Blog

  • அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1

                                                                                                  
                                                                                                     (கட்டுரை: 1)

                                                           சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசுகள் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?
    ++++++++++++++

    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

    “ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது ! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் ! உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை ! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

    அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !
    அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !

    ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன ! இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !

    அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்
    இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது! அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

    ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்! “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்! உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை ! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

    இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

    ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?
    1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்! ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

    இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன ! இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.

    அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?
    1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும். பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா. இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும். அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன. போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன ! ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

    எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?
    இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன. நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன ! கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன ! அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் ! அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.
    பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

    அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன. மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன. டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது. அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது. அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது. பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் ! நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

    பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.
    அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை. அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3 (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது ! கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது. ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம். ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும். தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது. மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன. தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.
    Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid Average of 93
    Attacks on Cities
    Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
    Wounded 70,000 40,000 102,000 1,830
    Population Density 35,000 per sq mile 65,000 per sq mile 130,000 per sq mile ?
    Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
    Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
    Attacking Platform 1 B-29 1 B-29 334 B-29s B-29s
    Weapon(s) ‘Little Boy’ 15 kT

    (15,000 tons of TNT)’Fat Man’ 21 kT

    (21,000 tons of TNT)1,667 tons1,129 tons

    அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்

    1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது. அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது. இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன. ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.

    1. அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):

    அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது. வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது. இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி. அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் ! அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.

    2. வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):

    அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும். அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும். வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது. இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.

    3. கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):

    வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது. அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு” (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது. அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose) மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் ! குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும். பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.

    4. தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :

    அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை. அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை. அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது. சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும். மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது. இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.

    5. கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):

    இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன. நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன. அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

    6. விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):

    அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது. அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும். வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும். பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.

    7. மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):

    அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு : ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது ! கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது ! அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.

    (கட்டுரை தொடரும்)

    *****************************

    தகவல் :

    Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007) 2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

    1. Scientific American Magazine : India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

    2. Grolier Online : Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

    3. Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

    4. National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

    5. Scientific American Magazine : Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

    6. Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

    7. Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 10, 2009

    Share
  • தொலைதூரக் காதல்

     

     

    பி.தமிழ் முகில் நீலமேகம்

     

    உன் நினைவுகளில் நானும்

    என் நினைவுகளில் நீயும்

    நீங்காது நிலைத்திருக்க

    தூரமும் தொலைவும் தான்

    காதலை பிரித்திடுமா என்ன ???

     

    அருகாமையும் அரவணைப்பும்

    உணர்த்தாத காதலை

    பிரிவும் தொலைவும்

    தெள்ளத் தெளிவாய்

    படம் பிடித்துக் காட்டிடாதோ ???

     

    அனுதினமும் வளர்ந்திடுமே

    அளவிலா   காதலும் ….

    பிரிவதுவும் ஏற்படுத்துமே

    ஆழமான வலுவான

    அன்பின்  அஸ்திவாரம் !!!

     

    உந்தன் அன்பின் அருமையை

    எனக்கும் ……எந்தன் –

    காதலின் வலிமையை

    உனக்கும் ……உணர்த்திடாதோ ???

    இந்த தொலைதூரக் காதல் !!!

    Share
  • காத்திருக்க வேணும்!

     

    தேமொழி

     

    பத்துப் பாத்திரம் கழுவ வேணும்
    அழுக்குத் துணியும் துவைக்க வேணும்
    தோசைக்குச் சட்னி அரைக்க வேணும்
    இட்லிக்கு மாவும் அரைக்க வேணும்
    கம்பளத்து தூசி நீக்க வேணும்

    தொட்டியில் நீர் நிரப்ப வேணும்
    மகன் குளிக்க வெந்நீரும் வேணும்
    மகள் படிக்க விளக்கு வேணும்
    இவை முடிக்க மின்சாரம் வேணும்
    இதற்கு நாளும் காத்திருக்க வேணும்

     

     

    ஓவியர்:
    ஆனந்த விகடன் ஓவியர் இளையராஜா

    படம் உதவி:
    http://3.bp.blogspot.com/-3XGAslQGsiY/TalHLCq0ajI/AAAAAAAAArs/BLUd8sUAcOo/s320/woman2.jpg

     

    Share
  • குழந்தையும் தெய்வமும்

    முகில் தினகரன்

    “டேய் ரகு…பாவம்டா அந்தப் பொண்ணு…குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி…தூக்கித் தூக்கிப் போடுதாம்..ஆம்பளை இல்லாத வீடு..ஆஸ்பத்திரி வரைக்கும் துணைக்குப் போயிட்டு வாடா..”

    “போம்மா…ஃபுட் பால் மேட்சுக்கு டிக்கெட் வாங்கியிருக்கேன்…என் நண்பர்களெல்லாம் எனக்காக காத்திட்டிருப்பாங்க…நான் போயே ஆகணும்..என்னால் முடியாது..தயவு செய்து வற்புறுத்தாதே!”

    “டேய்..அந்த குழந்தை உயிரை விட உனக்கு புட் பால் மேட்சுதான் முக்கியமாக்; போச்சா?” அம்மா கத்தினாள்.

    எவ்வளவோ மறுத்தும் அம்மா பிடிவாதமாய் நின்று என்னை விரட்டிட, மேட்ச் ஆசையை ஒரங்கட்டி விட்டு, அரை மனதுடன் முணுமுணுத்துக் கொண்டே கால் டாக்ஸி பிடித்து, அந்தப் பெண்ணையும் அவள் குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு பறந்தேன்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை மாலை வரை இழுத்தது.

    “நல்லவேளை  சரியான நேரத்துல கொண்டு  வந்தீங்க… அதனால குழந்தை பிழைச்சது… இல்லாட்டி நீங்க  உங்க குழந்தையை இழந்திருப்பீங்க!”

    டாக்டர்…சொல்லிக்  கொண்டிருக்கும் போது… வரவேற்பறையில் இருந்த டி.வி.யில் அந்த  ஃப்ளாஷ் நியூஸ் ஒடியது.

    “சற்று முன் வந்த செய்தி….நேரு  ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபுட்பால் மேட்சின் போது காலரி இடிந்து விழுந்து ஸ்தலத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர்.”

    தொடர்ந்து காட்டப்பட்ட வீடியோ காட்சியில் என் நண்பர்கள் மூவரும் பிணமாய்….

    என் குழந்தை உசுரு போக இருந்தது….நீங்க தெய்வம் தம்பி” பக்கத்து வீட்டுப் பெண் கையெடுத்துக் கும்பிட்டாள்.

    “இல்லம்மா….உங்க குழந்தைதான்  என் உசுரைக் காப்பாத்தியிருக்கு”

    அப்பெண் எதுவும் புரியாமல்  என்னை ஊடுருவிப் பார்க்க,

    நான் குழந்தையைப் பார்க்க  வார்டுக்குள் ஓடினேன்.

    (முற்றும்)

    Share
  • தமிழால் சிறந்து தமிழோடு வாழும் ஓர் அயல்நாட்டவர்க்கு விருது வழங்கு விழா”

     

    தமிழொலி முழங்க ….தமிழுணர்வு  பொங்க ….அனைவரையும்  அன்புடன்   அழைக்கின்றோம்.

     

     

    Share
  • கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு சென்னை

    ந. தெய்வ சுந்தரம்

    தமிழகத்தில் தமிழ் ஆர்வலர்கள் திட்டமிட்டபடி , கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு டிசம்பர் 16 (2012) ஞாயிறு அன்று சென்னை லயோலாக் கல்லூரியில் கல்வியியல் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணிமுதல் மாலை 7 மணி வரை மாநாடு நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்றனர்.

    காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது . தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, மாநாட்டுக் குழுவின் ஒன்றிணைப்பாளர் பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். மாநாட்டின் நோக்கம்பற்றியும் விளக்கினார். பின்னர் தமிழக அரசுச் செயலர் ( தமிழ் வளர்ச்சி – அறநிலையங்கள் – செய்தித்துறைகள் )  முனைவர் மூ. இராசாராம் அவர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழ் வளர்ச்சிக்கு, குறிப்பாகக் கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கினார். விரைவில் தமிழ்க் கணினிமொழியியல் தொடர்பான படிப்புகளையும் ஆய்வுகளையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், மதுரையில் தொடங்கவிருக்கிற உலகத் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றில் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார். வரும் 12 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கப்படுகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் கூறினார். பின்னர் உரையாற்றிய தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ம. திருமலை அவர்கள் இன்றைய கணினி யுகத்தில் கணினித்தமிழ் வளர்ச்சியானது தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தினார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு மொழியியல் அடிப்படையிலான தமிழ்மொழி ஆய்வின் அவசியத்தை எடுத்துக்கூறினார். பின்னர் மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியர் கி. கருணாகரன் அவர்கள் கணினித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி , மையக்கருத்துரை வழங்கினார்.

    அடுத்து, தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, முதல் அமர்வு தொடங்கியது. தமிழ் ஆய்வாளர் முனைவர் இராமகி அவர்கள் அமர்வுக்குத் தலைமை வகித்தார். முதலில் அவர் இன்று கணினித்தமிழ் வளர்ச்சிக்கு மேற்கொள்ளவேண்டிய பல்வேறு பணிகளை மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறினார். பின்னர் மின்னணுக் கருவிகளில் தமிழ்ப் பயன்பாடுகள் விரிவடையவேண்டும் என்ற நோக்கில் திரு. நாக . இளங்கோவன், திரு. இரா. சுகுமாரன், திருமதி. ஜேஸ்லின் பிரசில்டா, திரு. இராஜ்குமார் பழனிச்சாமி, திரு. மா. பூங்குன்றன், திரு. தெ.சீ.சு. மணி உரையாற்றினார்கள்.

    பகல் 1.30 மணியிலிருந்து 2 மணிவரை மதிய உணவு விருந்து நடைபெற்றது.

    மீண்டும் 2 மணிக்கு இரண்டாவது  அமர்வு தொடங்கியது. கணினித்தமிழ் வளர்ச்சித் திட்டம் வகுக்கும்  அமர்வாக இது அமைந்தது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்  துணைவேந்தர் பேராசிரியர்  மு. பொன்னவைக்கோ அவர்கள்  தலைமைவகித்தார். அவரது உரையைத்  தொடர்ந்து பேராசிரியர்கள் முனைவர். ப.அர. நக்கீரன், முனைவர். சி.இரா.செல்வக்குமார், முனைவர். வ. நாகராசன், முனைவர் மா. கணேசன், முனைவர் சி. சுப்பிரமணி, முனைவர்  வி. கிருட்டிணமூர்த்தி, முனைவர்  நா. இளங்கோ, முனைவர் க.உமாராசு, முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோர்  உரையாற்றினார்கள்.

    தேநீர் இடைவேளைக்குப்  பிறகு, 4.30 மணிக்கு மாநாட்டின் நிறைவுவிழா நடைபெற்றது. தமிழ்நாடு  அரசு தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் அவர்கள் தலைமைவகித்தார். பேராசிரியர் . ந. தெய்வ சுந்தரம் மாநாட்டின் இரண்டு அமர்வுகளிலும்  கலந்துரையாடப்பட்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறினார். உத்தமத்தின் செயலர் திரு. அ. இளங்கோவன் , கணித்தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஸ்ரீனிவாஸ் பார்த்தசாரதி , பேராசிரியர். இல. இராமமூர்த்தி , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் ஆகியோர் உரையாற்றினர். அதைத் தொடர்ந்து முனைவர் கா.மு. சேகர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்ககம் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களை விளக்கிக் கூறினார். முனைவர் மு. கண்ணன் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் மாநாடு இனிதே நிறைவுபெற்றது.

    மாநாட்டின் அமர்வுகளில்  பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

    1. இன்றைய மின்னணுக் கருவிகளின்  உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

    2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும்  அனைத்து மின்னணுக் கருவிகளிலும்  – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.

    3. மின்னணுக் கருவிகளில்  தமிழ் இடம் பெறுவதற்குத்  தேவையான தமிழ் மென்பொருள்களை  உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

    4. தமிழ் மென்பொருள்களை  உருவாக்கத் தேவையான தமிழ்க்  கணினிமொழியியல், மொழித்  தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள்  தமிழகத்தின் உயர்கல்வி  நிலையங்களில் தொடங்கப்படவேண்டும.  இதுவே கணினித் தமிழ்  வளர்ச்சிகான மனிதவளத்தை  உருவாக்கும்.

    5. மேற்கூறிய அனைத்துப்  பணிகளுக்கும் தேவையான  நடவடிக்கைகளை விரைவுபடுத்த,   தமிழக அரசும்  , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.

    6. மின்தமிழ் வளர்ச்சிக்கான  ஒரு தெளிவான திட்டத்தைத்  தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த  உயர்நிலைக்கு எடுத்துச்  செல்லவேண்டும். இதற்கு  தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள்,  பொதுமக்கள், மென்பொருள்  நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.

    மேற்கூறிய கருத்துகள்பற்றி மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், மின்தமிழ் வளர்ச்சிக்கான தமிழக அரசின் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்கவும் தமிழ் ஆர்வலர்களைக்கொண்டு கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவை ஒன்றை நிறுவிச் செயல்பட மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் விரும்பியதையொட்டி, மாநாட்டில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் தொடக்கம் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர் கட்டணம் ரூபாய் பத்து என்று அறிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் அங்கேயே உறுப்பினராகத் தங்களைப் பதிவுசெய்து கொண்டனர். விரைவில் பேரவை பதிவு செய்யப்படும், பேரவையின் நடவடிக்கைகளைத் அனைத்துப் பகுதிகளிலும் விரிவாக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான இணையதளம், செய்தி மடல் ஆகியவை விரைவில் தொடங்கப் பெறும். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து, மின்தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை இப்பேரவை மேற்கொள்ளும்.

    மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் மின்னணுத் தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒரு தெளிவான திட்டத்தை விரைவில் கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையானது தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறைச் செயலரிடம் அளிக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

    பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்

    எஸ் 4, எம்  டி எஸ் அடுக்ககம்

    எண் 5, 3 ஆம்  குறுக்குத் தெரு

    சாஸ்திரி  நகர், அடையாறு

    சென்னை 600020

    ndsundaram@hotmail.com

    அலைபேசி : 9789059414

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    மனித வாழ்க்கை மிகவும் பரபரப்பாக மாறிவிட்ட சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யாருக்குமே நேரம் கிடைப்பது இல்லை. சில நல்ல விஷயங்கள் கேட்க நேரமே கிடைப்பதில்லை. சில நல்லவர்களைப் பார்க்கப் போகலாம் என்றாலும் நேரம் கிடைப்பதில்லை. கொஞ்சம் அப்படியே சாவகாசமாய் நல்ல விஷயங்களைப் படிக்கத்தான் செய்வோமே என்றால் நேரம் ’எங்க சார் இருக்கு.. எனக்கும் படிக்கணுமுனு ஆசைதான்.. ஆனா பாருங்க.. இந்த இருபத்தி நாலு மணிநேரமும் சரியா பொழுது போயிடுது.. தூங்கறதுக்கு கூட சரியா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க..’ என்றுதான் பதில் வரும்.   இந்த நேரம் கிடைப்பதற்காக. அவர்களுக்கு உதவ 24 மணி நேரத்தை யாராவது சித்தரோ மந்திரவாதியோ அல்லது சாட்சாத் கடவுளோ திடீரென கீழே தோன்றி சற்று நீட்டித்து விட்டால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. பாருங்கள் அப்போது கிடைக்கும் எக்ஸ்ட்ரா நேரத்தை ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்காக ஒதுக்கிக் கொள்ளலாமே..

    ஆனால் உண்மையாகச் சொல்லப்போனால் நமக்கு நேரம் நிறைய இருக்கவே செய்கிறது. ‘டைம் மேனேஜ்மெண்ட்’ என்று வைத்துக்கொண்டு கொஞ்சம் நேர்த்தியாக திட்டமிட்டு நம் வழக்கமாக செய்யும் வேலைகளை பிரிவுபடுத்திக்கொண்டு இன்னின்ன வேலைகளுக்கு இன்னின்ன நேரம் ஒதுக்கி அதன்படி செய்வோம் என்று பார்த்தால் இன்றைய இந்த பரபரப்பான காலத்திலே நமக்கு நேரம் அதிகமாகவே மீதி இருக்கும். டைம் மேனேஜ்மெண்ட் என்பதெல்லாம் ஆகிற காரியமா.. என்றால் அதுவும் சரிதான்.. இதுக்கெல்லாம் நாம் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் நமக்கென்று இந்த விஷயங்களை ஒட்டிய ஒரு நல்ல கட்டுரையை வல்லமையில் வெளியிட்டிருக்கிறார் திரு பெருவை பார்த்தசாரதி.

    ஒன்றே ஒன்றைத்தவிர, நாம் வாழ்ந்த காலத்தில்  சம்பாதித்தது எதுவுமே இறந்த  பிறகு நம்முடன் வராது என்கிறார் திருமூல நாயனார். நம்முடன் காலம் பூராவும் வாழ்ந்து, நம்மோடு ஒட்டி உறவாடிய மனைவி மற்றும் நாம் சம்பாதித்தையெல்லாம் அனுபவித்து வாழ்ந்த நம் மக்களும் கூட வரமாட்டார்கள்.  அப்படியென்றால் எதுதான் நம்முடன் கடைசி வரையில் வரும்?…என்ற வினாவுக்கு அருமையான பதிலை இங்கே நம் முன் வைக்கிறார் நாயனார். வாழ்க்கையின் அனுபவத்தில் நாம் பெறுகின்ற ஞானமும், நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கம் தவிர வேறொன்றும் கூட வராது என்பதை நான்கே வரிகளில் பின் வருமாறு விளக்குகிறார்:-

    பண்டம்  பெய் கூரை பழவி விழுந்தக்கால்
    உண்ட அப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
    கொண்ட விரதமும் ஞானமும் அன்றி
    மண்டி அவ்வழி நடவாதே.

    நாயனாரை ஆழ்வாரோடு  ஒப்பிட்டு நோக்கையில், வாழ்க்கை அனைத்தையும் பெருமானிடத்தில்  சமர்ப்பித்து விட்டு, இப்பூவுலக  வாழ்க்கையில் கிடைக்கும் பணம், பதவி, புகழ் எதுவுமே  வேண்டாமென்கிறார் ஆழ்வார்களில் ஒருவரான விப்ர நாராயணர். வாழ்க்கையில் வழிதவறும் போது, உறவினர்கள் அல்லது நண்பர்கள் போன்றோர் நமக்குதவ முன்வருவார்கள். ஒரு பெண்ணிடம் மனதைப் பறிகொடுத்து, வாழ்க்கையில் அனைத்தையும் இழந்த ஆழ்வாருக்கு உதவ அரங்கனே வந்தான் என்கிறது வரலாறு. ஒவ்வொரு மனிதனும் நிம்மதி தேடி, அது எங்குமே கிடைக்காமல் கடைசியில் இறைவனைச் சரணடைவது இயற்கை. துன்பம் வரும்போது இறைவனை நினைந்து பிறகு மகிழ்ச்சியில் திளைக்கும்போது மறந்து விடுவது மனித இயல்பு. உலகத்திலேயே உயர்ந்த பதவியினால் கிடைக்கும் சுகத்தைவிட இறையுணர்வுதான் மிகப்பெரியது என்கிறார் ஆழ்வார். அடியார்களின் காலடி பட்ட மண்ணை தன் தலையில் சுமந்து தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்ற இவர் இறைவனிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

    பச்சைமா மலைபோல்  மேனி, பவளவாய்க் கமலச்  செங்கண்
    அச்சுதா அமரர்  ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

    வாழ்க்கைப்  பயணத்தில் சாதாரண மனிதன் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், கடைபிடிக்க வேண்டிய அறநெறிகளையும் மேற்கூறிய ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமல்ல, அரிய பெரிய பல்லாயிரம் பாடல்கள் (ப்ரபந்தம்-4000, திருமந்திரம்-3000) மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளுமாறு நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் http://www.vallamai.com/paragraphs/29506/

    நல்ல விஷயங்களைப் படிக்க நாம் எப்படியாவது நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும் என நம் மனதுக்கு நாமே கட்டளையிட்டுக் கொள்ள வேண்டும் என்றே இக்கட்டுரையைப் படித்தபின் தோன்றுகிறது அல்லவா. இப்படி ஒரு நல்ல கட்டுரையைத் தந்த திரு பெருவை பார்த்தசாரதி அவர்களை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமை குழு சார்பாக தெரிவிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வல்லமையாளரான திரு பெருவை பார்த்தசாரதியிடம் மேலும் பல நல்ல விஷயங்களையும் கற்றுக் கொள்வோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: பாகம் பிரியாள் அவர்களின் சில கவிதைத் துளிகள்.

    இதோ

    யவனக் கயிறை பலமாய் பிடித்தபடி
    யுவனும், யுவதியும் தங்கள் பயணத்தை
    ஆரம்பிக்கிறார்கள், காதல் என்னும்
    வழுக்குப் பாறையின் மீது!

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஒளிமிகுந்து சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star] கண்டுபிடிப்பு

                                           சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


    பேரொளி வீசும்
    பெரும் பூதவுரு விண்மீன்
    தெரிந்தது விண்ணில் !
    உஷ்ணம் ஏறும் விரைவாய் !
    கன உலோகம்
    கதிரியக்க யுரேனியம் போல்
    சிதைந்து நிலைத்துவம் அடைவது !
    வடிவம் பெருத்து
    வெடிக்கும்  விண்மீன் முடிவில் !
    அசுரக் காந்த ஆற்றல் கொண்ட
    மரண விண்மீன்கள் !
    பூமிக்கருகில் நெருங்கினால்
    மக்களின்
    உடற் மூலக்கூறுகள் முறிந்து
    முடமாக்கி விடும் !
    உயிரினத்துக்கு
    மரணம்
    உண்டாக்கும் நியூட்ரான்
    விண்மீன் !
    எரிசக்தி வாயுக் கோளமான
    உயிர் விண்மீன்கள்
    எரிசக்தி தீர்ந்த பிறகு
    வறியதாய் மூப்படைந்து
    சிறிது சிறிதாகி
    விரைவாகச் சுற்றிப்
    பரிதி போல் திணிவு பெற்று
    பன்மடங்கு பெருத்து
    ஆயுள் குன்றிச்
    செத்திடும் விண்மீன் மீண்டும்
    புத்துயிர் பெறும் !

    ++++++++++++++++++

    Hypergiant Egima

    1980 ஆண்டுகளில் பெரும் பூதவுரு விண்மீன் [HR 8752] காலக்ஸியில் காணப்பட்டது.   அது வெடித்துச் சிதைந்து போகும்  பெரும் பூத விண்மீன் “ரோ காஸ்” [Rho Cas of Spectral Type F] என்பதை ஒத்தது.   ஆனால் 1985 முதல் 2005 ஆண்டுக்குள்  HR 8752 விண்மீனின் சூழ்வெளி வெகு விரைவில் 3000 டிகிரி உஷ்ணம் மிகையானது.  அந்த விண்மீன் இப்போது தன் பௌதிகப் பண்பாடுகளைக் காட்டிப் பேரளவு உஷ்ணமுள்ள [A Type] விண்மீன் வரிசையில் வந்து விட்டது.   இவ்விதம் 20 ஆண்டுகளில் HR 8752 விண்மீனில் நேர்ந்த பெருத்த மாறுதல் நிகழ்ச்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அலெக்ஸ் லோபெல் [Alex Lobel,  ROB Scientist]

    பெரும்பூத விண்மீன் HR 8752 வெற்றரங்கத்தின் ஊடே  [மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்] [YEV- Yellow Evolutionary Void] புகும் போது அதன் பௌதிகப் பண்பாடுகள் சூழ்வெளியில் மாறிப் போய் போராட வேண்டியுள்ளது.  அந்த நிகழ்ச்சியில்  இருவிதப் பகுதிகள் உள்ளன.   அவற்றில் ஒன்று பெரும் பூத விண்மீன் [யுரேனியம், ரேடியம் போல் சிதையும் கதிரியக்கமுள்ள கன மூலகங்கள்  போல] நிலைத்துவம் இழந்து சிதைவது.  அதன் விளைவு :  சூழ்வெளியில் ஹைடிரஜன், ஹீலிய வாயுக்களின் அயனிகள் பேரளவு பரவி வெளியாவது.   அந்த அயனிகள் குறுகிய அரங்கில் 8000 டிகிரி உஷ்ணத்தில் வகுபடும் போது மீண்டும் நிலைத்துவம் பெறும்.

    அலெக்ஸ் லோபெல்

    Hypergiant Star with disks of dust.

    காந்த விண்மீனைச் சுற்றியிருக்கும் காந்த தளத்தின் (Magnetic Field of Magnetar) தீவிரத்தின் ஆழத்தைக் காண்பது கடினம் ! பூகாந்த தளத்தின் அளவு சுமார் அரை காஸ் (0.5 Gauss) (Gauss – Unit of Magnetism).  குளிர்ச் சாதனப் பெட்டியின் காந்த அளவு 100 காஸ். ஆனால் ஒரு சாதாரணக் காந்த விண்மீனின் அசுரக் காந்த தளம் குவாடிரில்லியன் காஸ் (Quadrillion Gauss —> 10^15 Gauss. USA) !  அதன் விளைவு உயிரினத்துக்குப் பேராபத்தை உண்டாக்கக் கூடியது !  அதன் காந்த ஆற்றல் வீரியம் பூகோள மாந்தரின் உடல் மூலக்கூறுகளை (Body Molecules) உடனே திரித்து முரணாக்கும் வல்லமை பெற்றது.

    விஞ்ஞான விளக்க வெளியீடு (Science Illustrated Magazine) (Jan-Feb 2009)

    “பால்வீதியில் (Milky Way) குறைந்தது 100 காந்த விண்மீன்கள் இருக்கலாம்.  அவற்றால் பூகோளத்துக்குக் கேடுகள் விளையலாம் !  அதிகமாக அவை இருந்தால் எதிர்பார்த்ததற்கும் மாறாகப் பேரளவில் காமாக் கதிர் வெடிப்புகள் (Gamma Ray Bursts) நேரிடும்.  அதனால் உயிரினத்துக்கு அபாயப் பாதிப்புகள் நிகழ வாய்ப்புள்ளன !  பூமிக்கருகில் அத்தகைய ஓர் காமா வெடிப்பு (பாதுகாப்பான) ஓஸோன் கோளத்தை ஒழித்துவிடலாம் !  அதாவது பிரளய முடிவு போல் மனிதரும் விலங்குகளும் ஒருங்கே முற்றிலும் அழிந்து (Mass Extinctions) போகலாம்.”

    டோனால்டு ஃபைகர் (Donald Figer (Rochester Institute of Tecnology, USA)

    Fig 1A Gamma Ray Bursts

    ஒளிமயமாகிச் சிதையும் பெரும் பூதவுரு விண்மீன் கண்டுபிடிப்பு

    சமீபத்தில் ஐரோப்பிய ஆய்வுக் குழுவொன்று ஒளிமயமான ஓர் அரிய பெரும் பூதவுரு விண்மீன் [Hypergiant Star H 8752] “மஞ்சள் வளர்ச்சி வெற்றரங்கம்” [YEV – Yellow Evolutionary Void] என்னும் ஓர் அபூர்வ அரங்கத்தின் ஊடே புகுந்து போவதைக் கண்டுபிடித்தார்கள்.   அந்தப் பேரொளி வீசும் விண்மீன் மேற்தள உஷ்ணம் [1985 – 2005]  அதாவது கடந்த இருபது ஆண்டு களுக்குள் 3000 டிகிரி உஷ்ணம் ஏறியதாகக் கணித்திருக்கிறார்கள்.   மேலும் முப்பது [1982 -2012]  ஆண்டுகளில் அதன் உஷ்ணம் 5000 டிகிரியிலிருந்து 8000 டிகிரி ஏறிவிட்டதாகத் தெரிகிறது.  இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பு, எப்படி நிறை மிகுந்த விண்மீன்கள் காலக்ஸியில் தோன்றி முதிர்ச்சியுற்று வந்துள்ளன என்று அறிந்து கொள்ள உதவி செய்யும்.   பெரும் பூதவுரு விண்மீன்கள் நமது சூரியன் போல் கால் மில்லியன் அளவு கூடியதாய் பேரொளி வீசுபவை.   அவற்றின் வடிவம் நமது பரிதி போல் பல நூறு மடங்கு நீளமுள்ள விட்டம் உடையவை. அதில் விந்தை என்ன வென்றால் அந்த விண்மீன் மஞ்சள் வளர்ச்சி வெற்று அரங்கத்தின் வழியாய்க் கடக்கும் போது சிதைவாகி நிலைத்து மற்றுப் போகிறது.

    பெரும் பூதவுரு விண்மீனைச் சாதாரணப் பைனாகுலரிலே காஸ்ஸியோபீடியா விண்மீன் கூட்டத்தில் [Constellation Cassiopedia] பார்க்க முடியும்.   நமது காலக்ஸியில் இதுவரை 12 பெரும் பூதவுரு விண்மீன்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.  பூதவுரு விண்மீன்களின் ஆயுள் குறுகியது.   அவை கதிர்வீசித் தேயும் யுரேனியம், தோரியம், ரேடியம் ஆகிய கன மூலகங்கள் போன்று நிலையற்றுச் [Unstable Heavy Elemetns] சிதைபவை.   இறுதியில் நிலைபெறும் ஈயம் போல், பூதவுரு விண்மீனும் சிதைவாகி இறுதியில் நிலைத்துவம் அடைபவை.

    Supernova Explosion

    http://www.telegraph.co.uk/science/space/8748876/Massive-supernova-visible-from-Earth.html

    http://www.maniacworld.com/Crab-Supernova-Explosion.html 

    ( Supernova Explosion by ESA )

    1900 ஆண்டு முதல் 1980 வரை பூதவுரு விண்மீன் HR 8752 சூழ்வெளி உஷ்ணம் 5000 டிகிரியில் நிலையாக இருந்துள்ளது.  பிறகு அது 1985 முதல் 2005 வரை திடீரென 8000 டிகிரியா ஏறியது என்று தெரிகிறது.   அப்போது பூதவுரு விண்மீனின் ஆரம் நமது பரிதியைப் போல் 750 மடங்கி லிருந்து 400 மடங்காகச் சிறுத்து விட்டதாகக் கணிக்கப் பட்டுள்ளது.   பூதவுரு விண்மீன் HR 8752  நிலை எதிர்காலத்தில் எப்படி மாறி இருக்கும் என்று இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது.   ஆனால் அது ஒரு சூப்பர்நோவா பேராற்றல் வெடிப்பில் [Supernova Explosion] சிதைந்து விடும் என்று நம்பிட அழுத்தமானக் குறிகள் உள்ளன என்று கருதுகிறார்கள்.

    புதிரான காமாக் கதிர்வீசும் பூதக் காந்த விண்மீன்கள்

    1992 ஆம் ஆண்டில்தான் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர்.  அதற்கு ஆதாரமாக 1979 ஆம் ஆண்டிலே காந்த விண்மீன் ஒன்றிலிருந்து எழுந்த காமாக் கதிர்வீச்சுக் களை முதலில் அவரிருவரும் பதிவு செய்தனர்.  அதன் பிறகு அடுத்த பத்தாண்டு களில் காந்த விண்மீன் நியதி பரவலாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.  சூப்பர்நோவா (Supernova) வயிற்றிலிருந்து பிறந்து சுருங்கிப் பேரளவு திணிவுள்ள காந்த விண்மீன்கள் (Super-Dense Magnetars) பூமியின் காந்த தளத்தைப் போன்று 1000 டிரில்லியன் மடங்கு தீவிரக் காந்த சக்தியைக் கொண்டவை !  காந்த வின்மீன்கள் என்பவை வாயு எரிசக்தி தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன்களே (Neutron Stars) !  அவற்றை அதி தீவிர ஆற்றல் உள்ள காந்தத் தளம் சூழ்ந்திருக்கிறது.  அந்தக் காந்த தளமே தேய்வடைந்து பேரளவு சக்தி வாய்ந்த மின்காந்த கதிர்வீச்சாக (High Energy Electromagnetic Radiation) குறிப்பாக எக்ஸ்ரே, காமாக் கதிர்களாக (X-Rays & Gammar Rays) மாறி எழுகின்றன.

    Fig 1E Magnetar 1900+14

    இதுவரை விண்வெளியில் 15 காந்த விண்மீன்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  அவற்றில் இரண்டு விதங்கள் உள்ளன.  முதல் வகை : “SGR” என்று அழைக்கப்படும் “மென்மைக் காமாக் கதிர் மீளெழுச்சி மீன்கள்” (Soft Gamma Ray Repeaters). அடுத்த வகை : AXP என்று குறிப்பிடப் படும் “முரண் எக்ஸ்ரே துடிப்பு மீன்கள் (Anomalous X-Ray Pulsars).  இதுவரைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்த காந்த விண்மீன்களில் அதி தீவிரக் காந்த தளம் கொண்டது : SGR 1806-20.  அதன் கணிக்கப்பட்ட காந்த தளம் : 2 X (10^11) Teslas OR 2 X (10^15) Gauss (1 Teslas = 10,000 Gauss). பூத வல்லமை உடைய அந்த காந்த விண்மீனின் தீவிரத்தை ஒப்பாகக் காட்ட வேண்டுமானால் இப்படிக் கூறலாம்.  பூமியின் காந்த தளம் : அரை காஸ்.  மருத்துவ மனையில் உள்ள “காந்த இணைத்துடிப்புப் படவரைவு யந்திரம்” (MRI – Magnetic Resonance Imaging Machine) 32,000 காஸ். ஆய்வுக் கூடங்களில் இதுவரை தயாரிக்க முடிந்த காந்த தளம் : 40 டெஸ்லாஸ் (400,000 காஸ்).

    Fig 1F Magnetar's Magnetic Field

    காந்த விண்மீன்களின் இயற்கையான அமைப்பு

    பூமிக்கு அருகில் இல்லாமல் விண்வெளியில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் உள்ள இந்த வகைக் காந்த விண்மீன்களைப் பற்றிச் சொல்வதற்கு அதிகமில்லை !  பொதுவாகக் காந்த விண்மீன்களின் விட்டம் சிறியதே : சுமார் 12 மைல் (20 கி.மீடர்).  ஆனால் அது நமது பரிதியை விடப் பேரளவு திணிவு நிறை அழுத்தம் (Compressed Dense Mass) பெற்றுள்ளது.  ஒரு கையளவு வடிவுள்ள காந்த விண்மீன் உண்டை 100 மில்லியன் டன் எடைக்கும் மிகையாகக் கனமுள்ளது.  பெரும்பான்மைக் காந்த விண்மீன்கள் தம்மைத் தாமே விநாடிக்குப் பல சுற்றுகளாய் வெகு வேகமாகச் சுற்றிக் கொள்கின்றன.  காந்த விண்மீன்களின் ஆயுட் காலம் சிறியது !  அவற்றின் தீவிரக் காந்த தளம் சுமார் 10,000 ஆண்டுகளில் தேய்ந்து சிறுத்துப் போகும் !  அதற்குப் பிறகு அவற்றின் அதி தீவிர எக்ஸ்ரே எழுச்சிகள் நின்று விடும் !  அவ்விதம் கணக்குப் பார்த்ததில் நமது பால்வீதியில் முடங்கிப் போன காந்த விண்மீன்கள் சுமார் 30 மில்லியனுக்கும் மிகையாக இருக்கும் என்று தெரியப்படுகிறது.

    Fig 1E Magnetar's Region in Space

    காந்த விண்மீன்களின் அதி தீவிரக் காந்தத் தளம்

    பிரபஞ்சத்தில் காந்த விண்மீன்களைப் போல் அசுரக் காந்த வல்லமை உடைய வேறெந்த விண்மீன்களும் இதுவரைப் பதிவு செய்யப் படவில்லை.  600 மைல் (1000 கி.மீ) தூரத்தில் ஒரு காந்த விண்மீன் இருந்தாலும் அதன் காந்த தளம் பூமியில் உள்ள உயிரினங்களைக் கொல்லும் ஆற்றல் உடையது.  அப்போது உடம்பு நீரில் உள்ள “எதிர்முனைக் காந்த துருவ அமைப்பால்” (Diamagnetism of Water) (Diamagnetism is the property of an object which causes it to create a magnetic field in opposition of an externally applied magnetic field, thus causing a repulsive effect) அது உடற் சதைகளைக் கிழித்து விடுகிறது !  பூமிக்கும் நிலவுக்கும் இடையே பாதித் தூரத்தில் காந்த விண்மீன் ஒன்று இருக்குமேயானால் அந்தக் காந்த தளம் நமது பூமியில் உள்ள “கடன் பிளாஸ்டிக் அட்டைப்” (Credit Card) பதிவுகளை முற்றிலும் அழித்திடும் என்று சொல்லப் படுகிறது !  2003 பிப்ரவரியில் வெளிவந்த விஞ்ஞான இதழ் (Scientific American Magazine) காந்த விண்மீன் SGR 1900+14 பூமியில் விளைவித்த தீங்குகளை வெளியிட்டது !  எக்ஸ்ரே ஒளித்திரள்கள் (X-Ray Photons) இலகுவாக இரண்டாய்ப் பிரிந்தன அல்லது ஒன்று சேர்ந்தன !  சூனியம் கூட ஒரு மட்டத்தில் காந்த அலை அதிர்வு காட்டியது (Vacuum is Polarized) !  அணுக்கள் கூட துகள் ஒப்புநிலை எலக்டிரான் அலை நீளத்தில் (Quantum-Relativistic Wavelength of an Electron) மெல்லிய அளவில் நீள் உருளையாய் திரிபு அடைந்தன (Deformed into Long Cylinders) ! 10^5 Teslas காந்த தளத்தில் அணுக்களின் சுற்றுவீதிகள் பென்சில் போல் மெலிந்து சிறுத்து விடும் ! 10^10 Teslas தீவிரத்தில் ஹைடிரஜன் அணு ஒன்றின் விட்டம் 200 மடங்கு மெலிந்து குறுகி விடும் !

    Fig 1G Pulsar

    காந்த விண்மீன்கள் எவ்விதம் உண்டாகுகின்றன ?

    நாசாவின் ஸ்பிட்ஸர் விண்வெளித் தொலைநோக்கிதான் (Spitzer Space Telescope) அசுரக் காந்த விண்மீனைக் SGR (1900+14) கண்டுபிடுக்க உதவியது.  அந்த விண்மீனைச் சுற்றிலும் ஏழு ஒளியாண்டு தூரம் அகண்ட வாயு “உட்சிவப்பு ஒளிவட்டம்” (Infrared Light) இருப்பது தெரிந்தது.  ஆனால் காந்த விண்மீன் எக்ஸ்ரே ஒளியில்தான் பதிவானது.  ஒரு சூப்பர்நோவா விண்மீன் சிதைந்து நியூட்ரான் விண்மீனாகும் போது அதன் காந்த தளத்தின் ஆற்றல் நான்கு மடங்கு மிகையாகிறது !  பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி களான டன்கனும் தாம்ஸனும் நியூட்ரான் விண்மீனின் காந்த தளத்தைக் கணித்தார்கள்.  சாதாரண அளவில் 10^8 டெஸ்லாஸ் இருக்கும் நியூட்ரான் விண்மீன் “யந்திர இயக்க முறையால்” (Dynamo Mechanism) இன்னும் ஆற்றல் மிகையாகி 10^11 டெஸ்லாஸ் அளவில் பெருகி முடிவில் ஒரு அசுர ஆற்றல் உடைய காந்த விண்மீனாகிறது !  சூப்பர்நோவா வெடிப்பில் விண்மீன் 10% நிறையை இழக்கிறது !  10 முதல் 30 மடங்கு பரிதி நிறையுடைய அத்தகைய பூத விண்மீன்கள் சிதையும் போது அவை ஒரு கருந்துளையாக (Black Hole) மாறாதபடி இருக்க பேரளவு (80%) நிறையை உதிர்க்க நேரிடுகிறது !  பிரபஞ்சத்தில் பத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்து, நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது துடிப்பு விண்மீனாகவோ (Pulsar) மாறாமல் காந்த விண்மீனாக உருவடைகிறது !

    Fig 2 Making a Magnetar

    மாபெரும் பிரபஞ்சப் புதிரான காமாக்கதிர் வெடிப்புகள் !

