இசைக்கவி ரமணன்

உமையும் சிவனாரும் சொல்லாய்ப் பொருளாய்
அமைந்திருக்கக் காணல் அழகு – குமையாதீர்
ஒன்றிரண்டாய்த் தோன்றிடினும் ஒன்றென்றும் ஒன்றேயாம்
நன்றே விளைக நமக்கு!

மெளனம் சிவமானால் மொழியே என்சக்தி
மொழியே சக்தியெனில் பொருளே எங்கள்சிவம்
பொருளே சிவமானால் புரிவதுவே என்சக்தி
புரிவது சக்தியெனில் பூரணமே எங்கள்சிவம்

 
விதைக்கும் முன்னிருக்கும் விளங்காமை எங்கள்சிவம்
விரிந்தும் திரிபுறாத வித்தகமே என்சக்தி
கதைக்குக் களனாகச் சலனமற்ற தெங்கள்சிவம்
கவிதையாய்க் கானமாய்க் கலகலப்ப தென்சக்தி

வானந்தான் சிவமென்றால் நிலமென் பராசக்தி
நிலந்தான் சிவமென்றால் விதையதிலே மஹாசக்தி
விதைதான் சிவமென்றால் விழித்தெழுவாள் ஆதிசக்தி
விழிப்பே சிவமென்றால் விரிபார்வை என்சக்தி!

 

வெற்றுக் காகிதமே வெறும்சிவம் என்போம்நாம்
வீசுகின்ற காற்றிலது வீரசக்தி நாட்டியமாம்
சற்றும் அசைவின்றிச் சாலை கிடக்கிறது
சங்கீதக் காற்றுவந்தால் சக்தியாட்சி நடக்கிறது!

 

தானாய் இயங்குவதும் தன்னைப் பிரித்ததுவும்
தான்பிரித்த அமைதியினுள் தான்புகுந்து சுழற்றுவதும்
நானா விதமான நாட்டியங்கள் பலவாடி
நாதவித்துள் ஒடுங்கிமீண்டும் நலம்நாடி விரிவதுவும்

 

அன்னை மஹாசக்தி ஆடுகின்ற ஆட்டமடா!
அவள்போக்கை யாரறிவார்? அதைநாம் யார் பகுத்தறிய?

 

சின்னப் பொறியினிலே திருமுருகன் பிறந்ததுவும்
சுண்ணாம்புக் காளவாயோர் தமிழ்ச்சொல்லால் குளிர்ந்ததுவும்
சிறுகுருவி இலைதைத்துச் சிறுவீட்டில் வாழுவதும்
சினங்கொண்ட பெருயானை இடமின்றித் திரிவதுவும்
எறும்புக்குச் சுறுசுறுப்பும் சேவலுக்குப் பெருந்திமிரும்
எவர்சொல்லி வந்ததடா? எவர்சொல்ல முடியுமடா?

 

அன்னை மஹாசக்தி ஆடுகின்ற ஆட்டமடா!
அவள்போக்கை யாரறிவார்? அதைநாம் யார் பகுத்தறிய?

 

சின்னத் துளியினிலே ஜீவனைத் தவிக்கவிட்டாள்
சீராய் அதுவளரச் சிற்றில்லம் கட்டிவைத்தாள்
தன்னையே பெண்ணாக்கித் தன்னையே ஆணாக்கித்
தானடங்கி அச்சிவத்தைத் தவிக்கவிட்டுப் பின் தணித்துத்
தானே மீண்டும் தாரணியில் உருவெடுத்துத்
தனியாகக் காத்திருப்பாள்! தன்னையெ எதிர்பார்த்திருப்பாள்!
வானை இருளவைப்பாள் வண்ணமின்னல் வெட்டிடுவாள்
வற்றிமண் வெடிக்கவைப்பாள் வாரிவாரிக் கொட்டிடுவாள்

 

அன்னை மஹாசக்தி ஆடுகின்ற ஆட்டமடா!
அவள்போக்கை யாரறிவார்? அதைநாம் யார் பகுத்தறிய?

 

கண்ணீர் விழிவிளிம்பில் பளபளத்துத் ததும்புகையில்
கழுத்தினைக் கைவிலங்கால் கட்டியொரு சிறுகுழந்தை
தண்முத்தம் கொடுக்கையிலே தானாக மகிழ்ச்சிவரும்
தானாக ஒருநெகிழ்ச்சி கண்ணீரைக் கங்கையாக்கும்
ஏனழுதோம் ஏன்சிரித்தோம் என்றகேள்வி எழும்போது
ஏதோவோர் அமைதிவரும் இன்பதுன்பம் இணைந்துவிடும்
தானாய்ப் பிறக்குமிந்தத் தனியான அமைதியிலே
தாண்டவச் சக்தியும் தனிச்சிவமும் ஒன்றிநிற்கும்!

 

சக்திக்காய் ஏங்குவது தத்துவத்தில் வாராது
சதாசிவம் என்னும்நிலை சாத்திரத்தால் நேராது
பக்தியெனும் கனலினிலே பாய்ந்து கிடக்கவேண்டும்
பாறை இளகிப் பசுவெண்ணெய் ஆகவேண்டும்!

 

காரிருளே நிலைத்துவிட்டால் கவலையில்லை, நடுவினிலே
கவின்மின்னல் சிலகாட்டிக் கதவடைத்து விட்டாயே?
பேரிருளை மின்னலிட்டுப் பெரியதாக்கி விட்டாயே!
பேதைக்குக் கண்சிமிட்டிப் பெரும்பேதை ஆக்கினாயே!

 

ஏங்கி அழுவதல்லால் ஏழைநமக் கேதுவழி?
ஏங்கி வரும் கண்ணீர்க்கு ஈடிங்கே எந்தமொழி?
சிவமாய்க் கிடப்பதென்ன சிறிதான காரியமா?
சிறகின்றிப் பறப்பதென்ன சிறியோர்க்குக் கிட்டிடுமா?
சவமென்ப திங்கில்லை! சடமென்பதிங்கில்லை!
சத்தியத்தைச் சொல்லுகிறேன் சக்திசிவம் தானுண்டு!

 

சக்தியொன்றே உள்ளதெனக் கடலினிலே தக்கைபோல்
தனக்காய்ச் சலனமின்றிச் சார்ந்திருத்தல் சிவமாகும்
பக்தியொன்றால் அந்தப் பரமநிலை எய்திடலாம்
பாடலினால் பராசக்திப் பாதத்தை அடைந்திடலாம்!

படங்களுக்கு நன்றி:

http://media.photobucket.com/image/shiva%20shakti/imnotababy/Spritual%20and%20People/shiva_shakti.jpg?o=13

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *