இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . .(27)

சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே!

இதோ உங்கள் முன்னே மீண்டும் அடுத்தொரு மடலுடன்.

“அரசியல்”இந்தச் சொல் அரங்கத்தில் இல்லாத நாடுகளிலே இவ்வகிலத்தில் இல்லை என்றே சொல்லலாம். அரசியல் திருவிழாக் காலம் இங்கிலாந்திலே வந்து விட்டது.

அது என்ன”அரசியல் திருவிழாக்காலம்”என்கிறாயே என்கிறீர்களா?

வருடா வருடம் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் மகாநாடு நடப்பதுண்டு. இம்மகாநாட்டிலே அரசாட்சி அமைத்து நடத்திக் கொண்டிருக்கும் கட்சி தாம் இதுவரை எடுத்த கொள்கைகளின் வெற்றியைப் பற்றிய ஆலாபனையும், தாம் இனி எடுக்கப்போகும் திட்டங்களையும் அவை மக்களுக்கு பயக்கப் போகும் நன்மைகளைப் பற்றிய விளக்கங்களையும், எதிர்க்கட்சிகளின் இயலாமையை எள்ளி நகையாடுவதையும் இம்மேடையில்தான் அரங்கேற்றுவார்கள்.

அப்படியானால் அரசு முன்னெடுத்த கொள்கைகளில் ஏதாவது தோல்வியைத் தழுவியதைப் பற்றி விவரிப்பதில்லையா? என்ற கேள்வி புரிகிறது.

தோல்வியா? உஷ்.. மூச்சு..

எதிர்க்கட்சிகளோ அரசாங்கம் போகும் பாதையின் வழுக்கல்களை வகையாக விமர்சிப்பார்கள். தாம் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தால் நாடு எத்தகைய செழிப்படைந்திருக்கும் எனும் அழகான கதையளப்பார்கள்.

அரசு எடுத்த கொள்கைகளில் ஏதாவது மக்களுக்கு நன்மை பயந்திருக்காதா அதைப்பற்றி எதிர்க்கட்சிகள் பேசுவது இல்லையா?

நியாயமான கேள்விதான்! அரசியலில் நியாயம் எங்கே இருக்கிறது?

ஆனால் இம்முறை இங்கிலாந்து அரசுக் கட்டிலில் அமைந்திருப்பது ஒரு கட்சியல்ல. அரசியலில் கொள்கையளவில் இருவேறு துருவங்களாக இருந்த”பழமை பேணும் (Conservative)”கட்சியும்”சுதந்திர ஜனநாயகக் (Liberal Democrats)”கட்சியும் இணைந்து அமைத்திருக்கும் கூட்டாட்சியே.

இத்தகைய ஒரு கூட்டணியில் இணைந்திருக்கும் இக்கட்சிகளின் விழா மேடை கொஞ்சம் சிக்கலானதாகவே அமையும்.

ஏன் என்கிறீர்களா?

கூட்டணி அரசாங்கத்தில் அவர்கள் எடுக்கும் கொள்கைகளுக்கும் அவற்றின் சமுதாயத் தாக்கங்களுக்கும் அவை இரண்டுமே சேர்ந்து பொறுப்பெடுக்க வேண்டியது அவர்களது காலக்கட்டாயம்.

அதே சமயம் தமது கட்சிகளின் தனித்துவத்தைப் பேணுவதற்காக தாம் மற்றைய கட்சிகளில் இருந்து எவ்வகையில் வேறுபட்டிருக்கிறோம் என்று தெளிவு படுத்த வேண்டிய இக்கட்டு வேறு.

இதனிடையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி எனும் சுழலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள்.

இது இன்றைய இங்கிலாந்தின் அரசியல் திருவிழாவின் ஒரு அங்கம்.

சரி இங்குதான் இப்படி என்றால், அமெரிக்காவின் நிலை என்ன? அநேக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகச் சரித்திரப் புத்தகத்தில் அமெரிக்காவின் முதலாவது கறுப்பு ஜனாதிபதி என்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட பராக் ஒபாமா முதன்முறையாக தான் ஜனாதிபதியானபின் வரும் தேர்தலைச் சந்திக்கிறார்.

இத்தேர்தல் அவரின் மீது அமெரிக்க மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளுக்கும் அவற்றை எந்த அளவிற்கு அவர் பூர்த்தி செய்துள்ளார் என்று மக்கள் கணித்துள்ளார்கள் என்பதை நிர்ணயிக்கும் ஒரு முக்கியத் தேர்தல் ஆகிறது.

இன்றைய அமெரிக்க நாட்டுப் பிரச்சனைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சி என்றாலும் தமது நாடு அப்பிரச்சனைகளை எவ்வகையில் எதிர்கொண்டால் மக்களின் வாழ்க்கையிலுண்டாகும் பாதிப்புக்களைக் குறைக்கலாம் என்பதற்குரிய கொள்கைகளை வகுப்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்ற வகையில் இதன் பொறுப்பை ஒபாமா அவர்கள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்.

அமெரிக்கத் தேர்தல் கூட ஒரு அரசியல் திருவிழாவே! ஆம் ஒவ்வொரு கட்சியும் தமது கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருக்காக தொலைக்காட்சிகளில் திரையிடும் விளம்பரங்களும் அதற்கான விளம்பரங்களும்.. அப்பப்பா!