    கடந்த முப்பது ஆண்டுகளாக அகிலவெளியில் திடீரென எழும்பும் புதிர்க் காட்சியான காமாக்கதிர் வெடிப்புகள் வானோக்கு விஞ்ஞானிகளைப் பெருவியப்பில் ஆழ்த்தி யிருக்கின்றன !  மகா சக்தி வாய்ந்த அந்தக் காமாக்கதிர் வெடிப்புகள் ஒளிமயமாகத் தோன்றி எங்கிருந்து எழுகின்றன என்று அறிய முடியாமல் அனுதினமும் காட்சி அளித்து வருகின்றன.  சில வெடிப்புகள் பின்ன வினாடியில் ஒளிவீசி மறையும்.  சில வெடிப்புகள் சில நிமிடங்கள் நீடிக்கும்.  ஆனால் அந்த காமாக்கதிர் வெடிப்புகளின் ஒளிமயம் சிதையும் சூப்பர்நோவாவை விட ஒளி வீசுகின்றன.  இருண்ட வான மண்டலத்தில் பெருங்கொண்ட ஒளிமயத்தில் மின்னலைப் போல் வெட்டி மறையும் ஒளித்திரட்சியே காமாக்கதிர் வெடிப்பு !  அவ்வெடிப்புத் தினம் ஒருமுறை ரீதியில் வானில் ஒளிர்கிறது.  காமாக்கதிர்ப் பேழையான சூரியனை விடப் பேரளவு ஒளிமயத்தில் மின்னலைப் போல் கண்சிமிட்டும் காமாக்கதிர் வெடிப்புகள் ! சென்ற மூன்று ஆண்டுகளாக காமாக்கதிர் வெடிப்புகளின் மங்கும் எக்ஸ்-ரே, கண்ணொளி, ரேடியோ அலைகள் பற்றிய கருத்துகள் விருத்தியாகி முன்னேற்றம் அடைந்துள்ளன.  அவை யாவும் விண்மீன் தோற்றத்துக்கு முன்னோடியாகவோ அல்லது சூப்பர்நோவாவுக்கு மூலமாகவோ உள்ளன !

    Fig 3 Making a Neutron Star

    நியூட்ரான் விண்மீன்களில் காமாக்கதிர் வெடிப்புகள்

    பிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம்.  சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் !  பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன !  அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது.  விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது !  அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன.  அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.

    Fig 4 Spitzer Space Telescope

    ஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது.  அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது.  அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density).  நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும்.  நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது.  ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் (2 X 10^11) மடங்கு மிகையானது !  அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது !

    Fig 5 Internal Structure of Neutron Star

    சூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் !  தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் !  இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் !  அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது.  அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது.  இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது !  கருந்துளைகள்  (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது.

    Fig 6 The Magnetar Pioneers


    [தொடரும்]


    +++++++++++++++++++


    தகவல்கள்
    :

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    10 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802141&format=html (Cosmos Gamma Ray Bursts)
    11 Space Com – Origins of the Universe’s Most Powerful Magnets (The Magnetars) By : Michael Schirber (Feb 1, 2005)
    12 Extreme Universe : Magnetic Fields & Magnetars Posted By : Jcconwell in Astronomy (Mar 12, 2009)
    13 Science Illustrated – Death Star – Could the Most Magnetic Objects (Magnetars) in the Universe Cause Extinction on Earth ? (Jan-Feb 2009)
    14 From Wikipedea – Magnetar (May 1, 2009).

    15. Spectacular Hypergiant Star Found Passing Through “Forbidden Zone.”  [December 10, 2012]

    ******************

    S. Jayabarathan  (jayabarat@tnt21.com)  [December 15, 2012]

    Share
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்: 5

    பசியும், சுவையும், வளர்ச்சியும்.

    இன்னம்பூரான் & தேமொழி

    விலங்கினங்களின் உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கிறோம்.  நம் மனித இனம் அனைத்தையும் உண்ணும் வகைதான்.  எதையும் விட்டு வைப்பதில்லை. அசையாத் தாவரங்கள் முதற்கொண்டு நீந்துவன, ஊர்வன, பறப்பன, ஓடுவன என அகப்படும் விலங்கினங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்கிறது, மனித இனம்!

    மனித இனம் கண்டுபிடித்த மிக அரிய கண்டுபிடிப்புக்களில், மிகவும் உதவும் கண்டுபிடிப்பாக  விளங்குவது சமையல் கலை. சமைப்பதால் உணவு செரிக்கப்பட்டு வெகு விரைவில் உடலுக்கு சக்தி கிடைக்கிறது.  எனினும் சில காய், கனி, மூலிகைகளை சமைத்தால், அவற்றின் பயன் குறைந்து போவதும் உண்மை.

    சமைத்துண்ணும் உணவுப் பழக்கத்தால், பரிணாம வளர்ச்சியின் காரணமாக, காலப் போக்கில் மழுங்கிய கோரைப் பற்களையும், செயல் திறனற்ற சுருங்கிய குடல்வாலும் நமக்கு நிலைத்துவிட்டது.  காலப்போக்கில் மனித குடலின் அளவும் குறைந்து வருகிறது என்கிறார்கள்.

    சொல்லப்போனால் நாம் இரண்டும் கெட்டான். நமக்கு பசுமாட்டின் அசை போட்டு அரைக்கும் பற்களும் கிடையாது. புலியின் கோரைப்பற்களும் கிடையாது.   அத்துடன், தாவரஉண்ணி போல தாவரங்களில் உள்ள செல்லுலோஸ் மூலக் கூறுகளை செரிக்க உதவும் பாக்டீரியாக்களைக் கொண்ட,  ‘செயல்படும் திறனுள்ள’ குடல்வால் (Vermiform appendix) உறுப்பும் மனித இனத்திற்கு இல்லை.

    நாம் உணவை உண்டு, செரித்து அதன் சக்தியை பெற்றுக்கொள்வதில் உடலின் பல உறுப்புகள் பங்கு பெறுகின்றன.  நம் உடல் உணவின் மூலம் சக்தி பெறுவதில் உணவு மண்டல உறுப்புகளுடன் மூளையின் பங்கும்  இன்றியமையாததாக அமைகிறது. உணவு உட்கொள்வதைக் கண்காணிப்பதில், கட்டுப்படுத்துவதில் நம் மூளை அல்லது மனம் பங்கேற்கிறது. மனம் திருப்தி அடைவது போல சாப்பிடுவது மனித இயல்பு.

    உணவு நமக்கு சக்தி கொடுக்கிறது என்று  உணர்ந்து நாம் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை.நம் உணர்வுகளுக்கு திருப்தி தரும் உணவுகளையே நாம் நாடுகிறோம். அவற்றை நமக்கு திருப்தி ஏற்படும் வரை சாப்பிடுகிறோம்.  இந்த திருப்தி அடையும் உணர்வினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நம் மூளை, மற்றும் மூளையை உணவு மண்டலத்துடன் இணைக்கும் நரம்புகளின் செயல்.

    சக்தி இழந்து உணவு தேவைப்படும் பொழுது,  இரைப்பையில் கெரிலின் (Ghrelin) என்ற சுரப்பிநீர் சுரக்கிறது. இதனால்  ‘உணவு தேவை’ என்ற சமிக்கை மூளைக்கு அனுப்பப்பட்டு ‘போய் சாப்பிடு’ என்ற பதில் கட்டளையையும் மூளை நமக்கு அனுப்புகிறது. அது போலவே திருப்தியாக வயிறு நிறைந்தால் மூளைக்கு ‘வயிறு நிறைந்தது’  பற்றி சமிக்கை அனுப்பப்படுகிறது.  மூளை ‘சாப்பிட்டது போதும் நிறுத்து’ என்று பதில் சமிக்கை அனுப்புகிறது. படிப்படியாக பல படிகளில் கட்டளைகள் அனுப்பப்பட்டு நிறைவேற்றப் படுகின்றன.

    சக்தி இழப்பின் எச்சரிக்கை, சுவையான உணவின் நினைவு, பரிசாக கொடுக்கப்படும் உணவு, அதனால் ஏற்படும் திருப்தி, உணவு தேவை நிறைவேற்றப்பட்டது என்பது போன்று தொடர்ந்து தேவையானக் கட்டளைகளை மூளை நிலைமைக்குத் தக்கவாறு ஒன்றன் பின் ஒன்றாக அனுப்புகிறது.  ஒரு கட்டளை நிறைவேற்றப்பட்ட சமிக்கை சென்றதும், அதன் தன்மைக்கேற்ப அடுத்த கட்டளை மூளையினால் பிறப்பிக்கப்படும்.

    மூளை தரும் இந்தக் கட்டளைகளை நாம் புறக்கணிப்பது நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.  அதனால் அதிகம் உண்டு நோயை வரவழைத்துக் கொள்ளுதல், அல்லது பட்டினி கிடந்தது உயிரைவிடுதல் போன்றவை நிகழ்கிறது.  இவ்வாறு நாம் மூளையின் கட்டளைகளைப் புறக்கணித்து உணவில் கட்டுப்பாட்டை இழக்கும் பொழுது அந்தப் பழக்கம் மனநோயாக வகைப்படுத்தப் படும் ‘உண்ணும் கோளாறுகள்’ (eating disorders) என்ற நிலையை அடைகிறது.

    உண்ணும் கோளாறுகள் மூன்று முக்கிய வகையாக; (1) அனோரெக்ஸ்யா, (2) புலுமியா, (3) பின்ஜ் ஈட்டிங் (Anorexia nervosa, Bulimia nervosa, and binge-eating disorders) என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. இக்கோளாறுகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும்.  எந்த வயதினரும் பாதிக்கப் பட வாய்ப்பு இருந்தாலும், பதின்ம வயதினர், அதிலும் பெண்கள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள்.  மெல்லிய தோற்றம் கொண்டிருப்பதே ‘உடல் அழகு’ என்ற கருத்து சமுதாயத்தினால் பெண்கள் மேல் நிர்பந்திக்கப்படும்போழுது அவர்கள்  உணவு உண்ணுதலில் கட்டுப்பாட்டினை இழந்து மிகவும் பாதிக்கபடுகிறார்கள்.

    அனோரெக்ஸ்யாவால் பாதிக்கப் பட்டவர்கள் உணவை தவிர்த்து பஞ்சத்தில் அடிபட்டவர்கள் போல் எலும்பும் தோலுமாக மாறுவார்கள்.  இரத்த சோகை, உயிர்ச்சத்துகள் (vitamins) குறைவு போன்றவை தாக்கி, உருவம் மாற்றமடைந்து, எளிதில் நோய்களால் பாதிக்கபடுவார்கள்.

    புலுமியாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் உண்பது, பிறகு வாந்தி எடுப்பது, மலமிலக்கி உபயோகப்படுத்துவது போன்றவற்றினால் உணவை உடலில் சேராமல் செய்யும் முறைகளைக் கையாள்வது, உணவைக் கட்டுப்படுத்துதல் (Dieting) போன்ற வழிகளைக் கையாண்டு சீரற்ற உடல் எடையை கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்கள்.

    பின்ஜ் ஈட்டிங் உணவுப் பழக்கமுள்ளவர்கள், கட்டுப்பாடின்றி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் உடல் பருமனால் (obesity) பாதிக்க்கப்படுவார்கள். இதனால் குற்றவுணர்வு, மனச்சோர்வு (Depression) போன்ற மேலும் மனநோய்களுக்கு ஆளாவதுடன், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் கொழுப்பு அதிகரித்தல், அதனால் மாரடைப்பு, இதய நோய், நீரிழிவு நோய் (Diabetes)  போன்றவைகளினால் அதிகம் பாதிக்கப் படுவார்கள். விருச்சிக முனிவர் இட்ட சாபத்தால் யானைப்பசி என்னும் நோய்க்கு ஆளான காயசண்டிகையை இது நினைவு படுத்தினாலும், யானைக்கு அன்றாட உணவு, கண்ணுங்கருத்துமாக அளவிடப்பட்டுக் கொடுக்கப்படுகிறது என்று நாம் அறிவோம்.

    இந்த உண்ணும் கோளாறுகளில் வகைப்படுத்தப் படாதவைகள் (eating disorders not otherwise specified – EDNOS) என மற்றொரு பிரிவின் கீழ் மேலும் பல தவறான உணவுப் பழக்கங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.  இவையாவும் மனநோயாகக்  கருதப்பட்டே சிகிச்சை தரப்படுகிறது.

    பசி இயல்பு. சுவை விருப்பம். வளர்ச்சி இயற்கையின் கொடை. தற்காலம், மேற்கத்திய நாடுகளில், பாட்டியின் கைவைத்தியத்துக்கும், இயற்கையின் அன்பளிப்புக்கும், மூலிகை வைத்தியத்துக்கும், ஆயுர் வேதத்துக்கும் மதிப்பு கூடி வருகிறது. உசாத்துணையில் இன்னம்பூரான் கூட்டியிருக்கும் நூலின் சாராம்சம்:

    ஷேக்ஸ்பியர் மாக்பெத் நாடகத்தில் கூறியது போல, பசி வந்தால் நல்ல ஜீரணம். ஜீரணித்தால் ஆரோக்கியம். ஹிப்போக்ரட்டீஸ் சொன்னது போல வியாதிகளின் மூலஸ்தானம், குடல். அந்த அவஸ்தையை நாம் நாடுவதை பற்றி விலாவாரியாக விமரிசிக்கும்  திருமதி. ஜில் தாமஸ் சொல்வதைக் கேட்போம்,

    1. வேண்டிய அளவு நார்ச்சத்து இல்லையேல், மலம் சிக்கும்;

    2. நீரில்லையேல் ஜீரண அவயவங்கள் தவிக்கும்;

    3. ஒவ்வாத வகையில் பதார்த்தங்களை முழுங்கிவிடுவதைப் போல பாவம் ஒன்றுமில்லை;

    4. அவசரப்பட்டு, அடிச்சு பிடிச்சு சாப்பிட்டால், வயிறு அழும்;

    5. உண்ணும் போது நிதானம் உதவும். மன அழுத்தம் நீங்காத போது உண்டால், வயிறு வலிக்கும்;

    6. காலையில் எழுந்தவுடன் மலஜலம் கழிப்பது சாலத்தகும்; பொறுத்தார் வயிறாள்வார்!

