களின் இறைவழிபாட்டைத் தடை செய்தது மறவர்கள் மத்தியில் ஆங்கிலேயர் மீது மாறா வெறுப்பும் தீராப் பகையும் கொள்ள வைத்தது. அவர்கள், அவர்களின் கிராமத் தெய்வங்களை வழிபாடு செய்து, இறைவன் சந்நதியில் முதல் மரியாதை பெற்று, உயர்தனிச் சிறப்புடன் சிறு குழுவாக வாழ்ந்த அவர்களின் வாழ்முறை சிதைந்ததை, அவர்கள் தங்களின் தன் மானத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதினார்கள். இதன் காரணமாக ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான உரிமைக்குரல் இந்த மறவர் பூமியில் தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் நிகழ்ந்தது.
சாத்வீகப் போர், தர்ம யுத்தம் என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது என்று சொல்லி, ஆயுதம் எடுப்போம் என்ற நேதாஜி அவர்களின் சங்கநாதம், சிங்கையிலும் மலாயாவிலும், தோட்டத் தொழிலாளர்களாகவும் ஏவலர்களாகவும் வேலை பார்த்தாலும் அவர்களின் இயல்பான போர்க்குணம் ஓங்க இந்தியத் தேசிய ராணுவமாக்க் கிளர்ந்தெழுந்து, புலம்பெயர்ந்த இந்திய அரசு வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்டு ஆங்கிலேயர்களை ராணுவ ரீதியில் சந்திக்க இந்த மறவர் படை பெரும் ஆற்றலுடன் போரிட்டது. நமது லட்சியம் செங்கோட்டை என்ற முழக்கத்துடன் இந்தியாவில் மணிப்பூர் வரை வந்த இந்த மறவர்படை ஜப்பானின் தயக்கத்தால் ஆங்கிலேயர்களிடம் சிறைபட்டு வெஞ்சிறையில் வாழ நேர்ந்தது.
மானம், தன்மானம் என்று வாழ்ந்த இவர்களை ஒரு குற்றப் பரம்பரை என்று, வீர மாண்பு நிறைந்த ஒரு குமுகப் பிரிவையே கொச்சைப்படுத்தியதை, எதிர்த்துக் காங்கிரசில் இருந்து மதுரை வழக்கறிஞர் ஜோசப் (ரோசாப்பூ துரை) முயற்சி எடுத்து, அவர்கள் படும் இன்னல்களைக் குறைத்தாலும் அவர்களை அந்தக் குற்றப்பரம்பரை என்று மோச வலையிலிருந்து மீட்க இயலவில்லை.
மாபெரும் குறுநில மன்னர் வழி வந்து, அளவற்ற செல்வத்துடன் பசும்பொன் கிராமத்தையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அடக்கியுள்ள நிலப்பரப்பில் பிறந்து வளர்ந்த, முத்துராமலிங்கத் தேவர், தேவர்களாகிய மறவர்களை ஒருகுடைக்குள் கொணர்ந்து, அவர்களின் அரிய பண்புகளை மீண்டும் தழைக்கச் செய்து, அவர்களின் வீரம் இந்தியச் சுதந்திரத்துக்குச் செந்நீர் பாய்ச்சி, அவர்கள் குற்றப் பரம்பரையினர் அல்ல, ‘அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கில் இருந்த பண்புக்கூறுகளுடன், இறையுணர்வுடன், மற்றவர்களைக் காவல் காத்து, அவர்களுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள்’, என்று நிலை நிறுத்தியவர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாறாத மனித நேயம், குறையாத இறையுணர்வு, எளிமையான வாழ்வு என்று மானிடத்தின் உயர் பண்புகளுக்கு உறைவிடமாக இருந்து, லட்சக்கணக்கான மறவர்களை ஒன்று திரட்டி, அவர்களின் வீரத்தை, தியாகத்தை இந்திய அரசியல் வானில் வெளிச்சம் போட்டுக்காட்டத் தன் இன்னுயிர் தந்தவர் என்றால் மிகையாகாது.