அதைத்தவிர ஜனாதிபதியும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரும் மூன்று சுற்று நேரடித் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது அமெரிக்காவில் ஒரு சடங்கு போன்றே நடைபெறும்.

இங்கேதான் என் மனதில் ஒரு பெரும் கேள்வியின் தாக்கம் சதிராடியது. நேற்று மாலை பணிமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது காரில் உள்ள வானொலியில் ஒரு கருத்தாடலைச் செவிமடுத்துக் கொண்டே வந்தேன்.

அக்கருத்தாடலை நடத்திய வானொலி அறிவிப்பாளர்”ஜேம்ஸ் வேல் (James Whale)”என்ற ஒரு பண்பட்ட வானொலி அறிவிப்பாளர். அவர் ஒரு கருத்தாடலைத் தூக்கிப் போட்டார்.

அதாவது ஒரு நாட்டில் அந்நாட்டின் மக்களின் வாழ்வைப் பாதிப்பது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கொள்கை வழி நடத்தலேயாகும். மக்கள் அரசாங்கத்திற்கு வரிப்பணத்தைச் செலுத்துகிறார்கள். அவ்வரிப்பணத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் அரசாங்கங்கள் அம்மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செலவிடுகிறார்கள்.

அரசாங்கம் அமைக்கும் கட்சி தமது கட்சி எம்பிமார்களிள் தகுதிக்கேற்ப ஒவ்வொரு திணைக்களங்களிற்கும் பொறுப்பாக நியமிக்கிறார்கள். அப்பொறுப்பைக் கையாளும் அரசியல்வாதிகளே மக்களது வரிப்பணத்தைச் செலவு செய்கிறார்கள்.

அத்தகைய முக்கியப் பொறுப்பை வகிக்கும் அரசியல்வாதிகள் அப்பொறுப்பை வகிப்பதற்குத் தகுதியானவர்கள்தானா? என்பதுவே அவர் கேள்வி.

சுருக்கமாகப் பார்த்தால் அரசியல் வாழ்வில் ஈடுபடுவற்குரிய தகுதியை அவ்வாழ்வைத் தேர்ந்தெடுப்பவர்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதை நிர்ணயிப்பதற்கு ஒரு அமைப்பு வேண்டாமா? என்பதுவே அவர் கேள்வி.

இது மிகவும் சிந்திக்க வேண்டிய கேள்வி. மிகவும் ஆழமான கருத்தைத் தனக்குள்ளே தாங்கி நிற்கும் ஒரு கேள்வி.

தகுதி படைத்தவர் தான் மக்கள் பணியில் (அரசியல் = மக்கள் பணி) ஈடுபட முடியுமென்றால் அத்தகைய தகுதிதான் என்ன? வெறும் பட்டப்படிப்போ அன்றி கல்வித் தகமைகளோ மட்டும் தான் இதற்குத் தேவையா?

பட்டம் பெறாமலே பெரும் பேர் பெற்ற அரசியல்வாதிகள் அரசியல்வானிலே மிளிரவில்லையா?

காமராஜர்?.. புரட்சித் தலைவர்?..

இது ஒரு புறவாதமாக அமையும்.

மறுபுரத்திலே நாம் அரசியலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி விளாசித்தள்ளுகிறோம். லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பலரைக் காண்கிறோம்.

மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்வோர், மக்கள் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிப்போர் அப்பணியைச் செவ்வனே, மனத்தூய்மையுடன், வரவு, செலவு திட்டத்தைப் பற்றிய அறிவு கொண்டவர்களாக அமைந்திருப்பது அவசியமில்லையா? அத்தகைய ஒரு தகுதியை நிர்ணயிக்க மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு ஒன்று அவசியமில்லையா என்கிறார்கள் மறுபுறத்தினர்.

ஆக மொத்தம் இது மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயம். வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரிடம்தான் எதிர்கால சுபிட்சம் அடங்கியுள்ளது. இளைய தலைமுறையினரின் அரசியல் தொலைநோக்குக் கொண்டதாகவும், தூயசிந்தை மனப்பான்மை கொண்டதாகவும், அனவரையும் அணைத்துச் செல்லக்கூடிய பரந்த சிந்தையுடயதாகவும் அமைவது அவசியம்.

எதிர்க்கட்சி அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது எனும் கடிவாளப் பார்வை உடையதாக இல்லாததாகவும், அரசு தான் எடுக்கும் முடிவுகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்கும் அரசியல் பண்பை உட்கொண்டதாகவும் அமையும் வகை அரசியல் முன்னெடுக்கப்படுமாயின் அரசியலில் ஈடுபடுவோர் அனைவரும் மக்களின் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள் என்பது நிதர்சனம்.

தெருத் தெருவாய்க் கூட்டுவது
பொதுநலத் தொண்டு – ஊரார்
தெரிந்து கொள்ள படம் பிடித்தால்
சுயநலமுண்டு .

என்ற கவிஞனின் வரிகள் இதை எண்ணித்தானோ!

மீண்டும் அடுத்த மடலில்..

பதிவாசிரியரைப் பற்றி