    7. செத்துப்போன உணவை விலக்கவும். கட்டித்தந்த மாமிசத்துகள்களை விட ஒரு கேரட்டை கடிப்பது, உத்தமம்;

    8. லாஹிரி வஸ்துக்கள் வயிற்றின் பகை. அவற்றைக்கொண்டு வயிற்றை அடிக்காதே:

    9. மருந்தானாலும் விருந்தோடு உண் என்பது சரி. விருந்தானாலும் கபளீகரம் தவிற்க. மருந்து அத்தருணம் உதவாது.

    இவற்றின் அடிப்படையில் யான் கூறவருவது: பசிக்கு உணவு; சுவைக்கு பக்குவம்; வளர்ச்சிக்கு தராதரம்.

    இருவர் இணைந்து வழங்கினால் பயன் அதிகரிக்கறது. அடுத்த இழையில் குடலுக்குள் புகுந்து பார்க்கலாமா? என்ன சொல்றேள்?

    இன்னம்பூரான்

    தேமொழி

    கவனம்:
    நாங்கள் டாக்டர்கள் அல்ல. நட்புரிமையுடன், பொறுப்புணர்ச்சியுடன்,ஆதாரங்களை தமிழில் விளக்கி, அவற்றை சுட்டிக்காண்பித்து அறிமுகம் தரும் சுகாதாரம் பற்றிய தொடர் இது, டாக்டரிடம் ஆலோசனை பெற இவை உதவலாம்.  இவற்றை படித்து உரிய நேரத்தில் டாக்டரிடம் போவதைத் தவிர்க்கக்கூடாது.  அவரவர் மருத்துவம், சிகிச்சை, நிவாரணம் ஆகியவற்றை நாடும் செயல்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

    — இன்னம்பூரான் & தேமொழி

    உசாத்துணை:

    http://www.nimh.nih.gov/health/publications/eating-disorders/complete-index.shtml

    http://www.nationaleatingdisorders.org/information-resources/index.php

    http://www.tamilvu.org/courses/diploma/a071/a0713/html/a0713166.htm

    Jill Thomas (2007) Healthy Gut Guide: London: Penguin

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-reYJG0vTlfw/UBkOncA5ZfI/AAAAAAAABRo/5YCdGFlRSXU/s1600/maya14.jpg

    Share
  • வைகறைப் பொழுது

    சு.கோதண்டராமன்

    பொழுது புலர்கிறது. இரவு மெல்ல விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சூரியன் உதிக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னரே கீழ்வானில் வெளிச்சம் பரவி விட்டது. மானிடர் மட்டுமன்றி எல்லா உயிரினங்களும் உறங்கி எழுந்து விட்டன. நேற்றைய உடல் வலிகள், மன வேதனைகள் யாவும் மறைந்து உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி தோன்றியுள்ளது. எல்லோரும் புதிய நாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

    இது போன்ற எத்தனையோ வைகறைகளை நாம் கடந்து வந்துள்ளோம். இனி நம் வாழ்நாளில் எத்தனையோ காணப்போகிறோம். சர்வ சாதாரணமான தினசரி நிகழ்ச்சி, ஆனாலும் வேத ரிஷி ஒவ்வொரு விடியலையும் புதிதாகக் காண்கிறார். அவரது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை கவிதையாக்கித் தருகிறார். கீழே வருவது ரிக் வேதம் முதல் மண்டலம் 113வது சூக்தம். குத்ஸ ஆங்கிரஸர் என்பவர் யாத்தது.

     

    வைகறைப் பொழுது இனியது. ஆனந்தம் தருவது. அழகானது. அழகானவற்றை எல்லாம் பெண்ணாகவும் ஆற்றலோடு கூடியவற்றை எல்லாம் ஆணாகவும் உருவகிப்பது வேத ரிஷிகள் துவக்கிய கவிதை மரபு. இதோ இந்த விடியல் நேரம், உஷை (உஷா, உஷஸ்) என்னும் பெண்ணாகக் காட்டப்படுகிறது.

     

    இன்னும் இரு பெண்கள் உள்ளனர். இரவு ஒரு பெண், பகல் ஒரு பெண். இருவர்க்கும் என்ன உறவு? சோதரிகளாகத் தான் இருக்க வேண்டும். இரவு கறுப்பாகவும், பகல் வெள்ளையாகவும் இருக்கின்றன. ஆனால் அச் சோதரிகள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை. ஒரே பாதையில் ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஒரு கணமும் தடைபட்டு நிற்காமல், அவர்களது இந்தப் பயணம் தொடர்கிறது. பகல் முழுமையாகத் தோன்றிவிட்டால் அதில் ஒரு உக்கிரம் காணப்படுகிறது. அதற்கு  முன் வரும் வைகறைப் பொழுதோ உக்கிரம் இல்லாத, அமைதியான, ஆனந்தமான, இனிய சூழலை ஏற்படுத்துகிறது. இந்த வைகறை பிறக்க ஒரு பிரசவ அறை அமைத்து விட்டு இரவு என்னும் நங்கை தன் இல்லம் நோக்கித் திரும்புவதாகக் கவிஞரின் கற்பனை விரிகிறது.

    இப்படி நாள் தவறாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவது எப்படி? கவிஞர் வியக்கிறார். ஒரு இயற்கை நியதி உள்ளது, அதில்  தோன்றியவை தான் இவை யாவும், அந்த இயற்கை நியதிக்குக் கட்டுப்பட்டுத் தான் இவை அனைத்தும் செயல் புரிகின்றன என்பதை உணர்கிறார். வேதக் கவிதைகளில் எங்கும் இழையோடும் மையக் கருத்தே இது தான். ருதம் என்ற பெயரால் குறிக்கப்பட்ட இந்த நியதி தான் கடவுள் கொள்கையாகப் பிற்காலத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.

    வைகறைப் போதில் ஒவ்வொரு உயிரும் விழிப்புப் பெறுகிறது. இறந்தோர் மட்டுமே விழிப்பதில்லை. அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுகின்றனர். அரசனாக இருந்தால் செங்கோல் ஓச்சுவது தொடர்பான கடமைகள் அவனுக்காகக் காத்திருக்கின்றன. பொருள் தேடப் புறப்படுவோர் சிலர். புகழ் நாடிச் செயல் புரியத் தொடங்குவோர் சிலர். தேவ பூசனைக்கு ஆயத்தமாவோர் சிலர். பொழுது புலரவில்லையெனில் தேவர்க்கு உணவளிப்பார் எவரும் இரார் என்கிறார் கவிஞர்.

    பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மை அதிதி என்னும் பெண்ணாக உருவகிக்கப்படுவது வேத மரபு. தேவர்களாகக் கூறப்படும் இயற்கைச் சக்திகள் யாவும் அதிதியின் மக்களாகக் கருதப்படுகின்றனர். மக்கள் தேவ பூசை செய்யவும், தேவர்களுக்கு உணவளிக்கவும் வழி செய்வதால் உஷை தேவர்களின் தாயாகவும் அதிதியின் வடிவினளாகவும் கருதப்படுகிறாள்.

      சு.கோதண்டராமன்

    எத்தனை காலமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என வியக்கிறார் கவிஞர். நம்முடைய எண்ணற்ற முன்னோர்கள் எத்தனையோ விடியல்களைப் பார்த்து விட்டு மறைந்து விட்டனர். இன்று நாம் பார்த்து மகிழ்கிறோம். இனி எத்தனையோ எண்ண முடியாத வைகறைகள் வரப்போகின்றன. நம் சந்ததியர் அதைக் கண்டு களிப்பர். இதன் துவக்கத்தையோ முடிவையோ யார் அறிவார்? இந்த மாபெரும் காலப் பெரு வெள்ளத்தில் தான் ஒரு சின்னஞ்சிறு திவலை என்பதை உணர்ந்து அடக்கம் கொள்கிறார் ரிஷி.

    இனி மேற் சொன்ன வேதக் கவிதையின் தமிழாக்கத்தைப் பார்ப்போம். (மொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.)

     

    1     வந்தது வந்தது பேரொளி இன்று,

    வானகமெங்கும் பரவியே நின்று.

    ஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு

    அணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.

     

    2     வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்

    இருளின் கருமையோ இல்லம் விரைந்தது.

    இரவென ஒருத்தி பகலென ஒருத்தி

    அமரத் தன்மை அடைந்த மகளிர்

    ஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு

    ஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று

    விண்ணில் நடக்கும் விந்தை காணீர்

     

    3     மூலப் பரம்பொருள் ஏவியபடியே

    முடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்

    இரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி

    மாறி மாறியே பயணம் செய்வர்.

    நிறம் தான் வேறு மனமோ ஒன்று

    அழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்

    தடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.

     

    4     உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    5     சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை

    பூசனை புரியவும் பொருளினைத் தேடவும்

    இன்ன நலன்களை இனிதே நாடவும்

    தூண்டி நிற்பாள் திருவளர் செல்வி

    விழியிலார்க்கு விழிகள் அருளி

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    6     கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்

    புகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்

    இலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்

    கடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்

    வேலைகள் பலவாம் விரைதல் ஒன்று

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

     

    7     விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்

    நல்லுடை உடுத்த நளின மங்கையே,

    புவியின் செல்வம் ஆளும் ராணியே,

    மங்கலச் செல்வி, இன்று எம்மீது

    உந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.

     

    8     கடந்து சென்ற கணக்கிலா விடியல்

    அடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்

    இனி வர விருக்கும் எண்ணிலா விடியல்

    யாவற் றிற்கும் நீ வழி காட்டி.

    உதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.

    இறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ?

     

    9     உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்

    தீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.

    சூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.

    தேவ பூசனை செய்யும் உந்துதல்

    உன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்!

     

    10    எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்?

    இன்னும் எத்தனை காலம் இருப்பாய்?

    கடந்து சென்ற நாட்களின் வழியில்

    நடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.

    இனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்

     

    11     எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

    எண்ணிலா விடியல் கண்டு களித்து

    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

    உஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட

    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

    புதிய மக்கள் நாளை வருவர்

    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

     

    12    நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை

    நெடிய பகையினை நீளத் துரத்தினை

    மகிழ்வு அளித்தனை மங்கலச் செல்வி

    இனிய ஒலிகள் எழும்பச் செய்தனை

    தேவர்க்குணவை தினமும் கொணர்ந்தனை

    இன்றுனது ஒளியை எம்மிடம் வீசு

    13    தேவி உனது திருநிறை ஒளியை

    பன்னெடுங்காலமாய்ப் பாய்ச்சி வந்துளாய்.

    இன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்

    மூப்பும் இறப்பும் கடந்தவளாதலால்

    இனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்

     

    14    விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்

    கருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்

    செந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்

    கொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.

     

    15    உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்

    உடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை

    வியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்

    கடந்து சென்ற விடியல் களிலே

    கடைசியாய் வந்தது இன்றைய வைகறை

    இனிவர விருக்கும் விடிவு களுக்கு

    முதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்

     

    16    உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,

    விரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்

    பகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்

    இன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்

     

    17    ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து

    உயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்

    போற்றும் புலவர்க் கருளுக உஷையே

    குழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.

     

    18    சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து

    காற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை

    வீரப் புதல்வர், விரையும் குதிரைகள்

    பசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.

     

    19    தேவர் தாயே, அதிதியின் வடிவே

    வேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க!

    யாவரும் போற்றும் இனிய நங்காய்,

    உன்னைத் துதிக்கும் அடியார் தம்மை

    உலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.

     

    20    உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு

    உவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்

    மிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்

    விண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.

    படத்திற்கு நன்றி

    http://chakrabodyyoga.blogspot.in/2012/06/from-blah-to-brilliant-3-great-reasons.html

    Share
  • அருவி சத்தம்

    கணேஷ் வெங்கட்

    சிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட அருவி சத்தம் கனவிலிருந்தா அல்லது நனவிலிருந்தா என்ற சந்தேகத்துடனேயே அன்றைய இரவு கழிந்தது. அன்று கேட்ட அருவி கொட்டும் சத்தத்தை நான் நெடு நாளாக மறக்கவில்லை.
    நான் வசிக்கும் புறநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷாப்பிங் மாலில் வார இறுதி நாட்களில் கூட்டம் அள்ளும் போது சத்தம் அருவி சத்தத்தை போல சோவென்று கேட்கிறது. மூடிய கூரைக்குள் கேட்கின்ற சத்தங்கள் புதிரானவை. பாதி சத்தம் மக்களின் குரல்கள் மற்றும் இயக்கங்களால் ஏற்படுகின்றன. மீதி சத்தம் நெடிதுயர்ந்த கூரை வரை நீண்டு தொட்டுத் திரும்பும் எதிரோலியால் ஏற்படுவன. ஷாப்பிங் மாலின் மூன்றாம் அடுக்கில் இருக்கும் கையேந்தி பவன்களும், உட்கார்ந்து உணவருந்தும் விடுதிகளும் தான் அதிக பட்சமான மக்களை ஈர்க்கின்றன. ஆனால் அங்கு உணவருந்தும் யாரும் அப்படியொன்றும் சத்தம் போட்டு பேசுவதாக தெரியவில்லை. ஆனாலும் சத்தம் அங்கிருந்து வருவது போலவே தோன்றும். பெரும்பாலும், இளவயது காதலர்கள் ஒரே ஒரு சாண்ட்விச் ஆர்டர் செய்து, அது பூஞ்சைக் காளான பிடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்து அமைதியாக உண்கிறார்கள். அம்மா அப்பாவுடன் மாலுக்கு வந்திருக்கும் குழந்தைகள் பஞ்சு மிட்டாய் வாங்க க்யூவில் காத்திருக்கும் போது போடும் சத்தம் அதிக டெசிபல் உள்ளதாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. திரைப்படக் காட்சி துவங்குவதற்காக காத்திருக்கும் இளைஞிகள் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொண்டே போடும் சத்தம் சமயத்தில் அதீதமாக இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் குறைந்து விடும். பல பொருள் சிறப்பங்காடியில் பொது அறிவிப்பு செய்து “அவர் வரவும்…இவர் வரவும்” என்று சொல்லி அழைப்பார்கள். அதன் சத்தம் சிறப்பங்காடியை ஒட்டி இருக்கும் பன்னாட்டு பிராண்ட் காலணி விற்கும் கடையில் அலறும் “டிங்சுக்கு….டிங்சுக்கு” இசையோடு சேரும். பண்பலை வானோலியின் புகழ் பெற்ற ஆர்ஜே ஒருத்தி சிறு மைக்கில் கொஞ்சிப் பேசிக்கொண்டே குலுக்கல் விளையாட்டொன்றுக்கு பங்கேற்பாளர்களை அழைப்பாள். பணக்காரர்களின் மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களின் வீடுகளில் வைக்கப்படும் பீன் – பை இருக்கைகளை அறுபது விழுக்காடு தள்ளுபடியோடு விற்போர் வாடிக்கையாளர்களை அழைத்துக் கொண்டிருப்பார்கள். ப்ளே-சோன்-க்கு வெளியே டோக்கன் வாங்கி தம்முடைய முறைக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன், பேராவலுடன் காத்திருக்கும் சிறுவர்கள் சத்தமிட்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள். பொம்மை ஹெலிகாப்டர்களால் கட்டப்பட்ட எலக்ட்ரானிக் ரங்கராட்டினம் கட்டுக்கடங்கா ஒசையை தந்து கொண்டிருக்கும். நிழல் குத்துச் சண்டை வீரர்கள் மாதிரி மிண்ணனு திரை முன்னால் கையை ஆட்டியும் வீசியும  இளைஞர்கள் கணினி விளையாட்டு விளையாடுகையில், டெர்மினல் விசித்திரமான சப்தங்களை எழுப்பிக் கொண்டிருக்கும்.
    இவ்வெல்லா சத்தங்களும் ஒன்றிணைந்து பெரும் சத்தமாகி கூரையைத் தொட்டு எதிரொலி எழுப்பி…….பக்கத்து மேஜையிலிருந்து டிங்கென்று கண்ணாடி கிளாஸ் கீழே விழுந்தது. நீல நிற பானமொன்று தரையில் ஓடியது. அது நான் உட்கார்ந்திருந்த இடம் நோக்கி வந்தது. ஒரு ஞாயிறன்று எதுவும் ஆர்டர் செய்யாமல், யாருக்காகவும் காத்திருக்காமல் உட்கார்ந்திருந்த காபி கடையை விட்டு வெளியே வந்தேன். என் காலணி சர்சர்ரென்று சத்தமெழுப்பி ஷாப்பிங் மாலின் பெருஞ்சத்தத்தின் மிகச்சிறு அங்கமாக இணைந்தது.
    ++++++
    “இது என்னது? கவிதையா? சிறுகதை மாதிரியும் இல்லை. துணுக்கா இது? துணுக்கு என்றால் எதாவது தகவல் தர வேண்டும். இல்லையேல் நகைச்சுவையாவது தர வேண்டும். சிறுகதையென்றால் குறைந்த பட்சம் 1500 சொற்களாவது இருக்க வேண்டும். எத்தனை சொற்கள் வருகின்றன? எண்ணினாயா?…நிறைய வாசிப்பு இருக்க வேண்டும். ஆழமான வாசிப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு எழுத முடியும். ஒரு சிறுகதை ஏதாவது ஒரு பிரச்னையை கையாள வேண்டும். ஒர் அழுத்தமான உணர்வை கருவாக கொண்டிருக்க வேண்டும். இது எதுவும் உன்னுடைய சிறுகதைகள் எதிலும் தென்படவில்லை.”
    புகழ் பெற்ற எழுத்தாளர் (பு.பெ.எ) சொல்லுவதை ராகவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாறு நாவல்கள் ; நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ; கவிதைத் தொகுதி ஒன்று என பு.பெ.எ- தமிழ் இலக்கிய உலகின் ஒரு பிரசித்தமான படைப்பாளியாக இருந்தார்.
    ”நான் எப்பொதிருந்து எழுத ஆரம்பித்தேன் தெரியுமா? ஐம்பது வயதில் தான். அது ஏன் தெரியுமா? என்னால் ஐம்பது எட்டுவதற்கு முன்னாலேயே எழுதியிருந்திருக்க முடிந்திருக்கலாம். எழுதுவது என்பது ஒரு பொறுப்பான விஷயம் என்பதை நான் அறிந்திருந்தேன்.”
    ”சிறு வயதில் இருந்து சிறு துண்டுப் பிரசுரத்திலிருந்து, குழந்தை நாவல்கள், காவியங்கள், கவிதைகள்…..நான் தொடர்ந்து படித்து வருகிறேன்.”
    ”இன்று கூட நான் எழுதும் என் படைப்புகள் எனக்கு பூரண திருப்தியை அளிப்பதில்லை.”
    இதற்கு முன்னர் ராகவன் தான் எழுதியவற்றை பு.பெ.எ-விடம் கொடுத்து நேரம் கிடைக்குமானால் படிக்குமாறு பணிவுடன் பலமுறை வேண்டியிருக்கிறான். அவர் ஒரு முறை கூட அவன் எழுத்தைப் பற்றிய கருத்தை சொன்னதில்லை. அவனும் “படித்தீர்களா?” என்று பிறகு அவரை கேட்டதில்லை. அவருடைய ரசனையின் உயரத்தை தன்னுடைய படைப்புகள் எட்டியிருக்காத காரணத்தால்தான் அவர் எதுவும் சொல்வதில்லை என்று அவன் நினைத்துக் கொள்வான்.
    பு,பெ,எ அலமாரியிலிருந்து ஒரு கோப்பை எடுத்தார். அதற்குள் ராகவன் அவருக்கு வாசிக்க தந்திருந்த அவனுடைய படைப்புகளின் பிரதிகள் இருந்தன. அவற்றை வாசித்ததன் அடையாளமாக காகிதங்கள் முழுதும் திருத்தங்களும் குறிப்புகளும் இருந்தன. கோப்பினை ராகவனிடம் தந்தார்.
    “என்னுடைய திருத்தங்களும் ஆலோசனைகளும் ஒரு தேர்ந்த எழுத்தாளனாக ஆக்கும் என்று ஒரு உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால், நானொரு நல்ல எழுத்தாளன் என்று இன்றுவரை நான் ஒரு நாளும் எண்ணிக்கொண்டதில்லை. அந்த எண்ணம் தான் என்னுடைய ஒவ்வொரு படைப்பின் பின்னும் அயராத உழைப்பை போட தூண்டுகோளாக அமைகிறது”
    “வாரமொரு முறை ஒரு நாவல், நாளுக்கொரு கட்டுரை, மணிக்கொரு கவிதை என்று உற்பத்தியின் அளவு முக்கியமல்ல ; படைப்பின் தரமே அளவுகோல்.”
    ராகவனுக்கு இன்னொரு எழுத்தாளரை தெரியும். பழக்கமுண்டு. அவர் இவன் வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கிறார். அவர் சினிமா புகழ் எழுத்தாளர் (சி.பு.எ). ஒவ்வொரு முறையும் அவர் ராகவன் வசிக்கும் நகரத்துக்கு வருவதற்கு முன்னர் மின்னஞ்சல் அனுப்புவது வழக்கம். இவனும் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரைப் போய் பார்ப்பான். அவருடனான சம்பாஷணைகள் எல்லாமே ஒற்றை வழிப்பாதைகள் தான். அவர் மட்டுமே பேசுவார். இவன் கேட்டுக் கொள்வான். சி.பு.எ பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். சி.பு.எ-வை சந்திக்கப் போகும் போது ராகவன் கூடவே அவருக்கு பிடித்த பிராண்ட் “விஸ்கி”யை வாங்கிப் போவான். இரவு அவருக்கு டின்னரும் வாங்கித் தருவான்.
    சி.பு.எ-வுக்கு பலமுறை தன் படைப்புகளை மின்னஞ்சல் செய்திருக்கிறான். அம்மின்னஞ்சல்கள் தனக்கு கிட்டியதாக அவர் ஒரு தடவை கூட காட்டிக்கொண்டதில்லை. ”சத்தம்” சிறுகதையை அனுப்பு முன்னர் தொலைபேசியில் பேசினான். அவர் “அனுப்பி வைங்க ; கண்டிப்பா படிக்கிறேன்” என்று சொன்னார். மின்னஞ்சல் அனுப்பி பல நாட்கள் ஆன பின்னாலும், சி.பு.எ ஒரு சாஸ்திரத்துக்காகவென்றாவது ராகவன் எழுதிய சிறுகதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
    சி.பு.எ எழுதி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தை பற்றி ஒரு நாள் உரையாடிக் கொண்டிருக்கும் திடீரென்று சி.பு.எ கேட்டார்.
    “இலக்கிய கதைகள் எழுதுவது மட்டும் தான் உனது இலட்சியமா?”
    ”நானும் பத்து வருடம் முன்னர் வரை வெறித்தனமாக இலக்கிய நாவல்களை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தேன். இன்று என்னை இலக்கியத்தில் இருந்து மசாலாவுக்கு போனவன் என்று ஏளனமாக என்னை பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். இன்று சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுக்கு பஞ்ச் டயலாக் எழுதுகிறேன். இலக்கிய பரவ்ச நிலையை என் எழுத்துகள் இன்று தராமல் இருக்கலாம். ஆனால் என் எழுத்து இன்று எனக்கு நாலு பைசா சம்பாதித்து தருகிறது.”
    “இலக்கிய விழாவில் கைதட்டு விழும். ஆனால் விழா முடிந்த பிறகு பசியோடு நீ படுக்கைக்கு செல்வதைப் பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
    “நல்லதொரு உத்தியோகத்தில் நீ இருக்கிறாய். மேலும் காசு எப்படி சேர்ப்பது என்று பார். வேண்டுமானால் என்னுடைய உதவியாளனாக சேர்ந்து கொள். என்னுடைய ஸ்கிரிப்டை சரி பார்ப்பது, திருத்தி தருவது மாதிரி இதர வேலைகள்….இதற்காக நான் இருக்கும் ஊருக்கு வந்து தங்க வேண்டும் என்பதில்லை. நீ வீட்டில் இருந்த படியே செய்யலாம்”
    +++++
    ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி – பிராந்திய விற்பனை மேலாளர் – என் நகருக்கு வந்து திடீரென்று போன் செய்தார். ”இன்னும் இரண்டு மணி நேரத்தில் வருகிறேன். பிசினஸ் செண்டரில் சந்திப்போம். உன்னுடைய அணியில் உள்ளவர் எல்லோரையும் இந்த சந்திப்பிற்கு வரச்சொல்” என்றார். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஓரளவிற்கு எனக்கு தெரிந்தே இருந்தது. மார்ச் 31 முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. விற்பனை இலக்கை எங்கள் அணி எட்டவில்லை. இலக்கின் 65% சதவிகித விற்பனையையே நாங்கள் முழுமை செய்திருந்தோம். இந்த மோசமான முடிவுகளுக்கு பல காரணங்கள். கடினமான முயற்சியின்மை அதில் ஒன்று நிச்சயமாக அல்ல. எனக்கு கீழ் வேலை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் பழுத்த அனுபவமும் நல்ல தொடர்புகளும் உள்ளவர்கள். என் கீழ் ஐந்தாறு வருடங்களாக வேலை செய்பவர்கள். எங்கள் அணி உறுப்பினர்களுக்கு நடுவில் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் எனக்கு தெரியும். இன்று எதுவும் கேட்கப்பட மாட்டாது. அணியில் உள்ளவர்களின் முந்தைய வருட செயல்பாடுகளை, உண்மையான உழைப்பை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் வழங்கப்படும். இதற்கு அப்பீலெல்லாம் கிடையாது.
    பிசினஸ் செண்டர் ஷாப்பிங் மாலின் இரண்டாம் மாடியில் இருந்தது. இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்றபடி மாலின் லாபியை பார்க்க முடியும். மேலாளர் வர தாமதமானது. மூன்று விற்பனைப் பிரதிநிதிகளும் புகைப்பதற்காக ஷாப்பிங் மாலின் பின்புறம் சென்றிருந்தார்கள். வார நாட்களில் ஷாப்பிங் மாலில் மக்கள் அலை மோதுவதில்லை.
    லாபி ஏரியாவில் ஒரு நெடிய கண்ணாடிக் குழாய்க்குள் சிறைப்படுத்தப்பட்ட செயற்கை நீரருவி ஒன்றை அமைத்திருந்தார்கள். நீர் கம்பிகளாக கண்ணாடிக் குழாயின் மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. நீண்ட நேர்க் கோடுகளாக நீர் விழுவதற்காக கண்ணாடிக் குழாய்க்குள் சிறு சிறு குழாய்கள் பொருத்தப் பட்டிருந்தன. வெளிப்புற கண்ணாடிக்குழாயின் கீழ்ப்பகுதி தரையைத் தொட்ட இடத்தை சுற்றி ஒரு தொட்டியில் நீர் நிரம்பியிருந்தது. தொட்டியில் ஆரஞ்சு நிற மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. தொட்டியில் வந்து விழும் நீர் ரீ-சர்குலேட் ஆகி, மேலிருந்து மீண்டும் நீர்க்கம்பிகளாக கீழே விழுந்து ஒர் அருவி போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சத்தம் மிகையாக இருந்தது, வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தின் சத்தத்தோடு கண்ணாடி அருவியின் சத்தமும் சேர்ந்து கொண்டால் ராட்சச சத்தமாகத்தான் இருக்கும்.
    எதிர்பார்த்த படியே பிராந்திய விற்பனை மேலாளருடனான சந்திப்பு கசப்பான ஒன்றாகவே இருந்தது.
    “சந்தை நிலவரம் சரியில்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது”
    “போன வருடமும் 85% சதவிகித விற்பனையையே செய்தீர்கள்…இந்த வருடம் படு மோசம்”
    ”உங்கள் அணியின் மேலும் உங்களின் தலைமை மேலும் எனக்கு நம்பிக்கை போய் விட்டது”
    “போன வருடமாவது 50% சதவிகித போனசை ரிலீஸ் செய்தோம், இம்முறை அதுவும் கிடையாது. உங்களுக்கும் உங்கள் அணியில் உள்ளவர்களுக்கும் போனசை ரத்து பண்ணுகிறேன்”
    “அதிருப்தி கொண்டு ஒரிருவர் ராஜினாமா செய்யக்கூடும். அது பற்றி கவலையில்லை. மோசமான வேலை வாய்ப்பு சந்தையில் அவ்வளவு எளிதில் இன்னொரு நல்ல வேலை கிடைத்து விடுமா,,,என்ன?”
    என் அணி உறுப்பினர்களின் முகங்களில் வாட்டம் படிந்திருந்தது. நான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லுவேன் என்ற எதிர்பார்ப்பில் என்னைப் பார்த்தார்கள்.
    செயற்கை அருவி திடீரென நின்றிருந்தது. தொட்டிக்குள் ஒருவர் இறங்கி நின்று எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆரஞ்சு நிற மீன்கள் எங்கே? கொஞ்சம் தள்ளி ஒரு ஜாடிக்குள் ஆரஞ்சு மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அருவி நின்றிருந்ததால் சத்தம் அடியோடு குறைந்திருந்தது. ஒரு சில கடைக்காரர்கள் ஏழு மணிக்கே கடைகளை அடைத்துவிட்டிருந்தனர்.
    +++++
    கிருஷ்ணமனோ என்ற பெயருடன் ப்ளாகுகளில் ஒருவர் பின்னூட்டம் போடுவார், ராகவனின் ஆரம்ப கால சிறுகதைகளை தன் வலைப்பூவில் இடும் போது கிருஷ்ணமனோ தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு வந்தார். கதைகளின் குறைநிறைகளை நேர்மறையான நோக்குடன் சுட்டிக் காட்டுவார். ராகவன் அவருடன் மின்னஞ்சலில் தொடர்பில் இருந்தான்.
    “நாம் சொல்வது சரியா தவறா என்பது பிரச்சினையில்லை. நாம் சொல்ல வந்ததை எப்படிச் சொல்கிறோம் என்பதுதான் விஷயம். அதை வாசகர்கள் அவரவர் அளவில் புரிந்து கொள்வார்கள், அதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கில்லை. நம் கவலை நமக்கு, அவர்கள் கவலை அவர்களுக்கு.
    தொடர்ந்து எழுதுங்கள், சரி தவறுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீங்கள் சொல்ல வருவதை அதற்குத் தகுந்த மொழியில் சொல்லுங்கள் – எதிர்காலம் தன் சரி தவறுகளை உங்கள் பார்வையைக் கொண்டு தீர்மானிக்கக் கூடும்”
    “நீரளவே ஆகுமாம் நீராம்பல்னு என்னவோ சொல்லுவாங்க. உங்க எழுத்தில் இல்லாத இலக்கியம் எந்த இதழிலும் இல்லை.
    தொடர்ந்து எழுதுங்க, நிறைய இடத்தில் எழுதுங்க
    இந்த வருஷ முடிவுல ஒரு நாலு அல்லது அஞ்சு கதை/ கவிதைகளாவது அடுத்த வருஷ முடிவிலும் நினைத்துப் பார்க்கும் வகையில் இருக்கணும். நிறைய சோதனை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.”
    “தடங்கலில்லாமல் நல்ல தமிழில் அழகாகச் சொல்லப்பட்ட கதை. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் பல பெயர்கள் முதல் இரண்டு பத்திகளில் வருகின்றன. அவை குழப்பத்தை கொடுத்தன. அவை கதைக்கு தேவையில்லை.”
    “ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி படிப்பார்கள், அதனால் கருத்து வேறுபடலாம். என் கருத்து – பின் குறிப்பு தேவையில்லை. சில சிறு சிறு மாற்றங்கள், சொற்களில் வாக்கிய அமைப்பில், தேவைப்படலாம்.”
    “உண்மையில் நீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் முக்கியமானது. இதை ஒரு கட்டுரையாக எழுதினால்கூட நன்றாக வரும். ஆனால் கதையாக வரும்போது இன்னும் சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
    கொஞ்சம் சிரமம் பார்க்காமல், ஒரு புறக் காரணத்தால் internal conflict, பின்னர் அதன் resolution என்று எழுத முடியுமா? இதை எல்லாம் உரக்கச் சொல்ல வேண்டாம், ஒரு undercurrentஆக இந்த விஷயங்கள் கதையில் பேசப்பட வேண்டும். இரண்டாம் வாசிப்பிலாவது அது வாசகனுக்குப் புரிய வேண்டும்.”
    “அழியாச் சுடர்கள் என்ற தளத்தில் அண்மையில் பதிக்கப்பட்ட பத்து கதைகளின் துவக்கங்களைப் பாருங்கள்.
    கதையின் மையப் பிரச்சினை
    முக்கிய கதாபாத்திரங்களின் குணம்
    அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த தொனி (உணர்ச்சிகள்)
    எவ்வளவு இயல்பாக துவக்கப் பத்தியைத் தொடர்ந்து விரிந்து கொண்டே போகின்றன!”
    பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள்…தொலைபேசி உரையாடல்கள். கிருஷ்ணமனோ தொடர்ந்து ராகவனை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.
    +++++
    என் அணியில் இருப்பவர்களை ஒரு நாள் என் இல்லம் அழைத்து இரவு விருந்தளித்தேன். எங்களின் போனஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனக்கு கிடைக்காமல் போனதை விட என் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் கட் செய்யப்பட்டது என்னுள் பலத்த வேதனையையும் வெறுப்பையும் அளித்தது. என் வேண்டுகோள்களை மேனேஜ்மெண்ட் மறுதளித்தது. “இந்த சப்ஜெக்ட்-இல் மேலும் ஏதும் பேச வேண்டாம்” என்று மேலாளர் சொல்லிவிட்டார்.
    நான் ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன் என்று என் அணிக்காரர்களுக்கு சொன்னவுடன் அவர்கள் அதிர்ச்சியாயினர். “எதுக்கு சார் இந்த அதீதமான முடிவு?” என்றார்கள். ஆனால் என் உணர்வை புரிந்து கொண்டனர்.
    என் அணியில் வேலை பார்த்தவர்களில் ஒருவன் – மணீஷ். பணமுள்ளவன். சில நாட்களாகவே சொந்தமாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். நான் என் வேலையை துறந்தவுடன் மணிஷ் என்னை தன் மாமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தான். என்னுடைய வழிகாட்டுதலில் மணீஷின் மாமா உணவுப்பொருள் வினியோகிக்கும் வியாபாரம் தொடங்கினார். மணீஷ் தன் வேலையை விட்டுவிட்டு மாமாவின் நிறுவனத்தில் இயக்குனராக ஆனான். மணீஷும் அவன் மாமாவும் என்னையும் மூன்றாவது கூட்டாளியாக சேருமாறு கேட்டனர். நான் மறுத்தேன்.
    “நான் ஒரு பகுதி நேர ஆலோசகனாக மட்டும் இருக்கிறேன். அதற்குரிய ஊதியம் மட்டும் வழங்கினால் போதும். என் நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதை தீவிரமாக பின் தொடரலாம் என்று எண்ணுகிறேன்”
    மணீஷின் நிறுவனத்தின் அலுவலகம் ஷாப்பிங் மாலுக்குள்ளேயே இருந்தது. அமைதியான வார நாட்களின் முதல் பாதியில் மட்டும் அலுவலகம் செல்கிறேன். பல வருடம் முன்னர் ஹோட்டல் அறையில் கேட்ட அருவி சத்தம் மாதிரி, கண்ணாடி அருவியின் சத்தத்தை என் அலுவலக அறையில் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    +++++
    கிருஷ்ணமனோ ஒரு நாள் போன் செய்தார். புதிதாக இணைய இலக்கிய இதழ் ஒன்று நடத்த திட்டம் தீட்டியிருப்பதாக சொன்னார். ஒரிரு மாதங்கள் கழித்து “எழுத்து மலர்கள்” என்ற இணைய இதழ் தொடங்கப்பட்டது. ராகவனின் சிறுகதைகள் “எழுத்து மலர்களில்” தொடர்ந்து வெளிவந்தன. மு.ராகவன் என்ற பெயரை மாற்றி “முனி” என்ற பெயரில் ராகவனின் கதைகள் பிரசுரிக்கப்பட்டன.  சீக்கிரமே ”எழுத்து மலர்கள்” புத்தகங்கள் பதிப்பிட ஆரம்பித்தது. எழுத்து மலர்கள் வெளியிட்ட முதல் புத்தகம் – முனி எழுதிய சிறுகதைத் தொகுதி. சிறுகதைத் தொகுதியில் இருந்த முதல் கதையின் தலைப்பே தொகுதியின் தலைப்பானது – “சத்தம்”
    +++++
    கிருஷ்ணமனோ ”சத்தம்” சிறுகதைத் தொகுதியின் முதல் காப்பியை குரியரில் அனுப்பி வைத்தார். மணிஷின் அலுவலகத்திற்கே அதை அனுப்பி வைக்குமாறு கிருஷ்ணமனோவிற்கு சொல்லியிருந்தேன். யாரோ ஒரு பிரபல எழுத்தாளரைப் பிடித்து மதிப்புரை வாங்கி வெளியிடப் போவதாக கிருஷ்ணமனோ முன்னரே சொல்லியிருந்தார். எனவே ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். ஒரு மதிப்புரையல்ல : இரண்டு மதிப்புரைகள் போடப் பட்டிருந்தன. எழுதியிருந்தவர்கள் : பு.பெ.எ-வும் சி.பு.எ-வும்
    +++++

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 50 (17.12.12)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 07. கானல் வரி

    வசந்தமாலை கையிலிருந்த யாழை மாதவி தொழுது வாங்கி, திருத்தி, கோவலனிடம் நீட்ட, அவன் அதை வாங்கி, கானல் வரி பாடத் தொடங்குதல்
    கட்டுரை
                           (1)
    வசந்தமாலை கொணர்ந்த யாழது
    ஒவிய வேலைப்பாடமைந்த
    வண்ணத்துணியாலான உறையினுள்
    வைக்கப்பட்டிருந்தது.
    அதன் அழகிய கோடுகளில்
    மலர்கள் சூட்டப்பட்டிருந்தன.
    மைதீட்டிய பெரிய கண்களையுடைய
    மணமகள்  ஒருத்தியின்
    ஒப்பனைக் கோலத்துக்கு ஒப்பாய்
    மிக்க அழகுடன் இருந்தது.
    அந்த யாழானது
    பத்தர், கோடு, ஆணி, நரம்பு முதலான
    பதினெட்டு வகை உறுப்புகளிலும்
    எந்தக் குற்றமும் குறையும் இன்றிச்
    சிறந்து விளங்கியது.
    நல்யாழ் அதனை
    மாதவிதானும் தொழுது
    தன் கையிலே வாங்கிக் கொண்டனள்.
    பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
    செலவு விளையாட்டு கையூழ் குறும்போக்கு என
    இசை நூல்கள் கூறும்
    எண்வகைக் கலைத்தொழிலாலும்
    யாழதன் நரம்புகளை ஆராய்ந்து
    இசை எழுப்பினள் மாதவி.
    பண்வகையிலும் குற்றம் இன்றி
    யாழ்மீட்டிச் சுருதி சேர்த்தனள்.
    மரகதமணி மோதிரங்கள் அணிந்த
    அவளின் மென்காந்தள் விரல்கள்
    பாடுகின்ற வண்டினம்போல்
    யாழ்நரம்பின் மீது தவழ்ந்தன.
    வார்த்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
    உருட்டல் தெருட்டல் அள்ளல் பட்டடை
    இங்ஙனம்
    இசைநூலோர் வகுத்துவைத்த
    எண்கரணங்களை
    அவற்றின் இசைக்கூறுகளைத்
    தன் செவித்திறத்தால் நன்கு ஆராய்ந்து
    சீர்தூக்கி அறிந்தனள்.
    பின் கோவலனை நோக்கி,
    “தங்கள் ஏவலுக்குக் காத்திருக்கிறேன்;
    கட்டளையிடுங்கள்” என்றே கூறிச்
    சுருதி கூட்டிய யாழதனை நீட்டினள்.
    அவனும் அவள் மனம் மகிழ வேண்டி,
    காவிரி குறித்தும், கடற்கானல் குறித்தும்
    வரிப்பாட்டுகளைப் பாடத் தொடங்கினன்.
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1- 20
    படத்துக்கு நன்றி:
    Share
  • வார ராசி பலன் : திசம்பர் (17- 23)

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்:  நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் கருத்து வேறுபாடால் உங்களை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கை சிதறச் செய்யும் காரியங்களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.

    ரிஷபம்: வெளி நாடு செல்ல வேண்டும் என்று விரும்பியவர்களின் எண்ணம் பலிக்கும். மாணவர்கள் கவனச்சிதறலுக்கு ஆட்படாமல், படிப்பில் அக்கறை காட்ட, எதிர்காலம் நன்றாக இருக்கும். நழுவிச் சென்ற வாய்ப்புகளைக் கலைஞர்கள் தங்கள் திறமையால் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வர். பொது வாழ்வில் இருப்பவர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டால், எதிரிகளின் கரம் மேலோங்காதிருக்கும். முதியவர்கள் எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், உறுதியான உடலைப் பெறலாம். பணி சுமை கூடுவதால்,பெண்களுக்கு எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும் வாய்ப்பிருக்கிறது.

    மிதுனம்: வாகனங்களை புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்றவரைத் தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க நேரிடும் . வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளை தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்.  .

    கடகம்: வெளியிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிடமுடியும். யாரையும் குற்றம்சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதை சற்று ஆறப்போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தை சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

    சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகைகளை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.

    கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பி பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்திவர, லாபம் தடையின்றி வரும் . வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்சனைகளை பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள் . தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல்படுவார்கள். கலைஞர்களுக்கு , எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.

    துலாம்: பொது சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறலாம். மாணவர்கள், கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைபிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும்.. கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்கு சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்

    விருச்சிகம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.

    தனுசு:தொல்லை தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், புது தெம்புடன் வலம் வருவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் நல்ல வேலையில் அமர்வார்கள். வியாபாரிகள் எதிலும், நிதானம் மற்றும் தீர்க்காலோசனைனயைப் பின்பற்ற, அதிக நன்மை பெறலாம். பெண்கள் இல்லத்திலும், அலுவலகத்திலும் வீண் பேச்சுக்களைக் குறைத்தால், அமைதிக்கு பங்கம் வராமலிருக்கும். புதிய துறையில் கால் பதிப்பவர்கள், சில கெடுபிடிகளைத் தாண்டி, தன் திறமைகளை நிரூபிக்க வேண்டி இருக்கும். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை பெற்றோர்கள் இதமாகக் கண்டிப்பதே நல்லது.

    மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, பிரச்சனைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதியைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களுக்கு தலையசைக்காமலிருப்பது அவசியம் . முயன்றால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாக செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணிஆகிய இரண்டையும் கடைபிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.

    கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பி பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தேகம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந்தால், உங்கள் திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லைகளால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.

    மீனம்: முதியோர்களுக்கு , உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோபதாபங்களைக் குறைத்து பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களைப் பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள் , சாவிகள் ஆகியவற்றை பத்திரமாக வைப்பது அவசியம்.

    Share
  • வீணாகப் போகும் மருந்துகள்

    கே.எஸ்.சுதாகர்

    ஒருமுறை எனது குடும்ப வைத்தியர் Prednisolone என்ற மருந்தை எழுதித் தந்துவிட்டு அதை எப்படி பாவிப்பது என்று ஒரு சூத்திரத்தையும் போட்டுத் தந்தார். முதல் 3 நாட்களும் ஒவ்வொரு நாளும் 3 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொரு நாளும் 2 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொரு நாளும் 1 குளிசை வீதமும், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்குளிசை வீதமும் எடுக்க வேண்டும். அந்த மருந்தின் பக்கவிளைவுகள் பற்றியும் திகிலூட்டினார். எப்படித்தான் கூட்டினாலும் மொத்தம் 16 குளிசைகள்தான் எனக்குத் தேவைப்படும். மருந்துக் கடையில் 60 குளிசைகள் கொண்ட மருந்துப் போத்தல்தான் இருந்தது. மிகுதியை என்ன செய்வது? வைத்திருந்து மீண்டும் தேவைப்படும்போது பாவியுங்கள் என்றார் அங்கிருந்த மருந்துக் கடையில். போத்தலில் முடிவு திகதி (expiry date) ஒரு வருடம் என்றிருந்தது. பிறகு எனக்கு அது தேவைப்படவில்லை. expiry date வரும் வரையும் வைத்திருந்துவிட்டு எறிந்துவிட்டேன். மருந்துகளின் விலை இப்போது எக்கச்சக்கம். என்ன செய்வது? தேவைப்படும் அளவுக்கு மருந்து வாங்கமுடியாததால் மருந்தும் காசும் வீண் விரயமாகின்றன.

    எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் பல் மருத்துவராக வேலை பார்க்கின்றார். அவர் என்னை எங்கு கண்டாலும் தெரியாதமாதிரிப் போய்விடுவார். அதிகம் கதைக்கமாட்டார். அவரிடம் பல்லுப் பிடுங்கப் போனதும், முரசிற்குள் விறைப்பிற்கான ஊசியைப் போட்டவுடன் கதைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு புகையிரதம் போவது மாதிரி ‘கடக்கடா புடக்கடா’ என்று நிறுத்தவே மாட்டார். நாங்கள் வாயே திறக்கமாட்டோம் என்ற தைரியம் அவருக்கு. அவர் சொல்லும் எல்லாவற்றையுமே கேட்கவேண்டியதுதான். “நீர் என்ன சிவில் இஞ்சினியரோ? ஒரு வீடு அல்லது பாலம் கட்டும்போது அத்திவாரம் எவ்வளவு உறுதியாக இருக்கவேணுமோ அப்பிடித்தான் பல்லும். பல்லுப் போனா சொல்லுச் போச்சு எண்டு பழமொழி இருக்கல்லோ! பல்லை அடிக்கடி கிளீன் பண்ணவேணும். எத்தனை வருஷ்ம் கிளீன் பண்ணி. பாளம் பாளமா வருது?” கன்னங்கரிய நிறத்திலிருக்கும் அவர் தனது வாயைத் திறந்து ஈ என்று காட்டுவார். மின்னல் ஒன்று அடிச்சாப்போல அறை பிரகாசிக்கும். எல்லாவற்றையும் ம் ம் என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். விறைப்பு நீங்கும்போது அவரும் தனது கதையை நிறுத்தியிருப்பார்.

    இப்போது அவரின் ஞாபகம் வரக்காரணம், நேற்று என்னுடைய நண்பர் ஒருவர் அவரிடம் போயிருந்தார். அவரும் யான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பார். பல்லைப்பிடுங்கியபின் அதன் வலி போக மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்திருந்தார். மருந்தை மூன்றுவேளை பாவித்தால் போதும் என்று கூறியிருந்தார். நண்பர் பார்மசிக்கு முன்னால் நின்றபடி, எதிரே தெரியும் மது பானக்கடையை வெறித்துப் பார்த்தபடி தீவிர யோசனையின் நின்றார். என்ன விஷயம் என்றேன். “பல்லுப் பிடுங்கியிருக்கின்றேன். பல மருத்துவர் 3 மாத்திரைகள் போட்டால் போதும் என்றார். பார்மசியில் 3 மாத்திரைகள் கேட்டால் ஒரு பெட்டியை எடுத்து நீட்டுறான். பெட்டியிலை 30 இருக்கு. விலையும் 45$. மிச்சத்தை நான் என்ன செய்வது? அதுதான் இந்த மருந்தைப்பற்றி கொஞ்சம் யோசிக்கிறேன்” என்று எதிரே தெரியும் மதுபானக் கடையைக் காட்டினான். சொல்லிவிட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் அதை நோக்கி நடந்தான். நடப்பதை ஓரமாக நின்று அவதானித்தேன். சற்று நேரத்தில் ஒரு போத்தலுடன் கடைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கடைக்கு முன்னாலேயே நின்று அதை உடைத்தான். அண்ணாந்து போத்தலுடன் வாயிற்குள் சரித்தான். பிறகு அதன் மூலமே வாயைக் கொப்பளித்தான். இன்று அவனைச் சந்தித்தபோது, “அது மச்சான் ஒரு 25 டாலரோடு எல்லாக் கொதி வலியும் போச்சுது” என்றான்.

    படத்திற்கு நன்றி:

    http://news.bbc.co.uk/2/hi/health/606983.stm

    Share
  • தொல்லை காட்சி- சூப்பர் குடும்பம்-கல்யாண மாலை-பாலுமஹேந்திரா கதை நேரம்

    மோகன் குமார்

    சூப்பர் குடும்பம்

    கங்கை அமரன்- மீனா-சுகன்யா நடுவர்களாக பங்கு பெரும் சூப்பர் குடும்பம் என்கிற நிகழ்ச்சி ஒரு சில நாள் தப்பித் தவறி பார்த்து தொலைச்சுட்டேன். சீரியலில் வரும் நடிகர்களை வெவ்வேறு டீமில் போட்டு சூப்பர் சிங்கர் 20-20 மாதிரி எதோ கேம் ஷோ நடத்துறாங்க. இப்படி டீம் பிரிச்சவங்க- ஒண்ணு பாடுறாங்க; அல்லது டான்ஸ் / மிமிக்ரி செய்றாங்க. மிக சுமாரான தரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை சன் டிவி எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை.

    நான் பார்த்த நிகழ்ச்சியில் கங்கை அமரன் கம்மியா மார்க் தர்றார்; Biased ஆக நடந்துக்குறார் என சொல்லி சண்டை வேற நடந்துச்சு (நிஜமா? செட் அப்பா?)

    டிவியில் வக்கீலுக்கு விளம்பரம் !

    பொதுவாய் வக்கீல், ஆடிட்டர் இவர்கள் பத்திரிக்கை, டிவியில் விளம்பரம் செய்வதில்லை. இவர்கள் தங்கள் சேவையை விளம்பரப்படுத்தக் கூடாது என சட்டமே ரொம்ப நாள் இருந்தது. இப்போது அது சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

    பல டிவியில் ஒரு வக்கீல் விளம்பரம் வருகிறது. கலாமோகன் என்ற வக்கீல் தனது நிறுவனம் பற்றி அடிக்கடி விளம்பரம் செய்கிறார். ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது இதைப் பார்க்க. நான் தான் ஆச்சரியப்பட்டேன் என்றால் இதே போல் பார்த்த நண்பர்கள் சிலரும் ” என்னங்க இது.. வக்கீல் விளம்பரம் எல்லாம் டிவியில் வருது !” என போன் பண்ணி ஆச்சரியபடுகின்றனர் !

    நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : “சின்ன சின்ன ஆசை “

    “சின்ன சின்ன ஆசை ” மக்கள் டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை வருகிற நல்ல நிகழ்ச்சி. வாழ்க்கையில் மிக நொந்து போனவர்களை கண்டுபிடித்து (சிலர் தற்கொலை வரை சென்றவர்கள்) அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது !

    சூப்பர் சிங்கர் 20-20

    இந்த வாரம் அய்யாசாமி மிக மகிழ்ச்சியாய் சூப்பர் சிங்கர் 20-20 பார்த்தார். காரணம் அவருக்கு பிடித்த ராகினிஸ்ரீ மற்றும் எஸ். மதுமிதா இருவரும் இந்த வாரம் இணைந்து சில பாடல்கள் பாடினர். இருவரும் ஒரே டீம் என்பது அவருக்கு கூடுதல் குஷி.

    ரஜினி மற்றும் கமல் பிறந்த நாளை இந்த வாரம் சூப்பர் சிங்கரில் கொண்டாடி மகிழ்ந்தனர். கமல்- ரஜினி இருவர் பாடல்களையும் பாடும்போது, இருவர் வெற்றிக்குமே இளையராஜா எவ்வளவு உதவியிருக்கிறார் என்பது தெரிகிறது !

    நிற்க. மா. கா. பா. ஆனந்த் மீசையை மழித்துக் கொண்டு கொடுமையாய் வந்து போகிறார் (ஸ்டைலாமாம் !) இன்னொரு தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு என்னா மாதிரி வாய் ! செம பேச்சு ! செம வாலுத்தனம் !

    கல்யாண மாலை

    சன் டிவி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கல்யாண மாலை. ஞாயிறு காலை வரும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் அல்லது உறவினர் தங்கள் குடும்ப வரனுக்கு பெண்/ மாப்பிள்ளை தேவை என பேசுவார்கள். இந்த வாரம் ஒரு தாய்- தந்தை இருவரும் லேசாக அழுது கொண்டே தங்கள் எதிரில் அமர்ந்துள்ள மகனுக்கு வரன் வேண்டும் என பேசினர். பையன் காது கேட்காத -வாய் பேச முடியாத ஒருவர்- அதான் அவர்களுக்கு அவ்வளவு எமோஷன் போலும் !

    வருகிற பலரும் நிகழ்ச்சி நடத்தும் மோகனைக் காட்டி உங்களை போல மாப்பிள்ளை இருந்தால் போதும் என்கின்றனர் (கல்யாண மாலை மோகனுக்கு வயது 60 !!)

    பிளாஷ்பேக்: பாலுமகேந்திராவின் கதை நேரம்

    இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கதை நேரம் ஒரு சிறுகதை எப்படி படமாக்கப்பட் வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது. தமிழின் மிக சிறந்த சிறுகதைகளை இதில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்டோரின் பல நல்ல கதைகள் குறும் படங்களாய் விரிந்தன. முதலில் சன் டிவியில் வந்த போதும் பின் மக்கள் தொலைக்காட்சியில் வந்த போதும் விடாமல் பார்த்த நிகழ்ச்சி இது. இப்போது DVD வடிவிலும் கிடைக்கிறது. பார்க்கத் தவறியவர்கள் அவசியம் DVD வாங்கி பார்த்து இன்புறலாம் !

    Share